9. விருந்து இல்லாது உண்ணும் சோறு
மருந்து போலக் கசக்கும்.
திரு
இருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒரு
விருந்து ஆயினும் இன்றி உண்டபகல்
பகலாமோ? உறவாய் வந்த
பெரு
விருந்துக் குபசாரம் செய்து அனுப்பி
இன்னும் எங்கே பெரியோர் என்று
வரு
விருந்தோடு உண்பதல்லால் விருந்து இல்லாது
உணும்சோறு மருந்து தானே.
இதன் பொருள் ---
திரு இருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் --- அருச்செல்வத்தோடு பொருட்செல்வமும் பொருந்தி
உள்ள திருத்தண்டலை என்னும் வளம் மிகுந்த நாட்டினில் இல்லறம் நடத்துகின்ற
பெரியோர்கள்,
ஒரு விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ --- ஒரு விருந்தினராவது
இல்லாமல் உணவு கொண்ட நாளும் ஒரு நாள் ஆகுமோ?
உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம்
செய்து அனுப்பி --- உறவு போல அன்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவு
அளித்து, வேண்டிய உபசாரங்களைச் செய்து
அனுப்பிய பின்னரும்,
இன்னும் பெரியோர் எங்கே என்று --- மேலும் விருந்தாக வரக்கூடிய
சான்றோர்கள் எங்கே என்று ( ஆவலோடு காத்திருந்து)
வரு விருந்தோடு உண்பது அல்லாமல் ---
வருகின்ற விருந்தினருடன் உண்பது அல்லமால்,
விருந்து இல்லாது உணும் சோறு மருந்து தானே --- விருந்தினர் இல்லாமல் உண்ணுகின்ற சோறு ஆனது மருந்து போலக்
கசப்பாகத் தான் இருக்கும்.
கருத்து --- "செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்து இருப்பான், நல்விருந்து வானத்தவர்க்கு" என்னும் திருவள்ளுவ நாயனார்
கருத்தை இங்கு வைத்து எண்ணுக.
"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்பது
கொன்றைவேந்தன். மருந்து என்னும் சொல் இங்கு அமுதம் என்னும் பொருளில் வந்தது.
இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல்
ஆகும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற
வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது. இதை, "விருந்து
இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்" என்றது கொன்றை வேந்தன். விருந்தினரை அன்புடன் உபசரிக்க வேண்டும் என்னும்
பொருள் படவே, "அன்புடைமை"
என்னும் அதிகாரத்தின் பின்னர், விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தை நாயனார் தமது திருக்குறளில்
வைத்தார் என்னும் அருமையை உணர்க.
No comments:
Post a Comment