குணத்தினால் குல நலம் தெரியலாம்.
31. குணத்தைக் கொண்டு குல நலம் அறியலாம்.

கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்
     கனவாக்கி னாற்கா ணலாம்;
  கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
     கால்நடையி னும்கா ணலாம்;

அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
     அடக்கத்தி னால்அ றியலாம்;
  அறம்உளோர் என்பதைப் பூததயை என்னும்நிலை
     அதுகண்டு தான் அறியலாம்;

வித்துஓங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால்
     விளையும்என் றேஅ றியலாம்;
  வீரம்உடை யோர்என்பது ஓங்கிவரு தைரிய
     விசேடத்தி னால்அ றியலாம்;

அத்தா! குணத்தினால் குலநலம் தெரியலாம்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அத்தா --- தலைவனே!,

     அண்ணலே --- பெரியோனே!,

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     கற்றோர்கள் என்பதைச் சீலம் உடனே சொல்லும் கன வாக்கினால் காணலாம் --- ஒழுக்கமுடன் பேசும் உயர்ந்த சொற்களைக் கொண்டு, அவர்கள் கற்றறிந்தவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்,

     கற்பு உளார் என்பதை பார்க்கின்ற பார்வையொடு கால் நடையிலும்  காணலாம் --- பார்க்கின்ற பார்வையையும், நடக்கின்ற நடையையும் வைத்து, அவர்கள் கற்பு உடைய பெண்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்,

     அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா அடக்கத்தினால் அறியலாம் --- தற்போதம், தற்பெருமை, செருக்கு அற்ற பெரியவர்கள் என்பதை நான் நான் என்று வராத எதனிலும் முந்தி வராத அடக்கமான பண்பினால் உணர்ந்து கொள்ளலாம்,

     அறம் உளோர் என்பதை பூததயை என்னும் நிலை அது கண்டு தான் அறியலாம் --- உயிர்களிடம் ஒருவர் காட்டும் கருணை என்னும் நிலையைக் கண்டுதான் அவர் அறநெறியிலே நிற்போர் என்று உணர்ந்து கொள்ளலாம்,

     வித்து ஓங்கு பயிரை, கிளைத்து வரு துடியினால், விளையும் என்றே அறியலாம் --- கிளைத்து வரும் செழிப்பினைக் கொண்டு, விதையிலிருந்து பயிர் நன்றாக விறையும் என்று தெரிந்து கொள்ளலாம்,

     வீரம் உடையோர் என்பது, ஓங்கி வரு தைரிய விசேடத்தினால் அறியலாம் ----  ஒருவரிடம் மேம்பட்டு வரும் அஞ்சாமை என்னும் தன்மையைக் கொண்டு, அவர் வீரம் உடையவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்படியே,

     குணத்தினால் குல நலம் தெரியலாம் --- ஒருவரிடம் விளங்கும் குணத்தைக் கொண்டே அவருடைய குலத்தின் மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம். 


No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...