விரைந்து அடக்க வேண்டியவை
12. விரைந்து அடக்க வேண்டியவை


அக்கினியை, வாய்முந்து துர்ச்சனரை, வஞ்சமனை
     யாளை,வளர் பயிர்கொள்களையை,
அஞ்சா விரோதிகளை, அநியாயம் உடையோரை,
     அகிர்த்தியப் பெண்கள் ஆர்ப்பை,

கைக்கு இனிய தொழிலாளி யை,கொண்ட அடிமையை,
     களவுசெய் யும்திருடரை,
கருதிய விசாரத்தை, அடக்கம்இல் பலிசையை,
     கடிதுஆன கோபந்தனை,

மெய்க்கு இனிது அலாப்பிணியை, அவை உதா சீனத்தை,
     வினைமூண் டிடும் சண்டையை,
விடம் ஏறு கோரத்தை, அன்று அடக் குவது அலால்,
     மிஞ்சவிடல் ஆகாதுகாண்

மைக்கு இனிய கண்ணிகுற வள்ளிதெய் வானையை
     மணம்செய்த பேரழகனே!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.


     இதன் பொருள் ---

     மைக்கு இனிய கண்ணி குறவள்ளி தெய்வானையை மணம் செய்த பேரழகனே --- மை தீட்டப்பட்ட அழகிய கண்களை உடைய குறமகளாகிய வள்ளியையும் தெய்வயானையையும் திருமணம் புரிந்த அழியா அழகனே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     அக்கினியை --- நெருப்பை,

     வாய் முந்து துர்ச்சனரை --- வாய்ப்பேச்சிலே முந்தி வரும் தீயவரை,

     வஞ்ச மனையாளை --- வஞ்ச நினைவு உடைய மனைவியை,

     வளர் பயிர்கொள் களையை --- வளருகின்ற பயிரோடு வளரும் களையை,

     அஞ்சா விரோதிகளை --- அச்சமற்ற பகைவரை,

     அநியாயம் உடையோரை --- நன்னெறி நில்லாதவரை,

     அகிர்த்தியப் பெண்கள் ஆர்ப்பை --- தீய தொழில் உடைய பெண்களின் ஆரவாரத்தை,

     கைக்கு இனிய தொழிலாளியை --- நல்ல கைத்தொழில் உடையவனை,

     கொண்ட அடிமையை --- தான் கொண்ட அடிமையை,   

     களவு செய்யும் திருடரை --- திருட்டுத் தொழில் உடையோரை,

     கருதிய விசாரத்தை --- உள்ளத்தில் கொண்ட கவலையை,

     அடக்கம் இல் பலிசையை --- அடங்கி நடவாத  பருவப்பெண்ணை,

     கடிதான கோபம் தனை --- வெறுக்கத்தக்க, விரைந்து வரும் கோபத்தை,

     மெய்க்கு இனிது அலாப் பிணியை --- உடலுக்கு நன்மை ஞெய்யாத நோயை,

     அவை உதாசீனத்தை --- அவையில் உள்ளோருக்கு நேரும் பழிப்பை,

     வினை மூண்டிடும் சண்டையை --- தீமையை விளைவிக்கும் சண்டையை,

     விடம் ஏறு கோரத்தை --- துடுக்காக ஓடுகின்ற குதிரையை,

     அன்று அடக்குவது அலால் --- அப்போதே அடக்குவதை விடுத்து,

     மிஞ்ச விடல் ஆகாது --- மீறிப் போகவிடுதல் கூடாது.


No comments:

Post a Comment

சாதிகள் இல்லையடி பாப்பா!!!!!

  சாதிகள் இல்லையடி பாப்பா!!!! -----        வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு.  துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங...