திரு ஆனைக்கா - 0513. நிறைந்த துப்பிதழ்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிறைந்த துப்பிதழ் (திருவானைக்கா)

முருகா!
பொதுமாதர் வசம் ஆகி, குரங்கைப் போல் உழலாமல்,
அடியேன் மனோலயம் பெற அருள்.


தனந்த தத்தன தானான தானன
     தனந்த தத்தன தானான தானன
          தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான


நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
     மறந்த ரித்தக ணாலால நேரென
          நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ......நெஞ்சின்மேலே

நெருங்கு பொற்றன மாமேரு நேரென
     மருங்கு நிட்கள ஆகாச நேரென
          நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன்

குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
     வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
          குமண்டை யிட்டுடை சோராவி டாயில .....மைந்துநாபி

குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
     மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
          குரங்கை யொத்துழல் வேனோம னோலயம் ...... என்றுசேர்வேன்

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
     லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
          மனங்க ளித்திட லாமோது ரோகித ......   முன்புவாலி

வதஞ்செய் விக்ரம சீராம னானில
     மறிந்த திச்சர மோகோகெ டாதினி
          வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவம் ...... என்றுபேசி

அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
     வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
          னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ..மைந்தனான

அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
     விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
          னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என,
     மறம் தரித்த கண் ஆலாலம் நேர் என,
          நெடும் சுருளு குழல் ஜீமூதம் நேர்என.......நெஞ்சின்மேலே

நெருங்கு பொன்தனம் மாமேரு நேர் என,
     மருங்கு நிட்களம் ஆகாசம் நேர் என,
          நிதம்பம் முக்கணர் பூண்ஆரம் நேர் என ...... நைந்து, சீவன்

குறைந்து, இதப்பட வாய்பாடி, ஆதரவு
     அழிந்து, அழைத்து அணை மேல்வீழும் மாலொடு
          குமண்டை இட்டு,டை சோரா, விடாயில்..... அமைந்து, நாபி

குடைந்து, இளைப்புறும் மாமாய வாழ்வு அருள்
     மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய
          குரங்கை ஒத்து உழல்வேனோ? மனோலயம் ......என்று சேர்வேன்?

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலில்
     இருந்து உலுத்த நி ஓராத்து ஏது சொல்?
          மனம் களித்திடல் ஆமோ? துரோகிதம்,......   முன்புவாலி

வதம் செய் விக்ரம சீராமன், நானிலம்
     அறிந்தது, இச்சரம், ஓகோ கெடாது இனி
          வரும் படிக்கு உரையாய், பார் பலாகவம், ...என்றுபேசி,

அறம் தழைத்த அநுமானோடு மாகடல்
     வரம்பு அடைத்து, தின் மேல் ஏறி, ராவணன்
          அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் ..... மைந்தன் ஆன

அநங்கன் மைத்துன வேளே! கலாபியின்
     விளங்கு செய்ப் பதி வேலாயுதா! வியன்
          நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.


பதவுரை


         மறந்த சுக்ரிப மாநீசன் வாசலில் இருந்து --- தான் சொன்ன சொல்லை மறந்த சுக்ரீவன் என்னும் பெரிய இழிந்த குரங்கரசன் வாசலில் நின்று,

     உலுத்த --- , உலுத்தனே,

      நீ ஓராதது ஏது சொல் --- நீ நன்மையை ஆராய்ந்து பாராமல் இருக்கும் காரணம் யாது? சொல்லுக,

      மனம் களித்திடல் ஆமோ  --- கள் உண்டு மனம் களிப்புறுதல் நியாயமா?  

      துரோகிதம் --- உன் செய்கை பாதகமாகும்

      முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் --- முன்பு வாலியை வதம் செய்த வீரம் உள்ள ஸ்ரீராமன் நான்,

     நிலம் அறிந்த --- இது உலகெலாம் அறிந்ததாகும்.

     அதிச் சரம் --- என்னுடைய அம்பு இதோ உள்ளது.

     ஓகோ கெடாது --- கெட்டுப் போகவேண்டாம்.

     இனி வரும்படிக்கு உரையாய் --- இனியேனும் தாமதிக்காது வரும்படிப் போய்ச் சொல்,

     பார் பலஆகவம் என்று பேசி  --- பல பேர்களின் விளைவைச் சென்று பார்ப்பாயாக" என்றெல்லாம் இலக்குமணர் மூலமாகச் சுக்ரீவனுக்குச் சொல்லி அனுப்பியும்,

      அறம் தழைத்த அநுமானோடு --- தரும நெறியில் தவறாது விளங்கும் அனுமானுடன் சென்று,

     மாகடல் வரம்பு அடைத்து --- பெரிய கடலை அணையைக் கட்டி அடைத்து,

     அதின் மேல் ஏறி --- அந்த அணையின் மீது போய்

     ராவணன் அரண் குலைத்து --- இராவணனுடைய கோட்டைகளை அழித்து

     எதிர் போராடு நாரணன் மைந்தனான --- எதிர்த்துப் போர் செய்த நாராயணமூர்த்தியின் குமாரனாகிய

     அநங்கன் மைத்துன வேளே ---  மன்மதனுக்கு மைத்துனனாக விளங்கும் உபகாரியே!

      கலாபியின் விளங்கு --- மயில் மீது விளங்குகின்ற,

     செய்ப்பதி வேலாயுதா --- வயலூரில் வாழும் வேலாயுதக் கடவுளே!

      வியன் நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே ---சிறப்பும் நன்மையும் பொருந்திய திருஆனைக்கா என்னும் திருப்பதியில் வாழ்வு கொண்ட, தேவர்களுக்குத் தலைவரே!

       நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என --- முற்றிய பவளம் போன்ற வாயிதழில் ஊறும் நீர் தேனை ஒக்கும் என்றும்,

     மறம் தரித்த கண் ஆலாலம் நேர் என --- கொலைத் தொழில் புரியும் கண்கள் ஆலகால விஷத்தை ஒக்கும் என்றும்,

      நெடும் சுருட்டு குழல் ஜீமூதம் நேர் என --- நீண்டு சுருண்ட கூந்தல் நீருண்ட மேகத்தை ஒக்கும் என்றும்,

     நெஞ்சின் மேலே நெருங்கு பொன் தனம் மாமேரு நேர் என --- மார்பின் மேல் நெருங்கியுள்ள அழகிய தனங்கள் பெரிய மேரு மலைக்கு ஒப்பானது என்றும்,

      மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என --- இடையானது உருவம் இல்லாத வெளிக்கு ஒப்பானது என்றும்,

     நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என --- அவர்களது பெண்குறி மூன்று கண்களை உடைய சிவபெருமான் அணிந்துள்ள மாலையாகிய பாம்பின் படத்துக்கு ஒப்பானது என்றும் கூறி

     நைந்து, சீவன் குறைந்து, இதம்பட வாய் பாடி --- உள்ளம் சோர்வடைந்து, சீவன் மங்கலுற்று, இன்பம் அழிய, வாயால் பாடி,

      ஆதரம் அழிந்து அழைத்து --- அன்பு இல்லாமல் அழைத்து,

     அணை மேல் வீழும் மால் கொடு குமண்டை இட்டு --- படுக்கையின் மேல் விழும் ஆசையுடன் களித்துக் கூத்தாடி,

     உடை சோரா --- ஆடை நெகிழவும்,

     விடாயில் அமைந்து --- காம தாகத்தில் பொருந்தி,

     நாபி குடைந்து --- அந்த மாதர்களின் தொப்புளில் மூழ்கித் தொளைத்து அனுபவித்து,

     இளைப்பு உறும் மாமாயா வாழ்வு அருள் --- களைப்பைத் தருகின்ற பெரிய மாயை வாழ்க்கையைத் தருகின்ற

     மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய குரங்கை ஒத்து உழல்வேனோ --- விலைமாதர்கள் பால் ஒரு பைத்தியக்காரக் குரங்கைப் போன்று திரிவேனோ?

     மனோலயம் என்று சேர்வேன் --- மன ஒடுக்கம் என்று அடைவேன்?

         பொழிப்புரை    

         தான் சொன்ன சொல்லை மறந்த சுக்ரீவன் என்னும் பெரிய இழிந்த குரங்கரசன் வாசலில் நின்று, " , உலுத்தனே, நீ நன்மையை ஆராய்ந்து பாராமல் இருக்கும் காரணம் யாது? சொல்லுக,  கள் உண்டு மனம் களிப்புறுதல் நியாயமா? உன் செய்கை பாதகமாகும். முன்பு வாலியை வதம் செய்த வீரம் உள்ள ஸ்ரீராமன் நான், இது உலகெலாம் அறிந்ததாகும். என்னுடைய அம்பு இதோ உள்ளது. கெட்டுப் போகவேண்டாம். இனியேனும் தாமதிக்காது வரும்படிப் போய்ச் சொல், பல பேர்களின் விளைவைச் சென்று பார்ப்பாயாக" என்றெல்லாம் இலக்குமணர் மூலமாகச் சுக்ரீவனுக்குச் சொல்லி அனுப்பியும், தரும நெறியில் தவறாது விளங்கும் அனுமானுடன் சென்று, பெரிய கடலை அணையைக் கட்டி அடைத்து,  அந்த அணையின் மீது போய் இராவணனுடைய கோட்டைகளை அழித்து எதிர்த்துப் போர் செய்த நாராயணமூர்த்தியின் குமாரனாகிய மன்மதனுக்கு மைத்துனனாக விளங்கும் உபகாரியே!

         மயில் மீது விளங்குகின்ற, வயலூரில் வாழும் வேலாயுதக் கடவுளே!

          சிறப்பும் நன்மையும் பொருந்திய திருஆனைக்கா என்னும் திருப்பதியில் வாழ்வு கொண்ட, தேவர்களுக்குத் தலைவரே!

         முற்றிய பவளம் போன்ற வாயிதழில் ஊறும் நீர் தேனை ஒக்கும் என்றும், கொலைத் தொழில் புரியும் கண்கள் ஆலகால விஷத்தை ஒக்கும் என்றும், நீண்டு சுருண்ட கூந்தல் நீருண்ட மேகத்தை ஒக்கும் என்றும், மார்பின் மேல் நெருங்கியுள்ள அழகிய தனங்கள் பெரிய மேரு மலைக்கு ஒப்பானது என்றும், இடையானது உருவம் இல்லாத வெளிக்கு ஒப்பானது என்றும், அவர்களது பெண்குறி மூன்று கண்களை உடைய சிவபெருமான் அணிந்துள்ள மாலையாகிய பாம்பின் படத்துக்கு ஒப்பானது என்றும் கூறி உள்ளம் சோர்வடைந்து, சீவன் மங்கலுற்று, இன்பம் அழிய, வாயால் பாடி, அன்பு இல்லாமல் அழைத்து, படுக்கையின் மேல் விழும் ஆசையுடன் களித்துக் கூத்தாடி, ஆடை நெகிழவும், காம தாகத்தில் பொருந்தி, அந்த மாதர்களின் தொப்புளில் மூழ்கித் தொளைத்து அனுபவித்து, களைப்பைத் தருகின்ற பெரிய மாயை வாழ்க்கையைத் தருகின்ற விலைமாதர்கள் பால் ஒரு பைத்தியக்காரக் குரங்கைப் போன்று திரிவேனோ? அடியேன் மன ஒடுக்கத்தை என்று அடைவேன்?

விரிவுரை
  
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என ---

துப்பு - பவளம்.  நிறைந்த துப்பு - முற்றிய பவளம்.

விலைமாதர்களின் பவளம் போன்ற வாயிதழ்களில் ஊறும் எச்சில் நீர் கொம்புத் தேனுக்கு நிகர் என்று அதனைப் பருகி உருகுவர்.

குமுத அமுத இதழ் பருகி உருகி மயல்
கொண்டு உற்றிடு நாயேன்....         ---  (கொலைமத) திருப்புகழ்.

மறம் தரித்த கண் ஆலால நேர் என ---

மறம் - கொலைத் தொழில்.  வீரம் எனினும் அமையும்.  மாதர்கள் கண் ஆடவரை மயக்குவதில் வீரம் பொருந்தியது.  தம்மைக் கண்டாரைக் கொல்லும் திறன் உடையது.

நஞ்சு உண்டாரை மட்டுமே கொல்லும். 
மாதர்கள் கண் கண்டாரையும் கொல்லும் திறன் உடையது.


நெடும் சுருள் குழல் ஜீமூத நீர் என ---

ஜீமூதம் --- நீர் உண்ட மேகம்.

மாதர்களின் கூந்தல் நீண்டும் சுருண்டும் கரிய மேகம்போல் காட்சி தரும்.

நெய்த்த சுரிகுழல் அறலோ? முகிலோ?
     பத்ம நறுநுதல் சிலையோ? பிறையோ?
     நெட்டை இணைவிழி கணையோ? பிணையோ?......இனிதுஊறும்

நெக்க அமுது இதழ் கனியோ? துவரோ?
     சுத்த மிடறுஅது வளையோ? கமுகோ?
     நிற்கும் இளமுலை குடமோ? மலையோ? ....அறவே தேய்ந்து

எய்த்த இடையது கொடியோ? துடியோ?
     மிக்க திருஅரை அரவோ? ரதமோ?
          இப்பொன் அடியிணை மலரோ? தளிரோ? .....என மாலாய்

இச்சை விரகுடன் மடவார் உடனே,
     செப்ப மருளுடன் அவமே திரிவேன்,
          ரத்ந பரிபுர இருகால் ஒருகால் ...... மறவேனே.   ---  திருப்புகழ்.

நெஞ்சின் மேலே நெருங்கு பொன்தனம் மாமேரு நேர் என ---

நெஞ்சு - மார்பு. மார்பிடை ஈர்க்கு இடை போகாமல் நெருங்கியுள்ள தனங்கள் பெரிய பொன் மேரு மலைக்கு நிகர் என்று கூறுவர்.

அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து
ஈர்க்கு இடை போகா வேர் இள வனமுலை
நீர்ப்பெயர்ச் சுழியில் நிறைந்த கொப்பூழ்,
உண்டு என உணரா உயவு நடுவின்
வண்டு இருப்பு அன்ன பல்காழ் அல்குல்...     ---  பொருநராற்றுப்படை.

தென் நாவலூர் மன்னன் தேவர்பிரான் திருவருளால்     
மின் ஆரும் கொடிமருங்குல் பரவை எனும் மெல்லியல்தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்
பன்னாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார்.  ---  பெரியபுராணம்.

கருங்குழல், செவ்வாய், வெண்நகை, கார்மயில்
ஒருங்கிய சாயல், நெருங்கி உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து,
எய்த்திடை வருந்த எழுந்து, புடைபரந்து,
ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்..    ---  திருவாசகம்.

இடைஈர் போகா இளமுலை யாளைஓர்
புடையீ ரேபுள்ளி மான்உரி
உடையீ ரேஉம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேஉம தாளே.                   --- திருஞானசம்பந்தர்.

மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என ---

மருங்கு - இடை.  நிட்களம் - அருவம்.

மாதர்களின் இடையானது ஆகாயம் போல் தோன்றாமல் மறைந்துளது என்று கூறுவர்.

குமண்டை இட்டு ---

குமண்டை இடுதல் --- மகிழ்ச்சியால் குதித்தல்.

கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்து...    திருவாசகம்.

கோமாளம் ஆகிய குரங்கை ஒத்து உழல்வேனோ ---

குரங்கு எப்போதும் சேட்டை செய்யும் இயல்புடையது.  அதற்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் பெரிதும் சேட்டை செய்யும்.  காமக் கள் உண்டு, மயங்கிய அடியேன் குரங்குபோல் பலப்பல சேட்டைகள் செய்து திரிந்து அழியலாமோ.  அழிதல் கூடாது.

மனோலயம் ---

ஜெபத்தின் முதிர்ச்சியால் தியானமும், தியானத்தின் முதிர்ச்சியால் சமாதியும் விளையும்.  சமாதியில் மனம் ஒடுங்கி நிற்கும்.  இது நிகரில்லாத இன்பத்தை நல்கும்.  இது இத்தன்மைத்து என்று கூற முடியாதது.  சொல்லுதற்கரிய பேரின்ப மயமானது.

பகரொணாதது சேரவொணாதது
நினையொணாதது ஆன தயாபர
பதியதான சமாதி மனோலயம்  வந்து தாராய்...        ---  (தறையின்) திருப்புகழ்.

போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும் உள்ளும்,
வாக்கும், வடிவும், முடிவும்இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும், மனோலயம் தானே தரும், எனைத் தன்வசத்தே
ஆக்கும்,  அறுமுகவா, சொல் ஒணாது, இந்த ஆனந்தமே.    ---  கந்தர் அலங்காரம்.


மறந்த சுக்ரிய மாநீசன் ….. பார் பலாகவம் என்று பேசி ---

இத் திருப்புகழின் ஐந்து, ஆறாவது அடிகளில் இராமர் இலக்குமணரிடம் சுகிராவனுக்குச் சொல்லி அனுப்பிய உரையாடல் மிக அழகாக வர்ணிக்கப்படுகின்றது.

ஆவணி, புரட்டாசி ---  கார்காலம்.

சீதையை இராவணன் கவர்ந்தது பங்குனி மாதம்.
இராமர் சுக்ரீவனைச் சந்தித்தது ஆவணி மாதம்.
அநுமான் சீதையைக் கண்டது மார்கழி மாதம்.

இராமர் சீதையை மீட்டுச் சிறைமீட்டுத் திரும்பியது மாசி சுக்ல பட்சத்துச் சுதுர்த்தசி நாள்.

எனவே, சீதையைப் பிரிந்த பின் ஆவணியில் சுக்ரீவனைச் சந்தித்து, வாலி வதம் புரிந்தார் இராமர்.

கார்காலம் மழைக்காலம். ஆதலால்,  சுக்ரீவனைப் பார்த்து இராமர்,  நீ உன் ஆட்சியை இனிது செய். கார்காலம் கழிந்த பின் சீதையைத் தேடுவோம். சென்று வா என்று கட்டளை இட்டு அருளினார்.

குறித்த காலம் கடந்தும் சுக்ரீவன் வந்தானில்லை.  அதனால் இராமர் சிறிது சீற்றம் அடைந்து, கிட்கிந்தைக்குச் சென்று, அவன் மனநிலையை அறிந்து வருமாறு இலக்குவனை அனுப்பினார்.
  
அறம் தழைத்த அநுமனோடு ---

இராமாயண வரலாற்றில் வரும் பாத்திரங்கள் பல.  அப் பாத்திரங்களுள் அநுமார் சிறந்த பாத்திரம். இவர் தருமத்தின் தனித் துணையாக நின்றவர்.

அநங்கன் மைத்துன வேளே ---

அங்கம் இல்லாதவன் அநங்கன்.  மன்மதன் திருமால் புதல்வன்.  முருகனுடைய மைத்துனன்.  இவன் கருவேள்.  முருகன் செவ்வேள்.

செய்ப்பதி ---

செய் - வயல்.  செய்ப்பதி - வயலூர்.

திருச்சிக்கு அருகில் உள்ள மகிச் சிறந்த முருகன் திருப்பதி.   அருணகிரியாருக்கு அருள் புரிந்த புனிதத் திருத்தலம்.

கயப்பதி ---

கயம் - யானை.  யானை வழிபட்ட பதி.  திருவானைக்கா.


கருத்துரை


திருவானைக்காவில் உறையும் திருமுருகா, மனோலயம் தந்து அடியேனை ஆட்கொள்வாய்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...