திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 424
மாதர்அவர்
மருங்கு அணைய
வந்து எய்தி மதனவசக்
காதலவர்
புரிந்து ஒழுகும்
கைதவங்கள்
செய்திடவும்,
பேதம்இலா
ஓர்உணர்வில்
பெரியவரைப்
பெயர்விக்க
யாதும்ஒரு
செயல்இல்லா
மையில், இறைஞ்சி, எதிர்அகன்றார்.
பொழிப்புரை : அத்தேவ மங்கையர்கள்
நாயனாரின் அருகில் வந்து காம வயப்பட்ட காதலை உடையவர் செய்யும் வஞ்சனைகளை யெல்லாம்
செய்யவும், தம் நிலையினின்று
பிறழாத ஒருமைப்பட்ட உணர்வையுடைய பெரியவரான நாயனாரை, அந்நிலையினின்றும் ஒரு சிறிதும்
மாற்றுதற்கு வேறு எவ்விதமான செயலும் செய்ய இயலாமையால், இறைஞ்சி அங்கிருந்தும் அகன்று சென்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 425
இந்நிலைமை
உலகுஏழும்
எய்த அறிந்த
இயல்புஏத்த,
மன்னிய
அன்பு உறு பத்தி
வடிவான வாகீசர்,
மின்நிலவும்
சடையார்தம்
மெய்ப்பொருள்தான் எய்தவரும்
அந்நிலைமை
அணித்துஆக,
சிலநாள்அங்கு
அமர்ந்திருந்தார்.
பொழிப்புரை : இந்நிலைமையை
ஏழுலகமும் அறிந்து வழிபட நிலைபெற்ற அன்பு பொருந்திய பத்தியின் வடிவாய
திருநாவுக்கரசர், ஒளி பொருந்திய
சடையையுடைய சிவபெருமானின் மெய்ப்பொருளைப் பொருந்த வருகின்ற அந்நிலைமை அணிமையுடையதாக, சிலநாள்கள் அத்திருப்பதியில்
வீற்றிருந்தருளினர்.
பெ.
பு. பாடல் எண் : 426
மன்னியஅந்
தக்கரணம்
மருவுதலைப்
பாட்டினால்,
"தன்னுடைய சரணான
தமியேனைப் புகலூரன்
என்னைஇனிச்
சேவடிக்கீழ்
இருத்திடும்"என்று
எழுகின்ற
முன்உணர்வின்
முயற்சியினால்
திருவிருத்தம்
பலமொழிந்தார்.
பொழிப்புரை : இறைவரின் திருவடியில்
நிலைபெற்ற அறிவு இச்சை செயற்பாடுகளின் சேர்க்கையால், `தம்மைப் புகலாக அடைந்த தமியேனான என்னைப்
புகலூர் இறைவர் இனித் தமது சேவடியின் கீழ் இருக்கச் செய்வார்` என்ற கருத்துடன் முன்னைப் பிறவியின்
உணர்வு சார, அவ்வுள்ள
எழுச்சியினால் பல திருவிருத்தங்களைப் பாடினார்.
இக் கருத்துடைய
திருப்பதிகம் `தன்னைச் சரண் என்று` (தி.4 ப.105) எனத் தொடங்கும் திருவிருத்தமாகும். இது
பொழுது அருளிய திருவிருத்தங்கள் பல எனினும், எவையும் கிடைத்தில.
திருநாவுக்கரசர்
திருப்பதிகம்
4. 105 திருப்புகலூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தன்னைச்
சரண் என்று தாள் அடைந்தேன், தன் அடி அடையப்
புன்னைப்
பொழில் புகலூர் அண்ணல் செய்வன, கேண்மின்களோ,
என்னைப்
பிறப்பு அறுத்து, என்வினை கட்டுஅறுத்து, ஏழ்நரகத்து
என்னைக்
கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து
இருத்திடுமே.
பொழிப்புரை : புன்னை மரங்கள்
நிறைந்த சோலைகளை உடைய திருப்புகலூர்ப் பெருமானை அடைக்கலமாகப் பற்றி அவன்
திருவடிகளை அடைந்தேன். தன் திருவடிகளை அடைக்கலமாக அடைந்த அளவில் அவன்
செய்வனவற்றைக் கேளுங்கள். என் பிறவிப் பிணியைப் போக்கி என் வினையாகிய கட்டினை
அறுத்து நீக்கி எழு வகைப்பட்ட நரகத்தில் என்னைக் கிடக்குமாறு விடாமல் சிவலோகத்தில்
கொண்டு சேர்த்து விடுவான்.
பாடல்
எண் : 2
பொன்னை
வகுத்துஅன்ன மேனியனே, புணர் மென்முலையாள்
தன்னை
வகுத்துஅன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்,
புன்னை
மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர் அரசே,
என்னை
வகுத்து இலையேல் இடும்பைக்கு இடம் யாதுசொல்லே.
பொழிப்புரை : பொன்னார் மேனியனே!
பார்வதி பாகனே! தனித்து வருந்தும் அடியேனுக்குக் கருணை செய்வாயாக. புன்னை
மலர்களிலே வண்டுகள் உறங்கும் புகலூர்த் தலைவனே! யான் இல்லேனாயின் துன்பம்
தங்குவதற்கு வேறு இடம் யாது உள்ளது?
பாடல்
எண் : 3
* * * * * * *
பாடல்
எண் : 4
பொன்அளவு
வார்சடைக் கொன்றையினாய்,
புகலூர்
அரசே,
மன்உள
தேவர்கள் தேடும் மருந்தே,
வலஞ்சுழியாய்,
என்அளவே
உனக்கு ஆட்பட்டு இடைக்கலத் தேகிடப்பார்,
உன்அளவே
எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே.
பொழிப்புரை : பொன்னை ஒத்த நீண்ட
சடைக்கண் கொன்றைப் பூவை அணிந்தவனே! புகலூருக்கு அரசனே! பெருமையை உடைய தேவர்கள்
தேடும் அமுதமே! திருவலஞ்சுழிப்பெருமானே! எனக்குச் சிறிதும் இரக்கம் காட்டாத
மேம்பட்ட பண்பினனே! உனக்கு அடிமையாக அமைந்தும் கட்டுக்கும் வீட்டுக்கும் இடையே
கிடப்பவர் என்னைத் தவிர உன் அடியவருள் வேறு யாவர் உளர்?
பாடல்
எண் : 5, 6, 7, 8, 9
* * * * * *
பாடல்
எண் : 10
ஓணப்
பிரானும், ஒளிர்மா மலர்மிசை
உத்தமனும்,
காணப்
பராவியும் காண்கின்றிலர்,
கரம்
நால்ஐந்து உடைத்
தோள்
நப்பிரானை வலிதொலைத்தோன்,
தொல்லை நீர்ப்புகலூர்க்
கோணப்
பிரானைக் குறுக, குறுகா கொடுவினையே.
பொழிப்புரை : திருவோண நாளுக்குத்
தலைவனான திருமாலும் பிரகாசிக்கும் பெரிய தாமரைமலரில் உறையும் பிரமனும் உன்னைக்
காண்பதற்காக வேண்டியும் காண இயலாதவர் ஆயினர். இருபது தோள்களை உடைய மேம்பட்ட
தலைவனாகச் செருக்குக் கொண்ட இராவணனுடைய வலிமையை அழித்தவனாகிய, பண்டு தொட்டு நீர்வளம் மிக்க புகலூரில்
உறையும் சாய்ந்த திருமேனியை உடைய பிரானை, அணுகிய
அளவில், கொடிய தீவினைகள்
நம்மைத் துன்புறுத்த நெருங்கிவாரா.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதகி வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 427
மண்முதலாம்
உலகுஏத்த மன்னுதிருத்
தாண்டகத்தைப்
"புண்ணியா உன்அடிக்கே போதுகின்றேன்"
எனப் புகன்று,
நண்ண
அரிய சிவானந்த ஞானவடிவே ஆகி,
அண்ணலார்
சேவடிக்கீழ் ஆண்டஅரசு அமர்ந்து
இருந்தார்.
பொழிப்புரை : இம்மண்ணுலகம் முதலான
எல்லா உலகங்களும் போற்றுமாறு நிலைபெறும் திருத்தாண்டக யாப்பிலமைந்ததும், `புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன்!` எனும் நிறைவு உடையதுமான பதிகத்தைப்
பாடிச், சென்று அடைதற்கரிய
சிவப்பேறாகும் மேலாய ஞானவடிவேயான சிவபெருமானின் சேவடிக்கீழ் திருநாவுக்கரசர் மிகு
விருப்புடன் இருந்தருளினார்.
இந் நிறைவுடைய
திருத்தாண்டகம் `எண்ணுகேன்` (தி.6 ப.99) எனத் தொடங்கும் முதல் திருப்பாடல்
ஆகும். இப்பதிகப் பாடல் தொறும் அடிகள் `உன்னடிக்கே
போதுகின்றேன்` என்னும் தொடரை
அமைத்துப் பாடியுள்ளார். அவர்தம் திருவாக்காக நிறைவாக அமைந்த திருப்பதிகம்
இதுவாகும்.
திருநாவுக்கரசர் செய ஆண்டு பங்குனித்
திங்கள் உரோகிணி விண்மீன் கூடிய நன்னாளில் (கி.பி.575 மார்ச்சு, ஏப்ரல்) தோன்றினார் எனவும், நள ஆண்டு சித்திரைத் திங்கள் 12 ஆம் நாள் (கி.பி.656 ஏப்ரல் 24ஆம் நாள்) தேய்பிறை 10 ஆம் நாள் ஞாயிறு சதய விண்மீன் நாள்
அன்று திருப்புகலூர்ப் புண்ணியனார் அடிசேர்ந்தார் எனவும் சாமிக்கண்ணு பிள்ளை
அவர்களின் எபிமரீஸ் கூறுகின்றது என,
நாயன்மார்கள்
வரலாற்றில் பல்வகைச் செய்திகள் என்ற நூலில் வித்துவான் மா.சிவகுருநாதபிள்ளை
எழுதியுள்ளார்.
பெ.
பு. பாடல் எண் : 428
வானவர்கள்
மலர்மாரி மண்நிறைய, விண்உலகின்
மேல்நிறைந்த
ஐந்துபேர்இய ஒலியும்
விரிஞ்சன்முதல்
யோனிகள்
ஆயினஎல்லாம் உளம் நிறைந்த
பெருமகிழ்ச்சி
தான்
நிறைந்த சித்திரையில் சதயமாம் திருநாளில்.
பொழிப்புரை : இவ்வாறு
திருநாவுக்கரசர் அமர்ந்திருந்த சித்திரைத் திங்கள் சதயத் திருநாளில், தேவர்கள் சொரிந்த மலர் மழையானது
இவ்வுலகில் நிறைய விண்ணுலகில் எங்கும் ஐவகைத் துந்துபிகளின் ஒலிகளும் ஒலிக்கலாயின.
நான்முகன் முதலாக அமைந்த எழுவகைப் பிறப்புள் தோன்றிய எல்லா உயிர்களும் தமக்குள்
உயிர்க்கு உயிராய் நிறைவாகப் பெற்ற பெருமகிழ்ச்சி தழைய நின்றன.
திருநாவுக்கரரசர்
திருப்பதிகம்
6.099 பொது
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
எண்ணுகேன்
என்சொல்லி எண்ணு கேனோ,
எம்பெருமான்
திருவடியே எண்ணின் அல்லால்,
கண்இலேன், மற்றுஓர் களைகண்
இல்லேன்,
கழல்அடியே கைதொழுது
காணின் அல்லால்,
ஒண்உளே
ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது
உணர மாட்டேன்,
புண்ணியா, உன்அடிக்கே போது
கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :புண்ணியா , அழகிய புகலூர் மேவிய புண்ணியனே , நினையுந்தன்மை உடையேனாகிய நான்
எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது வேறு எதனை விரும்பி
நினைவேன் ? நினது கழலடியையே
கைதொழுது காணின் அல்லது வேறு காட்சியில்லேன் ; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன் . யான்
வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய் .
அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும்
காணுதலையும் செய்யமாட்டேன் . ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே
வருகின்றேன் . என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .
பாடல்
எண் : 2
அங்கமே
பூண்டாய், அனல் ஆடினாய்,
ஆதிரையாய், ஆல்நிழலாய், ஆன்ஏறு ஊர்ந்தாய்,
பங்கம்ஒன்று
இல்லாத படர்சடை யினாய்,
பாம்பொடு திங்கள்
பகைதீர்த்து ஆண்டாய்,
சங்கைஒன்று
இன்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின்
நஞ்சுஉண்டு சாவா மூவாச்
சிங்கமே, உன்அடிக்கே போது
கின்றேன்,
திருப்புகலூர் மேவிய
தேவ தேவே.
பொழிப்புரை :திருப்புகலூர் மேவிய
தேவ தேவே! எலும்புகளை அணியாகப் பூண்டவனே, அனலாடீ, ஆதிரை நாண்மீனை உடையவனே, கல்லால மர நிழலமர்ந்தோனே. ஆனேற்றை
ஊர்ந்தவனே, குறைஒன்றுமில்லாத
பரவிய சடையினனே, பாம்பொடு திங்களை
வைத்து அவற்றின் பகை தீர்த்தாண்டவனே, தேவர்
வேண்டப் பிறிது எண்ணம் ஒன்று இன்றியே சமுத்திரத்தில் தோன்றிய நஞ்சினையுண்டு
சாதலும் மூத்தலும் இல்லாத வலிய சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை
ஏற்றுக் கொண்டருள்வாயாக.
பாடல்
எண் : 3
பைஅரவக்
கச்சையாய், பால்வெண் ணீற்றாய்,
பளிக்குக் குழையினாய், பண்ஆர்இன்சொல்
மைவிரவு
கண்ணாளைப் பாகம் கொண்டாய்,
மான்மறிகை ஏந்தினாய், வஞ்சக் கள்வர்
ஐவரையும்
என்மேல் தரவு அறுத்தாய்,
அவர்வேண்டும்
காரியம்இங்கு ஆவது இல்லை,
பொய்உரையா
துஉன்அடிக்கே போது கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே ! பட நாகத்தைக் கச்சையாகக் கொண்டவனே, பால்போலும் வெள்ளிய திரு நீற்றினாய், பளிக்குக் குழையினனே, பண்போலும் இன் சொல்லும் மை பூசிய
கண்ணுமுடைய பார்வதியைப் பாகங்கொண்டவனே, மான்
கன்றை ஏந்திய கையினனே, வஞ்சமிக்க கள்வரைப்
போன்ற ஐம்புலன்களும் வஞ்சம் செய்தலை என்னினின்றும் நீக்கினை. அவை விரும்பும்
காரியம் எனக்கு நன்மை பயக்குமாறு இல்லை. என்னுரை பொய்யுரை யன்று : உன் திருவடிக்கே
வருகின்றேன். என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக .
பாடல்
எண் : 4
தெருளாதார்
மூஎயிலும் தீயில் வேவச்
சிலைவளைத்துச்
செங்கணையால் செற்ற தேவே,
மருளாதார்
தம்மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்,
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய், வானோர்க்கு என்றும்
அருள்ஆகி, ஆதியாய், வேதம் ஆகி,
அலர்மேலான்
நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருள்ஆவாய், உன்அடிக்கே போது
கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே ! தாங்கள் செய்து வந்த சிவ வழிபாட்டினை இடையிலேயே விட்டொழிந்த
மயக்கத்தினராகிய திரிபுரத்தசுரரின் மூன்று மதிலும் தீயில் வேகுமாறு வில்லை
வளைத்துச் செங்கணையால் அவற்றை அழித்த தேவனே ! மயக்கமின்றி நின்னையே வழிபடுவார்
மனத்தில் ஏற்படும் மெலிவைத் தீர்ப்பவனே ! தேவர்களுக்கு மருந்தாய் என்றும் அவருற்ற
பிணி தீர்ப்பவனே ! அருளே உருவமாகி எப்பொருட்கும் முதலாகிய வேதமானவனே ! பிரமனும்
திருமாலும் தேடியும் காணமுடியாத பொருளானவனே ! உன் திருவடிக்கே வருகின்றேன் . என்னை
ஏற்றுக் கொண்டருள்வாயாக .
பாடல்
எண் : 5
நீர்ஏறு
செஞ்சடைமேல் நிலாவெண் திங்கள்
நீங்காமை வைத்துஉகந்த
நீதி யானே,
பார்ஏறு
படுதலையில் பலிகொள் வானே,
பண்டுஅனங்கற்
காய்ந்தானே, பாவ நாசா,
கார்ஏறு
முகில்அனைய கண்டத் தானே,
கருங்கைக்
களிற்றுஉரிவை கதறப் போர்த்த
போர்ஏறே, உன்அடிக்கே போது
கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே ! கங்கை தங்கிய செஞ்சடைமேல் நிலவையுடைய வெள்ளிய திங்களை நீங்காமல்
உறையும்படி விரும்பிவைத்த நீதியனே ! பருமை பொருந்திய படுதலையில் பிச்சை கொள்வானே !
பண்டு மன்மதனைச் சுட்டு எரித்தவனே ! பாவங்களை நாசம் செய்பவனே ! கருமை பொருந்திய
மேகம் போன்ற கண்டத்தை உடையவனே ! கரியதும் கையுடையது மாகிய களிறுகதற அதனை உரித்து
அதன் தோலைப் போர்த்த போர்த்தொழில் வல்ல சிங்கமே ! உன் திருவடிக்கே வருகின்றேன் .
என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக .
பாடல்
எண் : 6
விரிசடையாய், வேதியனே, வேத கீதா,
விரிபொழில்சூழ்
வெண்காட்டாய், மீயச் சூராய்,
திரிபுரங்கள்
எரிசெய்த தேவ தேவே,
திருவாரூர்த்
திருமூலட் டானம் மேயாய்,
மருவினியார்
மனத்துஉளாய், மாகா ளத்தாய்,
வலஞ்சுழியாய், மாமறைக்காட்டு
எந்தாய், என்றும்
புரிசடையாய், உனஅடிக்கே போது
கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே ! விரி சடையாய் ! வேதத்தாற் புகழப்படுவோனே ! வேதத்தைப் பாடுபவனே !
விரிந்த பொழிலால் சூழப்பட்ட வெண்காட்டினனே ! மீயச்சூரை உடையவனே ! திரிபுரங்களை
எரித்தழித்த தேவதேவனே ! திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறைவோனே ! இனிய
பண்பு உடையாரின் மனத்துள்ளவனே ! மாகாளத்து வாழ்பவனே ! வலஞ்சுழி வள்ளலே !
மாமறைக்காட்டெந்தையே ! என்றும் முறுக்குண்டு திகழும் சடையானே ! உன் திருவடிக்கே
வருகின்றேன் . என்னை ஏன்று கொண்டருள்வாயாக .
பாடல்
எண் : 7
தேவார்ந்த
தேவனை, தேவ ரெல்லாம்
திருவடிமேல்
அலர்இட்டுத் தேடி நின்று,
நாஆர்ந்த
மறைபாடி, நட்டம் ஆடி,
நான்முகனும்
இந்திரனும் மாலும் போற்றக்
காஆர்ந்த
பொழிற்சோலைக் கானப் பேராய்,
கழுக்குன்றத்
துஉச்சியாய், கடவுளே, நின்
பூஆர்ந்த
பொன்அடிக்கே போது கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே ! கடவுட்டன்மை மிக்க கடவுளே , எல்லாத் தேவரும் நான்முகனும், இந்திரனும் , மாலும் தேடிக் கண்டு நின்று திருவடிமேல்
பூக்களை இட்டு நாவிற்பொருந்திய மறையைப்பாடி நட்டம் ஆடிப் போற்ற இள மரக்காவுடன்
பொருந்திய பொழிலாகிய சோலையையுடைய கானப் பேரூர்என்ற திருத்தலத்தில் விளங்குபவனே !
கழுக்குன்றின் உச்சியில் உள்ளவனே ! மனம் வாக்கு மெய்களைக் கடந்தவனே ! நின் பூவைப்
போலப் பொருந்திய அழகிய திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்றுகொண்டருள்வாயாக .
பாடல்
எண் : 8
நெய்ஆடி, நின்மலனே, நீல கண்டா,
நிறைவுஉடையாய், மறைவல்லாய், நீதி யானே,
மைஆடு
கண்மடவாள் பாகத் தானே,
மான்தோல் உடையா
மகிழ்ந்து நின்றாய்,
கொய்ஆடு
கூவிளங் கொன்றை மாலை
கொண்டு,அடியேன் நான்இட்டு, கூறி நின்று,
பொய்யாத
சேவடிக்கே போது கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே! நெய்யாடுபவனே,
நின்மலனே, நீலகண்டனே, நிறைவுடையவனே, வேதம் வல்லானே, நீதியனே, மைவிரவு கண் மடவாள் பார்வதி திகழ்
பாகத்தானே, மான்தோலை உடையாகக்
கொண்டு மகிழ்ந்தவனே, இப்பொழுது பறித்தல்
பொருந்திய, வில்வம் கொன்றை
இவற்றால் ஆகிய மாலையைக் கொணர்ந்து இட்டு அடியேன் பொய்யில்லாத நின்புகழ்விரிக்கும்
தோத்திரங்களைக் கூறி வழிபட்டு நின்று நின் சேவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று
கொண்டருள்வாயாக .
பாடல்
எண் : 9
துன்னஞ்சேர்
கோவணத்தாய், தூய நீற்றாய்,
துதைந்துஇலங்கு
வெண்மழுவாள் கையில் ஏந்தித்
தன்அணையுந்
தண்மதியும் பாம்பும் நீரும்
சடைமுடிமேல்
வைத்துஉகந்த தன்மை யானே,
அன்ன
நடைமடவாள் பாகத் தானே,
அக்குஆரம் பூண்டானே, ஆதி யானே,
பொன்னங்
கழல்அடிக்கே போது கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே ! தைத்தல் பொருந்திய கோவணத்தை உடையவனே ! தூய நீற்றினனே ! ஒளி
மிகுந்து விளங்கும் வெள்ளிய மழுவாயுதத்தைக் கையிற் கொண்டு, தன்னைச் சார்ந்த குளிர்ந்த பிறையையும்
பாம்பையும் கங்கையையும் சடைமுடிமேல் வைத்து மகிழ்ந்த அருள்தன்மையனே ! அன்னநடை
மடவாள் பார்வதி திகழும் பாகத்தை உடையவனே ! எலும்பு மாலை அணிந்தவனே ! முதற்கடவுளே !
நான் நின் பொன்னால் ஆகிய கழல் அணிந்த திருவடிக்கே வருகின்றேன் . என்னை ஏன்று
கொண்டு அருள்வாயாக .
பாடல்
எண் : 10
ஒருவரையும்
அல்லாது உணராது உள்ளம்,
உணர்ச்சித்
தடுமாற்றத்து உள்ளே நின்ற
இருவரையும்
மூவரையும் என்மேல் ஏவி,
இல்லாத
தரவுஅறுத்தாய்க்கு, இல்லேன், ஏலக்
கருவரைசூழ்
கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீது
ஓடாமைக் காலால் செற்ற
பொருவரையாய், உன்அடிக்கே போது
கின்றேன்,
பூம்புகலூர் மேவிய
புண்ணி யனே.
பொழிப்புரை :அழகிய புகலூரில்
மேவிய புண்ணியனே ! ஒருவை ஆகிய நின்னையல்லது என் உள்ளம் வேறு உணராது . உணர்வு
கலங்குமாறு புலனாகாது அருவாய் நின்ற இருவினைகளையும் முக்குணங்களையும் என்மேல்
விடுத்துப் பொய்யான யான் எனது என்னும் செருக்கினை அறுத்தாய்க்குச் செய்யும்
கைம்மாறு இல்லேன் . ஏலம் நிறைந்த கரிய மலைகளைச் சூழ்ந்து கடற்கரை விளங்கும்
இலங்கைக்கு அரசனது விரைந்து செல்லும் தேர் , மேலே ஓடாமல் காலால் ஊன்றிய போர்
செய்யும் திருக்கயிலாய மலையானே ! நான் நின் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று
கொண்டருள்வாயாக.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
தம்பிரான் தோழர், பரவை நாச்சியார் பங்குனி உத்திரத்
திருநாளில் செய்யும் தான தருமங்களுக்குப் பொருள் பெற எண்ணித் திருவாரூரிலிருந்து
திருப்புகலூர் சென்று, தொழுது, கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக
வைத்து, ஒளி பொருந்திய
வெண்பட்டு ஆடையை அதன் மேல் விரித்து,
இறையருளால்
துயின்றார். துயில் எழுந்தபோது செங்கற்கள் பொன்னாகி இருப்பதைக் கண்டு இறையருளை எண்ணி
வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர். புரா. 50, 51)
பெரிய
புராணப் பாடல் எண் : 47
சென்று
விரும்பித் திருப்புகலூர்த்
தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில்
பணிந்து, வலங்கொண்டு,
முதல்வர் முன்பு
வீழ்ந்துஇறைஞ்சி,
தொன்று
மரபின் அடித்தொண்டு
தோய்ந்த அன்பில்
துதித்து எழுந்து,
நின்று
பதிக இசைபாடி
நினைந்த கருத்து
நிகழ்விப்பார்.
பொழிப்புரை : சென்று
அத்திருப்புகலூரில் அமர்ந்தருளும் தேவர்களின் தலைவனாய பெருமான்
எழுந்தருளியிருக்கும் கோயிலின் அழகிய திருமுற்றத்தை அடைந்து, பணிந்து வலங்கொண்டு, தம் முதல்வர் முன்பாக வீழ்ந்து வணங்கி, வழிவழியாக நீளநினைந்து வரும் மரபில்
அடிமையாகித் திருவடித் தொண்டு செய்து வரும் சிறப்பினால், முழுவதும் மூழ்கிய அன்பினால் போற்றிசெய்து, எழுந்து திருமுன்பு நின்று, திருப்பதிக இசை பாடித் தாம் நினைந்த
கருத்தைப் பெருமானிடம் விண்ணப்பித்துக் கொள்வாராய்,
இதுபொழுது அருளிய
பதிகம் கிடைத்திலது.
பெ.
பு. பாடல் எண் : 48
சிறிது
பொழுது கும்பிட்டு,
சிந்தை முன்னம்
அங்குஒழிய,
வறிது
புறம்போந்து அருளி, அயல்
மடத்தில் அணையார், வன்தொண்டர்
அறிவு
கூர்ந்த அன்பருடன்
அணிமுன் றிலின்
ஓர்அருகுஇருப்ப,
மறிவண்
கையார் அருளேயோ,
மலர்க்கண்
துயில்வந்து எய்தியதால்.
பொழிப்புரை : சிறிதுநேரம்
கும்பிட்டு, சிந்தையில்
பெருமானின் நினைப்பைத் தவிரப் பிறிதொழிந்து நிற்ப, வேண்டியவாறு பொருள் பெறாது வறிதே
வெளியில் வந்தருளி, அருகில் உள்ள
திருமடத்தில் அறிவுமிக்க அன்பர்களுடன் செல்லாது, திருக்கோயிலின் அழகிய திருமுற்றத்தின்
அருகே இருந்திட, அதுபொழுது மான்கன்றை
ஏந்திய இறைவனின் அருளாலேயோ, என்னவோ, அறியோம். அவருடைய மலர்போன்ற கண்களில்
துயில்வந்து பொருந்தியது.
பெ.
பு. பாடல் எண் : 49
துயில்வந்து
எய்த, தம்பிரான்
தோழர் அங்குத்
திருப்பணிக்குப்
பயிலும்
சுடுமண் பலகைபல
கொணர்வித்து உயரம்
பண்ணி, தேன்
அயிலும்
சுரும்புஆர் மலர்ச்சிகழி
முடிமேல் அணியா
உத்தரிய
வெயில்உந்
தியவெண் பட்டுஅதன்மேல்
விரித்து, பள்ளி மேவினார்.
பொழிப்புரை : அவ்வாறு துயில்வந்த
அளவில், தம்பிரான் தோழராய
சுந்தரர், அங்குத் திருக்கோயில்
திருப்பணிக்கு இருந்த சுட்ட மண்கட்டிகளான செங்கற்கள் பலவற்றைக் கொண்டுவரச் செய்து, உயரமாக அடுக்கி, தேன்விரும்பும் வண்டினங்கள்
மொய்த்திடும் மலர்களையுடைய திருமுடிக்குமேல் அணையாக மேலாடையாய ஒளி பொருந்திய
வெண்பட்டாடையை அதன்மீது விரித்துத் துயில் கொண்டார்.
பெ.
பு. பாடல் எண் : 50
சுற்றும்
இருந்த தொண்டர்களும்
துயிலும் அளவில், துணைமலர்க்கண்
பற்றும்
துயில்நீங் கிடப்பள்ளி
உணர்ந்தார் பரவை
கேள்வனார்,
வெற்றி
விடையார் அருளாலே,
வேமண் கல்லே
விரிசுடர்ச்செம்
பொன்திண்
கல் ஆயினகண்டு,
புகலூர் இறைவர்
அருள்போற்றி.
பொழிப்புரை : அதுபொழுது உடனிருந்த
தொண்டர்களும் துயில்கின்ற அளவில்,
ஆரூரரின்
தாமரை மலரனைய இரு கண்களையும் பற்றிய உறக்கம் நீங்கிட, வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தியாக உடைய
பெருமானின் திருவருளால், வெந்திடச் சுட்ட
கற்கள், விரிந்த ஒளியுடைய
செம்பொன் கற்களாய் இருந்தமை கண்டு,
திருப்புகலூர்
இறைவரின் அருளை நினைந்து, தொழுது, வணங்கி,
பெ.
பு. பாடல் எண் : 51
தொண்டர்
உணர மகிழ்ந்து எழுந்து,
துணைக்கைக் கமல
முகைதலைமேல்
கொண்டு, கோயில் உள்புக்கு,
குறிப்பில் அடங்காப்
பேர்அன்பு
மண்டு
காதல் உறவணங்கி,
வாய்த்த மதுர
மொழிமாலை
பண்தங்கு
இசையில் "தம்மையே
புகழ்ந்து"
என்று எடுத்துப் பாடினார்.
பொழிப்புரை : : அதுபொழுது
அடியவர்களும் துயில் உணரத் தாமும் மகிழ்ந்து எழுந்து, துணையான திருவுடைய செந்தாமரையின்
முகைபோலத் திருக்கைகளைத் தலைமேல் குவித்துக்கொண்டு கோயிலுட் புகுந்து, தம்அளவில் அடங்காத பேரன்பு மிகும் காதல்
கொள்ள வணங்கித், தமக்கு அந்நிலையில்
வாய்த்த இனிய பண்ணமைந்த இசையால் `தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் பதிகத்தை எடுத்துப்
பாடியருளினார்.
`தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் பதிகம் கொல்லிப்
பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.34). திருவருளால் செங்கல் பொன்னாக, அப்பேரருள் திறத்தை நினைந்து
புலவராற்றுப் படையாக இப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார் ஆரூரர்.
திருக்கடைக்காப்பில், வனப்பகையப்பன், சடையன் தன் சிறுவன் என அருளியிருப்பன
இவர்தம் வரலாற்றிற்குத் துணையா கின்றன.
பெ.
பு. பாடல் எண் : 52
பதிகம்
பாடித் திருக்கடைக்காப்பு
அணிந்து, பரவிப் புறம்போந்தே,
எதிர்இல்
இன்பம் இம்மையே
தருவார் அருள்பெற்று
எழுந்தருளி,
நிதியின்
குவையும் உடன்கொண்டு,
நிறையும் நதியும்
குறைமதியும்
பொதியும்
சடையார் திருப்பனையூர்
புகுவார் புரிநூல்
மணிமார்பர்.
பொழிப்புரை : இத்திருப்பதிகம் பாடி
அப்பதிகத்திற்குத் திருக்கடைக்காப்பும் அணிந்து போற்றி, வெளியே போந்து, ஒப்பற்ற இன்பத்தை இப்பிறவியிலேயே தரும்
பெருமானின் அருள் பெற்று, அப்பெருமானின்
அருளால் பெற்ற பொன் குவியலையும் உடன் கொண்டு, நீர் நிறைந்த கங்கை நதியையும், இளம் பிறையையும், திருச்சடையையும் உடைய பெருமானின்
திருப்பனையூர் என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்தார் முந்நூலணிந்த அழகிய
மார்புடன் விளங்கும் சுந்தரர்.
எதிரில் - ஒப்பற்ற. `இம்மையே தரும் சோறும் கூறையும், ஏத்தலாம், இடர் கெடலும் ஆம், அம்மையே சிவலோகம்
ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே'
என
வரும் இப்பதிக முதல் பாடல் கருத்தை உளங்கொண்டே `எதிர் இல் இன்பம் இம்மையே தருவாரு அருள்பெற்று' என ஆசிரியர் அருளுவாராயினர்.
7. 034 திருப்புகலூர் பண் -
கொல்லி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தம்மை
யேபுகழ்ந்து இச்சை பேசினும்,
சார்கி னும், தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை
யாளரைப் பாடாதே, எந்தை
புகலூர் பாடுமின்
புலவீர்காள்,
இம்மை
யேதரும் சோறும் கூறையும்,
ஏத்தல் ஆம்இடர் கெடலும்ஆம்,
அம்மை
யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , எம் தந்தையாகிய சிவபிரான் , தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே
நல்ல உண்டியும் , ஆடையும் , பிறவும் தந்து புரப்பான் ; அதனால் , புகழும் மிகும் ; துன்பங் கெடுதலும் உண்டாம் , இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய
நிலையிற்றானே சிவ லோகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக
இல்லை ; ஆதலின் , தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து , தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி , அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து
நிற்பினும் , அங்ஙனம்
சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப்
பாடுதலை அறவே விடுத்து , அவனது
திருப்புகலூரைப் பாடுமின்கள் .
பாடல்
எண் : 2
மிடுக்கு
இலாதானை வீமனே, விறல்
விசயனே வில்லுக்கு
இவன்என்று,
கொடுக்க
இலாதானைப் பாரி யேஎன்று
கூறி னும்,கொடுப் பார்இலை,
பொடிக்கொள்
மேனிஎம் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின்
புலவீர்காள்,
அடுக்கு
மேல்அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , வலியும் வீரமும் இல்லாதவனை , ` இவன் மல்லுக்கு வீமனே போல்வான் , வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனே
போல்வான் ` என்றும் , கொடுத்தற்குணம் இல்லாதவனை , ` இவன் கொடைக்குப் பாரியே போல்வான் ` என்றும் இல்லது கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார்
இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , நீற்றைக்கொண்ட திரு மேனியையுடைய எம்
புண்ணிய வடிவினனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , பல உலக அடுக்கிற்கும் மேல் உள்ள அமரரது
உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
பாடல்
எண் : 3
காணி
யேல்பெரி து உடையனே, கற்று
நல்லனே, சுற்றம் நன்கிளை
பேணியே, விருந்து ஓம்புமே, என்று
பேசி னும்கொடுப்
பார்இலை,
பூணி
பூண்டுஉழப் புள்சி லம்பும்தண்
புகலூர் பாடுமின்
புலவீர்காள்,
ஆணி
யாய்அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , நிலம் சிறிதும் இல்லாதவனை , ` காணியோ பெரிதுடையன் ` என்றும் , கல்வியில்லாத பேதையை, ` கற்று நலம் பெற்றவன் ` என்றும் , ஒருவரோடும் அளவளாவுதல் இல்லாதவனை , ` நண்பரையும் , நல்ல சுற்றத்தாரையும் பேணுதலுடையவன் ` என்றும் , தானே தமியனாய் உண்டு களித்து ஈர்ங்கை
விதிராதவனை , ` விருந்தினரை நன்கு
புறந்தருவோன் ` என்றும் பொய்
சொல்லிப் பாடினும் , நீவிர் வேண்டுவதனை
நுமக்குக் கொடுப்பார் இவ் வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உழவர் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழ , வயற் பறவைகள் ஒலிக்கின்ற , தண்ணிய திருப் புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகமாகிய தேர்க்கு அச் சாணியாய்
நின்று அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 4
நரைகள்
போந்து,மெய் தளர்ந்து, மூத்து,உடல்
நடுங்கி நிற்கும்இக்
கிழவனை,
வரைகள்
போல்திரள் தோள னே,என்று
வாழ்த்தி னும்கொடுப்
பார்இலை,
புரைவெள்
ஏறுஉடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின்
புலவீர்காள்,
அரைய
னாய்அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : மெய்ம்முழுதும்
நரைகள் வரப்பெற்று , மூப்பெய்தி , உடல் நடுக்கங் கண்டு , கால் தளர்ந்து நிற்கின்ற இத்தன்மையனாகிய
கிழவனை , ` மலைகள் போலத்திரண்ட
தோள்களையுடைய காளையே ` என்று பொய்யாகப்
புகழ்ந்து பாடினும் , நீவிர் வேண்டுவதை
நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உயர்ந்த வெள்ளிய இடபத்தினையுடைய
புண்ணியனாகிய சிவபிரானது திருப் புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகத்திற்குத் தலைவராய் அதனை
ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 5
வஞ்ச
நெஞ்சனை, மாச ழக்கனை,
பாவி யை,வழக்கு இல்லியை,
பஞ்ச
துட்டனைச் சாது வேஎன்று
பாடி னும்கொடுப்
பார்இலை,
பொன்செய்
செம்சடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின்
புலவீர்காள்,
நெஞ்சில்
நோய்அறுத் துஉஞ்சு போவதற்கு
யாதும் ஐயறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , வஞ்சம் பொருந்திய நெஞ்சை உடையவனும் , பெரும்பொய்யனும் , பாவத்தொழிலை உடையவனும் , நீதி இல்லாதவனும் , பஞ்ச மாபாதகங்களையும் செய்பவனும்
ஆகியவனை , ` சான்றோனே ` என்று உயர்த்திப் பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார்
இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பொன்போலும் சிவந்த சடையினையுடைய
புண்ணியனாகிய சிவ பிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , மனத்தில் தோன்றும் துன்பங்களையெல்லாம்
அறுத்தெறிந்து பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 6
நலம்இ
லாதானை நல்ல னே,என்றும்
நரைத்த மாந்தனை
இளையனே,
குலம்இ
லாதானைக் குலவ னே,என்று
கூறி னும்கொடுப்
பார்இலை,
புலம்எ
லாம்வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின்
புலவீர்காள்,
அலம
ராதுஅமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , அழகில்லாதவனை , ` அழகுடையவனே ` என்றும் , முழுதும் நரை எய்திய கிழவனை , ` இளையவனே ` என்றும் இழிகுலத்தவனை , ` உயர்குலத்தவனே ` என்றும் மாறிச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர்
இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , வயல்களெல்லாம் தாமரை முதலியவற்றின்
மணங்கமழ்கின்ற அழகிய திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால், அலைவின்றி அமரர் உலகத்தை ஆளுதல் உளதாம்
என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும்
அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 7
நோய
னைத்தடம் தோள னே,என்றும்
நொய்ய மாந்தனை
விழுமிய
தாய்அன்
றோபுல வோர்க்கு எலாம்,என்று
சாற்றி னும்கொடுப்
பார்இலை,
போய்
உழன்றுகண் குழியா தேஎந்தை
புகலூர் பாடுமின்
புலவீர்காள்,
ஆயம்
இன்றிப்போய் அண்டம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : தொழுநோயால்
வருந்துகின்றவனை , ` பெரிய தோள்களை யுடைய
மல்லனே ` என்றும் , ஒன்றும் ஈயாத சிறுமைக் குணம் உடையவனை , ` இவன் புலவர்கட்கெல்லாம் பெருமை
பொருந்திய தாய்போல்பவன் அன்றோ `
என்றும்
, நுமக்கு வரும் இளி
வரல் கருதாதே பலரும் அறியக் கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார்
இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உலகரிடத்துச் சென்று அலைந்து கண்குழிய மெலியாமல்
, எம் தந்தையாகிய
சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால்
, வருத்தமின்றிச்
சென்று வானுலகை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறற்
காரணம் யாதும் அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 8
எள்வி
ழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,
ஈக்கும் ஈகிலன்
ஆகிலும்,
வள்ள
லே,எங்கள் மைந்த னே,என்று
வாழ்த்தி னும்கொடுப்
பார்இலை,
புள்எ
லாம் சென்று சேரும் பூம்புக
லூரைப் பாடுமின்
புலவீர்காள்,
அள்ளல்
பட்டுஅழுந் தாது போவதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , எள் விழுந்த இடத்தை , அவ்விழப்பிற்கு வருந்திக் கூர்ந்து
நோக்கித் தேடுபவனாயும் , ஈக்கும் ஈயாது
சிந்தியவற்றைச் சேர்ப்பவனாயும் உள்ளவனை , ` அள்ளி
வீசும் வள்ளலே , எங்கட்கு வலிமையாய்
உள்ளவனே ` என்று சொல்லி
வாழ்த்துதலைச் செய்யினும் , நீவிர் வேண்டுவதை
நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் இல்லை ; ஆதலின்
, பறவைகளெல்லாம் சென்று
சேர்கின்ற அழகிய புகலூரைப் பாடுமின் ; பாடினால்
, உலகியலாகிய
சேற்றிற்பட்டு அழுந்தாது பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 9
கற்று
இலாதானைக் கற்று நல்லனே,
காம தேவனை ஒக்குமே,
முற்று
இலாதானை முற்ற னே,என்று
மொழியி னும்கொடுப்
பார்இலை,
பொத்தில்
ஆந்தைகள் பாட்டு அறாப்புக
லூரைப் பாடுமின்
புலவீர்காள்,
அத்த
னாய்அம ர்உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , ஒருஞான்றும் ஒன்றனையும் கற்றறியாதவனை , ` மிகவும் கற்று வல்லனாயினானே ` என்றும் , அழகு சிறிதும் இல்லாதவனை , ` அழகில் காமதேவனை ஒப்பானே ` என்றும் , ஆண்டும் அறிவும் முதிராதவனை , அவற்றால் முதிர்ந்தவனே என்றும் புனைந்து
கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை
நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , மரப்பொந்துகளில் ஆந்தைகளின் ஓசை
இடையறாது ஒலிக்கின்ற திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகிற்குத் தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 10
தைய
லாருக்கொர் காம னே,சால
நல அழகுஉடை ஐயனே,
கைஉ
லாவிய வேல னே,என்று
கழறி னும்கொடுப் பார்
இலை,
பொய்கை
வாவியின் மேதி பாய்புக
லூரைப் பாடுமின்
புலவீர்காள்,
ஐய
னாய்அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : புலவர்காள் , யாவராலும் அருவருக்கப்படும் தோற்றத்தவனை
, ` மகளிருள்ளத்திற்குக்
காமன் போலத் தோன்றுபவனே , ஆடவர் யாவரினும் மிக
இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே , முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே ` என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார்
இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பெரிய பொய்கைகளிலும் , சிறிய குளங்களிலும் எருமைகள் வீழ்ந்து
உழக்குகின்ற திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால்
, அமரருலகத்திற்குத்
தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம்
என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .
பாடல்
எண் : 11
செறுவி
னில்செழுங் கமலம் ஓங்குதென்
புகலூர் மேவிய
செல்வனை,
நறவம்
பூம்பொழில் நாவல் ஊரன்,
வனப்பகை அப்பன், சடையன்தன்
சிறுவன், வன்தொண்டன், ஊரன் பாடிய
பாடல் பத்துஇவை
வல்லவர்,
அறவ
னார்அடி சென்று சேர்வதற்கு
யாதும் ஐயுறவு
இல்லையே.
பொழிப்புரை : வயல்களில்
செந்தாமரைகள் செழிக்கின்ற அழகிய திருப்புகலூரில் விரும்பி எழுந்தருளியுள்ள
செல்வனாய சிவபெருமானை , தேனையுடைய
பூஞ்சோலைகளை உடைய திருநாவலூரனும்,
வனப்பகைக்குத்
தந்தையும், சடையனார்க்கு மகனும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய
பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அறவடிவினனாகிய அப்பெருமானது அரிய
திருவடிகளில் சென்று சேர்வர் என்றற்கு , ஐயுறற்
காரணம் யாதும் அறுதியாக இல்லை.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment