ஆத்திசூடி --- 15. ஙப்போல் வளை

 

 

15. ஙப்போல் வளை.

 

     (பதவுரை) ஙப் போல் ---- ஙகரம் போல், வளை --- உனது இனத்தைத் தழுவி வாழ்.

 

     (பொழிப்புரை) '' என்னும் உயிர்மெய் எழுத்தானது தான் மட்டுமே பயன் உடையதாய் இருந்து, பயனில்லாத 'ஙா' முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயன் உடையவனாய் இருந்து, உனது இனத்தார் பயன் இல்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.

 

     "க"கரம் முதலான எழுத்துக்கள் எல்லாம், மொழிக்கு உதவியானவற்றைத் தழுவி இருத்தல் போல, ஒருவன் சுற்றமாகத் தனக்கு அமைந்துள்ளோரைத் தழுவிக் கொள்வதோடு, உபகாரமாய் இல்லாத சுற்றத்தாரை ஒதுக்கி விடுதல் கூடாது என்பது இதனால் பெறப்படும். "சுற்றம் தழால்" என்னும் ஓர் அதிகரத்தையே இதற்குத் திருவள்ளுவ நாயனார் வைத்து அருளினமை காண்க.

 

     "ஙா" முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. "ங"கரத்தின் பொருட்டே அவற்றையும் ஏட்டில் எழுதுகிறார்கள். இனி இதற்கு "ங"கர ஒற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல, நீ ஒருவனையே தழுவு என பெண்களுக்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.

 

     இனி, அகரப் பொருளாக விளங்குபவன் இறைவன் எனக் கொண்டு, எல்லா உயிர்களும் இறைவனைப் பற்றியே வாழவேண்டும் என்றும் பொருள்கொள்ள இடம் உண்டு என்பதை,

 

அகர உயிர்போல் அறிவாகி எங்கும்

நிகரில் இறை நிற்கும் நிறைந்து.

 

என்று "திருவருட் பயன்" என்னும் நூல் கூறுவதால் அறியலாம்.

 

     பரம்பொருளானது, தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி நிறைந்து நிற்கும். "அ" கரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று, அவற்றை இயக்குவது போல, பதிப் பொருளாகிய இறைவன் பிற எல்லாப் பொருளிலும் வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்குகின்றான். எனவே பதியாக இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும்.

 

     பதியாகிய இறைவன் எல்லா முதன்மையும் உடையவன். எல்லா முதன்மையும் உடையவனாக ஒருவன் தான் இருக்க முடியும். எனவே இறைவன் ஒருவனே என்பதும், அவன் ஒருவன்தான் நிகர் இல்லாதவன் என்பதும் விளங்கும். இறைவன் ஒருவனே என்றால், நூல்களில் பல கடவுளர் பேசப்படுகின்றனரே என்னும் ஐயம் எழலாம். அக் கடவுளர் பலரும் இறைவனது அருளால் அந்நிலையை அடைந்தவர்கள். அவர்களெல்லாம் உயிர்களாகிய பசுக்களே ஆவர். அவர்களுக்கும் பிறப்பு உண்டு. ஆயுட்காலம் வரையில் வாழ்வு உண்டு. பின் இறப்பும் உண்டு. அவர்களுக்கு என்று அளவுபடுத்தப்பட்ட ஒவ்வொரு செயலில் மட்டும் முதன்மை உண்டு. அம் முதன்மைகள் அவர்கள் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப இறைவன் கொடுத்தனவாகும். அவர்களை அதிகாரமூர்த்திகள் என்பர். அரசனது செயல்களை அவனது ஆணை வழிநின்று நடத்தும் அதிகாரிகளைப் போன்றவர்கள் என அவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் ஒவ்வொன்றில் முதன்மையுடையவராய் இருக்க, சிவபெருமானாகிய பதியே எல்லா முதன்மையும் உடையவனாயிருத்தலால் அவனே முழுமுதற் கடவுள் என்பதும், "நிகரில் இறை" என்பதும் விளங்கும்.

 

     "ஙகர மேபோல் தழீஇ ஞானவேல் காக்க" என்றார் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். "ங"கர எழுத்தைப் போல் என்னைத் தழுவி இருந்து முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம் தன்னைக் காக்கவேண்டும் என்று வேண்டினார்.

 

     இனி, அப்பர் பெருமான்,

 

ஙகர வெல்கொடி யானொடு, நன்னெஞ்சே!

நுகர நீ உனைக் கொண்டு உயப் போக்கு உறில்

மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்

புகரில் சேவடியே புகல் ஆகுமே.

 

எனப் பாடி உள்ளதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

 

இதன் பொருள் ---

 

     நல்ல நெஞ்சே! வெல்லும் கொடி உடையான் ஆகிய சிவபெருமானோடு நுகர்தற்கு நீ உன்னைக்கொண்டு உய்யப் போதல் உற்றால், மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய சிவபெருமானின் குற்றமற்ற சேவடியே நமக்குத் தஞ்சப் பொருள் ஆகும்.

 

     இப் பாடலில், "ங"கரவெல் கொடியான் என்றது இடபக்கொடியான் ஆகிய சிவபெருமானை. படுத்திருக்கும் வடிவில் இடபம் "ங" போன்று இருத்தலின் "ங"கர வெல்கொடியான் என்றார். "ங"கரம் என்று சொல்லப்படும் எருது, வண்டியை இழுப்பதற்குச் சலிக்காது. வண்டி இழுத்தற்குப் பூணப்படும் நுகத்தடிக்குத் தனது தலையை வளைப்பது போல, இல்வாழ்க்கை என்னும் பெரிய வண்டியைச் செலுத்துவதற்கு, எப்பொதும் தளராமல் முயலவேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். காரணம், "மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதற்கு, "தடை உண்டாகிய இடங்களில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் எருதுபோல் விடாமுயற்சி உடையவன்" என்று பொருள் கொள்ளப்படுவதால், "ஙப்போல் வளை" என்பதற்கு இல்லறத்தில் இருந்து முயல்பவனுக்குச் சொல்லப்பட்டதாகவும் கொள்ளலாம்.

 

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்;

ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்;

ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்;

ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

 

என்பது, நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலர் அருளிய திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     சிவாலயங்களின் அமைப்பை உற்று நோக்கி உணரவல்லார்க்குக் கருவறையில் முதலிடத்தில் உள்ள இலிங்கமே பதியாயும், அவ்விலிங்கத்தின் திருமுன்பில் உள்ள இடபமே பசுவாயும் (உயிராயும்), இடபத்திற்குப் பின் உள்ள பலிபீடமே அடக்கி ஒடுக்கப்பட்ட பாசமாயும் காட்சியளிக்கும்.

 

     இடபம் என்பது ஆன்மாவை(உயிரை)க் குறிக்கும். சிவலிங்கம் என்பது இறைவனைக் குறிக்கும். பலிபீடம் என்பது உயிர்களைப் பற்றி உள்ள பாசத்தைக் குறிக்கும்.

 

     திருக்கோயிலிலுள் இடபம் என்னும் உயிரானது சிவத்தை நோக்கி இருக்கும். உயிருக்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவத்தை நோக்கி உள்ள உயிருக்குப் பாசம் பிற்பட்டுப் போகும். சிவத்தை நோக்காது, உயிரானது உலகத்தை நோக்குமானால், பாசமானது உயிருக்கு முற்பட்டு நிற்கும்.

 

     எனவே, "ங"கர வடிவில் உள்ள உயிராகிய இடபமானது, எப்போதும் இறைவனைத் தழுவியே (நோக்கியே) இருக்கவேண்டும் என்பது கருத்து.

 

     எனவே, இதுகாறும் கூறியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், "ஙப்போல் வளை" என்று ஔவைப் பிராட்டியார் அருளியதன் பொருள்கள் விளங்கும்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...