"கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேடவேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!"
பதவுரை --
கருமங்கள் - (செய்யத் தக்க) காரியங்களை, கருதாமல் - (செய்யும் வழியை) எண்ணாமல், முடிக்க வேண்டாம் - முடிக்க முயலாதே.
அழிவு கணக்கை - பொய்க் கணக்கை, ஒருநாளும் - ஒருபொழுதும், பேச வேண்டாம் - பேசாதே.
பொருவார் - போர் செய்வாருடைய, போர்க்களத்தில்- போர் (நடக்கும்) இடத்திலே, போக வேண்டாம் - போகாதே.
பொது நிலத்தில் - பொதுவாகிய இடத்தில், ஒருநாளும் - ஒரு பொழுதும், இருக்க வேண்டாம் - (குடி) இராதே.
இருதாரம் - இரு மனைவியரை, ஒருநாளும் - ஒருபொழுதும், தேடவேண்டாம் - தேடிக் கொள்ளாதே.
எளியாரை - ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் - பகைத்துக் கொள்ளாதே.
குருகு - பறவைகள், ஆரும் - நிறைந்த, புனம் - தினைப்புனத்தை, காக்கும் - காத்த, ஏழை - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - குமரவேளின், பாதத்தை - திருவடியை, நெஞ்சே - மனமே, கூறாய் - புகழ்வாய்.
பொழிப்புரை --
செய்யப்படும் காரியங்களை முடிக்கும் வழியை ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தை அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராயாமல் செய்தல் கூடாது என்பதும் ஆகும். "எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்னும் திருக்குறளை இங்கு வைத்து எண்ணுக.
பொய்க்கணக்குக் கூறுதல் கூடாது. பொய்யானது நிலைபெறாது. எனவே, அது "அழிவு" என்று சொல்லப்பட்டது.
பிறர் போர் (சண்டை) செய்யும் இடத்தில் குறுக்கே செல்லலாகாது. வீணாகப் போரிலே (சண்டையிலே) கலந்து கொள்ளவும் கூடாது.
பலர்க்கும் உரிய பொது நிலத்தில் குடியிருத்தல் கூடாது.
பொது நிலம் - மந்தை, சாவடி முதலியன. பொது இடத்தில் பலரும் வருவார்கள். ஆகையால் அங்கே குடியிருப்பின் துன்பம் உண்டாகும் என்க. (இக் காலத்தில் பொது இடத்தைத் தனக்கு உரியதாக்கிக் கொள்வோரையே பெரிய மனிதர் என்று கருதுமாறு ஆகிவிட்டது. கலியின் கொடுமை)
இரண்டு மனைவியரை மணந்து கொள்ளல் கூடாது. இரு மனைவியரைக் கொண்டால் பெரும்பாலும் அவர்களுக்குள் போராட்டம் உண்டாகும். ஆதலின் தனக்குத் துன்பமேயன்றி இன்பம் இராது. தாரம் - மனைவி.
ஏழைகளிடத்துப் பகைத்தல் கூடாது. எளியார்- இடம் பொருள் ஏவல் இல்லார், எதிர் - பகை. மறுமையில் நரகத்திற்கு ஏது ஆகும். எனவே, "எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்" என்றார்.
"வலியார் முன் தன்னை நினைக்க, தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து"
என்னும் திருக்குறள் கருத்து இங்கு வைத்து எண்ணத் தக்கது.
"முடவனை மூர்க்கன் கொன்றால்,
மூர்க்கனை முனிதான் கொல்லும்;
மடவனை வலியான் கொன்றால்,
மறலிதான் அவனைக் கொல்லும்;
தடவரை முலைமாதே! இத்
தரணியில் செருக்கினாலே,
மடவனை அடித்த கோலும்
வலியனை அடிக்கும் கண்டாய்." -- விவேக சிந்தாமணி.
இதன் பொருள் ---
தடவரை முலைமாதே - விசாலமாகிய மலை போன்ற முலைகளை உடைய அழகிய பெண்ணே! இத் தரணியில் - இந்த உலகத்தில், முடவனை மூர்க்கன் கொன்றால் - கைகள் கால்கள் முதலியன முடங்கிச் செயல்பாடு இழந்த ஒருவனை முரடன் ஒருவன் கொன்றான் ஆனால், மூர்க்கனை முனிதான் கொல்லும் - இந்த முரடனை அவனிலும் வலிமை பொருந்திய ஒருவன் (அல்லது பேய் அல்லது கடவுள்) பின் ஒரு காலத்தில் கொல்லுவான். மடவனை வலியான் கொன்றால் - அறிவு அற்ற ஓர் ஏழையை, வலிமை பொருந்திய ஒருவன் கொன்றான் ஆனால், மறலி தான் அவனைக் கொல்லும் - அவனை எமன் ஒரு காலத்தில் கொல்லுவான். செருக்கினாலே மடவனை அடித்த கோலும் - செல்வச் செருக்கு காரணமாக, ஏழை ஒருவனை வலியவன் ஒருவன் தனது கைக் கொண்டு அடித்த கோல் ஆனது, வலியனை அடிக்கும் கண்டாய் - பின் ஒரு காலத்தில் அவனிலும் வலியவன் ஒருவன் கையில் அந்தக் கோல் வந்து பொருந்தி, முன்னே ஏழையை அடித்த வலியவனை அடிக்கும் என்று உலகின் நிகழ்வைக் கண்கூடாகக் கண்டு கொள்வாய்.
தான் வலியவனே ஆனாலும், தன்னிலும் மெலியவரைத் துன்புறுத்தக் கூடாது. செய்தால், வேறு ஒருவரால் அத் துன்பம் வந்து பின்னர் அடையும்.
No comments:
Post a Comment