திருவண்ணாமலை - 0544. கருநிறம் சிறந்து

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கருநிறம் சிறந்து (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள்


தனன தந்தனம் தனதன தனதன
     தனன தந்தனம் தனதன தனதன
          தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான


கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
     மதன தந்திரங் கடியன கொடியன
          கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும்

கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
     விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
          கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன்

செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன
     களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
          தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம்

தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
     மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது
          திருகு கின்றமங் கையர்வச மழிதலை ......யொழிவேனோ

மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை
     கலக லன்கலின் கலினென இருசரண்
          மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய்

வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
     முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
          மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ..... வுளநாடி

அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
     சதத ளம்பணிந் ததிவித கலவியு
          ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே

அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
     நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
          அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கருநிறம் சிறந்து அகல்வன, புகல்வன
     மதன தந்திரம், கடியன, கொடியன,
          கனக குண்டலம் பொருவன, வருவன, ...... பரிதாவும்

கடல் உடன் படர்ந்து அடர்வன, தொடர்வன,
     விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன, பிளிர்வன,
          கணையை நின்று நின்று எதிர்வன, முதிர்வன, ...... இளையோர்முன்

செருவை முண்டு அகம் சிறுவன, உறுவன,
     களவு வஞ்சகம் சுழல்வன, உழல்வன,
          தெனன தெந்தனந் தெனதென தெனதென ......எனநாதம்

தெரி சுரும்பை வென்றிடுவன, அடுவன,
     மருள்செய் கண்கள் கொண்டு அணைவர், தம் உயிரது
          திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ......ஒழிவேனோ?

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
     கலகலன் கலின் கலின் என, இருசரண்
          மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும் ....மிகவேறாய்,

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
     உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
         மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ......உளம் நாடி,

அருகு சென்று டைந்து, வள் சிறு பதயுக
     சத தளம் பணிந்து, தி வித கலவியுள்
          அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே!

அமரர் சங்கமும் குடிபுக, நொடியினில்
     நிருதர் சங்கமும் பொடிபட, அமர்செய்து,
          அருணை வந்து தென் திசைதனில் உறைதரு ......பெருமாளே.


பதவுரை


      மருவு தண்டை --- பொருந்திய தண்டையும்,

     கிண்கிணி ---  கிண்கிணியும்,

     பரிபுரம் இவை --- சிலம்பும் ஆகிய இவை

     கல கலன் கலின் கலின் என --- கலின் கலின்  என்று ஒலிக்கும்படி,

     இருசரண் மலர்கள் நொந்து நொந்து அடியிட --- இரண்டு திருவடி மலர்களும் மிகவும் வருந்தி நடக்க,

     வடிவமும் மிக வேறாய் --- உருவமும் மிகவும் மாறி,

      வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை --- வலிமையான சிங்கமும், கடியும், புலியும் வசிக்கின்ற

     செழும் புனம் தினை விளை இதண் மிசை --- வளமையான தினைப்பயிர் விளைகின்ற புனத்தில் பரண் மீது இருந்த

     மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திருவுளம் நாடி --- வேடர்களின் குலக்கொடியாகிய வள்ளிநாயகியை ஒப்பற்ற திருவுள்ளத்தில் விரும்பி,

      அருகு சென்று அடைந்து --- அப் பிராட்டியின் அருகில் சென்று சேர்ந்து,

     அவள் சிறு பதயுக சததளம் பணிந்து --- அந்த வள்ளியம்மையின் நூறு இதழ்த்தாமரை போன்ற இரு திருவடிகளை வணங்கி,

     அதிவித கலவியுள் அற மருண்டு --- பலவித திருவிளையாடல்களில் மனம் மிகவும் மருட்சி அடைந்து,

     நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே --- மார்போடு அவளை மகிழ்ச்சியுடன் தழுவியவரே!

      அமரர் சங்கமும் குடிபுக --- தேவர்களின் கூட்டமானது விண்ணுலகில் குடியேறவும்,

     நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து --- அசுரர்களின் கூட்டமானது நொடிப் பொழுதில் பொடிபட்டு அழியவும் போர் புரிந்து,

     அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே --- திருவண்ணாமலையில் வந்து தெற்குத் திசையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      கரு நிறம் சிறந்து --- கரிய நிறத்தில் சிறந்தனவாய்,

     அகல்வன --- விசாலமாக உள்ளனவாய்,

     புகல்வன ---  பேசுவது போல் பொலிவு உள்ளனவாய்,

     மதன தந்திரம் கடியன கொடியன --- மதன சாத்திரத்தில் கூறிய கடுமையும், கொடுமையும் உடையனவாய்,

     கனக குண்டலம் பொருவன வருவன --– காதில் உள்ள பொன் குண்டலத்தோடும் போர் செய்ய வருவன போல காதளவு நீண்டனவாய்,

      பரி தாவும் கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன --- குதிரை முகம் உடைய வடவைத் தீ படர்ந்துள்ள கடல் போல், நெருங்கி அடர்ந்து தொடர்கின்றனவாய்,

     விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன --- அக் கடலில் தோன்றிய நஞ்சு கலந்து ஒளிசெய்து கொப்புளிப்பனவாய்,

     கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன --– அம்பையும் நின்று நின்று எதிர்ப்பனவாய், முற்றின தொழிலை உடையனவாய்,                                                                                                                    
         இளையோர் முன் செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன --- இளைஞர்களின் முன்னிலையில் போரை முயன்று தனக்குள்ளே கோபிப்பனவாய், கோபித்துத் தங்குவனவாய்,

     களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன --– களவுத் தனமும், வஞ்சனையும் கொண்டு சுழன்று திரிவனவாய்,
   
         தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம் தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன --- தெனன தெந்தனம் தெனதென தெனதென என்ற ஒலியை எழுப்புகின்ற வண்டுகளை வெல்வனவாய், அந்த வண்டுகளைத் தன் அழகால் அடக்குவனவாய்,

     மருள் செய் கண்கள்  கொண்டு --- மயக்கத்தைச் செய்வனவாய் உள்ள கண்களைக் கொண்டு,

     அணைவர் தம் உயிரது திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ ---- தம்மைத் தழுவுபவர்களின்  உயிரையும் திருகிப் பறிக்கின்ற பொதுமாதர்களின் வசமாகி அழியும் தன்மையை ஒழிக்கமாட்டேனா?


பொழிப்புரை


         பொருந்திய தண்டையும், கிண்கிணியும், சிலம்பும் ஆகிய இவை கலின் கலின்  என்று ஒலிக்கும்படி, இரண்டு திருவடி மலர்களும் மிகவும் வருந்தி நடக்க, உருவமும் மிகவும் மாறி, வலிமையான சிங்கமும், கடியும், புலியும் வசிக்கின்ற வளமையான தினைப்பயிர் விளைகின்ற புனத்தில் பரண் மீது இருந்த வேடர்களின் குலக்கொடியாகிய வள்ளிநாயகியை ஒப்பற்ற திருவுள்ளத்தில் விரும்பி, அப் பிராட்டியின் அருகில் சென்று சேர்ந்து, அந்த வள்ளியம்மையின் நூறு இதழ்த்தாமரை போன்ற இரு திருவடிகளை வணங்கி, பலவித திருவிளையாடல்களில் மனம் மிகவும் மருட்சி அடைந்து, அவளை மகிழ்ச்சியுடன் தழுவியவரே!

         தேவர்களின் கூட்டமானது விண்ணுலகில் குடியேறவும், அசுரர்களின் கூட்டமானது நொடிப் பொழுதில் பொடிபட்டு அழியவும் போர் புரிந்து, திருவண்ணாமலையில் வந்து தெற்குத் திசையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         கரிய நிறத்தில் சிறந்தனவாய், விசாலமாக உள்ளனவாய், பேசுவது போல் பொலிவு உள்ளனவாய், மதன சாத்திரத்தில் கூறிய கடுமையும், கொடுமையும் உடையனவாய், காதில் உள்ள பொன் குண்டலத்தோடும் போர் செய்ய வருவன போல காதளவு நீண்டனவாய், குதிரை முகம் உடைய வடவைத் தீ படர்ந்துள்ள கடல் போல், நெருங்கி அடர்ந்து தொடர்கின்றனவாய், அக் கடலில் தோன்றிய நஞ்சு கலந்து ஒளிசெய்து கொப்புளிப்பனவாய், அம்பையும் நின்று நின்று எதிர்ப்பனவாய், முற்றின தொழிலை உடையனவாய், இளைஞர்களின் முன்னிலையில் போரை முயன்று தனக்குள்ளே கோபிப்பனவாய், கோபித்துத் தங்குவனவாய், களவுத் தனமும், வஞ்சனையும் கொண்டு சுழன்று திரிவனவாய், தெனன தெந்தனம் தெனதென தெனதென என்ற ஒலியை எழுப்புகின்ற வண்டுகளை வெல்வனவாய், அந்த வண்டுகளைத் தன் அழகால் அடக்குவனவாய், மயக்கத்தைச் செய்வனவாய் உள்ள கண்களைக் கொண்டு, தம்மைத் தழுவுபவர்களின்  உயிரையும் திருகிப் பறிக்கின்ற பொதுமாதர்களின் வசமாகி அழியும் தன்மையை ஒழிக்கமாட்டேனா?

விரிவுரை


இத் திருப்புகழின் முதல் நான்கு அடிகள், விலைமகளிரின் கண்களை மிகவும் அழகாகவும் திறமாகவும் வர்ணிக்கின்றன.

அகல்வன, புகல்வன; கடியன, கொடியன; பொருவன, வருவன; அடர்வன, தொடர்வன; ஒளிர்வன, மிளிர்வன; எதிர்வன, முதிர்வன; சிறுவன, உறுவன; சுழல்வன, உழல்வன; என்ற பதங்கள் வழி எதுகையாக அமைந்து அழகு செய்கின்றன.

செருவை முண்டகம் சிறுவன ---

செருவை மூண்டு அகம் சிறுவன. மூண்டு என்ற சொல்லும், சீறுவன என்ற சொல்லும் குறுகி நின்றன.

பின்னே உள்ள மூன்று அடிகள் வள்ளி பிராட்டியிடம் முருகன் செய்த கருணைத் திறத்தை விளக்குகின்றன.

இருசரண் மலர்கள் நொந்து நொந்து அடியிட ---

வேதாகமங்கட்கும், இருடியர்க்கும், இமையவர்க்கும் எட்டாத எம்பிரானுடைய சரண மலர்கள், கல்லும், முள்ளும் நிறைந்த கானகத்தில் வருந்தி நடந்து சென்றன.  இது பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு முருகன் புரியும் கருணைத் திறமாகும்.

வடிவமும் மிக வேறாய் ---

வள்ளியை ஆட்கொள்ள முருகன், ஆறுமுகம் மாறு முகமாகி, சிவந்த மேனி, கரிய மேனியாகி, வேடர் குலக் காளையாகவும், வளையல் செட்டியாகவும், வேங்கை மரமாகியும், முதிய தவமுனிவராகியும் நின்று அவரிடம் புரிந்த ஆடல்.

அவள் சிறுபதயுக சததளம் பணிந்து ---

வள்ளியை முருகன் பணிந்தான் என்று கூறும் இப் பகுதி, அடியவர்க்கு எளியனாம் கருணைத் திறத்தைக் குறிக்கின்றது.

பணியாஎன வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே       ---   கந்தர் அநுபூதி.

அமரர் சங்கமும் குடிபுக ---

சூரபன்மனுடைய புதல்வன் பானுகோபன்.  இந்திரனுடைய புதல்வன் ஜயந்தனையும், தேவர்களையும், தேவமாதர்களையும் சிறைசெய்து, இந்திரனுடைய தலைநகரமாகிய அமராவதி நகரை தீக்கு இரையாக்கினான்.

முருகப்பெருமான் சூராதி அவுணர்களை அழித்து, தேவர்களைச் சிறை மீட்டு, இந்திர உலகைப் புதுப்பித்து, அமரர்களைத் தங்கள் நகரில் பண்டுபோல் சுகித்து வாழக் குடியேற்றி அருள் புரிந்தார்.

அருணை வந்து தென்திசைதனில் உறைதரு ---

திருவண்ணாமலையில் தெற்கு வீதியில் உள்ள குமரர் கோயில் என்ற ஆலயத்திற்கு உரியது இத் திருப்புகழ்.

கருத்துரை

அருணை மேவும் அண்ணலே, மாதர் வசமுறாது அடியேனை ஆண்டு அருள்வாய்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...