இறையருள் கிட்ட எளிய வழி
-----
இருக்கின்ற ஒன்றுதான் வெளிப்படும். இல்லாத ஒன்று வெளிப்படுவதற்கு இல்லை. "உள்ளது போகாது, இல்லது வாராது" என்பது சற்காரிய வாதம். எல்லோர் உள்ளத்திலும் ஆண்டவன் இல்லாமல் இல்லை. புதிதாக அவன் வெளிப்படுவதில்லை. மறைந்திருந்தவன் வெளிப்படுகிறான். "ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்கின்றார் மணிவாசகப் பெருமான். தூய்மையான உள்ளம் உடையவர்களாக இருந்தால், இறைவன்அருள் வந்து தானே வெளிப்படும். அது வெளிப்பட முடியாமல், நம்மிடத்தில் உள்ளஅகங்கார மமகார அழுக்குகள் அதற்குத் தடையாக இருக்கின்றன. அந்த அழுக்கைக் கழுவி விட்டால், அருள் தானே வெளிப்படும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"தடுங்கோள் மனத்தை,விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும்
இடுங்கோள்,இருந்தபடி இருங்கோள்,எழுபாரும் உய்யக்
கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத் தொளைக்க வைவேல்
விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே".
என்பது "கந்தர் அலங்காரம்" என்னும் பகுதியில் அருணகிரிதாநர் பாடியருளிய ஓர் அற்புதமான பாடல். இந்தப் பாடலின் மூலம் முருகப் பெருமானின் இன்னருளைப் பெறுவதற்கு ஓர் உபாயத்தை நமக்கு அருளிச் செய்கின்றார்.
இதன் பொருள் ---
அன்பர்களே! உங்கள் மனத்தைப் பொறி புலன்களின் வழியே போகவிடாமல் தடுத்து வையுங்கள். கோபத்தை அறவே விட்டு விடுங்கள். எக்காலத்திலும் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல், தானம் கொடுத்துக் கொண்டு இருங்கள். மனதை ஒரு நிலைப்படுத்தி இருந்தவண்ணம் இருங்கள். இப்படிச் செய்தீர்களானால், ஏழு உலகங்களும் பிழைக்கும்படியாக, கொடிய கோபத்துடன் இருந்த சூரபதுமனோடு, கிரவுஞ்ச மலையும் பிளந்து அழியும்படியாக கூர்மை பொருந்திய வேலை விடுத்து அருளிய முருகப் பெருமானது திருவருளானது தானாகவே வந்து உமக்கு வெளிப்பட்டு ஆட்கொள்ளும்.
மற்றவர்களுக்கு அறிவுரை கூற வருகின்றவர்கள், அந்த அறிவுரையின் படி வாழ்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். வெறும் வாய்வேதாந்தம் உதவாது. உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உபதேசம் செய்யலாம். உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களில் இரண்டு வகையினர் உண்டு. தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், மற்றவர்கள் கீழான நிலையில் இருப்பது போலவும் எண்ணிக் கொண்டு, உபதேசம் செய்ய வருவோர் சிலர். தாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்ற நினைவே இல்லாதவர்கள் சிலர். அவர்கள் பின்னும் உயர்ந்த நிலைக்கு ஏறிவிடுகிறார்கள். செருக்கு எந்த நிலையிலும் வந்து விடும். செருக்குக் கூடாதென்று பிறருக்குச் சொல்லச் சொல்ல,அந்த அறிவைப் பிடித்துக்கொண்டே செருக்கு வந்துவிடும். தாம் உயர்ந்த நிலையில் உள்ளோம் என்னும் நினைவு தோன்றவே கூடாது.
தாம் பெற்ற பேற்றாலே உயர்ந்த நிலை உண்டு. அப்படிப் பெற்றோம் என்பதையும் மறந்து விடுவதனாலே மேலும் உயர்ந்த நிலையும் ஒன்று. ஆக இரண்டு உயர்வு கிடைக்கும். அருணகிரிநாதப் பெருமான்,உலகத்து உயிர்கள் மீது வைத்த அன்பின் காரணமாக உபதேசம் புரிகின்றார்.அடியார்கள் பலரும் இறைவன் அருளைப் பெறத்தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவர்களுக்கு எளிமையான வழியைக் காட்டி, அறிவுரை கூறுகின்றார்.
இறைவன் திருவருளைப் பெறவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கு ஏற்ற வகையில் உழைக்கும் ஆற்றல் நம்மில் பலருக்கும் இல்லை. மனைவி மக்களிடையே வாழவேண்டும். தினமும் வயிறார உண்ண வேண்டும். எந்த எந்தக் காரியங்களைச் செய்து வருகிறோமோ,அந்த அந்தக் கடமைகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போதே இறைவன் திருவருள் வந்து வாய்க்குமா? நாளும் உண்ணுகின்ற உணவில், அணிகின்ற ஆடையில், நுகர்கின்ற உலகியல் இன்பத்தில் சிறிதும் குறைவுபடாமல் இருக்கும்போதே, இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமென்ற ஆசை உலகத்திலுள்ள எல்லா மக்களிடத்திலும் இருக்கிறது.
தவநெறியில் செல்ல வேண்டுமானால், இப்பொழுது அனுபவித்து வரும் இன்பங்களைக் கைவிட வேண்டும். இறைவனது திருவருள் பெற்று விட்டால் அழிவே இல்லாத, எல்லையே இல்லாத பேரின்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது நாம் அடைகின்ற உலக இன்பம் கையின் மேல் இருக்கிறது. பேரின்பம் கிடைப்பது உண்மையாக இருந்தால் கையில் கிடைப்பதை விட்டு விடலாம்.
நாம் வாழுகின்ற வாழ்க்கை முறையிலேயே இறையருளை எளிதாகப் பெறுவதற்கு வழி ஏதேனும் உண்டா? இந்தக் கேள்வி எல்லாக் காலத்தும் எழுந்தது உண்டு. இப்படிக் கேட்பவர்களைப் பார்த்து, "உனக்கும் வழி உண்டு" என்று சொன்னால், அவரைவிட அருள் உள்ளம் படைத்தவர் யாரும் இல்லை. "நீ இப்பொழுது இருக்கிறபடியே இருந்தால், இறைவன் அருள் தானே உனக்கு வந்து வெளிப்படும்" என்று அருணகிரிநாதர் சொல்கிறார்.
"இறைவனுடைய திருவருள் எப்படிக் கிடைக்கும் என்ற ஆராய்ச்சி வேண்டாம். அதைத் தேடி அலையவும் வேண்டாம். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தானாக அவன் அருள் வந்து கிடைக்கும்"என்று அவர் சொல்கிறார். அருணகிரிநாதர், "இருந்தபடி இருங்கள்" என்று மாத்திரம் சொல்லி இருந்தால்,எல்லா மக்களும் அந்த இன்பத்தை அடைய முடியும். ஆனால், அதற்கு முன்னாலே செய்யவேண்டிய சிலவற்றைச் சொல்லுகின்றார்.
"அறம் செய்ய விரும்பு" என்று குழந்தைகளுக்கு உபதேசத்தை வைத்த ஔவைப்பாட்டி, அகர வரிசையில் சொல்லத் தொடங்கி, அடுத்தபடி "ஆறுவது சினம்" என்று அறிவுரை கூறுகின்றார். இவை இரண்டும் மனித வாழ்க்கைக்குப் பயன் தருகின்ற செயல்கள். வாழ்க்கையில் மனிதர்கள் பெறவேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் ஆகும். இவற்றையே தர்ம, அர்த்த,காம,மோட்சம் என்று வடமொழியில் கூறுகின்றார்கள்.
"அறம் செய விரும்பு" என்று அறத்தையும், "பொருள்தனைப் போற்றி வாழ்" என்று பொருளையும், "மெல்லியலார் தோள் சேர்" என்று இன்பத்தையும், "வீடு பெற நில்" என்று வீட்டு நெறியையும் காட்டினார் ஔவைப் பிராட்டியார். ஆக, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நெறிகளையும் கடைப்பிடித்தால் இறைவன் அருள் தானாக வந்து சேரவேண்டும். அதற்கான சாதனங்கள் என்னவென்று சொல்ல வருகிறார் அருணகிரிநாதர்.
நன்னெறியில் நிற்பது என்றால், மனமானது புலன்களின் வழியே செல்லாமல் இருக்கவேண்டும். மனமானது இயல்பாக அப்படி இருக்காது. மனத்தை நன்னெறியில் பழக்கவேண்டும். அதற்கு அறிவு மட்டும் துணை செய்யாது. உள்ளத்தில் அன்பு மேலிட வேண்டும். "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" என்றார் தாயுமான அடிகளார்.
"மனம்ஆன ஒருசிறுவன் மதிஆன குருவையும்
மதித்திடான், நின்அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான், சும்மா இரான், காம
மடுவின் இடை வீழ்ந்து சுழல்வான்,
சினம்ஆன வெம்சுரத்து உழலுவான், உலோபம்ஆம்
சிறுகுகையின் ஊடு புகுவான்,
செறுமோக இருள்இடைச் செல்குவான், மதம் எனும்
செய்குன்றில் ஏறி விழுவான்,
இனம்ஆன மாச்சரிய வெம்குழியின் உள்ளே
இறங்குவான், சிறிதும் அந்தோ
என்சொல் கேளான், எனது கைப்படான், மற்றுஇதற்கு
ஏழையேன் என் செய்குவேன்?"
என்று வள்ளல்பெருமான் மனத்தின் சேட்டைகளை விரிவாக எடுத்துக் காட்டி உள்ளார். நம்மிடத்திலும் அரக்க குணம் பொருந்தி மறைந்து உள்ளது. அது அவ்வப்போது தலை தூக்கும். எப்போது தூக்கும் என்பது தெரியாது. ஆணவத்தின் வலி அப்படிப்பட்டது.
சூரபதுமன் தவம் செய்தான். அறிவை வளர்த்தான். ஆனால் அன்பு என்பது அவனிடத்தில் இல்லை. அன்பு, கருணை, இரக்கம் ஆகிய அடிப்படைக் குணங்கள் இல்லாமல் வளர்ந்து கொண்டே போன அறிவினால், அவன் தன்னைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்று எண்ணி உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் துன்பத்தைத் தருகின்ற ஆற்றல் படைத்தவனாக இருந்தான். அவனது தவத்திற்கு ஆதாரபீடமாக அன்பு அமைந்திருந்தால் அவனது அறிவு நன்மையை உண்டாக்கி இருக்கும். வெற்று அறிவினால் நன்மை விளையாது என்பதைத் திருவள்ளுவ நாயனார் நிறுவி உள்ளார். "அறிவினால் அவது உண்டோ? பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை" என்பது அவர் அருள்வாக்கு. இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமானால் அறத்தோடு இணைந்த தவம் செய்ய வேண்டும். அருளுக்குத் தாயாக இருப்பது அன்பு என்பதும் திருவள்ளுவ நாயனார் காட்டியதே.
அன்பு உள்ளத்தில் இருந்தால் அற உணர்வும் அங்கே இருக்கும். அதற்கு மனத்தைப் புலன்களின் வழியே போகாமல் தடுத்து நிறுத்தி, ஒருமுகப் படுத்தவேண்டும். எனவே, "தடுங்கோள் மனத்தை" என்று முதலிலேயே சொன்னார் அடிகளார். "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அறன்" என்றார் திருவள்ளுவ நாயனார்.
அறம் செய்வது புறத்தில் மட்டும் இருந்தால் போதாது. மனத்திலிருந்து அந்த அற நினைவு உண்டாக வேண்டும். அறமல்லாத வகையிலே புகும் மனத்தை, அறத்திலே செலுத்த வேண்டும். மனம் தூய்மை உடையதாக, அன்பு உடையதாக இருந்தால், அங்கே உண்டாகின்ற எண்ணங்கள் உண்மையான செயலாக மாறும். ஒன்று மனத்தைத் தடுப்பது. மற்றொன்று மனத்தை நிறுத்துவது. "அறம் செய விரும்பு" என்று ஔவைப் பிராட்டி முதலில் சொன்னதன் பொருள் இதுவே.
அடுத்து, ஔவைப் பிராட்டி சொன்னது, "ஆறுவது சினம்". அருணகிரிநாதப் பெருமான் "விடுங்கோள் வெகுளியை" என்றார். மனத்தை ஒரு நிலைப்படுத்த முயலும்போது, அப்போதைக்கு கொஞ்சம் வசப்பட்டது போலத் தோன்றும். ஆனால், பல நேரங்களில் நமது இச்சைப்படி போக முடியாத காரணத்தினால் நம்மை நாமே சினந்து கொள்வோம். பிறரை அடித்துப் பழகின கை, அடிக்க ஆள் அகப்படாவிட்டால் தன்னையே அடித்துக் கொள்ளும். வெறிபிடித்த நாய், கடிப்பதற்கு வேறு எதுவும் அகப்படாவிட்டால் தன்னைத் தானே கடித்துக் கொள்ளும். எனவே, சினத்தை விட வேண்டும் என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
அறிவுரை கூற எத்தனையோ இருக்க, கோபத்தை விடுங்கள் என்று சொன்னாரே என்று எண்ணலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனத்திற்கு உண்டு. இப்படிப் பற்றிக் கொள்ள நினைப்பதைத் தான் காமம் என்பர். “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்" என்று திருவள்ளுவர் பேசுகின்றார். மனிதர்களுக்குத் துன்பம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அவா. மற்றொன்று வெகுளி. அடுத்ததாக இருப்பது, ஒன்றை ஒன்றாக நினைக்கின்ற மயக்கம். மனத்தை நிறுத்த வேண்டுமானால் காமத்தை நிறுத்த வேண்டும். மனத்தின் சஞ்சாரம் அவாவின் வெளியீடு. அவா என்பதுதான் எல்லாப் பிறப்புக்கும் மூல வித்து. காமத்தை அடக்கு என்று சொல்வதும், மனத்தைத் தடு என்று சொல்வதும் ஒன்றுதான். ஆசையினால் கோபம் உண்டாகிறது. காமம், வெகுளி இரண்டும் ஒழிய வேண்டும். முதலில் அதை அப்படியே சொல்லாமல், 'தடுங்கோள் மனத்தை' என்றும்,அடுத்து 'விடுங்கோள் வெகுளியை' என்றும் சொன்னார்.
பலப்பல பொருள்களிடத்தில் பற்றுக் கொண்டுள்ள மனத்தினிடம், பற்றை விட்டுவிடு என்று சொன்னால் பயன் இல்லை. தேடின பொருள்களிடத்தில் பற்று இருப்பது போல, அந்தப் பொருள்களைப் பிறருக்குக் கொடுப்பதிலும் விருப்பம் வைக்க வேண்டும். பலப்பல பொருள்களை ஈட்டிப் பற்று வளர்கிறது. அவற்றை உள்ளம் மகிழ்ந்து பிறருக்குக் கொடுப்பதன் மூலம் அந்தப் பற்றுக் குறைந்து விடுகிறது.
ஒரு குழந்தை காகிதத்தை நிறையக் கிழிக்கிறது. கிழிக்காதே என்று சொன்னால், அப்போதைக்குப் பயந்து கொண்டு நம் முன் சும்மா இருந்தாலும்,நாம் இல்லாதபோது அது எல்லாப் புத்தகங்களையும் கிழித்து விடும். ஆகவே, கிழிக்காதே என்று அச்சுற்றுத்துவதற்குப் பதிலாக,'கிழித்துப் போட்டவைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் போடு' என்று சொல்ல வேண்டும். கிழித்துப் போட்டபோது, சுத்தம் இல்லாமல் இருந்த இடம், மீண்டும் சுத்தமாகி விடும். பொருள்களை ஈட்டுவதன் மூலம் மனம் அழுக்கு அடைகிறது. ஈட்டிய பொருளைப் பிறருக்குத் தானம் செய்வதன் மூலம், அழுக்கு ஏறிய மனம் தூய்மை ஆகிவிடுகிறது.
எனவே, "தானம் என்றும் இடுங்கோள்" என்று சொன்னார் அருணகிரிநாதப் பெருமான். தானம் என்பது ஈட்டிய பொருளைக் கொடுப்பது மட்டும் அல்ல. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களாலும் முறையே நல்லதை நினைப்பதும், நல்லதையே பேசுவதும், நல்லதையே செய்வதும் வேண்டும். மனத்தின் அடியாக நினைவும், அதன் வழியாகச் சொல்லும், அதன் வழியாகச் செயலும் நிகழும். எனவே, எல்லாவற்றிற்கும் அடிப்படை மனமே. மனத்தில் எப்போதும் நல்ல நினைவுகள் இருக்கவேண்டும்.
செயலைக் காட்டிலும் சொல் நுட்பமானது. அதைக் காட்டிலும் எண்ணம் நுட்பமானது. அவற்றின் விளைவுகளும் அப்படியே வரவர நுட்பமானவையாகவே இருக்கும். பிறருக்குத் தானம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தின் விளைவு. உள்ளத்தில் அன்பு இருந்தால்தான் கொடுக்கத் தோன்றும். உள்ளத்தில் பற்று மெல்ல மெல்ல நழுவி, தன்னிடம் உள்ள பொருள்களை எல்லாம் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற அன்பு நினைவு எப்பொழுது உண்டாகிறதோ, அப்பொழுது இறைவன் நமக்கு அருள் பாலிக்க வருகிறான். "இரப்பவர்க்கு ஈய வைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்" என்ற அப்பர் பெருமான் அருள்வாக்கை நினைவில் கொண்டு பார்த்தால், "தானம் என்றும் இடுங்கோள்" என்ற அருணகிரிதாநப் பெருமான் அருள்வாக்கின் அருமை விளங்கும்.
அடுத்து, "இருந்தபடி இருங்கோள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். இருந்தபடியே இருந்து கொண்டு சனகாதி முனிவர்க்கு ஞானத்தைப் போதித்தார் தென்முகக் கடவுள் ஆகிய சிவபரம்பொருள். மனத்தின் துடிப்பும் அற்றுப் போய் இருப்பதுதான் இருந்தபடி இருக்கின்ற நிலை. அப்போதுதான் அருள் விளக்கம் தோன்றும். "நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்" என்று தமது அனுபவத்தை அப்பர் பெருமான் காட்டினார். எப்படி இருந்தால், இறையருள் தானாக வந்த பதியுமோ, அப்படி இருக்கவேண்டும். நமது முயற்சி எதுவும் அங்கே பலிக்காது. இறைவன் சொல்லும் பொருளும் கடந்த நிலையில் விளங்கும் அனுபவப் பொருளாக இருப்பவன். அவன் எப்படி இருப்பான் என்பதை வார்த்தைகளால் விரித்துக் கூறலாம். அது முற்றுப் பெறாது. மனத்திலே சலனம் இருக்கின்ற வரையில் இப்படி இருக்குமா? அப்படி இருக்குமா? என்ற சிந்தனையும், கற்பனையும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், இறைவனோ "கற்பனை கடந்த சோதி"
அப்பர் பெருமான் இந்த அனுபவத்தை அற்புதமாக ஒரு தேவாரப் பாடலால் காட்டி உள்ளார்.
"மைப்படிந்த கண்ணாளும் தானும்,கச்சி
மயானத்தான்,வார்சடையான்,என்னின் அல்லால்,
ஒப்பு உடையன் அல்லன்,ஒருவன் அல்லன்,
ஓர்ஊரன் அல்லன்,ஓர் உவமன் இல்லி;
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதே"
இதன் பொருள் ---
இறைவன் மைபூசிய கண்ணள் ஆகிய உமாதேவியும் தானுமாக, கச்சிமயானம் என்னும் திருத்தலத்தில் வாழ்பவனும், நீண்ட சடையினை உடையவனும் ஆவான் என்று சொன்னால், அவன் அப்படிப்பட்டவன் மட்டுமே அல்ல. அவன் ஒப்பாக எப்பொருளையும் உடையவன் இல்லை. உலகப் பொருள்களில் அவன் ஒரு பொருளாக இருப்பது இல்லை. ஒரு ஊருக்கே உரியவனும் அவன் இல்லை. எந்த ஒரு பொருளையும் அவனுக்கு உவமையாக நிறுவ முடியாது. அதனால் அவனுடைய தன்மை எப்படிப்பட்டது என்பதையும், அவன் எந்த வடிவத்தோடு உள்ளவன் என்பதையும் காணவேண்டுமானால், அவனுடைய திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காண முடியும். அல்லாமல்,மற்றப் பொருள்களைக் குறிப்பட்டுச் சொல்வதைப் போல அவன் இப்படிப்பட்டவன், இன்ன நிறத்தை உடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று சொல்லோவியாகவோ, எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்ட முடியாது.
"பொங்கு பல சமயம் என்னும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடலே" என்று வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்து, இறைவனது சொரூபத் தன்மையைக் காட்டினார். கங்கு என்றால், "வரம்பு" என்று பொருள். கடலுக்கு வரம்பு இல்லை. கரையும் இல்லை. கரையாக உள்ளவை எல்லாம் நிலப் பரப்புக்களே. கடலுக்குக் கரை இருப்பதாக எண்ணுவது பொருளற்றது. கடலிலே அலைகள் ஓயாது இருந்துகொண்டே இருக்கும். கடலின் அடியில் வளம் நிறைந்து உள்ளது. ஆனால், அலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டே இருப்பதால் அடியில் இருப்பதை நம்மால் காண இயலாது. கடலைப் போலவே, நம்முடைய மனமானது எப்போதும் ஏதவாது ஒரு வியாராபத்திலே இருந்துகொண்டே இருக்கும். மனம் அலை பாய்கின்றதாக நம்முடைய பெரியவர்கள் கூறுவார்கள். அலை இல்லாத ஒரு கடலும் உண்டு. அது சிவஞானக் கடல் என்கின்றார் வள்ளல் பெருமான். "அலை இலாச் சிவஞான வாரியே" என்பது அவரது அருள்வாக்கு. அலைகின்ற நீரில் அடியில் உள்ளது எதவும் தெளிவாகத் தெரியாது. சலனம் அற்ற நீரில்தான் அடியில் உள்ளது தெளிவாகத் தெரியும். மனோவியாபாரத்தில் திளைத்துக் கொண்டு இருக்கின்ற வரையில், உண்மைப் பொருள் விளங்காது. மனோவியாபாரம் அற்று, அலை அற்ற நீர் போல் உள்ளம் தெளிவடைந்து இருந்தால், மெய்ப்பொருள் அனுபவம் விளங்கும். இதை,
"உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்!
கரை அற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ?
திரை அற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரை அற்று இருந்தான் புரிசடையோனே".
என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.
கடலைப் போல, பரம்பொருளானது பரந்து விரிந்த பொருள். அதனை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து காட்ட முடியாது. அது சொல்லுக்குள் அடங்குவது அல்ல. கடலுக்குக் கரை இருப்பதாக எண்ணிக் கொண்டு கரையைக் காண முயலுவது அறிவுடைமை ஆகாதது போல், சொல்லால் அளக்கமுடியாத ஒரு பொருளை சொல்லால் உணர்த்த முயலுவது, ஊமை ஒருவன் தனது மனக் கருத்தைப் பிறர் உணரச் சொல்லுவது போலவே அமையும். அலைகளே இல்லாத கடல் ஒன்று இருக்குமானால், அதற்கு ஒப்பாக உங்களது மனமானது சலனம் அற்று இருக்குமானால், தெளிந்த அறிவு உண்டாகும். அந்த அறிவில் சிவபரம்பொருள் ஒளிரும்.
கடலானது அலைகள் இல்லாமல் இருக்கமுடியாது. ஆனால், அலைகின்ற மனித மனமானது அலைபாயாமல் இருக்க முடியும். அலைகள் ஒழியாத பிரபஞ்சக் கடலை நீந்தி, முத்தி என்னும் கரை ஏறி, அலை இல்லாத சிவஞானக் கடலில் படிந்து என்றும் இன்புறலாம். அதற்கு மனம் அழுக்கு அற்று இருக்கவேண்டும்.
எனவே, மனத்தில் பலகாலமாக ஏறி இருக்கிற அழுக்கைத் துடைக்க வேண்டும். காமம் அற்றுப் போக மனத்தைத் தடுக்க வேண்டும். சினத்தை ஓட்ட வேண்டும். பல காலமாக இருந்த பற்றுக் கழிவதற்காகத் தானம் செய்ய வேண்டும். இந்த மூன்று முயற்சியும் தீவிரமாக இருந்தால் மனத்தில் ஏறியுள்ள மாசு நீங்கி, சுத்தமாகும். சுத்தமாக இருக்கின்ற இடத்தில்தான் நாமும் இருக்க விரும்புவோம். சுத்தமாக இருக்கின்ற மனத்தைத் தான் இறைவன் தனது கோயிலாக்கிக் கொள்ள விரும்புகின்றான்.
ஒரு விளக்கை ஏற்றி வைத்து அதன்மேல் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தால் விளக்கின் ஒளியைப் பார்க்க முடியாது. பாத்திரம் விளக்கின் ஒளியை மறைத்து, விளக்கை நமக்குக் காட்டாமல் தன்னை மட்டுமே காட்டுகிறது. இதைப்போல், அகங்கார, மமகாரம் உடைய மனத்தில் இறைவன் இருந்தாலும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவன் அருள் ஒளியானது வெளிப்படுவதற்கு அகங்கார மமகாரங்களே தடையாக இருக்கின்றன. அகங்காரம், மமகாரம் நீங்கிய மனத்தில், தூய கண்ணாடி போல் தம்முள் இருக்கும் ஆண்டவன் அருள் ஒளி வெளிப்படும்.அருள் ஒளியானது வெளிப்பட முடியாமல் தடையாக உள்ள அகங்கார மமகார அழுக்கைக் கழுவி விட்டால், இறை அருள் தானே வெளிப்படும்.
ஆற்று நீர் பாய்ந்து கொண்டே இருக்கிறது. அதன் கரையில் உள்ள மேடான வயலில் ஆற்று நீர் தானாகப் பாய்வதில்லை. ஆற்றோரத்தில் உள்ள மேட்டை வெட்டி,நடுவில் இருக்கிற புதர்களை எடுத்துப் பள்ளமாக்கி விட்டால், ஆற்று நீர் தானாகப் பாயும். அதைவிடுத்து, ஆற்று நீரை குடம் குடமாக எடுத்து ஊற்றினாலும், வயல் முழுதும் பாயாது.
நான் என்னும் அகங்காரம் ஆகிய அகப்பற்றும், எனது என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றும் நீங்கினால், அந்த உள்ளத்தில் இறையருள் தானாகவே வந்து வெளிப்பட்டுத் தோன்றும். பற்று அறுக்க வேண்டுமானால் மனமானது புலன்வழிப் போதல் கூடாது. உள்ளத்தில் தோன்றுகின்ற காமம், அதன் வெளிப்பாடான வெகுளி, உலகத்துப் பொருளை உண்மையாகக் கொண்டு அவற்றைப் பற்றிக் கொண்டிருக்கும் மயக்கம் ஆகிய மூன்றையும் நாம் ஒழித்துவிட்டால் அருள் மயமாக இருக்கிற ஆண்டவன் வெளிப்படுவான்.
உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பது இறைவன் கருணை. சூரபதுமனும் கிரெளஞ்சாசுரனும் அழிந்தால், அகங்காரமும் மமகாரமும் ஒழிந்தால், உலக மக்கள் இன்புறுவார்கள். தான தருமங்கள் நடைபெறும். தவம் செய்ய முடியும்என்பதற்காக வேலை விடுத்து அருளினார் முருகப் பெருமான். இவ்வாறு கூர்மையான வேலை விட்ட முருகனுடைய அருள் வந்து தானே,உமக்கு வெளிப்படும். மனத்தைத் தடுத்து, கோபத்தை அழித்துவிட்டு ஈட்டி வைத்திருக்கின்ற பொருள்களைத் தானம் செய்து, நீங்கள் இருந்தபடி இருங்கள்என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிச் செய்த உபதேசம்.
இந்த எளிய, அரியஉபதேசத்தைக் கடைப்பிடித்தால் இறைவன் அருள் தானாக வந்து வெளிப்படும்.