திருவண்ணாமலை - 0551. குமரகுருபர குணதர





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குமர குருபர குணதர (திருவருணை)

திருவருணை முருகா!
ஒன்றும் போதாத நாயேனை ஆண்டுகொண்ட
உனது திருவடிகளை ஒருபோதும் மறவேன்.


தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன ...... தனதான


குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
     குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்

குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
     கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
     கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்

கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
     கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
     சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்

சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
     தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்

றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
     அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
     அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குமர! குருபர! குணதர! நிசிசர
     திமிர தினகர! சரவணபவ! கிரி
     குமரி சுத! பகிரதி சுத! சுரபதி ...... குலமானும்

குறவர் சிறுமியும் மருவிய திரள் புய!
     முருக! சரண் என உருகுதல் சிறிதும் இல்,
     கொடிய வினையனை, அவலனை, சடனை .....அதிமோகக்

கமரில் விழவிடும் அழகு உடை அரிவையர்,
     களவினொடு பொருள் அளவு அளவு அருளிய
     கலவி அளறு இடை துவள்உறும் வெளிறனை,......இனிது ஆளக்

கருணை அடியரொடு அருணையில் ஒருவிசை
     சுருதி புடை தர வரும், ரு பரிபுர
     கமல மலர்அடி கனவிலும் நனவிலும் ...... மறவேனே.

தமர மிகு திரை எறி வளை கடல் குடல்
     மறுகி அலைபட, விட நதி உமிழ்வன,
     சமுக முக கண பண பணி பதி நெடு ...... வடமாகச்

சகல உலகமும் நிலைபெற நிறுவிய,
     கனக கிரி திரிதர, வெகு கரமலர்
     தளர, இனியது ஒர்அமுதினை ஒருதனி ...... கடையாநின்று

அமரர் பசிகெட உதவிய க்ருபை முகில்,
     அகில புவனமும் அளவிடு குறியவன்,
     அளவு நெடியவன், ளவிட அரியவன் ...... மருகோனே!

அரவு புனைதரு புநிதரும் வழிபட,
     மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
     அறிவை அறிவது பொருள் என அருளிய ...... பெருமாளே.


பதவுரை


         தமரம் மிகு திரை எறிவளை கடல் --- ஒலி மிகுந்த அலைகளை வீசுகின்றதும், உலகத்தைச் சூழ்ந்துள்ளதும் ஆகிய கடலினது

     குடல் மறுகி அலைபட --- குடல் போன்ற நடுப்பகுதி சுழன்று அலையுவும்,

     விடம் நதி உமிழ்வன --- ஆறு போல நஞ்சை உமிழ்கின்றனவாகிய

     சமுக முக --- திரண்ட பலமுகங்களை உடையதும்,  

     கண பண பணி பதி --- கூட்டமாகிய பணாமகுடங்களை உடையதும் ஆகிய அரவ அரசாகிய வாசுகி

     நெடு வடமாக --  நீண்ட கயிறு ஆகவும்.

      சகல உலகமும் நிலைபெற நிறுவிய --- எல்லா உலகங்களும் நிலை பெறுதல் பொருட்டு நிறுவப் பெற்றதாகிய

     கனக கிரி திரிதர --- பொன் நிறம் பெற்ற மந்தரமலை மத்தாகச் சுழலவும்,

     வெகு கரமலர் தளர --- கடைபவர்களின் மலர் போன்ற கைகள் தளரவும்,

     இனியதொர் அமுதினை ஒருதனி கடையா நின்று --- இனியதாகிய ஒப்பற்ற அமுதத்தை தன்னந்தனியாக நின்று கடைந்து,

       அமரர் பசிகெட உதவிய க்ருபை முகில் ---  தேவர்களின் பசி அழியுமாறு வழங்கியவரும், கருணை பொழிகின்ற மேகமும்,

     அகில புவனமும் அளவிடு குறியவன் --- எல்லா உலகங்களையும் தனது திருவடியால் அளந்து அருளிய சிறிய வடிவினராகிய வாமனரும்,

     அளவு நெடியவன் --- அளவில் மிக நீண்ட வடிவு எடுத்த திரிவிக்ரமரும்,

     அளவிட அரியவன் மருகோனே --- இத் தன்மைத்து என்று அளவிடற்கரிய பெருமையுடன் கூடியவரும் ஆகிய நாராயணமூர்த்தியினுடைய மருமகரே!

      அரவு புனைதரு புநிதரும் வழிபட --- பாம்புகளை ஆபரணமாக அணிந்தவரும், மிகப் பரிசுத்தரும் ஆகிய சிவபெருமானும், சீடனாக நின்று வழிபாடு செய்ய,

     மழலை மொழிகொடு --- மழலைச் சொற்களைக் கொண்டு,

     தெளி தர --- நன்கு தெளிவு பெற,

     ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே --- அறிவு ஒளி வீசுகின்ற அறிவை அறிவதுவே மெய்ப்பொருள் என்று உபதேசித்து அருளிய பெருமையின் மிக்கவரே!

      குமர --- அறியாமையை அகற்றுபவரே!

     குரு பர --- மேலான குருநாதரே!

     குணதர ---  அருட்குணங்களைப் பூண்டவரே!

     நிசிசர திமிர தினகர --- இரவில் உலாவுகின்ற அசுரர்களாகிய இருளுக்கு சூரியனைப் போன்றவரே!

      சரவண பவ --- நாணல் காட்டில் வெளிப்பட்டவரே!  
    
     கிரி குமரி சுத --- மலைமகளாகிய உமையம்மையின் மைந்தரே!

      பகிரதி சுத --- கங்காதேவியின் புதல்வரே!

     சுரபதி குலமானும் --- தேவர்கோனாகிய இந்திரனுடைய திருமகளாகிய தெய்வயானை அம்மையாரும்,

      குறவர் சிறுமியும் --- குறவர் திருமகளாகிய வள்ளி அம்மையாரும்

     மருவிய திரள்புய --- தழுவுகின்ற திரண்ட புயங்களை உடையவரே!

     முருக --- முருகப் பெருமானே!

     சரண் என உருகுதல் --- உனது அடைக்கலம் என்று கூறி உருகுகின்ற நலம்

     சிறிதும் இல் கொடிய வினையனை --- ஒரு சிறிதும் இல்லாதவனும், கொடுமையான தீவினைகளைச் செய்பவனும்,

     அவலனை அசடனை --- பயனற்றவனும், கீழ்மகனை,

        அதி மோக கமரில் விழ விடும் --- மிகுந்த மோகமதாகிய நிலப்பிளப்பில் விழச் செய்கின்ற

     அழகு உடை அரிவையர் --- அழகு வாய்ந்த விலைமாதர்கள்,

     களவினொடு பொருள் அளவு அளவு அருளிய --- கரவுத்தனமாக பணத்தின் அளவுக்குத் தக்கவாறு தந்த

     கலவி அளறு இடை துவளுறும் வெளிறனை --- கலவியாகிய சேற்றின் நடுவில் துவண்டு வாடுகின்ற அறிவிலியும் ஆகிய அடியேனை

     இனிது ஆள --- இனிது ஆட்கொள்ளும் பொருட்டு

      கருணை அடியரொடு அருணையில் ஒருவிசை --- கருணை நிறைந்த அடியவர்களுடன், திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில், ஒருமுறை,

     சுருதி புடைதர வரும் --- உபநிஷதங்கள் அருகில் துதி செய்து வர எழுந்தருளி வந்த,

     இரு பரிபுர கமல மலர் அடி --- பரிபுரம் என்ற ஆபரணத்துடன் கூடியதும், தாமரை மலர் போன்றதும் ஆகிய இரண்டு திருவடிகளை,

     கனவிலும் நனவிலும் மறவேனே --- கனவு நிலையிலும், நனவு நிலையிலும் எப்போதும் மறக்கமாட்டேன்.


பொழிப்புரை


         ஒலி மிகுந்த அலைகளை வீசுகின்றதும், உலகத்தைச் சூழ்ந்துள்ளதும் ஆகிய கடலினது குடல் போன்ற நடுப்பகுதி சுழன்று அலையுவும்,  ஆறு போல நஞ்சை உமிழ்கின்றனவாகிய திரண்ட பலமுகங்களை உடையதும், கூட்டமாகிய பணாமகுடங்களை உடையதும் ஆகிய அரவ அரசாகிய வாசுகி நீண்ட கயிறு ஆகவும், எல்லா உலகங்களும் நிலை பெறுதல் பொருட்டு நிறுவப் பெற்றதாகிய பொன் நிறம் பெற்ற மந்தரமலை மத்தாகச் சுழலவும், கடைபவர்களின் மலர் போன்ற கைகள் தளரவும், இனியதாகிய ஒப்பற்ற அமுதத்தை தன்னந்தனியாக நின்று கடைந்து, தேவர்களின் பசி அழியுமாறு வழங்கியவரும், கருணை பொழிகின்ற மேகமும், எல்லா உலகங்களையும் தனது திருவடியால் அளந்து அருளிய சிறிய வடிவினராகிய வாமனரும், அளவில் மிக நீண்ட வடிவு எடுத்த திரிவிக்ரமரும், இத் தன்மைத்து என்று அளவிடற்கரிய பெருமையுடன் கூடியவரும் ஆகிய நாராயணமூர்த்தியினுடைய மருமகரே!

        பாம்புகளை ஆபரணமாக அணிந்தவரும், மிகப் பரிசுத்தரும் ஆகிய சிவபெருமானும், சீடனாக நின்று வழிபாடி செய்ய, மழலைச் சொற்களைக் கொண்டு, நன்கு தெளிவு பெற, அறிவு ஒளி வீசுகின்ற அறிவை அறிவதுவே மெய்ப்பொருள் என்று உபதேசித்து அருளிய பெருமையின் மிக்கவரே!

       அறியாமையை அகற்றுபவரே!

     மேலான குருநாதரே!

     அருட்குணங்களைப் பூண்டவரே!

     இரவில் உலாவுகின்ற அசுரர்களாகிய இருளுக்கு சூரியனைப் போன்றவரே!

     நாணல் காட்டில் வெளிப்பட்டவரே!

     மலைமகளாகிய உமையம்மையின் மைந்தரே!

     கங்காதேவியின் புதல்வரே!

         தேவர்கோனாகிய இந்திரனுடைய திருமகளாகிய தெய்வயானை அம்மையாரும், குறவர் திருமகளாகிய வள்ளி அம்மையாரும் தழுவுகின்ற திரண்ட புயங்களை உடையவரே! முருகப் பெருமானே! உனது அடைக்கலம் என்று கூறி உருகுகின்ற நலம் ஒரு சிறிதும் இல்லாதவனும், கொடுமையான தீவினைகளைச் செய்பவனும், பயனற்றவனும், கீழ்மகனை, மிகுந்த மோகமதாகிய நிலப்பிளப்பில் விழச் செய்கின்ற அழகு வாய்ந்த விலைமாதர்கள், கரவுத்தனமாக பணத்தின் அளவுக்குத் தக்கவாறு தந்த கலவியாகிய சேற்றின் நடுவில் துவண்டு வாடுகின்ற அறிவிலியும் ஆகிய அடியேனை இனிது ஆட்கொள்ளும் பொருட்டு, கருணை நிறைந்த அடியவர்களுடன், திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில், ஒருமுறை, உபநிஷதங்கள் அருகில் துதி செய்து வர எழுந்தருளி வந்த, பரிபுரம் என்ற ஆபரணத்துடன் கூடியதும், தாமரை மலர் போன்றதும் ஆகிய இரண்டு திருவடிகளை, கனவு நிலையிலும், நனவு நிலையிலும் எப்போதும் மறக்கமாட்டேன்.

விரிவுரை 

குமர குருபர ---

குமரன் - அஞ்ஞானத்தை அகற்றுபவன். அறியாமையை அகற்றுவதனால் மேலான குருபரனாக விளங்குகின்றார்.  அதனால், முருகப் பெருமானை, அருணகிரிநாத சுவாமிகள், "குமரகுருபர" என்று பற்பல இடங்களில் அழைக்கின்றனர்.

இனி, சனகாதிகளாகிய நால்வருக்கும் கல்லாலின் புடை அமர்ந்து, வாக்கிறந்த வான் பொருளாகிய, எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை, இருந்தபடி இருந்து காட்டி, சொல்லாமல் சொல்லி, நினையாமல் நினைப்பித்த எந்தத் தென்முகப் பரமாசாரியரோ, அக் குருபரர்க்கும் ஞானகுருவாக இருந்து உபதேசித்த உத்தமோத்தம குருபரர் முருகப் பிரான் ஆதலின், "குமரகுருபர" என்றனர்.

குணதர ---

சத்துவம், ராசதம், தாமதம் என்ற பிரகிருத குணங்கள் இறைவனிடம் சம்பந்தப்படமாட்டா. அவன் குணரகிதன். நிர்க்குணன்.

தன்வயம், தூயவுடம்பு, இயற்கையுணர்வு, முற்றுணர்வு, இயல்பாக பாசங்களினின்றும் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்ற எட்டு அருட்குணங்களைத் தரித்தவர்.

"குருபங்கவ, எண்குண பஞ்சரனே" என்றார் கந்தர் அநுபூதியில்.

நிசிசர திமிர தினகர ---

அஞ்ஞானத்தை இருளாகவும், ஞானத்தை ஒளியாகவும் உருவகப் படுத்துவது ஆன்றோர் மரபு. இங்கே அசுரர்களை இருளாகச் சுவாமிகள் உருவகிக்கின்றனர். சூரன் முதலியோர் மாயையின் மக்கள் ஆதலினாலும், காமக் குரோத முதலியவைகளும் மாயமும் பொருந்தியவராதலின் அவர்களை இருள் என்றனர்.  அவ்விருளை அகற்றும் முருகப் பெருமான் ஞானசூரியர்.
   
உருகுதல் சிறிதுமில் கொடிய வினையனை ---

மேற்போந்த இளம் பூரணனாகிய முருகவேளுடைய அழகிய நாமங்களாகிய குமரகுருபர, சரவணபவ, முருகா என்ற திருநாமங்களை வாயாரக் கூறி, நெஞ்சார நினைந்து உருகுதல் வேண்டும். அகம் குழைவார்க்கன்றி அப் பரமனை எய்து ஒண்ணாது.உள்ளம் உருகிக் குழைதலையே நலம் என்பார் மாணிக்கவாசகர்.  ஏனைய நலங்கள் நலங்களாகா.

கலந்த அன்பாகிக் கசிந்து உள்உருகும் நலம்...  ---  திருவாசகம்.

என்பு உருகி, மயிர் சிலிர்த்து, உள்ளம் குழைந்து, கண்ணீர் சொரிந்து, அன்பு மயமாய் நிற்கும் அடியார்க்கு, கற்ப கோடி காலம் தவம் புரியினும் காணக் கிடைக்காத இறைவன் அமிர்த சஞ்சீவி போல் முன் நின்று அருள் புரிவன்.

என்பெலாம் நெக்குஉடைய, ரோமம் சிலிர்ப்ப,உடல்
              இளக, மனது அழலின் மெழுகாய்
     இடையறாது உருக, வருமழைபோல் இரங்கியே
              இருவிழிகள் நீர் இறைப்ப,
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு, அங்ஙனே
              அமிர்தசஞ் சீவிபோல்வந்து
     ஆனந்த மழைபொழிவை, உள்ளன்பு இலாதஎனை
              யார்க்காக அடிமைகொண்டாய்,.... --- தாயுமானார்.

உடல்குழைய, என்பு எலாம் நெக்கு ருக, விழிநீர்கள்
                 ஊற்று என வெதும்பி ற்ற,
      ஊசி காந்தத்தினைக் கண்டு அணுகல் போலவே
                 ர்றவும் உன்னி ன்னி,
படபட ன நெஞ்சம் பதைத்து, ள் நடுக்குறப்
                 பாடி டிக் குதித்து,
      பனிமதி முகத்திலே நிலவு அனைய புன்னகை
                 பரப்பி, ர்த்து ஆர்த்து எழுந்து,   
மடல் அவிழும் மர் அனைய கை விரித்துக் கூப்பி,
                 வானே! வ் வானில் இன்ப
      மழையே! மழைத்தாரை வெள்ளமே! நீடூழி
                 வாழி! ன வாழ்த்தி த்தும்
கடல்மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை,
                 ல் செஞ்சனுக்கு எளியையோ?
      கருத ரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தம் இடு
                 கருணா கரக்கடவுளே.               --- தாயுமானார்.

கனவிலும் நனவிலும் மறவேனே ---

அருணகிரிநாதர் தனக்கு ஆறுமுகப் பெருமான் திருவருணையில் காட்சி கொடுத்த கருணையின் எளிமையை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று பாராட்டுகின்றனர்.  அருணகிரியார் என்ன மாதவம் செய்தாரோ? தேவரும் மூவரும் காணாத முழுமுதற்கடவுள் தானே வந்து காட்சி அளித்தனர்.

வயலிநகரியில் அருள்பெற மயில்மிசை
உதவுபரிமள மதுகர வெகுவித
வனசமலரடி கனவிலும் நனவிலும் மறவேனே

என்று நெரூர் திருப்புகழிலும் இவ்வண்ணமே கூறுகின்றனர்.  அருள் பெற்ற பெரியவர்கள் மறவாமை ஒன்றையே விரும்புகின்றனர்.

மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்.....                    ---  பெரியபுராணம்.

பிறவாது இருக்க வரம்தரல் வேண்டும், பிறந்துவிட்டால்
இறவாது இருக்க மருந்து உண்டு காண், இது எப்படியோ,
அறம் ஆர் புகழ் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாது இரு, மனமே, இது காண் நல்மருந்து உனக்கே.     ---  பட்டினத்தடிகள்.

மறப்பே பிறப்புக்குக் காரணம். மறவாமையாலேயே பிறவாமையை அடையலாம்.

மறப்பை அகன்ற மனத்து உரவோர்
     வாழ்த்த, அவர்க்கு வான்கதியின்
சிறப்பை அளிக்கும் சிவபெருமான்,
     தியாகப் பெருமான் திருநடத்தைப்
பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப்
     பேரா னந்தம் பெறக்கண்டேன்,
இறப்பைத் தவிர்த்தேன், அம்மா!நான்
     என்ன தவந்தான் செய்தேனோ!.….     --- திருவருட்பா.

மறவாது உனை வாழ்த்துமெய் அன்பரை மாநிலத்தே
இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே,மெய்
உறவாகிய நின்பதம் அன்றிஒன்று ஓர்கிலேன் நான்,
பிறவா நெறி தந்தருள் என்பது என் பேசிடாயே.  --- திருவருட்பா.

உன்னைமறந் திடுவேனோ, மறப்பறியேன், மறந்தால்
     உயிர்விடுவேன், கணந்தரியேன், உன்ஆணை இது,நீ
என்னைமறந் திடுவாயோ, மறந்திடுவாய் எனில்,யான்
    என்னசெய்வேன், எங்குஉறுவேன், எவர்க்குஉரைப்பேன்,எந்தாய்!
அன்னையினும் தயவுஉடையாய்! நீமறந்தாய் எனினும்
    அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவாது என்றே,
இன்னுமிகக் களித்துஇங்கே இருக்கின்றேன், மறவேல்,
     இதுதருணம், அருட்சோதி எனக்குவிரைந்து அருளே.   --- திருவருட்பா.

தமர மிகுதிரை …... க்ருபைமுகில் ---

திருமால் முதலிய தேவர்கள் பொருட்டு பாற்கடல் கடைந்து அமுதமளித்த வரலாற்றை மிக அழகாக எடுத்து ஓதுகின்றனர்.

தேவர்கட்கு நரை திரை மூப்பு மரணம் முதலிய துன்பங்கள் இருந்தன.  அவற்றை அகற்றும் பொருட்டு பாற்கடல் கடைந்து அமிர்தம் அருந்துமாறு கருதினர். மேரு மந்தர மலையை மத்தாக விடுத்து, சந்திரனைத் தூணாக நிறுத்தி, வாசுகியைத் தாம்பாகப் பிடித்து, நெடிதுகாலம் கடைந்து அயர்ந்தனர்.  அதுபோது திருமால் தனது கரங்களால் கடைந்து அதினின்றும் எழுந்த அமிர்தத்தை ஜெகன் மோகினி அவதாரம் எடுத்து, அமரர்கள் பசியகல வழங்கி ஆண்டனர்.

அகிலபுவனமும் அளவிடு குறியவன் ---

திருமால் வாமனாவதாரம் செய்து, மாவலிபால் மூவடி மண் கேட்டு வாங்கி, ஓரடியாக இம் மண்ணுலகத்தையும், மற்றோர் அடியாக விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடியாக மாவலியின் சென்னியிலும் வைத்து அளந்தனர்.

திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். அதற்குக் காரணம் யாது?  ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது. 

ஒருவனுக்கு இரவினும் இழிவும், ஈதலினும் உயர்வும் இல்லை.

மாவலிபால் மூவடு கேட்டு திருமால் சேவடி நீட்டி உலகளந்த திறத்தினை அடிகள் கந்தரலங்காரத்தில் கூறும் அழகினையும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

தாவடி ஓட்டு மயிலிலும், தேவர் தலையிலும், என்
பாவடி ஏட்டிலும் பட்டதுஅன்றோ, படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்டகூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே.

வாமனாவதார வரலாறு

பிரகலாதருடைய புதல்வன் விரோசனன்.  விரோசனனுடைய புதல்வன் மாவலி.  சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான்.  அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டனன்.  அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.  தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர்.  காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர்.  தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.

மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான்.  அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான்.  திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர்.  மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான்.  வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன்.  மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை.  என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான்.  அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன்.  ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று.  இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார்.   ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம்.  இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.

எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர்.  ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார்.  மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார்.  "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி.  வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது.  அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும பதமும் மாவலி பெற்றனன்.

அரவு புனைதரு புனிதரும் வழிபட ---

முருகப் பெருமானை தேவரும் முனிவரும் வழிபட்டு அருள் பெற்றனர்.  எல்லோராலும் வழிபாடு பெறுகின்ற சிவபெருமானும் முருகனை வழிபட்டனர்.  சிறப்பு உம்மையின் அழகை உன்னுக.  பிரணவோபதேசத்தின் பொருட்டு முக்கட்பெருமான் பரவி வேண்டினர்.

நாதா குமரா நமஎன்று அரனார்
ஓதாய் எனஓதியது எப்பொருள் தான்....         --- கந்தர் அநுபூதி.
   
அறிவை அறிவது பொருள் ---

முருகவேள் சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் இதுவாகும். செவியில் மறைபொருளாகக் கூறியதை அருணகிரிநாதர் அலகறிய கருணையால் பறையறைந்து வெளிப்படுத்துகின்றனர்.  சிவபெருமான் செவியில் கூறியதை முருகன் அருணகிரியார்க்கும் உபதேசித்தாராதலின், அப்பொருளை அருணகிரியார் உணர்வாராயினார்.

அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை      --- (அகரமுதலென) திருப்புகழ்.

அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும்   --- (விறல்மாரன்) திருப்புகழ்.

அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி        ---  (சுருளளக) திருப்புகழ்

என்ற அருள்வாக்குகளையும் உற்று நோக்குமின்கள். பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழியின்படி, இதன் அருமையை உணர்ந்த அநுபூதிமானாகிய தாயுமானார்,

அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று
உறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ.

என்று அருணகிரியார் வாக்கை அப்படியே மனதில் வாங்கி, பலகாலும் சிந்தித்து, அதன் அநுபவத்தை அவாவுகின்றனர்.  இந்தப் பாடல் அருமையினும் அருமையானது. அழகிய கோபுரத்தில் தங்கக் கலசந் வைப்பது போல், அறிவை அறிவது பொருள் என்ற அருமைப் பிரயோகம் அமைந்துளது.  அநுபவத்தை அடைய விரும்பும் அறிஞர்க்குப் பெருவிருந்தாகும்.  ஆழமாக உன்னுபவர்க்கே இதன் இனிமை விளங்கும்.

கருத்துரை

முருகா! மூவர் முதல்வா! திருமால் மருகா! சிவகுருவே! திருவருணையில் சிறியேனாகிய எனக்குத் தேவரீர் தந்தருளிய அருட்காட்சியை என்றும் மறவேன்.
                                                              



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...