திருக் கருக்குடி




திருக் கருக்குடி
(மருதாந்தநல்லூர்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மருதாந்தநல்லூர் என்று வழங்கப்படுகின்றது.

     கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

இறைவர்                  : கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்சற்குணலிங்கேசுரர்.

இறைவியார்              : அத்வைதநாயகி, கல்யாணநாயகிசர்வாலங்காரநாயகி

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - நனவிலுங் கனவிலும்.


         சிறிய பழைமையான கோயில். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும். கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது அநுமத்லிங்கம். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், இருபுறம் பூதகணங்கள், தட்சிணாமூர்த்தி (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் சற்குணலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

         இராமேசுவர வரலாறு இத்தலதிற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேசுவரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும் என்றும் கூறப்படுகிறது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் அனுமந்த லிங்கம் என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளது

         இத்தலத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு. தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புணர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான். அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது. எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் நிச்சயம்.

         காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "செப்பமுடன் ஓங்கும் திருத்தொண்டர் உள் குளிர, நல் அருளால் தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 410
கண்ஆரும் அருமணியை, காரோணத்து ஆர்அமுதை,
நண்ணாதார் புரம் எரித்த நான்மறையின் பொருளானை,
பண்ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி, பிற பதியும்
எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்துஅருளி.

         பொழிப்புரை : கண்ணகத்தே நின்று களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த நான்மறைகளின் பொருளாக விளங்குபவருமான இறைவரை வணங்கிப் பண்ணமைந்த திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து, போற்றிப் பிற பதிகளையும் வணங்க எண்ணி, எண்ணிறந்த அடியவர்களுடன் பணிந்து, அங்கிருந்து மேற்செல்வார்.

         திருக்குடந்தைக் காரோணத்தில் அருளிய பதிகம் `வாரார் கொங்கை' (தி.1 ப.72) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகள் என்றது திருக்குடமூக்கில் உள்ள பிற திருக்கோயில்களான, திருக்கருக்குடி, திருக்கொட்டையூர், திருக்கலயநல்லூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

         திருக்கருக்குடியில் அருளிய பதிகம் `நனவிலும் கனவிலும்' : (தி.3 ப.21) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்ததாகும். பிற பதிகளின் பதிகங்கள் எவையும் கிடைத்தில.


3.    021    திருக்கருக்குடி           பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நனவிலும் கனவிலும் நாளும் தன்ஒளி
நினைவிலும் எனக்குவந்து எய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனல்எரி ஆடும்எம் அடிகள் காண்மினே.

         பொழிப்புரை :நான் விழித்திருக்கும் பொழுதும் , கனவு காணும்பொழுதும் , உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய் , ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெரு மானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக .

  
பாடல் எண் : 2
வேதியன், விடைஉடை விமலன், ஒன்னலர்
மூதுஎயில் எரிஎழ முனிந்த முக்கணன்,
காதுஇயல் குழையினன், கருக்குடி அமர்
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

         பொழிப்புரை :வேதத்தை அருளிச் செய்தவனும் , வேதப் பொருளாக விளங்குபவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனும் , பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை .


பாடல் எண் : 3
மஞ்சுஉறு பொழில்வளம் மலிக ருக்குடி
நஞ்சுஉறு திருமிடறு உடைய நாதனார்,
அம்சுரும்பு ஆர்குழல் அரிவை அஞ்சவே
வெம்சுரம் தனில்விளை யாடல் என்கொலோ.

         பொழிப்புரை :மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான் , அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சும்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல் ?



பாடல் எண் : 4
ஊன்உடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்,
கான்இடை ஆடலான் பயில்க ருக்குடிக்
கோன்உயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

         பொழிப்புரை :வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர் ! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த கோயிலை வணங்கியும் , நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தி யும் வாழ்வீர்களாக !


பாடல் எண் : 5
சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையை,
கூடுவர் உலகுஇடை ஐயம் கொண்டு,ஒலி
பாடுவர், இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர், கருக்குடி அண்ணல் வண்ணமே.

         பொழிப்புரை :இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார். தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார் . இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார். பறை கொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார். இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும் .


பாடல் எண் : 6
இன்புஉடை யார்இசை வீணை பூண்அரா
என்புஉடை யார்எழில் மேனி மேல்,எரி
முன்புஉடை யார்,முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்புடை யார்கருக் குடிஎம் அண்ணலே.

         பொழிப்புரை :திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர் . தம்முடைய அழகிய திருமேனியில் பாம்பையும் , எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளவர் . எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர் . யாவற்றுக்கும் மூலப் பொருளாகிய, முதற்பொருளாக விளங்குபவர் . அன்பர்களிடத்து அன்புடையவர் .


பாடல் எண் : 7
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்,
கோலமும் முடிஅரவு அணிந்த கொள்கையர்,
சீலமும் உடையவர், திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதுஅவ ருடைய தன்மையே.

         பொழிப்புரை :சிவபெருமான் கால தத்துவமாகவும் , அதனைக் கடந்தும் விளங்குபவர் . ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர் . நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர் . தம் சடைமுடியில் பாம்பணிந்தவர் . சிறந்த புகழை உடையவர் . திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும் .


பாடல் எண் : 8
எறிகடல் புடைதழுவு இலங்கை மன்னனை
முறிபட வரைஇடை அடர்த்த மூர்த்தியார்,
கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழும்அவர் ஆள்வர் நன்மையே.

         பொழிப்புரை :அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர் , மரங்களின் அடர்த்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய் , தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார் .


பாடல் எண் : 9
பூமனும் திசைமுகன் தானும் பொற்புஅமர்
வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்குஎரி
ஆம்என உயர்ந்தவன் அணிக ருக்குடி
நா மன னினில்வர நினைதல் நன்மையே.

         பொழிப்புரை :தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும் , அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம் , ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும்.


பாடல் எண் : 10
சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய உரைகொளேல் அரும்திரு நமக்கு
ஆக்கிய அரன்உறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே.

         பொழிப்புரை :புத்தரும் , சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா . பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள் .


பாடல் எண் : 11
கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் தன்ஒளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனம்இல் மொழிவலார்க்கு உயரும் இன்பமே.

         பொழிப்புரை :கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த , வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும் .

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...