20. விடாத குறை
தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்தும் மதி
தேகவடு
நீங்கவில்லை;
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன்
செறும்பகை ஒழிந்தது இல்லை;
ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரைவேறு
இலாமலே வாயு ஆகும்;
இனியகண் ஆகிவரு பரிதி ஆனவனுக்கு
இராகுவோ
கனவிரோதி;
ஆசிலாப் பெரியோர் இடத்தினில் அடுக்கினும்
அமைத்தபடி
அன்றிவருமோ?
அவரவர்கள் அனுபோகம் அனுபவித் திடல்வேண்டும்
அல்லால், வெறுப்பது எவரை?
வாசவனும் உம்பர் அனை வரும்விசய சயஎன்று
வந்துதொழுது ஏத்து
சரணா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
வாசவனும் உம்பர் அனைவரும் வந்து விசய சய என்று தொழுது ஏத்து சரணா --- இந்திரனும் பிற தேவர்களும் சந்நிதியில் வந்து, ‘வெல்க! வெல்க' என்று வணங்கித் துதிக்கும் திருவடிகளை உடையவனே!
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தேசு பெறு மேரு
பிரதட்சணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை --- ஒளிவீசும் மேருமலையை வலமாக வந்தும் சந்திரனில்
உள்ள களங்கம் ஒழியவில்லை;
திருமால்
உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும்பகை ஒழிந்தது இல்லை ---- திருமால் அறிதுயில் கொள்ளும் படுக்கையாக இருக்கும் ஆதிசேடன் என்னும் பாம்புக்கு, பாம்பு குலத்திற்குப் பகையான கருடனின்
பகைமை ஒழியவில்லை;
ஈசன் கழுத்தில் உறு
பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் --- சிவபிரானின் கழுத்திலே அணியாக இருக்கும்
பாம்புக்குக் காற்றைத் தவிர வேறு உணவு இல்லை;
இனிய கண் ஆகி வரு
பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி --- சிவபெருமானுக்கு இனிய வலக்கண்ணாக உள்ள சூரியனுக்கு அற்பனான
இராகுவே பெரும் பகைவன்;
(இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால்),
ஆசு இலாப் பெரியோர்
இடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ --- குற்றமற்ற பெரியோரைச் சார்ந்து இருந்தாலும்
கூட, விதிக்கப்பட்டபடி அல்லாமல் வேறு வருமோ? வராது.
அவரவர்கள்
அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் எவரை வெறுப்பது --- அவரவருடைய வினைப் பயனை அவரவர்களே அனுபவித்தல் வேண்டும்
அல்லாமல் யாரையும் வெறுத்தல் கூடாது.
விளக்கம் --- வசு - பொன். வாசவன் - பொன்னுலகத் தலைவன். தேவலோகத்தைப் பொன்னுலகம் வன்பர். உம்பர் - மேலிடம். மேருமலையைச் சூரியனும் திங்களும் பிற கோள்களும் வலம் வருவதாகப்
புராணங்கள் கூறும். ஆதிசேடன் என்னும்
பாம்பு திருமாலுக்குத் துயிலும் அணையாக உள்ளது என்றும் புராணங்கள் கூறும். பாம்புக்கும்
கருடனுக்கும் இயல்பாகவே பகை உணர்வு உண்டு. பாம்பு சிவபெருமானது திருக்கழுத்தில் இருந்தும், அதற்கு இரை கிடைக்கவில்லை. காற்றையே உண்டு வாழுகின்றது.
No comments:
Post a Comment