"கொங்கையில் லாதவட் கெத்தனைப் பணியுடைமை
கூடினும் பெண்மையில்லை;
கூறுநிறை கல்வியில் லாமலெத் தனைகவிதை
கூறினும் புலமையில்லை;
சங்கையில் லாதவர்க் கெத்தனை விவேகம்
தரிக்கினும் கனதையில்லை;
சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்யிலாச்
சாதமும் திருத்தியில்லை;
பங்கயம் இலாமல்எத் தனைமலர்கள் வாவியில்
பாரித்தும் மேன்மையில்லை;
பத்தியில் லாமல்வெகு நியமமாய் அர்ச்சனைகள்
பண்ணினும் பூசையில்லை;
மங்கையர் இலாமனைக் கெத்தனை அருஞ்செல்வம்
வரினும்இல் வாழ்க்கையில்லை;
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
கொங்கை இல்லாதவட்கு எத்தனைப் பணி உடைமை கூடினும் பெண்மை இல்லை - கொங்கையில்லாத பெண்ணுக்கு எவ்வளவு அணிகளும் ஆடைகளும் இருந்தாலும் பெண்மையின் அழகு வராது.
கூறும் நிறைகல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை - புகழத் தக்க நிறைந்த கல்வி இல்லாமல் எவ்வளவு செய்யுள் இயற்றினாலும் புலமையாகாது;
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை - நாணம் இல்லாதவர்களுக்கு எத்துணை அறிவிருப்பினும் பெருமை உண்டாகாது;
சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்யிலாச் சாதமும் திருத்தி இல்லை - அறுசுவைக் கறிகள் இருந்தாலும், நெய் இல்லாத உணவு மனநிறைவு தராது;
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை - தாமரைமலர் இல்லாமல் வேறு எத்துணைப் பூக்கள் பொய்கையில் நிறைந்தாலும் உயர்வு இல்லை;
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை - அன்பின்றி மிக ஒழுங்காக மலரிட்டு வணங்கினாலும் வழிபாடாகாது;
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அருஞ்செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை - மனைவியர் இல்லாத இல்லத்திற்கு எவ்வளவு அரிய செல்வம் வந்தாலும் இல்லறம் ஆகாது.
எப்பொருளும் அதனைச் சிறப்பிக்கக் கூடிய ஒன்று இல்லாவிடின் மேன்மை இல்லை என்பது இப்பாடலின் கருத்து.
விளக்கம் ---
"சந்திரன் இல்லா வானம்,
தாமரை இல்லாப் பொய்கை,
மந்திரி இல்லா வேந்தன்,
மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத்
தொல்சபை, சுதர்இல் வாழ்வு,
தந்திகள் இல்லா வீணை,
தனம் இலா மங்கை போல் ஆம்."
என்பது விவேக சிந்தாமணி.
சந்திரன் ஒளி இல்லாத வானம் அழகற்றது. தாமரை மலர் இல்லாத குளம் அழகற்றது. நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிவுறுத்தும் நல்லறிவு படைத்த அமைச்சர் இல்லாத அரசன் பயன்றறவன். மதம் பொருந்திய யானைகள் இல்லாத சேனை முழுமை பெறாது. சிறந்த புலவர்கள் இல்லாத பழமையான சபை பொலிவு பெறாது. நல்ல மக்கள் பேறு இல்லாத வாழ்வு பயனற்றது. இசையை மீட்டுவதற்கு உரிய நரம்புகள் இல்லாத வீணை பயனற்றது. இவை போலவே, பெண்மை இன்பத்தை விழையும் கொங்கைகள் இல்லாத மங்கையும் பயனற்றவள் ஆவாள். "கல்லாதான் சொல் காமுறுதல், முலை இரண்டும் இல்லாதாள் தமியள் மூத்து அற்று" என்பது திருக்குறள். நூல்களைக் கல்லாத ஒருவன் கற்றவர் அவையில் சொல்லுதலை விரும்புதல், கொங்கைகள் இரண்டும் இல்லாதவள் ஒருத்தி, பெண்மை நலத்தை விரும்புதலைப் போன்றது என்பது இதன் கருத்து.
கனதை - பெருமை. ச்சுவை - அறுசுவை. திருத்தி - மனநிறைவு. "நெய் இல்லா உண்டி பாழ்" என்னும் ஔவையின் அருள்வாக்கை எண்ணுக.
இறை வழிபாடு என்பது உள்ளத்தில் அன்போடு, மனம் ஒன்றிச் செய்தல் வேண்டும். இல்லையேல் அது பயனற்றதே.
"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்துஒன்று எண்ண,
பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்
மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க, விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய், வினை தீர்த்தவனே."
என்கிறார் பட்டினத்து அடிகளார்.
"அடியவர்களின் இருவினைகளை எப்படியாவது களைந்து, அவர்களைப் பேரானந்தப் பெருவாழ்வில் வைக்கும் பெருமானே, அடியேனுடைய கையானது ஒரு செயலைச் செய்ய, கண்ணானது ஒரு பொருளை நாட, பொய் பொருந்திய வஞ்சகமே வடிவான என்னுடைய நாக்கு ஒன்றைப் பேச, புலால் நாற்றம் வீசுகின்ற எனது உடம்பு ஒன்றை அடைய, காது ஒரு செய்தியைக் கேட்க விரும்ப, இந்த நிலையிலே நான் செய்கின்ற பூசையை நீ எவ்வாறு ஏற்றுக் கொள்ளுவாய்" என்பது இப் பாடலின் பொருள்.
ஐம்புலன்களும் போன வழியிலேயே மனமும் போய்க் கொண்டு இருக்கின்றது. அதனால் படும் பாட்டையும் ஆன்மா அநுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அந்தப் பாட்டைப் போக்கிக்கொள்ள ஒரு துணையையும் தேடுகின்றது. வந்த துணையெல்லாம் எண்ணியபடி இல்லை. இறைவனே துணை என்று முடிவில் துணிந்து நிற்கின்றது. அப்போது, உள்ளம் உருகுகின்றது. அந்த உருக்கத்தால் வழிபாடு செய்ய முனைகின்றது. அதவும் பயன் கருதியே என்பதால், பயன் அடைந்தவுடன், மனமானது வேறு விஷயங்களில் புகுகின்றது. மனம் ஒரு முகப்படவில்லை. மனம் ஒருமுகப் படாதபோது, ஐம்புலன்களின் வழியே செல்லுகின்றது. அதனால், கை ஒரு வேலையைச் செய்யவும், கண் ஒரு பொருளைப் பார்க்கவும், மனதிலே ஒரு கருத்து இருக்கவும், நாக்கு ஒன்று பேசவும், உடம்பு ஒன்றை விரும்பவும், காது ஒன்றைக் கேட்கவும் செய்து கொண்டே அரைகுறை பூசையை ஆற்றுகின்றது. இதனை எப்படிப் பெருமான் ஏற்றுக் கொள்வான் என்ற ஐயமும் அதே நேரத்தில் பிறக்கின்றது.
"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை" என்பதைக் காட்டி பின்வருமாறு ஒரு பாடலை மூதுரை என்னும் நூலில் ஔவையார் பாடி உள்ளார்.
"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை,
இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்."
இதன் பொருள் ---
நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. மனையாள் இல்லாமல் போனாலோ, மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.
நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும்.
திருமந்திரம் என்னும் நூலும் இந்த உலகியல் முறையையே காட்டி, திருவருட் சத்தியின் அருளைப் பெறுகின்ற பேற்றினைப் பற்றிப் பேசுகின்றது.
"கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே." --- திருமந்திரம்.
இதன் பொழிப்புரை ---
சிவனது விளக்கமாம் சத்திகளையும், அவள்வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதார பங்கயங்களிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்றது.
கூத்தனார் ஒளியினைக் கொண்டு அங்கு எழுந்தருளி இருக்கும் திருவருள் அம்மையை அகத்தவம் உடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருள் அம்மையாகிய சிவகாமியாரும் கலந்த கலப்பால் உலகு உடல் பொருள்கள் எல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மைச் செந்தமிழ்த் திரு நான்மறைகளெல்லாம் அம்மையின் அடியிணையை எங்கணும் தேடுகின்றன. அத்தகைய அம்மை என் உள்ளத்தைக் குடியிருப்பாகக்கொண்டு என்னை ஆண்டருளினள் என்க.
"இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை,
இல் அடைந்தானுக்க் இரப்பது தான் இல்லை,
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்,
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்ஆன்ஐயே." --- திருமந்திரம்.
இதன் பொழிப்புரை ---
இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணைவியைப் பெற்றால், அவளுக்கே அன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. எல்லா நன்மைகளும் குறைவின்றி உளவாம். அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராகார். ஆதலின், `இல்லாதது` என்பது யாதும் இல்லாதவனாகிய சிவனையே அவனுக்கு உவமிக்க.
பராசத்தியைத் தன் உடம்பினுள் குடிகொள்ளப் பெற்றவனுக்கு, இல்லாத செல்வம் இல்லை. அவன் இறப்பது இல்லை. அவனுக்கும் தேவரும் நிகர் ஆவார். அவனிடம் சிவம் இல்லாதது இல்லை.
என்றும் நிலைத்த மாறாத இல்லாகிய திருவருள் அம்மையின் திருவடியைப் பெற்றவர் இல் அடைந்தார் ஆவர். அத்தகைய திருவடியாகிய இல்லத்தை அடைந்தார் யாண்டும் எவரிடத்தும் ஒன்றினையும் இரவார். அத்தகையோர்க்கு விண்ணாட்டில் வாழும் வினைப்பயன் சேர் இமையவரும் ஒப்பாகார்; தாழ்ந்தவரே ஆவர். அவர்கட்குக் கிடைத்தற்கரிய பொருள் என்று ஏதும் இல்லை. அதற்குக் காரணம், அவர்கள் புகலிடமாக ஆருயிர்க்குத் தலைவனாம் சிவபெருமானையே கொண்டிருத்தலான் என்க.
No comments:
Post a Comment