வயலூர் --- 0924. வாளின் முனையினும்

 


 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வாளின் முனையினும் (வயலூர்)

 

முருகா!

விலைமாதர் மயக்கத்தில் இருந்து விடுபட அருள்.

 

 

தான தனதன தந்தன தந்தன

     தான தனதன தந்தன தந்தன

     தான தனதன தந்தன தந்தன ...... தனதான

 

வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம

     ராஜ நடையினு மம்பதி னும்பெரு

     வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான

 

வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ

     வாயு நகைமுக வெண்பலு நண்புடன்

     வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந்

 

தூளி படுநவ குங்கும முங்குளி

     ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம

     சோதி வளர்வன கொங்கையு மங்கையு... மெவரேனுந்

 

தோயு மளறெனி தம்பமு முந்தியு

     மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்

     சூளை யரையெதிர் கண்டும ருண்டிட.....லொழிவேனோ

 

காளி திரிபுரை யந்தரி சுந்தரி

     நீலி கவுரிப யங்கரி சங்கரி

      காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி

 

காதல் மனைவிப ரம்பரை யம்பிகை

     ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை

     கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது

 

வேளி னிரதிய ருந்ததி யிந்திர

     தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி

     மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே

 

வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்

     தீர வருள்தரு கந்தநி ரந்தர

     மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

வாளின் முனையினும்,நஞ்சினும்,வெஞ்சம

     ராஜ நடையினும்,அம்பு அதினும்பெரு

     வாதை வகைசெய் கருங்கணும். எங்கணும் ...... அரிதான

 

வாரி அமுது பொசிந்து கசிந்த செ-

     வாயும் நகைமுக வெண்ப(ல்)லும்,நண்புடன்

     வாரும் இரும் எ(ன்)னும் இன்சொலு(ம்) மிஞ்சிய.....பனிநீரும்

 

தூளி படுநவ குங்குமமும் குளிர்

     ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம

     சோதி வளர்வன கொங்கையு(ம்) அங்கையு(ம்).....எவரேனும்

 

தோயும் அளறு என் நிதம்பமும் உந்தியும்,

     மாயை குடிகொள் குடம்பையுள் மன்பயில்

     சூளையரை எதிர் கண்டு மருண்டிடல்.....ஒழிவேனோ?

 

காளி,திரிபுரை,அந்தரி,சுந்தரி,

     நீலி,கவுரிபயங்கரி,சங்கரி,

      காரு(ண்)ணிய சிவை,குண்டலி,சண்டிகை,......த்ரிபுராரி

 

காதல் மனைவி,பரம்பரை,அம்பிகை,

     ஆதி மலைமகள்,மங்கலை,பிங்கலை,

     கான நடனம் உகந்தவள்;செந்திரு,...... அயன்மாது,

 

வேளின் இரதிஅருந்ததி,இந்திர

     தேவி முதல்வர் வணங்கு த்ரியம்பகி,

     மேக வடிவர்பின் வந்தவள் தந்துஅருள் ......இளையோனே

 

வேலு(ம்) மயிலு(ம்) நினைந்தவர் தம்துயர்

     தீர அருள்தரு கந்த! நிரந்தர!

     மேலை வயலை உகந்து உ(ள்)ளம் நின்று அருள் ...... பெருமாளே.

 

பதவுரை

 

     காளி--- கரிய நிறத்தை உடையவள்,

 

     திரிபுரை --- இடை பிங்கலைசுழுமுனை என்ற மூன்று நாடிகளிலும் இருப்பவள்,

 

     அந்தரி--- கொற்றவை,

 

     சுந்தரி--- அழகி,

 

     நீலி --- நீல நிறத்தை உடையவள்,

 

     கவுரி --- பொன் நிறத்தை உடையவள்,

 

     பயங்கரி--- அடியவர் பயத்தைப் போக்கி அருளுபவள், (தீயவர்க்கு அச்சத்தை விளைவிப்பவள்)

 

     சங்கரி--- ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்பவள்,

 

     காருணிய சிவை --- கருணை மிக்க சிவபிரானின் தேவி,

 

     குண்டலி--- குண்டலம் அணிந்தவள்,

 

     சண்டிகை --- துர்க்கை,

 

     த்ரிபுராரி காதல்மனைவி--- திரிபுராந்தகர் ஆகிய சிவபரம்பொருளின் அன்பு மனைவி,

 

     பரம்பரை--- பெரிய பொருள்களுக்கெல்லாம் பெரிய பொருளாக வீற்றிருப்பவள்,

 

     அம்பிகை --- உலக அன்னை,

 

     ஆதி--- முதற்பொருள் ஆனவள்,

 

     மலைமகள்--- மலையரையன் மகளாக அவதரித்த பார்வதிதேவி.

 

     மங்கலி--- உயிர்களுக்கு மங்கலத்தை அருள்பவள்,

 

     பிங்கலை--- பொன் நிறம் படைத்தவள்,

 

     கான நடனம் உகந்தவள்--- காட்டில் நடனம் புரிவதை விரும்பியவள்,

 

     செம்திரு--- செந்தாமரையில் வாசம் செய்யும் திருமகள்,

 

     அயன்மாது--- பிரமதேவரின் தேவியாகிய கலைமகள்,

 

     வேளின் இரதி--- மன்மதவேளின் துணைவியாகிய இரதிதேவி,

 

     அருந்ததி--- வசிட்டரின் மனைவியாகிய அருந்ததி

 

     இந்திரதேவி --- இந்திரனின் தேவியாகிய இந்திராணி

 

     முதல்வர் வணங்கும் த்ரியம்பகி--- முதலானவர்கள் வணங்கும் முக்கண்ணி,

 

     மேக வடிவர் பின்வந்தவள்--- மேகவடிவர் ஆகிய திருமாலின் பின் பிறந்தவள்,

 

     தந்து அருள் இளையோனே --- பெற்று அருளிய இளைய பிள்ளையாரே!

 

    வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரு கந்த--- வேலையும் மயிலையும் நினைந்து வழிபடுவோரின் துயர் தீருமாறு அருள் புரிகின்ற கந்தப் பெருமானே!

 

     நிரந்தர--- என்றும் உள்ளவரே!

 

     மேலை வயலை உ(ள்)ள(ம்)உகந்து நின்று அருள்பெருமாளே ---  மேன்மை தங்கிய வயலூர் என்னும் திருத்தலத்தில் உள்ளம் உகந்து எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

    வாளின் முனையினும் --- வாளின் முனையைக் காட்டிலும்,

 

     நஞ்சினும்--- விடத்தைக் காட்டிலும்,

 

     வெம் சம ராஜ நடையினும்--- கொடிய இயமனுடைய தொழிலைக் காட்டிலும்,

 

     அம்பு அதினும்--- அம்பைக் காட்டிலும்,

 

     பெரு வாதை வகை செய் கரும் க(ண்)ணும்--- பெரும் துன்பத்தை விளைக்கின்ற கரிய கண்களும்,

 

     எங்கணும் அரிதான வாரி அமுது பொசிந்து கசிந்த செ(வ்)வாயு(ம்)--- எங்கும் கிடைத்தற்கு அரிதாகிய பாற்கடல் அமுது பொதிந்துவெளிப்படுகின்ற சிவந்த வாயும்,

 

     நகை முக வெண் ப(ல்)லு(ம்)--- சிரித்த முகத்துடன் வெண்மையான பற்களும்,

 

     நண்புடன் வாரும்இரும் எனும் இன் சொ(ல்)லும்--- நட்பு உரிமையோடு வாருங்கள்அமருங்கள் என்கின்ற இனிய சொற்களும்,

 

     மிஞ்சிய பனி நீரும்--- மிகக் குளிர்ந்த பனிநீரும்,

 

     தூளி படு நவ குங்குமமும் --- பூந்தாதுடன் கூடிய செஞ்சாந்தமும்,

 

     குளிர் ஆரம்--- குளிர்ந்த சந்தனக் குழம்பும்

 

     அகில்--- அகிலும்,

 

     புழுகும் புனை  --- புனுகுச் சட்டமும் புனைந்,

 

     சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையும்--- ஆடம்பரமும்அழகும் கூடிய கொங்கைகளும்,

 

     அம் கையும்--- அழகிய கைகளும்,

 

     எவரேனும் தோயும் அளறு என் நிதம்பமும்--- யாரும் வந்து தோய்கின்ற சேறு என்று சொல்லும்படியான பெண்குறியும்,

 

     உந்தியும்--- தொப்புள் குழியும், (கூடிய)

 

     மாயைகுடி கொள் குடம்பையுள்--- மாயையால் ஆன இந்த உடம்பினுள்,

 

     மன் பயில் சூளையரை--- காலம் கழிக்கும் விலைமாதரை

 

     எதிர் கண்டு--- எதிரில் கண்டவுடன்,

 

     மருண்டிடல் ஒழிவேனோ --- மயக்கம் கொள்வதை அடியேன் ஒழியமாட்டேனோ?


 

பொழிப்புரை

 

     கரிய நிறத்தை உடையவளும்இடை பிங்கலைசுழுமுனை என்ற மூன்று நாடிகளிலும் இருப்பவளும்;கொற்றவையும்;அழகில் சிறந்தவளும்,;நீல நிறத்தை உடையவளும்;பொன் நிறத் திருமேனியை உடையவளும்அடியவர் பயத்தைப் போக்கி அருளுபவளும்; (தீயவர்க்கு அச்சத்தை விளைவிப்பவளும்)ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்பவளும்கருணை மிக்க சிவபிரானின் தேவியும்;திருச்செவிகளில் குண்டலம் அணிந்தவளும்துர்க்கையும்; திரிபுராந்தகர் ஆகிய சிவபரம்பொருளின் அன்பு மனைவியும்பெரிய பொருள்களுக்கெல்லாம் பெரிய பொருளாக வீற்றிருப்பவளும்உலக அன்னையும்முதற்பொருள் ஆனவளும்மலையரையன் மகளாக அவதரித்த பார்வதிதேவியும்; உயிர்களுக்கு மங்கலத்தை அருள்பவளும்பொன் நிறம் படைத்தவளும்காட்டில் நடனம் புரிவதை விரும்பியவளும்;செந்தாமரையில் வாசம் செய்யும் திருமகள், பிரமதேவரின் தேவியாகிய கலைமகள்மன்மதவேளின் துணைவியாகிய இரதிதேவிவசிட்டரின் மனைவியாகிய அருந்ததி,  இந்திரனின் தேவியாகிய இந்திராணிமுதலானவர்கள் வணங்கும் முக்கண்ணியும்;மேகவடிவர் ஆகிய திருமாலின் பின் பிறந்தவளும் ஆகிய உமாதேவியார்பெற்று அருளிய இளைய பிள்ளையாரே!

 

     வேலையும் மயிலையும் நினைந்து வழிபடுவோரின் துயர் தீருமாறு அருள் புரிகின்ற கந்தப் பெருமானே!

 

     என்றும் உள்ளவரே!

 

     மேன்மை தங்கிய வயலூர் என்னும் திருத்தலத்தில் உள்ளம் உகந்து எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

     வாளின் முனையைக் காட்டிலும்,விடத்தைக் காட்டிலும்கொடிய இயமனுடைய தொழிலைக் காட்டிலும்,அம்பைக் காட்டிலும்பெரும் துன்பத்தை விளைக்கின்ற கரிய கண்களும்எங்கும் கிடைத்தற்கு அரிதாகிய பாற்கடல் அமுது பொதிந்துவெளிப்படுகின்ற சிவந்த வாயும்;சிரித்த முகத்துடன் வெண்மையான பற்களும்;நட்பு உரிமையோடு வாருங்கள்அமருங்கள் என்கின்ற இனிய சொற்களும்;மிகக் குளிர்ந்த பனிநீரில் குழைக்கப்பட்ட பூந்தாதுடன் கூடிய செஞ்சாந்தமும், குளிர்ந்த சந்தனக் குழம்பும்,  அகிலும்,புனுகுச் சட்டமும் புனைந், ஆடம்பரமும்அழகும் கூடிய கொங்கைகளும்; அழகிய கைகளும்;யாரும் வந்து தோய்கின்ற சேறு என்று சொல்லும்படியான பெண்குறியும்;தொப்புள் குழியும்கூடிய மாயையால் ஆன இந்த உடம்பினுள்காலம் கழிக்கும் விலைமாதரைகண் எதிரில் கண்டவுடன்மயக்கம் கொள்வதை அடியேன் ஒழியமாட்டேனோ?

 

விரிவுரை

 

வாளின் முனையினும் --- 

 

வாளின் முனையைப் போலும் கூர்மையான கண்கள்.

 

வாளானது வெட்டினால் தான் துன்பத்தைச் செய்யும்.

விலைமாதரின் கண்கள் பார்த்த அளவிலேயே துன்பத்தைச் செய்வன.

 

நஞ்சினும்--- 

 

நஞ்சு உண்டாரைக் கொல்லும்,

 

விலைமாதரின் கண்கள் கண்டாரைக் கொல்லும்.

வெம் சம ராஜ நடையினும்--- 

 

சமராஜன் --- இயமன்.

 

நடை --- தொழில்.

 

இயமன் தொழில் உயிர்களுக்கு மரணத்தைச் சம்பிக்கச் செய்துஉடம்பில் இருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு போதல். மரணவாதை என்பது கொடியது.

 

விலைமாதர் புரியும் சாகசத் தொழிலானதுகாமுகரின் உயிரையும்உடலையும் ஒருங்கே துன்புறுத்துவது.

 

அம்பு அதினும்--- 

 

அம்பு பட்டால் தான் துன்பம்.

 

விலைமாதரின் கண் பார்வை பட்டாலே துன்பம்.

 

பெரு வாதை வகை செய் கரும் க(ண்)ணும்--- 

 

பெரு வாதை --- பெருந்துன்பம்.

 

விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும்சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.

 

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால்அதற்கு ஒரே வழிஇறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

 

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

 

உலகப் பற்றுக்களை நீத்துஇறைவனது திருவடியைச் சாரபெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்திஅவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறுபொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

 

வேனில்வேள் மலர்க்கணைக்கும்வெண்ணகைச்  செவ்வாய்கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளா வாழ்கின்றாயே.                  --- திருவாசகம்.

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவேபொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.       --- திருப்புகழ். 

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ?            --- திருப்புகழ்.

 

பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே!      --- பட்டினத்தார்.

 

பால்என்பது மொழிபஞ்சு என்பது பதம்பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலைவெட்சித்தண்டைக்

கால் என்கிலைநெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?. --- கந்தர் அலங்காரம்.

 

மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.        --- பட்டினத்தார்.

 

மாதர் யமனாம்அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம்- ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.                           ---திருப்போரூர்ச் சந்நிதி முறை.

 

                                             

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

 

ஆனால்,இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு மட்டுமே உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

 

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான்அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

 

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.          ---  பெரியபுராணம்.

 

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலைபோமின்” என்று அருளிச் செய்தார்.

 

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள் என்பதை அறிக.

 

 

எங்கணும் அரிதான வாரி அமுது பொசிந்து கசிந்த செ(வ்)வாயு(ம்)--- 

 

விலைமாதர் வாயில் ஊறும் எச்சிலைகிடைத்தற்கு அரிய அமுதம் என்று எண்ணி மயங்குவர் காமுகர்.

 

பாலொடு தேன் கலந்து அற்றேபணிமொழி

வால்எயிறு ஊறிய நீர்.                --- திருக்குறள்.

 

 

நண்புடன் வாரும்இரும் எனும் இன் சொ(ல்)லும்--- 

 

நடு வீதியில் நின்று வீதிவழியே செல்லும் இளைஞர்களைத் தமது சாகசங்களால் வலிந்து அழைத்து,பல இனிய வார்த்தைகளைக் கூறி கண்வலை வீசித் தமது நடை உடைகளால் மயக்குவார்கள். பொருளில் தமக்குப் பற்று இல்லாத்து போலச் சாகசமாகப் பேசி, "இதோ இதுதான் எனது வீடு,வாருங்கள்இங்கே அமருங்கள்" என்று சொல்லி அழைத்துச் செல்வார்கள்.ஆனாலும் பொருளைப் பறித்த பின்னரே கலவிக்கு உடன்படுவார்கள். மனமுடனே பொருளையும் ஆவியையும் பறிமுதல் புரியும் விலைமகளிரது சாகசங்களை எடுத்துக் கூறிஅவர்களிடத்து மயங்கா வண்ணம் விழிப்பை உண்டுபண்ணுகிறார் அடிகளார். சிவஞானம் தலைப்படுமாறு பக்திநெறி சென்று முத்தி நிலையடைய விழைவார்க்கு முதற்படி மாதர் ஆசையை நீக்குவதே ஆகும். முதலில் விலைமகளிரை வெறுத்து, இல்லறத்தில் இருந்து, பின்னர் அதனையும் வெறுத்து, நிராசையை மேற்கொள்ள வேண்டும்.

 

பிற திருப்புகழ்ப் பாடல்களிலும் அடிகளார் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளது காண்க.

 

எங்கேனும் ஒருவர்வர, அங்கேகண் இனிதுகொடு,

     "இங்குஏவர் உனதுமயல்                தரியார்"என்று

"இந்தாஎன் இனியஇதழ் தந்தேனை உறமருவ"

     என்றுஆசை குழைய,விழி               இணையாடி

தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள்

     சந்தேகம் அறவெ பறி                 கொளுமானார்

சங்கீத கலவிநலம் என்று ஓது முத்திவிட

     தண்பாரும் உனது அருளை                 அருள்வாயே”  --- திருப்புகழ்.

 

அங்கை மென்குழல் ஆய்வார் போலே,

     சந்தி நின்று அயலோடே போவார்,

       அன்பு கொண்டிட,நீரோ போறீர்?......    அறியீரோ?

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர்,

     பின்பு கண்டு அறியோம் நாம்தே?

     அன்றும் இன்றும் ஒர் போதோ போகா,......துயில்வாரா,

 

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?

     பண்டு தந்தது போதாதோமேல்

     இன்று தந்து உறவோதான்துஏன்?......இதுபோதாது?

இங்கு நின்றது என்?வீடே வாரீர்,

     என்று இணங்கிகள் மாயா லீலா

     இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே. --- திருப்புகழ்.

 

அம்கை நீட்டி அழைத்து,பாரிய

     கொங்கை காட்டி மறைத்து,சீரிய

     அன்பு போல் பொய் நடித்து,காசுஅளவு ......   உறவாடி

அம்பு தோற்ற கண் இட்டு,தோதக

     இன்ப சாஸ்த்ரம் உரைத்து,கோகிலம்

     அன்றில் போல் குரல் இட்டு,கூரிய ......      நகரேகை

 

பங்கம் ஆக்கி அலைத்து,தாடனை

     கொண்டு வேட்கை எழுப்பி,காமுகர்

     பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்

பண்டு இராப் பகல் சுற்றுச் சூளைகள்,

     தங்கள் மேல் ப்ரமை விட்டு,பார்வதி

     பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே.. ---  திருப்புகழ்.

 

எவரேனும் தோயும் அளறு என் நிதம்பமும்--- 

 

தோயும் --- படிகின்ற.

 

அளறு --- சேறுசகதி.

 

சேற்றில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டால்வெளியேறுவது மிகவும் அரிது. இங்கே விலைமாதர் தருகின்ற சிற்றின்பம் ஆகிய சேற்றில் விழுந்தவரும்அதில் இருந்து வெளிவருவது மிகவும் கடினம். 

 

விலைமாதர் இன்பத்தில் அழுந்தி இருப்பது நரகத்தைப் போன்ற துன்பத்தையே தரும்.

 

"விலைமாதர்சேறு தனில் நித்தம் மூழ்கி,நாள் அவம் இறைத்து,மாயைசேர் தரும் உளத்தன் ஆகிஉழல்வேனோ?எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளார்.

 

மாதர் யமனாம்அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநரகம்--- ஓத அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லைபோரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.      --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை      

                             

பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டுஎன்னை

கண்ணால் வெருட்டிமுலையால் மயக்கிகடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளிஎன் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே!

 

சீறும் வினை அது பெண் உருவாகிதிரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகிகொடுமையினால்,

பீறு மலமும்உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன்இறைவா! கச்சி ஏகம்பனே!

 

எத்தனைபேர் நட்டகுழிஎத்தனைபேர் தொட்டமுலை?

எத்தனைபேர் பற்றிஇழுத்தஇதழ்?- நித்தம்நித்தம்

பொய்யடா,பேசும் புவியில் மடமதாரை விட்டு

உய்யடாஉய்யடாஉய்.                    --- பட்டினத்தார்.

 

மன் பயில் சூளையரை--- 

 

சூளையர் --- விலைமாதர்.

 

வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரு கந்த--- 

 

இந்த வரிகள் நித்திய வழிபாட்டிற்கு உரியவை. 

 

மேலை வயலை உ(ள்)ள(ம்) உகந்து நின்று அருள்பெருமாளே ---  

 

வயலூர் என்னும் திருத்தலம் திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி,திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன் வணங்கிய தலம். இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும்குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும்.முருகன் தனது வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால்,அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும்அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் மயக்கத்தில் இருந்து விடுபட அருள்.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...