ஈனர்கள் யார்? ஈனர்களில் உயர்ந்தவர் யார்?

 

 

ஈனர்கள் யார் யார்?

ஈனர்கட்கெல்லாம் ஈனன் யார்?

-----

 

ஓது வித்தவர் கூலி கொடாதவர்,

     மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர்,

     ஊசலில் கனலாய் எரி காளையர், ...... மறையோர்கள்

 

ஊர் தனக்கு இடரே செயும் ஏழைகள்,

     ஆர் தனக்கும் உதாசின தாரிகள்,

     ஓடி உத்தமர் ஊதியம் நாடினர், ...... இரவோருக்கு

 

ஏதும் இத்தனை தானம் இடாதவர்,

     பூதலத்தினில் ஓரம் அது ஆனவர்,

     ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை ......இகழ்வோர்கள்,

 

ஏக சித்த தியானம் இலாதவர்,

     மோகம் உற்றிடு போகிதம் ஊறினர்,

     ஈனர், இத்தனை பேர்களும் ஏழ்நரகு ......உழல்வாரே.

 

     அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் காட்டுகின்ற இந்த ஈனர்களைப் பற்றிப் பார்ப்போம்...

 

ஈனம் --- இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, சரிவு.

ஈனன் --- இழிந்தவன், குறைபாடு உள்ளவன்(அறிவிலாவது, அங்கத்திலாவது) கீழ்மகன், தாழ்ந்தவன், புல்லன்.

 

ஓதுவித்தவர் கூலி கொடதாவர் ---

 

     ஓதுவித்தவர் --- கல்வியைக் கற்பித்தவர், வித்தையைக் கற்பித்தவர்.

 

     உணவு உடம்பை வளர்க்கின்றது. கல்வி அறிவை வளர்க்கின்றது. ஒதுவதனால் உணர்வு வளர்கின்றது என்பதை "ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்" என்று "கொன்றைவேந்தன்" அறிவுறுத்தும். கல்வி என்ற சொல்லுக்கு, அறியாமையை அகழ்வது என்பது பொருள். "கல்" என்ற பகுதி "தோண்டு" என்ற பொருள்பட நிற்பதை அறிக.

 

     கற்றவரே கண் உடையார் ஆவார். கல்லாதவர்களைக் கண்ணில்லாதவராக எண்ணுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்த, "கண் உடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு புண் உடையர் கல்லாதவர்" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். இலங்கு நூல்களைக் கல்லாதார் விலங்குத் தன்மை உடையவர் என்பதை, "விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல் காற்றாரோடு ஏனையவர்" என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டினார்.

 

     கல்வி, கடலை ஒக்கும். "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்" என்றார் மணிவாசகப் பெருமான். கடலைக் கப்பல் இன்றிக் கடக்க முடியாது. கப்பலை மாலுமி செலுத்துகின்றான். கப்பல் போன்றது கல்விக் கழகம். மாலுமி போன்றவர் ஆசிரியர். மாலுமி இன்றி கப்பலில் ஊர்ந்து கடலில் செல்லமுடியாது. அதுபோல, ஆசிரியர் இன்றி கல்வியைக் கற்றுக்கொள்ள முடியாது.

 

     மேலும், கல்வி கடல்நீரை ஒக்கும். தாக விடாய் கொண்டவன் கடல் நீரை மொண்டு எவ்வளவு பருகினாலும், விடாய் கூடுமே அன்றி குறையாது. அதுபோல், சந்தேக விபரீத அறியாமை உடையவன் தானே நூல்களைக் கற்கத் தொடங்குவானாயின், அவனுடைய ஐய விபரீத அறியாமைகள் அகலா. கடல் நீரை மேகம் பருகி, உவரை மாற்றி, நன்னீராகப் பொழிவது போல், ஆசிரியர் கலைக் கடலைப் பருகி, பக்குவ நிலைக்குத் தக்கவாறு கூறுவார். மேகம் போன்ற ஆசிரியர் மூலம் கல்வி கற்று நலம்பெற வேண்டும்.

 

     இத்தகைய ஆசிரியருக்கு தக்கிணை தருவது இன்றியமையாத கடப்பாடு ஆகும் என்பதை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றா, "ஆசாரக் கோவை" பின்வருமாறு காட்டும்.

 

"தக்கணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்

முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க, - உய்க்காக்கால்

எப்பாலும் ஆகா கெடும்".                           

 

இதன் பொருள் ---

 

     தக்கணை --- ஆசிரியர்க்குத் தட்சணை கொடுத்தலும், வேள்வி --- யாகம் பண்ணுதலும், தவம் --- தவஞ்செய்தலும். கல்வி --- கல்வியும், இந்நான்கும் --- என இந்நான்கினையும், முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க --- மனம், மொழி, மெய் என்னும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு காத்துச் செய்து வருக, உய்க்காக்கால் --- ஒருநெறியிற் செலுத்தாவிடின், எப்பாலும் --- எவ்வுலகத்தின் கண்ணும், ஆகா கெடும் --- பயனாகாவாய்க் கெடும்.

    

     ஓதுவித்தவருக்கு ஓதனமாகத் தராதவர் நரகில் வீழ்ந்து துன்புறுவர் என்று அடிகள் கூறுகின்றனர். இப் பாடலில் கூறப் பெறும், நரகில் வீழ்ந்து துன்புறுவோர்களாகிய பதினொரு தீயவர்களில், முதன்மை இடம் பெற்றவர் குருத் துரோகிகள் என்பதை உய்த்து உணர்க.

 

மாதவர்க்கு அதிபாதகம் ஆனவர் ---

 

     "நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை ஆய்த்தே" என்ற சிவஞான சித்தியார் திருவிருத்தத்தாலும், "பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்" என்னும் மணிவாசகத்தாலும், பாதகம் என்பது "பெரும்பாவம்" என அறிக.

 

     மாதவர் --- பெரும் தவத்தைச் செய்பவர். தவசீலர்களுக்கு உதவுவது உத்தமர்களுடைய தன்மை. தவவொழுக்கத்துக்கு இடையூறாக, அம் மாதவர்க்கு இடர்களை விளைக்கின்றவர்கள் நரகில் வீழ்ந்து வேதனை உறுவார்கள்.

 

     மதுரையில் வணிகர் குலத்தில் தோன்றிய மூர்த்தி நாயனார், "எப் பற்றினையும் அறுத்து, ஏறு உகைத்து ஏறுவார் தாள் மெய்ப்பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்காராய்" விளங்கினார்.  ஆலவாய் அரனார்க்குச் சந்தனக்காப்பு இடையறாது தந்து திருத்தொண்டு புரிந்து வந்தார்.

 

     அப்போது கருநட நாட்டில் இருந்து வந்து பாண்டியனை வென்று, பாண்டி நாட்டை அரசாண்டு வந்த சமண் சமயத்தைச் சார்ந்த மன்னன், சிவனடியார்க்குத் தீங்கு பல செய்து, மூர்த்தி நாயனார் நாளும் புரியும் சந்தனக்காப்புக்கு சந்தனக்கட்டை கிடையாத வண்ணம் தடுத்தான். மூர்த்தி நாயனார் பெரிதும் வருந்தி, "சந்தனக் கட்டைக்கு முட்டு வந்ததே அன்றி, அதனை அரைத்துத் தரும் கைக்கு முட்டு வரவில்லை" என்று, வட்டமான சந்தனக் கல்லின் மீது தோல் நரம்பு எலும்பு முதலியன தேய முழங்கையைத் தேய்த்தனர். இறைவர் அருள் வாக்கால் அவரைத் தடுத்து அருள் புரிந்தனர். அவர்க்கு அதிபாதகம் செய்த மன்னன் உடனே மாண்டு தீவாய் நரகிடை வீழ்ந்தான்.

 

"இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்

மெய்வாழ்  உலகத்து விரைந்து அணைவார்களே போல்

அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்

வெவ்வாய் நிரயத்து இடைவீழ விரைந்து வீந்தான்".

 

எனப் பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டுவது காண்க.

 

இதன் பொருள் ---

 

     மிக உயர்ந்த நல் ஒழுக்கமும், இறையன்பும் உடையார், அழிவிலாத சிவபுரத்திற்கு விரைந்து செல்வாரைப் போல, சிவனடியார்களுக்கு மிகு துன்பத்தை விளைவித்த தீயவனான கருநாடக மன்னனும், கொடிய நெருப்பின் தன்மை ஒத்த வாயையுடைய நரகத்திடை வீழ்தற்கு விரைந்து இறந்தான்.

 

ஊசலில் கனலாய் எரி காளையர் ---

 

     உஞ்சல் இப்படியும் அப்படியுமாக நான்கு கயிறுகளால் கட்டப்பட்டு அலையும். அதுபோல் ஐந்து மாயைகளாகிய சங்கிலிகளால் கட்டப்பட்டு இரவு பகல் தெரியாமல் இங்கும் அங்குமாகச் சிலர் காமத் தீயினால் வெந்து நொந்து அலைவர்.  அவ்வாறு அலைபவர் நரகிடை வீழ்ந்த நலிவார். 

 

     கீசகன் முதலியோர் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

 

மறையோர்கள் ஊர் தனக்கு இடரே செயும் ஏழைகள் ---

 

     மறையோர் – வேதங்களை ஓதி உணர்ந்து ஓதுவிப்பவர்கள். தனக்கு என்று வாழாது, நாளைக்கு வேண்டும் என்று சேர்த்து வைக்காது, உலக நன்மைக்கு என்று பலப்பல விரதங்களை மேற்கொண்டு, உலகம் வாழ வேண்டும் என்று வாழ்வோர்கள்.

 

     "எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று" அறியாதவர்கள். "வையகமும் துயர் தீர்கவே" என்று வாழ்பவர்கள். இவ்வாறு தனக்கென்று வாழாது, உலகிற்கு என்று வாழும் உத்தமர்களாக இருந்தால் அவர்கள் அந்தணர்கள். இவர்கள் வாழுகின்ற ஊருக்கு இடர் புரிவோர் உலகிற்கு இடர் புரிந்தவர்கள் ஆவார்கள். அதனால் தான் அவர்கள் நரகில் வீழ்கின்றவர்கள் ஆவார்கள்.

 

ஆர் தனக்கும் உதாசின தாரிகள் ---

 

     உதாசினம் --- நிந்தனை. "உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்" என்பது உலகநீதி.

 

     குறிப்பிட்ட சிலரை நிந்திப்பவர் சிலர். சிலர் பிறரை நிந்திப்பது என்பதையே தமது முதல் கடமையாகக் கொண்டு படலம் படலமாகப் பிறரது குற்றங்களைக் கூறித் திரிவர். இது மிக இழிந்த குணம். பிறர் குற்றங்களைக் கூறித் திரிபவன் தனது குற்றத்தை உணரமாட்டான். ஆதலின், அவன் ஒருபோதும் திருந்தவும் மாட்டான். ஆதலினால், அவன் மேலும் மேலும் தீமையே புரிந்து எரிவாய் நரகில் எய்துவான்.

 

"கொல்லா நலத்தது மேன்மை, பிறர் தீமை

சொல்லா நலத்தது சால்பு"

 

எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது அறிக.

 

ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் ---

 

     உத்தமர்கட்கு ஒல்லும் வகையால் ஒவாது, செல்லும்வாய் எல்லாம் உதவுதல் வேண்டும். அதனால் உலகம் தழைக்கும்.  நம்பியாரூரர் திருவாரூரில் தங்கி இருந்தபொழுது அவரைக் காண வரும் அடியார்கட்கும் அவருக்கும் பயன்படுமாறு குண்டையூர் கிழார் இடையறாது நெல்லும் பருப்பும் வெல்லமும் தந்தனர் என்ற வரலாறு சிந்தனைக்கு உரியது.

 

     உத்தமருடைய பொருளைக் கவர்வது மிகப் பெரும்பாவமாகும். இப் பெரும் பாவத்தை அஞ்சாது புரிந்தவர்கள் அருநரகில் சேர்ந்து அல்லல் உறுவார்கள்.

 

நள மன்னனுடைய நாடு நகரங்களைச் சூதினால் கவரந்த புஷ்கரன் என்பானுக்கு இம்மையில் பழியும் மறுமையில் பாவத்தினால் நரகமும் சேர்ந்தது.

 

இரவோருக்கு ஏதும் இத்தனை தானம் கொடதவர் ---

 

     உடம்பை விட்டு உயிர் பிரியும் இறுதியில் உறுதி பயந்து துணையாக வருவது, ஏழைகட்கு அளித்த தானதருமமே ஆகும். இம்மையில் புகழும் மறுமையில் புண்ணியமும் நல்குவது தருமமே ஆகும். புகழ் இல்லாதவன் தோன்றாமல் இருப்பது நல்லது என்பார் திருவள்ளுவர். அப் புகழ் "வறியார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும்" என்றும் திட்டமாகக் கூறினார்.

 

     நிரம்பத் தருவதற்கு ஆற்றல் இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சிறிது ஆயினும் வறியவர்க்கு வழங்கவேண்டும்.  "இலையாயினும், வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே அது தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக வரும்" என்பார் அருணை வள்ளல்.

 

     குறைந்த ஆற்றல் உடையவர்கள், "வறிஞர்க்கு என்றும் நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள்" என்கின்றார்.  "குன்றிப் பிளவு அளவு பங்கிட்டு" என்கின்றார் திருச்செந்தூர்த் திருப்புகழில். "தவிடின் ஆற்பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன்" என்கின்றார் மற்றொரு திருப்புகழில். தவிடு அளவாவது தருகின்றேனில்லை என்று வருந்துகின்றனர். மேலும் தரவேண்டும் என்ற எண்ணம் ஒரு தினை அளவேனும் இருக்கவேண்டும் என்று இடித்துக் கூறுகின்றனர். "பகிர நினைவு ஒரு தினை அளவும் இலி”.

 

     ஈகையும் இரக்கமும் இன்றி, பொருள் தேடி, ஒரு சிறிதும் வறியார்க்கு வழங்காது மாள்கின்ற வன்கணாளர்களை இயம தூதர்கள் தண்ணீர் தண்ணீர் என்று தாகவிடாயால் தவிக்குமாறு கொடிய வழியில் நடப்பித்துக் கொண்டுபோய், கும்பிபாகம் முதலிய நரகிடை வீழ்த்தி வேதனைப்படுத்துவர்.

 

பூதலத்தினில் ஓரம் அது ஆனவர் ---

 

ஓரம் --- நடுநிலையின்றி ஒருபக்கமாகச் சாய்ந்து பேசுவது.

 

     நியாய சபையில் நடுநிலை கோடி, ஒரு பக்கமாகத் தீர்ப்புக் கூறுவது பெரும்பாவம். ஒரு பக்கமா, பொய்யாகச் சாட்சி பகர்வதும் பாவம். அவ்வாறு கூறியோர் இருந்த இடமும் அழியும்.

 

வேதாளம் சேருமே, வெள் எருக்குப் பூக்குமே,

பாதாள மூலி படருமே, -- மூதேவி

சென்றிருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே,

மன்றோரம் சொன்னார் மனை.               

 

உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்க

தள்ளி வழக்கதனை தான் பேசி எள்ளளவும்

கைக்கூலி வாங்கும் காலறுவான்தன் கிளையும்

எச்சம்அறும் என்றால் இறு.

 

என்னும் பாடல்களின் வழி ஔவையார் அறிவுறுத்தி உள்ளதை ஓர்க.

 

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்வோர்கள் ---

 

சிவனடியார்களையும் திருமாலடியார்களையும் இகழ்வது கொடிய பாவமாகும். திருமால் சிவன் உருவில் பாதி. சிவமூர்த்தம் இருபத்தைந்தில் "அரியர்த்தம்" ஒன்று என்பதையும், இறைவனது புருஷ சத்தி திருமால் என்பதனையும், "அரி அல்லால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே" என்னும் அப்பர் பெருமான் அருள் வாக்கால் அறியலாம்.

 

     அன்றியும், சிவத்தை வணங்கி திருமாலை நிந்திப்போரும், திருமாலை வணங்கி சிவத்தை நிந்திப்போரும் நற்கதி சேரவே மாட்டார். "தெய்வம் இகழேல்" என்ற ஔவையார் திருவாக்கை உணர்க. தெய்வ நிந்தை செய்து, அத் தெய்வத் தொண்டரையும் நிந்திப்பர் சிலர். தெய்வ நிந்தனையைக் காட்டிலும், அடியார் நிந்தை அதிபாதகம். "அடியார் மனம் சலிக்க எராகிலும் பழிக்க, சூரியனைச் சிறிது நேரம் எதிர்த்து வெய்யிலில் நிற்கலாம். சூரியனுடைய அருள்பெற்ற நொய்மணலில் ஒரு நொடிகூட நிற்கமுடியாது என்பதை அறிக.

 

ஈசன் எதிர் நின்றாலும், ஈசன்அருள் பெற்று உயர்ந்த

நேசர் எதிர் நிற்பது அரிது ஆமே, --- தேசுவளர்

செங்கதிர் முன் நின்றாலும், செங்கதிர் வன்கிரணம்

தங்கு மணல் நிற்க அரிதேதான்.          --- நீதி வெண்பா.

 

     பாண்டி நாட்டில் எண்ணாயிரம் சமணகுருமார்கள் சிவநிந்தை நீண்டகாலமாகச் செய்து வந்தார்கள். திருஞானசம்பந்தரையும் அவருடன் இருந்து அடியார்களையும் நிந்தை செய்தவுடன் விரைந்து அழிந்தார்கள். இரணியன் ஐந்துகோடி இருபத்தி ஐந்து லட்சத்து முப்பத்தையாயிரம் ஆண்டுகள் திருமாலை நிந்தித்தான். பிரகலாதராகிய அடியவரை நிந்தித்தவுடன் மிக விரைந்து அழிந்தான்.

 

மோகம் உற்றிடு போகிதம் ஊறினர் ---

 

     மோகத் தீயினால் வெம்பி சதா நல்ல சிந்தனை இல்லாது, இருண்ட உள்ளத்துடன் போக நுகர்ச்சியையே விரும்பி, அம் மாய வாழ்க்கையிலேயே அழுந்திக் கிடப்பவர்கள். இவ்வரிய பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பிறவிப் பயனைப் பெறாத இவர்கள் நற்கதியை அடைவது இல்லை.

 

ஏக சித்த தியானம் இலாதவர் ---

 

     நல்ல உணவினால் உடம்பு வலுப்படுவது போல், தியானத்தினால் உயிர் வலுப்படும். ஒவ்வொருவரும் சிறிது நேரமாவது தியானம் செய்ய வேண்டும். தியானத்தினால் மனம் அமைதி பெறும். அரைநிமிட நேரமாகிலும் தியானம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அருணை வள்ளலார், "சரணகமல ஆலயத்தை அரைநிமிட நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத"

 

     ஒருமைப்பட்ட மனத்துடன் தியானிக்க வேண்டும். உருத்திர பசுபதி நாயனார், திருஉருத்திர மந்திரத்தை ஒருமையுடன் தியானித்ததனால் சிவனருள் பெற்றனர்.

 

"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவு வேண்டும்"

 

என வேண்டினார் வள்ளல் பெருமான்.

 

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரகு உழல்வாரே ---

 

     ஈனர் --- இழிந்தவர்கள். இந்த பதினோரு பேர்களும் உலகில் மிகவும் இழிந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் ஏழு நரகங்களில் வீழ்ந்து உழல்வார்கள்.

 

     மேலே கண்ட பாவங்களினின்றும் விலகி, சிவ புண்ணியங்களை கடமை என்று பயனை விரும்பாமல் செய்து, மீட்டு இங்கு வாரா நெறியைப் பெற்று, சிவானந்தப் பெருவாழ்வைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் முயலுதல் வேண்டும்.

 

     ஈனர்கட்கு எல்லாம் ஈன்ன் யார் என்பதை, "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல் அறிவுறுத்துவது காண்க.

 

இரப்பவன் புவிமீதில் ஈனன்; அவனுக்கு இல்லை

     என்னும் அவன் அவனின் ஈனன்;

  ஈகின்ற பேர்தம்மை ஈயாமலே கலைத்

     திடும்மூடன் அவனில் ஈனன்!

 

உரைக்கின்ற பேச்சிலே பலன்உண்டு எனக்காட்டி

     உதவிடான் அவனில் ஈனன்!

  உதவவே வாக்குஉரைத்து இல்லை என்றே சொலும்

     உலுத்தனோ அவனில் ஈனன்!

 

பரக்கின்ற யாசகர்க்கு ஆசைவார்த் தைகள்சொலிப்

     பலகால் அலைந்து திரியப்

  பண்ணியே இல்லைஎன் றிடுகொடிய பாவியே

     பாரில்எல் லோர்க்கும் ஈனன்!

 

அரக்கு இதழ்க் குமுதவாய் உமைநேச னே! எளியர்

     அமுதனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

 இதன் பொருள் ---

 

     அரக்கு இதழ் குமுதம் வாய் உமை நேசனே --- சிவந்த இதழும், குமுத மலர் போன்ற வாயும் உடைய உமைதேவியார் பால் அன்பு மிக்கவனே! எளியர் அமுதனே --- மெலிந்தவர்க்கு அமுதம் போன்றவனே! அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,  அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     புவி மீதில் இரப்பவன் ஈனன் --- உலகத்தில் இல்லை என்று  பிச்சை எடுப்பவன் இழிந்தவன்,  அவனுக்கு இல்லை என்னும் அவன், அவனில் ஈனன் --- அவ்வாறு இரப்பவனுக்கு (பொருளைத் தன்பால் வைத்துக் கொண்டு) இல்லை என்று சொல்பவன் அவனை விடவும் இழிந்தவன்,  ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும் மூடன் அவனில் ஈனன் --- கொடுப்போரைக் கொடுக்காமல் படிக்குத் தடுத்துவிடும் அறிவிலியானவன், ஈயாதவனிலும் இழிந்தவன்!  உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் --- சொல்லும் சொல்லிலே நன்மை உண்டு என்று நம்பும்படி சொல்லி, பிறகு உதவி செய்யாதவன் அவனை விடவும் இழிந்தவன்,  உதவவே வாக்கு உரைத்து இல்லை என்றே சொலும் உலுத்தனோ அவனில் ஈனன் --- கொடுப்பதாகவே வாக்குறுதி கூறி, பிறகு இல்லை என்றே கூறிவிடும் கஞ்சத்தனம் உள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி --- எங்கும் பரந்து திரிந்து பிச்சைக்கு வரும் இரவலர்க்கு, தாம் இரந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டாகும்படி ஆசைமொழிகள் கூறி,  பலகால் அலைந்து திரியப் பண்ணியே --- பலதடவை அலைந்து திரியும்படி செய்துவிட்ட பிறகு, இல்லை என்றிடு கொடிய பாவியே பாரில் எல்லோர்க்கும் ஈனன் --- இல்லை என்று சொல்லும் கொடிய பாவியே உலகத்தில் எல்லோரினும் இழிந்தவன்.

 

          இரப்பதைவிட, இல்லை என்று சொல்லுவது இழிவு; அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு; அதனினும் பேச்சிலே பயன் உண்டென நம்பும்படி சொல்லி ஏமாற்றுவது இழிவு; "நாளை வா" என்று, வந்தபின் "இல்லை" எனல் அதனினும் இழிவு; அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு.

 

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே

தா என் கிளவி ஒப்போன் கூற்றே

கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. --- தொல்காப்பியம்.

 

ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.... --- புறநானூறு.

 

 

 

 

 


50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...