035. துறவு - 07. பற்றி விடாஅ




திருக்குறள்
அறத்துபால்

துறவற இயல்

அதிகாரம் 35 -- துறவு

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் இறுகப் பற்றி விடாதவரை, பிறவித் துன்பங்கள் இறுகப் பற்றி நீங்காவாம்" என்கின்றார் நாயனார்.

     இறுகப் பற்றுதல் - ஆசை மிகுதல்.

     இதனால், இருவகைப் பற்றுக்களையும் விடாதவர்க்கு வீடுபேறு இல்லை என்றாயிற்று.

திருக்குறளைக் காண்போம்...


பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு --- இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை,

     இடும்பைகள் பற்றி விடாஅ --- பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா.

         (இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)


பின்வரும் பாடல்களைக் காண்க....


தந்தையார் போயினார் தாயரும் போயினார்
         தாமும் போவார்
கொந்தவேல் கொண்டுஒரு கூற்றத்தார் பார்க்கின்றார்           கொண்டுபோவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால்
     ஏழை நெஞ்சே
அந்தண்ஆ ரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு
         அஞ்சல் நெஞ்சே.           --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக்கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!


தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்
பந்தநீங் காதவர்க்கு உய்ந்துபோக்கு இல்எனப் பற்றி னாயே
வெந்தநீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர்
எந்தைஆ ரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.                  
                                                                  ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத்தெளிந்து, வெந்த வெண்பொடி பூசியவரும், ஆதியான வரும் சோதியாரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பதியும் சுற்றமும் பெற்ற மக்களும்
         பண்டை யார்அலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
         நினைப்பு ஒழிமட நெஞ்சமே
மதியம்சேர்சடைக் கங்கை யான்இடம்
         மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந்து எல்லி நாறும்
         புறம்ப யம்தொழப் போதுமே.  --- சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

     அறியாமையுடைய மனமே! நாம் வாழ்கின்ற ஊரும் , மணந்த மனைவியரும் , பெற்ற மக்களும் , பிற சுற்றத்தாரும் , தேடிய பொருளும் , அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர் ; அதனால் , என்றும் உடன் தொடர்ந்தும் வாரார் . ஆதலின் , அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி ; இனி நாம் , சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும் , மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; புறப்படு .


பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்          
பற்றின் வருவது முன்னது, பின்னது
அற்றோர் உறுவது...              ---  மணிமேகலை, ஊர்அலர் உரைத்த காதை.

இதன் பதவுரை ---

     பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் --- உலகில் பிறந்தவர் அடைவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம் --- பிறவாதவர் அடைவது பெரும் பேரின்பம்.  பற்றின் வருவது முன்னது --- முதற்கண் கூறப்பட்ட பிறப்புப் பற்றினால் உண்டாவது, பின்னது அற்றோர் உறுவது --- பின்னர் உரைத்த பிறவாமை பற்றினை அற்றோர் அடைதற்குரியது,

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...