அன்பினில் விளைந்த ஆனந்தத் தேன்.

                                                       அன்பினில் விளைந்த ஆனந்தத் தேன்

-----

 

"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின் மேல்

அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை,அநாதியிலே

வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத்

தெளிய விளம்பியவா முகம் ஆறு உடைத் தேசிகனே!"

 

     இது கந்தர் அலங்காரத்தில் தமது அனுபவத்தைப் பற்றி அருணகிரிநாதப் பெருமான் பாடியருளிய பாடல்.

 

     'ஆறுமுகப் பெருமான் பரமகுரு. அவன் எனக்குச் செய்த உபதேசத்தின் பெருமையை என்ன என்று சொல்வேன்!என்று வியந்து பாடுகிறார் அருணகிரிநாதர். மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன்உயர்ந்த நிலைக்கு ஏறிக் கீழே உற்று நோக்கினால் ஆச்சரியம் உண்டாகும். தரையில் இருந்தவன் மலை உச்சிக்குப் பறந்து போய்விட்டான் என்றால்அங்கிருந்து தரையை நோக்கும் போது பெருவியப்பு  உண்டாவது இயல்பு. 

 

     தேசிகன் என்பது குருவைக் குறிக்கும். தேசு படைத்தவர் தேசிகர். தேசு என்றால்ஒளிபொன்அழகுஅறிவுபுகழ்பெருமை என்று பொருள். வடமொழியில் தேஜஸ் என்று வழங்கப்பெறும். ஆன்மாவை ஒளிநிலைக்கு இட்டுச் செல்பவர் தேசிகர் ஆவார். உலகப் பற்றுகளை எல்லாம் ஒழித்துவிட்டுஇந்திரிய நிக்கிரகம் செய்த துறவிகள் குரு ஆவார்கள். இந்தத் துறவிகளுக்குப் பழங்காலம் முதற்கொண்டே ஒரு குரு பரம்பரை இருந்து வருகிறது. அந்தப் பரம்பரையில் பழையவர்கள் சனகர் முதலிய நான்கு பேர்கள். இந்த நான்கு பேர்களுக்கும் குருநாதர்ஆலமர் கடவுள் எனப்படும் தட்சிணாமூர்த்தி.

 

     சிறந்த குருவாய் இருக்கிற தட்சிணாமூர்த்தியும் ஒரு சமயத்தில் மாணவராக இருந்தார். மற்றவர்களை நோக்க எல்லோருக்கும் பரமகுருவாய் இருக்கின்ற தட்சிணாமூர்த்தி வேறு ஒருவனை நோக்க மாணவராக இருந்தார். அவன்தான் குமரகுருபரன். குருமூர்த்திகளுக்குள் உயர்ந்தவன். ஆதலாலே குருபரன் என்ற பெயர் பெற்றான். குமரன் ஆகையினாலே அவனைக் குமரகுருபரன் என்று வழங்குவார்கள்.

 

     சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உபதேசம் செய்கின்றபோது முருகன் குருவாய் இருந்தான். சிவபெருமானுக்கே குருவாய் இருந்த நல்ல புகழ் உடையவன் என்றால்அவன் ஆன்மாக்களுக்கும் நல்லுபதேசம் செய்வான். அந்தப் பரமகுருநாதனுடைய உபதேசத்தால் தாம் பெற்ற இன்ப அனுபவங்களை அருணகிரிநாதர் சொல்லுகின்றார்.

 

     மலைமேல் ஏற ஏற ஒருவனது பார்வைக்கு தடையாக இருந்தவை கீழே போகின்றமையால்மிக விரிந்த வெளியில் உள்ள பொருள்களை எல்லாம் பார்க்கிறான். அதைப் போல நம் மனம் இன்றைக்கு இருக்கும் தாழ்ந்த நிலையில் இருந்து உயர வேண்டும். மனத்திலே நல்ல குணங்கள் அமைந்து உயர வேண்டும். "குணம் என்னும் குன்று ஏறி நின்றார்" என்கிறார் திருவள்ளுவர். நல்ல குணம் என்னும் மலையின் மீது மனம் ஏற ஏற,அதன் பார்வை விரிகிறது. தடையாக இருக்கின்ற பொருள்கள் எல்லாம் கீழே போகின்றன. அவை நமது பார்வையைத் தடுப்பதில்லை. குணம் என்னும் குன்று ஏறி நின்று பார்த்தால்,நில உலகம் எல்லாம் நல்லதாகத் தெரியும்."குறுகிய மனப்பான்மை கூடாது. விரிந்த மனோபாவம் வேண்டும்" என்று பேச்சாளர்களும் சொல்கிறார்கள்.  மேடையில் ஏறினால் வராது. குணம் என்னும் குன்றேறி நிற்பவர்களே விரிந்த மனோபாவம் உடையவர்கள்.மேலே ஏற ஏறக் கண்ணில் படுகின்ற காட்சிப் பொருள் விரிந்து போகும்.

 

     மலை உச்சியிலே போய்ப் பார்த்தால் அங்கே சந்தன மரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும். சந்தன மரமே உயரமானது. அதுவும் மலை உச்சியின் மேலே வளர்ந்து மிக உயர்ந்து ஓங்கி நிற்கிறது. அந்த மரத்தின் உச்சிக் கொம்பிலே யாரும் தொடாத தேன் அடை இருக்கும். மனிதர்கள் வாழ்கிற இடத்திலே தேனடை இருந்திருந்தால் ஒரு நாள்கூட விட்டு வைத்திருக்க மாட்டார்கள். நெருப்பைப் போட்டுக் கொளுத்தி,வண்டுகளைக் கொலை செய்து தேனை எடுத்துக் குடித்திருப்பார்கள். இங்கோ மனிதன் கண் படாத மலை உச்சியின் மேலேயுள்ள சந்தன மரத்தின் கொம்பில் அந்தத் தேன் அடை இருந்தது.அந்தத் தேன் மிகவும் இனிமையாக இருக்கும்.

 

     கீழேயுள்ள குளத்தில் தாமரை மலர் மலர்ந்திருக்கிறது. வண்டுகள் அதிலுள்ள தேனை எடுத்துச் சென்று மலை உச்சியின் மேலுள்ள சந்தன மரத்தின் கொம்பில் வைக்கின்றன. தேன்தாமரையிலே இருக்குமானால்குளத்தில் இறங்கிக் குளிக்கிற எருமை மாடுகள் அந்தத் தேன்மலரை வீணாக அடித்திருக்கும். ஆனால் அந்த இனிமையான தேனை வண்டுகள் எடுத்துப் போய்விட்டன. எளிதில் பிறருக்குக் கிடைப்பதற்கு அரிய மலையின் உச்சிக்கு எடுத்துப் போய் உயர்ந்து வளர்ந்திருக்கும் சந்தன மரத்தில் கட்டிய அடையில் வைத்திருக்கின்றன. 

 

     பூமியில் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களுக்குஅந்தத் தேன் இருப்பது தெரியாது.  மலையில் ஏறி உச்சிக்குப் போனால் தெரியும். மெல்ல மெல்ல ஏறினால் இதுவரையிலும் பார்க்க முடியாதிருந்த பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றும். பார்வைக்குத் தடையாக இருந்த பொருள்கள் கீழே போய்விடும். மலையின் உச்சியை அடைந்துவிட்டால் அங்கே வளர்ந்திருக்கும் சந்தன மரம் தெரியும். அதன் கிளையிலே கட்டியுள்ள தேன் அடை தெரியும். அந்தத் தேனைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?அத்தகைய சுவைமிக்க அரிய தேன் தமக்குக் கிடைத்ததாக அருணகிரிநாதர் சொல்கின்றார். அதை "ஆனந்தத் தேன்" என்கிறார். அவருக்கு அந்தத் தேன் எப்படிக் கிடைத்தது?  ஆறுமுக தேசிகன்  அதை நுகர வழிகாட்டினான். அவன் முதலில் காட்டிய அருள் ஒளியினால் சூழ்ந்து நின்ற இருள்  அகன்றுவிட்டது. எங்கே பார்த்தாலும் ஒளி பரவியது. இதுவரையிலும் சுற்றியுள்ள பொருள்கள் இன்னவென்று தெரிந்து கொள்ளாமல் இருந்த நிலை மாறி,எல்லாம் தெரிந்தது. அருகிலேயே இருந்த ஞானமலையின் உச்சியின்மேலே இருந்த தேனைக் கண்டு சுவைத்து இன்புறும்படியாக முருகப் பெருமான் உபதேசித்த அருமையைப் பேசுகிறார் அருணகிரிநாதர்.

 

     தேன் என்பது எதைக் குறிக்கிறதுஇன்ப அநுபவங்களை வார்த்தையால் கூற இயலாது. சிற்றின்பமாக இருப்பினும் பேரின்பமாக இருப்பினும் வார்த்தைக்குள் அடங்காது. சர்க்கரை இனிக்கும்என்று சொல்கிறோம். "எப்படி இனிக்கும்?" என்று கேட்டால் வேறு பொருள் எதையாவது சுட்டிக் காட்டித்தான் விளக்க முடியும். வார்த்தை அளவைக் கொண்டு விளக்க முடியாது அல்லது சர்க்கரையை வாயில் போட்டுத்தான் அந்த இனிப்பு அனுபவத்தை உணர்த்த வேண்டும். இறைவனுடைய அருளால் கிடைக்கும் அருளனுபவங்களும் அத்தகையனவே. 

 

     தாய்க்கும் மகளுக்கும் நெருங்கிய அன்பு உண்டு. தாய் எத்தகைய பரம இரகசியங்களையும் தன் மகளிடம் சொல்வாள். ஆயினும் மணாளனோடு கூடி அனுபவித்த இன்பத்தைச் சொல் என்று மகள் கேட்டால்,அதனை அவள் எப்படிச் சொல்வாள்சொல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் சொல்ல முடியாது.  "மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு எங்ங்னே?”என்கிறார் திருமூல நாயனார்.

 

     இந்திரியங்களுக்கு உட்பட்டு நாம் அனுபவிக்கிற சிற்றின்பமே எடுத்துச் சொல்வதற்கு அரியதாக இருக்கிறது. என்றால்இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் கிடைக்கும் பேரின்பத்தை எப்படிச் சொல்லில் அடக்கிச் சொல்ல முடியும்ஆனாலும் அதை உபமான வாயிலாகப் பெரியோர்கள் சொல்வார்கள். சாலைகளில் சில இடங்களில் ஒரு பையன் ஒடுவதைப் போன்ற படம் ஒன்றை எழுதி வைத்திருப்பார்கள். அதைப் பார்த்தால் நமக்கு ஒன்றும் விளங்காமல் இருக்கலாம். ஆனால்வண்டிஒட்டிகளுக்கு, "இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது. பையன்கள் நடமாடுவார்கள். வண்டியை மெதுவாக ஒட்டு" என்ற பொருளை அது உணர்த்துகின்றது. அதை ஏன் படம் போட்டுக் காட்ட வேண்டுமென்றால், “இங்கே பள்ளிக்கூடம் இருக்கிறது. வண்டியைக் கவனமாகப் பார்த்து ஒட்ட வேண்டும்" என்று நீளமாக எழுதி வைத்திருந்தால் வேகமாகப் போகிறவர்கள் அதனை நின்று படித்துப் பார்த்துவிட்டுவண்டியைக் கட்டுப்படுத்த முடியாது.கண்ணில்பட்ட மாத்திரத்திலேயே குறிப்புப் பொருள் தோன்ற வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்கிறார்கள். இது உலக வழக்கம். அருள் வழக்கமும் அப்படியே. தாம் பெற்ற அனுபவத்தை,வேறு ஒரு உலகப் பொருளால் விளக்குவார்கள் அருளாளர்கள்.

 

     அருணகிரிநாதரும் தாம் பெற்ற இன்பத்தை "ஆனந்தத் தேன்" என்று உருவகமாகச் சொல்கிறார். சுகத்திற்கும்துக்கத்திற்கும் அப்பாற்பட்ட இன்பமே ஆனந்தம். அதனைத் "தேன்" என்று சொன்னார்.அப்படிச் சொன்னால்தான் நமக்கு விளங்கும். அந்தத் தேனைப் பற்றி,

 

"தினைத்தனை உள்ளது ஓர்,பூவினில்தேன் உண்ணாதே,

 நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்

 அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும்

 குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ"

 

என்று மணிவாசகர் பாடுகிறார்.

 

     தேனை உண்ணுவது வண்டு. இரண்டு விதமான தேன் உண்டு. நுனி நாக்கில் மட்டும் இனிக்கும் தேன் ஒன்று.உள்ளத்திலும்உயிரிலும் இனிக்கும் தேன் ஒன்று. நுனி நாக்குக்கு மாத்திரம் இனிக்கும் தேனைச் சுவைத்துப் போகிறது வண்டு. மாணிக்கவாசகர் சொல்கின்ற தேன் நாக்கை மாத்திரம் இனிக்க வைக்கவில்லை. அவர் சொல்கிற "ஆனந்தத் தேன்" உடம்புக்குள் மிகமிக வலிமை வாய்ந்த  எலும்பையும் நெகிழும்படி செய்து இனிக்கிறதாம். அதைச் சொரியும் நடனத்தை உடைய அம்பலவாணப் பெருமான் எப்போதும் சுற்றிச் சுழன்று ஆடிக் கொண்டே இருக்கிறான். அதனால் அவன் பாத தாமரை எப்போதும் அசைந்தபடியே இருக்கிறது. அதிலிருந்து "ஆனந்தத் தேன்" நாலு பக்கமும் சிதறித் துளிக்கிறது. அவனது தூக்கிய திருவடியாகிய அந்தக் குஞ்சித பாத தாமரையில் இருந்து தெறிப்பது அந்தத் தேன். அதைச் சுவைக்கின்ற ஆன்மாக்களின் உடம்பிலுள்ள மிக வலியதான எலும்புங்கூட நெகிழ்ந்து இனிமையை உணரும் என்று சொல்கிறார். ஆன்மாவையே வண்டாக வைத்துப் பாடிய பாட்டு இது.

 

     இந்த ஆனந்தத் தேனையே அருணகிரிநாதரும் சொல்கிறார். "இறைவன் அருளினாலே அந்தத் தேன் எனக்குக் கிடைத்தது" என்று தெரிவிக்கிறார். "அது எனக்குக் கிடைக்கும்படி உபதேசம் புரிந்தவன் முருகன்" என்கிறார். அருணகிரிநாதருக்கு முதலில் இறைவன் அருளால் ஒளி தோன்றியது. ஒரு பெரிய மலை தோன்றியது.அது ஞானமலை.  (பூதரம் - மலை.) அது ஒளியில் விளைந்த உயர் ஞானபூதரம் (ஞானமலை).அந்த மலையின் மேல் ஏற ஏற அவரது பார்வைக்குத் தடையாக நின்ற பொருள்கள் எல்லாம் கீழே போய்விட்டன. உலகம் முழுவதும் விரிந்து கிடக்கின்ற பொருள்களின் உண்மை இயல்புகள் புலனாயின.அந்த மலையின் உச்சிக்குப் போன பிறகு ஒரு புதிய அனுபவம் விளைந்தது. அது அளியில் (அன்பிலே) விளைந்தது. அறிவாகிற மலையில்ஏறி உச்சிக்குச் சென்ற அவருக்குஆனந்தத் தேன் கிடைத்தது. அது அன்பிலே விளைந்த "ஆனந்தத் தேன்."

 

     அறிவு நிற்கின்ற இடத்திலேஅன்பு விளைகின்ற இடத்திலேஅனுபவம் தோன்றும். ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனது. அவளுடைய பரம ரகசியங்களை எல்லாம் அறிந்துள்ள தோழிகள் அவளைச் சுற்றிச் சூழ நின்று காலையிலிருந்து பரிகாசம் செய்கிறார்கள். இரவு வந்தது. நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ள படுக்கை அறைக்குள் அவளை அழைத்துப் போகிறார்கள். தந்தை கூடத்திலேயே நின்று விடுகிறார். தாய் கொஞ்சதூரம் வந்துவிட்டு மறைந்து போகிறாள். தோழிகள் அவளோடு இன்னும் சிறிது தூரம் போகிறார்கள். அவர்களுக்குள் உயிர்த்தோழி படுக்கை அறை வரையிலும் வருகிறாள். ஆனாலும் அறைக்குள் அந்தப் பெண் ஒருத்தி மட்டுமேபோகிறாள். அதுவரை மட்டும்தான் தோழி வர முடியும். அப்பாலும் அவள் அறைக்குள் வர முடியாது. அங்கே அவளுக்கு வேலை இல்லை. அறைக் கதவு வரையிலும் வந்த தன் தோழியை அங்கேயே நிறுத்திவிட்டுஅவள் அறைக் கதவை தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் விடுகிறாள்ஆனந்தத்தை அனுபவிக்க.

 

     அதுபோலத்தான்,ஆன்மாவானது இறைவன் ஒருவன் உண்டு என்று அறிந்து,அவனை அடைய முடியாமல் தடுக்கின்ற பல இடையூறுகளையும் அருளாகிய ஒளியைக் கொண்டு போக்கி,உலக உண்மைத் தத்துவங்களை எல்லாம் கண்டுஞானமலையின் உச்சியை அடைந்துவிட்டால்அதற்குப் பிறகே அங்கே அறிவுக்கு வேலை இல்லை. ஆன்மா தனித்து போய் இறைவனோடு ஒட்டிஅன்பிலே விளைகின்ற ஆனந்தத் தேனைஅனுபவிக்க வேண்டும்.

 

     நாயகனோடு பெண் தனித்து இருக்க வேண்டிய அறை வரையிலும் துணையாக வந்த தோழி எப்படி அந்த அறையின் வெளியிலே நின்றுவிட்டாளோஅப்படியே தத்துவங்களை எல்லாம் கடந்து வருவதற்குத் துணையாக இருக்கின்ற அறிவுஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் நிலைக்கு முன்னே வெளியிலேயே நின்றுவிடும். அறிவு ஆனந்தத் தேனை அனுபவிப்பதற்குக் காரணமாய் இருக்கிறதே தவிரஅந்தத் தேனைச் சுவைக்கும் போது அது நமக்குத் துணையாக இருக்க முடியாது. அன்பு விளைந்தால் தான் இன்பம் உண்டாகும்.

 

     அறிவு செல்ல முடியாத இடத்திற்கும் அன்பு செல்லும். அறிவு மாத்திரம் இருந்தால் பலப்பல பேதங்களை எல்லாம் காணும். தெளிந்த அறிவிலே அன்பு கலந்துவிட வேண்டும்.ஒரு பெண் தாய் தந்தையர் வீட்டில் மிகச் செல்லமாக வளர்ந்தாலும் அவர்களை விட்டுவிட்டு நாயகன் வீட்டுக்குப் போய்விடுகிறாள். குழந்தையாக இருக்கும்போது அம்மாவை விட்டு ஒரு கணம் கூடப் பிரிந்து இருக்க மாட்டாள். இருந்தாலும் திருமணம் ஆகிக் கணவன் வீட்டுக்குப் போன பிறகுஎப்போதாவது ஒரு முறை வருகிறாள். வந்த அவசரத்திலேயேஅது தான் பிறந்த வீடு என்றும் பாராமல்தனது சொந்த வீட்டுக்குப் போகவேண்டும் என்று துடிக்கிறாள். பிறந்து வளர்ந்த வீடு அவளுக்குச் சொந்த வீடாகத் தெரியவில்லை.

 

     அது போலத்தான்உள்ளத்தில் மயக்கம் இருக்கிறவரையில் நாம் இப்பொழுது இருக்கிற வாழ்க்கையே மிக உயர்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் இருக்கிற வீடுதான் நமது வீடு என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால்,அறிவு மலையிலே ஏறி,மாயை நீங்கிவிட்டால்,அப்போது இந்த உலகத்திலே இந்திரியங்களின் வாயிலாக அனுபவிக்கும் இன்பங்களை எல்லாம் வெறுக்கத் தலைபட்டு விடுகிறோம். அறிவின் துணைக் கொண்டுஉண்மைப் பொருளை அறிந்துவிட்டால்அப்புறம் அங்கே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு அதோடு நின்று விடுகின்றது. உள்ளத்தில் அன்பு விளைந்தால் அந்த நிலையிலேயே இன்ப அனுபவம் உண்டாகிறது. வெறும் அறிவை மாத்திரம் வைத்துக் கொண்டு பயன் இல்லை. இறைவனுடன் கலந்து ஆனந்தத்தைச் சுவைப்பதற்குத் துணையாக இருப்பது இறவாத இன்ப அன்புதான்.

 

     அருணகிரிநாதர் சொல்லுகின்ற ஒளிமலை தேன் ஆகியவற்றை நம்மால் காணமுடியுமா என்றால்அவை யாவும் புறக்கண்ணால் காண முடியாதவை. நமக்கு அகக்கண் இல்லாவிட்டால் அவற்றைக் காணமுடியாது. விளக்க முடியாத உருவற்ற பொருளை,நாம் அறிந்த ஒரு உருவத்தைக் கொடுத்து நமக்கு விளக்கினார். தாம் உணர்ந்த பொருளை பிறருக்கு உணர்த்துவதற்காக உருவகமாகச் சொன்னார். "இவை எல்லாம் உண்மை அல்ல. நமக்குப் புரிய வேண்டும் என்பதற்காக நமது மொழியில் சொல்கிறார்.

 

     "ஒளி" என்றால் அறிவு. நாம் சொல்லிக் கொண்டு இருக்கிற அறிவு அல்ல. அது மெய்யறிவு. ஞானபூதரம் என்றால் ஞானமலை. ஞானமலையின் உச்சியில் உள்ள வெளி என்றால் அது அருள்வெளி.  பாழ் என்று சொன்னால்நமது ஊரில் பாழ்வெளி இருக்கிறது என்றால் அந்தப் பாழ்வெளிக்கு அப்பாலே ஊர் இருக்கிறது என்று தெரியும். பாழுக்குப்பக்கத்தில் மனிதன் நடமாடுகிற இடம் தெரியும். ஆனால்,இந்தப் பாழுக்கு அப்பாலே எதுவும் இல்லை. இது வெறும் பாழ் தனக்கு அப்பாலே எதுவும் இல்லாத பாழ்.இது இட எல்லை கடந்தது.கால எல்லை கடந்தது என்பதற்காக, "அநாதியிலே" என்று சொன்னார். பிறகு இது பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதற்காக "வெளியில் விளைந்த பாழ்" என்று சொன்னார். பிறகு இது இட எல்லையையும் கடந்தது என்பதற்காக "வெறும் பாழ்" என்று சொன்னார். இந்தப் பாட்டின் முன்பகுதியில் உருவம் உடைய பொருள்போல ஒளிமலை,உச்சிதேன் என்று சொன்னார். அவை நமக்கு விளங்குவதுபோல இருந்தன. நமக்கு விளங்க வேண்டுமென்று முதலில் உருவகமாகச் சொன்னார்.  பிற்பகுதியில் அதனைப் பொறிகளின் மூலமாக அனுபவிக்க முடியாது. அது கால எல்லை கடந்தது. பூத எல்லை கடந்தது. இட எல்லை கடந்தது என்று சொல்கிறார். அது "வெறும் தனி" என்கிறார். அங்கே ஒன்றும் இல்லையாம்.அந்த வெறுந் தனியைத் தெரிந்து கொள்ளுமாறு உபதேசித்தவன், "முகம் ஆறுடைத் தேசிகன்" என்கிறார்.

 

     சிவபெருமான் ஐந்து முகங்களை உடைய தேசிகன். ஐந்து முகங்களினால் அவர் இருபத்தெட்டு ஆகமங்களைச் சொன்னார். குமரக் கடவுள் ஆறுமுகம் உடையவன். இந்த ஆறுமுகச் சிவம்,ஐந்துமுகச் சிவத்துக்கே மந்திர உபதேசம் செய்தவன். அத்தகைய ஆறுமுகம் உடைய குருநாதன் எனக்கு உபதேசம் செய்தான் என்றார் அருணகிரிநாதர். 

 

     சர்க்கரை இனிக்கும் என்பதை அறிவினாலே தெரிந்து கொள்ளலாம்அல்லது அதைப்போன்ற பல பொருள்களை உபமானமாக வைத்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால். அவை எப்படி இனிக்கும் என்பதை அனுபவத்தினால் மட்டுமே அறியலாம். அனுபவத்தினால் அறிந்து கொள்வது,தெளிந்து கொள்வது ஆகும். அறிவினாலே அறியப்படுவனவற்றைப் பிறருக்குச் சொல்ல முடியும். அனுபவத்தினாலே உணர்கிறவற்றை யாருக்கும் சொல்ல முடியாது. தெரிந்த பல பொருள்களை அனுபவத்தில் அடையாமல் இருக்க முடியும். தெளிய அறிந்தேன் என்றால் அனுபவத்தினாலேயும் அதனைப் பெற்றேன் என்று பொருள். ஆறுமுகம் உடைய தேசிகனின் திருவருளினாலே அருளொளி பெற்றுஅதன் எல்லையைக் கடந்துபூத எல்லையைக் கடந்துஇட எல்லையைக் கடந்துதனக்குச் சமானம் இல்லாத தன்மையில் இருக்கின்ற ஒன்றைஅன்பினாலே விளைந்த ஆனந்தமாகிய தேனைப் பெற்றதாகவும் அது வெறும் பாழைப் பெற்ற தனி. அதனைத் தான் தெளிந்துகொள்ளும்படியாக முருகன் உபதேசம் புரிந்தான் என்பதைப் பின்வருமாறு பாடினார்.


"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல்

அளியில் விளைந்தது ஒர் ஆனந்தத் தேனை,அநாதியிலே

வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியைத் 

தெளிய விளம்பியவாமுகம் ஆறு உடைத் தேசிகனே!"

 

இதன் பொருள் ---

 

     அருட்பெருஞ்சோதியில் உண்டாகிய உயர்ந்த ஞானம் ஆகிய மாமலையின் உச்சியிலே தனிப்பெருங் கருணையினால் உண்டாகிய ஒப்பற்ற சிவானந்தம் என்னும் தேனைமிகவும் பழமையான காலத்திலேயே கட்டு நீங்கிய வெட்ட வெளியில் உண்டாகிய ஒன்றும் இல்லாத ஒன்றைதன்னிடத்தில் பெற்றுள்ள தன்னந்தனியான நிலையை அடியேன் தெளிந்து உய்யுமாறு ஆறு திருமுகங்களை உடைய குருதேசிகன் அடியேனுக்கு உபதேசித்து அருளியது என்ன வியப்பு உடைத்து?

 

     "ஒளி" என்றது,என்றும் ஒருபடித்தாக ஒளிரும் சுடரை. அந்த ஒளியானது ஆன்மாக்களின் உள்ளத்தில் படிந்துள்ள அஞ்ஞானம் என்னும் இருளை நீக்க வல்லது. அது அருள் வெளியில் விளங்குவது. கூர்த்த மெய்ஞ்ஞானம் உடையவர் தமது உள்ளக் கண்ணால் நோக்கி அறியத் தக்கது. ஓராதார் உள்ளத்தில் ஒளிந்து இருப்பது.

            "பாழ்" என்றது,  ஒன்றும் இல்லாத வெட்ட வெளியை. பொறிகளும்புலன்களும்கருவி கரணங்களும்,ஆன்ம ஆறிவும் பாழாகிய இடம் அது. அதாவது மாசுகள் அனைத்தும் நீங்கிமிகமிகத் தூயதாக இருக்கும் நிலை அது. காரிய தத்துவங்களாகிய தூல உடம்புதூல பூதம்சூக்கும பூதம்ஞானேந்திரியம்கன்மேந்திரியம்அந்தக்கரணம்பிரகிருதி ஆகிய ஏழையும்  தன்னின் வேறாகக் கண்டு அவற்றின் நீங்கிய நிலை `மாயப் பாழ்எனப்படும். அதாவதுஉலகத்தில் வாழுகின்ற நாம்உலகத்தின் இயல்பு கண்டுஅதில் பற்று வையாமல் அப்பாலே போதல் வேண்டும். அதைக் கடந்து  காரண தத்துவங்களாகிய வித்தியா தத்துவம்  ஏழினையும் தன்னின்  வேறாகக் கண்டு நீங்கிய நிலை "போதப் பாழ்அல்லது "சீவப்பாழ்எனப்படும்.  அதாவதுஉயிராய் இருக்கும் நாம் உயிரின் உண்மை கண்டு அப்பாலே போதல்.  அதையும் கடந்து முன் நீங்கியவற்றின் வாசனை  உள்ளதாகிய சுத்த தத்துவங்களையும்  வேறாகக் கண்டு  கடந்த நிலை "உபசாந்தம்"அல்லது"வியோமப் பாழ்"  எனப்படும் இதனையும் கடந்த நிலையே பந்தம் முழுதும்நீங்கிய வீட்டு  நிலைஆகும்.அருளைத் தேடும் நாம் அருளின் உண்மை கண்டு அப்பாலே போதல் வியோமப் பாழ்.

     "வெறும் தனி" என்றதுஒன்றும் அற்ற இடமாகிய தன்னந் தனி நிலை. அந்த நிலையில் விளையும் பேரின்பத்தின் இனிமையை சொல்லால் எழுதிக் காட்ட முடியாது. வாக்கால் சொல்லவும் முடியாது. அனுபவித்து உணர மட்டுமே முடியும். "தன்னந் தனி நின்றது தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவே?" என்று கந்தர் அனுபூதியில் இந்த அனுபவத்தைக் காட்டி உள்ளார் அருணை வள்ளலார்.

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...