இறையருளை எளிதில் பெறுதற்கு வழி

 


இறையருளை எளிதாகப் பெறலாம்

----

 

     பெறுவதற்கு அரிய பேறு இறைவன் திருவடி நிலை. அதை எளிமையாகப் பெறுவதற்கு வழி உண்டு. அடியார் போல நடித்துக் கொண்டு இருந்தாலே போதும். வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

 

     அடியவர் போல நடித்துக் கொண்டு இருந்தால்அந்த நடிப்புத் திறமைக்கு ஏற்ற பயனை எதிர்பார்த்து இருக்கவேண்டும். அல்லாமல்உண்மை அடியார்கள் பெறுகின்ற அரிய பேற்றினை விரைந்து பெறுவதற்கு விருப்பம் கொள்ளக் கூடாது. நாடகத்தை நடிப்பவன் அதற்குரிய பயனை விரும்புவது முறையானதுதான். நடிப்பு முற்றுப் பெறாமல் நடித்துக் கொண்டு இருக்கும்போதேஇடையிலேயே பயனைப் பெறுவதற்கு விரைதல் கூடாது. உண்மை அடியவர்க்குஉரிய பலன் எப்படியும் கிடைக்கும். உண்மை அடியவர் போல நடிப்பவர்க்குதாம் விரும்பிய பலன் கிடைக்காமல் போகுமோ என்னும் அச்சம் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கும்.

 

     நாடகத்தில் இந்திரனைப் போல நடிப்பவன் ஒருவன்தனது நடிப்புக்கு உரிய பயனை விரும்புவான். அல்லாமல் இந்திரனுக்கு உரிய போகங்களை விரும்பமாட்டான். விரும்பினாலும் அவனால் பெற முடியாது. அதுபோலவேஅடியவராக நடிப்பவன் அதற்கு உரிய பயனை மட்டுமே பெறமுடியும். உண்மை அடியவர்கள் பெறுகின்ற வீடுபேற்றை அவனால் பெறமுடியாது.

      

    இறையருளைப் பெறுவதற்கு அன்புநெறியைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும். அதுவே அழியாத பேரின்பத்திற்கு வாயிலாக அமையும். உள்ளத்தில் அன்பு உள்ளவர்கள் உண்மை அடியவர்களாக இருப்பார்கள். அன்பு இல்லாதவர்கள் நாடகம் நடிப்பதால் பயனைப் பெறாமல் போவார்கள். எனவேதமக்கு இறைவனிடத்தில் இடையறாது நிகழும் மெய்யன்பினைத் தந்து அருளுமாறு வேண்டுகின்றார் மணிவாசக் பெருமான்.

 

"நாடகத்தால் உன்அடியார் போல் நடித்துநான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்விரைகின்றேன்;

ஆடகச்சீர் மணிக்குன்றே! இடையறாஅன்பு உனக்கு என்

ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள்எம்உடையானே".   --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     பொன்னில் பொருந்தி உள்ள மாணிக்க மணியைப் போன்றவரே! என்னை அடிமையாக உடைய பெருமானேநான் உனது உண்மை அடியவர் போல வேடமிட்டுக் கொண்டு இந்த உலகத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றேன். உண்மை அடியவர்கள் பெறும் வீடுபேற்றைப் பெறுவதற்கு பெரிதும் விரைந்து முந்துகின்றேன். (அது கிடைக்காது என்பதை நான் அறிவேன். என்னிடத்து உண்மை அன்பு இல்லைஆதலால்) உன்னிடத்தில் இடையறாது நிகழும் மெய்யன்பு என் உள்ளத்தின் உள்ளே நிலைபெற்று இருந்துஅதனால் உள்ளம் உருகும்படியான நிலையை அடியேனுக்கு உதவி அருள வேண்டும்.

 

     அடியவர் போல நடித்துக் கொண்டே பயன் ஏதும் விரும்பாமல் இருந்தால்நாளடைவில் உண்மை அடியவர்கள் பெறுகின்ற பயனை எளிதில் பெறலாம் என்று வழி காட்டுகின்றார் குமரகுருபர அடிகளார்.

 

     இறை அடியார்கள் வேற்றுமை பாராட்டாதவர்கள். விருப்பு வெறுப்பு என்னும் இருமையும் கடந்தவர்கள். வேடத்தால் அடியவனாக ஒருவன் அவர்களிடத்தில் சென்றாலுமேஅந்த வேடத்தைக் கண்ட உடனே மெய்யுருகி நிற்பார்கள்."மால் அற நேயம் மலிந்தவர் வேடமும்ஆலயம்தானும் அரன்" எனத் தொழுவார்கள். அடியவர் திருக்கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின்அவன் நாளடையவில் மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் இத்தகு சிறந்த பயனை இயல்பாகவே தரும் என்பதை"சிதம்பர மும்மணிக் கோவை"யில்குமரகுருபர அடிகளார் கூறுமாறு காண்க.

 

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,

கைதவ ஒழுக்கம் உள்வைத்துப் பொதிந்தும்,

வடதிசைக் குன்றம் வாய்பிளந்து அன்ன

கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு

உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு

ஒருபெருந் தவமும் உஞற்றிலன்உஞற்றாது

எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பில்,

கூடா ஒழுக்கம் பூண்டும்வேடம்

கொண்டதற்கு ஏற்பநின் தொண்டரொடு பயிறலில்

பூண்ட அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்

நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,

பல்நாள் நோக்கினர்ஆகலின்அன்னவர்

பாவனை முற்றிஅப் பாவகப் பயனின் யான்

மேவரப் பெற்றனன் போலும்ஆகலின்

எவ்விடத்து அவர் உனை எண்ணினர்நீயும் மற்று

அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றேஅதனால்

இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்

ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்

மாபெரும் காயம் தாங்கிஓய்வு இன்று

அருள் முந்து உறுத்தஐந்தொழில் நடிக்கும்

பரமானந்தக் கூத்த! கருணையொடு

நிலைஇல் பொருளும்நிலைஇயல் பொருளும்

உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,

புல்லறிவு அகற்றிநல்லறிவு கொளீஇ,

எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்

செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட

நல் தவத் தொண்டர் கூட்டம்

பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே". 

 

இதன் பொருள் ---

 

     தவத்தைப் புரிவதற்கு உரிய வேடத்தை மட்டும் உடம்பில் புனைந்துகொண்டு,பொய்யான ஒழுக்கத்தை எனது உள்ளத்தில் வைத்து,வடதிசையில் உள்ள பொன்மயமான மேருமலை வாய் பிளந்ததைப் போன்று ஒளி விளங்குகின்ற பொன்னம்பலத்தில் பெருமான் புரிகின்ற ஆனந்தத் திருநடனத்தைக் கும்பிட்டதன் பயனா,நான் ஈடேற்றத்தைப் பெற்றேன். ஆனால்,ஒரு பெரிய தவமும் செய்ய அடியேன் முயலவில்லை. அப்படி முயலாத நிலையிலேயேபெறுதற்கு அரிய பேற்றினை எளிதாக எப்படிப் பெற்றாய் என்று கேட்டால்உள்ளத்தில் உண்மையோடு கூடாத இழிந்த ஒழுக்கத்தை நான் பூண்டு இருந்தும்நான் பூண்டிருந்த அடியார் வேடத்திற்குப் பொருந்தஉனது அடியாரோடு நாளும் கூடி இருந்ததன் காரணமாகஎனது பொய் வேடத்தையே மெய்வேடமாகக்  கருதிஎன்னைக் காணும்போது எல்லாம்உனது நிலை என்னிடத்தில் இருப்பதாக அவர்கள் உள்ளத்தில் எண்ணி எண்ணி,அந்தப் பாவனையில் பலநாளும் என்னைப் பார்த்தனர். ஆதலால்அவர்களுடைய பாவகமானது முற்றுப் பெற்றுஅந்தப் பாவனையின் பயனை நான் பெற்றேன், (நான் உண்மை அடியவனாகவே மாறிவிட்டேன்) ஆதலால்,அவர்கள் எவ்விடத்தில் நீ இருப்பதாக எண்ணினார்களோஅந்த இடத்தில் நீ இருப்பாய் என்று சொல்லுதற்குவேறாக ஐயம் இல்லை. அதன் பயனாக, சூரிய சந்திரர் ஆகிய இரு பெரும் சுடர்களும்புருடன் என்னும் ஆன்மாவும்,ஐந்து வகையாகின்ற பூதங்களும் கூடியஎட்டு வகையான உறுப்புக்களுடன் (அட்ட மூர்த்தமாக) அருள் திருமேனியைத் தாங்கிஎப்போதும் ஒயாமல்அருள் காரணமாகதிருச்சிற்றம்பலத்தில் ஐந்தொழில் கூத்து இயற்றும் பேரானந்தக் கூத்தனே! உனது அருள் துணையுடன்நிலையில்லாத பொய்ப் பொருள்களையும்நிலையான உண்மைப் பொருளையும்அழியாத நிலையில் எனது உள்ளத்தில் கொண்டுஎனது இயல்பான புல்லறிவை அகற்றிநல்லறிவு விளங்கப் பெற்று,என் போன்றவர்களையும் நன்னெறியில் நிறுத்திசெம்மை மனத்தைப் பெற்றவர்களாகப் பண்ணுவதற்காக திருவேடத்தைக் தாங்கி நிற்கின்றநல்ல தவத்தைப் புரிகின்ற திருத்தொண்டர் திருக்கூட்டத்தைச் சார்ந்து இருக்கும் பேற்றினைப் பெற்றவர்க்குபெறத் தகாதன என்பவை யாதும் இல்லை. (அடியவர் திருக்கூட்டத்தைச் சார்ந்து இருந்தால் அனைத்து நலங்களையும் பெறலாம்)

 

        நான் ஒரு சிவனடியாரைப் போலஎனது உடம்பில் வேடத்தைப் போட்டுக்கொண்டேன். ஆனால்எனது உள்ளத்தில் நிறைந்து இருந்தது என்னவோ பொய்யும்புரட்டும்வஞ்கமுமே. ஒளி பொருந்திய பொன்னம்பலவாணா! நீ நிகழ்த்தும் அனவரத ஆனந்தத் திருநடனத்தைத் தரிசிக்கப் பெற்றேன். இந்தப் பெறுதற்கு அரிய பெருமையை அடைவதற்கு நான் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இருந்தும்இந்தப் பெரும்பேறு கிடைக்கப் பெற்றது எப்படி என்றால்நான் அடியவன் போல வேடமிட்ட காரணத்தால்உனது மெய்யடியார்களோடு கூடி இருந்தேன். அவர்களும் என்னை ஒரு மெய்யடியானாகவே கண்டனர். "அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" என்று அப்பர் பெருமான் அருளியதற்கு ஒப்பவும், "மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே" என்னும் சிவஞானபோத சூத்திரப்படியும்என்னிடத்தில் உன்னைப் பாவக நிலையில் நாளும் பார்த்தார்கள். அந்தப் பாவனையே உண்மையாகி விட்டது போலும்.

 

     இந்தக் கருத்தில் ஒரு கதை வழங்கப்பட்டு வருகின்றது. திருடன் ஒருவன் காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகஅடியார் வேடத்தைப் போட்டுக் கொண்டான். அந்த வேடத்தைக் கண்டு எல்லாரும் அவனை வணங்கத் தொடங்கினார்கள். "வெறும் பொய் வேடத்திற்கே இத்தனை மரியாதை என்றால்உண்மையான அடியவனாக நான் ஆகிவிட்டால் என்ன?"என்று நினைத்தான். அன்றுமுதல்வேடத்திற்குப் பொருந்த உண்மை அடியாவனாகவே மாறிவிட்டான்.

 

     "பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று அபிராமி பட்டரும், "யாதேனும் அறியா வெறும் துரும்பனேன் என்னிலும் கைவிடுதல் நீதியோதொண்டரொடு கூட்டு கண்டாய்" என்று தாயுமான அடிகளாரும் வேண்டியது அறிக.

 

     இதன் உண்மையாவதுசிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோஅவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால்பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால்பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

 

     குருட்டு மாட்டை,மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால்,அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

 

     முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும்,அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தியை அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

 

"நீதியாவன யாவையும் நினைக்கிலேன்,

     நினைப்பவ ரொடும் கூடேன்,

ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை,

     என் அடியான் என்று,

பாதி மாதொடும் கூடிய பரம்பரன் 

     நிரந்தரம் ஆய் நின்ற

ஆதி ஆண்டு,தன் அடியரில் கூட்டிய 

     அதிசயம் கண்டாமே".       --- திருவாசகம்.

 

 

"திரைவார் கடல்சூழ்புவி தனிலேஉலகோரொடு

     திரிவேன்உனை ஓதுதல் ...... திகழாமே,

தின நாளும் உனே துதி மனது ஆர பினே சிவ

     சுதனே! திரி தேவர்கள் ...... தலைவா! மால்

 

வரை மாது உமையாள் தரு மணியே! குகனே! என

     அறையாஅடியேனும் ...... உன் அடியாராய்

வழிபாடு உறுவாரொடுஅருள் ஆதரம் ஆயிடும்

     மக நாள் உளதோசொல ...... அருள்வாயே". 

 

என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ்.

 

இதன் பொருள் ---

 

      நாள்தோறும்எழுந்தவுடன் மனதார உம்மைத் துதித்துஅதன் பின்னரும்(எத் தொழிலைச் செய்தாலும்) சிவக் குமாரரே! மும்மூர்த்திகளின் தலைவரே! பெரியமலையின் மகளாகிய உமாதேவியார் பெற்றருளிய மணியேஅடியார்களின் இதயமாகிய குகையில் விளங்குபவரே! என்று உம்மை வாயாரப் போற்றாத அடியவனாகிய நானும்உமக்கு அடியவர்கள் ஆகிஉம்மைவழிபடுபவர்களோடு கூடிஅருள் பெறுகின்ற சிறப்புப் பொருந்திய நாள் ஒன்றும் உண்டாகுமோஅடியேனுக்குச் சொல்லி அருள் புரிவீராக.

 

     அருட்செல்வத்தைப் பெறுதற்கு வழி உண்மை அடியவரோடு கூடி இருத்தல் வேண்டும். அதுபோலவே கல்விச் செல்வத்தைப் பெறுவதற்குநூல்களைக் கற்று உணரும் திறம் இல்லாதார்கற்ற மேலவரோடு கூடி இருந்தாலே போதும் என்கின்றது "நாலடியார்".

 

"கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர்,- தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.       

 

இதன் பொருள் ---

 

     ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனே ஆனாலும்கல்வி அறிவில் சிறந்தாரோடு பழகி வந்தால்அப் பெரியோரது சேர்க்கையால் நாளும் கொஞ்சம் கொஞ்சமாக நல்லறிவு வாய்க்கப் பெறும். எப்படி என்றால்சிறந்த அழகும் மணமும் உள்ள பாதிரிப் பூவைப் போட்டு வைத்து இருந்த மண் பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் அதன் மணம் கிடைப்பது போல.

 

     கல்வி பயிலும் பேறு இல்லாதார்கற்றாரோடு சேர்ந்து பழகுதலையாவது மேற்கொண்டு ஒழுகி வந்தால்நாளடைவில் நல்லறிவு விளங்கப் பெறுவர் என்பது கருத்து.

 

     மணவாள மாமுனிகள் அருளிய "உபதேச இரத்தின மாலை" என்னும் நூலிலும்நல்ல குணம் உடையாரோடு கூடி இருப்பார்க்கு நல்ல குணம் உண்டாகும் என்றும்தீய குணம் உள்ளரோடு கூடி இருப்பார்க்குத் தீய குணமே மேலிட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

"நல்லமணம் உள்ளது ஒன்றை நண்ணி இருப்பதற்கு

நல்லமணம் உண்டாம் நலம் அதுபோல் - நல்ல

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்கு

குணம் அதுவே ஆம் சேர்த்தி கொண்டு."


"தீயகந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்கு

தீயகந்தம் ஏறும் திறம் அதுபோல் - தீய

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்கு

குணம் அதுவே ஆம்செறிவு கொண்டு".

 

     இராமபிரான் வில்லை வளைத்துசீதையை மணம் முடிக்க இருக்கும் செய்து கேட்டு மகிழ்ந்த தசரதன் தனது பரிவாரங்களோடு மிதிலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றான். பொன்னால ஆன சக்கரங்களைக் கொண்ட தேர் உருண்டு ஓடசாலையில் இருந்த இருண்ட கருங்கற்களும் பொன்னிறத்தை அடைந்தன என்பதைகம்பர் கூறும் நயம் அறிந்து இன்புறத் தக்கது.

 

"தெருண்ட மேலவர் சிறியவர்ச்

   சேரினும்,அவர்தம்

மருண்ட புன்மையை மாற்றுவர்

   எனும் இது வழக்கே;

உருண்ட வாய்தொறும். பொன் உருள்

   உரைத்து உரைத்து ஓடி.

இருண்ட கல்லையும் தன் நிறம்

   ஆக்கிய இரதம்".          --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---       

 

     தெளிந்த அறிவுடைய பெரியோர் சிறியவர்களைத் தாம் போய்ச் சேர்ந்திருந்தாலும், அறிவுத்  தெளிவு இல்லாமல் மயங்கிய சிறியவர்களுடைய இழி குணத்தைப் போக்குவர் என்று சொல்லுகின்ற இந்த வார்த்தை உலக இயல்புதான். அது போலவேதேர்களில் பொருந்தி உள்ள பொன்னால் ஆன சக்கரங்கள் உருண்டு சென்ற இடங்கள்தோறும் தம் பொன்னை  உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்கருமையான பாறாங்கற்களையும் தமக்கு உள்ள பொன்னிறமாகவே செய்யலாயின.

 

     "நல்லவரோடு கூடி இருப்போம். நலம் பல பெறுவோம்". "நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்" என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல்நல்லவர்களோடு கூடி இருக்கும் காலத்தில்இடையில் அவர்களைப் போல நாமும் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டுதகுதிய வளர்த்துக் கொள்ளமால்அர்த்தமற்ற செயல்களைச் செய்து அருநரகில் விழாமல் காத்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment

பொது --- 1077. புரக்க வந்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் புரக்க வந்த (பொது) முருகா!  உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள். தனத்த தந்தனம் தனத்த தந்தனம்      தனத்த த...