கடவுள் இல்லை என்பதும் ஒரு மதமே
-----
மதம் என்னும் சொல்லுக்கு, கருத்து, கொள்கை, அறிவு, போதனை, பெற்றதைப் பெரிதாக மதிப்பது என்ற பொருள்கள் உண்டு. கருதுவது கருத்து, கொள்ளுவது கொள்கை, அறிவது அறிவு, போதிப்பது போதனை ஆகும்.
உலகில் பலவகையான மதங்கள் உண்டு. நமது தமிழகத்திலும் பலவகையான மதங்கள் இருந்தன. அவைகளின் கொள்கை வேறு வேறாக இருந்தது. கொள்கைகளால் பிணங்குவது மதவாதிகளின் இயல்பு. எனவேதானே, "சமயவாதகிள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த சமயவாதிகளைப் பார்த்து, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூல நாயனார். சமயகோடிக் எல்லாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது" என்று தாயுமான அடிகளாரும், "பேர் உற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம் பேய்ப்பிடிப்பு உற்ற, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது, உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும் போர் உற்று இறந்து வீண் போயினார்" என்று வள்ளல்பெருமானும் கூறி அருளினர்.
எனவே, வாதம் புரிந்து, உண்மைப் பொருஉளை உணராமல், வாழ்நாளை வீணாக்குதல் கூடாது. சமயங்களின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அப்பர் பெருமானுக்கு அவ்வாறு உணர்ந்து கொள்ளத் திருவருள் வாய்க்காமையால், சைவத்தை விடுத்து சமணத்தைச் சார்ந்தார். "சமயங்கள் ஆனவற்றின் நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால், கொல்லாமை மறைந்து உறையும் அமண் ணமயம் குறுகினார்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். மணிமேகலை மாதவன் வடிவத்தில் வஞ்சி நகரில் இருந்து, பல்வகைச் சமய வாதிகளையும் கண்டு, அவரவர் கடைப்பிடியாகக் கொண்டு உள்ள சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி, அவரிடத்தில் சென்று, அளவைவாதி முதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரையும் கேட்க, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை உரைத்தனர் என்று மணிமேகலைக் காப்பியத்தில் "சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை" மூலமாக அறியக் கிடக்கிறது. சமயச்சார்பு உடையவர்களிடத்தில் இந்த மனப்பாங்கு அமையாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ளும் வேட்கை உடையோர்க்கே இந்த நிலை வாய்க்கும்.
"பூதவாதம்" என்னும் சமயம் "பொருள்முதல் வாதம்" என்றும் "உலகாயதம்" என்றும் சொல்லப்படும். இந்த நாத்திகவாதம் என்பதும் ஒரு மதமாகவே இருந்தது. அது இப்போது உருவானது அல்ல என்பதை அறிதல் வேண்டும்.
பூதவாதி தமது கருத்தைச் சொன்னதாக "மணிமேலை" என்னும் காப்பியத்தில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது
"தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு,
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும், பறை ஓசையில்கெடும்"
இதன் பொருள் ---
ஆத்திப் பூவையும் கருப்புக் (வெல்லக்) கட்டியையும் கூட்டி, வேறு பிற பொருள்களையும் கலந்தபோது, களிப்பினை உண்டாக்குகின்ற கள் உண்டானது போல, பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும். அவ்வாறு தோன்றிய உணர்வும், அந்த அந்தப் பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குமிடத்து, வேறுவேறாகப் பிரிந்து, பறையில் எழுந்த ஒசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் பூதமுதலொடு ஒன்றிவிடும்.
ஆத்திப் பூவினோடு பிற பொருள்களைக் கலந்தால், கள் உண்டாகும், அதனால் களிப்பு உண்டாகும் என்றது, பூதங்களின் கூட்டுறவால் உணர்வு பிறக்கும் என்பது உலகாயதர் கொள்கை. மேலும் காண்க.
"உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்,
உயிர் இல்லாத உணர்வுஇல் பூதமும்,
அவ்வப் பூத வழி அவை பிறக்கும்,
மெய்வகை இதுவே; வேறுஉரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே;
கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்,
இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே,
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்"
இதன் பொருள் ---
உயிர்த் தோற்றத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வுடைய பூதக் கூறும், உடம்பின் ஆக்கத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத அப்பூதக் கூறுகள், அவ்வப் பூதங்களின் வழியாகவே தோன்றும். உண்மைநெறி இதுவே ஆகும். இவற்றின் வேறாகக் கூறப்படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு கூறுவனவே ஆகும். காட்சி அளவை அல்லது, வேறே கருத்து முதலியன நிலைபெறாமையின் அவற்றைக் கொள்ளவில்லை. இவ்வாழ்வும் இவ்வாழ்வில் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிந்து போவன. மறுபிறப்பு உண்டு என்றும், இப்பிறப்பில் செய்யப்படும் வினைப் பயனை மறுபிறப்பில் அனுபவித்தல் வேண்டும் என்றும் கூறுவது பொய் (என்று பூதவாதி கூறினானாக).
எனவே, கடவுள் இல்லை என்று சொல்வதும் ஒருவகைச் சமயமே ஆகும். இதற்கு "சார்வாகம்" என்று ஒரு பெயரும் உண்டு. இது நாத்திக வாதம் ஆகும். கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள், உலகாயதர்கள். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க மறுக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்கின்றனர். அது எது போல என்றால், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால், அவற்றிற்கு வேறாகிய ஓர் உணர்வு உண்டு என்றும், அந்த உணர்ச்சியானது உடம்பு வளருந்தோறும் வளர்ந்து, தேயும்தோறும் தேய்ந்து போவது என்பது.
உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர் கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய். இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.
இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடுவிடம்" என்றார் மணிவாசகப் பெருமான்.
மேலும், இவ்விதம் கூறிய நான்கு பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதவர்கள், மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர். அல்லாமலும், பொன் தானம், நிலத் தானம், உணவுத் தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம் முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச் செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு இல்லாமலும், தங்களின் பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம் விட்டுவிட்டு, மனம் விரும்பும் உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.
ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர்.
இன்னும் பிற வாதங்களும் உண்டு. நான் என்னும் புத்திக்கு விடயமாய் இருப்பது ஆன்மா. நான் மனிதன், நான் பார்ப்பான், நான் பருத்தேன், நான் இளைத்தேன் என்னும் அனுபவத்தினால், தேகத்திலேயே நான் என்னும் புத்தி உண்டாவதால், தேகமே ஆன்மா. ஆபத்து நேர்ந்த போது தேகத்திலேயே அபிமானம் உண்டாவதால், அதைவிடப் பிரியமான பொருள் வேறு இல்லை. தேகத்தில் உள்ள விருப்பத்தின் பொருட்டே, பிறரிடத்து விருப்பம் உண்டாகின்றது. எனவே, உடம்பைக் காப்பாற்றுதல், அலங்கரித்தல் முதலியனவே புருஷார்த்தங்கள். ஆகாயம், ஊழ், கடவுள், பிறவி என்பது இல்லை. பூதங்களில் கூட்டுறவால் உண்டாவது உடம்பு. இதன் மரணமே மோட்சம். இது தேகான்மவாதியின் மதம். காணப்படும் இந்த உடம்பு இந்திரியங்கள் இருந்தால் இருக்கின்றது. இல்லாவிட்டால் செத்துப் போகின்றது. எனவே, உடலுக்கு வேறாக உள்ள, இந்திரியமே ஆன்மா என்பது இந்திரியான்மவாதியின் மதம். பிராணவாயு இருந்தால் இந்த உடம்பு இருக்கின்றது. அது நீங்கிப் போனால் அழிகின்றது. எனவே, உடம்பு நிலைத்து இருக்கக் காரணமான பிராணனே ஆன்மா என்பது பிராணான்மவாதியின் மதம். பிராணனுக்கு உணர்ச்சி இல்லை. மனமே ஆன்மா என்பது மனவான்மவாதியின் மதம். மனமானது புத்தியின் வசமாய் இருக்கின்றது. புத்தியின் ஆகாரமே மனம். ஆதலால், புத்தியே ஆன்மா என்பது புத்தியான்மவாதி மதம்.
அவை எல்லாம் உண்மை அல்ல. மனத் தூய்மைக்கு அவை வழி வகுக்காது. கயமைத் தனத்திற்கே காரணம் ஆகும் என்பதால், கடவுள் இல்லை என்று கூறுபவர்களின் கூட்டுறவு உண்டாகாதபடி காத்து அருள் புரியுமாறு, தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் மீது வள்ளல்பெருமான் பின்வருமாறு பாடினார்.
"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
பசுஏது, பாசம்ஏது,
பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
மனம்விரும்பு உணவு உண்டு, நல்
வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாது அருள்,
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!"
இதன் பொருள் ---
மேன்மை பொருந்திய சென்னைக் கந்தகோட்டத்தில் எழுந்தருளும் கந்தவேளே! தூய மணிகளுள் சைவமணியாம் சண்முகத் தெய்வ மணியே! பரம் என்பது யாது? வினையாவது யாது? வினையின் பயன் என்பது யாது? பதி, பசு, பாசம் என்பன யாவை? பத்தி ஆவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது? அருள் என்பது யாது? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை. மனம் ஆசைப்படுகின்ற உணவை உண்டு, நல்ல ஆடை உடுத்து, இளமகளிரை நாடி அடைந்து, மணம் வீசும் பூக்களைச் சூடிப் பல்வகையாக விளையாடி, கைகளை அம்மகளிர் மேல் செலுத்தி அவர்களுடைய முலைகளைப் பற்றி, உடம்போடு உடம்பு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம். இதுவே வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாதவாறு அருள் புரிவாயாக.
உலோகாயதன் சமய நடை எப்படிப்பட்டது என்பதை தாயுமான அடிகளார் கூறுமாறு காண்க. நடை என்பதன் பொருள் ஒழுக்கம் ஆகும்.
"மின்அனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு
விழிகொண்டு மையல்பூட்டும்
மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட
மேல்வீடு சொர்க்கம் என்றும்,
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்
பொய்வேடம் மிகுதிகாட்டி,
பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்
போக்கிலே போகவிட்டு,
தன்நிகர் இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,
தரணிமிசை உலோகாயதன்
சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த
சமரச சிவாநுபூதி
மன்ன, ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்
வாழ்வித்த ஞானகுருவே!
மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்
மரபில்வரு மௌனகுருவே."
இதன் பொருள் ---
தோன்றி நெடிது நிற்பதுபோலக் காட்டி விரைய மறையும் தன்மை வாய்ந்த மின்னலுக்கு ஒப்பான, நிலையில்லாத பொய்யுடலை அழியாது என்றும், நிலைநிற்பது என்று மைதீ ட்டப்பட்ட கண்களைக் கொண்டு காமுகர்களை மயக்கவலையில் விழும்படி செய்யும் பெண்ணியலார் இன்பமே நிலையான பேரின்பம் என்றும், அப் பெண்களோடு கூடிப் பகட்டாய் வாழ்வதற்கு அமைக்கப்பட்ட மாடமாளிகை, மேல்வீடு நிலாமுற்றம் முதலிய பல டமைந்த வளமையான மனையே கிடைத்தற்கரிய இன்ப ஒளியுலகம் என்றும், இன்பத்திற்கு ஏதுவாகிய பொன்னையும், அப் பொன்னால் தேடப்படும் பண்டங்களாகிய பொருள்களையும் அழியாது வளர்ந்து பெருகும் நிலைப்பொருள் என்றும் மிகவிரும்பி, தமது புன்மையான பொய்க்கோலத்தின் மிகுதிப்பாட்டை மேற்கொள்ள வெளிப்படுத்தி, காம மயக்கில் விட்டில் பூச்சி என வீழ்ந்த ஆடவர் தங்கட்கு இன்றியமையாத பொறுமையும், சிறந்த அறிவும்ன, செருக்கு அற்று நான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீங்குதலாகிய துறவும், வாழ்வில் பெறத்தக்க ஊதியமாகிய ஈகை முதலிய நற்பண்புகளும் சிறிதும் வந்து பொருந்த இடங்கொடாது மனம்போன போக்கிலே போகவிட்டு, தனக்குத் தானே இணையான உலோபத் தன்மை எனப்படும் பொருட்பற்று ஆகிய பாழான பேய் பிடித்யது ஆட்ட ஆடிட்ட, இவ்வுலகில் உலகாயதனுடைய சமயக் கட்டில் சாராமல் மறை முடிபும் என்னும் வேதாந்தம், திருமுறை முடிபு என்னும் சித்தாந்தம் ஆகியவற்றின் ஒருங்கியைந்த சிவனடிப் பேரின்பத் துய்ப்பு என்னும் நிலைபெற, ஒப்பில்லாத உபதேசம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு அடியேனைத் தடுத்தாட்கொணடு இறவா இன்ப) அன்பினால் ஆட்கொண்டு நிலையான வாழ்வில் வாழ்வித்தருளிய குருநாதரே! (வேதாந்தம் - மறை முடிபு. சித்தாந்தம் - முறை முடிபு. சமரசம் - இயைபு.)
உலகாயதர் கொள்கை பற்றிப் பின்னும் அறியலாம்.
"மதிநிலா நுதலாரோடு மணிநிலா முன்றில் ஏறி
முதிர்நிலா எறிப்ப, செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப, மொய்த்த
கதிர்நிலா வடங்கொள் கொங்கை, கண்கள், மார்பு அகல மூழ்கும்
புது நிலாவிய நன்போகம் விடுவர் புன்சமயத்தோரே." --- சிவஞானசித்தியார், பரபக்கம்.
இதன் பொருள் ---
பூரண நிலவு போல விளங்கும் நெற்றியினை உடைய மாதரோடும் கூடி, ஒளியை உடைய முற்றத்தில் சென்று ஏறி, பூரணச் சந்திரன் ஒளிவிட்டு விளங்க, அவரது சிவந்த வாயில் புன்சிரிப்புத் தோன்ற, செறிந்த ஒளிமிக்க முத்துவடத்தைத் தாங்கிய முலைக்கண்கள் தமது மார்பகலத்தே மூழ்கும்படி அழுந்தி அனுபவித்துல, நாள்தோறும் புதுமை தங்கிய நல்ல அனுபோகத்தைக் கைவிடுவர் புன்மையான சமயநெறியினைச் சார்ந்தோர்.
"ஊடுவது, உணர்வது, உற்ற கலவி மங்கையரை உள்கி
வாடுவது, அடியில் வீழ்ந்து வருந்துவது, அருந்தவம்; பின்
கூடுவது உணர்வு கெட்டுக் குணம் எ(ல்)லாம் வேட்கையே ஆய்
நீடுவது இன்ப முத்தி; இத்தில் நின்றார்கள் முத்தர்." --- சிவஞானசித்தியார், பரபக்கம்
இதன் பொருள் ---
புதிதாகக் கூடிக் கலவியில் மாதரை நினைத்து அவர்கள் தம்முடன் ஊடுவதானால் அவரை ஊடல் தீர்ப்பது பொருட்டாக உள்ளம் தளர்தலும், அவர்கள் காலடிகளில் வீழ்ந்து வருந்துதலுமே அரிதாகச் செய்யுலம் தவம் ஆகும். அப்படித் தவத்தில் நின்றபின், அம்மகளிரோடு தன் அறிவு கெட்டுக் கூடுவது முத்தி ஆகும். இந்திரியங்கள் எல்லாம் ஒருமைப்பட விருப்பம் நிலைப் பெறுவது முத்தி இன்பம் ஆகும். இவ்வழியில் நின்றவர்களே முத்தராவர்.
உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா என்றும், மடவார் மயலாலே அந்த வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் இத் திருப்புகழில் அறிவுறுத்துமாறு காண்க.
"விழு தாது எனவே கருதாது, உடலை
வினை சேர்வதுவே ...... புரி தாக,
விருதாவினிலே உலகாயதம் மேல்
இடவே, மடவார் ...... மயலாலே,
அழுது ஆ கெடவே, அவம் ஆகிட, நாள்
அடைவே கழியாது, ...... உனை ஓதி
அலர் தாள் அடியேன் உறவாய் மருவ,
ஓர் அழியா வரமே ...... தருவாயே."
இதன் பொருள் ---
விழுகின்ற தாது (சுக்கிலம்) தான் இந்த உடல் என்று கருதாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விருப்பம் கொண்டு, வீணாக (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் அறிவு மேலிட, பெண்களின் மேல் ஆசைமயக்கத்தால் அவநிலையை அடைந்து கெட்டுப் போகும்படியாக, வாழ்நாள் முழுவதும் கழிந்து போகாமல், தேவரீரது திருப்புகழை ஓதித் துதித்து, அன்றலர்ந்த தாமரை போன்ற உமது திருவடிகளே எனக்கு உறவாகக் கலந்து இருக்க, ஒப்பற்ற அழியா வரத்தினைத் தந்து அருள்வாயாக.
உலோகாயதன் நிலை குறித்து அருணகிரிநாதர் மேலும் ஒரு திருப்புகழில் கூறுவதும் காண்க.
"இலகிய வேலோ? சேலோ? ஒளிவிடு வாளோ? போதோ?
எமன்விடு தூதோ? மானோ? ...... விடம் ஈதோ?
என விழி கூறா வாரா அரிவையர், தோள் ஊடு ஆடா
இறுதியில் வேறாய், மாறா ...... நினைவாலே,
பலபல கோளாய், மாலாய் உழலும் அதானால், வீணே
படிறு சொல் ஆகா, உலோகா ...... யதன் ஆகி,
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே,
பணி தியில் மூழ்கா, மாயா ...... விடுவேனோ?"
இதன் பொருள் ---
விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக் கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி யாருக்கும் ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ?
மணிவாசகப் பெருமானும் இதனைத் தமது திருவாசகத்தில் பின்வருமாறு காட்டினார்...
"மிண்டிய மாய வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து
உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்
கலாபே தத்த கடுவிடம் எய்தி,"
முன்னர்க் குறிப்பிட்டது போல, உலோகாயதம் என்பது, காட்சியே அளவை என்றும், பூதங்கள் நான்கே என்றும், உடம்பே ஆன்மா என்றும், மறுபிறவியும் கடவுளும் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்கள் என்றும் சொல்லும் மதம். பாம்பு ஒளி உடையது. ஆனால், விடத்தைக் கொண்டது. உலோகாயதம் கவர்ச்சி உடையது. ஆனால், தீமையுடையது. விடம் இம்மையில் தீமை புரிவது. உலோகாயத மதம் இம்மை மறுமை இரண்டிலும் தீமை புரிவது. அதனால் உலோகாயத மதத்தைப் "பாம்பு" என்றும், அதன் பயனைக் "கடுவிடம்" என்றும் கூறினார்.
எனவே, நாத்திக வாதமும் ஒரு மதமாகவே இயங்கி வந்தது, இயங்கி வருகிறது. இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கின்றான், புறத்திலும் இருக்கின்றான் என்று கொள்வோருக்கு அவரவர் உள்ளத்திலும், புறத்திலும் இருக்கின்றான். உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்பாருக்கும் அப்படியே இல்லாத பொருளாகே மறைந்து பின்னர் விளங்குவான்.
இல்லை என்பதன் உண்மைப் பொருள், உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனால் பெறக்கூடிய நன்மை ஏதும் இல்லை என்பதே.
"உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் எம்இறை;
உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை தானே." --- திருமூலர்.
இல்லை என்று ஆகிவிட்ட ஒரு பொருளை இல்லை என்று நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. உள்ளது என்று சொல்லுகின்ற பொருளைத் தான் இல்லை என்று மறுக்கின்ற வாதம் எழும். "உள்ளது போகாது, இல்லது வாராது" என்பது சற்காரிய வாதம். நாத்திகவாதம் என்னும் மதச் சார்பும் ஒருவகை மதச்சார்பே ஆகும். மதச்சார்பு இன்மை என்பது, தாம் கொண்ட கொள்கையைப் பிறர் மீது திணிக்காமல் இருப்பதும், பிறரையும் தம்மைப் போல மனிதர்தாம் என மதித்து அன்பு செய்து, அவரது கொள்கைக்கும் மதிப்புத் தருவதும் ஆகும்.