17. தாம் அழியினும்
தம் பண்பு அழியாதவை
தங்கம்ஆ னது தழலில் நின்றுஉருகி மறுகினும்
தன் ஒளி
மழுங்கிடாது,
சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமே
தன் மணம்
குன்றிடாது,
பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே
பொலிவெண்மை
குறைவுறாது,
போதவே காய்ந்துநன் பால்குறுகி னாலும்
பொருந்துசுவை
போய்விடாது,
துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும்
துலங்குகுணம்
ஒழியாது,பின்
தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
தூயநிறை
தவறாகுமோ?
மங்கள கல்யாணிகுற மங்கைசுர குஞ்சரியை
மருவு திண்
புயவாசனே!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல் நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை மருவு திண்புய வாசனே --- அழகிய நலங்கள் பொருந்திய வேடர்குலப் பெண்ணான வள்ளிநாயகியும், தேலோகத்துப் பெண்ணான தெய்வயானை அம்மையும் தழுவும்
வலிமைமிக்க தோள்களை உடையவனே!
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தங்கமானது தழலில்
நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது --- பொன் ஆனது நெருப்பிலே கிடந்து உருகித் துன்புற்றாலும் அதன் ஒளியிலே குறையாது;
சந்தனக் குறடு
தான் மெலிந்து தேய்ந்தாலும் தன் மணம் குன்றிடாது --- சந்தனக்கட்டை தேய்ந்து மெலிந்தாலும் அதன்
மணத்திலே குறைவு இருக்காது;
பொங்கம் மிகு
சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவு உறாது --- உயர்வுபெற்ற சங்கு சிவந்த நெருப்பில்
வெந்தாலும் அதன் வெண்மை மேலும் பொலிவு பெறுமே ஒழிய, குறைவு இருக்காது;
போதவே காய்ந்து
நன் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது --- நல்ல பால் மிகவும் காய்ந்து தனது
அளவில் சுருங்கினாலும் அதனிடம் உள்ள இனிமை குறையாது;
துங்க மணி
சாணையில் தேய்ந்து விட்டாலும் துலங்கு குணம் ஒழியாது --- உயர்ந்த மாணிக்கத்தை சாணையிலே தேய்த்தாலும்
ஒளிமிகும் அல்லாது, இதன் பண்பு ஒழியாது;
தொன்மைதரு
பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை பின் தவறு ஆகுமோ --- தொன்று தொட்டு வரும் நன்னெறியில் சார்ந்து
நின்ற பெரியோர்கள் இறக்க நேர்ந்தாலும் அவர்களது நல்ஒழுக்கம் ஆனது
மாறுபட்டுக் கெடுமோ?
கருத்து --- பொன்னும் சந்தனக்கட்டையும் சங்கும் பாலும் மாணிக்கம் ஆகிய
இவைகள் துன்புற நேர்ந்தாலும் அவைகளின் பண்பு மாறாததுபோல, பெரியோர்கள் இறக்க நேர்ந்தாலும் ஒழுக்கம் தவறார்.
"கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்" என்னும் ஔவைப் பிராட்டியின் அருள் வாக்கை இங்கு வைத்து
எண்ணுக. "பழி
எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்,..... தமக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளர்..." என்னும் புறநானூற்றுப் பாடல் வரியையும்
சிந்திக்கவும்.
சந்தன மென்குறடு
தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது, ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும், தார்வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ
மற்று.
மென்மையாகிய சந்தனக்
கட்டையானது, தான் தேய்ந்து போன காலத்திலும் மணம் குறையாது; ஆதலினாலே, மாலையை அணிந்த அரசர்கள், தங்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தவர் ஆனாலும், அவ்வறுமையினாலே, மனம் சுருங்கினவர்
ஆகார் என்னும் ஔவைப் பிராட்டியின் மூதுரைப் பாடல் கருத்தையும் எண்ணுக.
No comments:
Post a Comment