அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வரித்த குங்குமம்
(திருப்பெருந்துறை)
முருகா!
கருக் கடலைக் கடக்கத்
திருக்கருணை புரிவாய்.
தனத்தனந்
தனதன தனத்தனந் தனதன
தனத்தனந் தனதன ...... தனதான
வரித்தகுங்
குமமணி முலைக்குரும் பையர்மன
மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான
வளைக்கரங்
களினொடு வளைத்திதம் படவுடன்
மயக்கவந் ததிலறி ...... வழியாத
கருத்தழிந்
திடஇரு கயற்கணும் புரள்தர
களிப்புடன் களிதரு ...... மடமாதர்
கருப்பெருங்
கடலது கடக்கவுன் திருவடி
களைத்தருந் திருவுள ...... மினியாமோ
பொருப்பகம்
பொடிபட அரக்கர்தம் பதியொடு
புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா
புகழ்ப்பெருங்
கடவுளர் களித்திடும் படிபுவி
பொறுத்தமந் தரகிரி ...... கடலூடே
திரித்தகொண்
டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக
திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத்
திருக்குருந்
தடியமர் குருத்வசங் கரரொடு
திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வரித்த
குங்குமம் அணி முலைக் குரும்பையர், மன
மகிழ்ச்சி கொண்டிட, அதி ...... விதமான
வளைக்
கரங்களினொடு வளைத்து, இதம் பட, உடன்
மயக்க வந்து, அதில் அறிவு ...... அழியாத
கருத்து
அழிந்திட, இரு கயல் கணும் புரள்தர,
களிப்புடன் களிதரு ...... மடமாதர்,
கருப்பெரும்
கடல் அது கடக்க, உன் திருவடி-
களைத் தரும் திருவுளம் ...... இனி ஆமோ?
பொருப்பு
அகம் பொடிபட, அரக்கர் தம் பதியொடு
புகைப் பரந்து எரி எழ ...... விடும்வேலா!
புகழ்ப்
பெரும் கடவுளர் களித்திடும் படி, புவி
பொறுத்த மந்தர கிரி ...... கடல்ஊடே
திரித்த
கொண்டலும், ஒரு மறுப்பெறும் சதுமுக
திருட்டி எண் கணன் முதல் ...... அடிபேணத்
திருக்குருந்து
அடி அமர் குருத்வ சங்கரரொடு
திருப்பெருந்துறை உறை ...... பெருமாளே.
பதவுரை
பொருப்பு அகம்
பொடிபட
--- கிரவுஞ்ச மலையானது முழுதும் பொடிபட்டு அழியவும்,
அரக்கர் தம் பதியோடு புகைப் பரந்த எரிஎழ
விடும் வேலா --- அரக்கர்கள் தங்கள் ஊர்களுடன் புகை பரந்த பெருநெருப்பில் பட்டு
அழியவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
புகழ்ப் பெரும்
கடவுளர் களித்திடும் படி --- புகழப்படும் தேவர்கள் களிப்பு
அடையும்படியாக,
புவி பொறுத்த மந்தரகிரி கடல் ஊடே திரித்த
கொண்டலும் --- பூமியைத் தாங்கும் மந்தர மலையை பாற்கடலினிடையே மத்தாகச் சுழலச்
செய்த மேகநிறத்தவனாகிய திருமாலும்,
ஒரு மறுப் பெறும்
சதுமுக திருட்டி எண் க(ண்)ணன் முதல் அடிபேண --- ஒரு குறையைப்
பெற்றதால்
எட்டுக்
கண்களை உடைய பிரமதேவன் முதலான தேவர்களும் தேவரீரது திருவடியை வழிபட,
திருக்குருந்து அடி
அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே --- திருக் குருந்த
மரத்தடியில் எழுந்தருளி இருந்த குருமூர்த்தியாகிய சிவபெருமானுடன் திருப்பெருந்துறையில்
எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!
வரித்த குங்குமம் அணி
முலைக் குரும்பையர் --- சந்தனக் கலவையால் தொய்யில் எழுதப்பட்டதும், தென்னங் குரும்பை ஒத்ததுமான முலைகளை உடைய
பெண்கள்,
மகிழ்ச்சி கொண்டிட --- உள்ளம் மகிழும்படியாக,
அதி விதமான வளைக்கரங்களினொடு வளைத்து ---
விதவிதமான
வளையல்களை அணிந்துள்ள தமது கைகளால் வளைத்து இழுத்து,
இதம்பட --- இன்பம்
அடையுமாறு (அணைக்கவும்),
உடன் மயக்க வந்து --- அந்த இன்பத்தால்
காம மயக்கம் மேலிட,
அதில் --- அந்த மயக்கத்தில்,
அறிவு அழியாத கருத்து அழிந்திட ---
(அதுவரையில்) அறிவு அழியாமல் இருந்த எனது சிந்தனையும் அழிந்து போக,
இரு கயல் க(ண்)ணும்
புரள்தர
--- கயல் மீன்களைப் போன்ற இரு கண்களும் அங்கும் இங்குமாகப் புரள,
களிப்புடன் களிதரு மடமாதர் கருப்பெரும்
கடல் அது கடக்க --- மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற இளம்பெண்களின் தொடக்கினால்
உண்டாகின்ற, பிறவியாகிய
பெரும் கடலைக் கடக்க,
உன் திருவடிகளைத்
தரும் திருஉள்ளம் இனி ஆமோ --- தேவரீரது திருவடிகளைத் தந்து
அருளத் திருவுள்ளம் பற்றுதல் இனி அமையுமா?
பொழிப்புரை
கிரவுஞ்ச மலையானது முழுதும் பொடிபட்டு
அழியவும், அரக்கர்கள்
தங்கள் ஊர்களுடன் புகை பரந்த பெருநெருப்பில் பட்டு அழியவும் வேலாயுதத்தை விடுத்து
அருளியவரே!
புகழப்படும் தேவர்கள் களிப்பு அடையும்படியாக, பூமியைத் தாங்கும் மந்தர மலையை
பாற்கடலினிடையே மத்தாகச் சுழலச் செய்த மேகநிறத்தவனாகிய திருமாலும், ஒரு குறையைப் பெற்றதால் எட்டுக் கண்களை உடைய
பிரமதேவன் முதலான தேவர்களும் தேவரீரது திருவடியை வழிபட, திருக் குருந்த மரத்தடியில் எழுந்தருளி
இருந்த குருமூர்த்தியாகிய சிவபெருமானுடன் திருப்பெருந்துறையில் எழுந்தருளி
இருக்கும் பெருமையில் மிக்கவரே!
சந்தனக் கலவையால் தொய்யில்
எழுதப்பட்டதும், தென்னங் குரும்பை
ஒத்ததுமான முலைகளை உடைய பெண்கள்,
உள்ளம்
மகிழும்படியாக, விதவிதமான வளையல்களை அணிந்துள்ள தமது
கைகளால் வளைத்து இழுத்து, இன்பம் அடையுமாறு
அணைக்கவும், அந்த இன்பத்தால் காம
மயக்கம் மேலிட, அந்த மயக்கத்தில், அதுவரையில் அறிவு அழியாமல் இருந்த எனது
சிந்தனையும் அழிந்து போக,
கயல்
மீன்களைப் போன்ற இரு கண்களும் அங்கும் இங்குமாகப் புரள, மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற
இளம்பெண்களின் தொடக்கினால் உண்டாகின்ற, பிறவியாகிய பெரும் கடலைக் கடக்க, தேவரீரது திருவடிகளைத் தந்து அருளத்
திருவுள்ளம் பற்றுதல் இனி அமையுமா?
விரிவுரை
வரித்த
குங்குமம் அணி முலைக் குரும்பையர் ---
மகளிர், தென்னங் குரும்பை
ஒத்ததுமான
தமது முலைகளின் மேல் சந்தனக் கலவையால் எழுதப்படும் கோலம் தொய்யில் எழுதுதல்
எனப்படும்.
அருணகிரிநாதப்
பெருமான் கருத்துக்கு ஏற்றதொரு பாடல், பதினோராம்
திருமுறையில் வருவது காண்க...
குழிந்து
சுழிபெறு நாபியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலை இடையே செலுந்தகை நன்மடவார்
அழிந்தபொசி
அதிலே கிடந்து, இரவுபகல்நீ
அலைந்து அயரும் அது நீ அறிந்திலைகொல் மனமே!
கழிந்த
கழிகிடுநாள் இணங்கி இதயம் நெகவே
கசிந்து இதயம் எழுநூறு அரும்பதிக நிதியே
பொழிந்தருளு
திருநாவின் எங்கள் அரசினையே
புரிந்து நினை, இதுவே மருந்து பிறிதிலையே.
---- திருநாவுக்கரசர்
திருவேகாதச மாலை.
தென்னங் குரும்பைப் போன்று மகளிரின்
இளமுலைகள் இருந்தன என்பதற்குப் பிரமாணம்...
அரும்புங்
குரும்பையும் அலைத்த மென்கொங்கைக்
கரும்பின்
மொழியாளோ டுடன்கை யனல்வீசிச்
சுரும்புண்
விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு
மதிகையு ளாடும்வீரட் டானத்தே. ---
திருஞானசம்பந்தர்.
முள்ளி
நாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்பு
தேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளி
யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை
வெள்ளி
மால்வரை அன்னதோர் மேனியின்
மேவி
னார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளி
னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே. ---
திருஞானசம்பந்தர்.
குரும்பைமுலை
மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங்
கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே
சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே
கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே. ---
சுந்தரர்.
குவவின
கொங்கை குரும்பை
குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின
வாணகை வெண்முத்தங்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை
தீர்ப்பவன் தாழ்பொழிற்
சிற்றம் பலமனையாட்
குவவின
நாண்மதி போன்றொளிர்
கின்ற தொளிமுகமே. --- திருக்கோவையார்.
செம்மை
மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை
வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை
மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப்
புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார். --- பெரியபுராணம்.
களிப்புடன்
களிதரு மடமாதர் கருப்பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளைத் தரும் திருஉள்ளம் இனி
ஆமோ
---
கருக் கடல் - பிறவிக் கடல்.
பெண்ணாசை
கொண்டு அலைவதால், பிறப்பு அறாது.
மீண்டும் மீண்டும் கருவிலே உருவாகி வரவேண்டும். பிறப்பு என்பது எண்ணில் அடங்காது.
கடக்க அரிதானது என்பதால், பிறவியைப் பெரும் கடல் என்றார்.
செய்த வினைகளின் காரண
காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.
(1) கடலில்
ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.
(2) கடலில்
கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள்
மிதக்கின்றன.
(3) கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை
எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.
(4) கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு
வளர்க்கின்றனர்.
(5) கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை
பெரிதாக வளர்ந்திருக்கின்றது.
(6) கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய
கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி
பயங்கரத்தை விளைவிக்கின்றது.
ஒவ்வொருவருக்கும் இவ்வநுபவ மொழி நன்கு புலனாகும். அந்தோ!
உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும், மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும்
மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.
(1) ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.
(நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும்
வழியைத் தெரிந்தவன் புத்தகத்தை இருபக்கமும் கம்பியால் பொதிந்து விற்றுக்கொண்டு
அலைய வேண்டாமே?)
(2) இந்த மருந்து 250
வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3 மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000 இனாம்.
(3) நோயில்லாத பொழுது டாக்டர் சர்டிபிகேட் தந்து லீவு எடுத்தல்; இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.
புற்றுஆடு
அரவம் அரைஆர்த்து உகந்தாய்
புனிதா பொருவெள்விடை ஊர்தியினாய்
எற்றேஒரு
கண்இலன் நின்னை அல்லால்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றேல்
ஒரு பற்றுஇலன் எம்பெருமான்
வண்டார்குழலாள் மங்கை பங்கினனே
அற்றார்
பிறவிக் கடல் நீந்தி ஏறி
அடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே.
---
சுந்தரர்.
அருள்பழுத்து
அளிந்த கருணை வான்கனி,
ஆரா
இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு
அமிர்த வாரி, நெடுநிலை
மாடக்
கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு
கிழிக்கும் கழுமல வாண,நின்
வழுவாக்
காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன்
இருந்த பரம யோகி,
யான்ஒன்று
உணர்த்துவன், எந்தை, மேனாள்
அகில
லோகமும், அனந்த யோனியும்,
நிகிலமும்
தோன்றநீ நினைந்த நாள் தொடங்கி,
எனைப்பல
யோனியும், நினைப்பு அரும்
பேதத்து
யாரும், யாவையும், எனக்குத் தனித்தனி
தாயர்
ஆகியும், தந்தையர் ஆகியும்,
வந்து
இலாதவர் இல்லை, யான், அவர்
தந்தையர்
ஆகியும், தாயர் ஆகியும்,
வந்து
இராததும் இல்லை, முந்து
பிறவா
நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா
நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத்
தின்னா உயிர்களும் இல்லை, யான் அவை
தம்மைத்
தின்னாது ஒழிந்ததும் இல்லை, அனைத்தே
காலமும்
சென்றது, யான் இதன் மேல்இனி
இளைக்குமாறு
இலனே நாயேன்,
நந்தாச்
சோதி, நின் அஞ்செழுத்து
நவிலும்
தந்திரம்
பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப்
பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றது
ஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது
மந்திரமாக, என்னையும்
இடர்ப்
பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்
கடல்படா
வகை காத்தல் நின்கடனே.
--- திருக்கழுமல
மும்மணிக்கோவை.
அறிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்,
இனையன பலசரக்கு ஏற்றி, வினைஎனும்
தொல் மீகாமன் உய்ப்ப, அந் நிலைக்
கரு எனும் நெடுநகர்
ஒருதுறை நீத்தத்து
புலன் எனும் கோள்மீன்
அலமந்து தொடர,
பிறப்புஎனும்
பெருங்கடல்
உறப் புகுந்து அலைக்கும்
துயர்த் திரை
உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும்
நெடுங்கல் வீழ்த்து,
நிறைஎனும் கூம்பு
முரிந்து, குறையா
உணர்வு எனும்
நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு
காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா
முன்னம், அலங்கல்
மதியுடன் அணிந்த
பொதிஅவிழ் சடிலத்துப்
பையரவு அணிந்த தெய்வ
நாயக.....
நின் அருள் எனும்
நலத்தார் பூட்டித்
திருவடி நெடும்கரை
சேர்த்துமா செய்யே.
---
கோயில்
நான்மணி மாலை.
இப்பிறவி
என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி,
நான்
என்னும் ஒரு மகர
வாய்ப்பட்டு
இருவினை எனும்
திரையின் எற்றுஉண்டு, புற்புதம்
எனக் கொங்கை வரிசைகாட்டும்
துப்புஇதழ் மடந்தையர்
மயல் சண்டமாருதச்
சுழல் வந்து வந்து
அடிப்ப,
சோராத ஆசையாம்
கான்ஆறு வான்நதி
சுரந்தது என மேலும்
ஆர்ப்ப,
கைப்பரிசு காரர்போல்
அறிவான வங்கமும்
கைவிட்டு மதிமயங்கி,
கள்ள வங்கக் காலர்
வருவர் என்று அஞ்சியே
கண்அருவி காட்டும் எளியேன்
செப்பரிய முத்தியாம்
கரைசேரவும் கருணை
செய்வையோ, சத்து ஆகி என்
சித்தமிசை குடிகொண்ட
அறிவுஆன தெய்வமே
தோஜோமய ஆனந்தமே. --- தாயுமானவர்.
இல்லை பிறவிக் கடல்
ஏறல், இன் புறவில்
முல்லை கமழும்
முதுகுன்றில் --- கொல்லை
விடையானை, வேதியனை, வெண்மதிசேர் செம்பொன்
சடையானைச் சாராதார்
தாம்.
--- பதினொராம்
திருமுறை.
துவக்கு
அற அறிந்து பிறக்கும் ஆரூரும்,
துயர்ந்திடாது அடைந்து காண் மன்றும்,
உவப்புடன்
நிலைத்து மரிக்கும் ஓர் பதியும்
ஒக்குமோ? நினைக்கும் நின் நகரை;
பவக்கடல்
கடந்து முத்தி அம் கரையில்
படர்பவர் திகைப்பு அற
நோக்கித்
தவக்கலம்
நடத்த உயர்ந்து எழும் சோண
சைலனே கைலை நாயகனே.--- சோணசைலமாலை.
தோற்றிடும்
பிறவி எனும் கடல் வீழ்ந்து
துயர்ப்பிணி எனும்
அலை அலைப்ப
கூற்று
எனும் முதலை விழுங்குமுன் நினது
குரைகழல் கரை புக
விடுப்பாய்
ஏற்றிடும்
விளக்கின் வேறுபட்டு அகத்தின்
இருள் எலாம் தன்பெயர் ஒருகால்
சாற்றினும்
ஒழிக்கும் விளக்கு எனும் சோண
சைலனே கைலை நாயகனே. --- சோணசைலமாலை.
மனம்
போன போக்கில் சென்றான் ஒருவன்; கண்ணை இழந்தான். கடலில்
விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான்.
திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம்
பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை
உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக்
கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப்
பற்றியிருக்கின்றான்.
எதிர்பாராது
எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல்
காற்று, அவனை ஒரே அடியாகக்
கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து
விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம்.
கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய
காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது
பாருங்கள்!
இருண்ட
அறிவால், ஒளிமயமான உணர்வை
இழந்தது; அதன் பயனாக, ஆழம் காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித்
துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயப்
பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.
அகங்கார
மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல்.
வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது தான் கண்ட பலன். அமைதியை
விரும்பி, எப்புறம்
நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில்
காய்ச்சல்; மற்றவர் உறவில்
மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், இறைவன் திருவடிகளைக் கருதுகிறது.
நினைக்க
நினைக்க, நினைவில் நிஷ்காமியம்
நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து, இறைவனை வேண்டிப் பாடுகிறது. உணர்வு
நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டு இறைவன் திருவுளம்
மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலனாகிய இறைவனுடைய திருச்செவிகள் அசைகின்றன.
அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும்
பரவி, பிறவிக்கடலில்
தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர
வீசி விடுகிறது. அந்நிலையில், முத்திக்கரை
சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனி இன்பம் காண்கிறது அந்த ஆன்மா.
இந்த
வரலாற்றை,
மாற்றரிய
தொல்பிறவி மறிகடலின் இடைப்பட்டுப்
போற்றுறுதன்
குரைகழல்தாள் புணைபற்றிக் கிடந்தோரைச்
சாற்றரிய
தனிமுத்தித் தடங்கரையின் மிசைஉய்ப்பக்
காற்றுஎறியும்
தழைசெவிய கடாக்களிற்றை வணங்குவாம்'
என்று
கனிவொடு பாடுகின்றது காசிகாண்டம்.
தனியேனன் பெரும்
பிறவிப் பௌவத்து எவ்வத்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி
அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி
அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
என்கிறது திருவாசகம்.
"நீச்சு
அறியாது ஆங்கு ஓய் மலைப்பிறவி ஆர்கலிக்கு ஓர் வார்கலமாம் ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே"
என்கிறது
திருவருட்பா.
பொருப்பு
அகம் பொடிபட
---
பொருப்பு - மலை. இங்கே கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய
மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது
திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும்
வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல்
வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில்
சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை
...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது
உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய
வேலாயுதம், கிரவுஞ்ச
மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில்
அடிகளார் காட்டியபடி, நமது
வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு
என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும்
உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
புவி
பொறுத்த மந்தரகிரி கடல் ஊடே திரித்த கொண்டலும் ---
கொண்டல்
- மேகம். இங்கு மேகவண்ணன் ஆகிய திருமாலைக் குறித்தது. மேருமலையை மகத்தாக வைத்து, வாசுகியைக் கயிறாக வைத்து பாற்கடலைக் கடைந்த
செய்தி கூறப்பட்டது.
ஒரு
மறுப் பெறும் சதுமுக திருட்டி எண் கணன் ---
மறு
- குற்றம்.
சதுமுகம்
- நான்கு முகங்கள்.
திருஷ்டி
- பார்வை.
"கண்ணன்"
என்னும் சொல் "கணன்" எனக் குறுகி வந்தது.
எண்கணன்
- எட்டுக் கண்களை உடைய பிரமதேவன்.
ஐந்து
முகங்களையும், பத்துக் கண்களையும்
ஆதியில் பெற்று இருந்தவர் பிரமதேவர்.
அவர்
படைப்புக் கடவுள். தாம் உலகைப் படைக்கின்றோம் என்று தருக்குக் கொண்டார். அந்தக் குற்றத்தை
உணர்ந்த சிவபெருமான் பிரமனை விளித்து நடுத்தலையை நகத்தால் கிள்ளி எடுத்து “நீ
உலகினைப் படைத்தியேல் உன் தலையைப் படைத்துக் கொள்” என்றனர். அப் பிரமன், இதுகாறும் தன் தலையைப் படைத்துக் கொள்ளும்
திறன் இல்லாமல் இருக்கின்றனன்.
படைப்பானும்
காப்பானும் பார்க்கில் அருணேசன்
படைப்பான்அயன்
என்னல் பாவம், - படைக்கில்அயன்
தன்தலையைச்
சோணேசன் தான்அரிந்த போதினிலே
தன்தலையைப்
பண்ணஅறியான் தான். --- அருணகிரியந்தாதி
நல்ல
மலரின் மேல் நான்முக னார்தலை
ஒல்லை
அரிந்ததுஉஎன்று உந்தீபற
உகிரால்
அரிந்தது என்று உந்தீபற. ---
திருவாசகம்
சிவபெருமான்
தமது கரத்தில் மழுவாயுதத்தை ஏந்தியிருந்தும், அம்மழுப் படையால் பிரமன் தலையை அறுக்காது, தமது பெருமையும் பிரமனது சிறுமையும்
புலப்படுமாறு நகத்தாலேயே கீரை கிள்ளுவதுபோற் கிள்ளி எடுத்தனர்.
திருக்குருந்து
அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே ---
கல்லாலின்
கீழிருந்து நால்வர்களுக்கு உபதேசித்து அருளிய, சிவபெருமான், மண்ணுலகத்தில் திருப்பெருந் துறையில்
குருந்தமரத்தின் கீழ் குருமூர்த்தியாக எழுந்தருளி மாணிக்கவாசகருக்கு
உபதேசித்தருளின அருட்பெருந் திறத்தைக் அடிகளார் இங்கே காட்டுகின்றார்.
வாதவூரருக்கு உபதேசம்
பாண்டிவள
நாட்டின்கண் வாயுதேவன் வழிபட்ட தன்மையால் வாதவூர் என்னும் பெயர் பெற்ற
திருத்தலத்தில் மானமங்கலத்தார் மரபிலே ஆமாத்தியர் குலத்து சிவகணத் தலைவர் ஒருவர்
வந்து உதித்தனர். அவர் பெயர் “வாதவூரர்” என்பர்.
அவர் பதினாறாண்டு நிரம்பு முன்னரே கலைகள் முழுதும் ஒருங்கே ஓதி உணர்ந்தார். அவர் திறத்தைப்
பாண்டியன் கேட்டு, அவரை வரவழைத்து, அவருக்குத் “தென்னவன் பிரமராயன்” எனப்
பட்டப் பெயர் சூட்டி, மந்திரித் தொழிலில்
இருத்தினன். அவர் கலை வன்மையாலும் சிலை வன்மையாலும் சிறந்து அமைச்சர்
தலைவனாயிருந்து பாவக்கடலினின்றுந் தப்பி முத்திக்கரை சேரும் உபாயத்தை
நாடியிருந்தனர். பாண்டியன் குதிரைகளை வாங்கும் பொருட்டு அளப்பரும் நிதிகளை அளித்தனுப்பினன்.
பாண்டியன் பால் விடைபெற்ற வாதவூரார் திருவாலவாய் சென்று மீனாட்சியம்மையையும்
சொக்கலிங்கப் பெருமாளையும் வழிபட்டு,
பாண்டியன் செல்வம் நல்வழியில் செலவழிய வேண்டுமென்று வணங்கி, வேதியர் ஒருவர் எதிர்ப்பட்டளித்த
திருநீற்றை அணிந்துகொண்டு நற்குறி என்று வந்து சேனைகள் சூழப்புறப்பட்டு
திருப்பெருந்துறையை அடைந்தார்.
அத்
திருத்தலத்தைச் சாரும் முன்னரே காயமும் நாவும் நெஞ்சும் ஒருவழி பட்டு பேரன்பு
மிகுதலால், கண்ணீர் மல்கிக்
கசிந்து உருகி, சிரமிசைக்
கரங்குவித்து, மயிர் சிலிர்த்து, அனலில் பட்ட மெழுகென உருகினார்.
பண்டைத் தவப்பயன் கைகூடப்பெற்ற வாதவூரர் அதிசயமுற்று, “இத்தலத்தை அணுகும் முன்னரே பேரன்பு
முதிர்ந்தது. சிவத் திருத்தலங்களில் இதனை ஒத்தது வேறில்லை; இங்கு வந்து சேர்தற்கு என்ன மாதவஞ்
செய்தோமோ? என்று தம்முள்
நினைத்து உடன் வந்தாரை நோக்கி “ஆடி மாதத்தில் குதிரை வருதல் இல்லை. ஆவணி
மாதத்தில்தான் குதிரைகள் வந்திறங்கும்; நானே
அவைகளைக் கொண்டு வருவேன். பாண்டியற்கு இதனை உணர்த்துமின்” என்று அன்னாரைப் போக
விடுத்தார்.
பின்னர்
வாதவூரர் பொய்கையில் நீராடித் திருநீறு தரித்து சிவபெருமானை வணங்குதற்குத் தனியே
ஆலயத்துள் புகுந்தார். அத்திருக்கோயிலினுள் ஒரு குருந்தமரத்தின் நிழலில்
தாராகணங்களால் சூழப்பெற்ற தண்மதி என்ன,
மாணவர் குழாம் சூழ, குருவடிவம் தாங்கி
சிவபெருமான் வீற்றிருந்தனர். அத்
தேசிகேசனைக் கண்ட திருவாதவூரர் செயலிழந்து உடல் நடுங்கி எட்டு அங்கங்களும் நிலமிசை
தோயப் பன்முறை வணங்கி விண்மாரி என்ன இருகண்மாரி பொழிந்த வண்ணமாக நின்றனர்.
மன்றுள்
ஆடிய ஆனந்த வடிவமும், வடவால்
ஒன்றி
நால்வருக்கு அசைவுஅற உணர்த்திய உருவும்,
இன்று
நாயினேற்கு எளிவந்த இவ்வுரு என்னா
அன்று
நாயகன் குறிப்பு உளத்து உணர்த்திட அறிந்தார்.
முன்
பணிந்தனர், அணிந்தனர் அஞ்சலி
முடிமேல்,
என்பு
நெக்கிட உருகினர், இனியராய் எளிவந்து,
அன்பு
எனும் வலைப்பட்டு, அவர் அருள்வலைப்
பட்டார்,
துன்ப
வெம்பவ வலை அறுத்திட வந்த தொண்டர்.
தன்வசமிழந்து
நின்ற மெய்யடியாரைக் கண்ணுதற் கடவுள் கண்டு திருநோக்கஞ் செய்து, அருகில் அழைத்து முறைப்படி தீட்சை
முதலியன செய்து, திருவைந்தெழுத்தை
உபதேசித்து நல்லருள் பாலித்தனர்.
அண்ணல்
வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு, யாக்கை
உள்
நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண்ணினால்
மலம் கழீஇ, பதகமலமுஞ் சூட்டி,
வண்ண
மாமலர்ச் செங்கரம் சென்னிமேல் வையா.
"அன்றே என்றன் ஆவியும்
உடலும்
உடைமை எல்லாமும்,
குன்றே
அனையாய் என்னை ஆட்
கொண்டபோதே கொண்டிலையோ?
இன்று
ஓர் இடையூறு எனக்கு உண்டோ?
எண்தோள் முக்கண் எம்மானே!
நன்றே
செய்வாய், பிழைசெய்வாய்,
நானோ இதற்கு நாயகமே"
என
திருவாசகத்துள், மணிவாசகப்
பெருமான் அருளிச் செய்துள்ளது காண்க.
சூக்கம்
ஆகும் ஐந்தெழுத்தினில், சுற்றிய பாச
வீக்கம்
நீக்கி, மெய் ஆனந்தம்
விளைநிலத்து உய்த்துப்
போக்கு
மீட்சியுள் புறம்பு இலாப் பூரண வடிவம்
ஆக்கினான்
ஒரு தீபகம் போல்வரும் அண்ணல்.
பார்த்த
பார்வையால் இரும்பு உண்ட நீர்எனப் பருகும்
தீர்த்தன்
தன்னையும், குருமொழி செய்ததும், தம்மைப்
போர்த்த
பாசமும் தம்மையும் மறந்து,
மெய்ப்
போத
மூர்த்தியாய்
ஒன்றும் அறிந்திலர் வாதவூர் முனிவர்.
தேனும்
பாலும் தீங் கன்னுலும் அமுதுமாய்த் தித்தித்து,
ஊனும்
உள்ளமும் உருக்க, உள் ஒளி உணர்ந்து, இன்பம்
ஆன
ஆறு தேக்கிப் புறம் கசிவது ஒத்து அழியா
ஞான
வாணி வந்து இறுத்தனள் அன்பர்தம் நாவில்.
தேனும்
பாலுந் தீங்கன்னலும் அமுதுமாய்த் தித்தித்தமை குறித்து,
"ஊனாய் உயிராய் உணர்வாய்
என்னுள் கலந்து,
தேனாய்
அமுதமுமாய், தீங்கரும்பின்
கட்டியுமாய்,
வானோர்
அறியா வழி எமக்குத் தந்தருளும்
தேன்
ஆர் மலர்க்கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா
அறிவாய், அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன்
ஆகி நின்றவா கூறுதும் காண்; அம்மானாய்!
எனவும், உள்ளொளி உணர்ந்து என்பது,
கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய
இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தி னுள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணணனைப் பாடுதுங்காண்
அம்மானாய்.
எனவும்
மணிவாஞகப் பெருமான் திருவம்மானையில் அருளிச் செய்தது அறிக.
தொழுத
கையினர், துளங்கிய முடியினர், துளும்ப
அழுத
கண்ணினர், பொடிப்புறும் யாக்கையர், நாக்குத்
தழுதழுத்த
அன்பு உரையினர், தமை இழந்து, அழல்வாய்
இழுதை
அன்ன மெய்யினர் பணிந்து ஏத்துவார் ஆனார்.
பழுது
இலாதசொல் மணியினைப் பத்திசெய்து, அன்பு
முழுதும்
ஆகிய வடத்தினால் முறைதொடுத்து, அலங்கல்
அழுது
சாத்தும் மெய்யன்பருக்கு அகம் மகிழ்ந்து, ஐயர்
வழு
இலாதபேர் மாணிக்க வாசகன் என்றார்.
திருப்பெருந்துறை
என்னும் அற்புதத் திருத்தலம், இக் காலத்தில்
ஆவுடையார் கோயில் என வழங்கப்படுகின்றது.
இறைவர்
--- ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி, உயிர்த்தலைவர்.
இறைவியார்
--- யோகாம்பாள்.
தல
மரம் --- குருந்த மரம்.
உலக
உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத்
துணையாக - பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் "பெருந்துறை" எனப்
பெயர் பெற்றது.
சிவாலயங்கள்
பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும், சில
மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு
நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன்; சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக்
காட்சிதர, இக்கோயிலில் மட்டும்
குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும்
சித்தினைச் செய்தருளுகின்றார்.
திருப்பரங்குன்றத்
திருப்புகழில் "அருக்கு மங்கையர்" என்று தொடங்கும் பாடலில்
"வழியடியர் திருக்குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர்" என்று
ஆத்மநாதசுவாமி போற்றப்படுகிறார்.
பண்டைநாளில்
தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால், ஆவுடையார்கோயில் கொடுங்கைகளைப்போலத்
தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார்கோயில்
கொடுங்கைகள் நீங்கலாக" என்று எழுதும் வழக்கம் இருந்ததாம்.
முன்
மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு)
செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்
பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன்
உள்ளே செல்க என்று உணர்த்துவதாக உள்ளது.
அடுத்துள்ளது
இராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி
செய்யப்பட்டுள்ளது. நெடிது உயர்ந்த இராஜகோபுரம்; தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும்
வான்கருணை சான்று.
இராஜகோபுர வாயிலின்
இடப்பக்கதில் - சுவரில் - வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப்
பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள விவரம் வருமாறு:-
ஆவுடையார்கோயிலில்
காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும்
பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்த
விளம்பரமாவது:-
இறந்துபோன
புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களால் வைக்கப்பட்டிருக்கும்
லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார்கோயிலில் சாயரக்ஷை
கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால்
தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து
சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல்
வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக
நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய
உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும்
கவர்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக
நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத்
தெரியப்படுத்த வேண்டியது.
1.
உள்கோபுரத்தை கடந்து சென்றால்
அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம் - இதை கனகசபை என்பர். முந்நூறு ஆண்டுகட்கு முன்
கட்டப்பட்டதாம். கொடுங்கைகளை அழகாகப் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேற்புறச் சுவரில் எண்ணற்ற
புவனங்களைக் குறிக்கும் அட்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில்
இருதலைகளும் ஓருடலும் கொண்டு பின்னிய நிலையிலுள்ள பாம்பும்; சாமுத்திகா லட்சணத்தைக் காட்டும் பெண்
முதலான சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் நவக்கிரகங்கள் கல்லில் அடித்து
வைக்கப்பட்டுள்ளன. தனியாக இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. சந்நிதி மேற்புறத்தில்
27 நட்சத்திர
வடிவங்களும் கல்லிற் செதுக்கப்பட்டுள்ளன. சந்நிதியில் வௌ¤ச்சுவரில் வண்ண ஓவியத்தில் ஸ்பரிச -
உபதேச - திருவடி தீட்சை ஓவியங்கள் உள்ளன.
அடுத்தது
நிருத்த மண்டபம் - நடனசபை / நர்த்தன சபை. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு.
தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை
விரல் ரேகைகள் கூடத் தௌ¤வாகத் தெரியும்
வண்ணம் செதுக்கியுள்ள கைவண்ணம் - வேடனின் நளினத் தோற்றம் - இவ்வாறே வலதுபுறம்
காட்சித்தரும் வேடன் வேடுவச்சி சிற்பங்கள் - அற்புதமான கலையழகு கருவூலங்கள்.
வாயிலைக்
கடந்து உட்புகுந்தால் அடுத்து வருவது தேவசபை - சுந்தர பாண்டிய மண்டபம் (சுந்தர
பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது) இடப்பால்
பிராகாரத்தில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி. இப்பெருமானைத் தரிசித்து
விட்டுத்தான் மூலவரைத் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இக்கோயில் மரபு. சுவாமியைப்
போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சந்நிதி; சுவாமியைப்
போலவே அம்பாளும் அருவம்தான். ஸ்ரீ யோகாம்பாள் சந்நிதியில் திருமேனி இல்லை. சததள
பத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட
தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர
வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அடுத்த
தரிசனமாக தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி; கல்லில் வடித்துள்ள குருந்தமரம் - கீழே
இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து
உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும்மார்கழித்
திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேச ஐதீகம் நடக்கிறது. இங்குள்ள திருவாசகக்
கோயிலில் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விசேடம்.
அடுத்த
சபை, சத்சபை - இங்குள்ள
விசாலமான கல்மேடையில்தான் சுவாமிக்கு கைபடாத (புழுங்கல் அரிசி) அன்னம்
நிவேதிக்கப்படுகிறது. (இதனால் இதற்கு அமுத மண்டபம் என்றும் பெயர்) இங்கு புழுங்கல்
அரிசி சாதம் நிவேத்தியம் சிறப்பு.
அடுத்தது, சித்சபை - பூஜை செய்வோர் நிற்குமிடம்.
ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாக காட்சி நல்குமிடம்.
பரமசுவாமியான
ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே - குருவருள் கொலு வீற்றிருக்குமிடமே ஆநந்த
சபை.
ஆவுடையார்
- சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார்.
அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி
வைக்கப்பட்டுள்ளது.
ஆவுடையாரின்
பின்னால் 27 நட்சத்திரங்களைக்
கொண்டதான திருவாசி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத்துள்ளனர். அவற்றுள்
சிவப்பு அக்கினியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திரனையும் குறிக்கிறதென்பர்.
சுவாமிக்கு முன்னால்
இரு தூங்கா விளக்குகள் சுடர்விடுகின்றன.
முத்து விநாயகர் மண்டபத்தின்
மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின்
அற்புதத்தை இம்மண்டபத்திலும் காணலாம்.
எவ்வளவு
கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்காளக் கொண்டு
வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு
மூன்றிடங்களில் துளையிட்டு காட்டியுள்ளார்கள்.
இத்திருக்
கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ளது. தனிக் கோயில்.
மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி அங்குதான். இக்கோயில் மாணிக்கவாசகருக்கு
முன்பிருந்தே உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம்.
தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர்
என்றும் சொல்கின்றனர்.
ஆதிகயிலாயநாதர்
கோயில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச்
சொல்லப்படுகின்றது.
புதுக்கோட்டை
மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை
அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து
திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு
வரலாம்.
கருத்துரை
முருகா! கருக் கடலைக்
கடக்கத் திருக் கருணை புரிவாய்.