திருவண்ணாமலை - 0530. இருவினை அஞ்ச





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருவினை அஞ்ச (திருவருணை)

திருவருணை முருகா!
எனது இருவினைகளும், மலங்களும் ஒழிய,
அடியேன் முன் திருநடனம் புரிந்து வரவேணும்.


தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான


இருவினை யஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க ...... மயிலேறி

இனவரு ளன்பு மொழியக டம்பு
     வினதக முங்கொ ...... டளிபாடக்

கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
     களிமலர் சிந்த ...... அடியேன்முன்

கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
     கடுகிந டங்கொ ...... டருள்வாயே

திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்

சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
     திகழந டஞ்செய் ...... தெமையீண

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
     அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா

அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருவினை அஞ்ச, மல வகை மங்க,
     இருள் பிணி மங்க, ...... மயில் ஏறி,

இன அருள் அன்பு மொழிய, கடம்பு-
     வின் அது அகமுங்கொடு ...... அளிபாட,

கரிமுகன் எம்பி முருகன் என், அண்டர்
     களி மலர் சிந்த, ...... அடியேன் முன்

கருணை பொழிந்து, முகமும் மலர்ந்து,
     கடுகி நடம் கொடு ...... அருள்வாயே.

திரிபுரம் மங்க, மதன் உடல் மங்க,
     திகழ்நகை கொண்ட ...... விடை ஏறிச்

சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு,
     திகழ நடம் செய்து, ...... எமை ஈண

அரசி இடம் கொள் மழு உடை எந்தை,
     அமலன் மகிழ்ந்த ...... குருநாதா!

அருணை விலங்கல் மகிழ் குற மங்கை
     அமளி நலம் கொள் ...... பெருமாளே.


பதவுரை

      திரிபுரம் மங்க --- மூன்று புரங்களும் எரிந்து அழியவும்,

     மதன் உடல் மங்க --- மன்மதனுடைய உடம்பு எரிந்து அழியவும்,

     திகழ் நகை கொண்ட விடை ஏறி --- ஒலியுடன் கூடிய நகை செய்தவரும், இடப வாகனத்தின் மீது எழுந்தருள்பவரும்,

      சிவம் --- மங்கலம் உடையவரும்,

     வெளி --- ஆகாயம் போல் எங்கும் பற்று அற்று விளங்குபவரும்,

     அம் கண் அருள் குடிகொண்டு திகழ --- அழகிய கண்களில் கருணை குடிகொண்டு உறைய உலகமெல்லாம் உய்தல் பொருட்டு

     நடம் செய்து --- திருநடனம் புரிபவரும்,

      எமை ஈண அரசி இடம் கொள்  ---  எம்மை எல்லாம் பெற்ற தலைவி ஆகிய உமாதேவியை இடப்பாகத்தில் வைத்து இருப்பவரும்,

     மழு உடை எந்தை --- மழுவைக் கையில் ஏந்திய எமது தந்தையும்,

     அமலன் மகிழ்ந்த குருநாதா --- அநாதியே மலத்தினின்று நீங்கியவரும் உள்ளம் மகிழ்ந்த குருநாதரே!

      அருணை விலங்கல் மகிழ் --- திருவண்ணாமலையில் மகிழ்ச்சியுடன்

     குறமங்கை அமளி நலம் கொள் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளியம்மையாருடன் கூடி இன்புற்று வாழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!

      இருவினை அஞ்ச --- நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளும் அஞ்சி அகலவும்,

     மலவகை மங்க --- ஆணவம் மாயை கன்மம் என்ற மூன்று மலங்களும் மங்கி அழியவும்,

     இருள் பிணி மங்க  மயில் ஏறி ---  அஞ்ஞான இருளுடன் கூடிய பிறவி நோய் தொலையவும், தேவரீர் மயில் வாகனத்தின் மீதி ஏறி,

       இன அருள் அன்பு மொழிய --- சிறந்த திருவருளுடன் கூடிய அன்புரைகளைக் கூறி,

     கடம்புவின் அது அகமும் கொடு அளிபாட –-- கடப்ப மலரின் உள் இருந்து வண்டுகள் இனிது பாடவும்,

      கரி முகன் எம்பி முருகன் என் --- யானை முகமுடைய விநாயகமூர்த்தி எனது தம்பி முருகப்பிரான் என்று கூறி,

     அண்டர் களிமலர் சிந்த --- தேவர்கள் களிப்புடன் கற்பகமலரைச் சிந்தவும்,

     அடியேன்முன் கருணை பொழிந்து --- அடியேன் முன்பாக பன்னிரு கண்களில் இருந்து கருணைமழை பொழிந்தும்,

     முகமும் மலர்ந்து --- ஆறு திருமுகங்களும் மலர்ந்தும்,

     கடுகி  நடம் கொடு அருள்வாயே --- விரைவாக நடனம் செய்து கொண்டு வந்து அருள் புரிவீராக.


பொழிப்புரை


         மூன்று புரங்களும் எரிந்து அழியவும், மன்மதனுடைய உடம்பு எரிந்து அழியவும், ஒலியுடன் கூடிய நகை செய்தவரும், இடப வாகனத்தின் மீது எழுந்தருள்பவரும், மங்கலம் உடையவரும், ஆகாயம் போல் எங்கும் பற்றற்று விளங்குபவரும், அழகிய கண்களில் கருணை குடி கொண்டு உறைய உலகமெல்லாம் உய்தல் பொருட்டு திருநடனம் புரிபவரும், எம்மையெல்லாம் பெற்ற தலைவியாகிய உமாதேவியை இடப்பாகத்தில் வைத்திருப்பவரும், மழுவைக் கையில் ஏந்திய எமது தந்தையும், அநாதியே மலத்தினின்று நீங்கியவரும், உள்ளம் மகிழ்ந்த குருநாதரே!

         திருவண்ணாமலையில் மகிழ்ச்சியுடன் குறமகளாகிய வள்ளியம்மையாருடன் கூடி இன்புற்று வாழ்கின்ர பெருமையில் சிறந்தவரே!

         நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளும் அஞ்சி அகலவும், ஆணவம் மாயை கன்மம் என்ற மூன்று மலங்களும் மங்கி அழியவும்,  அஞ்ஞான இருளுடன் கூடிய பிறவி நோய் தொலையவும், தேவரீர் மயில் வாகனத்தின் மீதி ஏறி, சிறந்த திருவருளுடன் கூடிய அன்புரைகளைக் கூறி, கடப்ப மலரின் உள் இருந்து வண்டுகள் இனிது பாடவும், யானை முகமுடைய விநாயகமூர்த்தி எனது தம்பி முருகப்பிரான் என்று கூறவும், தேவர்கள் களிப்புடன் கற்பகமலரைச் சிந்தவும், அடியேன் முன்பாக பன்னிரு கண்களில் இருந்து கருணைமழை பொழிந்தும், ஆறு திருமுகங்களும் மலர்ந்தும், விரைவாக நடனம் செய்து கொண்டு வந்து அருள் புரிவீராக.


விரிவுரை


இருவினை அஞ்ச ---
வினையின் விளக்கம்

உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்ப துன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன.  சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில்தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு முரணும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என அறிக.

நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் என்க.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு?  எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? ஆதலின் வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது என்க.  குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு.  ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,
சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி
மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செய்கமலத்து ஆம்.

இருவினையின் காரியமான இன்பதுன்ப முதலாயின

வினை மூவுருவம் கொள்ளும்

வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.

பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்திதத்துவத்தினிடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.

கன்மநெறி திரிவிதம், நல் சாதிஆயுப் போகக்
         கடன் அது என வரும், மூன்றும் உயிர் ஒன்றில் கலத்தல்,
தொன்மையது ஊழ்அல்லது உணவுஆகா, தானும்
         தொடங்குஅடைவில் அடையாதே தோன்றும், மாறித்
தன்மைதரு தெய்விகம் முற்பௌதிகம் ஆன்மிகம் ஆம்,
         தகையில்உறும் அசேதன சேதனத்தாலும் சாரும்
நன்மையொடு தீமைதரு சேதனனுக்கு இவண் ஊண்
         நாடில்அதன் ஊழ்வினையாய் நணுகும் தானே.      --- சிவப்பிரகாசம்.

         வினைக்கு ஈடாக, இனம், வாழ்நாள், துய்த்தல் ஆகிய மூன்றும் ஓர் உயிருக்குத் தொன்று தொட்டுப் பொருந்தி வரும். அவ்வினை பக்குவம் அடைந்த காலத்தே உயிர்களுக்குப் பயன் தரும். உயிர்களால் நுகரப்படும். அப்போது அது ஊழ் என்ற பெயரைப் பெறும். வினை ஈட்டப்பட்ட கால அடைவிலே உயிர், வினைப் பயன்களை நுகர்வதில்லை. வினையின் வன்மை மென்மைகளுக்கு ஈடாகவும், பக்குவப்பட்ட முறைமையிலும் உயிர்கள் அவற்றின் பயன்களை நுகருமாறு இறைவன் கூட்டுவான். வினைகள் உயிரை வந்து சாரும் போது மூன்று வழிகளிலே வந்தடையும். அவற்றை ஆதி தெய்விகம் ஆதி ஆன்மிகம் ஆதி பவுதிகம் என்று கூறுவர். அறிவற்ற பொருள்களாலும் அறிவுடைப் பொருள்களாலும் வினைப்பயன் வினைசெய்த உயிரைச் சாரும். ஓர் ஆன்மாவின் இப்பிறவியில் அவ்வுயிர் நல்லனவும் தீயனவும் நுகர்வதனை ஆய்ந்து பார்த்தால் அவை அவ்வுயிரின் முன்னை வினைப் பயனைப் பொறுத்தே அமைகின்றன என்பது புலனாகும்.

வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.

அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.

ஆகாமியம் - செய்யப்படுவது.
சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம் - அநுபவிப்பது.

இனி, பிராரத்தம்  ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1)     ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள்.

அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்.

(2)     ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.

அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.

(3)     ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.

அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

பனியால் இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில் பவுதிகம் ஆகும்.

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1.    உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2.    வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3. அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4. அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5. மாந்திர வினை ---  சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம்.  அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.

இருவினை முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா லோகநாயகா.        ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

அவையே தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி நிற்கும்அன்றே.

என்ற சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல் புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.

இவ்வினைகளே பிறப்பு இறப்புக்குக் காரணமாம். வினை ஒழிந்தால் இத் தேகம் தினைப் போது அளவும் இராது.

வினைப்போக மேஒரு தேகம் கண்டாய்,
         வினைதான் ஒழிந்தால்
தினைப்போது அளவுநில்லாது கண்டாய்,
         சிவன் பாதம் நினை,
நினைப்போரை மேவு, நினையாரை
         நீங்கி நெறியின் நின்றால்
உனைப்போல் ஒருவர்உண்டோ, மனமே!
         எனக்கு உற்றவரே.                  ---  பட்டினத்தார்.

", மனமே! இவ்வுடம்பானது இருவினையின் காரியத்தால் ஆகியது. அக் கன்மத்தை நுகர்ந்து முடிந்தால், இவ்வுடம்பு ஒரு கணமும் நில்லாது அழியும். ஆதலினால், சிவபெருமானை நினைப்பாயாக. சிவசிந்தை செய்யும் அடியாருடன் உறவு கொள்வாயாக. சிவசிந்தை இல்லாதவரை விட்டு விலகுதி.  இங்ஙனம் நீ நடப்பாயேல் எனக்கு உற்ற துணைவர் உன்னைப்போல் ஒருவர் உண்டோ?” என்று பட்டினத்தடிகள் கூறுமாறு காண்க.

உயிர்கட்கு முற்பிறப்பில் செய்யப்பட்டுக் கிடந்த இருவினைக்கு ஈடாக இப்பிறப்பின் கண் இன்ப துன்பங்கள் எய்தும். 

வினை சடமாகலின் அதனை இறைவன் உயிர்கட்கு உரிய காலத்தில் ஊட்டுவன்.  மருத்துவனும் மன்னனும் போல் என்று உணர்க.

இருவினை இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்துஇறந்து
வருவது போவது ஆகும், மன்னிய வினைப் பலன்கள்
தரும் அரன் தரணியோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவும் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.    ---  சிவஞான சித்தியார்.

மலவகை மங்க ---

மலம், ஆணவம் மாயை கன்மம் என மூன்று என்றும்.  மாயேயம் திரோதாயி என்ற இரண்டையும் கூட்டி ஐந்து என்றும் ஆகும்.

ஆணவமலம் செம்பில் களிம்பு போல் உயிர்க்கு அநாதியே உள்ள மூலமலம் எனப்படும்.  கன்மமும் மாயையும் ஆகந்துகமலம் எனப்படும். ஆகந்துகம் - இடையில் வந்தவை.  வேட்டியில் உள்ள அழுக்கை நீக்க உவர் மண்ணையும், சாணத்தையும் சேர்த்து தோய்ப்பது போல் என்று அறிக.  இம்மலங்கள் மூன்றும் உயிருடன் ஒன்றி நிற்கும் முறை அரிசியில் முளை, தவிடு, உமி இயைந்து நிற்பதுபோல் என்றறிக.

மும்மலம் நெல்லினுக்கு முளையொடு தவிடுமிப்போல்
மம்மர்செய்து அணுவின்உண்மை வடிவினை மறைத்துநின்று
பொய்ம்மைசெய் போகபந்த போர்திருத்துவங்கள் பண்ணும்
இம்மலம் மூன்றினோடும் இருமலம் இசைப்பன் இன்னும்.
                                                                        ---  சிவஞான சித்தியார்.

சுகதுக்க விளைவுகட்கெல்லாம் இடமாய் நின்று, வியாபகமாகிய ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை ஏகதேசப் படுத்தும் மாயா காரியம் மாயேயம் என்பதும், அவ் அம்மலங்களை அவ்வத் தொழிலில்படுத்திப் பாகம் வருவிக்கும் சிவசக்தி என்னும் திரோதானம் என்பதும் ஆகிய இருவகைமலமும் மேற்கூறிய மும்மலத்துடன் கூட்டி ஐவகை மலமென உய்த்து உணர்க.

மாயையின் காரியத்தை மாயேய மலம் அது என்றும்,
ஏயும் மும் மலங்கள் தத்தம் தொழிலி்னை இயற்ற ஏவும்
தூயவன் தனது ஓர் சத்தி திரோதானகரி அதுஎன்றும்,
ஆய்வர் இம்மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்துநிற்கும்.
                                                                        --- சிவஞானசித்தியார்.

இந்த மலங்களால் உயிர்கள் பிறப்பு இறப்பில் ஆழ்ந்து கீழ் மேல் நடு என்கின்ற மூவுலகங்களிலும் கொள்ளிவட்டம் போலும், காற்றாடி போலும் சுழன்று சுழன்று மாறிமாறி வருவதும் போவதும் ஆகித் துன்புறும்.

மலம் மாயை கன்மம் மாயேயம் திரோதாயி மன்னிச்
சலம் ஆரும் பிறப்பு இறப்பில் தங்கி, இத் தரைக்கீழ் மேலும்
நிலையாத கொள்ளிவட்டம் கறங்கு என, நிமிடத்தின்கண்
அலமாறும், இறைவன் ஆணையால் உயிர் நடக்கும் அன்றே.  ---  சிவஞானசித்தியார்.

இருள்பிணி மங்க ---

அறியாமையாகிய இருளுடன் கூடிய பிறவி நெய்.  இந்த நோய் நெடுநாள்களாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது.  "தீராப்பிணி தீர" என்றார் பேரூர்த் திருப்புகழில்.  உயிர்ப்பிணி எனப்படும் இந்நோயைத் தீர்க்கவல்லவர் முருகப்பெருமானே ஆவர்.  "பவரோக வயித்திய நாதப் பெருமாளே" என்று சுவாமிகள் திருத்தணிகையில் துதித்திருப்பதும் சிந்தித்தற்குரியது.

கரிமுகன் எம்பி முருகன் என ---

முருகப் பெருமான் மயில்வாகனத்து ஆரோகணித்து அடியார்க்கு அருள்புரியப் போகும் அருங்காட்சியைக் கண்ட ஐங்கரத்து ஆனைமுகப் பெருமானாகிய விநாயகமூர்த்தி, "இதோ என் தம்பி முருகவேள்" என்று மகிழ்ச்சியுடன் வாய்குளிரக் கூறுவார்.  தம்பியினிடத்து ஆறாத அன்பு பூண்டவர் ஆதலினால், அன்புகனிய அங்ஙனம் கூறியருளுவார்.  அன்றியும், கரிமுகப் பெருமான் அறுமுகப் பெருமானை அன்புகூர்ந்து, "மாதவமே" என அழைத்து மார்பிறுகத் தழுவி திருவுள்ளம் உருகி உவகை உறுவார்.  இதனைத் திருப்போரூர்ச்சந்நிதி முறையில் சிதம்பர சுவாமிகள் கூறுமாறு காண்க.

ஆதரவாய் அடியவருக்கு அருள் சுரக்கும்
         ஐங்கரத்தோன் அன்பு கூர்ந்து,
மாதவமே! என அழைத்துப் புயத்து அணைக்க
         திருவுள்ளத்து மகிழும் கோவே!
ஏதம் உறாது அடியேனைக் காத்து அளிப்பது
         உன் கடனால், இசைப்பது என்னே,
போதமலர் கற்பகமே! போரூர்வாழ்
         ஆறுமுகப் புனிதவேளே!


அண்டர் களிமலர் சிந்த ---

"தேவர் சொர்க்க சக்கரவர்த்திப் பெருமாள்" முருகவேள் ஆதலினால், அப் பரமபதி அடியார்க்கு அருள்புரிய எழுந்தருளி வரும்பொழுது, அமரர்கள் களிப்புடன் கற்பகமலர் பொழித்து துதிப்பர்.  சூரபன்மனால் சிறைப்பட்டு 108 யுகங்கள் கவலைக் கடலில் அழுந்திக் கிடந்த அமரர்களின் கால் விலங்கை ஆறுமுக வள்ளல் அறுத்தெறிந்து ஆட்கொண்டனர் அன்றோ

தங்கள் சிறை நீக்கிய செவ்வேட்பரமன் எங்காவது செல்லுங்கால் நன்றியறிவுடைய தேவர்கள் கற்பகப் புதுமலர் சிந்தி களிப்புடன் வாழ்த்திப் பரவுவது கடமையுமாகும்.


கருணை பொழிந்து ---

அருவமும் உருவுமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பாகிய ஒரு திருமுருகன் ஓர் மேனிகொண்டு கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உலகம் உய்ய உதித்ததனன்.  அக் கருணைக் கடலாகிய கந்தப் பெருமானுடைய ஆறுதிருமுகங்களிலும் கருணை அருவிபோல் பொழிந்துகொண்டே இருக்கின்றது.  அக் கருணை அருவியில் முழுகுதல் வேண்டும்.

குற்றாலம் அருவியில் முழுகுவதற்கு எத்துணை? முயற்சி எத்துணைப் பணச்செலவு? எத்துணை வேகம்? அத்துணை முயற்சியும் வேகமும் முருகவேளின் முகம் பொழி கருணையருவியில் முழுகுவதற்கு இருத்தல் வேண்டும்.


கடுகி நடம் கொடு அருள்வாயே ---

கடுகி - விரைந்து.  விரைந்து வரவேணும் என்கின்றார்.  யாக்கை நிலையற்றது. "வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு”, "இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை”, "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகம்”. ஆதலின், கணந்தோறும் கூற்றுவனுடைய பாசக்கயிறு நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. "பின்றையே நின்றது கூற்றம்" என்றது நாலடி.  ஆதலின், இக்காயம் விழுமுன் முருகவேளைத் தரிசிக்க வேண்டும். "என்று நின் தெரிசனைப் படுவேனோ" என்ற அருள் தாகம் உண்டாக வேண்டும்.

அறுமுகப் பெருமான், மன்னு திருச்சிற்றம்பலத்தே ஆதியும் முடிவுமில்லா அற்புதத் தனிக்கூத்து ஆடும் நாதனார் திருப்புதல்வர் ஆதலாலும், இளம்பூரணர் ஆதலாலும், ஆனந்த நடனம் புரிவர். அருணையடிகளுக்குப் பல இடங்களில் நிருத்த தரிசனம் கொடுத்து அருளினார்.

அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே...
                                                                    ---  (குருவியெனப்பல) திருப்புகழ்.

கொண்டநடனம் பதம் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே.    --- (தண்டையணி) திருப்புகழ்.

மயிலும் ஆடி நீயாடி வரவேணும்....             ---  (அதலசேடனாராட) திருப்புகழ்.


திரிபுரம் மங்க ---

மேலே மலவகை மங்க என்று அருளிச் செய்தனர்.  ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களே முப்புரம்.  அவற்றை அரனார் எரித்தார்.  புருவ நடுவேயுள்ள ஞானாக்கினியால் மும்மலங்களைச் சுட்டு எரிக்கவேண்டும்.

அப்புஅணி செஞ்சடை ஆதிபுரா தனன்
முப்புரம் எய்தனன் என்பர்கள் மூடர்கள்,
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாறே.            ---  திருமூலர்.

சிவபெருமான் முப்புரம் எரித்தது போல், ஒவ்வொருவரும் மும்மலங்களை எரித்து நீறாக்க வேண்டும்.  அருணகிரிநாதர் வேறு ஒரு திருப்புகழில்,

சுட்டு வெம்புரம் நீறாக விஞ்சைகொடு
தத்துவங்கள் விழசாடி எண்குணவர்
சொர்க்கம் வந்து கையுள்ஆக எந்தைபதம்  உறமேவி...    --- (கட்டிமுண்ட) திருப்புகழ்.

திரிபுரம் எரித்த வரலாறு

         தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வான்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர். அவர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டும் என்ன, மூவரும் பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியா வரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின் யானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக் கரையிலுள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய செஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்” எனதானவர் பொன், வெள்ளி இரும்பினாலமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயர வேண்டும். அப் புரமூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தால் அன்றி வேறு ஒருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் ஈந்து தனது இருக்கை சேர்ந்தனன்.

         தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுண சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவ தச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பல விளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதி என்று நினைத்து, தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலிற் பலகாலம் தவஞ் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதல் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.

         திருமால் தேவர்களே அஞ்சாதீர்கள் என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடகாகமம் பிரசங்கித்து, அவரை மருட்டிப் பவுத்தர் ஆக்கினர். அம் மாயையில் அகப்படாதார் மூவரேயாதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராது ஒழிமின்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலை அடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அஃது அறிந்து அருள் வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தி அண்ணல் மேருவரை சேர்ந்து, சிவாக்ஞையை தேவர்பால் கூறிச் சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தம் உற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.

         மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப்பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்குயானைகள் இடையிற்றாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கண்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டும் கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமும் சாமரை இரட்டவும், தும்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக் கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.

வண்டிஇரு சுடராக,வையகம் தேராக, மாவாத நாலுமறையும்
வானவர்கள் அனைவரும் பரிவாரம் ஆக, மலர் வாழ்பவன் பாகனாக
கொண்டு, மலை சிலை, அக அரவு நாணாக, மால் கோலாக, அழலாக வாய்
கோல்இறகு காலாக வெந்து முப்புரம் எரி கொளுந்த எய்தவர் குமரனே.
                                   --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்.

நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தரும் கருங் குயிலுடன் *இடப ஆரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் காலூன்ற, அதன் அச்சு முறிந்தது.

தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற                  --- திருவாசகம்.

உடனே நாராயணர் இடபமாக, அவ் இடபம் மேல் எம்பெருமான் ஏறுதலும், திருமால் தாக்குஞ் சக்தியற்றுத் தரைமேல் விழ, சிவபெருமான் திருவருள் கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலும் காண்க.

கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவரருளால் இரதம் முன்போலாக சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியமிசைக்கவும், கறைமிடற்றண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்திற் சமீபித்தனர்.

         அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க, அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்து ஏந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டும் என்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராய் இருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அவரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.


சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்துத்
  திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்”           ---அப்பர்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
   உளைந்தன முப்புரம் உந்தீபற
   ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
   ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
   ஒன்றும் பெருமிகை உந்தீபற.        --- மணிவாசகர்.

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
     உருளை இருசுடர் வலவனும் அயன்என   மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
     நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற  ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
                                                                      --- (அருவமிடை) திருப்புகழ்.

மதனுடல் மங்க ---

மன்மதன் அவாவை விளைவிப்பவன்.  இருவினையும் அவாவினால் வருகின்றன. பிறப்புக்கு வித்து அவா. துன்பங்கள் அவாவினால் விளைகின்றன. ஆதலினால், சிவபெருமான் மதனனை எரித்தனர். அவாவை எரிக்கவேண்டும் என்ற குறிப்பை அது உணர்த்துகின்றது.

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.                          ---  திருக்குறள்.

திரிபுரத்தைச் சிரித்தும், மதனனைப் பார்த்தும் இறைவர் எரித்தார்.  கண்மலர்ந்து பார்த்தலையும் நகைத்தலாகவே கொண்டு "திகழ்நகை கொண்ட" என்றார்.

நகையால் மதனுருவம் தீத்த
சிவனார்அருள் சுதன்என்றார்க்கு
நலனேஅருள் அமர்செந்தூர்க்குள்     உறைவோனே. ---  (முகிலாமெனும்) திருப்புகழ்.

கருத்துரை


சிவகுமாரரே திருவருணையில் மேவும் தேவதேவரே அடியேனுடைய வினைகளும் மலங்களும் பிறவிப்பிணியும் தொலைய மயிலின்மிசை வந்தருளி ஆட்கொள்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...