இதனை விளக்குவது இது





14. இதனை விளக்குவது இது

பகல்விளக் குவது இரவி, நிசிவிளக் குவதுமதி,
     பார்விளக் குவதுமேகம்,
பதிவிளக் குவதுபெண், குடிவிளக் குவது அரசு,
     பரிவிளக் குவதுவேகம்,

இகல்விளக் குவதுவலி, நிறைவிளக் குவதுநலம்,
     இசைவிளக் குவதுசுதி, ஊர்
இடம்விளக் குவதுகுடி, உடல்விளக் குவது உண்டி
     இனிய சொல் விளக்குவது அருள்,

புகழ்விளக் குவதுகொடை, தவம்விளக் குவது அறிவு,
     பூவிளக் குவதுவாசம்,
பொருள்விளக் குவதுதிரு, முகம்விளக் குவதுநகை
     புத்தியை விளக்குவது நூல்,

மகம்விளக் குவதுமறை, சொல்விளக் குவதுநிசம்,
     வாவியை விளக்குவதுநீர்,
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு
     மலைமேவு குமரேசனே.

     இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     பகல் விளக்குவது இரவி --- பகல் பொழுதை விளக்கம் உறச் செய்வது கதிரவன் ஆகும்,

     நிசி விளக்குவது மதி --- இரவை ஒளிசெய்வது திங்கள் ஆகும்,

     பார் விளக்குவது மேகம் --- நிலத்தைச் செழிப்புறச் செய்வது மழை பொழியும் மேகம் ஆகும்,

     பதி விளக்குவது பெண் --- கணவனை விளக்கமுறச் செய்பவள் பெண் ஆவாள்,

     குடி விளக்குவது அரசு --- குடிகள் அச்சம் இல்லாமல் வாழுமாறு காப்பவன் அரசன் ஆவான்,

     பரி விளக்குவது வேகம் --- குதிரைக்கு விளக்கம் தருவது அதனுடைய வேகம்,

     இகல் விளக்குவது வலி --- பகைமைக்கு விளக்கம் தருவது வலிமை,

     நிறை விளக்குவது நலம் --- ஒழுக்கம் விளக்குவது அழகு,

     இசை விளக்குவது சுதி --- இசைக்கு இனிமை தருவது சுருதி என்னும் இசைக் கருவி,

     ஊர் இடம் விளக்குவது குடி --- ஊரை அழகுறச் செய்வது குடிவளம்;

     உடல் விளக்குவது உண்டி --- உடம்பை வளர்த்து அழகு படுத்துவது உணவு,

     இனிய சொல் விளக்குவது அருள் --- இனிய சொல்லால்  அருள் விளக்கம் பெறும்,

     புகழ் விளக்குவது கொடை --- புகழைப் பரப்புவது வரையாது வழங்கும் பண்பு ஆகும்,

     தவம் விளக்குவது அறிவு --- தவத்தை விளக்கம் பெறச்செய்வது அறிவு,

     பூ விளக்குவது வாசம் --- மலரை விளக்ககுறக் காட்டுவது அதன் மணம்;

     பொருள் விளக்குவது திரு ---- செல்வத்தை எடுத்துக் காட்டுவது திருமகளின் அருள்,

     முகம் விளக்குவது நகை --- முகத்தை அழகாக்குவது புன்சிரிப்பு,

     புத்தியை விளக்குவது நூல் --- அறிவை விளக்கம் பெறச் செய்வது நூலைக் கற்பது,

     மகம் விளக்குவது மறை --- வேள்வியை விளங்கச் செய்வது வேத மந்திரம் ஓதுதல்,

     சொல் விளக்குவது நிசம் --- சொல்லுக்கு அழகு உண்மை;

     வாவியை விளக்குவது நீர் --- குளத்திற்கு அழகு நீர் நிறைந்து இருத்தல்.

     கருத்து --- ஞாயிறு இல்லாத பகலும், திங்கள் இல்லாத இரவும், மழை வளம் காணாத நிலமும், மனையாள் இல்லாத கணவனும், குடிகள் இல்லாத ஆட்சியும், வேகம் இல்லாத குதிரையும், வலிமை இல்லாத பகையும், ஒழுக்கம் இல்லாத அழகும், சுருதி இல்லாத இசையும், குடிகள் இல்லாத ஊரும், உணவு இல்லாத உடம்பும், இன்சொல் இல்லாத அருளும், கொடை இல்லாத புகழும், அறிவு இல்லாத தவமும், மணம் அற்ற மலரும், செல்வம் இல்லாத அழகும்,  மகிழ்ச்சி அற்ற முகமும், அறிவை விளக்காத நூலும், வைத மந்திரங்களால் செய்யாத வேள்வியும், உண்மை இல்லாத சொல்லும், நீர் நிறைந்து இல்லாத குளமும் விளக்கம் உறாதன.   
 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...