035. துறவு - 10. பற்றுக பற்றற்றான்





திருக்குறள்
அறத்துபால்

துறவற இயல்

அதிகாரம் 35 -- துறவு

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில், "எல்லாப் பொருள்களையும் பற்றி நின்றும், அவற்றுள் பற்றில்லாத கடவுள் அருளிச் செய்த முத்திநெறியையே நல்ல வழியாகப் பற்றி மனத்தில் கொள்ளவேண்டும். மனத்தில் ஏற்கெனவே உள்ள பற்றினை விடுவதற்கு இதுவே உபாயம் ஆகும்"

     எல்லாப் பொருள்களிலும் இருந்துகொண்டு, தனக்கு என ஒரு பற்றும் இல்லாது, எங்கும் நிறைந்து உள்ள இறைவன், உயிர்கள் உய்யும்பொருட்டு, திருவருள் புரிந்தது முத்திநெறி ஆகும். முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயலுதலை விடுத்து, அதனை அறிந்த உத்தமரோடு கூட்டுறவு வைக்கவேண்டும். அதனால் பழவினைகள் பாறும். இதனால், அநாயதியாகவே உடம்பின் மீதும், பொருள்களின் மீதும் உண்டாகும் பற்று விட்டுப் போகும். ஆன்ம அனுபவம் முதிர முதிர இது சாத்தியம் ஆகும். "அடியேனுடை யாக்கை புளியம் பழம் ஒத்து இருந்தேன்" என்னும் மணிவாசகத்தின் பொருள் உன்னுக.

     முத்திநெறியானது, ஞானத்தை அடைவதற்கு உரிய நெறி. அது சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் படிநிலைகளை உடையது. சரியை அரும்பு, கிரியை மலர், யோகம் காய். ஞானம் கனி.

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே. --- தாயுமானார்.

     ஞானமாகிய கனியின் சுவையை அனுபவிக்க வேண்டுமானால்,  அரும்பு என்னும் சரியையானது, கிரியை என்னும் மலராக வேண்டும், யோகம் என்னும் காயாக வேண்டும்.

         ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மை உடையது. அது இயல்பாகவே அஞ்ஞானத்தின் வண்ணமாக உள்ளது. அது நான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களால் உண்டானது. அது நீங்கவேண்டுமானால், ஆன்மா வேறு ஒன்றைப் பற்றுக்கோடாகப் பற்றவேண்டும். அதுவே பற்று அற்றான் பற்று ஆகும்.


திருக்குறளைக் காண்போம்...

பற்றுக பற்று அற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக, பற்று விடற்கு.

         இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பற்று அற்றான் பற்றினைப் பற்றுக --- எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க,

     அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு --- கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க , விடாது வந்த பற்று விடுதற்கு.

         (கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)


     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளின் கருத்தைத் தெளிவுபடுத்துவன ஆகும்.....


பாடுவார்இசை பல்பொருள் பயன் உகந்து அன்பால்
கூடுவார் துணைக் கொண்ட தம் பற்று அறப் பற்றித்
தேடுவார் பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்
ஆடுவான் அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே. --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

இசை பாடுபவர்களுக்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்து உணர்ந்து அன்பால் அவன் திருவடி உணர்வில் கூடுவார்களுக்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு, அவனையே பற்றித் தேடுவார்களுக்கும் பற்றவேண்டிய பொருளாய் இருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் திருநடனம் புரிபவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஏனவே, அல்லல்கள் இல்லாதவர் ஆனோம்.


புற்றானை, புற்றுஅரவம் அரையின் மிசைச்
சுற்றானை, தொண்டு செய்வார் அவர்தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழி அமர்கோயில்
பற்றானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே.   --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     புற்று வடிவானவனை. புற்றில் வாழும் பாம்பினைத் தனது அரையின் மீது சுற்றியவனை. தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன் எளிவந்து பழகி அருள்பவனை. அந்தணர்கள் நிறைந்த சீகாழிப்பதி மீது பற்று உடையவனைப் பற்றி நிற்பவர்களுக்குப் பாவம் இல்லை.
  
பற்று அற்றார்சேர் பழம்பதியை,
     பாசூர் நிலாய பவளத்தை,
சிற்றம்பலத்து எம் திகழ்கனியை,
     தீண்டற்குஅரிய திருவுருவை,
வெற்றியூரில் விரிசுடரை, 
     விமலர் கோனை, திரைசூழ்ந்த
ஒற்றியூர்எம் உத்தமனை
     உள்ளத்து உள்ளே வைத்தேனே.  --- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     உலகப் பற்று அற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன். பாசூரில் உறையும் பவளம் போல் திருமேனியன். திருச்சிற்றம்பலத்தில் கற்றவர் விழுங்கும் கனியாக உள்ளவன். தீண்டுதலுக்கு அரிய திருஉருவம் உடையவன். வெற்றியூரில் விரிந்த ஒளியாக உள்ளவன். தூயவர்கள் தலைவன். ஒருபுறம் கடலால் சூழப்பட்டுள்ள திரு ஒற்றியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானாகிய அவனை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தி வைத்தேன்.


பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்;
பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில்;
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்;
சொல்லுகேன் கேள், நெஞ்சே! துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்;
உன்னை அல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்;
புற்று அரவக்கச்சு ஆர்த்த புனிதா! என்றும்;
பொழில் ஆரூரா என்று என்றே போற்றா நில்லே.--- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     நெஞ்சே ! நான் சொல்வதனைக் கேட்பாயாக. உன்னைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால், மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால், உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால், சும்மா இராமல் நான் சொல்வதைக் கேள். எனக்கு உறவினரும் துணையும் நீயே.உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன். புற்றில் வாழும் பாம்பினை அரையிலே கச்சாக அணிந்த தூயோனே! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக.


கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்,
     கண்அப்ப விண்அப்புக் கொடுத்தான் கண்டாய்,
படிமலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்,
          பற்றுஅற்றார் பற்றுஅவனாய் நின்றான் கண்டாய்,
அடிமலிந்த சிலம்புஅலம்பத் திரிவான் கண்டாய்,
     அமரர்கணம் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்,
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்,
     கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே.  --- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனே மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையினை உடையவன் ஆவான். கண்ணை அப்பிய கண்ணப்பரின் அரும் செயலுக்கு, விண்ணுலகைப் பொருந்துதலை ஈடாகக் கொடுத்தவன் ஆவான். உலகில் நிறைந்த பல பிறவிகளிலும் அடியேன் பிறத்தலை அறுப்பாவன் ஆவான்.  பற்றுக்கள் அற்று நின்ற அடியார்களுக்குப் பற்றுக்கோடாய் நின்றவன். திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு ஒலிப்பத் திரிபவன். தேவர் கூட்டம் வணங்கிப் பரவும் தலைவன். மிகுதியான கொடிகள் கட்டப்பட்ட மதில்களை உடைய தில்லையம்பதியில் கூத்தனாய் விளங்குபவன் ஆவான்.


பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்,
கொற்றக் குதிரையின்மேல் வந்து அருளித் தன்அடியார்
குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே
பற்றி இப் பாசத்தைப் பற்று அற, நாம் பற்றுவான்
பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.    --- திருவாசகம்.

இதன் பொழிப்புரை ---

     தனது அடியார்களுக்கு அல்லாமல், தனது தன்மையை யாராலும் அளவிட முடியாத நிலையில் விளங்கும் தலைவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளி விளங்குபவன். வெற்றி பொருந்திய குதிரையின் மேல் எழுந்தருளி வந்து, தனது அடியார்களிடத்து உள்ள குற்றங்களை ஒழித்து, குணங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களைச் சீராட்டி, அவர்களைச் சுற்றி உள்ள சுற்றத்தவர்கள் தொடர்பை அறுப்பவன். சிவபெருமானது புகழையே பற்றி, நாம் கொண்டுள்ள பற்றுக்கள் பற்று அறக் கெடும்படி, நாம் பற்றிய பேரின்பத்தைப் புகழ்ந்து பாடி இன்பம் அடைவோமாக.
 
பற்றுஆங்கு அவை அற்றீர், பற்றும்
     பற்று ஆங்கு அது பற்றி
நல்தாம் கதி அடைவோம் ஏனில்,
     கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார் சடைமுடியான் மன்னு
     திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின
     ரொடும் கூடுமின் கலந்தே.   ---  திருவாசகம்.

இதன் பொழிப்புரை ---

     உலகப் பற்றுக்களாகிய யான் எனது என்னும் பற்றுக்களை விட்டு, இறைவனைப் பற்றுகின்றததையே பற்றாகக் கொண்டு, அதனைப் பிடித்து நல்ல கதியை அடைய விரும்பினால், ஓடி வாருங்கள். பின்னப்பட்ட சடையினை உடையவனும் நிலை பெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனுமாகிய எம்பெருமானது, புகழைக் கற்ற நெறியிலே நின்று, அவனது திருவடியை விரும்பினவராகிய அடியவர்களோடு, கலந்து இருப்பீர்களாக.

அப்பொன் பதியின் இடை, வேளாண்
     குலத்தை விளக்க அவதரித்தார்;         
செப்பற்கு அரிய பெருஞ்சீர்த்திச்
     "சிவனார் செய்ய கழல் பற்றி
எப்பற்றினையும் அற எறிவார்",
     எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார்,
     எம்பிரானார் விறன்மிணடர்.    --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     அத்தன்மைத்தாகிய அழகிய ஊரின்கண் வேளாண் குலத்தை விளக்குதற்கு ஏதுவாகத் தோன்றியவர். சொலற்கரிய பெருஞ்சிறப்பினையுடைய சிவபெருமானின் சிவந்த நிறமுடைய திருவடிகளை எப்பொழுதும் எண்ணிய வண்ணம் இருத்தலின் எவ்வகைப் பற்றையும் அறுமாறு செய்பவர். யாவராலும் அளந்தறியக் கூடாத பெருமையுடையவர். மெய்யடியார்களிடத்துப் பேரன்புடையவர். இவர் எம் தலைவராகிய விறன்மிண்ட நாயனார் ஆவர்.

         குறிப்புரை --- பற்றற்றானைப் பற்றப் பற்று விடும் என்பர் திருவள்ளுவனாரும் (குறள், 350). ஆதலின் `சிவனார் செய்ய கழல் பற்றி எப் பற்றினையும் அற எறிவார்` என்றார். அகப்புறப் பற்றுக்களின் வழிவரும் பற்றுக்கள் பலவாதலின் `எப்பற்றினையும்` என்றார். `சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றிஇப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்`
எனவரும் திருவாசகத் (தி.8 ப.8 பா.20) திருவாக்கும் ஈண்டறியத் தக்கதாம்.


மற்றை மறையோன் திருமனைவி
         வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத்
         தொழிலாள், உலகில் துணைப் புதல்வர்
வெற்று விளங்கும் தவம் செய்தாள்,
         பெறும் பெறு எல்லைப் பயன் பெறுவாள்
"பற்றை எறியும் பற்று வரச்
         சார்பாய் உள்ள பவித்திரையாம்".    --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     சுற்றம் தழுவுதலை விரும்புபவளாய், இல்வாழ்க்கையை இனிது நடத்தி வருபவள். உலகில் பெறத்தகும் நற்றுணையாய ஆண் மகவைப் பெற்று, அதனால் சிறப்புறும் தவம் செய்து கொண்டவள். அப்பேற்றால் இனித்தான் பெறத் தகும்பெரும் பேறு ஒன்றும் இன்றாக, முடிந்த பயனைப் பெறும் பேறு பெற்றவள். பற்றுக்கள் அனைத்தையும் அறுக்கின்ற சிவப்பற்று தனக்கு வந்திட, அதன் சார்பு வழி நடந்திடும் தன்மையளாயுள்ள பவித்திரை என்னும் திருப்பெயருடையவள்.

குறிப்புரை ---

பவித்திரம் - தூய்மை. பற்றை எறியும் பற்று - சிவ பெருமான்; இப்பெருமானிடத்து அன்பு செலுத்துதலாலேயே பற்றை யறுக்க முடியும். `பற்றுக பற்றற்றான் பற்றினை` (குறள், 350) எனவரும் திருவாக்கும் காண்க.


பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றில் அப்
பற்றை அறுப்பர் என்று உந்தீபற
பாவிக்க வாரார் என்று உந்தீபற.        --- திருவுந்தியார்.

இதன் பொழிப்புரை ---

     நாம் கொண்ட பற்றுகளை எல்லாம் அறுக்கத்தக்க ஆற்றல் உள்ள ஒரே பற்று இறைவனின் திருவடிகளைப் பற்றுகின்ற பற்று ஆகும். அதைப் பற்றினால் நம்மிடம் உள்ள அனைத்து பற்றுகளும், அது நம்மைவிட்டு விலகச் செய்யும். நாமே எல்லாப் பற்றுகளையும் விட்டு விடுவதாக பாவித்தால் இறைவனை அடைய முடியாது.


பற்றினுள் பற்றைத் துடைப்பது ஒருபற்று அறிந்து
பற்றிப் பரிந்து இருந்து பார்க்கின்ற ---  பற்றுஅதனைப்
பற்றி விடில் அந்நிலையே தானே பரமாகும்
அற்றம் இது சொன்னேன் அறி. --- திருக்களிற்றுப்படியார்.

இதன் பொழிப்புரை ---

     ஐம்பொறிகளினின்றும் சீவிக்கப்பட்ட பஞ்ச இந்திரியங்களை நீக்குகிற ஒப்பற்ற திருவருளை அறிந்து, அந்த அருளை  இன்பமாகக் கொண்டு இருந்து, அப்பால் பார்க்கின்ற சிவத்திலே பொருந்திப் பற்றுவிடாது இரு.  அப்பொழுதே பேரின்பம் தென்றும்.  இந்த உபதேசத்தை முடிவாகச் சொன்னேன் அறிவாயாக.
                                                                       

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

எங்கும்இறை தோய்ந்தாலும் தோய்வுஇலன் என்று ஓதுதமிழ்ச்
சிங்கம் நடந்தவழிச் சித்தாந்தம்,  ---  அங்கு அதுகேள்,
பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

         எங்கும் இறை…..என்று ---  இறைவன் எப்பொருளினும் வேறு இன்றிக் கலந்து நிற்பினும், அங்ஙனம் நிற்பவன் அப்பொருள் ஒன்றினும் பற்று அற்றவனாய்த் தனித்து நிற்பவன் ஆவான் என்று. முதல் இரண்டு அடிகள் இந்நூல் முதல் செய்யுளோடு ஒத்திருத்தல் காண்க. பற்று அறும்பொருட்டு முத்திநெறியைப் பற்றவேண்டும். தமிழ்ச் சிங்கம் --- சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்டதேவர். அவர் நடந்த வழி --- சைவசித்தாந்த நெறி


     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் குறித்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி அருளிய ஒரு பாடல்...

அத்தன்அடி அல்லால் அறம்பொருள் இன்பங்களிலே
சித்தம் மலையார் சித்தத்தைச் சிவன்பால் - வைத்தார்தாம்,
பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

இதன் பொருள் ---

     உச்சுவாசம் (மூச்சை உள்ளிழுத்தல்) நிச்சுவாசம் (மூச்சை அடக்கி வெளிவிடுதல்) இரண்டையும் அடக்கி, சுழுமுனை வழியிலே பிராணவாயுவை நிறுத்தி, விடய இச்சைகளில் மனத்தைச் செல்லவொட்டாமல் திருப்பி, ஒரு குறிப்பிலே நிறுத்தி, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறு ஆதாரங்களில் முறைப்படி அந்தந்த ஆதார தெய்வங்களாகத் திருவுருக் கொண்டு எழுந்தருளி இருப்பது நாமரூபம் அற்ற அருட்பெருஞ்சோதிப் பரம்பொருள் என்பதை அறிந்து பூசித்துத் தியானித்து, மேலாகிய பிரமரந்திரம் வரையில் அசபையுடன் சென்று அணைந்து, அப்பிரமரந்திரத்திலே கீழ்நோக்கி உள்ள ஆயிரம் இதழ்த்தாமரையை சிவக்கனலாலே அலரச் செய்து, சந்திர மண்டலத்தை இளகப் பண்ணி அந்த அமிர்தத்தை நாடிகளின் வழியாக நிறைத்து, சுயம்பிராகாசமாய் இருக்கும் பேரொளிப் பொருளைப் பாவித்து இருப்பவர்களே சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர் ஆவார்.

         எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டுநெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க. கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க விடாது வந்த பற்று விடுதற்கு என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...