10. இவர்க்கு இது
இல்லை
வேசைக்கு நிசம் இல்லை; திருடனுக்கு உறவு இல்லை;
வேந்தர்க்கு
நன்றி இல்லை;
மிடியர்க்கு விலைமாதர் மீதுவங் கணம்இலை;
மிலேச்சற்கு
நிறை அது இல்லை;
ஆசைக்கு வெட்கம் இலை; ஞானியா னவனுக்கு உள்
அகம் இல்லை; மூர்க்கன் தனக்கு
அன்பு இல்லை; காமிக்கு முறை இல்லை; குணம்இலோர்க்கு
அழகு இல்லை; சித்தசுத்தன்
பூசைக்கு நவில் அங்க சுத்திஇலை; யாவும்உணர்
புலவனுக்கு அயலோர்இலை;
புல்லனுக்கு என்றும் உசித அனுசிதம் இல்லை; வரு
புலையற்கு இரக்கம்
இல்லை;
மாசைத் தவிர்த்தமதி முகதெய்வ யானையொடு
வள்ளிக்கு இசைந்த
அழகா!
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு
குமரேசனே.
இதன் பொருள் ---
மாசைத் தவிர்த்த மதிமுக தெய்வயானையொடு ---
களங்கம் இல்லாத திங்கள் போன்ற முகத்தை உடைய
தெய்வயானையுடன்,
வள்ளிக்கு இசைந்த
அழகா --- வள்ளி நாயகிக்கும்
விருப்பமான அழகனே!
மயில் ஏறி
விளையாடு குகனே ---
மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல்
நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது
எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
வேசைக்கு நிசம் இல்லை --- வேசியின் உள்ளத்தில் உண்மை இருக்காது,
திருடனுக்கு உறவு
இல்லை --- திருட்டுத் தொழிலை உடையவனுக்கு உறவினர் என யாரும் இல்லை,
வேந்தர்க்கு நன்றி
இல்லை --- அரசர்களுக்குத் தமக்கு நன்மை செய்தோரிடம் நன்றி உணர்வு இருக்காது,
மிடியர்க்கு விலை
மாதர் மீது வங்கணம் இல்லை --- பொருள் இல்லாத வறியவனுக்கு விலை மாதர் மேல் நட்புக் கிடையாது,
மிலேச்சற்கு
நிறையது இல்லை --- இழிந்த குணம் உடையவருக்கு ஒழுக்கம் இல்லை;
ஆசைக்கு வெட்கம்
இலை --- ஆசை அதிகம் உடையவனுக்கு நாணம் இல்லை,
ஞானியானவனுக்கு
உள் அகம் இல்லை --- மெய்யறிவு பெற்ற ஞானிக்கு, நான் என்னும் அகப்பற்று இல்லை,
மூர்க்கன் தனக்கு
அன்பு இல்லை --- மூர்க்கத் தன்மை படைத்தவனுக்குப் பிறரிடம் அன்பு இல்லை,
காமிக்கு
முறையில்லை --- காம உணர்வால் அறிவு மயங்கியவனுக்கு முறை தெரியாது,
குணம் இலோர்க்கு
அழகு இல்லை --- நல்ல பண்புகள் வாய்க்காதவர்க்கு, அரவது
புற அழகினாலே பயன் இல்லை,
சித்த சுத்தன்
பூசைக்கு நவில் அங்க சுத்தி இல்லை --- மனத்திலே தூய்மை உடையவன்
செய்யும் தெய்வம்
வழிபாட்டுக்கு நூல்களில் கூறப்பட்டுள்ள உடல் தூய்மை செய்தல் என்பது
வேண்டியது இல்லை,
யாவும் உணர்
புலவனுக்கு அயலோன் இலை --- எல்லா நூல்களையும் கற்று அறிந்த அறிவாளிக்கு அயலார் என யாரும்
இல்லை,
புல்லனுக்கு
என்றும் உசித அனுசிதம் இல்லை - அற்ப புத்தி உடையவனுக்கு தக்கது இது தகாதது இது என்ற
பாகுபாடு இல்லை,
வரு புலையற்கு
இரக்கம் இல்லை --- உயிர்க்
கொலைத் தொழிலைச் செய்து வரும் புலையனுக்கு உயிர்களிடம்
கருணை இல்லை.
கருத்து --- விலைமாதரின் உள்ளத்தில் உண்மை சிறிதும்
இருக்காது. பொருள்
உள்ளவரிடத்தில் எவ்வாறு பொருளைப் பறிப்பது என்ற கள்ளத் தனமே நிறைந்து இருக்கும்.
பணம் இல்லை என்றால் முன்னர் அன்போடு பழகியவரையும் விரட்டுவார்கள். வேறு ஒருவன்
பணம் படைத்தவனாக வந்தால் அவனிடமும் பொய்யான உறவு கொண்டு, அவனிடத்து உள்ள பொருளையே கருதுவார்கள். ஆனல் உண்மை அன்பு உள்ளது போல
நடிப்பார்கள்.
திருட்டுத் தொழிலை உடையவன் தனது வீட்டிலேயே திருடுவான். அவனுக்கு உறவினர் என்ற
அபிமானம் இருக்காது.
அரசர்களுக்கு
ஒருவர் எவ்வளவு நன்மையைச் செய்து இருந்தாலும், பகைமை உணர்வு தோன்றுமாயின், பழைய
நன்றியைச் சிறிதும் எண்ணிப் பார்க்கத் தோன்றாது.
பணம் இல்லாதவன்
விலைமாதர் மீது ஆசை கொள்வது தகாது.
இழிந்தவனிடத்திலே
ஒழுக்கம் இருக்காது.
ஆசை வெட்கம் அறியாது.
அறிஞனுக்கு எல்லரும்
உறவு ஆவர். "கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு" என்னும்
ஔவையார் வாக்கையும், "யாதானும்
நாடு ஆமால், ஊர் ஆமால்" என்னும் திருக்குறள்
கருத்தையும் எண்ணுக.
No comments:
Post a Comment