திருப் புகலூர்
சோழ நாட்டு,காவிரித் தென்கரைத் திருத்தலம்.
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள
திருத்தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலை அடையலாம்.
நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் தலம்
இருக்கிறது. இறைவன் அக்கினீசிவரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே
திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமும்
அமைந்திருக்கிறது.
நன்னிலம், சன்னாநல்லூர், நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து
வசதிகள் உள்ளன.
திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான
திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவத்தலமும் உள்ளன.
இறைவர்
: அக்கினீசுவரர், சரண்யபுரீசுவரர், கோணப்பிரான்
இறைவி
: கருந்தார்குழலி, சூளிகாம்பாள்
தல
மரம் : புன்னை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - 1.
குறிகலந்த
இசை 2. வெங்கள்விம்மு
2. அப்பர் - 1. செய்யர் வெண்ணூலர்,
2.
பகைத்திட்டார்
புரங்கள்,
3.
தன்னைச்
சரணென்று,
4.
துன்னக்
கோவணச்
5.
எண்ணுகேன்
என்சொல்லி
மற்றும் 18 திருப்பதிகங்கள்.
3. சுந்தரர் - தம்மையே புகழ்ந்திச்சை.
மூவர் பாடல் பெற்ற பெருமையுடைய
திருப்புகலூர் அக்கினீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோயில். பரப்பளவு சுமார் 73000 சதுர அடி. கிழக்கு-மேற்கு மதில் சுவர்
நீளம் 325 அடி. வடக்கு -
தெற்கு மதில் சுவர் நீலம் 225 அடி. மதில் சுவரை
ஒட்டி வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் அகழி இருக்கிறது. மூலவர் அக்கினீசுவரர்
சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை உள்ளதாகவும் சுமார் 90 அடி உயரமும் உள்ளது. உள்ளே நுழைந்ததும்
நாம் முதலில் காண்பது இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதி. இந்த
சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்கினீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு இலிங்கமான
மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர்
தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர்
முதலிய மூர்த்தங்கள் உள்ளன.மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி
சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு
பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை
வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல்
இல்லாமல் "ட" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வரனும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில்
உள்ளனர்.
தலத்தின்
சிறப்பம்சம்:
இத்தலத்தில் அக்கினி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார்.
அக்கினி பூசித்ததால் இறைவனுக்கு அக்கினீசுவரர் என்ற திருநாமம். அக்கினி தவம் செய்யும்
போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே வெளிப்புறத்தில்
அகழியாக, அக்கினி தீர்த்தமாக
விளங்கிறது.
இத்தலத்து இறைவன் கோணப்பிரான் என்று
அழைக்கபடுவதற்கும் காரணம் உண்டு. பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை
செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்புலிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான்
பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்கினீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே
தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார்.
பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. அவன் தாயாரின் பூஜையை
இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி
அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.
இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது
மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை
பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும்
புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம்
செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.
செங்கற்கள்
பொற்கட்டிகளாக மாறியது:
திருநாட்டியத்தான்குடி என்னும் திருத்தலத்தை வழிபட்ட நம்பியாரூரர், அங்கிருந்து திருவலிவலம் போய்த்
தமிழ்பாடித் திருவாரூரைச் சோரிந்தார்.
பங்குனி உத்திரத் திருநாள் நெருங்கியது. பரவையாருக்குப் பொன் தேவையாய்
இருந்தது. அதன் பொருட்டு, நாவலர் பெருமான்
திருப்புகலூருக்குச் சென்றார்.
திருப்பதிகம் பாடித் தம் கருத்தை முறையிட்டார். முறையிட்டு, அருகே உள்ள திருமடத்துக்குச்
சென்றாரில்லை. திருக்கோயில் முற்றத்தின்
ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது சிவபிரான் அருளால் நாவலர் பெருமானுக்கு உறக்கம் வந்தது. அவர், திருக்கோயில்
திருப்பணிக்கு என அங்கே இருந்த செங்கற்களை எடுத்தார். தலையணையாக வைத்துக் கொண்டார். வெண்பட்டாடையை விரித்துப், பள்ளி கொண்டார். உடனிருந்து அடியார்களும் உறங்கினார்கள். நாவலர் பெருமான் சிறிது நேரம் கழித்து உறங்கி
விழித்து எழுந்தார். செங்கற்களெல்லாம் பொன் கட்டியாக மாறி இருப்பதைக் கண்டு
சிவனருளை வியந்தார். திருக்கோயில் உள்ளே
நுழைந்தார். "தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்" என்னும் திருப்பதிகம்
பாடினார். பொன்னை எடுத்துக் கொண்டு
திருப்பனையூர்ச் சேரந்தார். அங்கே
இறைவரைப் பாடி, திருவாரூருக்கு
ஏகினார்.
அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி
செய்த போது, இறைவன் சித்திரை சதய
நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திரத் தலமாக
விளங்குகிறது. இவருக்கு இக்கோயிலில் தனி சந்நிதியும் இருக்கிறது. சித்திரைச்
சதயத்தை ஒட்டி இவ்வாலயத்தில் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரைச்
சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் கலக்கும் நிகழ்ச்சி இப்போது ஐதீகமாக
நடத்தப்படுகிறது.
எண்ணுகேன்
என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே
ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா
உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர்
மேவிய புண்ணியனே
என்று
தொடங்கும் பதிகம் பாடிக்கொண்டே அப்பர் இறைவனுடன் ஒரு சித்திரைச் சதய நாளில்
இரண்டறக் கலந்து விட்ட திருத்தலம் திருப்புகலூர்.
நாயன்மார்களில் ஒருவரான முருக
நாயனாருடைய அவதாரத் தலம் திருப்புகலூர். முருக நாயனாருக்கு இத்தலத்தில் சந்நிதி
உள்ளது. இத்தலத்திருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து
மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் வருகின்றது.
முருக நாயனார் வரலாறு
முருக நாயனார்
வேதியர் குலத்திலே தோன்றியவர். அவர் சிவபத்தியிலும் அடியார் பத்தியிலும்
சிறந்தவர். நாள்தோறும் வைகறையில்
எழுவார். காலைக் கடன்களை முடித்துக்
கொள்வார். நீராடுவார். திருநந்தன வனம் புகுவார். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்னும் நால்வகைப் பூக்களைக்
கொய்வார். அப் பூக்களால் இண்டை, தாமம், கண்ணி, பிணையல் முதலிய மாலைகளைக்
கட்டுவார். அம் மாலைகளைச் சிவபிரானுக்குச்
சூட்டுவார். நெஞ்சம் குழைந்து குழைந்து
உருகுவார். திருவைந்தெழுத்து
ஓதுவார். இந் முறையில் திருத்தொண்டு
செய்து வந்த முருக நாயனார், திருஞானசம்பந்தப்
பெருமானுக்கு நண்பர் ஆகி, அச் சுவாமிகளின்
திருமணச் சிறப்பில் கலந்து, சிவபிரான் திருவடி
நீழலை அடைந்தார்.
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "சொல் கொடிய வன்பு கலா நெஞ்சில் மருவும் ஒரு தகைமைத் தென்புகலூர்
வாழ் மகாதேவனே" என்று போற்றி உள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு:
திருஞானசம்பந்தப் பெருமான்
திருப்புகலூருக்கு எழுந்தருளும் போது, இதற்கு
முன்னரே அங்கு எழுந்தருளியிருந்த திருநாவுக்கரசு சுவாமிகள், அவ்வூர் அடியார் பெருமகனாராகிய முருக
நாயனாரோடும் பிற அடியார்களோடும் பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்தனர். சம்பந்தப்
பெருமான் அவர்கள் வேண்டுகோட்கு இணங்கி, முருக
நாயனார் திருமடத்தில் எழுந்தருளினார்கள். அங்கே சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலிய அடியார்களும்
வந்து தரிசித்து அளவளாவி இருந்தனர். சுவாமிகள், அவர்கள் அனைவரோடும் திருக்கோயிலுக்குச்
சென்று வழிபடும்போது புகலூர்ப் பெருமையை உணர்த்தும் முகத்தான் இப்பதிகத்தை அருளிச்
செய்தார்கள்.
பெரிய
புராணப் பாடல் எண் : 519
காழியார்
வாழவந்து அருள்செயும்
கவுணியப் பிள்ளை
யார்தாம்
ஆழியான்
அறியொணா அண்ணல்
ஆரூர்பணிந்து அரிது
செல்வார்,
பாழிமால்
யானையின் உரிபுனைந்
தார்பனை யூர்ப ணிந்து,
வாழிமா
மறைஇசைப் பதிகமும்
பாடிஅப் பதியில்
வைகி.
பொழிப்புரை : சீகாழியிலுள்ளார்
வாழ்வதன் பொருட்டாய்த் தோன்றிய கவுணியர், திருமாலும்
அறியமுடியாத இறைவரின் திருவாரூரினைப் பணிந்து மேற்செல்பவராய், வலிமையும் மதமயக்கமும் உடைய யானையின்
தோலைப் போர்த்த சிவபெருமானின் `திருப்பனையூரைப்' பணிந்து, வாழ்வுடைய பெரிய மறைகளின் பொருளையும்
இசையினையும் உடைய திருப்பதிகத்தையும் பாடி அப்பதியில் தங்கியிருந்து,
பெ.
பு. பாடல் எண் : 520
அங்குநின்று
அரிது எழுந்தருளுவார்,
அகிலகா ரணரும் ஆனார்
தங்குநல்
பதிகளும் பிறபணிந்து,
அருளிவண் தமிழ்
புனைந்தே,
எங்குமெய்த்
தவர்குழாம் எதிர்கொளத்
தொழுது எழுந்தருளி
வந்தார்
பொங்குதண்
பாசடைப் பங்கயப்
புனல்வயல் புகலூர்
சார.
பொழிப்புரை : அப்பதியினின்றும் அரிதாய்ப்
புறப்பட்டுச் செல்வாராய், உலகம்
எல்லாவற்றிற்கும் காரணர் ஆன சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் நன்மையுடைய பிற
பதிகளையும் வணங்கித் திருப்பதிகம் பாடி, எவ்விடத்தும்
உண்மைத் தவமுடைய அடியவர்கள் தம்மை எதிர்கொள்ளத் தொழுது, பொங்கும் குளிர்ச்சியான இலைகளை உடைய தாமரைப்
பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலூரை அணுகச் சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 521
நாவினுக்கு
அரசரும் நம்பிசீர்முருகரும்
மற்றும் நாமச்
சேவுகைத்
தவர்திருத் தொண்டர்ஆனவர்கள்முன்
சென்று சீதப்
பூவினில்
பொலிபுனல் புகலியார்போதகத்து
எதிர்ப ணிந்தே
மேவ,மற்று அவருடன் கூடவே
விமலர்கோ
யிலை அடைந்தார்.
பொழிப்புரை : திருநாவுக்கரசரும், நம்பி எனத்தகும் முருக நாயனாரும்
மற்றும் விடைக் கொடியையுடைய உயர்ந்த சிவபெருமானின் திருத்தொண்டர்களும் எதிர்கொண்டு, முன்போய்க் குளிர்ந்த பூக்களால்
பொலிவுபெற்ற நீர்வளம் கொண்ட சீகாழித் தலைவராம் ஆனைக் கன்றின் திருமுன்பு பணிந்து
சேர, அவர்களுடன் தாமும்
சென்று இறைவரின் திருக்கோயிலைச் சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 522
தேவர்தம்
தலைவனார் கோயில்புக்கு, அனைவரும்
சீர்நிலத்து உறவ
ணங்கி,
பாஅருந்
தமிழ்இசைப் பதிகமும் பாடி,முன்
பரவுவார் புறம்பு அணைந்தே,
தாஇல்சீர்
முருகனார் திருமனைக்கு எய்தி,அத்
தனிமுதல் தொண்டர்
தாமே
யாவையும்
குறைவு அறுத்திட, அமர்ந்து அருளுவார்
இனிதின் அங்கு
உறையும் நாளில்.
பொழிப்புரை : தேவரின் தலைவர்தம்
கோயிலுள் புகுந்து அனைவரும் நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கி, பாக்களின் பாகுபாட்டுக்கு இணங்க அமைந்த
தமிழிசை பொருந்திய திருப் பதிகத்தைப் பாடித் திருமுன்பு நின்று போற்றுபவரான
ஞானசம்பந்தர், வெளியில் வந்து, குற்றமற்ற சிறப்பையுடைய முருக நாயனாரின்
இல்லத்தில் சேர்ந்து, ஒப்பில்லாத முதன்மை
கொண்ட அத்திருத் தொண்டரே திருவமுது,
உறையுள்
முதலான எல்லாவற்றையும் குறைவில்லாது அமைக்க, அங்கு விரும்பித் தங்கியிருந்த
நாள்களில்,
இதுபொழுது அருளிய
திருப்பதிகம் கிடைத்திலது.
பெ.
பு. பாடல் எண் : 523
நீலநக்க
அடிகளும் நிகழ்சிறுத் தொண்டரும்
உடன்அணைந்து எய்து
நீர்மை,
சீலமெய்த்
தவர்களும் கூடவே கும்பிடும்
செய்கைநேர் நின்று
வாய்மைச்
சாலமிக்கு
உயர்திருத் தொண்டின்உண் மைத்திறம்
தன்னையே தெளிய நாடிக்
காலம்
உய்த் தவர்களோடு அளவளாவிக் கலந்து
அருளினார் காழி
நாடர்.
பொழிப்புரை : இந்நற் செய்தியைக்
கேட்டு வந்த நீலநக்க நாயனாரும் புகழையுடைய சிறுத்தொண்ட நாயனாரும் கூடிப் பொருந்திய
நீர்மையுடைய சீலமுடைய மற்ற மெய்த்தவர்களான தொண்டர்களும் தம்முடன் இறைவரை வழிபடும்
செய்கையில் ஒருப்பட்டு நின்று, வாய்மையில் மிகவும்
உயர்வுடைய திருத்தொண் டின் உண்மைத் திறங்களையே தெளிவாக நாடி, சீகாழித் தலைவரான பிள்ளையார் அவர்களுடன்
கூடிக் கலந்து, காலம் உண்டாகவே காதல்
செய்தவாறு அளவளாவியிருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 524
கும்பிடும்
கொள்கையில் "குறிகலந்த இசை"எனும்
பதிகம் முன் ஆன பாடல்
தம்பெருந்
தலைமையால் நிலைமைசால் பதிஅதன்
பெருமை சால்புற
விளம்பி
உம்பரும்
பரவுதற்கு உரியசொல் பிள்ளையார்
உள்ளம் மெய்க் காதல்
கூர
நம்பர்தம்
பதிகள் ஆயினஎனைப் பலவும்முன்
நண்ணியே தொழ
நயந்தார்.
பொழிப்புரை : கும்பிடும்
கொள்கையின் குறிப்பை உள்ளடக்கிக் `குறிகலந்த எனத்
தொடங்கும் திருப்பதிகத்தைத் தம் பெருந்தலைமைப் பாட்டினால் நன்னிலைமை நிறைந்த
அப்பதியின் பெருமையை எடுத்துக் கூறி, தேவர்களும்
போற்றுதற்குரிய சொல்வன்மையுடைய பிள்ளையார், உள்ளத்தில் உண்மை அன்பு பெருகியதால்
இறைவரின் பதிகளான பிறபதிகளுக்கும் சென்று வணங்க விருப்பம் கொண்டார்.
குறிகலந்த (தி.1 ப.2) எனத்தொடங்கும் பதிகம் நட்டபாடைப்
பண்ணிலமைந்ததாகும். பதிகப் பாடல்தொறும், திருப்
புகலூரில் பெருமான் வீற்றிருக்கும் பெருமையையும், அதன் நீர் வளம், நிலவளம், மக்கள் நலம் முதலாய வளங்களையும்
குறித்துப் போற்றியிருத்தலின்,
`பதியதன்
பெருமை சால்புற விளம்பி' என்றார்.
1.002 திருப்புகலூர் பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குறிகலந்த
இசை பாடலினால், நசையால்
இவ்வுலகு எல்லாம்
நெறிகலந்தது
ஒரு நீர்மையனாய், எருது
ஏறிப்பலி பேணி
முறிகலந்தது
ஒரு தோல்அரைமேல் உடையான்
இடம் மொய்ம் மலரின்
பொறிகலந்த
பொழில் சூழ்ந்து அயலே புயல்
ஆரும் புகலூரே.
பொழிப்புரை : சுரத் தானங்களைக்
குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெரு
விருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து
அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின் மிசை ஏறி வந்து மக்கள் இடும் பிச்சையை விரும்பி
ஏற்பவன், இடையில் மான்
தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள் மீது புள்ளிகளை
உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.
பாடல்
எண் : 2
காதுஇலங்கு
குழையன், இழைசேர்திரு
மார்பன். ஒருபாகம்
மாது
இலங்குதிரு மேனியினான்,
கருமானின் உரிஆடை
மீதுஇலங்கஅணிந்தான், இமையோர் தொழ
மேவும் இடம் சோலைப்
போது
இலங்கு நசையால் வரிவண்டு
இசை பாடும்புகலூரே.
பொழிப்புரை :காதில் விளங்கும்
குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும்
திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர்
தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும்
விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.
பாடல்
எண் : 3
பண்நிலாவும்
மறை பாடலினான்இறை
சேரும் வளை அங்கைப்
பெண்நிலாவ
உடையான் பெரியார்கழல்
என்றும் தொழுது ஏத்த
உண்நிலாவியவர்
சிந்தையுள் நீங்கா
ஒருவன் இடம் என்பர்
மண்நிலாவும்
அடியார் குடிமைத்தொழில்
மல்கும்புகலூரே.
பொழிப்புரை :இசையமைதி விளங்கும்
வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய
உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும்
பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும்
நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள்
குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.
பாடல்
எண் : 4
நீரின்மல்கு
சடையன் விடையன் அடை
யார்தம் அரண்
மூன்றும்
சீரின்மல்கு
மலையே சிலையாக
முனிந்தான் உலகு
உய்யக்
காரின்
மல்கு கடல் நஞ்சம் அதுஉண்ட
கடவுள்இடம் என்பர்
ஊரின்
மல்கிவளர் செம்மையினால் உயர்வு
எய்தும் புகலூரே.
பொழிப்புரை :கங்கை நீரால்
நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க
மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே
தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால்
உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.
பாடல்
எண் : 5
செய்யமேனி வெளி யபொடிப் பூசுவர்,
சேரும் அடியார்மேல்
பையநின்ற
வினை பாற்றுவர், போற்றிசைத்து
என்றும் பணிவாரை
மெய்யநின்ற
பெருமான் உறையும் இடம்
என்பர் அருள்பேணிப்
பொய்யிலாத
மனத்தார் பிரியாது
பொருந்தும் புகலூரே.
பொழிப்புரை :சிவந்த
திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத்
தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர்.
அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப்
பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.
பாடல்
எண் : 6
கழலின்
ஓசை சிலம்பின் ஒலிஓசை
கலிக்கப் பயில்கானில்
குழலின்ஓசை
குறள்பாரிடம் போற்றக்
குனித்தார் இடம்
என்பர்
விழவின்
ஓசை அடியார் மிடைவுற்று
விரும்பிப் பொலிந்து
எங்கும்
முழவின்
ஓசை முந்நீர் அயர்வுஎய்த
முழங்கும் புகலூரே.
பொழிப்புரை :இரண்டு
திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல்
சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய
இசைக்கருவிகள் முழங்கவும், குள்ளமான பூகணங்கள்
போற்றவும், பலகாலும் பழகிய இடமாக
இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும்
முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.
பாடல்
எண் : 7
வெள்ளம்
ஆர்ந்துமிளிர் செஞ்சடை தன்மேல்
விளங்கும்
மதிசூடி
உள்ளம்
ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த
உகக்கும்
அருள்தந்து எம்
கள்ளம்
ஆர்ந்து கழியப் பழிதீர்த்த
கடவுள் இடம் என்பர்
புள்ளை
ஆர்ந்த வயலின் விளைவால்
வளம் மல்கும்புகலூரே.
பொழிப்புரை :கங்கைநீர் அடங்கி
விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச்சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது
ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும்
தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம்,
மீன்
கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம்
மல்கிய புகலூராகும்.
பாடல்
எண் : 8
தென்இலங்கை
அரையன் வரைபற்றி
எடுத்தான்
முடிதிண்டோள்
தன்இலங்கு
விரலால் நெரிவித்து இசை
கேட்டு அன்று
அருள்செய்த
மின்இலங்கு
சடையான் மடமாதொடு
மேவும் இடம் என்பர்
பொன்இலங்கு
மணி மாளிகைமேல்
மதி தோயும்புகலூரே.
பொழிப்புரை :அழகிய இலங்கை
அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால்
விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள்
செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதிதோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த
புகலூராகும்.
பாடல்
எண் : 9
நாகம்வைத்த
முடியான் அடி
கைதொழுது ஏத்தும்
அடியார்கள்
ஆகம்வைத்த
பெருமான் பிரமன்னொடு
மாலும்தொழுது ஏத்த
ஏகம்வைத்த
எரியாய் மிகஓங்கிய
எம்மான் இடம்போலும்
போகம்வைத்த
பொழிலின் நிழலால்
மதுஆரும் புகலூரே.
பொழிப்புரை :பாம்பை முடிமிசை
வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப்
போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண்
வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி
வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற்
சிறந்ததாய்த் தேன்நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.
பாடல்
எண் : 10
செய்
தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர்
செப்பில் பொருள்
அல்லாக்
கைதவத்தர்
மொழியைத் தவிர்வார்கள்
கடவுள் இடம்போலும்
கொய்து
பத்தர் மலரும் புனலும் கொடு
தூவித் துதிசெய்து
மெய்
தவத்தின் முயல்வார் உயர்வானகம்
எய்தும் புகலூரே.
பொழிப்புரை :எண்ணிக்கையில்
மிக்கதேரர், சாக்கியர் சமணர்கள்
ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும்
மெய்யடியார்களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப்
புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய
வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.
பாடல்
எண் : 11
புற்றில்வாழும்
அரவம அரை ஆர்த்தவன்
மேவும் புகலூரைக்
கற்று
நல்லஅவர் காழியுள் ஞானசம்
பந்தன தமிழ்மாலை
பற்றிஎன்றும்
இசை பாடிய மாந்தர்
பரமன் அடிசேர்ந்து
குற்றமின்றிக்
குறைபாடு ஒழியாப் புகழ்
ஓங்கிப்பொலிவாரே.
பொழிப்புரை :புற்றில் வாழும்
பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது
பொருள்சேர் புகழைக்கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்
பாடிய தமிழ ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும்
மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப்
பொலிவெய்துவார்கள்.
திருச்சிற்றம்பலம்
2.115 திருப்புகலூர் பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வெங்கள்விம்மு
குழல்இளையர் ஆடுஅவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கண்
கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடி, திரிபுரம்ஒர்
அம்பால்எரி ஊட்டிய
எங்கள்பெம்மான், அடிபரவ, நாளும்இடர் கழியுமே.
பொழிப்புரை :விரும்பத்தக்க தேன்
விம்மும் மலர்கள் கூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட , மணம் விரவும் நீர்நிலையில் வாழும்
செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப் பாயும் புகலூரில் விளங்கும்
திங்கள் சூடித் திரிபுரங்களை ஓரம்பால் எரி யூட்டிய எங்கள் பெருமான்
திருவடிகளைப்பரவ இடர் கெடும் .
பாடல்
எண் : 2
வாழ்ந்தநாளும், இனிவாழு நாளும்,இவை அறிதிரேல்
வீழ்ந்தநாள்எம்
பெருமானை ஏத்தாவிதி இல்லிகாள்,
போழ்ந்த
திங்கள் புரிசடையி னான்தன் புகலூரையே
சூழ்ந்தஉள்ளம்
உடையீர்கள், உங்கள்துயர் தீருமே.
பொழிப்புரை :இதுவரை வாழ்ந்த
நாளையும் இனி வாழும் நாளையும் அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த
நாட்கள் என்றறிந்தும் , எம்பெருமானை ஏத்தும்
நல்லூழாகிய விதி இல்லாதவர்களே ! பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது
நினையும் உள்ளம் உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும் .
பாடல்
எண் : 3
மடையின்நெய்தல்
கருங்குவளை செய்யமலர்த் தாமரை
புடைகொள்செந்நெல்
விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை
புனைந்தான்,ஓர் பாகம்மதி சூடியை
அடையவல்லவர், அமர்உலகம் ஆளப்பெறு
வார்களே.
பொழிப்புரை :மடைகளில் நெய்தல் , குவளை , செந்தாமரைமலர் ஆகியன விளங்க , அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய
புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமை யோடு விளங்கும் சிவபிரானை
அடைய வல்லவர் அமருலகு ஆள்வர் .
பாடல்
எண் : 4
பூவுந்நீரும்
பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே
நவின்றுஏத்தல் ஓவார்,செவித் துளைகளால்
யாவும்கேளார்
அவன்பெருமை அல்லால்,அடி யார்கள் தாம்
ஓவும்நாளும்
உணர்வுஒழிந்த நாள்,என்று உள்ளம்கொள்ளவே.
பொழிப்புரை :பூவும் , நீரும் , நிவேதனப் பொருள்களும் எடுத்து வந்து
புகலூரை அடைந்து , அங்குள்ள பெருமானை
நாவினால் நவின்று , ஏத்த வல்லவராய் , செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும்
கேளாதவராய்த் தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத நாள்களைப்
பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள் என்றும் கருதுவர் .
பாடல்
எண் : 5
அன்னங்கன்னிப்
பெடைபுல்கி ஒல்கி அணி நடையவாய்ப்
பொன்னங்
காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று
மதில்எரித்த மூர்த்திதிறம் கருதுங்கால்,
இன்னர்
என்னப் பெரிதுஅரியர், ஏத்தச் சிறிதுஎளியரே.
பொழிப்புரை :அன்னங்கள் கன்னிப்
பெடைகளைத் தழுவி ஒதுங்கி அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின்
நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில் ,
முன்
நாளில் முப்புரங்களை எரித்த மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர்
என்னப் பெரிதும் அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர் .
பாடல்
எண் : 6
குலவர்ஆகக்
குலம்இலரும் ஆகக்குணம் புகழுங்கால்,
உலகல்நல்ல
கதிபெறுவரேனும், மலர் ஊறுதேன்
புலவம்
எல்லாம் வெறிகமழும் அந்தண்புக லூர்தனுள்
நிலவமல்கு
சடைஅடிகள் பாதம் நினைவார்களே.
பொழிப்புரை :உயர்
குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி
பெறுவர் . ஆதலின், அடியவர்கள் மலர்களில்
விளைந்த தேனால் , புலால் நாறும்
இடங்களிலும் மணம் வீசுகின்ற , அழகிய புகலூரில்
பிறையணிந்த சடை யுடைய அடிகளின் திருவடிகளையே நினைவார்கள் .
பாடல்
எண் : 7
ஆணும்பெண்ணும்
எனநிற்ப ரேனும், அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர்தனக்கு
ஓர்பொருள் ஆயினான்,
ஊணும்ஊரார்
இடுபிச்சை ஏற்றுஉண்டு,உடை கோவணம்
பேணுமேனும், பிரான்என்ப ரால்
எம்பெரு மானையே.
பொழிப்புரை :புகலூரைத் தமக்குரிய
இடமாகக் கொண்ட இறைவர் ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும் , பாம்புகளை உடல் முழுதும் அணிகலன்களாகப்
பூண்பவரேனும் , ஊரார் இடும் பிச்சையை
ஏற்று உண்பவரேனும் , கோவணம் ஒன்றையே
உடையாகக் கொண்டவரேனும் , அடியவர் அவரையே
பிரான் என்பர் .
பாடல்
எண் : 8
உய்யவேண்டில்
எழுபோத நெஞ்சே, உயர் இலங்கைக்கோன்
கைகள்ஒல்கக்
கருவரை எடுத்தானை ஓர்விரலினால்
செய்கைதோன்றச்
சிதைத்துஅருள வல்லசிவன் மேயபூம்
பொய்கை
சூழ்ந்த புகலூர், புகழப் பொருள்ஆகுமே.
பொழிப்புரை :நெஞ்சே ! உய்தி பெற
வேண்டில் எழுக , போதுக : உயரிய
இலங்கைக்கு அரசனாகிய இராவணனை , கைகளால் கயிலை
மலையைப் பெயர்த்தவனை ஓர்விரலால் தன் வன்மை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய , பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப்
புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும் .
பாடல்
எண் : 9
நேமியானும்
முகம்நான்கு உடையந்நெறி அண்ணலும்
ஆம்இதுஎன்று
தகைந்துஏத்தப் போய் ஆர்அழல் ஆயினான்,
சாமிதாதை
சரண் ஆகும் என்றுதலை சாய்மினோ,
பூமிஎல்லாம்
புகழ்செல்வம் மல்கும் புகலூரையே.
பொழிப்புரை :சக்கராயுதம் உடைய
திருமாலும் , நான்முகனும் இதுவே
ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு தேட அழலுரு
ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன்
ஆவன் , என்று தலைதாழ்த்தி
வணங்குமின் . உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும்.
பாடல்
எண் : 10
வேர்த்தமெய்யர், உருவத்து உடைவிட்டு
உழல்வார்களும்,
போர்த்தகூறைப்
போதிநீழலாரும், புகலூர்தனுள்
தீர்த்தம்
எல்லாம் சடைக்கரந்த தேவன்திறம் கருதுங்கால்,
ஓர்த்து
மெய்என்று உணராது, பாதம்தொழுது
உய்ம்மினே.
பொழிப்புரை :வியர்வை தோன்றிய
உடலினோரும் , உடலில்
உடையின்றித்திரிபவரும் , ஆடையைப் போர்த்திக்
கொண்டு அரச மரநிழலில் உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து , புகலூரில் கங்கைசூடிய பெருமான்
திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன்
திருவடிகளை வணங்கி உய்மின் .
பாடல்
எண் : 11
புந்திஆர்ந்த
பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல்
பொடிப்பூச வல்லவிடை ஊர்தியை,
அந்தம்
இல்லா அனல்ஆடலானை, அணி ஞானசம்
பந்தன்சொன்ன
தமிழ்பாடி ஆடக் கெடும் பாவமே.
பொழிப்புரை :அறிவார்ந்த
பெரியோர்கள் ஏத்தும் புகலூரில் நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் , விடையூர்திய னும் , அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய
பெருமானை ஞான சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி , ஆடிப் போற்ற , பாவம் கெடும் .
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 525
புள்
அலம்புதண் புனல்புக
லூர்உறை புனிதனார்
அருள்பெற்றுப்
பிள்ளை
யாருடன் நாவினுக்கு
அரசரும் பிறபதி
தொழச்செல்வார்,
வள்ள
லார்சிறுத் தொண்டரும்
நீலநக் கரும்வளம்
பதிக்குஏக,
உள்ளம்
அன்புஉறு முருகர்அங்கு
ஒழியவும் உடன்பட
இசைவித்தார்.
பொழிப்புரை : நீர்ப்பறவை
ஒலித்தற்கு இடமான குளிர்ந்த நீர்நிலை சூழ்ந்த திருப்புகலூரில் எழுந்தருளிய புனித
இறைவரின் அருளைப் பெற்று, பிள்ளையாருடன்
திருநாவுக்கரசரும் இறைவரின் மற்றப் பதிகளையும் தொழும் பொருட்டுச் செல்பவராய், வள்ளலாரான சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் தத்தம் வளம்
பொருந்திய பதிகளுக்குச் செல்லவும்,
உள்ளத்தில்
அன்பு கொண்ட முருக நாயனார் அங்கே தங்கியருக்கவும் அவர்கள் உடன்படத் தாமும்
இசைந்தார்கள்.
குறிப்புரை : ஒழிதல் - தங்குதல். `இசைவித்தார்' என்பது `இசைந்தார்கள்' என்றும் பாடம். இப்பாடல் முதல் 618 ஆவது பாடல் வரை ஞானசம்பந்தரும், நாவரசரும் சேர்ந்து வழிபட்ட சிறப்பினை
விவரிக்கின்றன.
பெ.
பு. பாடல் எண் : 526
கண்அகன்
புக லூரினைத்
தொழுதுபோம்
பொழுதினில், கடற்காழி
அண்ண
லார்திரு நாவினுக்கு
அரசர்தம் அருகுவிட்டு
அகலாதே,
வண்ண
நித்திலச் சிவிகையும்
பின்வர, வழிக்கொள உறும்காலை,
எண்ணில்
சீர்த்திரு நாவினுக்கு
அரசரும்
மற்றுஅவர்க்கு இசைக்கின்றார்.
பொழிப்புரை : இடம் அகன்ற
திருப்புகலூரைத் தொழுது மேற்செல்கின்ற போதில், கடற்கரையில் உள்ள சீகாழிப் பதியில்
தோன்றிய பிள்ளையார், திருநாவுக்கரசரை
விட்டு நீங்காது அழகிய முத்துச் சிவிகை பின் வரச் செலவு நயப்பைத் தொடங்கிய பொழுது, ஞானியரின் உளத்தில் நிற்கும் சிறப்புடைய
திருநாவுக்கரசர், சம்பந்தருக்கு
எடுத்துக் கூறுபவராய்,
பெ.
பு. பாடல் எண் : 527
"நாயனார்உமக்கு அளித்து
அருள்
செய்தஇந் நலங்கிளர்
ஒளிமுத்தின்
தூய
யானத்தின் மிசை எழுந்து
அருளுவீர்"
என்றலும், "சுடர்த்திங்கள்
மேய
வேணியார் அருளும்இவ்
வாறுஎனில், விரும்புதொண்
டர்களோடும்
போயது
எங்குநீர், அங்குயான்
பின்வரப் போவது"
என்று அருள்செய்தார்.
பொழிப்புரை : `இறைவன் உமக்கு அருள் செய்த இந்த நன்மை
பொருந்திய அழகிய ஒளிபொருந்திய தூய முத்துச் சிவிகையில் இவர்ந்து வருவீராக!' என்று அருளுதலும், `ஒளி பொருந்திய பிறைச் சந்திரனை அணிந்த
சடையையுடைய இறைவரின் திருவருளும் இவ்வாறே இருக்குமாயின், விரும்பும் தொண்டர்களுடனே நீவிர் முன்
செல்வது எப்பதியோ? அப்பதிக்கு யானும்
பின்தொடர்ந்து வரும்படியாகப் போவது\'
என
விடையளித்தார்.
இவ்வரிய திருபாடலால் நாவரசரின் திருவுள்ளமும், ஞானசம்பந்தரும் தாமும் ஆகச் செல்லும்
செலவு நயப்பை அமைத்துக் கொண்ட பாங்கும் அறிய முடிகின்றன. ஞானசம்பந்தரும் முத்துச்
சிவிகையில் வருதலை இறைவர் அருளிய அருளிப்பாடு என்பதால், மறுக்க இயலாது ஏற்பாராயினர். நாவரசர், `நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த ...
தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர்\'
என்றது
அதனை வெல்லும் சொல் இன்றி வெளிப்படுத்திய திறனுடையதாகும். இதனால் நாவரசர் நாவரசரேயாயினர்.
பெ.
பு. பாடல் எண் : 528
என்று
பிள்ளையார் மொழிந்து அருள்
செய்திட இருந்தவத்து
இறையோரும்,
"நன்று நீர்அருள்
செய்ததே
செய்வன்"என்று
அருள்செய்து நயப்புஉற்ற
அன்றை
நாள்முதல் உடன்செலும்
நாள்எலாம் அவ்இயல்
பினில்செல்வார்
சென்று
முன்உறத் திருஅம்பர்
அணைந்தனர் செய்தவக்
குழாத்தோடும்.
பொழிப்புரை : என்று சம்பந்தர்
உரைத்திடவும், பெரிய தவவேந்தரான
திருநாவுக்கரசரும் `நல்லது! நீவிர்
அருளியவாறே செய்வேன்\' என்று அருள் செய்து, விரும்பிய அந்நாள் முதற் கொண்டு, பிள்ளையாருடன் செல்லும் எல்லா
நாள்களிலும் அவ்வியல்பில் செல்பவராய், செய்தவக்
கூட்டமான தொண்டர்களோடும் முன் செல்ல, திருவம்பர்
என்ற நகரை அடைந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 230
திருப்புகலூர்
அமர்ந்துஅருளுஞ் சிவபெருமான்
சேவடிகள் கும்பிட்டு
ஏத்தும்
விருப்பு
உடைய உள்ளத்து மேவிஎழும்
காதல்புரி வேட்கை கூர
ஒருப்படுவார்
திருவாரூர் ஒருவாறு
தொழுது அகன்றுஅங்கு
உள்ளம் வைத்துப்
பொருப்புஅரையன்
மடப்பாவை இடப்பாகர்
பதிபிறவும் பணிந்து
போந்தார்.
பொழிப்புரை : திருப்புகலூரில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுதற்குரிய விருப்பம்
வரப்பெற்ற திருவுள்ளத்தில் பொருந்தி எழுகின்ற காதல் மிக, அங்ஙனமே செல்வதற்கு எண்ணியவராய்த், திருவாரூரை ஒருவாறாகத் தொழுது, நீங்கித், தம் கருத்தைத் திருவாரூரில் வைத்து, மலையரசன் பாவையாரான உமையம்மையாரை ஒரு
கூற்றில் வைத்த பெருமான் எழுந்தருளியிருக்கும் இடைப்பட்ட பிற பதிகளையும் வணங்கிச்
சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 231
அந்நாளில்
ஆள்உடைய பிள்ளையார்
திருப்புகலி அதன்கண்
நின்றும்
பல்நாகப்
பூண்அணிவார் பயின்றதிருப்
பதிபலவும் பணிந்து
செல்வார்
புன்னாகம்
மணம் கமழும் பூம்புகலூர்
வந்துஇறைஞ்சிப்
பொருஇல் சீர்த்தி
மின்ஆரும்
புரிமுந்நூல் முருகனார்
திருமடத்தில்
மேவும் காலை.
பொழிப்புரை : அதுபொழுது
ஞானசம்பந்தர் சீகாழியினின்றும் புறப்பட்டுப் பாம்புகளை அணிந்த சிவபெருமான்
வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து பணிந்து செல்வார், சுரபுன்னை மலர்களின் மணம் கமழும்
பூம்புகலூரில் சென்று இறைவனைக் கண்டு ஒப்பற்ற சிறப்புடைய முப்புரிநூல் அணிந்த
முருகநாயனாரின் திருமடத்தில் வீற்றிருக்கும் காலத்தில்.
பெ.
பு. பாடல் எண் : 232
ஆண்டஅரசு
எழுந்தருளி, அணிஆரூர்
மணிப்புற்றில்
அமர்ந்து வாழும்
நீண்டசுடர்
மாமணியைக் கும்பிட்டு,
நீடுதிருப் புகலூர்
நோக்கி
மீண்டுஅருளி
னார்என்று கேட்டுஅருளி,
எதிர்கொள்ளும்
விருப்பி னோடும்
ஈண்டுபெரும்
தொண்டர்குழாம் புடைசூழ
எழுந்துஅருளி எதிரே
சென்றார்.
பொழிப்புரை : சிவபெருமானால்
ஆட்கொள்ளப்பட்ட நாவுக்கரசர் எழுந்தருளிப் போந்து, அழகு பொருந்திய திருவாரூரில்
மணிப்புற்றில் விரும்பி வீற்றிருக்கும் நீண்ட ஒளி பொருந்திய மாமணியினை வணங்கிப்
பூம்புகலூருக்கு வந்தருளும் இனிய செய்தியை, ஞானசம்பந்தர் கேட்டறிந்து, அவரை எதிர்கொண்டு வரவேற்கும்
விருப்பத்தால், நெருங்கிய தொண்டர்
கூட்டம் தம்மைச் சூழ்ந்து வர, எழுந்தருளி எதிரே
சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 233
கரண்டம்மலி
தடம்பொய்கைக் காழியர்கோன்
எதிர்அணையுங் காதல்
கேட்டு
வரன்றுமணிப்
புனல்புகலூர் நோக்கிவரும்
வாகீசர் மகிழ்ந்து
வந்தார்
திரண்டுவரும்
திருநீற்றுத் தொண்டர்குழாம்
இருதிறமும் சேர்ந்த
போதில்
இரண்டுநில
வின்கடல்கள் ஒன்றுஆகி
அணைந்தனபோல் இசைந்த
அன்றே.
பொழிப்புரை : நீர்க் காக்கைகள்
நிறைந்த பெரிய நீர்நிலைகளையுடைய சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர், அங்ஙனம் தம்மை எதிர்கொண்டு அணைகின்ற
அன்புச் செயலைக் கேட்டு, மணிகளைக் கொழித்து
வரும் நீர்வளம் கொண்ட திருப்புகலூரை நோக்கி வருகின்ற நாவரசரும், மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளி வந்தனர்.
கூடிப் பெருகி வருகின்ற திருநீற்றுத் தொண்டர் கூட்டம் இருமருங்கும் திரண்ட போதில், நிலவுக்கடல்கள் இரண்டு, ஒன்று கூடி அணைந்தன போல், பொருந்தின. அப்பொழுது.
பெ.
பு. பாடல் எண் : 234
திருநாவுக்
கரசர்எதிர் சென்றுஇறைஞ்ச,
சிரபுரத்துத் தெய்வ
வாய்மைப்
பெருஞான
சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி, "அப்பரே! நீர்
வருநாளில்
திருஆரூர் நிகழ்பெருமை
வகுத்து உரைப்பீர்"
என்று கூற,
அருநாமத்து
அஞ்செழுத்தும் பயில்வாய்மை
அவரும் எதிர் அருளிச்
செய்வார்.
பொழிப்புரை : எதிர் சென்ற
நாவுக்கரசர் வணங்க, சீகாழியில் வந்தருளிய
கடவுள்தன்மை பொருந்திய பெருமையுடைய திருஞானசம்பந்தப் பெருமானும் எதிர் வணங்கி, `அப்பரே! நீர் வரும் நாளில் திருவாரூரில்
நிகழும் பெருமையை வகுத்துக் கூறுவீராக!` எனக்
கூறச் சிவபெருமானின் திருப்பெயரான திருவைந்தெழுத்தை மிகவும் பயில்கின்ற வாய்மை
கொண்ட நாவுக்கரசரும் அருளுவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 235
"சித்தம் நிலாவும்
தென்திரு ஆரூர் நகர்ஆளும்
மைத்தழை
கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என்மொழி கேன்"என்று உரைசெய்தார்
"முத்து விதானம்
மணிப்பொன் கவரி" மொழிமாலை.
பொழிப்புரை : உள்ளத்தில் நிலவும்
திருவாரூர் நகரத்தை ஆளுகின்ற நீலகண்டரான சிவபெருமானின் திருவாதிரைத் திருநாளில்
நிகழும் மகிழ்ச்சிப் பெருக்குடைய செய்திச் செல்வத்தை, இத்தகைய தன்மை கொண்டது என எவ்வாறு
கூறுவேன்! என்று, `முத்து விதான மணிப்
பொற்கவரி` (தி.4 ப.21) எனத் தொடங்கும் பதிகமான சொல்மாலையைப்
பாடினார்.
`முத்து விதானம்` (தி.4 ப.21) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணாலாய பதிகம்
திருவாரூரில் நிகழ்ந்து வரும் திருவாதிரைச் சிறப்பை மிக அழகாக விளக்கி
நிற்பதாகும்.
பெ.
பு. பாடல் எண் : 236
அம்மொழி
மாலைச் செந்தமிழ் கேளா, அணிசண்பை
மைம்மலி
கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்,
"கொய்ம்மலர் வாவித்
தென்திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன்
வந்துஇங்கு உடன்அமர்வேன்"என்று உரைசெய்தார்.
பொழிப்புரை : அந்தச் சொல்மாலையான
தமிழ்ப் பதிகத்தைக் கேட்ட அழகிய சீகாழியில் தோன்றிய, கருமை பொருந்திய கழுத்தினையுடைய தேவர்
தலைவரின் மகனாரான ஞானசம்பந்தரும்,
`அரும்புகள்
மலரும் பொய்கைகளையுடைய தென் திருவாரூருக்குச் சென்று வணங்கி, அதன்பின்பு மீண்டு வந்து, உம்முடன் கூடி உடன் அமர்வேன்` என இயம்பினார்.
மேற்கூறப்பட்ட `முத்து விதானம்` (தி.4 ப.21) எனத் தொடங்கும் பதிகத்தைக் கேட்ட
அளவிலேயே ஞானசம்பந்தர் திருவாரூருக்குச் சென்று வருவதை மேற்கொண்டார், இதனால், அப்பதிகச் சிறப்பும் அதன்வழி அவருக்கு
ஏற்பட்ட ஆர்வச் சிறப்பும் ஒருங்கு விளங்குகின்றன.
பெ.
பு. பாடல் எண் : 237
மாமதில்
ஆரூர் மன்னரை அங்கு வணங்கச்செந்
தாமரை
ஒடைச் சண்பையர் நாதன் தான்ஏக,
நாமரு
சொல்லின் நாதரும் ஆர்வத் தொடுபுக்கார்
பூமலர்
வாசத் தண்பணை சூழும் புகலூரில்.
பொழிப்புரை : பெரிய மதில் சூழ்ந்த
திருவாரூர்த் தியாகராசரை அங்குச் சென்று வணங்குதற்குச் செந்தாமரை மலர்கள் நிறைந்த
குளங்களையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் செல்ல, நாவில் பொருந்தும் வாக்கின் தலைவரான
நாவுக்கரசரும் மலர்களின் நறுமணம் கமழும் குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட
புகலூருக்கு, மீதூர்ந்த
விருப்பத்துடன் சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 238
அத்திரு
மூதூர் மேவிய நாவுக் கரசும்,
தம்
சித்தம்
நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்துஇழி
தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதுஆரப்
பைத்தலை
நாகப் பூண்அணி வாரைப் பணிவுற்றார்.
பொழிப்புரை : அப்பழமையான ஊரில்
வீற்றிருக்கும் திருநாவுக்கரசரும்,
தம்
உள்ளத்தில் நிறைவாகத் தேக்கித் தெளிந்த வெள்ளமாகத் திரண்டு தாரை தாரையாகக்
கண்களினின்றும் பொழியும் நீர், உடல் முழுதும்
நிரம்பப் பொருந்த, நச்சுப்பையைக் கொண்ட
தலையை யுடைய பாம்பை அணிகலனாக அணிந்த சிவபெருமானைப் பணிந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 239
தேவர்
பிரானை, தென்புக லூர்மன்
னியதேனை,
பாஇயல்
மாலைச் செந்தமிழ் பாடி, பரிவோடும்
மேவிய
காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே,
ஓவுதல்
ஓவு திருப்பணி செய்து,அங்கு உறைகின்றார்.
பொழிப்புரை : தேவர்களுக்கெல்லாம்
தலைவராய், அழகிய புகலூரில்
நிலைபெற்று எழுந்தருளியிருக்கும் தேன் போன்றவரைப், பாக்களின் இயல்பு முற்றும் பொருந்திய
தமிழ் மாலைகளைப் பாடி, அன்புடனே பொருந்திய
காலங்களில் எல்லாம் விருப்புடன் வணங்கி, நீங்குதல்
இல்லாத திருப்பணிகளைச் செய்து கொண்டு, அங்குத்
தங்குவாராகி,
குறிப்புரை : இதுபொழுது அருளிய
பதிகங்கள்:
1. `பகைத்திட்டார்` (தி.4 ப.54) - திருநேரிசை.
2. `செய்யர்` (தி.4 ப.16) - இந்தளம்.
3. `துன்னக்கோவணம்` (தி.5 ப.46) - திருக்குறுந்தொகை.
4. 054 திருப்புகலூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பகைத்திட்டார்
புரங்கள் மூன்றும் பாறிநீறு ஆகிவீழப்
புகைத்திட்ட
தேவர் கோவே, பொறிஇலேன், உடலம் தன்னுள்
அகைத்திட்டுஅங்கு
அதனை நாளும் ஐவர்கொண்டு ஆட்ட
ஆடித்
திகைத்திட்டேன், செய்வது என்னே, திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : திருப்புகலூர்
பெருமானே! பகையாயின அசுரர்களுடைய முப்புரங்களும் சிதறிச் சாம்பலாய் விழுமாறு
தீக்கு இரையாக்கிய தேவர் தலைவரே! நல்வினை இல்லேனுடைய உடலிலே கிளைத்து அதனை
நாடோறும் ஐம்பொறிகளும் செயற்படுத்ததனால் வருந்தி மயங்கி விட்டேன். யான் யாது
செயற்பாலேன்?
பாடல்
எண் : 2
மைஅரி
மதர்த்த ஒண்கண் மாதரார் வலையில்
பட்டுக்
கைஎரி
சூலம் ஏந்தும் கடவுளை நினைய
மாட்டேன்,
ஐநெரிந்து
அகம் மிடற்றே அடைக்கும்போது ஆவி
யார்தாம்
செய்வதுஒன்று
அறிய மாட்டேன், திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : திருப்புகலூர்ப்
பெருமானே! மை தீட்டப்பட்டுச் செவ்வரி பரந்து செழித்த ஒளிபொருந்திய பெண்களின்
பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும்
கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின்
உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன்.
பாடல்
எண் : 3
முப்பது
முப்பத் தாறும் முப்பதும் இடுகு
ரம்பை,
அப்பர்போல்
ஐவர் வந்து, அது தருக, இது விடு என்று
ஒப்பவே
நலியல் உற்றால், உய்யுமாறு அறிய
மாட்டேன்,
செப்பமே
திகழு மேனித் திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : செந்நிற மேனியை உடைய
திருப்புகலூர்ப் பெருமானே! தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களால் அமைக்கப் பட்ட
இவ்வுடம்பாகிய குடிலிலே தலைவர்களைப்போல ஆட்சிப் புரியும் ஐம்பொறிகளும் அவ்வப்போது
தோன்றி அதனைக்கொடு, இதனை விடு என்று
ஒருசேரத் துன்புறுத்தத் தொடங்கினால் அவற்றில் இருந்து தப்பிக் கடைத்தேறும் வழியை
அடியேன் அறியமாட்டேன்.
பாடல்
எண் : 4
பொறியிலா
அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய்என்று
எண்ணி,
நெறிஅலா
நெறிகள் சென்றேன், நீதனேன், நீதி ஏதும்
அறிவிலேன், அமரர் கோவே, அமுதினை மனனில்
வைக்கும்
செறிவு இலேன், செய்வது என்னே, திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : திருப்புகலூர்ப்
பெருமானே! பொலிவில்லாத அழுக்கு உருவமான இவ்வுடம்பைப் பாதுகாத்துப் பொய்யான வழியையே
மெய்வழியாகக் கருதிக் கீழ்மகனாகிய அடியேன் வழியல்லா வழியிலே வாழ்ந்தேன்!
நெறிமுறையான செய்திகளை அறியும் ஆற்றல் இல்லேன். தேவர்கள் தலைவனே! அமுதமாகிய உன்னை
மனத்தில் நிலையாகவைத்தற்குரிய யோகமுயற்சி உடையேன் அல்லேன். யாது செயற்பாலேன்?
பாடல்
எண் : 5
அளியின் ஆர்
குழலி னார்கள் அவர்களுக்கு அன்பு
அதுஆகிக்
களியினார்
பாடல் ஓவாக் கடவூர் வீ ரட்டம்
என்னும்
தளியின்ஆர்
பாதம் நாளும் நினைவுஇலாத் தகவுஇல்
நெஞ்சம்,
தெளிவு இலேன், செய்வது என்னே, திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : திருப்புகலூர்ப்
பெருமானே! வண்டுகளால் மொய்க்கப் பெறும் கூந்தலை உடைய பெண்கள்பால் அன்பு செலுத்தி, சிவானந்தக் களிப்பினார்கள் பாடும்
பாடல்கள் நீங்காத கடவூர் வீரட்டம் என்னும் கோயிலிலுள்ள அமுதகடேசராம் பெருமானை நாள்
தோறும் விருப்புற்று நினைக்காததும்,
தகுதியற்றதுமான
நெஞ்சம் தெளிவு பெறாத அடியேன் யாது செய்வேன்?
பாடல்
எண் : 6
இலவினார்
மாதர் பாலே இசைந்துநான் இருந்து, பின்னும்
நிலவுநாள்
பலஎன்று எண்ணி, நீதனேன், ஆதி, உன்னை
உலவி நான்
உள்க மாட்டேன், உன்அடி பரவு ஞானம்
செலவு இலேன், செய்வது என்னே, திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : திருப்புகலூர்ப்
பெருமானே! இலவம் பூப்போன்ற வாயும் பாதங்களும் உள்ள பெண்கள் பால் இசைந்திருந்து
இன்னும் அவர்களோடு பல நாள்கள் கூடி இருக்கப் போகிறோம் என்று கருதிக் கீழ்மகனாகிய
அடியேன் அப்பெண்டிர் பக்கமே உலாவிக் கொண்டு உன்னை விருப்புடன் நினையாதேனாய் உன்
திருவடிகளை முன்நின்று வழிபடும் சிவஞானம் என் உள்ளத்தில் பொருந்தும் நிலையினேன்
அல்லேனாய் வாழும் யான் யாது செயற்பாலேன்?
பாடல்
எண் : 7
காத்திலேன்
இரண்டும் மூன்றும், கல்வியேல்
இல்லை என்பால்,
வாய்த்திலேன்
அடிமை தன்உள், வாய்மையால் தூயேன்
அல்லேன்,
பார்த்தனுக்கு
அருள்கள் செய்த பரமனே, பரவு வார்கள்
தீர்த்தமே, திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : பொய்கைகள் விளங்கும்
திருப்புகலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளையும் அடக்கினேன் அல்லேன். ஞான தேசிகராற்
பெற்ற அனுபவ ஞானம் அடியேன்பால் இல்லை. உம் தொண்டில் அடியேன் வாய்ப்புப் பெற்றேன்
அல்லேன். வாய்மையோடு தூய்மை உடையேன் அல்லேன். அருச்சுனனுக்கு அருள்கள் செய்த
பெருமானே! வழிபடுவோர்களுடைய தீவினைகளுக்குக் கழுவாயாகி உள்ளவரே! யான் யாது
செயற்பாலேன்?
பாடல்
எண் : 8
நீரும்ஆய்த்
தீயும் ஆகி நிலனும்ஆய் விசும்பும்
ஆகி,
ஏர்உடைக்
கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச
நின்றார்,
ஆய்வதற்கு
அரியர் ஆகி, அங்குஅங்கே ஆடு கின்ற
தேவர்க்கும்
தேவர் ஆவர், திருப்புக லூர னாரே.
பொழிப்புரை : நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், அழகிய ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள்
வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு
அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப்
பெருமானாவார்.
பாடல்
எண் : 9
மெய்யுளே
விளக்கை ஏற்றி, வேண்டுஅளவு உயரத்
தூண்டி,
உய்வதோர்
உபாயம் பற்றி உகக்கின்றேன், உகவா வண்ணம்
ஐவரை
அகத்தே வைத்தீர், அவர்களே வலியர் சால,
செய்வது
ஒன்று அறிய மாட்டேன், திருப்புக லூர னீரே.
பொழிப்புரை : திருப்புகலூர்ப்
பெருமானே! இவ்வுடம்பினுள்ளே சோடசகலாப் பிராசாத ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களையும் கடத்தற்கு வேண்டிய
அளவில் அதனைத் தூண்டிவிட்டுப் பிறவித் துன்பத்தினின்றும் தப்பிக்கொள்வதற்கு உரிய
உபாயத்தை உறுதியாகப் பிடித்து மேலுயர்ந்து கொண்டிருக்கும் அடியேன் உயர முடியாதபடி
ஐம்பொறிகளை அடியேன் உடலில் சால வலிமை உடையனவாக வைத்திருக்கின்றீர். ஆதலின், அடியேன் செய்வதறியேன்.
பாடல்
எண் : 10
அருவரை
தாங்கி னானும், அருமறை ஆதி யானும்,
இருவரும்
அறிய மாட்டா ஈசனார், இலங்கை வேந்தன்
கருவரை
எடுத்த ஞான்று, கண்வழி குருதி சோரத்
திருவிரல்
சிறிது வைத்தார் திருப்புக லூர னாரே.
பொழிப்புரை : திருப்புகலூர்ப்
பெருமான் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து உயர்த்திய திருமாலும், அரிய வேதங்களை ஓதும் பிரமனும் ஆகிய இருவரும்
அறியமாட்டாத ஈசனாய் இலங்கை மன்னனான இராவணன் கயிலையைப் பெயர்த்தபோது அவன் கண்வழியே
இரத்தம் பெருகுமாறு கால்விரல் ஒன்றைச் சிறிது வைத்தவராவார்.
திருச்சிற்றம்பலம்
4. 016 திருப்புகலூர் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
செய்யர், வெண்நூலர், கருமான் மறிதுள்ளும்
கையர், கனைகழல் கட்டிய
காலினர்,
மெய்யர்
மெய்ந்நின் றவர்க்கு,அல்லா
தவர்க்குஎன்றும்
பொய்யர், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூரிலுள்ள
முறுக்கேறிய சடையினராகிய பெருமானார் நிறத்தில் செய்யராய் , வெண்ணீறு அணிந்தவராய் , கரிய மான் குட்டி துள்ளும் கையினராய் , ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய காலினராய் , உண்மையான நெறியில் ஒழுகும்
அடியவர்களுக்கு மெய்யராய் , அத்தகுதியில்லாதவர்க்குப்
பொய்யராய் உள்ளார் .
பாடல்
எண் : 2
மேகநல்
ஊர்தியர், மின்போன் மிளிர்சடைப்
பாக
மதிநுத லாளைஓர் பாகத்தர்,
நாக
வளையினர், நாக உடையினர்,
போகர், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப்
புரிசடையார் மேக நிறத்தினனான திருமாலாகிய காளையைப் பெரிய வாகனமாக உடையவர் .
மின்னலைப் போல ஒளிவீசும் சடையோடு ,
பாம்பினைக்
கங்கணமாக அணிந்து , யானைத்தோலை
மேலுடையாகப் போர்த்திப் பிறை நுதலாளாகிய பார்வதி பாகராய்ப் போகியாயிருந்து
உயிர்களுக்குப் போகத்தை அருளுபவராவார் .
பாடல்
எண் : 3
பெருந்தாழ்
சடைமுடி மேல்பிறை சூடி,
கருந்தாழ்
குழலியும் தாமும் கலந்து,
திருந்தா
மனம்உடை யார்திறத்து என்றும்
பொருந்தார், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப் புரி
சடையார் பெரிய தாழ்ந்த சடைமுடி மேலே பிறையைச் சூடிக் கரியதாய் நீண்ட கூந்தலை உடைய
பார்வதியோடு தாமும் கலந்து , திருந்தாத மனமுடையவர்
பக்கல்தாம் என்றும் பொருந்தாராக உள்ளார் .
பாடல்
எண் : 4
அக்குஆர்
அணிவடம் ஆகத்தர், நாகத்தர்,
நக்குஆர்
இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார்
தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும்
புக்கார், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப் புரி
சடையார் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினராய் , பாம்பினை உடையவராய் , ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச்
சூடியவராய் , நாள்தோறும் இறந்தவர்
மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர் .
பாடல்
எண் : 5
ஆர்த்தார்
உயிர்அடும் அந்தகன் தன்உடல்,
பேர்த்தார்
பிறைநுதல் பெண்ணின்நல் லாள்உட்க,
கூர்த்துஆர்
மருப்பில் கொலைக்களிற்று ஈர்உரி
போர்த்தார், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப்
புரிசடையார் ஆரவாரித்துக் கொண்டு உயிர்களைக் கொல்லும் கூற்றுவனுடைய உடலை அழித்தார்
. பிறைபோன்ற நெற்றியை உடைய பார்வதி அஞ்சுமாறு கூரிய தந்தங்களை உடைய கொலைத் தொழில்
புரியும் யானையைக்கொன்று அதனுடைய உதிரப் பசுமை கெடாத தோலினை உடம்பில் போர்த்தி
உள்ளார் .
பாடல்
எண் : 6
தூமன்
சுறவம் துதைந்த கொடிஉடைக்
காமன்
கணைவலம் காய்ந்தமுக் கண்ணினர்,
சேம
நெறியினர், சீரை உடையவர்,
பூமன்
புகலூர்ப் புரிசடை யாரே.
பொழிப்புரை : வலிமை பொருந்திய
சுறாக்கொடியை உடைய மன்மதன் விடுத்த அம்புகளின் வலிமையைக் கோபித்த மூன்றாம்
கண்ணையுடையவர் . அடியவர்களுக்குப் பாதுகாவலை உடைய வழியை அருளுபவர் . மரவுரியை
உடுப்பவர் . அவர் முருகனார் தொடுத்தளித்த பூக்களை எப்போதும் அணிந்தவராகிய, புகலூரில்
உகந்தருளியிருக்கும் முறுக்கேறிய சடையினை உடையவர் .
பாடல்
எண் : 7
உதைத்தார்
மறலி உருளஒர் காலால்,
சிதைத்தார்
திகழ்தக்கன் செய்தநல் வேள்வி,
பதைத்துஆர்
சிரம்கரம் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப்
புரிசடையார் கூற்றுவன் உருளுமாறு அவனை ஒரு திருவடியால் உதைத்தவர் . சிறப்பாக விளங்கிய
தக்கன் செய்த பெரிய வேள்வியைச் சிதைத்தவர் . அவ்வேள்வியில் பங்கு கொண்ட தம் தவறு
கருதி நடுங்கிய தேவர்களின் தலைகளையும் கைகளையும் போக்கிச் சூரியனுடைய கண்ணை
அவித்தவர் .
பாடல்
எண் : 8
கரிந்தார்
தலையர், கடிமதில் மூன்றும்
தெரிந்தார்
கணைகள் செழுந்தழல் உண்ண,
விரிந்தார்
சடைமேல் விரிபுனல் கங்கை,
புரிந்தார், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப்
புரிசடையார் இறந்தவருடைய தலை மாலையை அணிந்தவர் . காவல் பொருந்திய மும்மதில்களையும்
சிவந்த நெருப்பு உண்ணுமாறு அம்புகளைத் தேர்ந்து எடுத்தவர் . விரிந்து பரந்த சடையின்மேல்
நீர்மிக்க கங்கையை விரும்பி ஏற்றவர் .
பாடல்
எண் : 9
ஈண்டு
ஆர் அழலின் இருவரும் கைதொழ
நீண்டார், நெடுந்தடு மாற்ற
நிலைஅஞ்ச,
மாண்டார்தம்
என்பும் மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார், புகலூர் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப்
புரிசடையார் செறிந்த தீப்பிழம்பாய்ப் பிரமனும் திருமாலும் கைகளால் தொழுமாறு
நீண்டவர் . தம்முடைய நீண்டகாலத் தடுமாற்ற வாழ்வை நினைந்து அஞ்சுமாறு வாழ்ந்து
இறந்தவர்களின் எலும்பையும் கொன்றைமலர் மாலையையும் அணிந்தவர் .
பாடல்
எண் : 10
கறுத்தார்
மணிகண்டம், கால்விரல் ஊன்றி
இறுத்தார்
இலங்கையர் கோன்முடி பத்தும்,
அறுத்தார்
புலனைந்தும், ஆயிழை பாகம்
பொறுத்தார், புகலூர்ப் புரிசடை
யாரே.
பொழிப்புரை : புகலூர்ப்
புரிசடையார் இரத்தினம் போன்ற செந்நிறமான கழுத்துக் கறுத்து நீலகண்டராயினார் . கால்
விரலை ஊன்றி இராவணனுடைய பத்துத் தலைகளையும் செயலற்றவை ஆக்கினார் . ஐம்புல
நுகர்ச்சியையும் துறந்தவர் . பார்வதியைப் பாகமாகக் கொண்டவர் .
திருச்சிற்றம்பலம்
5. 046 திருப்புகலூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
துன்னக்
கோவணச் சுண்ணவெண் ணீறுஅணி
பொன்நக்கு
அன்ன சடைப்புக லூரரோ,
மின்நக்கு
அன்னவெண் திங்களைப் பாம்புடன்
என்னுக்
கோஉடன் வைத்திட்டு இருப்பதே.
பொழிப்புரை : கோவண ஆடையையும் , வெண்ணீற்றுப் பொடி யணிந்த மேனியையும் , பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும்
உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே ! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப்
பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர் ?
பாடல்
எண் : 2
இரைக்கும்
பாம்பும், எறிதரு திங்களும்,
நுரைக்கும்
கங்கையும், நுண்ணிய செஞ்சடை,
புரைப்பு
இலாத பொழில்புக லூரரை
உரைக்கு
மாசொல்லி ஒள்வளை சோருமே.
பொழிப்புரை : இப்பெண் , நெட்டுயிர்க்கும் பாம்பையும் , அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும் , நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும்
நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும்
பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள் .
பாடல்
எண் : 3
ஊச
லாம்அரவு அல்குல்என் சோர்குழல்,
ஏசல்
ஆம்பழி தந்து,எழில் கொண்டனர்,
ஓ,சொலாய் மகளே, முறையோ, என்று
பூசல்
நாம்இடு தும்புக லூரர்க்கே.
பொழிப்புரை : அசைந்தாடும்
அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார்
முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர் . ஆதலால் , ` ஓ , மகளே ! சொல்வாயாக ! முறையோ ` என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல்
இடுவோமாக .
பாடல்
எண் : 4
மின்னின்
நேர்இடை யாள்உமை பங்கனை,
தன்னை
நேர்ஒப்பு இலாத தலைவனை,
புன்னைக்
கானல் பொழிற்புக லூரனை,
என்
உளாகவைத்து இன்புற்று இருப்பனே.
பொழிப்புரை : மின்னலையொத்த
இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும் , தன்னை நிகர்க்குமொன்றில்லாத தலைவனும்
ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன்
இன்பமுற்றிருப்பேன் .
பாடல்
எண் : 5
விண்ணின்
ஆர்மதி சூடிய வேந்தனை,
எண்ணி
நாமங்கள் ஓதி எழுத்துஅஞ்சும்
கண்ணி
னால்கழல் காண்பிடம் ஏதுஎனில்,
புண்ணி
யன்புக லூரும்,என் நெஞ்சுமே.
பொழிப்புரை : விண்ணிற் பொருந்திய
பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை ,
நாமங்கள்
கூறியும் , திருவைந்தெழுத்தால்
தியானித்தும் , கண்ணினாற் கழலடிகளைத்
தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிருக்கும் புகலூரும் என்
நெஞ்சமும் ஆம் .
பாடல்
எண் : 6
அண்ட
வாணர் அமுதுஉண, நஞ்சுஉண்டு,
பண்டு
நான்மறை ஓதிய பாடலன்,
தொண்டர்
ஆகித் தொழுது மதிப்பவர்
புண்ட
ரீகத்து உளார், புக லூரரே.
பொழிப்புரை : புகலூர்த் தலத்து
இறைவர் , தேவர்கள்
அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர் ;
பழமையில்
நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர் ;
தொண்டராகித்
தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர் .
பாடல்
எண் : 7
தத்து
வம்தலை கண்டுஅறி வார்இலை,
தத்து
வம்தலை கண்டவர் கண்டிலர்,
தத்து
வம்தலை நின்றவர்க்கு அல்லது
தத்து
வன்அலன், தண்புக லூரனே.
பொழிப்புரை : தத்துவங்களின்
கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர் ; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக்
கண்டவர் காணாதவரேயாவர் ; தத்துவம்
தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான் .
பாடல்
எண் : 8
பெருங்கை
ஆகிப் பிளிறி வருவதுஓர்
கருங்கை
யானைக் களிற்றுஉரி போர்த்தவர்,
வருங்கை
யானை மதகளிறு அஞ்சினைப்
பொரும்கை
யானை,கண் டீர்புக லூரரே.
பொழிப்புரை : புகலூர்த் தலத்து
இறைவர் , பெருங்கையோடு பிளிறி
வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர் ; துதிக்கையை உடைய மதயானைகளாகிய
ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர் .
பாடல்
எண் : 9
பொன்ஒத்த
நிறத் தானும், பொருகடல்
தன்ஒத்த
நிறத்தானும் அறிகிலாப்
புன்னைத்
தாது பொழிற்புக லூரரை,
என்அத்தா
என, என்இடர் தீருமே.
பொழிப்புரை : பொன்னை ஒத்த நிறம்
உடைய பிரமதேவனும் , அலைவீசும் கடலையொத்த
நீல நிறத்தவனான திருமாலும் அறியப் படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய
பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை ` என் தந்தையே !` என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும்
.
பாடல்
எண் : 10
மத்த
னாய்மதி யாது மலைதனை
எத்தி
னான்திரள் தோள்முடி பத்துஇற
ஒத்தி
னான்விரலால், ஒருங்கு ஏத்தலும்
பொத்தி
னான், புகலூரைத் தொழுமினே.
பொழிப்புரை : மதச்
செருக்குடையவனாய்ச் சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின்
திரண்ட தோள்களும் , முடிபத்தும்
இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும் , தன்
நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் ஏத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான்
உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக .
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------
திருநாவுக்கரசு சுவாமிகள் பாண்டி
நாட்டுத் தலங்களை வழிபட்டுத் திருப்பதிகங்கள் பாடியருள் செய்து, பாண்டி நாட்டை நீத்துச், சோழநாட்டை அடைந்து திருப்புகலூரைச்
சேர்ந்தார்.
திருப்புகலூர் இறைவரை நாளும் தொழுது
உழவாரத் தொண்டு புரிந்துக் கொண்டு இருந்தார். அக்காலத்தில், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருத்தலக் கோவைத் திருத்தாண்டகம், குறைந்த திருநேரிசை, தனித் திருநேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணத்து அடைவு, பாவநாசத் திருப்பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப்
பாடி அருளினார். வருநாளில் சிவபெருமான், அப்பர்
பெருமானுடைய நல் நிலையை உலகுக்குக் காட்டத் திருவுளம் பற்றினார். சுவாமிகள் உழவாரத் தொண்டாற்றும்போது, உழவாரப்படை நுழைந்த இடங்களில் எல்லாம்
பொன்னும், நவமணிகளும் பொலிந்து
இலங்கும்படி செய்தார். அப்பர் பெருமான்
அவற்றைப் பருக்கைக் கற்களோடு உழவாரப் படையில் ஏந்தி குளத்தில் எறிவார். அவர் புல்லோடும், கல்லோடும், பொன்னோடும், மணியோடும், சொல்லோடும் வேறுபாடு இல்லாத நிலையில்
நின்றார். அதற்குமேல், இறைவர் அருளால், தேவதாசிகள் மின்னுக்கொடிகள் போல
வானிலிருந்து இறங்கி வந்து, பாட்டாலும்
கூத்தாலும் பிறவற்றாலும் சுவாமிகளின் நிலையைக் குலைக்க முயன்றார்கள். சுவாமிகள்
சித்தநிலை ஒரு சிறிதும் திரியவில்லை. சுவாமிகள் திருத்தொண்டில் உறுதிகொண்டு, "பொய்ம்மாயப்
பெருங்கடலுள்" என்னும் திருத்தாண்டகத்தை அருளிச் செய்தார். தேவதாசிகளும்
சுவாமிகளுக்குச் சிவமாகவே காணப்பட்டார்கள். அவர்கள் சுவாமிகளை வணங்கிச்
சென்றார்கள்.
அன்பு வடிவாய் இலங்கும் அப்பர் பெருமான், "புகலூர்ப் பெருமானே, என்னை இனிச் சேவடிக் கீழ்
சேர்த்திடுக" என்று திருவிருத்தங்கள் பல பாடினார். ஒரு சித்திரையில், சதயம் கூடிய திருநாளில், "எண்ணுகேன் என்சொல்லி
எண்ணுகேனோ" என்னும் திருத்தாண்டகத்தைத் தொடங்கி, "புண்ணியா உன் அடிக்கே
போதுகின்றேன்" என்று துதித்து,
நண்ணரிய
சிவானந்த ஞானவடிவினை அடைந்து, இறைவரின்
திருவடிக்கீழ் அமர்ந்தார்.
பெரிய
புராணப் பாடல் எண் : 412
தேம்பொழில்சூழ்
செந்தமிழ்நாட்
டினில்எங்கும் சென்று
இறைஞ்சிப்
பாம்பு
அணிவார் தமைப்பணிவார்
பொன்னிநாடு
அதுஅணைந்து
வாம்புனல்சூழ்
வளநகர்கள்
பின்னும்போய்
வணங்கியே
பூம்புகலூர்
வந்து அடைந்தார்
பொய்ப்பாசம்
போக்குவார்.
பொழிப்புரை : தேன் நிறைந்த
பொழில்கள் சூழ்ந்த செந்தமிழ் நாட்டில் எவ்விடத்திற்கும் சென்று, ஆங்காங்குள்ள பாம்பு அணியும் இறைவரை
வணங்கியவராய், பொன்னியாறு பாயும்
சோழநாட்டைச் சேர்ந்து, முன்பு வணங்கி
மகிழ்ந்த, தாவும் நீரையுடைய
வளநகர்கள் பலவற்றிற்கும் இது பொழுதும் சென்று வணங்கி, பொய்யான பற்றை ஒழிப்பவரான
திருநாவுக்கரசர் பூம்புகலூர் என்னும் திருப்பதிக்கு வந்தடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 413
பொய்கைசூழ்
பூம்புகலூர்ப்
புனிதர் மலர்த்
தாள்வணங்கி
நையுமனப்
பரிவோடு
நாள்தோறும்
திருமுன்றில்
கைகலந்த
திருத்தொண்டு
செய்துபெருங்
காதலுடன்
வைகுநாள்
எண்இறந்த
வண்தமிழ்மா
லைகள்மொழிவார்.
பொழிப்புரை : நீர் நிலைகள் சூழ்ந்த
பூம்புகலூரில் வீற்றிருந்தருளும் இறைவரின் மலரடிகளை வணங்கி, நெகிழ்ந்து கரையும் மனத்து எழும்
அன்புடனே, நாள்தோறும், திருமுற்றத்தில் அன்புடைய
கைத்திருத்தொண்டுகள் பலவற்றையும் செய்து, மிக்க
காதலுடன் தங்கியிருந்த நாள்களில்,
எண்
இல்லாத வளப்பம் மிக்க தமிழ் மாலைகளை அருளிச் செய்வாராகி.
பெ.
பு. பாடல் எண் : 414
நின்றதிருத்
தாண்டகமும்
நீடுதனித் தாண்டகமும்
மன்றுஉறைவார்
வாழ்பதிகள்
வழுத்துதிருத்
தாண்டகமும்
கொன்றைமலர்ச்
சடையார்பால்
குறைந்துஅடைந்த
நேரிசையும்
துன்றுதனி
நேரிசையும்
முதலான தொடுத்து
உரைத்தார்.
பொழிப்புரை : நின்ற திருத்தாண்டகமும், நீடிய தமிழ்த் திருத்தாண்டகப்
பதிகங்களும், திருச்சபையில்
கூத்தியற்றும் இறைவர் வீற்றிருக்கின்ற திருப்பதிகளை வணங்கிப் போற்றும் க்ஷேத்திரக்
கோவைத் திருத்தாண்டகமும், கொன்றை மலர் சூடிய
சடையையுடைய சிவபெருமானிடம் குறைந்து அடையும் கருத்தினை உட்கொண்ட குறைந்த
திருநேரிசைப் பதிகங்களும், பொருந்திய
தனித்திருநேரிசைப் பதிகங்களும் இவை முதலிய பலவற்றையும் பாடி அருளினார்.
குறிப்புரை : இது பொழுது அருளிய
பதிகங்கள்:
1. நின்ற
திருத்தாண்டகம்: `இருநிலனாய்` (தி.6 ப.94).
2. தனித் திருத்தாண்
டகம்: `ஆமயம் தீர்த்து` (தி.6 ப.96).
3. திருத்தலக் கோவைத்
திருத்தாண்டகம் (திருத்தலக் கோவைத் திருத்தாண்டகம்): `தில்லைச் சிற்றம்பலமும்` (தி.6 ப.70).
4. குறைந்த திருநேரிசை: (அ) `வென்றிலேன்` (தி.4 ப.78).
(ஆ) `தம்மானம்` (தி.4 ப.79).
5. நினைந்த திருநேரிசை: `முத்தினை` (தி.4 ப.74).
6. தனித்திரு நேரிசை: (அ) `தொண்டனேன்` (தி.4 ப.75).
(ஆ) `மருளவாம்` (தி.4 ப.76).
(இ) `கடும்பகல்` (தி.4 ப.77).
திருநாவுக்கரசர்
திருப்பதிகங்கள்
6. 094
பொது
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
இருநிலனாய்த்
தீயாகி நீரு மாகி
இயமானனாய் எறியும் காற்று
மாகி
அருநிலைய
திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய் அட்ட
மூர்த்தி யாகிப்
பெருநலமுங்
குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர்உருவுந்
தம்உருவுந் தாமே யாகி
நெருநலையாய்
இன்றுஆகி நாளை ஆகி
நிமிர்புன் சடையடிகள்
நின்ற வாறே.
பொழிப்புரை :பெரிய பூமியாகியும் , நீராகியும் , தீயாகியும் , எறியும் காற்றாகியும் , ஆகாயமாகியும் , ஞாயிறாகியும் , அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும் , இயமானனாகியும் இங்ஙனம் அட்ட
மூர்த்தியாகியும் , பெருமையுடையதாகிய
நன்மையும் , சிறுமை உடையதாகிய
குற்றமும் , பெண்ணும் , ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம்
, உருவம் , அருவுருவம் என்னும் தம் மூவகைத்
திருமேனிகளும் தாமே ஆகியும் , நேற்று ஆகியும் , இன்று ஆகியும் , நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய
எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .
பாடல்
எண் : 2
மண்ணாகி
விண்ணாகி மலையும் ஆகி
வயிரமுமாய் மாணிக்கந்
தானே ஆகிக்
கண்ணாகிக்
கண்ணுக்கோர் மணியும் ஆகிக்
கலையாகிக் கலைஞானந்
தானே ஆகிப்
பெண்ணாகிப்
பெண்ணுக்குஓர் ஆணும் ஆகிப்
பிரளயத்துக்கு
அப்பால்ஓர் அண்டம் ஆகி
எண்ணாகி
எண்ணுக்குஓர் எழுத்தும் ஆகி
எழுஞ்சுடராய்
எம்அடிகள் நின்ற வாறே.
பொழிப்புரை : மண் ஆகியும் , விண் ஆகியும் , மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும் , கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும் , நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண்
ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும் , பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய
சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை
வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் , எம்பெருமான் நின்றவாறு
வியக்கத்தக்கதாகும் .
பாடல்
எண் : 3
கல்லாகிக்
களறுஆகிக் கானும் ஆகிக்
காவிரியாய்க்
கால்ஆறாய்க் கழியும் ஆகிப்
புல்லாகிப்
புதலாகிப் பூடும் ஆகிப்
புரமாகிப்
புரமூன்றுங் கெடுத்தான் ஆகிச்
சொல்லாகிச்
சொல்லுக்கோர் பொருளும் ஆகிச்
சுலாவாகிச்
சுலாவுக்கோர் சூழல் ஆகி
நெல்லாகி
நிலனாகி நீரும் ஆகி
நெடுஞ்சுடராய்
நிமிர்ந்துஅடிகள் நின்ற வாறே.
பொழிப்புரை :மலையாகியும்
களர்நிலமாகியும் காடாகியும் , ஆறாகியும் , வாய்க்காலாகிய வழியாகியும் , கடற்கரைக் கழியாகியும் , புல்லாகியும் , புதராகியும் , பூடு ஆகியும் , நகர் ஆகியும் , புரம் மூன்றிற்கும் அழிவாகியும்
சொல்லாகியும் , சொல்லிற்குப்
பொருந்திய பொருள் ஆகியும் , போக்கு வரவு ஆகியும் , அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும்
நிலனாகியும் , நீராகியும் , நெல்லாகியும் , நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான்
நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும் .
பாடல்
எண் : 4
காற்றுஆகிக்
கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக்
கங்குல் ஆகிக்
கூற்றாகிக்
கூற்றுஉதைத்த கொல்களிறும் ஆகிக்
குரைகடலாய்க்
குரைகடற்குஓர் கோமா னும்ஆய்
நீற்றானாய்
நீறேற்ற மேனி ஆகி
நீள்விசும்பாய்
நீள்விசும்பின் உச்சி ஆகி
ஏற்றானாய்
ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி
எழுஞ்சுடராய்
எம்அடிகள் நின்ற வாறே.
பொழிப்புரை :காற்றாகியும் , கரியமுகிலாகியும் , இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம்
மூன்றாகியும் , கனவாகியும் , நனவாகியும் , இரவாகியும் , நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும்
அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும் , இயமனை
உதைத்துக் கொன்ற களிறாகியும் , ஒலிக்கும் கடலாகியும்
, அக்கடற்குத் தலைவனாம்
வருணன் ஆகியும் , நீறணிந்த கோலத்தன்
ஆகியும் , நீறணிதற்கு ஏற்ற
வடிவத்தன் ஆகியும் , நீண்ட ஆகாயம் ஆகியும்
, அவ்வாகாயத்து
உச்சியாகியும் , உலகத்தின்
தொழிற்பாடுகள் எல்லாவற்றையும ஏற்றுக் கொண்டவனாகியும் , இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி
விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .
பாடல்
எண் : 5
தீயாகி
நீராகித் திண்மை ஆகித்
திசையாகி அத்திசைக்கு
ஓர்தெய்வம் ஆகித்
தாயாகித்
தந்தையாய்ச் சார்வும் ஆகித்
தாரகையும்
ஞாயிறுந்தண் மதியும் ஆகிக்
காயாகிப்
பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானும்
தானே ஆகி
நீயாகி
நானாகி நேர்மை ஆகி
நெடுஞ்சுடராய்
நிமிர்ந்துஅடிகள் நின்ற வாறே.
பொழிப்புரை : தீயின்
வெம்மையாகியும் , நீரின் தண்மையாகியும்
, நிலத்தின்
திண்மையாகியும் , திசைகள் ஆகியும் , அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய
தெய்வமாகியும் , தாயாகியும் , தந்தையாகியும் , சார்தற்குரிய பற்றுக்கோடாகியும் , நாண் மீனாகியும் , ஞாயிறாகியும் , குளிர் மதியமாகியும் , காயாகியும் , பழங்கள் ஆகியும் , பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும் , அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை
முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட
ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .
பாடல்
எண் : 6
அங்கமாய்
ஆதியாய் வேதம் ஆகி
அருமறையோடு ஐம்பூதம்
தானே ஆகிப்
பங்கமாய்ப்
பலசொல்லும் தானே ஆகிப்
பால்மதியோடு
ஆதியாய்ப் பான்மை ஆகிக்
கங்கையாய்க்
காவிரியாய்க் கன்னி ஆகிக்
கடலாகி மலையாகிக்
கழியும் ஆகி
எங்குமாய்
ஏறுஊர்ந்த செல்வன் ஆகி
எழுஞ்சுடராய்
எம்மடிகள் நின்ற வாறே.
பொழிப்புரை : ஆறு அங்கங்கள்
ஆகியும் , ஆதியாய வேதங்கள்
ஆகியும் , அரிய மந்திரங்கள்
ஆகியும் , ஐம்பூதங்களின்
தலைவராய தேவர்கள் ஆகியும் , புகழ்ச் சொற்களேயன்றி
இகழ்ச் சொற்களும் ஆகியும் , வெள்ளிய மதி ஆகியும் , உலகிற்கு முதல் ஆகியும் , வினையாகியும் , கங்கை , காவிரி , கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய
தேவர்கள் ஆகியும் , கடலாகியும் , மலையாகியும் , கழி ஆகியும் , எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன்
ஆகியும் , தோன்றி விளங்கும்
ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம் .
பாடல்
எண் : 7
மாதா
பிதாவாகி மக்கள் ஆகி
மறிகடலும்
மால்விசும்பும் தானே ஆகிக்
கோதா
விரியாய்க் குமரி ஆகிக்
கொல்புலித்தோல் ஆடைக்
குழகன் ஆகிப்
போதாய
மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார்
பிறப்புஅறுக்கும் புனிதன் ஆகி
யாதானும்
எனநினைந்தார்க்கு எளிதே ஆகி
அழல் வண்ண வண்ணர்தாம்
நின்ற வாறே.
பொழிப்புரை : மாதாபிதா மக்கள்
ஆகியும் , அலை எழுந்து மடங்கும்
கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும் ,
கோதாவிரி
குமரிகள் ஆகியும் , கொல்லும் புலியினது
தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும் , உரிய
பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும்
புனிதன் ஆகியும். ` யாது நிகழினும்
நிகழ்க ` எனக் கவலையற்றுத்
தன்னையே நினைவார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிறமுடைய
எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்
பாடல்
எண் : 8
ஆவாகி
ஆவினில் ஐந்தும் ஆகி
அறிவாகி அழலாகி
அவியும் ஆகி
நாவாகி
நாவுக்குஓர் உரையும் ஆகி
நாதனாய் வேதத்தின்
உள்ளோன் ஆகிப்
பூவாகிப்
பூவுக்குஓர் நாற்றம் ஆகிப்
புக்குளால் வாசமாய்
நின்றான் ஆகித்
தேவாதி
தேவர் முதலும் ஆகிச்
செழுஞ்சுடராய்ச்
சென்றுஅடிகள் நின்ற வாறே.
பொழிப்புரை :பசுவும் பசுவிடத்துத்
தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும் , வேள்வித்தீயும் , அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும் , நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும் , நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும் , பூவும் , அப்பூவிற் குரிய ஒப்பற்ற நாற்றமும்
ஆகியும் , நாற்றம் பூவிற்குள்
ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும் , தேவர்களும்
தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும் , செழுஞ்சுடராய்
எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும் .
பாடல்
எண் : 9
நீர்ஆகி
நீள்அகலந் தானே ஆகி
நிழல்ஆகி
நீள்விசும்பின் உச்சி ஆகிப்
பேராகிப்
பேருக்குஓர் பெருமை ஆகிப்
பெருமதில்கள்
மூன்றினையும் எய்தான் ஆகி
ஆரேனும்
தன்அடைந்தோர் தம்மை எல்லாம்
ஆட்கொள்ள வல்லஎம்
ஈசனார்தாம்
பார்ஆகிப்
பண்ஆகிப் பாடல் ஆகிப்
பரஞ்சுடராய்ச்
சென்று்டிகள் நின்ற வாறே.
பொழிப்புரை :பெரிய மதில்கள்
மூன்றையும் எய்தானும் , தன்னை யடைந்தார்
யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின்
சுவையும் , நீள
அகலங்களும்ஆகியும் , புகழும் புகழுக்குப்
பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும் , பூமியின்
பொறைக்குணமும் , பண்ணின் இனிமைப்
பண்பும் , அப்பண்புடைய பாடலும்
ஆகியும் , மேலான ஒளியாகியும்
விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்
பாடல்
எண் : 10
மால்ஆகி
நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய்
அருக்கமாய் மகிழ்வும் ஆகிப்
பாலாகி
எண்திசைக்கும் எல்லை ஆகிப்
பரப்பாகிப் பரலோகந்
தானே ஆகிப்
பூலோக
புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன்
தானே ஆகி
ஏலா
தனஎல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய்
எம்அடிகள் நின்ற வாறே.
பொழிப்புரை :மாலும், நான்முகனும் ஆகியும், பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும் ஆகியும், எட்டுத் திசைக் கூறும் அவ்வெட்டுத்
திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும் , பரப்பும்
பரலோகமும் ஆகியும் , பூலோக புவலோக சுவ
லோகங்களும் , அவற்றின் உட்பட்ட
அண்டங்களும் ஆகியும் , புராணனுக்குரிய
பழமையாகியும் , தான் இன்றித் தாமாக
நடைபெறாத சட உலகங்களும் , அவைகளை
நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும் , எழும்
ஒளிப்பிழம்பாகியும் , எம்பெருமான் விளங்கி
நின்ற வாறு வியக்கத்தக்கதாகும் .
திருச்சிற்றம்பலம்
6.
096 பொது
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஆமயந்தீர்த்து
அடியேனை ஆளாக் கொண்டார்,
அதிகைவீ ரட்டானம்
ஆட்சி கொண்டார்,
தாமரையோன்
சிரம்அரிந்து கையில் கொண்டார்,
தலைஅதனில்
பலிகொண்டார், நிறைவாம் தன்மை
வாமனனார்
மாகாயத்து உதிரம் கொண்டார்,
மான்இடம்கொண் டார்,வலங்கை மழுவாள்
கொண்டார்,
காமனையும்
உடல்கொண்டார், கண்ணால் நோக்கிக்
கண்ணப்பர்
பணியுங்கொள் கபாலி யாரே.
பொழிப்புரை :கண்ணப்பரது
பூசையினையும் அன்புகருதி ஏற்றுக்கொண்ட காபாலியாராகிய சிவபெருமானார் நோய் தீர்த்து
அடியேனை ஆளாகக் கொண்டவரும் , அதிகை
வீரட்டானத்திருந்து ஆட்சி செய்பவரும் , பிரமனது
சிரத்தைக் கொய்து கையிற் கொண்ட வரும் , அத்தலையோட்டில்
பிச்சை ஏற்றவரும் , வாமனனாகி வந்து மண்
இரந்து திரிவிக்கிரமனாய் வளர்ந்து மூவுலகையும் அளந்து மிக்க செருக்குற்ற நிலையில்
அப்பேருடம்பின் உதிரத்தை வெளிப்படுத்தி அவனை அழித்தவரும் , மான்போன்ற உமையை இடப்பாகமாகக்
கொண்டவரும் , மழு ஆயுதத்தை
வலக்கையில் ஏந்தியவரும் , நெற்றிக் கண்ணைத்
திறந்து பார்த்துக் காமனை அழித்தவரும் ஆவார் .
பாடல்
எண் : 2
முப்புரிநூல்
வரைமார்பின் முயங்கக் கொண்டார்,
முதுகேழல்
முளைமருப்பும் கொண்டார்,
பூணாச்
செப்புஉருவ
முலைமலையாள் பாகம் கொண்டார்,
செம்மேனி வெண்ணீறு
திகழக் கொண்டார்,
துப்புரவார்
சுரிசங்கின் தோடு கொண்டார்,
சுடர்முடிசூழ்ந்து
அடிஅமரர் தொழவும் கொண்டார்,
அப்பலிகொண்டு
ஆயிழையார் அன்பும் கொண்டார்,
அடியேனை ஆள்உடைய அடிக
ளாரே.
பொழிப்புரை : அடியேனைத் தமக்கு
ஆளாகவுடைய தலைவர் ஆகிய சிவபெருமானார் உத்தமவிலக்கணமாகிய கீற்றுப் பொருந்திய
மார்பினிடத்து முப்புரிநூல் பொருந்தக் கொண்டவரும் . பழைய பன்றியில் முளை போன்ற
கொம்பினைப் பூணாகக் கொண்டவரும் ,
கிண்ணம்
போன்ற அழகிய முலைகளையுடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவரும் சிவந்த உடலில்
வெண்ணீறு விளங்கக் கொண்டவரும் ,
தூய்மை
நிறைந்து முறுக்குண்ட சங்கினாலியன்ற தோட்டினைக் கொண்டவரும் , அமரர் சூழ்ந்து சுடர் முடியால் தமது
அடியைத் தொழக் கொண்டவரும் , அந்நாளில் தாருகாவன
முனி பத்தினியர் இட்ட பிச்சையோடு அவர்களது அன்பினையும் கொண்டவர் ஆவார் .
பாடல்
எண் : 3
முடிகொண்டார்
முளைஇளவெண் திங்க ளோடு
மூசும்இள நாகம் உட
னாகக் கொண்டார்,
அடிகொண்டார்
சிலம்பலம்பு கழலும் ஆர்ப்ப
அடங்காத முயலகனை
அடிக்கீழ்க் கொண்டார்,
வடிகொண்டுஆர்ந்து
இலங்குமழு வலங்கைக் கொண்டார்,
மாலைஇடப் பாகத்தே
மருவக் கொண்டார்,
துடிகொண்டார்
கங்காளம் தோள்மேல் கொண்டார்,
சூலைதீர்த்து அடியேனை
ஆட்கொண் டாரே.
பொழிப்புரை :சடையை முடியாகக்
கொண்டவரும் , முதலில்
காணப்படுகின்ற வெள்ளிய பிறைச் சந்திரனையும் படத்தால் மறைக்கும் இளம்பாம்பையும்
உடன் உறையும்படி அம்முடிக்கண் கொண்ட வரும் , ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும்
கழலினையும் ஒலிக்கும்படி அடிக்கண் கொண்டவரும் , கொடுமை குறையாத முயலகனை அடிக்கீழ்க்
கொண்டவரும் , கூர்மையைக் கொண்டு
நிரம்ப இலங்குகின்ற மழுவினை வலக்கையிற் கொண்டவரும் , திருமாலை இடப்பாகமாகப் பொருந்தக்
கொண்டவரும் , துடியைக் கையிற்
கொண்டவரும் , எலும்புக் கூட்டினைத்
தோள் மேற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானாரே சூலை நோயைத் தீர்த்து அடியேனை ஆட்
கொண்டவர் ஆவார் .
பாடல்
எண் : 4
பொக்கணமும்
புலித்தோலும் புயத்தில் கொண்டார்,
பூதப் படைகள்புடை
சூழக் கொண்டார்,
அக்கினொடு
படஅரவம் அரைமேல் கொண்டார்,
அனைத்துஉலகும்
படைத்து,அவையும் அடங்கக் கொண்டார்,
கொக்குஇறகும்
கூவிளமும் கொண்டை கொண்டார்,
கொடியானை அடல்ஆழிக்கு
இரையாக் கொண்டார்,
செக்கர்நிறத்
திருமேனி திகழக் கொண்டார்,
செடியேனை ஆட்கொண்ட
சிவனார் தாமே.
பொழிப்புரை : திருநீற்றுப்
பையினையும் புலித்தோலையும் புயத்தில் கொண்டவரும் , பூதப் படைகள் தம்மைப் பக்கங்களில்
சூடிக் கொண்டவரும் , அக்குமணியையும்
படநாகத்தையும் இடுப்பின்மேல் கொண்டவரும் , தாம் படைத்தவையாகிய எல்லா உலகங்களையும்
ஒடுங்குமாறு செய்தலைக் கொண்டவரும் ,
கொக்கிறகினையும்
வில்வத்தினையும் முடித்த சடையில் கொண்டவரும் , கொடிய சலந்தராசுரனை ஆற்றல் மிக்க
ஆழிக்கு இரையாகக் கொண்டவரும் , செந்நிறத் திருமேனி
விளங்கக் கொண்டவரும் ஆகிய சிவனாரே கீழ்மையேனை ஆட்கொண்டவர் ஆவார் .
பாடல்
எண் : 5
அந்தகனை
அயிற்சூலத்து அழுத்திக் கொண்டார்,
அருமறையைத்
தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்,
சுந்தரனைத்
துணைக்கவரி வீசக் கொண்டார்,
சுடுகாடு நடமாடும்
இடமாக் கொண்டார்,
மந்தரம்நல்
பொருசிலையா வளைத்துக்கொண்டார்,
மாகாளன் வாசல்காப்பு
ஆகக் கொண்டார்,
தந்திரமந்
திரத்தராய் அருளிக் கொண்டார்,
சமண்தீர்த்துஎன்
தன்னைஆட் கொண்டார் தாமே.
பொழிப்புரை : அந்தகாசுரனைக் கூரிய
சூலத்தால் அழுத்தி அவன் உயிரைக் கொண்டவரும் , திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில்
உணர்தற்கரிய வேதத்தைத் தேர்க்குதிரையாக்கிக் கொண்டவரும் , ஆலால சுந்தரனை இரட்டைக் கவரி
வீசக்கொண்டவரும் , சுடுகாட்டை
நடனமாடுமிடமாகக் கொண்டவரும் , மந்தர மலையைப்
போரிடுதற்குரிய வில்லாக வளைத்துக் கொண்டவரும் , மாகாளனை வாசல் காப்பாளனாகக் கொண்டவரும் , தந்திர மந்திரங்களில் பொருந்தி நின்று
அருளுதலைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் சமணரிடமிருந்து என்னை நீக்கி என்னை
ஆட்கொண்டவர் ஆவார் .
பாடல்
எண் : 6
பாரிடங்கள்
பலகருவி பயிலக் கொண்டார்,
பவள நிறங்கொண்டார், பளிங்கும் கொண்டார்,
நீர்அடங்கு
சடைமுடிமேல் நிலாவும் கொண்டார்,
நீலநிறம் கோலநிறை
மிடற்றில் கொண்டார்,
வார்அடங்கு
வனமுலையார் மைய லாகி
வந்துஇட்ட பலி
கொண்டார், வளையும் கொண்டார்,
ஊர்அடங்க
ஒற்றிநகர் பற்றிக் கொண் டார்,
உடல்உறுநோய்
தீர்த்துஎன்னை ஆட்கொண் டாரே.
பொழிப்புரை : பூதகணங்கள் பல இசைக்
கருவிகளையும் இயக்கக் கொண்டவரும் ,
மேனியில்
பவளநிறத்தையும் வெண்ணீற்றுப் பூச்சில் பளிங்கு நிறத்தையும் கொண்டவரும் , கங்கை தங்கும் சடைமுடிமேல் பிறைச்
சந்திரனையும் கொண்டவரும் , அழகு நிறைந்த
மிடற்றினில் நீலநிறம் கொண்டவரும் ,
கச்சிற்குள்
அடங்கும் அழகிய முலையாராகிய தாருகாவன முனிபத்தினியர் காதலால் மயக்கம் கொண்டு
வந்திட்ட பிச்சையுடன் அவர்களுடைய கைவளையல்களையும் கொண்டவரும் எல்லா ஊர்களும் தம்
ஆட்சியில் அடங்கியிருக்கத் திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டவருமாகிய
சிவ பெருமானார் என் உடலிற் பொருந்திய சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர்
ஆவார் .
பாடல்
எண் : 7
அணிதில்லை
அம்பலம் ஆடுஅரங்காக் கொண்டார்,
ஆலால வருநஞ்சம்
அமுதாக் கொண்டார்,
கணிவளர்தார்ப்
பொன்இதழிக் கமழ்தார் கொண்டார்,
காதலார் கோடிகலந்து
இருக்கை கொண்டார்,
மணிபணத்த
அரவந்தோள் வளையாக் கொண்டார்,
மால்விடைமேல்
நெடுவீதி போதக் கொண்டார்,
துணிபுலித்தோ
லினையாடை உடையாக் கொண்டார்,
சூலங்கைக்
கொண்டார்தொண்டு எனைக்கொண் டாரே.
பொழிப்புரை : அழகிய தில்லை
அம்பலத்தைத் தாம் ஆடும் அரங்காகக் கொண்டவரும் , கடலில் வந்த ஆலால நஞ்சினை அமுதாகக்
கொண்டவரும் , அழகு மிகுகின்ற
சரங்களாகிய பொன் போன்ற கொன்றை மலராலாகிய மணம் கமழ்கின்ற மாலையைக் கொண்டவரும் , விருப்பம் நிறைந்த கோடி என்றதலத்தில்
கூடி இருத்தலைக் கொண்டவரும் , மாணிக்கத்தோடு கூடிய
படத்தையுடைய பாம்பினைத் தோள்வளையாகக் கொண்டவரும் , மேற் கொண்டு நீண்ட வீதியில் வருதற்குப்
பெரிய இடபத்தைக் கொண்ட வரும் , உரித்த புலியினது
தோலை உத்தரியமாகவும் உடையாகவும் கொண்டவரும் , சூலத்தைக் கையில் கொண்டவருமாகிய சிவ
பெருமானார் என்னைத் தமக்கு அடிமையாகக் கொண்டவராவார்.
பாடல்
எண் : 8
படமூக்கப்
பாம்பணையா னோடு வானோன்
பங்கயன்என்று
அங்குஅவரைப் படைத்துக் கொண்டார்,
குடமூக்கில்
கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்,
கூற்றுஉதைத்துஓர்
வேதியனை உய்யக் கொண்டார்,
நெடுமூக்கில்
கரியின்உரி மூடிக் கொண்டார்,
நினையாத பாவிகளை
நீங்கக் கொண்டார்,
இடமாக்கி
இடைமருதும் கொண்டார் பண்டே,
என்னைஇந்நாள்
ஆட்கொண்ட இறைவர் தாமே.
பொழிப்புரை :படத்தையும் கொடுமைக்
குணத்தையுமுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலையும் இந்திரனையும்
பங்கயத்துப் பிரமனையும் தம் விருப்பப்படி படைத்துக் கொண்டவரும் , குடமூக்கிற் கீழ்க் கோட்டத்தைக்
கோயிலாகக் கொண்டவரும் , கூற்றுவனை உதைத்து
ஒப்பற்ற வேதியனாம் மார்க்கண்டேயனை வாழக் கொண்டவரும் , துதிக்கையை உடைய யானையினது தோலினை
உடலில் போர்த்திக்கொண்டவரும் , தம்மை நினையாத
பாவிகளை நீங்கக் கொண்டவரும் , இடைமருதினைத் தமக்கு
இடமாகக் கொண்டவரும் , ஆகிய சிவபெருமானார்
என்னை இந்நாள் ஆட்கொண்ட இறைவர் ஆவார் .
பாடல்
எண் : 9
எச்சன்நிணத்
தலைகொண்டார், பகன்கண் கொண்டார்,
இரவிகளில் ஒருவன்பல்
இறுத்துக் கொண்டார்,
மெச்சன்வியாத்
திரன்தலையும் வேறாக் கொண்டார்,
விறல்அங்கி
கரம்கொண்டார், வேள்வி காத்த
உச்சநமன்
தாள்அறுத்தார், சந்திரனை உதைத்தார்,
உணர்விலாத் தக்கனதன்
வேள்வி எல்லாம்
அச்சம்எழ
அழித்துக்கொண்டு அருளும் செய்தார்,
அடியேனை ஆட்கொண்ட
அமலர் தாமே.
பொழிப்புரை : வேள்வித் தெய்வத்தின்
நிணம் பொருந்திய தலையைக் கொண்டவரும் , சூரியர்களில்
ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும் , சூரியர்களில்
மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும் , தன்னையே மெச்சினவனாய் , மாறான , வழியல்லாத வழியிற் சென்ற தக்கன் தலையை
வேறாகக் கொண்டவரும் , வெற்றியுடைய அக்கினி
தேவனின் கரத்தைக் கொண்டவரும் , வேள்வியைக் காத்து
நின்ற வெற்றியில் உயர்ந்த இயமனுடைய தாளை அறுத்தவரும் , சந்திரனை உதைத்தவரும் , அறிவில்லாத தக்கனுடைய வேள்வி
முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப் பின்
அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார் .
பாடல்
எண் : 10
சடைஒன்றில்
கங்கையையும் தரித்துக் கொண்டார்,
சாமத்தின் இசைவீணை
தடவிக் கொண்டார்,
உடைஒன்றில்
புள்ளிஉழைத் தோலும் கொண்டார்,
உள்குவார் உள்ளத்தை
ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றில்
பலிகொண்டார், கனலும் கொண்டார்,
காபால வேடம் கருதிக்
கொண்டார்,
விடைவென்றிக்
கொடிஅதனில் மேவக் கொண்டார்,
வெந்துயரம்
தீர்த்துஎன்னை ஆட்கொண் டாரே.
பொழிப்புரை :தன் சடைகள் பலவற்றுள்
ஒன்றிடத்தே கங்கையை அடக்கித் தரித்துக் கொண்டவரும் , வீணையைத் தடவிச் சாம வேதத்தின் இசையைக்
கொண்டவரும் , புள்ளி மான் தோலை உடை
என்னும் ஒரு தன்மையில் ஏற்றுக்கொண்டவரும் , தம்மை நினைவார் உள்ளத்தைத் தம்மிடத்து
ஒருங்கிநிற்கும்படி செய்து கொண்டவரும் , வீட்டு
வாசல் தோறும் பிச்சை கொண்டவரும் ,
கையில்
கனல் கொண்டவரும் , காபால வேடத்தை
விரும்பிக் கொண்டவரும் , இடபத்தைத் தன்
வெற்றிக் கொடியில் பொருந்தக் கொண்டவரும், ஆகிய
சிவபெருமானார் என் கொடிய துயரங்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .
பாடல்
எண் : 11
குராமலரோடு
அராமதியம் சடைமேல் கொண்டார்,
குடமுழநந் தீசனைவா
சகனாக் கொண்டார்,
சிராமலைதம்
சேர்விடமாத் திருந்தக் கொண்டார்,
தென்றல்நெடுந்
தேரோனைப் பொன்றக் கொண்டார்,
பராபரன்
என்பது தமது பேராக் கொண்டார்,
பருப்பதம்
கைக்கொண்டார், பயங்கள் பண்ணி
இராவணன்
என்று அவனைப்பேர் இயம்பக் கொண்டார்,
இடர்உறுநோய்
தீர்த்துஎன்னை ஆட்கொண் டாரே
பொழிப்புரை :குரா மலர் பாம்பு , பிறை இவற்றைச் சடைமேல் கொண்டவரும், நந்தீசனைக் குடமுழா வாசிப்பவனாகக் கொண்ட
வரும், சிராமலையைத் தாம்
சேர்வதற்குத் திருந்த அமைந்த இடமாகக் கொண்டவரும் , தென்றலைத் தனது நெடிய தேராகக் கொண்ட
மன்மதன் அழியச் சினத்தைக் கொண்டவரும் , பராபரன்
என்பது தம் பெயராக அமையக் கொண்டவரும் , மேருமலையை
வில்லாகக் கையில் கொண்டவரும் , பயங்கள் பலவற்றை
உண்டாக்கி இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமா னார் என்
துன்பந்தரும் நோய்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .
திருச்சிற்றம்பலம்
----- தொடரும் -----
No comments:
Post a Comment