கொடைப் பண்பு

 


கொடை என்னும் பண்பு

-----

 

     எத்தனையோ பண்புகளை நாம் கேள்விப்பட்டது உண்டுகொடையும் ஒரு பண்பா?’ என்று கேட்டால்ஆம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னார் இனியார் என்று பாராமல்வேண்டினவர்கட்கு எல்லாம் வேண்டினவற்றை வாரி வழங்குவதே கொடை என்று கூறப்பெறும்.


"சித்திரமும் கைப்பழக்கம்;செந்தமிழும் நாப்பழக்கம்;
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்;- நித்தம்
நடையும் நடைப்பழக்கம்;நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்."              ---ஔவையார்.


      சித்திரம் எழுதும் ஆற்றல் வேண்டுமானால்நாளும் கைப் பழக்கத்தால் அமைந்து விடும். செந்தமிழை நாவினிக்கப் பேசி பிறர் மனத்தை இனிக்கச் செய்யவேண்டுமானால் எழுத்துப் பிழை இல்லாமல்தெளிவாகப் பேசுகின்ற நாவின் பழக்கத்தால் அமைந்து விடும். சேமித்து வைத்த ஒப்பற்ற கல்விச்செல்வம் மனப் பழக்கத்தால் உருவாவது. நாள்தோறும் நடத்தையில் முறையாகப் பழகுவது நடையில் திறமையைத் தருவதாகிறது. நடக்காமலே இருந்தால்கால் முடமாகிப் போனது போலத் தோன்றும். ஆனால் நட்பும்இரக்க குணமும்கொடுக்கும் குணமும் பிறவியிலேயே படிந்துவரும் நற்குணங்களாகும்என்று ஔவையார் கூறகிறார்.


     சிறு குழந்தைகளிடத்தில் உள்ள ஒரு பொருளை யாராவது கேட்டால்சில குழந்தைகள் கொடுத்து விடும். சில குழந்தைகள் கொடுக்க மறுக்கும். இதிலிருந்தே கொடைப் பண்பு என்பது பிறவியிலேயே அமைந்திருக்க வேண்டும் என்று தெரியவரும்.


     கொடுத்தல்தான் கொடை என்றால்உலகத்தில் வாழும் அனைவரையும் கொடையாளிகள் என்று கூறி விடவும் முடியாது.  கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இந்த உலகம் ஒரு நாள் கூட வாழ முடியாது. அன்றாடக் கூலி பெற்று வாழ்க்கை நடத்தும் ஒருவனில் தொடங்கிபெரிய செல்வம் கொழிக்கும் அரசாங்கம் வரை கொடுக்கல் வாங்கல் இல்லாமல் வாழ முடியவில்லை. 

 

     கொடுப்பதை மட்டும் கொடை என்று சான்றோர் கூறவில்லை. தனக்கென எதையும் வேண்டாதுதன்னிடம் உள்ளதைஇன்னார் இனியார் என்று பாராமல் எல்லோருக்கும்வரையறை இல்லாமல்அற உணர்வோடு வாரி வழங்குவதே கொடை ஆகும். "அறம் எனப்படுவது யாதுனக் கேட்பின் மறவாது இது கேள்மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்" என்கிறது மணிமேகலைக் காப்பியம். எனவேஈகை அல்லது கொடை என்பது மனிதனுக்கு அமைந்திருக்க வேண்டிய ஓர் அருட்பண்பே ஆகும். இது பற்றிக் கூற வந்த திருவள்ளுவ நாயனார்,"வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைஎன்று தெளிவு படுத்தினார். எக்காலத்திலும்எந்த வகையிலும் இவர்களால் நாம் தருவதைத் திருப்பித் தரமுடியாதுஎன்று அறிந்திருந்தும்  தருகின்றார் ஒருவர். அப்படியானால்அவரைக் கொடையாளி என்று கூறலாமா?  இன்னும்ஒரு தேர்வினை வைத்துஅதிலும் தேறியவர்களையே கொடையாளி என்னும் பட்டத்திற்கு உரியவர்களாக்குகின்றது தமிழ். வறியவர்க்குத்தான்  ஒருவர் கொடுக்கின்றார். ஆனால் எதனைக் கொடுக்கின்றார் தம்மிடம் அதிகப்படியாக உள்ளவற்றையும்வேண்டாதவற்றையும் தமக்குப் பயன்படாதவற்றையும் பிறருக்குத் தருபவர்களும் உண்டு.  கொடையாளிகள் என்று யாரைக் கூறலாம்என்றால் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்க்கு மிகவும் உயர்ந்த பொருளையும்மிகவும் தேவையான பொருளையும் தருவதே கொடைப் பண்பு ஆகும்.

 

     விந்தையானது மனித வாழ்க்கை. வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. உணவிற்கு ஒரு தொல்லையும்  இல்லாதவர்களை விருந்துக்கு அழைக்கின்றோம். அப்படி அழைக்கப்பட்டவர்கள் வசதி மிகப் படைத்தவர்களாக இருந்தால்விருந்தின் அளவும் தரமும் மிகவும்உயர்ந்து விடுகின்றது. தம்மால் அழைக்கப்பட்டவர் மனம் மகிழவேண்டும் என்பதற்காக விதவிதமான உணவை வகைகளைச் செய்து படைக்கிறோம். ஆனால்அவர்கள் உண்பதை விடவீணாக்குவதே அதிகமாக உள்ளதைக் காணலாம். காரணம்அவர்கள் பசி என்பதை அறியாதவர்களாக இருப்பார்கள். பத்தியச் சோறு உண்பவர்களாக இருப்பார்கள். 

புளிஏப்பமும் அசீரணமும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குச் செய்யப்படும் உபசாரம் வீணானது. அதே நேரத்தில் பழைய சோற்றுக்கு ஆலாய்ப் பறந்து கொண்டுதீராத பணிப்பிணியால் கதறுகின்றவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அப்படிக் கதறிக்கொண்டு வருகின்றவர்கட்கு விருந்து அளித்தல் வேண்டும்.

 

     "வெறுமிடியன் ஒருதவசி அமுது படை எனும் அளவில்,'மேலை வீடுகேள்கீழை வீடுகேள்'திடுதிடு என நுழைவதன் முன்எதிர் முடுகிஅவர்களொடு சீறி,ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்"  என்று பாடுகிறார் அருணகிரிநாதர். "ஒன்றும் இல்லாத வறுமையாளனாகிய ஒரு தவசீலன், 'ஐயாபசிக்கிறதுகொஞ்சம் சோறு போடுங்கள்என்று கேட்டவுடனே, 'மேல் வீட்டில் போய்க் கேளும்,  கீழ் வீட்டில் போய்க் கேளும்'என்று கூறுபவர்களும்,  அந்த வறியவன் (ஐயா என்று கூறிக் கொண்டே) பசியைப் பொறுக்க மாட்டாமல் திடுதிடு என்று சிறிது விரைவாக வாசல்படி ஏறி நுழைய முயலும் முன்பாகஅவனுக்கு எதிராக விரைந்து சென்றுஅவர்கள் மேல் மிகவும் கோபித்துநாயைப் போலே அவர் மேல் வீழ்ந்து கடிப்பது போல் பேசுபவர்களும் இல்லாமல் இல்லை என்பதுதான் அருணகிரிநாதர் அருள்வாக்கில் இருந்து தெரிகிறது. அரிசியைக் கொடுக்க வேண்டாம். நொய்யரிசியைக் கொடுக்க வேண்டாம். தம்மிடம் உள்ள தவிட்டினைக் கூடப் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாத உலோபிகள் உள்ளனர்.

                        

      உயிரையே தர வேண்டி நேரிட்டாலும் மனம் உவந்து கொடுப்பவர்கட்கு அழகிய பட்டத்தைச் சூட்டும் வழக்கம் தமிழ் மண்ணில் உள்ளது. அதுதான் 'வள்ளல் என்னும் பட்டம். பாரிசிபி போன்றவர்களை 'வள்ளல்கள்என்று குறிப்பிட்டனர். பாரிகொழுகொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்கு,தான் ஏறி வந்த தேரையே அளித்ததைஉலகம் நன்கு அறியும். இதை விடச் சிறந்த செயல்தன் உயிரையே வேண்டும் என்று இரந்த மூவேந்தர்கட்கு உயிரையே தந்துவிட்ட அந்தப் பெருவள்ளல் செயல்.

     பாரி வாழ்ந்த இத் தமிழ்நாட்டின் மற்றொரு மூலையில் 'அதியமான்நெடுமான் அஞ்சி’ என்ற மற்றொரு வள்ளலும் வாழ்ந்தான். தன் பெயரைப் போலவே  பெரிய மனமும் படைத்தவன் அப்பெரு வள்ளல். அவனுடைய நாடுமலைநாடு. அந்த மலைப்பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் சிறந்த நெல்லி மரம் ஒன்று இருந்தது. பொதுவாகவே நெல்லிக்காய் மிகச் சிறந்த பயனை அளிக்கக் கூடிய ஒன்று. அதிலும் மலையில் வளரும் நெல்லி மிகவும் பயன் உடையது. அதியமானின் நாட்டில்  தழைத்திருந்த அந்த அதிசய நெல்லி மரம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு பழந்தான் பழுக்கும். மரத்தின் சாரம் முழுவதும் அந்த ஒரே பழத்தில் இறங்கியதனால்,அந்தப் பழம் மிகவும் சிறந்ததாய் அமைந்திருந்தது. அந்தப் பழத்தை உண்டவர்கள் மிக நீண்ட காலம் நோய் நொடி இன்றிச் சிறந்த உடல் உரத்துடன் வாழ்வார்கள்.

       ஒரு முறைஇங்ஙனம் பழுத்த ஒரே நெல்லிப்பழம் அதியமானின் கையில் கிடைத்தது. வேறு யாராக இருப்பினும் கிடைத்தற்கு அரிய அதனை எப்படியும் உண்டிருப்பார்கள். ஆனால்அதியமான் அதை உண்பதற்காகக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மையார் ஒருவர் அவனைக் காண வந்தார். வந்தவர் அறிவு ஆற்றல்களோடு வயதிலும் முதிர்ந்தவராகிய ஔவைப் பிராட்டியாரே தான். பல்லாண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்துவிட்ட அந்தப் பாட்டிக்கு அந்தப் பழம் தேவை இல்லைதான். அதியமானைப் பார்த்துவிட்டுப் போக வந்த ஔவையாரை அதியமான் வரவேற்று உபசரித்தான். தனது அரண்மனையில் உள்ள அரிய உணவு வகைகளைக் கொடுத்து உபசரிக்கவில்லை.  தன் கையில் இருந்த அந்த அதிசயமான நெல்லிக் கனியை அவருக்குக் கொடுத்தான். அதன் பெருமையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை அவன். சாதாரண நெல்லிப் பழம் என்று நினைத்து வாங்கி உண்டுவிட்டார் ஔவைப் பிராட்டியார்.

 

     பழத்தை உண்ட பிறகுதான் அதனுடைய சுவை சாதாரண நெல்லிக் கனியின் சுவை அன்று என்பதை அறிந்தார் ஔவையார். அப்பழத்தின் தனிச் சிறப்பு யாது என்று அதியமானை வினவினார். வள்ளல் அதியமான் பழத்தின் வரலாற்றைக் கூறினான். அசந்து போய் விட்டார் ஔவையார். அதியமான் அன்பு மிக்கவன்அரசன் என்பது மட்டுமல்லாது வள்ளல் என்பது ஔவையாருக்கும் தெரியும். ஆனால், ‘அமிர்தம்' போன்ற நெல்லிக் கனியைக்கூடத் தான் உண்ணாமல் பிறருக்கு வழங்குவான் என்று அவர் கனவிலும் கருதவில்லை. உடனே அமுதம் கிடைத்த வரலாறு நினைவிற்கு வருகின்றது ஔவையாருக்கு. பாற்கடலில் இருந்து அமுதம் கிடைத்தபோதுஒருவருக்கும் பங்கு தாராமல்தாமே உண்ண வேண்டும் என்று நினைத்த தேவர்கள் எங்கே! அமிழ்தமாகிய அந்த நெல்லிக் கனியைத் தான் உண்ணாமல்,சாகப் போகும் கிழப் பருவத்தில் இருந்த ஔவையாருக்குத் தந்த அதியமான் எங்கே!

 

     அடுத்தபடியாகச் சிவபெருமான் நினைவு வந்தது ஔவையாருக்கு. சிவபெருமானுக்குப் பங்கு தர க்கூடாதென்று அவனை ஒதுக்கினார்கள் தேவர்கள். கடைசியில் அமுதத்திற்குப் பதிலாகஆலகால விஷம் வந்தது பாற்கடலில். அந்த நஞ்சுக்கு அஞ்சி சிவபெருமானிடம் ஓடினார்கள்முறை இட்டார்கள். தன்னை எண்ணாமல்முன்னிலைப் படுத்தாமல்பாற்கடலைக் கடைய முற்பட்டவர்கள் இந்தத் தேவர்கள். தன்னை மதியாதவரைமன்னித்தான் இறைவன். தேவர்கள் வாழவேண்டி அவர்கட்கு அமுதத்தைத் தந்துவிட்டுத் தான் நஞ்சை உண்டான் சிவபெருமான்!

 

     அமுதம் உண்டவர்கள் சாகமாட்டார்கள். அதே போன்று ஔவைப் பாட்டிக்குநீண்ட நாள் உயிர்வாழக் கூடிய ஆற்றலைத் தரவல்ல அமுதம் போன்ற நெல்லிப் பழத்தைக் கொடுத்துவிட்டுத் தான் சும்மா இருந்துவிட்டானே அதியமான்! அதிலும் ஒரு சிறப்பு உண்டு. அந்தப் பழத்தின் தன்மை இத்தகையது என்று அவன் கூறியிருந்தால் ஔவையார் அதை உண்டிருக்க மாட்டார்.  கொடுப்பதிலும் ஒரு சிறப்பு என்னவெனில்வாங்குபவர் மனம் வருந்தாமல் கொடுப்பதுதான். அவ்வாறு செய்பவர்களைக் காண்பது இன்று அரிதிலும் அரிது. முக்கியமான ஒன்றைக் கொடுப்பதன்முன்அது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதனுடைய பெருமையையும்தம் பெருமையையும் வாங்கிக் கொள்பவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பாடுபடுகின்றனர். தானாகச் சொல்லாவிட்டாலும்பிறரைக் கொண்டு சொல்ல வைக்கின்றனர். இதனால் கொடுப்பதன் பயனே இல்லாமல் போய்விடுகிறது.

 

     அதியமான் இன்னது என்று கூறாமல் கொடுத்து நெல்லிக் கனியை உண்ணச் செய்தான். அச்செயலைக் கண்ட ஔவைப் பிராட்டியார் அவனை "நீல மணிமிடற்று ஒருவன்போல மன்னுக பெரும நீயே!என்று வாழ்த்துகிறார். நீலகண்டனாகிய சிவபெருமானையும் அதியமானையும் ஒருசேர வைத்து மதிக்கிறார்.  

 

"வலம்படு வாய்வாள் ஏந்தி,ஒன்னார்

களம்படக் கடந்த கழல்தொடித் தடக்க

ஆர்கலி நறவின் அதியர் கோமான்

போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி

பால்புரை பிறநுதல் பொலிந்த சென்னி

 நீல மணிமிடற்று ஒருவன் போல

 மன்னுக பெரும! நீயே,தொல்நிலைப்

பெருமலை விடர் அகத் தருமிசைக் கொண்ட

சிறிஇலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின் அகத்து அடக்கிச்

 சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே"  --- புறநானூறு. 

 

என்று ஔவையார் அதியமானைப் புகழ்ந்து பாடினார். 

 

இதன் பொருள் ---

 

     வெற்றி கொள்ளும் கூர்மை பொருந்திய வாளை ஏந்திப் பகைவரைப் பல போர்களிலே கொன்று அழித்த வீரவளை அணிந்த பெரிய கையினை உடைநறுந்தேன் மலர் சூடிய அதியமான் நெடுமான் அஞ்சியே! போர்க்கள வெற்றிக்கு உரிய பொன்னரி மாலை அணியும் தலைவனே! எம் கோவே! நெடியபழமை மிக்க மலை இடுக்கில் உச்சியிலே பழுத்து இருந்த சிறிய இலையை உடைய அருநெல்லிக் கனியை நீயே உண்டு நெடுநாள் வாழ நினைக்காதுஅதன் அருமையையும் எனக்குக் கூறாதுஎனக்குத் தந்துஎன்னை உண்ண வைத்துஎனது உயிர்க்கு நெடுநாள் வாழ்வு அளித்த பெருமைக்கு உரிய நீபால்போன்ற வெள்ளிப் பிறை நிலவைச் சூடிய திருமுடியும்கருநீலமணி போன்று கழுத்தையும் உடைய இறைவனைப் போல நீ நீடூழி வாழ்வாயாக.

 

     உண்டால் மூப்பு இன்றி வாழ உதவும் அருநெல்லிக் கனியைத் தானே உண்ண விரும்பாதுதனக்குத் தந்து மகிழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சியைசிவபெருமானைப்போல என்றென்றும் வாழ்க என்று ஔவையார் உள்ளம் குளிர வாழ்த்தினார். மிகச் சிறிய சிற்றரசன் அதியமான்,  என்றாலும்திருக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்தவன். திருக்குறளே வாழ்வியலாக அமைந்து இருந்தது நமது பழந்தமிழ்ப் பெருமக்களுக்கு. திருக்குறள் ஒரு வாழ்வியல் வேதம் ஆகும். அதியமானுடைய வாழ்வு ஒரு திருக்குறளுக்கு இலக்கியமாய் அமைந்துவிடுகின்றது. 

 

"அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்அன்பு உடையார்

என்பும் உரியர் பிறர்க்கு."

என்னும் திருக்குறள்தான் அது. தனக்குக் கிடைத்த அமுதமாகிய நெல்லிக் கனியைத் தானே உண்ணாமல்ஔவையாருக்குக் கொடுத்துவிட்டதன் மூலம்.அன்புடையார் தமது எலும்பையும் பிறர்க்கு வழங்குவர் என்ற திருக்குறளை வாழ்ந்துகாட்டினான் அதியமான்.

வள்ளிநாயகன் உபதேசித்தது ஒன்று

 

வள்ளிநாயகன் உபதேசித்தது ஒன்று

-----

 

     இந்த நாடு பல மொழிளையும்பல கலாசாரங்களையும் பின்பற்றும் மக்களைக் கொண்டது. மக்கள் என்றைக்கும் வாழ்வியலில் வெவ்வேறு விதமாகவே வாழ்ந்து வருகின்றனர். உணவு வகைகளும் கூட வேறுபடுகின்றன. ஆனால்அருளியலில் கன்னியாகுமரி முதல் இமயம் வரைக்கும் ஒரே நாடாகவே இருந்து வருகிறது. வடக்கே போனாலும்தெற்கே போனாலும்எந்த மொழி பேசுகிற பகுதிக்குச்  சென்றாலும் மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பயன் நான்கு என்று சொல்வார்கள். தென்குமரியில் தமிழ் பேசும் மனிதன் அந்த நான்கையே சொல்வான்வடகோடியில் இருக்கிறவனும் அந்த நான்கையே சொல்வான். 

 

     வடக்கே உள்ளவர்கள் 'தர்மம் அர்த்தம் காமம் மோட்சம்என்று சொல்வார்கள். தெற்கே உள்ள தமிழர் அவற்றையே 'அறம் பொருள் இன்பம் வீடுஎன்று சொல்வார்கள். இவற்றை உறுதிப் பொருள் என்று சொல்வது வழக்கம். வடமொழியில் புருஷார்த்தம் என்பர். இந்த நான்கும் வாழ்க்கையின் பயன் என்ற கொள்கை பொதுவானது.  நாடு முழுமைக்கும் உரியவை என்று இந்த நான்கையும் சொல்லும் அந்தச் சட்டத்திற்கு வேதம் என்று பெயர். வேதம் வாழ்வியல் நூல். ஆகமம் வழிபாட்டியல் நூல். வேதம் அறத்தைச் சொல்லுவது. "வேதத்தை விட்ட அறம் இல்லை" என்பது திருமூலர் அருள்வாக்கு. ஆகமம் அறத்தின் வழி நின்று வழிபாடு ஆற்றுவதைச் சொல்லுவது. "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்பார் மணிவாசகர். வேதம் பொது நூல். ஆகமம் சிறப்பு நூல்.

 

"வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்,

ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன;

நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம்

பேதம் அது என்னில் பெரியோர்க்கு அபேதமே."

 

என்பது திருமூலர் அருள் வாக்கு.

 

     வேதமும் ஆகமும் உண்மையை எடுத்து உரைக்கும் நூல்கள் ஆகும். இவை இரண்டும் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை. இவற்றுள் வேதம் பொதுநூல் என்றும்ஆகமம் சிறப்புநூல் என்றும் கருதப்படும். இவ்வாறே வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இரண்டு அந்தங்களும் இறைவனது மொழிகளே. சிலர் இவ்விரண்டும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை என்று கூறுவர். இவற்றின் உண்மைக் கருத்தை அறிந்த பெரியோர்களுக்கு இவ்விரண்டும் பேதம் அற்றவை என்பது விளங்கும்.

 

     நமது நாட்டில் எந்தப் பகுதியாக இருந்தாலும்எந்த மொழி பேசுபவராக இருந்தாலும்எந்த ஆசாரத்தை வைத்துக் கொண்டவர்களாக இருந்தாலும்அறம்பொருள்இன்பம்வீடு என்ற இந்த நான்கு புருஷார்த்தங்களும் எல்லோருக்கும் பொதுவானவை.

 

     நடுத்தெருவில் ஒருவன் இருந்தால் அவன் என்று சொல்வோம். ஒரு பொருள் இருந்தால் அது என்று சொல்வோம். அதுஇதுஉது என்று மூன்று விதமான சுட்டுச் சொற்கள் இருக்கின்றன. பக்கத்தில் இருக்கிறதை இது என்றும்தொலைவில் இருக்கிறதை அது என்றும்மேலே இருப்பதை உது என்றும் சொல்வது வழக்கம். இறைவன் மனத்திற்கும் பொறிக்கும் அப்பால் இருப்பதால் அவன் என்று சொல்கிறோம். வேதம் அவனை எப்படிச் சொல்கிறது 'அது'என்று சொல்கிறது. வாக்கினாலே சுட்டிக்காட்ட முடியாதவன்ஆகையாலே, 'அனுபவத்திலே நீயே கண்டுகொள்என்று சொல்கிறது. அவனைச் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாது. அவனால் வரும் இன்பத்தையும் சொல்ல முடியாது. "அது ஆனால் அது ஆவர்,அதுவே சொல்லும்"என்கிறார் தாயுமானவர்.

 

     ஒர் விடுதியில் பத்து ஆண்கள் இருக்கிறார்கள். தன் கணவனைக் காணாத ஒரு பெண் அங்கே வருகிறாள். ஓர் அதிகாரி அந்தப் பெண்ணிடம், "இவன் உன் கணவனாஇவன் உன் கணவனா?” என்று கேட்டு வருகிறார். "இவன் அல்லஇவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே வருகிறாள். அந்தப் பத்துப் பேர்களுள் ஒருவன் அவளுடைய கணவன். அவனைச் சுட்டிக்காட்டி, "இவன் உன் கணவனா?" என்று கேட்கும்போது அவள் மெளனமாகத் தலை குனிந்து கொண்டு விடுவாள்.  "இவன் என் கணவன்" என்பதே அந்த மெளனத்தின் பொருள். பல பல பொருள்களை விரித்து விரித்துப் பேசுகிற வேதம் இறைவனைப் பற்றிச் சொல்ல வந்த இடத்திலே மெளனம் சாதிக்கிறது.

 

     வேதம் மற்றப் பொருளைப் பற்றிச் சொல்லி,இறைவனை அவை அல்லாத ஒருவன் என்று கூறி எதிர்மறையாகச் சுட்டுகிறது. "நேதி நேதி” என்று சொல்கிறது. "இது அல்லஇது அல்லஎன்று பொருள்களை எல்லாம் மறுத்து ஒதுக்கி விடுகிறது. இதை நேதி களைந்து பார்த்தல் என்று வேதாந்திகள் சொல்வார்கள்."அல்லை ஈது அல்லை ஈது என மறைகளும் அன்மைச்  சொல்லினால் துதித்து இளைக்கும் இச் சுந்தரன்" என்று பரஞ்சோதி முனிவர் கூறுவார்.

 

     இறைவனை, "இது அல்ல,இது அல்ல" என்று சொல்வது எப்படித் தோத்திரமாகும் என்ற கேள்வி எழலாம். ஒருவரிடத்தில் தீயகுணம் ஏதும் இல்லை என்று சொன்னால்அவரிடத்தில் நற்குணங்கள் பொருந்தி இருக்கின்றன என்று பொருள்.  இறைவனைப் பற்றி வரையறை செய்யப் புகுந்து மேலும் மேலும், "இதுவாஅதுவா?' என்று கேட்கும் கேள்வி வளர்ந்து கொண்டே போகும். அது அல்ல;அது அல்ல என்று விடையும் எல்லை இல்லாமல் விரிந்துகொண்டே போகும்."தனு கரண ஆதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்சோதி" என்பார் வள்ளல் பெருமான். அனுபவப் பொருளாக உள்ளவன் இறைவன்.

 

     வேதம் சொல்லுகிறதைப் போலவே அருணகிரிநாதர் அன்மைச் சொல்லால்,இறைவன் தனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு என்று முதலில் சொல்லிஅது எது என்றால், "அது அன்றுஇது அன்று"என்று அடுக்கிக் கொண்டே போகின்றார்.

 

"தேன் என்று பாகு என்று உவமிக்க

     ஒணா மொழித் தெய்வ வள்ளி

கோன்அன்று எனக்கு உப-

     தேசித்தது ஒன்றுஉண்டு...."

 

"தேன் என்றோ பாகு என்றோ உவமித்துச் சொல்ல முடியாத இனிய சொற்களை உடையதெய்வத்தன்மை பொருந்திய வள்ளிநாயகியின் மணவாளன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று உண்டு என்று முதலில் சொல்கிறார். அது என்ன என்று கேட்டால்,

 

.....        .....        .....   கூறவற்றோ?

வான் அன்றுகால்  அன்றுதீஅன்று,

     நீர் அன்றுமண்ணும் அன்று,

தான் அன்றுநான் அன்று,

     அசரீரி அன்றுசரீரி அன்றே"

 

என்று முடிக்கிறார். "உண்டு" என்று முதலில் ஒரு சொல்லில் சொன்னவர், "இல்லை" என்று ஒன்பது முறை சொல்லிவிட்டார்.இந்தப் பாட்டின் இலக்கணத்துக்கு ஏற்ப ஒன்பது முறை சொல்லி நிறுத்தினார். மேலும் சொல்லிக் கொண்டே போனால் பாட்டு மிக நீளும். வேதமே,இதுஅல்ல இது அல்ல என்று சொல்லி இளைத்துப் போகின்றது என்றால்அருணகிரிநாதரால் எவ்வாறு சொல்ல முடியும்உண்டு என்றால் ஒருமுறை சொன்னால் போதும். அல்ல என்று சொல்லப் புகுந்தால்,அந்த வரிசைக்கு முடிவில்லை.

 

     தாம் அடைந்த இன்ப அனுபவத்தைச் சொல்ல வருகிற பொழுதெல்லாம்அருணகிரிநாதருக்கு  வள்ளிநாயகியின் நினைவும் கூடவே வரும். முந்தைய பாட்டில்அரும்பும் தனிப் பரமானந்த இன்பத்தைத் தரக் கூடியவன் குறமகளாகிய வள்ளிநாயகியிடம் தான் இன்பம் அடையச் சென்ற குமரன் என்று வள்ளியம்மையைச் சேர்த்துக் சொன்னார்.

 

     மண் குடுவையில் கள்ளை வைக்கிறார்கள். வெள்ளிக் கிண்ணத்தில் வைக்கின்ற பாலை மண் குடுவையில் வைத்தால் அது கள்ளாகி விடாது. பாத்திரம் எதுவாக இருந்தாலும் பால் பாலாகத்தான் இருக்கும். ஆண்டவன் எந்த வேடம் போட்டாலும்காம மயக்கம் உடையவன் போலத் தோன்றினாலும்அவன் பேரின்ப நலத்தையே வழங்குகிறான். எம்பெருமான் வள்ளிநாயகியிடம் காம மயக்கம் உடையவனைப் போல ஒடி வந்தாலும்அவளைத் தடுத்தாட் கொண்டு பேரின்பத்தையே வழங்கினான். இங்கே தமக்கு ஒன்று உபதேசித்தவன் வள்ளிமணாளன் என்று சொல்கிறார். வள்ளி எப்படிப்பட்டவள் என்றால், "தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா  மொழித் தெய்வ வள்ளி" என்கிறார்.

 

     வள்ளிநாயகி குறமகளாக வளர்ந்தாலும்அவள்திருமாலின் மகள். ஆதலின்தெய்வத் தன்மை உடையவள். உள்ளம் என்பது மனிதர்களுக்கு இருப்பது போலவே மற்ற விலங்குகளுக்கும் இருக்கிறது. விலங்குகள் நினைக்கின்றன.ஆனால் சொல்லத் தெரிவதில்லை. மனிதர்கள் சிறப்பு அடைவதற்குக் காரணம் உள்ளத்தில் இருப்பதைச் சொல்லால் வடிக்கக் கூடிய ஆற்றல் இருப்பதுதான். வள்ளிநாயகியின் சிறப்பைச் சொல்ல வந்த அருணகிரிநாதர்,அம்மையின் மொழியின் இனிமையைத் தான் சொல்கிறார். 

 

     பொதுவாகவேபெண்களின் சொல்லைத் தேன் என்றும்பாகு என்றும் உவமித்துச் சொல்வது வழக்கம். "பால் என்பது மொழிபஞ்சு என்பது பதம்பாவையர் கண் சேல் என்பதாகத் திரிகின்ற நீ" என்றும் கந்தர் அரங்காரத்தில் ஒரு பாடல் உண்டு.

 

     இராவண சங்காரம் செய்துவிட்டுத் தம் பாவங்களைப் போக்குவதற்காக இராமலக்குவணர்கள் வைத்தீசுவரன் கோயிலுக்கு வந்து வழிபாடு பண்ணினார்கள். அத்தகைய சிறப்புடைய தலம் அது. அங்கே எழுந்தருளி இருக்கிற வைத்தியநாதப் பெருமானையும்அவனுடைய அருட்சக்தியாகிய பாலாம்பிகையையும் பார்க்க வேண்டுமென்று மும்மூர்த்திகள் வருகிறார்கள். தேவரும் முனிவரும் அடியார்களுமாகப் பலர் பெருமானது கோயில்வாயிலிலே வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள். மருத்துவர் வீட்டிலும்மந்திரவாதி வீட்டிலும் எப்போதும் கூட்டம் இருப்பதை உலகியலில் காணலாம். வைத்தியநாதப் பெருமான் ஒரு பெரிய மருத்துவர். தையல்நாயகி அம்மையோ பெரிய மந்திரக்காரி. "மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருள வல்லான்" என்று அப்பர் பெருமான் வைத்தீசுவரப் பெருமானைப் பாடிப் புகழ்ந்து உள்ளார். வரிசையில் நின்றால் பெருமானுடைய தரிசனம் கிடைப்பதற்கு நெடுங்காலம் ஆகும் போல் இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இந்த இரண்டு பேரையும் பார்ப்பதற்குப்பதிலாக இவர்களுடைய அன்புக்கு உரியவரான ஒருவரைப் பார்த்தாலே போதும். அவர்தான் முத்துக்குமாரசுவாமி. இவன் வைத்தீசுவரப் பெருமானுக்கும் தையல்நாயகிக்கும் அருமருந்து போன்றவன்.அமுதம் போல இருக்கிறவன். இவனைத் தரிசித்துக் கொள்ளலாம் என்று உடனே அந்தக் குழந்தையைப் பார்க்கப் போகிறார்கள்.  அங்கும் காத்துக் கிடக்கும்படி ஆகிவிட்டது. முத்துக்குமாரசுவாமி தினைக் கொல்லையைக் காவல்புரிகின்ற வள்ளியைத் தேடி ஓடுகிறான். அவளுக்கு முருகப்பெருமான் ஏவல் செய்ய அவளை 'பணிப்பாயா'என்று குறையிரந்துஅவள் வாயிலிருந்து உதிருகின்ற தேன்போன்ற இனிமையான வார்த்தைக்கு அவன் ஏங்கிக் காத்துக் கிடக்கின்றான்.அவளுடைய தேன் ஊறு கிளவிக்கு வாய் ஊறி நிற்கிறானாம். "பணி யா எவள்ளி பதம் பணியும் தணியா அதமோக தயாபரன்" என்று முருகனைக் கந்தர் அனுபூதியில் பாடுவார் அருணை வள்ளலார்.

 

"மீன் ஏறு குண்டு அகழி தீவாய் மடுத்த தனி

     வில்லியார் இளவலோடும்

விதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை

     வெள்ளம் என வீற்றிருக்கும்

ஆன் ஏறு உயர்த்திட்ட ஐயற்கும் அம்மைக்கும்

     அருமருந்து ஆகிநின்ற

ஆதிப் பிரான் என்று மும்முதற் கடவுளும்

     ஆடித் தொழும்பு ஆற்ற,மற்ற அக்

கூன் ஏறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்

     குறிப்பு அறிந்துருகு அணைந்துன்

குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்க எனக்

     குறை இரந்தவள் தொண்டைவாய்த்

தேன் ஊறு கிளவிக்கு வாய் ஊறி நின்றவன்

     செங்கீரை ஆடி அருளே!

செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள!

     செங்கீரை ஆடி அருளே."

 

இது குமரகுருபர அடிகள் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்ப் பாடல்.

 

இதன் பொருள் ---

 

     முத்துக்குமாரசுவாமியே! மீன்கள் ஏறுகின்ற ஆழமான கடலை நெருப்புக்கு உணவாக்கிய வில்லையுடைய இராமர்தனது தம்பியோடு விதிமுறைப்படியே வணங்கச் சடாயுபுரியாகிய திருப் புள்ளிருக்குவேளுரில் கருணைக் கடலைப்போல் எழுந்தருளி இருப்பவனாகிய இடபக் கொடியைப் பிடிக்கும் கடவுளுக்கும் அம்பிகைக்கும் அரிய அமுதத்தைப் போன்றுள்ள ஆதித் தலைவன் என்று மூன்று மூர்த்திகளும் உன்னை அணுகித் திருவடித் தொண்டு செய்யவளைந்த பிறையைப் போன்ற நெற்றியையும் தெய்வத் தன்மையையும் உடைய குறப் பெண்ணாகிய வள்ளியின் திருவுள்ளக் குறிப்பை அறிந்து அருகிலே சென்று, "உனக்குச் சிறிய ஏவல்களைச் செய்ய உனது கடைக்கண்ணால் பணிப்பாயாக" என்று குறையிரந்துஅவளுடைய கோவைக்கனி போன்ற வாயிலிருந்து வரும் தேன் ஊறுகின்ற இனிய மொழிகளுக்காக வாய் ஊறி ஏங்கிக் கிடந்தவனேசெங்கீரை ஆடுகசெத்துப் போய் மீண்டும் பிறக்கின்ற தெய்வங்களுக்குத் தலைவனேசெங்கீரை ஆடி அருள்வாயாக."

 

     குமரகுருபரர் அடிகளார் வள்ளிநாயகியின் மொழிக்குத் தேனை உவமையாக்கினார். அருணகிரிநாதர் அந்த மொழிக்குப் பாகையும் உவமை கூறினார். "பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா!" என்று அருணகிரிதாநர் திருப்புகழில் கூறி உள்ளார்.பாகையும் கனியையும் போன்றது வள்ளிநாயகியின் மொழி. அவருக்கு ஒரு நிலையில்தேனையும் பாகையும் கூட வள்ளியம்மையின் சொல்லுக்கு உவமை காட்ட மனம் வரவில்லை போலும். "தேன் என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித் தெய்வ வள்ளி" என்கிறார். 

 

     அந்தப் பெருமான்அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு. "அன்று" என்பது "அந்த நாள்" என்று குறிக்கும் சுட்டுச் சொல். இங்கே அருணகிரிநாதர் எந்த நாளைக் குறிப்பிடுகிறார்அன்று என்பது எந்த நாளைக் குறிக்கும்அது அவருக்கு மட்டும்தான் தெரியும்."வள்ளிகோன் அன்று உபதேசித்தது ஒன்று உண்டு” என்று முருகன் தமக்கு உபதேசித்தாகச் சொல்கிறார். ஒரு மாணாக்கனுக்கு நூலின் பொருள் விளங்காத போதுஆசிரியர் அதற்கு உரை கூறி விளக்குகிறார். இதுவும் உபதேசமே. குருவினுடைய மந்திர உபதேசத்தையே உபதேசம் என்று நாம் வழங்கி வருகிறோம். உலகம் நிலையற்றது என்பதையும்,இறைவன் நிலை இன்னது என்பதையும்,வேறு சமய உண்மைகளையும் ஒரு பெரியவர் சொல்கிறார். அவரும் உபதேசம் செய்கிறவரே. சமயப் பிரச்சாரம் செய்கிறவரை 'உபதேசியார்'என்று சிலர் சொல்கிறார்கள்.முன்பு தெரியாமல் குழம்பி இருந்த அறிவில்,இப்போது உபதேசத்தால் தெளிவு உண்டாகிறது.  உபதேசித்த பொருள் மனதில் பதிகிறது. அதன் பயனாக உபதேசம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் அந்தப் பொருளை விளக்கும் ஆற்றல் பெறுகிறார்கள். தாம் உபதேசத்தால் அறிந்த ஒன்றைப் பிறருக்குச் சொல்லும் வன்மை அவர்களுக்கு அமைகிறது. அவர் பெற்ற உபதேசம் அப்படிச் சொல்லும் எல்லைக்குள் அடங்கியிருப்பது.

 

     இங்கேவள்ளிகோன் ஆகிய முருகப் பெருமான் உபதேசித்தது,  அறிவிலே பதியும் உபதேசம் மட்டுமல்ல. அறிவிலே தெளிவு உண்டாக்கும் உபதேசம் பிறருக்கு மீட்டும் சொல்லத்தக்க இயல்பை உடையது. "முருகன் உபதேசம் செய்த அந்த ஒன்றைப் பிறருக்குச் சொல்ல முடியாது. எனவே, "கூறவற்றோ" என்கிறார். இன்னது என்று சொல்லும் தன்மையை உடையது அல்ல என்கிறார்.ஞானம் என்பதே அனுபவ உணர்வுதான். அனுபவம் வேறுஞானம் வேறு என்ற பிரிவே இல்லை. அனுபவமே ஞானம்ஞானமே அனுபவம். வாக்கு மனம் கடந்த நிலை அது.முருகன் உபதேசித்ததுஅறிவிலே பதிகிற உபதேசம் அல்ல. உயிரிலே பதிந்த அனுபவம்.  அது கூறும் வன்மைக்கு அப்பாற்பட்டது.அனுபவ உணர்வு நுட்பமானது. நுட்பமானவற்றை உபமானத்தாலும் உருவகத்தாலும் சொல்வது வழக்கம். 

 

     எல்லாப் பூதங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது வான்அது  நுட்பமானது சுட்டிக் காட்ட இயலாதது. "இந்த வானோ?” என்றால் "வான் அல்ல" என்கிறார். மிகவும் இனிமையாக இருப்பதுவெப்பத்தைப் போக்குவது காற்று. பிறவியாகிய வெப்பத்தைத் தீர்ப்பதற்கு ஆண்டவன் அருள் தென்றல் காற்றாக வரும். அப்பர் பெருமானும் "வீசு தென்றலும்" என்றார்.அந்தக் காற்றை உவமானமாகச் சொல்லலாமா?என்றால் "கால் அல்ல" என்கிறார். (கால் - காற்று)  தீயானது பொருள்களின் மாசுகளைப் போக்கித் தூய்மை செய்வதில் சிறந்தது. அதைச் சொல்லலாமா என்றால்அதையும் சொல்லக் கூடாது. "தீ அல்ல" என்கிறார். நீரை அமுதம் என்று சொல்கிறார்கள். உண்பாருக்கு நல்ல உணவுகளை உண்டாக்கிஅவற்றை உண்கிறவர்களுக்குத் தானும் உணவானது நீர். "துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கிதுப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை"என்கிறார் திருவள்ளுவர். நெல்லை விளைப்பதற்குத் தண்ணீர் தேவை. நெல்லைக் குத்தினால் கிடைக்கும் அரிசியைச் சோறு ஆக்கவும் தண்ணீர் வேண்டும். சாப்பிட நாம் உட்கார்ந்தவுடன்ஒரு பாத்திரத்தில் நீர் பக்கத்தில் இருக்கவேண்டும்.  "நீர் இன்றி அமையாது உலகு" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது முற்றிலும் உண்மையே. அந்தத் நீரைச் சொல்லாமா என்றால், "நீர் அல்ல" என்கிறார். 

 

     தரை என்பதற்குத் தாங்குவது என்று பொருள். தனக்குத் துன்பம் செய்கிறவனையும் பூமி தாங்குகிறது. தன்னை வெட்டுகிறவனையும் அது தாங்குகிறது."அகழ்வாரைத் தாங்கும் நிலம்"  என்கிறார் திருவள்ளுவர். பூமிக்கு 'வசுமதி'என்று ஒரு பெயர் உண்டு. 'வசு'என்றால் செல்வம். பலவகையான செல்வங்களை வசுமதி தன் மடியில் வைத்திருக்கிறாள். நிலக்கரிதங்கம்வெள்ளிவைரம் போன்ற அரிய செல்வங்களை எல்லாம் வைத்திருப்பவள் வசுமதி. அந்த மண்ணைச் சொல்லலாமாஎன்றால், "மண்ணும் அல்ல" என்கிறார். 

 

     இவ்வாறு ஐம்பூதங்களும் அல்ல என்று சொல்வதன் மூலம்தாம் பெற்ற அனுபவம்பூதங்களுக்கும் அப்பாற்பட்டது என்று உணர்த்தினார். ஐம்பூதங்களாலும் வாழ்க்கையில் நமக்கு அனுபவம் உண்டாகிறது. அருணகிரிநாதர் அடைந்தது அந்த அனுபவம் அல்ல.

 

     அதோடு நிற்கவில்லை. மேலும் அன்று அன்று என்று சொல்கிறார்."தான் அன்றுநான் அன்றுஅசரீரி அன்று,சரீரி அன்றே" என்கிறார்."தான்" என்பதற்கு அவன் என்று பொருள். அவன் என்று சுட்டும் பொருளும் அன்று அந்த அனுபவம்."தான்","நான்" என்னும் இரண்டும் இனச் சொற்கள். இனத்தைச் சுட்டும் வரையில் பேதம் உண்டு. "யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்" என்று அருணகிரியார் பாடினார்.தான்நான் என்று சொல்கின்ற பேத உணர்ச்சி இருக்கிற வரைக்கும் அனுபவம் இல்லை. இந்த இரண்டும் கெட்டால் அன்றி அவன் அருளைப் பெற முடியாதாம். நான்நீதான் என்னும் மூன்றும் ஓர் இனச் சொற்கள் மூன்று இடங்களைக் குறிப்பவை. நான் என்பது தன்மைநீ என்பது முன்னிலைதான் என்பது படர்க்கை. பகல் என்று சொன்னால் இரவு இருக்கிறது என்பது குறிப்பால் தெரியும். வேண்டியவன் இருக்கிறான் என்று சொன்னால் வேண்டாதவனும் இருக்கிறான் என்று ஆகும். அதைப் போலவேதான் என்று சொன்னால்,நான்நீ என்பவற்றையும் நினைக்கச் செய்யும். "தானும் அல்லநானும் அல்ல" என்று மறுக்கிறார்.

 

     இப்படிச் சொல்லிவிட்டுஉருவம் படைத்த எதையும் உவமானமாகச் சொல்ல முடியாது;உருவம் இல்லாததையும் சொல்வது பொருந்தாது என்றும் சொல்கிறார்.வேதமே இது அல்லஇது அல்ல என்று சொல்லும்போது அருணகிரிநாதர் எப்படிச் சொல்ல முடியும் "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்பது வழக்கு.  "கேட்டு அறியோம்உன்னைக் கண்டு அறிவாரை" என்பார் மணிவாசகப் பெருமான். எனவேவேதம் சொல்வதைப் போல சொல்லிவிட்டார். வேதம் சத்தியம் என்றால்அருணகிரிநாதர் பெற்ற அருளனுபவமும் சத்தியம் ஆகும். அந்த அருளனுபவத்தைப் பாடுகிறார். "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்று கந்தர் அனுபூதியில் குறிப்பிடுகிறார்.

 

"தேன்என்று பாகுஎன்று உவமிக்க ணாமொழித் தெய்வவள்ளி

கோன்அன்று எனக்குஉப தேசித்ததுஒன்றுஉண்டுகூறவற்றோ?

வான்அன்றுகால்அன்றுதீஅன்று,நீர்அன்று,  மண்ணும் அன்று,

தான்அன்றுநான்அன்றுஅசரீரிஅன்று,சரிரீ அன்றே"

 

இதன் பொருள் ---

 

     தேன் என்றும்கற்கண்டின் பாகு என்றும் ஒப்புமை சொல்லுவதற்கு முடியாத இனிய சொற்களை உடைய தெய்வப் பெண் ஆகிய வள்ளிநாயகியின் மணவாளர் ஆகிய முருகப் பெருமான்அந்நாளில் அடியேனுக்குக் குருவாக எழுந்தருளி வந்து உபதேசித்து அருளிய மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. அது இன்ன தன்மையை உடையது என்று சொல்லக் கூடியது அல்ல. அது ஆகாயம் அல்லகாற்று அல்லநெருப்பு அல்லதண்ணீர் அல்லமண்ணும் அல்லதானும் அல்லஉருவம் இல்லாததும் அல்லஉருவம் உள்ளதும் அல்ல. (அது ஒன்றும் அல்லாத ஒன்று. எல்லாம் கடந்த இடத்தில் விளங்குவது).

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...