036. மெய் உணர்தல் - 07. ஓர்த்து உள்ளம்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 36 -- மெய் உணர்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "ஞானாசிரியரிடத்துக் கேட்ட உபதேசமொழிப் பொருளை ஒருவனது உள்ளமானது, தெளிவாக அளவைகளாலும், அறிவாலும் ஆராய்ந்து, மெய்ப்பொருளை உணருமாயின், அவனுக்குப் பிறப்பு உள்ளதாக நினைக்க வேண்டுவதில்லை" என்கின்றார் நாயனார்.

     பின்வரும் பாடல்கள் இதனைத் தெளிவுபடுத்துவதை அறியாலாம்.

ஞானநூல் தனைஓதல், ஓதுவித்தல்,
         நல்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல், ஐந்தும்
         இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை;
ஊனம்இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்
         ஒன்றுக்கு ஒன்று உயரும்; இவை ஊட்டுவது போகம்;
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
         அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்.   --- சிவஞானசித்தியார்.

         சிவஞானப் பொருளை விளக்குகின்ற நூல்களைத் தான் ஓதுதலும் பிறர்க்கு ஓதுவித்தலும், நலம் தரும் அந்நூற் பொருள்களை நன்கு உணர்ந்து பிறர்க்கு உரைத்தலும், தான் அதனை ஆசிரியர்பால் கேட்டலும் குறைவிலாத அப்பொருளைத் சிந்தித்தலும் ஆகிய இவை ஐந்தும் சிவபெருமான் திருவடியை அடைவிக்கும் அழகிய ஞான வேள்வி என்று போற்றப்படும். குறைவிலாத கன்மவேள்வி, தவவேள்வி, சிவவேள்வி, தியான வேள்வி, என்ற நான்கும் நூல்களால் கூறப்படுவனவாகும். இவை ஒன்றுக்கொன்று உயர்ந்ததாகக் கூறப்படும். ஆயினும் இவை நான்கானும் பெறுகின்ற பயன் இன்ப நுகர்வே ஆகும். எனவே வீடுபேற்றை அடைய விரும்பும் பெரியோரெல்லாம் மேம்பட்ட ஞான வேள்வியினாலே சிவபெருமானை வழிபடுவர்.


கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
         கிளத்தல் எனஈர் இரண்டாம் கிளக்கில் ஞானம்;
வீட்டை அடைந் திடுவர் நிட்டை மேவினோர்கள்;
         மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு
ஈட்டிய புண்ணிய நாதராகி, இன்பம்
         இனிது நுகர்ந்து, அரன் அருளால் இந்தப் பார்மேல்
நாட்டியநல் குலத்தினில் வந்து அவதரித்து, குருவால்
         ஞானநிட்டை அடைந்து அடைவர் நாதன் தாளே.  --- சிவஞானசித்தியார்.

         ஞானவேள்வியில் நான்கு வகைகள் கூறப்பட்டன. அவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டது கேட்டல், கேட்டலுடன் கேட்ட பொருளைப் பற்றிச் சிந்தித்தலும் சிந்தனையின் பயனாகத் தெளிவு பெறுதலும் அதன் பின்னர் நிட்டை கூடுவதும் என்று இவ்வாறு நான்கு வகையாக ஞானம் நிகழும். நிட்டை கை கூடியவர்கள் மேலாகிய வீட்டின்பத்தினைத் தலைப்படுவர். நிட்டை கைகூடாது முதல் மூன்று படிகளில் நின்று தாம் தாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப மேலான உலகங்களுக்குச் சென்று அங்குள்ள இன்பத்தை இனிது நுகர்ந்து மீண்டும் சிவபெருமான் அருளால் இந்த உலகில் நல்ல குடியில் வந்து பிறப்பார்கள். அதன் பின்னர் அருளாசிரியர்களிடம் பயின்று ஞானநிட்டை பொருந்தி இறைவன் திருவடியை அடைவார்கள்.

முந்திய ஒருமை யாலே
         மொழிந்தவை கேட்டல் கேட்டல்
சிந்தனை செய்தல் உண்மை
         தெளிந்திடல் அது தானாக
வந்தவாறு எய்தல் நிட்டை
         மருவுதல் என்று நான்காம்
இந்தவாறு அடைந்தோர்
         முத்தி எய்திய இயல்பினோரே  --- சிவப்பிரகாசம்.

         முன் பிறவிகள் பலவற்றிலும் ஈட்டப் பெற்று வந்த நல்வினையின் பயனாக ஒருவனது மனம் ஒருமையிலே நிற்கின்ற பக்குவத்தைப் பெறும். அப்போது ஞான ஆசிரியன் தோன்றி முப்பொருள் இயல்பும் உண்மையும் உணர்த்துவான். அவ்வாறு ஆசிரியன் மொழிகின்ற மெய்ப்பொருளைக் கேட்டல் ஒன்று, கேட்டவற்றைச் சிந்தித்தல் ஒன்று, சிந்தித்தவற்றின் உண்மையைத் தெளிதல் ஒன்று, பரம்பொருளோடு ஒத்து நிற்கும் நிட்டை கூடுதல் ஒன்று ஆக நான்காகும், முத்திப் பேறு அடையும் வழிகள். இவற்றைப் பொருந்தினோர் முத்தியினைப் பெறுவார்.

         தவம் என்பது பல்வேறு மதங்களில் பல்வேறு வகையாகக் கூறப்படும். தன்னை ஒறுத்தல், பட்டினி கிடந்து உடலை வாட்டுதல் சுடுபாறையில் கிடத்தல், குளிர்நாளில் நீர் நிலையில் நிற்றல் போன்றவையெல்லாம் தவமாகா என்பது சைவசித்தாந்தம் கூறும் உண்மை. படி நிலைக்கு ஏற்றவாறு சைவசித்தாந்தம் கூறும் நால்வகை நெறிகள் சீலம், நோன்பு, செறிவு, அறிவு எனப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவாம். இந்த உண்மை நிலைகளை முந்திய பிறவிகளில் செய்து பக்குவம் அடையப் பெற்ற உயிர்களுக்கு இறைவன் குருவடிவாக எழுந்தருளி வந்து தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்தும் நின்று உபதேசம் செய்வான்.

         குருவின் அருளிச் செயல்களை ஒருமனதோடு கேட்டல், கேட்டவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தல், சிந்தித்தவற்றை முன் பின் மலைவு அற்றுப் போகுமாறு தெளிதல், தெளிந்த பின் ஞான வடிவினனாகிய இறைவனின் பேரருளில் திளைத்து நிட்டை கூடுதல் ஆகிய நான்கும் முத்தி நிலை அடைவதற்குரிய வழிகளாகும்.

         சிவஞான சித்தியாரில், "கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கில் ஞானம்" என்று கூறப்படுவதும் இம்முறைமை பற்றியே. முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள். பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள். அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. என்ற அப்பர் பெருமான் திருவாக்கும், கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கூடுதல் என்ற நான்கு நெறிகளை உள்ளுறையாக உணர்த்துவது ஆகும்.

கண்ட அத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்தது என்னாதே  -- அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றறியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று. --- திருக்களிற்றுப்படியார்.

         காணப்பட்ட திருமேனியுடைய ஞான ஆசிரியனின் உபதேச மொழிகளைக் கடைப்பிடித்து, தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கி நின்றார்களே தமது வினைத் தொடக்கை அறுத்தவர்கள் ஆவார்கள். அத்தகையவர்களே பரம்பொருளை உலகின் உள்நின்றது என்றும், உலகைக் கடந்து நின்றது என்றும் பலவாறு ஊசலிடாமல் அப்பரம்பொருள் அண்டத்தின் உள்ளும் இருக்கும் புறம்பும் இருக்கும் எப்புறத்தும் இருக்கும். அறிவுக்கு அறிவாகவும் அறிவைக் கடந்ததாகவும் இருக்கும் என்று அறிந்தவர்கள் ஆவார்கள்.

         முன்னே வந்து எதிர் தோன்றும் ஞான ஆசிரியன் வழங்கியருளுகின்ற மெய்ஞ்ஞானப் பொருள் மொழிகளை அவன் வழங்கியவாறே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடி அருளில் தலைப்பட்டுத் தமது வினைத் தொடர்பை அறுத்துக் கொண்டவர்கள் பரம்பொருளின் உண்மை நிலையை ஐயம் திரிபற உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஞானாசிரியன் வழங்கும் முறை உயிரின் பக்குவத்திற்கேற்பப் பல்வகைப்படும். திரு நோக்கால், தொட்டு அருள்வதால், திருவாக்கால், மானதத்தால் இன்ன பிற வகைகளால் உணர்த்தும் முறைமைகளை எல்லாம் இதனுள் அடக்கிப் பொருள் கொள்க.

         கருமம் முடித்தது என்பது வினைத் தொடர்பை அறுத்ததோடு பாச நீக்கம் முழுவதையும் உணர்த்திற்று. பரம்பொருள் அண்டத்தின் இப்புறமும் அறிவில் கலந்து உயிருக்கு உயிராகியும் சொல்லும் மனமும் கடந்தது என்றும் திருவருள் பெற்ற பேரறிவாளர்கள் தெளிய உணர்வார்கள் என்பதை இப்பாடல் உணர்த்திற்று.


உற்றாரும் பெற்றாரும் ஓவார்; உரை ஒழியப்
பற்றாரும் அற்றார் பவம்.             --- திருவருட்பயன்.

இதன் பொருள் ---

     தாம் வேறு நில்லாது திருவருளில் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும், அதன்மேல் சிவப்பேற்றினை எய்தி நிட்டையில் நின்றவரும் மெய்ப்பொருளை ஒருபோதும் நீங்கமாட்டார். அவர்க்கு இனிப் பிறவி இல்லை. இந்த உற்றாரும், பெற்றாரும் போல மெய்ப்பொருள் ஒன்றையே பற்றமாட்டாமல் கேட்டல், சிந்தித்தல் என்ற படிநிலைகளில் நிற்பவரும் மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள்.


ஓர்த்து உள்ளவாறு நோக்கி
         உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்என்று எண்ணி
         மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனைப்
பேர்த்து எனை ஆளாக் கொண்டு
         பிறவிவான் பிணிகள் எல்லாம்
தீர்த்து அருள் செய்தார் சேறைச்
         செந்நெறிச் செல்வ னாரே.     ---  அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத, உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி, மயக்கம் தரும் அவர்கள் சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை, வயிற்று வலியால், அழுந்திய நிலையிலிருந்து எடுத்து, என்னை அடியவனாகக் கொண்டு, பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி, அடியேனுக்கு அருள் செய்தவராவர் .

         குறிப்புரை : உண்மையை உள்ளவாறு நோக்கி ஒர்த்து உணராக் குண்டர். உண்மையை - சைவசித்தாந்தத் தத்துவங்களை; சிவமாகிய செம்பொருளை . சைவசித்தாந்தம் அல்லாதன எல்லாம் பூருவ பட்சம் ஆதலின், உண்மை எனப்பட்டது. பொருளல்லவற்றைப் பொருளாக உணரலாகாது என்பார் உளவாறு நோக்கி என்றார். இப்பியை வெள்ளி எனவும் , பழுதையைப் பாம்பு எனவும் நோக்குவது திரிபுணர்ச்சி. ஓர்த்தல் - ஆராய்தல், நோக்குதல் - உள்ளத்தால் நோக்குதல். நோக்கல் - நோக்கம். உணராக் குண்டர் என்றது, மெய்யுணர்ச்சி இன்றித் திரிபு உணர்ச்சியால் தம் நெறியே மெய்நெறியென மருளுகின்ற சமணரை. `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு` ( குறள் - 356) உண்மை அறியாப் பருவத்தில் நிகழ்ந்ததை நினைத்து மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனைப் பேர்த்தெனை ஆளாக் கொண்டு அருள் செய்தார் என்றார். பொய்யை மெய்யாகக் காட்டும் நெறியை மெய்யென நம்பி அச் சமணத்து வீழ்ந்தேன் என்பார், ` மயக்கில் வீழ்ந்தழுந்துவேனை` என்றார். பேர்த்து - மீட்டு.

திருக்குறளைக் காண்போம்...

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா,
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் --- அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்,

     பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா --- அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா.

         ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே [242-ஆம் குறளுரை] உரைத்தாம்.  அதாவது,  அளவைகளாவன: பொறிகளான் காணும் காட்சியும், குறிகளான் உய்த்துணரும் அனுமானமும், கருத்தா மொழி ஆகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப்பற்றி உணரும் உவமையும், இங்ஙனம் அன்றாயின் இது கூடாது என்று உணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாயஇன்மையும் என இவற்றைக் கூட்டி, ஆறு என்பாரும் உளர். இவையும் ஒரு ஆற்றான் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து. பொருந்தும் ஆறாவது, 'இது கூடும் , இது கூடாது' எனத் தன் கண்ணே தோன்றுவது. இதனை வடநூலார் 'உத்தி' என்ப. 'ஆற்றான்' என்பது வேற்றுமை மயக்கம். ஒன்றை ஒன்று ஒவ்வாமையாவது மத வேறுபாட்டான் அளவைகளும் பொருள்களும் தம்முள் மாறுகோடல்; அன்னவாயினும், அருள் துணை என்றற்கண் ஒக்கும் என்பதாம். உயிரை விட்டு நீங்காது இருமையினும் உதவலின், 'துணை' என்றார். இவை இரண்டு பாட்டானும் அருளினது சிறப்புக் கூறப்பட்டது. இதனான் விமரிசம் கூறப்பட்டது.)


     இத் திருக்குறளுக்கு விள்ளக்கமாக, பெரிய புராணத்தில் வரும் வாயிலார் நாயனார் வரலாற்றை வைத்து, குராம பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடிய ஒரு பாடல்..

ஆயறிவு தீபம் அகமலர்அன் பேஅமுதம்
கோயில்இறைக்கு ஓர்மனமாய்க் கொண்டுவந்தார் ---வாயிலார்
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாய்
போர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.

         வாயிலார் நாயனார் தொண்டை நாட்டிலே மயிலாப்பூரிலே
அவதரித்தவர். வேளாள குலத்தினர். சிவபெருமானை ஒருபொழுதும் மறவாது மனக்கோயில் உள்ளே இருத்தினார்.  சிவஞானமாகிய திருவிளக்கு ஏற்றினார். ஆனந்தமாகிய திருமஞ்சனம் ஆட்டினார். அன்பாகிய திருவமுதத்தை நிவேதித்தார். இப்படிப்பட்ட ஞானபூசையை நெடுங்காலம் செய்திருந்து சிவபதம் அடைந்தார்.

         வீட்டிற்கு நிமித்த காரணமாகிய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று. அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. இதனைச் சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்றும் கூறுவர். அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப்பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளாலும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து, அதனால் முதற்பொருளை உணருமாயின், அவனுக்கு மாறிப் பிறப்பு உளதாக நினைக்கவேண்டா என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

         ஆய் --- ஆராய்கின்ற, இறைக்கு ஓர் மனம் ஆய் எனக் கூட்டிப் பொருள் கொள்க. ஓர்த்து --- ஆராயாந்து. உள்ளது --- முதற்பொருளை. பேர்த்து --- மாறி. உள்ள --- நினைக்க.


பின்வரும் பாடலையும் கண்டு தெளிக...

'இருவினையும், இடைவிடா எவ் வினையும்,
      இயற்றாதே, இமையோர் ஏத்தும்
திருவினையும், இடு பதம் தேர் சிறுமையையும்,
      முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
''கரு வினையது இப் பிறவிக்கு'' என்று உணர்ந்து,
      அங்கு அது களை, கடை இல் ஞானத்து,
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்;
      ஈண்டு இருந்தும் அடி வணங்கற்பாலார். ---  கம்பராமாயணம், நாடவிட்ட படலம்.

இதன் பதவுரை ---

     இருவினையும் --- (நல்வினை தீவினைகளாகிய) இரண்டு வினைகளையும்; இடைவிடா எவ் வினையும் --- இடைவிடாமல் தொடர்பு கொண்டுள்ள எந்தக் கருமங்களையும்; இயற்றாதே --- செய்யாமல்; இமையோர் ஏத்தும் திருவினையும் --- தேவர்களும் புகழும் படியான நிறைந்த செல்வ வாழ்க்கையையும்; இடுபதம் சேர் சிறுமையையும் --- (பிச்சையாக) இடும் சோற்றை எதிர்பார்த்திருக்கும் தாழ்வையும்; முறை ஒப்பத் தெளிந்து நோக்கி --- சமமாகத் தெளிந்த பார்த்து; இப் பிறவிக்குக் கருவினையது என்று உணர்ந்து --- இந்தப் பிறப்பு உண்டாவதற்கு மூலகாரணம் அந்த இருவினைகளேயாகும் என்று தெளிந்து; அது --- அவ் வினையின் தொடர்பை; அங்கு --- அந்த இடத்திலேயே; களையும் --- நீங்குதற்குரிய; கடை இல் ஞானத்து --- எல்லையற்ற தத்துவ அறிவினை உடைய; அரு வினையின் பெரும்பகைஞர் --- (போக்குவதற்கு) அரிய இருவினைகளுக்குப் பெரிய பகைவர்கள்; ஆண்டு உளர் --- அம் மலையில் இருக்கின்றார்கள்; ஈண்டு இருந்தும் --- அவர்கள் (நேரில் செல்லாமல்) இங்கிருந்த படியும்; அடி வணங்கற்பாலார் --- (திசை நோக்கி) தொழுவதற்கு உரியவராவர்.

     இருவினை --- நல்வினை தீவினை. இவ் வினைகளே பிறப்பிற்குக் காரணமாகும் யோக ஞான நெறிகளால் இருவினை கடந்து ஆன்ம பக்குவம் பெற்று வினைகளை வென்ற ஞானியரை வினைப்பகைஞர் என்றார்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...