திருக் கொண்டீச்சுரம்

திருக் கொண்டீச்சரம்
(திருக்கண்டீஸ்வரம்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

     நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துகுடி நிறுத்தம்" என்னும் இடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள திருக்கோயிலை அடையலாம்.

இறைவர்                   : பசுபதீசுவரர்.

இறைவியார்               : சாந்தநாயகி.

தல மரம்                   : வில்வம், இலவம்.

தீர்த்தம்                    : க்ஷீரபுஷ்கரணி

தேவாரப் பாடல்கள்    : அப்பர் - 1. வரைகிலேன் புலன்கள்
                                                   2. கண்ட பேச்சினிற் காளையர்.

     ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேதரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள். அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். ஆலய குருக்களிடம் காண்பிக்கச் சொன்னால், சிவலிங்கத்தின் பாணத்தில் உள்ள வெட்டுப் பகுதியைக் காட்டுவார்.

         இராஜகோபுரமில்லை. மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்ட திருக்கோயில். இந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் உள்ளது. முகப்பு வாயில் மேல் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. அடுத்து 2-ம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் காணலாம். கருவறைப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகள் உள்ளன. சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபடவந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜுரதேவராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. மற்றொரு தூணில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் உள்ளன.

         வெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சாந்தநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. இம் மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷியின் உருவமும் உள்ளது.

         காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மன்னு மலர் வண்டு ஈச்சுரம் பாடி, வார் மது உண்டு களிக்கும் கொண்டீச்சரத்து அமர்ந்த கோமானே" என்று போற்றி உள்ளார்.

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 291
சோலை மறைக்காட்டு அமர்ந்துஅருளும்
         சோதி அருள்பெற்று, அகன்றுபோய்,
"வேலை விடம்உண் டவர்வீழி
         மிழலை மீண்டும் செல்வன்" என
ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா
         ரோணம் பிறவும் தாம்பணிந்து,
சாலும் மொழிவண் தமிழ்பாடி,
         தலைவர் மிழலை வந்துஅடைந்தார்.

         பொழிப்புரை : சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாய சிவபெருமானின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து நீங்கிச் சென்று, கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சிவபெருமானின் திருவீழிமிழலையை மீண்டும் அடைவேன் என்று எண்ணிய நிலையில், உலகில் விளங்கிய திருநாகைக் காரோணத்தையும், அப்பதி முதலாய பிற பதிகளையும் வணங்கிச் சால்புடைய மொழிகளால் ஆய திருப்பதிகங்களைப் பாடித் தலைவரின் திருவீழிமிழலையை அடைந்தார்.

         திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:

     1.  `மனைவிதாய்` (தி.4 ப.71) - திருநேரிசை.
2.    `வடிவுடை மாமலை` (தி.4 ப.103) - திருவிருத்தம்.
3.    `பாணத்தான்` (தி.5 ப.83) - திருக்குறுந்தொகை.
4.    `பாரார் பரவும்` (தி.6 ப.22) - திருத்தாண்டகம்.

          பிற பதிகளாவன:

1. திருப்பயற்றூர் - `உரித்திட்டார்` (தி.4 ப.32) - திருநேரிசை.

2. திருக்கொண்டீச்சரம்:   `வரைகிலேன்` (தி.4 ப.67) - திருநேரிசை.
                                         `கண்ட பேச்சினில்` (தி.5 ப.70) – திருக்குறுந்தொகை..


4. 067    திருக்கொண்டீச்சரம்                      திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வரைகிலேன் புலன்கள் ஐந்தும்,
         வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று
         புறப்படும் வழியும் காணேன்,
அரையிலே மிளிரும் நாகத்து
         அண்ணலே, அஞ்சல் என்னாய்,
திரைஉலாம் பழன வேலித்
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே ! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய் , நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக !.

 
பாடல் எண் : 2
தொண்டனேன் பிறந்து வாளா
         தொல்வினைக் குழியில் வீழ்ந்து,
பிண்டமே சுமந்து நைந்து,
         பேர்வதுஓர் வழியும் காணேன்,
அண்டனே, அண்ட வாணா,
         அறிவனே, அஞ்சல் என்னாய்,
தெண்திரைப் பழனம் சூழ்ந்த
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : தேவனே ! உலகங்களில் பரந்து எங்கும் கலந்து வாழ்பவனே ! முக்காலமும் அறிபவனே ! தெளிந்த அலைகளை உடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரத்துப் பெருமானே ! உன் அடியேன் பிறவி எடுத்தபின் வீணாகப் பழைய வினைப் பயனாகிய குழியில் விழுந்து இந்த உடம்பைச் சுமந்து வருந்தி இத்துயரிலிருந்து தப்பிப் பிறவாமையை அடைவதற்குரிய வழியைக் காணேனாய் அஞ்சுகின்றேன் . அடியேனுக்கு அஞ்சேல் என்று அருளுவாயாக .


பாடல் எண் : 3
கால்கொடுத்து எலும்பு மூட்டி,
         கதிர்நரம்பு ஆக்கை ஆர்த்து,
தோல்உடுத்து உதிரம் அட்டித்
         தொகுமயிர் மேய்ந்த கூரை,
ஓல்எடுத்து உழைஞர் கூடி
         ஒளிப்பதற்கு அஞ்சு கின்றேன்,
சேலுடைப் பழனம் சூழ்ந்த
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : சேல் மீன்களை உடைய வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரப் பெருமானே ! இரண்டு கால்களைக் கொடுத்து எலும்புகளைப் பொருத்தி , விளங்கும் நரம்புகளை உடம்பினுள் இணைத்துத் தோலை மேலே போர்த்திக் குருதியை உள்ளே நிரப்பித் தொக்க மயிர்களால் வேய்ந்து அமைக்கப்பட்ட கூரையாகிய இவ்வுடம்பு நிலையாமையை அடையும்போது பக்கத்திலுள்ள உற்றார் உறவினர் ஒன்று கூடி இதன் பிரிவிற்கு வாய் விட்டுக் கதறிச் சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைப்பதற்கு அஞ்சுகின்றேன் .


பாடல் எண் : 4
கூட்டமாய் ஐவர் வந்து
         கொடுந்தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்ற கில்லேன்,
         ஆடுஅரவு அசைத்த கோவே,
காட்டிடை அரங்கம் ஆக
         ஆடிய கடவு ளேயோ,
சேட்டுஇரும் பழன வேலித்
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : ஆடுகின்ற பாம்பை இடையில் இறுகக் கட்டிய தலைவனே ! சுடுகாட்டைக் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கடவுளே ! பெருமை பொருந்திய பரப்புடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரப் பெருமானே ! ஐம்பொறிகளும் கூடிவந்து கொடிய தொழில்கள் செய்வதனையே தம் பண்பாகக் கொண்டு என்னைத் தம் விருப்பப்படி செயற்படுத்த அவற்றின் தொல்லையைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் .


பாடல் எண் : 5
பொக்கமாய் நின்ற பொல்லாப்
         புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின்று ஐவர், தொண்ணூற்று
         அறுவரும் துயக்கம் எய்த,
மிக்குநின்று இவர்கள் செய்யும்
         வேதனைக்கு அலந்து போனேன்,
செக்கரே திகழு மேனித்
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : செம்மேனி அம்மானாகிய கொண்டீச்சரப் பெருமானே ! நிலைபேறின்றிப் பொய்யாக அமைந்த அழகற்ற புழுக்கள் மிகக் கலந்த தீ நாற்றமுடைய இவ்வுடலிலே இணைந்து இருக்கின்ற ஐம்பொறிகளும் , 96 தத்துவ தாத்துவிகங்களும் அடியேன் சோர்வு எய்துமாறு செய்யும் கொடுஞ்செயல்களைத் தாங்க இயலாமல் துன்புற்றிருக்கின்றேன்.


பாடல் எண் : 6
ஊன்உலாம் முடைகொள் ஆக்கை
         உடைகலம் ஆவது என்றும்,
மான்உலா மழைக்க ணார்தம்
         வாழ்க்கையை மெய்என்று எண்ணி
நான்எலாம் இனைய காலம்
         நண்ணிலேன், எண்ணம் இல்லேன்,
தேன்உலாம் பொழில்கள் சூழ்ந்த
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : வண்டுகள் உலாவும் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! புலாலால் அமைக்கப்பட்ட நாற்றம் வீசும் உடம்புப் பாறையில் மோதி உடையும் மரக்கலம் போல்வது என்னும் எண்ணம் இல்லாதேனாய் , மான் கண்கள் போன்று மருளும் குளிர்ந்த கண்களையுடைய மகளிரோடு வாழும் வாழ்க்கையை உண்மையான வாழ்வு என்று எண்ணினேனாய் , அடியேன் இதுகாறும் உன்னை அணுகாது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன் .


பாடல் எண் : 7
சாண்இரு மடங்கு நீண்ட
         சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்று
         அறுவரும் மயக்கம் செய்து
பேணிய பதியில் நின்று
         பெயரும்போது அறிய மாட்டேன்
சேண்உயர் மாட நீடு
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : வானளாவிய மாடங்கள் பலவாக உள்ள திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! ஒரு முழம் நீளம் உடைய பொய்யான உடம்பாகிய ஊருக்கு ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கும் வாணிக நோக்கமுடைய ஐம்பொறிகளாகிய வாணிகரும் , தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களும் கலக்கத்தை உண்டாக்க அடியேன் விரும்பித் தங்கிய அவ்வூரிலிருந்து பிரிந்து போகக் கூடிய நாள் இன்னது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேனாய் உள்ளேன் .


பாடல் எண் : 8
பொய்ம்மறித்து இயற்றி வைத்துப்
         புலால்கமழ் பண்டம் பெய்து,
பைம்மறித்து இயற்றி அன்ன
         பாங்குஇலாக் குரம்பை நின்று,
கைம்மறித்து அனைய ஆவி
         கழியும்போது அறிய மாட்டேன்,
செந்நெறிச் செலவு காணேன் ,
         திருக்கொண்டீச் சரத்து ளானே.

         பொழிப்புரை : திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! பொய்களை வெளியே செல்லாதபடி தடுத்துத் திருப்பி அவற்றிற்கு வடிவுதந்து புலால் நாற்றம் வீசும் பொருள்களை அவற்றிற் பொருத்திப் பையை அழுக்குப் புலப்படாதபடி திருப்பி வைத்தாற்போன்று , எனக்குத் துணையாக உதவாத இந்த உடம்பிலிருந்து இது தகாது என்று கைகளால் குறிப்பிட்டுச் செல்வது போன்ற உயிர் நீங்கும் காலம் இது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேன் . உயிருக்கு உறுதி தேடி நேரிய வழியில் செல்லும் ஞான சாரத்தையும் உணரேன் .


பாடல் எண் : 9
பாலனாய்க் கழிந்த நாளும்,
         பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்,
         மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளும்,
         குறிக்கோள் இலாதுகெட்டேன்,
சேல்உலாம் பழனவேலித்
         திருக்கொண்டீச் சரத்துளானே.

         பொழிப்புரை : சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே ! சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும் , குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும் , மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன் .


பாடல் எண் : 10
விரைதரு கருமென் கூந்தல்
         விளங்குஇழை, வேல்ஒண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான்
         விலங்கலை எடுத்த ஞான்று,
பருவரை அனைய தோளும்
         முடிகளும் பாறி வீழத்
திருவிரல் ஊன்றி னானே,
         திருக்கொண்டீச் சரத்து ளானே.
        
         பொழிப்புரை : திருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார் .
                                    திருச்சிற்றம்பலம்5. 070   திருக்கொண்டீச்சுரம்     திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி ஈச்சுர வர்க்குஅருள் செய்த,அக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.

         பொழிப்புரை : காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது, சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக .


பாடல் எண் : 2
சுற்ற மும்துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்,
குற்றம் இல்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்று அலால்ஒரு பற்றுமற்று இல்லையே.

         பொழிப்புரை : சுற்றத்தாரும் , வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால் , குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒரு பற்று மற்று இல்லை .


பாடல் எண் : 3
மாடு தான்அது இல்எனின், மாநுடர்
பாடு தான்செல்வார் இல்லை,பல் மாலையால்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்,பர லோகத்து இருத்துமே.

         பொழிப்புரை : செல்வம் இல்லையென்றால் , மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை . ஆதலால் , பல மாலைகளாற் கூட , நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக ; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும் .


பாடல் எண் : 4
தந்தை தாயொடு தாரம் எனுந்தளைப்
பந்தம் ஆங்குஅறுத் துப்பயில்வு எய்திய
கொந்து அவிழ்பொழில் கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்மின் அவன்அடி சேரவே.

         பொழிப்புரை : தந்தையும் தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக .


பாடல் எண் : 5
கேளு மின்இள மைய்யது கேடுவந்து,
ஈளை யோடுஇரு மல்அது எய்தன்முன்,
கோள் அராஅணி கொண்டீச் சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின் நன்குஆகுமே.

         பொழிப்புரை : மனிதர்களே ! கேட்பீர்களாக ; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக ; உமக்கு நல்லனவே ஆகும்


பாடல் எண் : 6
வெம்பு நோயும், இடரும், வெறுமையும்,
துன்பமும், துயரும் எனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரான்என வல்லவர்க்கு இல்லையே.

         பொழிப்புரை : பூங்கொம்பைப் போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை ` எம்பிரான் ` என்று ஏத்தவல்லவர்க்கு, வெம்புதற்குக் காரணமாகிய நோயும், துன்பமும், வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை .


பாடல் எண் : 7
அல்ல லோடுஅரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே, கனைகுரல்
கொல்லை ஏறுஉடைக் கொண்டீச் சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.

         பொழிப்புரை : துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல் , நீர் , கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும் .


பாடல் எண் : 8
நாறு சாந்துஅணி நன்முலை மென்மொழி
மாறு இலாமலை மங்கையொர் பாகமாக்
கூற னார்உறை கொண்டீச் சுரநினைந்து
ஊறு வார்தமக்கு ஊனம்ஒன்று இல்லையே.

         பொழிப்புரை : நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமா தேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை.


பாடல் எண் : 9
அயில்ஆர் அம்புஎரி, மேருவில் லாகவே,
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்,
குயில் ஆரும்பொழில் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.

         பொழிப்புரை : மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய , குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர் .


பாடல் எண் : 10
நிலையி னார்வரை நின்றுஎடுத் தான்தனை
மலையி னால்அடர்த் துவிறல் வாட்டினான்
குலையின் ஆர்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

         பொழிப்புரை : நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய , குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...