ஆத்திசூடி --- 16. சனி நீராடு

 

 

16. சனி நீராடு.

 

     (பதவுரை) சனி --- சனிக்கிழமை தோறும், நீர் ஆடு ---(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு.

 

     (பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு. (புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)

 

     சனி நீர் ஆடு --- சனித்து (ஊற்றெடுத்து) ஓடுகின்ற நீரிலே முழுகி எழு என்றும் பொருள் கொள்ளப்படுவது உண்டு.

 

     எப்படிப் பொருள் கொண்டாலும், அவையெல்லாம் "நோய்க்கு இடம் கொடேல்" என்பதில் அடங்கிவிடுவதை அறியலாம். அப்படியானால், "சனி நீராடு" என்று அருளியதன் பொருள் என்ன என்று சற்று விரிவாகவே காணலாம்.

 

     இதுவரை, தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தி வந்த பாட்டியார், ஒருவன் தனக்குத் தானே தலைவன் என்று எண்ணி, மனம் போனபடி எல்லாம் வாழ்வதை விடுத்து, தனக்கு மேலே, தனிப்பெரும் சத்தியாக உள்ள பரம்பொருளையே வழிபட்டு உய்யவேண்டும் என்பதை வலியுறுத்த, இந்த அறிவுரையை வழங்கினார் என்று கொள்ளலாம். உயிர்களுக்கு, அவற்றின் வினைகளின் பயனாகப் பிறவி வாய்க்கின்றது. பிறவு வாய்த்தபின், இன்பமும் துன்பமும் வினைகளின் பயனாகவே வாய்க்கின்றது. வினைதான், பிறவிக்குக் காரணம். பிறவிகள் தோறும் ஈட்டுகின்ற வினை ஆகாமியம் அல்லது ஏறுவினை எனப்படும். ஈட்டுகின்ற வினையானது, பழவினை அல்லது தொல்வினை, அல்லது இருப்புவினை என்னும் சஞ்சித வினையாகத் தொக்கி நிற்கின்றது. உயிர்களுக்கு அவற்றின் பக்குவ நிலைக்கு ஏற்ப, வினைகளின் ஊட்டி, உடம்பைப் படைத்து அளிக்கின்றான் இறைவன். ஒவ்வொரு உயிரும், தாம் செய்த வினையின் காரணத்தினால் வந்து மண்ணுலகில் பிறக்கின்றது. சைவ சித்தாந்தக் கொள்கையில் அடிப்படையான தத்துவங்கள் நான்கு. அவை வினையைச் செய்பவன் ஆகிய ஆன்மா. ஆன்மா செய்த வினை, அவ்வினையின் பயன், அறிந்து ஊட்டுபவன் ஆகிய இறைவன். வினை சடம். ஆதலின் தானே வந்து பொருந்தாது. சிற்றிவுடைய ஆன்மாவுக்கும் முற்பிறப்பில் செய்தவினை இது என உணர்ந்து நுகரும் ஆற்றலும் அறிவும் இல்லை. ஆதலின் பேரறிவும் பெருங்கருணையும் பேராற்றலும் படைத்த இறைவன் காலமறிந்து இடமறிந்து அளவறிந்து வினைப்பயனை ஆன்மாவுக்கு ஊட்டுகின்றான்.

 

செய்வினையும், செய்வானும்,

     அதன்பயனும், சேர்ப்பானும்,

மெய்வகையால் நான்காகும்

     விதித்த பொருள் எனக்கொண்டே,

இவ்வியல்பு சைவநெறி

     அல்லவற்றுக்கு இல்லையென

உய்வகையால் பொருள் சிவன் என்று

     அருளாலே உணர்ந்து அறிந்தார்.

                                                                                      

என்று பெரியபுராணம் கூறுவது காண்க. இதன் பொருள் ---

 

     செய்யும் வினை, செய்பவனான வினைமுதல், அதன் பயன், இவைகளைத் தந்து ஊட்டுபவனான இறைவன் ஆக உண்மை வகையால், பொருள்கள் நான்காகும் என்னும் தெளிவு கொண்டு, இச்சிறப்பியல்பு சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிவையும், உய்தி பெற அடைதற்குரிய பொருள் சிவமே என்னும் உண்மையையும், அப்பெருமானின் திருவருளால் உணர்ந்து கொண்டார்.

 

செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்

உய்வானும் உளன் என்று உணர்.

 

என்பது "திருவருட்பயன்" என்னும் சித்தாந்த சாத்திர நூல் கூறுவது.

 

     இன்ன இன்ன வினை செய்தான், இன்ன இன்ன வகையாக, இன்ன இன்ன இடத்திலே பிறக்க வேண்டும் என்பது இறைவனது அருட்கட்டளை.

 

         இந்த வினைப் பயன்களை அந்தந்த உயிருக்கு ஊட்டிப் பயன்களைத் தருவதை, நவகோள்களின் இருப்பையும், நகர்வையும் வைத்துக் கணிக்கலாம். கணிக்கலாமே தவிர, கணிப்பின் இருப்பை எவ்வித்திலும் மாற்ற முடியாது. இந்தக் கணித நூலுக்கு, சோதிடம் என்று பெயர். சோதிடம், வேதத்தின் ஐந்தாம் அங்கமாகவும், வேதங்களின் கண்களாகவும் கருதப்படுகிறது. எனவே, கோள்கள் வினைப் பயன்களை ஊட்டுவனவாக அமைந்தன. கோள்கள் அவைகளாகவே நமக்கு எதையும் செய்யவல்லன அல்ல. அவை இறைவன் ஆணை வைப்பின்படி செயல் புரிபவை. சோதிடத்தில், ஆயுள்காரகன் என்றும் தொழில்காரகன் என்றும் சொல்லப்படுவது சனி என்னும் கிரகத்தைத் தான். மெதுவாக நகர்வதால் அவரை, "சனைச்சரன்" என்பார்கள். காலப்போக்கில், "சனீசுவரன்" தவறாகக் கொள்ளப்பட்டது. சனி என்பது ஒரு கோள்தானே தவிர, அவர் ஈசுவரன் அல்ல. உலகத்து உயிர்கள் வானத்துக் கிரகங்களின் சஞ்சாரத்துக்கு ஏற்ப இயங்குகின்றன. ஆயுள்காரகனும், தொழில் காரகனும் ஆகிய சனியின் இருப்பையும், நகர்வையும் அறிந்து, வினைப் பயனை, தக்கபடி அனுபவித்து வாழவேண்டும். துன்பம் வரும்போதும், சனியின் நிலையை, சோதிட நூல் வல்லாரிடம் கேட்டு அறிந்து கொண்டு, அதன் வழி நடத்தல் வேண்டும்.

 

     திருவொற்றியூரை விட்டு, சுந்தரமூர்த்தி நாயனார் நீங்கிய போது, அவருடைய இரு கண்களும் பார்வையை இழந்தன. தாங்கொணாத துன்பத்தை அடைந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், "என் கண்ணுக்கு ஒரு மருந்து உரையாய், ஒற்றியூர் என்னும் ஊர் உறைவானே!" என்று இறைவரைத் திருப்பதிகம் பாடினார். திருப்பதிகத்துள், ஒரு பாடலில், "மகத்துள் புக்கதோர் சனி எனக்கு ஆனாய்" என்று பாடி இருத்தலைக் கொண்டு, கோள்களில் ஆயுள்காரகனும், தொழில்காரகனும் ஆகிய சனிக் கிரகத்தின் இருப்பையும், நகர்வையும் வைத்து இன்ப துன்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். சனி மகத்தில் வந்தால், நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்கு வரும் என்பது சோதிடநூல் துணிபு.

 

     எனவே, "சனியின் நீர்மையில் ஆடுக" என்றார் பாட்டியார். "நீர்மை" என்றால் "தன்மை" என்று பொருள்படும். "ஆடுதல்" என்றால், "அனுபவித்தல்" என்று பொருள்படும். "மகட்குத் தாய் தன் மணாளோடு ஆடிய சுகம்" என்று திருமந்திரத்தில் அருளியவாறு, ஆடுதல் என்பது அனுபவித்தலைக் குறிக்கும் என்று அறியலாம். "சனியைப் போலக் கெடுப்பவரும் இல்லை; சனியைப் போலக் கொடுப்பவரும் இல்லை" என்று சொல்லப்படுவதும் காண்க. வாழ்க்கையை அறவழியில் வாழ்பவர்க்கு, சனியால் தொல்லை இல்லை. வினைவழியே துன்பமும் இன்பமும் அனுபவிக்கப்படும்.

 

     "ஏகனாகி இறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை இன்றே" என்னும் சிவஞானபோதச் சூத்திரத்தின்படி, இறையடியார்களை மாயையால் ஆன பிறப்பும், வல்வினையால் வரும் துன்பங்களும் இல்லையாகிப் போய்விடும்.

 

வேய்உறு தோளிபங்கன், விடம்உண்ட கண்டன்,   

  மிகநல்ல வீணை தடவி   

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, ன்   

  உளமே புகுந்த அதனால்,   

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி   

  சனிபாம்பு இரண்டும் உடனே   

ஆசறும், நல்லநல்ல, அவைநல்ல நல்ல,   

  அடியார் அவர்க்கு மிகவே.                 --- திருஞானசம்பந்தர்.

 

இதன் பொருள் ---

 

     மூங்கில்போன்ற தோளினை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு , திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம் . அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும் .

 

என்பொடு கொம்பொடு ஆமை இவைமார்பு இலங்க,

  எருது ஏறி, ஏழையுடனே   

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்து என்   

  உளமே புகுந்த அதனால்,   

ஒன்பதொடு, ஒன்றொடு, ழு, பதினெட்டொடு ஆறும்   

  உடன் ஆய நாள்கள் அவைதாம்,   

அன்பொடும் நல்லநல்ல, அவைநல்ல நல்ல,   

  அடியார் அவர்க்கு மிகவே.                    --- திருஞானசம்பந்தர்.

 

இதன் பொருள் ---

 

     சிவபரம்பொருள்,எலும்பு,பன்றிக்கொம்பு,ஆமையின் ஓடு ஆகியவை திருமார்பில் இலங்க,பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தை மலர்மாலை,கங்கை ஆகியனவற்றைத்  திருமுடிமேல் சூடி, உமை அம்மையாரோடு எருது ஏறி வந்து, என் உள்ளம் புகுந்து எழுந்தருளியிருத்தலால்,அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது,பத்து,பதினாறு,பதினெட்டு,ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.

 

     இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில், அசுவினி முதலாகக் கொண்டு எண்ணினால், ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம். ஒன்பதோடொன்று = பத்து. பத்தாவது நட்சத்திரம் மகம். ஒன்பதொடேழு = பதினாறு. பதினாறாவது நட்சத்திரம் விசாகம். பதினெட்டாவது நட்சத்திரம், கேட்டை. ஆறு, ஆறாவது நட்சத்திரம், திருவாதிரை. உடனாய நாள்கள் அவை --- பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி, நாள்கள் என்றதால், ஆகாத நட்சத்திரங்களும், அவை வரும் கிழமைகளும் கூறப்பட்டன.

 

இவ் உண்மையானது ---

 

ஆதிரை பரணி ஆரல் ஆயில்யம் முப்பூரம் கேட்டை

தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறும்,

மாதனம் கொண்டார் தாரார், வழிநடைப் பட்டார் மீளார், 

பாய்தனில் படுத்தார் தேறார், பாம்பின்வாய்த் தேரைதானே.

 

என வரும் சோதிட நூல் பாட்டால் அறியப்படும்.

 

திருஞானசம்பந்தப் பெருமானார் "கோளறு திருப்பதிகம்" அருளி இருத்தலின் பொருளை உணர்க.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...