ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக உள்ளவை




24. ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக உள்ளவை.


வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்
     வாழ்வுதரும் உதவி புவனம்,
  வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி
     வாழ்வுபெற் றிடுமன் னராம்!

தேன்அமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குஉதவி
     சேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;
  சேர்குடி படைக்குஉதவி விளைபயிர்! பயிர்க்குஉதவி
     சீர்பெற வழங்கு மழையாம்!

மேல்நிமிர் மழைக்குஉதவி மடமாதர் கற்புஒன்று;
     வேந்தர்தம் நீதி ஒன்று;
  வேதியர் ஒழுக்கம்ஒன்று; இம்மூன்று மேஎன்று
     மிக்கபெரி யோர்உரை செய்வார்,

ஆன்அமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே!
     அதிபனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     ஆன் அமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே --- பசுவின் உருவத்தை எழுதிய நீண்ட கொடியை உடைய எமது இறைவனே!,

     அதிபனே --- உயிர்களுக்கு அரசனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர் கோள்கட்கும் வாழ்வு உதவி தரும் புவனம் --- தேவர்களுக்கும், தென்புலத்தாருக்கும், ஞாயிறு திங்கள் அக்கினி என்னும் முச்சுடர்களுக்கும், பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மூன்று கடவுளர்க்கும், ஒன்பது கோள்களுக்கும் அவரவர் நிலை சிறக்க, பூசனை முதலானவைகளை இயற்றி, நிவேதனப் பொருள்களை அளித்து உதவி செய்வது இந்த உலகம்,

     வளம் மிக்க புவனம் தனக்கு மேன்மேல் உதவி வாழ்வு பெற்றிடும் மன்னர் ஆம் --- வளம் நிறைந்த இந்த உலகத்திற்கு மேலும் மேலும் வளம் சிறக்க உதவியாக இருப்பவர்கள் வாழ்வில் சிறந்த அரசர்கள் ஆவர்,

     தேன் அமர் நறுதொடையல் புனை மன்னவர்க்கு உதவி சேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம் --- தேன் பொருந்திய மணம் மிக்க மலர்களால் ஆன மாலைகளை அணிந்த அரசர்கட்குத் துணையானவை, அந்த அரசரைச் சார்ந்த குடி மக்ககளும் படைகளும் ஆகும்,

     சேர் குடி படைக்கு உதவி விளை பயிர் --- அந்த அரசரைச் சார்ந்து இருக்கக்கூடிய குடிகளுக்கும், படைகளுக்கும் துணையாக விளங்குவது விளைந்த பயிராகும்,

     பயிர்க்கு உதவி சீர்பெற வழங்கும் மழை ஆம் --- பயிர்களுக்குத் துணையாக விளங்குவது சிறப்புறப் பெய்யும் மழை ஆகும்,

     மேல் நிமிர் மழைக்கு உதவி --- வானத்தில் இருந்து பரவிப் பெய்யும் மழைக்குத் துணையாக இருப்பன,

     மடமாதர் கற்பு ஒன்று --- இளமங்கையரின் கற்பு ஒன்றும்,

     வேந்தர் தம் நீதி ஒன்று --- அரசர்களின் நீதி தவறாத முறைமை ஒன்றும்,

     வேதியர் ஒழுக்கம் ஒன்று --- அந்தணர்களின் ஒழுக்கம் ஒன்றும்,  ஆகிய,

     இம் மூன்றுமே என்று மிக்க பெரியோர் உரை செய்வார் --- இவை மூன்றுமே என்று அறிவில் சிறந்த பெரியோர் சொல்லுவர்.

       விளக்கம் --- உயர்த்தல் --- வானில் விளங்கிப் பறக்கும்படி உயர்த்திக் கட்டுதல்.

      "வேதம் ஓதிய வேதியர்க்க் ஒர்மழை
     நீதி மன்னர் நெறியினுக்கு ஒர்மழை
     மாதர் கற்புடை மங்கையர்க்கு ஒர்மழை
     மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே"

என்னும் விவேகசிந்தாமணியில் ஒரும் பாடல் கருத்து இங்கு வைத்து எண்ணத் தக்கது.

     வாழ்க்கைத் துணையும், ஊரிலே உள்ள அந்தணர்களும், நாட்டை ஆளும் மன்னவரும் தத்தமது நெறியிலே தவறாமல் ஒழுகினால், உலகில் மழை வளம் சிறக்கும். அதனால்,உலக உயிர்கள் பசிப்பிணி இன்றி வாழும். விழாக்களும், வழிபாடும் சிறக்கும். தானமும் தவமும் சிறக்கும். 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...