கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

 

ஔவையார் அருளிய

"மூதுரை"

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

————-

 

     பொருளே நோக்கமாக வாழும் உலகியல் வாழ்க்கை ஒன்று. தெளிவு என்னும் ஞானத்தைப் பெறுவதை நோக்கமாக வாழும் அருளியல் வாழ்க்கை ஒன்று. உலகியல் வாழ்க்கையில் உழலுபவர்கள் போல் அல்லமால், கற்கவேண்டிய அறிவு நூல்களைக் கற்று, கற்றுணர்ந்த பெரியோரை நாடி இருந்து, நல்லறிவு பெற்று அருளியல் வாழ்க்கையை வாழுகின்றவர்கள், எப்போதும் ஒரு தன்மையராகவே விளங்குவார்கள். உயர்ந்த பொருள் எப்போதும் தன்னிலையில் உயர்ந்தே விளங்கும்.

 

     பால் என்பது உயர்ந்த உணவுப் பொருள். எல்லோராலும் எக்காலத்தும் விரும்பப் படுவது. அந்தப் பாலைச் சுடச் சுடக் காய்ச்சினாலும், தனது சுவையில் மேம்பட்டு விளங்கும். சுவை சிறிதும் குன்றாது. சங்கு எனப்படுவது, எவ்வளவுதான் நெருப்பில் போட்டுச் சுட்டாலும், தனது வெண்மை நிறத்தில் சிறிதும் மாறாது. மற்ற பொருள்கள் எல்லாம், நெருப்பில் இட்டால் கரியாகிப் போகும். வாழும் மனிதர்கள் யாராக இருந்தாலும், அவரவர் வினையின் பயனுக்கு ஏற்ப, விதிக்கு ஏற்ப, இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். உலகியல் அறிவு மட்டும் பெற்றவர்கள், தமது நிலையில் தாழ்வு வந்தபோது, தடுமாறுவார்கள். நல்லறிவு படைத்த மேன்மக்கள், தமக்கு வறுமைத் துன்பம் வந்தாலும், தமது நிலையில் இருந்து மாறாமல், முன்னைய நிலையினும் சிறப்புற விளங்குவர் என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

 

அட்டாலும் பால்சுவையில் குன்றாது; அளவளாய்

நட்டாலும் நண்பு அல்லார், நண்பு அல்லர்;

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

 

என்பது "மூதுரை" என்னும் நூலில் ஔவையார் பாடியருளிய பாடல்.

 

இதன் பொருள் ---

 

     பாலினை எவ்வளவு காய்ச்சினாலும், அது தனது இனிய சுவையில் குறைவதில்லை. சங்கினை எவ்வளவு சுட்டு நீறாக்கினாலும் அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவை போலவே), மேலோர் வறுமையுற்றாலும் மேலோராகவே விளங்குவர். நட்பின் குணம் இல்லாத கீழோர் இடத்தில் எவ்வளவுதான் கலந்து நட்புச் செய்தாலும் அவர் நண்பராகார்.

 

         பால் சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவர் என்பது இந்த உவமைகளால் பெறப்படுகின்றது.

 

     இனிமையானது என்று யாவராலும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற பொன், கரும்பு, பால், சந்தனம் என்னும் இந்நான்கு பொருள்களையும் உருக் குலைந்து வருந்தும்படி துன்புறுத்தினாலும், முன்னே இருந்த ஒளி, இனிமை, சுவை, மணம் என்னும் நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும். அதுபோல, நல்லோரிடத்தும், அவர்கள் எவ்வளவு துன்புற்றாலும், பழைய நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும் என்கின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.

 

பொன்னும் கரும்பும் புகழ்பாலும் சந்தனமும்

சின்னம்பட வருத்தம் செய்தாலும் - முன்இருந்த

நற்குணமே தோன்றும், நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து.   ---  நீதிவெண்பா.

 

சின்னம் பட – நிலைகுலைய. நலிந்தாலும் - துன்புற்றாலும்.

 

     அறிவு நூல்களைக் கற்று அறிவு நிரம்பப் பெற்ற பெரியோர்களது அருமையை, அறிவில்லாதவர்கள் அறியவில்லை என்பதற்காக, அவரது பெருமை குலைந்து போகாமல் என்றும் நிலைபெற்று விளங்கும் என்கின்றது, "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல்...

 

 

தறிபட்ட சந்தனக் கட்டைபழுது ஆயினும்,

     சார்மணம் பழுது ஆகுமோ?

  தக்கபால் சுவறிடக் காய்ச்சினும், அதுகொண்டு

     சாரமதுரம் குறையுமோ?

 

நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும், அதின்

     நீள்குணம் மழுங்கி விடுமோ?

  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும், தங்கத்தின்

     நிறையும் மாற்றுக் குறையுமோ?

 

கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும், அதுகொண்டு

     கதிர்மதி கனம் போகுமோ?

  கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்

     காசினி தனில் போகுமோ?

 

அறிவுற்ற பேரைவிட்டு அகலாத மூர்த்தியே!

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ---

 

     அறிவுற்ற பேரைவிட்டு அகலாத மூர்த்தியே --- அறிவு உடையோரின் உள்ளத்தில் பிரியாது விளங்கும் தலைவனே! ஐயனே --- முதல்வனே! அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- அரிய மதவேள் என்பான் எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற  சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     தறிபட்ட சந்தனக் கட்டை பழுதாயினும், சார் மணம் பழுது ஆகுமோ --- வெட்டப்பட்ட சந்தனக் கட்டையானது தேய்ந்து குறைபட்டாலும், அதனிடம் உள்ள நறுமணம் குறையுமோ? (குறையாது)

 

     தக்க பால் சுவறிடக் காய்ச்சினும், அது கொண்டு சார மதுரம் குறையுமோ --- நல்ல பாலை வற்றிடக் காய்ச்சினாலும் அதனிடம் உள்ள சாரமான இனிமையானது குறையுமோ? (அடினும் பால் தன் சுவை குன்றாது)

 

     நிறைபட்ட கதிர் மணி அழுக்கு அடைந்தாலும் அதின் நீள்குணம் மழுங்கி விடுமோ --- நிறைந்த ஒளியினை உடைய மணியானது அழுக்குப்பட்டாலும், அதனுடைய ஒளிரும் தன்மை குறைந்து விடுமோ? (ஒளி குறையாது)

 

     நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும் தங்கத்தின் நிறையும் மாற்றுக் குறையுமோ --- தங்கத்தை நெருப்பிலே இட்டு உருக்கினாலும், (தகடாகவோ கம்பியாகவோ) அடித்தாலும், அதனிடம் நிறைந்துள்ள மாற்றுக் குறைந்து விடுமோ? (மாற்றுக் குறையாது)

 

     கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும், அதுகொண்டு கதிர் மதி கனம் போகுமோ --- கருமை பொருந்திய மேகமானது சூரியனையும் சந்திரனையும் மறைத்தாலும், அக்காரணத்தால் அவற்றின் பெருமையில் குறைவு உண்டாகுமோ? (குறைவு இல்லை)

 

     (அது போலவே)

 

     கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும் காசினிதனில் போகுமோ --- அரிய நூல்களைக் கற்று அறிவு நிரம்பிய பெரியோரின் பெருமையை அறிவில்லாதவர்கள் அறியவில்லை என்பதனாலேயே, அவர்களுடைய பெருமையானது உலகில் நிலைபெறாமல் போகுமோ? (கற்று அறிவு உடையார் பெருமை உலகில் நிலைத்து இருக்கும். அற்பரால் அழிவுறாது).

 

     பொன்னும் சந்தனக்கட்டையும் சங்கும் பாலும் மாணிக்கம் ஆகிய இவைகள் துன்புற நேர்ந்தாலும் அவைகளின் பண்பு மாறாததுபோல, பெரியோர்கள் இறக்க நேர்ந்தாலும் ஒழுக்கம் தவறமாட்டார்கள் என்கின்றது "குமரேச சதகம்" என்னும் நூல்..

 

தங்கம் ஆனது தழலில் நின்றுஉருகி மறுகினும்,

     தன் ஒளி மழுங்கிடாது;

சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே,

     தன் மணம் குன்றிடாது;

 

பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே,

     பொலிவெண்மை குறைவுறாது;

போதவே காய்ந்துநன் பால்குறுகி னாலும்,

     பொருந்துசுவை போய்விடாது;

 

துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும்,

     துலங்குகுணம் ஒழியாது; பின்

தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும், அவர்களது

     தூயநிறை தவறாகுமோ?

 

மங்கள கல்யாணிகுற மங்கைசுர குஞ்சரியை

     மருவு திண் புயவாசனே!

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை மருவு திண்புய வாசனே --- அழகிய நலங்கள் பொருந்தி வேடர்குலப் பெண்ணான வள்ளிநாயகியும், தேலோகத்துப் பெண்ணான தெய்வயானை அம்மையும் தழுவும் வலிமைமிக்க தோள்களை உடையவனே! மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது --- பொன் ஆனது நெருப்பிலே கிடந்து உருகித் துன்புற்றாலும், அது தன் ஒளியிலே குறையாது;

 

     சந்தனக் குறடு தான் மெலிந்து தேய்ந்தாலும் தன் மணம் குன்றிடாது --- சந்தனக்கட்டை தேய்ந்து மெலிந்தாலும், அதன் மணத்திலே குறைவு இருக்காது;

 

     பொங்கம் மிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவு உறாது --- உயர்வுபெற்ற சங்கு சிவந்த நெருப்பில் வெந்தாலும், அதன் வெண்மை மேலும் பொலிவு பெறுமே ஒழி, குறைவு இருக்காது;

 

     போதவே காய்ந்து நன் பால் குறுகினாலும், பொருந்து சுவை போய்விடாது --- நல்ல பால் மிகவும் காய்ந்து தனது அளவில் சுருங்கினாலும், அதனிடம் உள்ள இனிமை குறையாது;

 

     துங்க மணி சாணையில் தேய்ந்து விட்டாலும், துலங்கு குணம் ஒழியாது --- உயர்ந்த மாணிக்கத்தை சாணையிலே தேய்த்தாலும் ஒளிமிகும் அல்லாது, அதன் பண்பு ஒழியாது;

 

     தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை பின் தவறு ஆகுமோ --- தொன்று தொட்டு வரும் நன்னெறியில் சார்ந்து நின்ற பெரியோர்கள் இறக்க நேர்ந்தாலும் அவர்களது நல்ஒழுக்கம் ஆனது மாறுபட்டுக் கெடுமோ?

 

     "அட்டாலும் பால் சுவையில் குன்றாது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்னும் ஔவைப் பிராட்டியின் அருள் வாக்கை இங்கு வைத்து எண்ணுக. "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்,.....தமக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளர்..." என்னும் புறநானூற்றுப் பாடல் வரியையும் சிந்திக்கவும்.


2 comments:

 1. 955.வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
  பண்பில் தலைப்பிரிதல் இன்று.

  திருக்குறளும் இதே போன்ற பொருள் தருகிறது

  ReplyDelete
 2. 955.வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
  பண்பில் தலைப்பிரிதல் இன்று.

  ReplyDelete

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...