திருவண்ணாமலை - 0557. கோடுசெறி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோடு செறி (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னைப் பணியும் அடியார் சிந்தை மகிழ
மயில் மீது எழுந்தருளி வரவேணும்.


தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
     தானதன தத்த தத்த ...... தனதான


கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
     கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார்

கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
     கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா

நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
     நீறெழமி தித்த நித்த ...... மனதாலே

நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
     நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும்

ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
     ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே

ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
     ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா

தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
     சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே

தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
     தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கோடுசெறி மத்தகத்தை வீசு பலை தத்த, ஒத்தி
     கூறுசெய்து, அழித்து உரித்து ...... நடைமாணார்,

கோள் உலவு முப்புரத்தை வாள் எரி கொளுத்தி விட்ட
     கோபநுதல் அத்தர் அத்தர் ...... குருநாதா!

நீடு கனகத் தலத்தை ஊடுஉருவி, மற்ற வெற்பு
     நீறு எழ மிதித்த நித்த! ...... மனதாலே

நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த
     நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும்!

ஆடல் அணி பொன் சிலைக்கை வேடுவர் புனக் குறத்தி,
     ஆரம் அது மெத்து சித்ர ...... முலைமீதே,

ஆதரவு பற்றி, மெத்த மாமணி நிறைத்த வெற்றி
     ஆறு இரு திருப்புயத்தில் ...... அணைவீரா!

தேடு இமையொர் புத்தி மெத்தி, நீடு ஊற நினைத்த பத்தி,
     சீர் உற உளத் தெரித்த ...... சிவ வேளே!

தேறு அருணையில்  தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த
     தேவர் சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.


பதவுரை


      ஆடல் --- குரவை முதலிய ஆடல்களுடன் கூடியவரும்,

     அணி பொன் சிலை கை --- பொன் கட்டுகள் அமைந்த வில்லைக் கையில் பிடித்தவரும் ஆகிய

     வேடுவர் புனக் குறத்தி --- வேடுவர்களுடைய தினைப்புனத்தில் இருந்த குறக்கொடியாகிய வள்ளயம்மையாரது

     ஆரம் அது மெத்து சித்ர முலைமீதே --- முத்தாரங்கள் முதலிய மணி ஆரங்கள் மிகுதியாக அணியப் பெற்று, அதனால் ஆழகு பெற்றுள்ள முலையின் மீது

      ஆதரவு பற்றி --- அன்பு வைத்து,

     மெத்த மாமணி நிறைத்த --- மிகவும் பெருமை தங்கிய இரத்தின மணியாரங்கள் நிறைந்து உள்ளதும்,

     வெற்றி ஆறு இரு திருப்புயத்தில் அணைவீரா --- வெற்றி பொருந்தியதும் ஆகிய அழகிய பன்னிரு புயாசலங்களினால் தழுவுகின்ற வீரரே!

      தேடு இமையொர் புத்தி மெத்தி நீடு உற --- அடிமுடி தேடிய பிரமவிட்டுணுக்களாகிய இரு தேவர்கட்கும் சிறந்த மெய்யறிவு நிரம்பு உண்டாகுமாறு

     நினைத்த சிவ பத்தி சீர் உற உளத் தெரித்த வேளே --- திருவுளத்தில் கருதி அருளிய சிவமூர்த்தியே,  பத்தி நெறியே பரமனை அடையும் வழியெனும் சிறப்பை அவர்கள் உள்ளத்தில் உணருமாறு தெரிவித்த கந்தவேளே!

      தேறு அருணையில் தரித்த --- தேறுதல் அடைவதற்குரிய திருத்தலமாகிய திருவண்ணாமலையில் எழுந்தருளியவரும்,

     சேண் முகடு இடத்து அடர்த்த --- வான முடிவில் எதிர்த்துப் போர் புரிந்த அசுரரை வாட்டி

     தேவர் சிறை வெட்டி விட்ட பெருமாளே ---- தேவர்களின் கால் விலங்கை வெட்டி சிறை மீட்டு அருளியவரும் ஆகிய பெருமையின் மிக்கவரே!

       கோடு செறி மத்தகத்தை --- கொம்புகளை உடைய யானையை,

     வீசு பலை தத்த ஒத்தி --- பழத்தை எடுத்து வீசியது போல் எடுத்து எறிந்து, 

     கூறு செய்து --- இருகூறாகப் பிளந்து போகுமாறு

     அழித்து உரித்து நடை மாணார் --- கொன்று அதன் தோலை உரித்தவரும், மாட்சிமைப் படாத ஒழுக்கமுடைய திரிபுரவாசிகளுடைய

       கோள் உலவு முப்புரத்தை வாள் எரி கொளுத்தி விட்ட --- பிறர் கூறும் நலம் அல்லாத கொள்கைகள் பரவிய மூன்று புரங்களை ஒளி உண்டாக நெருப்பால் எரிந்து அழியுமாறு செய்தவரும்,

     கோப நுதல் அத்தர் அத்தர் குருநாதா --- மன்மதன் பொருட்டு சினத்துடன் விழித்த நெற்றிக் கண்ணை உடையவரும், தேவதேவரும் ஆகிய சிவபெருமானுடைய குருநாதா!

      நீடு கனகத் தலத்தை ஊடு உருவி  --- நீண்ட பொன்னிறமாகத் தோன்றிய கிரவுஞ்ச மலையைத் தொளைத்து,

     மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த --– எனைய மலைகளும் துகள் படுமாறு மிதித்த என்றுமுள்ளவரே!

      மனதாலே நீப மலர் பத்தி மெத்த ஓதும் --- மனத்தினால் கடப்ப மலர் மாலையைத் தரித்த புயங்களின் பெருமையை மிகவும் துதிக்கின்ற

     அவர் சித்தம் மெத்த --- அடியார்களின் சிந்தை மகிழ்ச்சி உற,

     நீலமயில் தத்த விட்டு வரவேணும் ---- நீல நிறம் உடைய மயில் வாகனத்தின் மீது எழுந்தருளி வேகமாக வந்து அருள வேண்டும்.

பொழிப்புரை


         குரவை முதலிய ஆடல்களுடன் கூடியவரும், பொன் கட்டுகள் அமைந்த வில்லைக் கையில் பிடித்தவரும் ஆகிய வேடுவர்களுடைய தினைப்புனத்தில் இருந்த குறக்கொடியாகிய வள்ளயம்மையாரது முத்தாரங்கள் முதலிய மணி ஆரங்கள் மிகுதியாக அணியப் பெற்று, அதனால் ஆழகு பெற்றுள்ள முலையின் மீது அன்பு வைத்து, மிகவும் பெருமை தங்கிய இரத்தின மணியாரங்கள் நிறைந்துள்ளதும், வெற்றி பொருந்தியதும் ஆகிய அழகிய பன்னிரு புயாசலங்களினால் தழுவுகின்ற வீரரே!

         அடிமுடி தேடிய பிரமவிட்டுணுக்களாகிய இரு தேவர்கட்கும் சிறந்த மெய்யறிவு நிரம்பு உண்டாகுமாறு திருவுளத்தில் கருதி அருளிய சிவமூர்த்தியே,  பத்தி நெறியே பரமனை அடையும் வழியெனும் சிறப்பை அவர்கள் உள்ளத்தில் உணருமாறு தெரிவித்த கந்தவேளே!

         தேறுதல் அடைவதற்குரிய திருத்தலமாகிய திருவண்ணாமலையில் எழுந்தருளியவரும், வான முடிவில் எதிர்த்துப் போர் புரிந்த அசுரரை வாட்டி தேவர்களின் கால் விலங்கை வெட்டி சிறை மீட்டு அருளியவரும் ஆகிய பெருமையின் மிக்கவரே!

         கொம்புகளை உடைய யானையை, பழத்தை எடுத்து வீசியது போல் எடுத்து எறிந்து,  இருகூறாகப் பிளந்து போகுமாறு கொன்று அதன் தோலை உரித்தவரும், மாட்சிமைப் படாத ஒழுக்கமுடைய திரிபுரவாசிகளுடைய பிறர் கூறும் நலம் அல்லாத கொள்கைகள் பரவிய மூன்று புரங்களை ஒளி உம்டாக நெருப்பால் எரிந்து அழியுமாறு செய்தவரும், மன்மதன் பொருட்டு சினத்துடன் விழித்த நெற்றிக் கண்ணை உடையவரும், தேவதேவரும் ஆகிய சிவபெருமானுடைய குருநாதா!

         நீண்ட பொன்னிறமாகத் தோன்றிய கிரவுஞ்ச மலையைத் தொளைத்து, எனைய மலைகளும் துகள் படுமாறு மிதித்த என்றுமுள்ளவரே!

         மனத்தினால் கடப்ப மலர் மாலையைத் தரித்த புயங்களின் பெருமையை மிகவும் துதிக்கின்ற அடியார்களின் சிந்தை மகிழ்ச்சி உற, நீ நிறம் உடைய மயில் வாகனத்தின் மீது எழுந்தருளி வேகமாக வந்து அருள வேண்டும்.


விரிவுரை


கோடு செறி மத்தகத்தை …..  உரித்து ---

தாருகாவனத்து இருடிகள் அபிசார வேள்வி செய்து, அதில் தோன்றிய யானையைச் சிவபெருமான் மீது கொன்று வருமாறு ஏவினர்.  ஆலமுண்ட நீலகண்டர் அந்த யானையை அழித்து, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டனர்.

மனம் முதலிய கருவிகள் முற்றறிவாகிய சிவத்தைக் கொல்ல, யான் எனது என்ற இருகொம்புகளுடன் கூடிய ஆணவ மலமாகிய யானையை ஏவ, சிவமாகிய செம்பொருள் அந்த ஆணவ மலத்தின் வலியை அழித்து, 'கஜாந்தகமூர்த்தி' என விளங்குவது ஆயிற்று என்பதை நுனித்து உணர்க.

யானை மத்தகத்தை உடையதாதலின் மத்தகம் எனப்பட்டது.  பலை - பழம்.  உவமவுருபு தொக்கி நின்றது.


கோள் உலவு முப்புரத்தை வாள் எரி கொளுத்தி ---

கமலாட்சன், தாரகாட்சன், வித்யுன்மாலி என்ற அரக்க மன்னர் மூவரும் சிறந்த சிவபக்தராய், வரபலமும் கரபலமும் உடையவராய் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கினர்.  அவர்கள் வாழும் பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களால் ஆகிய கோட்டைகள் சூழ்ந்த முப்புரங்களையும் ஆண்டு வந்தனர். வலிமையால் செருக்குற்று தேவர்களையும், மூவரையும் வருத்தினர். அதனால், அலக்கண் உற்ற அமரர்கள் திருக்கயிலை மலைக்கண் உற்று, எந்தை அந்தி வண்ணத்து அமலனைப் பணிந்து தம் குறை ஓதி நின்றனர். சிவபத்தி நிறைந்த திரிபுரத்தினரை அழிக்க சிவபெருமான் உடன்படார் ஆயினார். அதனால், திருமால், ஆதி புத்த அவதாரம் எடுத்து, திரிபுரங்களில் பௌத்தக் கொள்கையைப் பரப்பினர். அது கேட்ட அப் புரவாசிகள் சிவபத்தி மாறி திடம் குலைந்தனர்.  இந்த வரலாறு, "நடைமாணார் கோள் உலவு முப்புரம்" என்ற சொற்றொடரில் அமைந்திருப்பதைக் காண்க. கொள் என்ற முதனிலை நீண்டு கோள் என்று வந்தது. நன்மையைக் கொள்வதற்கும் கோள் என்று பேர். தீமையைக் கொள்வதற்கும் கோள் என்று தான் பேர். உலக வழக்கில் தீயவர் கூறும் தீமையைக் கொள்வதற்குத் தான் கோள் என்று வழங்குகின்றது.  நூல் வழக்கில் நன்மைக்கும் அச்சொல் வழங்கி வந்தது. 

"கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்" என்றார் ஆழ்வார். "குறிக்கோள் இலாது கெட்டேன்" என்றார் அப்பர் பெருமான்.

திரிபுரவாசிகள் அக் கோளுக்கு உட்பட்டனர். ஆனால், திரிபுரத் தலைவர்களாகிய மூவரும் அதற்கு உடன்படாது சிறந்த சிவபக்தர்களாகவே விளங்கினர்.

பின்னர், திருமால் முதலியோர் திருக்கயிலை ஏகி, சிவபெருமானிடம் கூறிக் குறையிரந்து வேண்டினர். சிவமூர்த்தி திரிபுர சங்காரத்திற்கு உடன்பட, தேர், வில், கணை முதலியவைகளைச் சேகரித்து அமரர் ஆயத்தம் செய்தனர்.  அரனார் இரதத்தின் மீது ஊர்ந்து புறப்பட, தேவர்கள் ஒவ்வொருவரும் "நாம் துணை செய்வதனாலேயே திரிபுர சங்காரம் நிகழ இருக்கின்றது" என்று எண்ணித் தருக்கினர்.  'அசகாயதீரர்' ஆகிய சிவபெருமான் தனக்கு ஓர் துணையும் வேண்டுவதின்று என்பதனை உணர்த்தல் பொருட்டு, "இவ் ஏழைத் தேவர்களின் பேதை மதி இருந்தவாறு என்னே" என்று எண்ணி, சிறுநகை புரிந்தார். அந் நகையில் இருந்து தோன்றிய சிறு தீப் பொறி பட்டுத் திரிபுரமும், அதில் வாழ்ந்த சிவபக்தி நீங்கிய அவுணர்களும் சாம்பர் ஆயினர். ஆனால், சிவபத்தியில் சிறந்திருந்த முப்புரத் தலைவர் மட்டும் இறவாது இன்புற்று இருந்தனர். அத் தீப்பொறியின் அறிவாற்றல் தான் யாதோ! யாரே அளவிட வல்லார்! புரம் முழுவதும் எரிந்தும் அதற்கிடையில் உள்ளவர் அழியாது நின்றது எத்துணை வியப்பை விளைவிக்கின்றது. ஒரு காடு முழுவதும் கனலால் வெந்தழியும் போது, இடையே நின்ற மலர்ச் செடிகள் மூன்று மட்டும் எரியாது பசுமையாகத் தழைத்திருந்ததை நிகர்க்கும்.

அம் மூன்று தலைவரில் இருவர் திருக்கயிலையில் துவார பாலகர் ஆயினர். ஒருவர் குடமுழா வாசிக்கும் பதம் பெற்றனர்.  சிவாலயங்களில் துவார பாலகராக நிற்கும் இருவடிவங்களைக் காணும் தோறும் அன்பர்கட்கு இந்த வரலாறும், சிவமூர்த்தியன் கருணைத் திறமும் நினைவுக்கு வரவேண்டும்.

மாலாய வாளியைத் தொடுத்து அரக்கரில் ஒருமூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவேமுதல் சிரித்த வித்தகர்.....            ---  (ஆனாதஞான) திருப்புகழ்.

பூஆர்மலர்கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள்செய்தார்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணா மலையாரே.   ---  திருஞானசம்பந்தர்.

சொக்கர்,துணை மிக்கஎயில் உக்குஅற
         முனிந்து,தொழு மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கம்உற வைத்தஅர
         னார்இனிது தங்குநகர்தான்,
கொக்குஅரவம் உற்றபொழில் வெற்றிநிழல்
         பற்றிவரி வண்டுஇசைகுலாம்
மிக்குஅமரர் மெச்சிஇனிது அச்சம்இடர்
         போகநல்கு வேதிகுடியே.           ---  திருஞானசம்பந்தர்.
  
அரிபிரமர் தொழுதுஏத்தும் அத்தன் தன்னை,
         அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல்ஆகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து உளானை,
         எண்ஆகிப் பண்ஆர் எழுத்து ஆனானை,
திரிபுரஞ்செற்று ஒருமூவர்க்கு அருள்செய் தானை,
         சிலந்திக்கும் அரசுஅளித்த செல்வன் தன்னை,
நரிவிரவு காட்டகத்தில் ஆட லானை,
         நாரையூர் நல்நகரில் கண்டேன் நானே.    ---  அப்பர்.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்,
         இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய பின்னை,
         ஒருவன் நீகரி காடு அரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
         மணிமு ழாமுழக்க அருள் செய்த
தேவ தேவ, நின் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர்  உளானே.   --- சுந்தரர்.

உய்யவல்லார் ஒருமூவரைக் காவல்கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்று உந்தீ பற.            --- திருவாசகம்.
  
.....           .....       .....  புரம் எரித்த
அன்று த்துய்ந்த மூவர்க்கு அமர்ந்து வரம் அளித்து
நின்று உய்ந்த வண்ணம் நிகழ்வித்து, நன்று
நடைகாவல் மிக்க அருள்கொடுத்து, கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி....  ---  பதினோராம் திருமுறை.

கோப நுதல் அத்தர் அத்தர் ---

நுதல் - நெற்றி.  கோப நுதல் என்றமையால் நுதலில் உள்ள கண்ணைத் தெரிவிக்கின்றது.  ஐங்கணைகளயும் கரும்பு வில்லையும் சுரும்பு நாணையும் வழங்கிய சிவபெருமான் மீதிலேயே அவைகளை மன்மதன் தூண்டினான்.  அதுகண்ட சிவபெருமான் சிறிது சினந்தவர் போல் நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்தனர்.  அதனால் மதனன் நீறானான்.

அத்தன் - தலைவன்.  அத்தர் அத்தர் - தலைவர்களுக்கு எல்லாம் தனிப்பெரும் தலைவர். சிவபெருமான்.  இனி, அத்தரத்தர் - அந்த வன்மை உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம்.  இழுக்காகாது. தரம் - வலிமை.  மேலும் அத்து அரத்தர் எனப் பிரித்து, சிவந்த பொன் நிறம் உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம்.  அத்து - சிவப்பு.  அரத்தம் - பொன், பவளம்.

நீடு கனகத் தலத்தை ---

கனகத்தலம் என்பது கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.  பொன்னஞ் சிலம்பு புலம்ப வரும் எங்கோன் என்று கந்தரலங்காரத்திலும் கூறுமாறு காண்க.

ஆடல் அணி -----  -----  அணைவீரா ---

ஐம்புல வேடரிடத்துத் தோன்றிய ஜீவான்மாவாகிய வள்ளியம்மையாருடைய பரஞானம், அபரஞானம் என்ற இரு தனங்களையும் ஞானபண்டிதராகிய வடிவேலிறைவன் விரும்புகின்றனர் என நுனித்து உணர்க.


தேடிமையோர் புத்தி மெத்தி நீடுற ---

திருமாலும் திசைமுகனும் அடிமுடி தேடிய வரலாற்றை இங்குக் குறிப்பிடுகின்றனர்.  அவர்களுக்கு ஞான பண்டிதராகிய முருகவேளே சிறந்த ஞானத்தை அருள் புரிந்தனர் என்பதும் இதனால் விளங்குகின்றது.

அடிமுடி தேடிய வரலாறு அநேக தத்துவங்களை உணர்த்துகின்றது.ஆராய்ச்சியால் இறைவனைக் காண முடியாது.
அநுபவத்தாலேயே காணவேணும் என்பதும்,

நான் காண்போன் என்ற தன்முனைப்பு உள்ள வரை காணுதற்கு அரிது என்பதும், கீழ்நோக்கும் தாமத குணத்தாலும், மேல் நோக்கும் இராசத குணத்தாலும் காண இயலாது என்பதும்,

அகமுகத்தால் அகத்தே காணவேண்டிய பொருளை புறக்கண் கொண்டு புறத்தே தேடுவதால் காணுதல் முடியாது என்பதும்,

யான் எனது என்ற இரண்டு அற்ற இடத்தேயே காணலாம் என்பதும்,

பணத்தின் முறுக்காலும், படிப்பின் பெருக்காலும் காணுதல் ஒருபோதும் இயலாது என்பதும்,

இயற்கைக்கு மாறாகத் தேடினால் இயலாது என்பதும்

ஆகிய பல உண்மைகள் வெளிப்படுமாறு காண்க.  இன்னும் பல கருத்துக்கள் உள.  அவைகளை வல்லார் வாய் கேட்டு உணர்க.

தேவர் சிறை வெட்டிவிட்ட ----  பெருமாளே ---

ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகங்களாக அரசு புரிந்த சூரபன்மன், அமரரைச் சிறை செய்து, காலில் விலங்கு பூட்டித் துன்புறுத்தினன்.  இடத் தகாத ஏவல்களை இட்டு உழல்வித்தனன்.  வான்சுமந்த தேவர்கள் மீன் சுமந்து அலுத்தனர். "இனி நாம் உய்யும் காலமும் உளதோ" என்று ஏங்கி இளைத்தனர்.  துன்பத்தின் எல்லையில் வாடி வருந்தினர்.  அமிர்தம் உண்டது அப்போது அவர்கட்குத் தீங்காக முடிந்தது.  அதிக துன்பம் உண்டாகும் போது உயிரை விட்டுவிடுவது உலக வழக்கு.  அது அத் துன்பத்திற்கு ஆறுதலாக அமையும்.  'இப் பெரும் துன்பத்தை அநுபவிப்பதை விட மாள்வதே மேல்' எனப்பலர் கூறுமாறு கண்கூடு.  அளப்பற்ற அல்லலை அடைந்த அமரர் ஆவியை விடத் துணியின் அமிர்த பானம் உண்டமையால் ஆவி பிரிவதில்லை.  அதனால் ஒருகால் இன்பமென்று கருதிய அமிர்த பானமே இப்போது அமரருக்குத் துன்பமாக முடிந்தது.  "ஏன் இந்தப் பாழும் அமிர்தத்தை நாம் அருந்தினோம், இல்லையேல் இறந்தாவது இத் துன்பத்தைத் தொலைக்கலாமே, இப்போது அதற்கும் வழி இல்லையே" என வானவர் வருந்தினர்.  அவர்களுடைய துன்பக் கடலை வற்ற வைத்து, இன்பக் கடலைப் பெருக வைத்தது முருகவேளுடைய பெருங்கருணை.

கருத்துரை


சிவகுருவே! வள்ளி மணவாளரே! திருவருணையில் எழுந்தருளி உள்ள திருமுருகரே! தேவரீரை நினைக்கும் அடியாரை ஆட்கொள்ள வந்து அருள்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...