034. நிலையாமை - 08. குடம்பை தனித்து




திருக்குறள்

அறத்துப்பால்

 

துறவற இயல்

 

அதிகாரம் 34 -- நிலையாமை

 

     நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன என்பது. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு (கயிறு) போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள நட்புத் தொடர்பானது, முட்டை ஓடு தனித்துக் கிடக்க, அதனுள் இருந்த பறவையானது, பருவம் வந்தபோது பறந்து போனது போன்றதாகும்" என்கின்றார் நாயனார்.

 

     "குடம்பை தனித்து ஒழிய" என்றதனால், முட்டையும், அதனுள் இருந்த கருவும் ஒன்றாய்ப் பிறந்து, அது வேறு ஆகும் அளவும், கருவுக்கு ஆதாரமாக முட்டை ஓடு இருத்தல் என்பது பெறப்படும். இது, உயிருக்கு ஆதாரமாக உடம்பு இருத்தலை உணர்த்தியது. முட்டைக்குள் பறவையானது வேற்றுமை இல்லாது இருந்து, பின்பு அதனுள் திரும்பவும் நுழையாமல், வேறுபட்டுப் போவதால், பறவை உயிருக்கு உவமானம் ஆயிற்று. முட்டையினிடத்து, பாம்பு முதலியன பிறப்பினும் பாம்பு பறந்து போதல் இல்லை, எனவே, பறந்து போதல் ஆகிய தொழிலைக் குறித்ததனால், உயிருக்குப் பறவையே உவமானம் ஆயிற்று என்பது உறுதி.

 

     நட்பு என்றது, நட்பு இல்லாது போதலை அறிவித்தது. அறிவாயும், அருவாயும், நித்தியமாயும் உள்ள உயிரானது, அறிவற்ற சடமும், நித்தியம் இல்லாததும் ஆன உடம்போடு கூடி இருப்பது, வினை வசத்தால் கூடியதே அல்லாமல், உடம்புக்கும் உயிருக்கும் நட்பு இல்லை என்பது தெளியப்படும்.

 

     உயிருக்கு உடம்பொடு உண்டாகிய நட்பு இல்லாது போகும் என்பதை, பின்வரும் திருமந்திரப் பாடலால் தெளியலாம்.

 

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்பு இடை நின்ற உயிரை அறியார்;

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்,

மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.    --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     உயிருக்குப் பொருந்தி உள்ள அதிசூக்கும உடம்பானது, முதலில் சூக்கும உடலைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல உடம்பினைப் பற்றுதலினால், உயிரானது, அதிசூக்குமம், சூக்குமம், தூலம் என்னும் மூன்று உடம்போடும் பொருந்தி, தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, "உடம்புதான் உயிர்" என மயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள் தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையாது` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியனவாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்து இருக்கின்றார்கள்.

 

     இனி, குடம்பை என்பதற்கு, கூடு என்று பொருள் கூறுதலும் உண்டு. கூடு பறவையுடன் தோன்றியது அல்ல. பறவையால் உருவாக்கப்பட்டது. கூட்டினை விட்டுச் சென்ற பறவை, அதனுள் மறுபடியும் வந்து நுழைவது உண்டு என்பதாலும், இது பொருந்தாது என்பதை அறிக. உடம்பில் இருந்து பிரிந்த உயிர், வேறு உடம்பில் புகுவது அன்றி, மறுபடியும் அதே உடம்பில் புகுவது இல்லை.

 

"கறந்த பால் முலைப் புகா,

     கடைந்த வெண்ணெய் மோர் புகா,

உடைந்து போன சங்கின் ஒசை,

     உயிர்களும் உடல் புகா,

விரிந்த பூ, உதிர்ந்த காயும்,

     மீண்டு போய் மரம் புகா,

இறந்தவர் பிழைப்பது இல்லை,

     இல்லை, இல்லை, இல்லையே".

 

என்னும் சிவவாக்கியர் பாடல் காண்க.

 

இதன் பொருள் ---

 

         முலையில் இருந்து கறந்த பாலானது, மறுபடியும் முலையில் போய்ப் புகாதது போலவும், மோரில் இருந்து கடைந்து எடுத்த வெண்ணெயானது, மறுபடியும் அந்த மோரில் போய் நுழைந்து கொள்ளாமை போலவும், சங்கில் இருந்து வெளிப்பட்ட ஓசையானது, மறுபடியும் அந்தச் சங்கினில் போய்ப் புகுந்து கொள்ளாமை போலவும், மரத்தில் இருந்து மலர்ந்த பூவும், உதிர்ந்த காயும் மறுபடியும் அந்த மரத்தில் போய்ச் சேர்ந்து கொள்ளாமை போலவும், மனத்தை இறக்கபெற்ற ஞானிகள் தமது சூக்கும உடம்போடு கூடி இருப்பார்களே ஒழிய, மறுபடியும் தமது தூல உடம்பில் வந்து பொருந்த மாட்டார்கள். இது ஒருக்கால் சொல்லுவது இல்லை. முக்காலும் இல்லை, இல்லை, இல்லை. (சத்தியம் என்பது கருத்து)

 

     எனவே, திருவள்ளுவ நாயனார், இந்த உண்மையை உணர்த்த,

 

குடம்பை தனித்து ஒழிய புள்பறந்து அற்றே,

உடம்பொடு உயிர் இடை நட்பு.    

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.

 

         பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

காணலாம் பரமே! கட்கு இறந்தது ஓர்

வாள் நிலாப் பொருளே! இங்கொர் பார்ப்பு எனப்

பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, னைப்

பூணுமாறு அறியேன் புலன் போற்றியே.  --- திருவாசகம்.

 

இதன் பதவுரை ---

 

     காணல் ஆம் பரமே --- சிவஞானம் பெற்ற அன்பர்கள் ஞானகண்ணினால் காணக்கூடிய பரம்பொருளே, கட்கு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே --- அன்பர் அல்லாதவர்க்குக் கண்புலனால் பற்றப்படாதவாறு கடந்து நிற்பதாகிய, ஒப்பற்ற பேரொளி நிலைத்த பொருளே, பாழ்நனேன் --- வீணன் ஆகிய நான், புலன் போற்றி --- சுவை முதலிய ஐம்புல இன்பங்களின் மேல் வைத்த அவாவினை மேற்கொண்டு, இங்கு ஒர் பார்ப்பு என --- இவ்வுலகத்தில், ஒரு பறவைக் குஞ்சு முட்டை அல்லது கூடு தனித்துக் கிடப்ப, அதனை விட்டு நீங்குதல் போல, படிற்று ஆக்கையை விட்டு --- பொய்ப்பொருள் ஆகிய இந்த உடம்பை விட்டு, உன்னைப் பூணும் ஆறு அறியேன் --- மெய்ப்பொருள் ஆகிய உன்னை அடையும் நெறியை அறியாதவன் ஆகின்றேன்.

 

விடம்பயில் எயிற்று அரவு உரியும், வீநுழை

குடம்பையும் தான் எனும் கொள்கைத்தே கொலாம்,

நடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஐவர்வாழ்

உடம்பையும் யான் என உரைக்கற் பாலதோ. --- திருவிளையாடல் புராணம்.

 

இதன் பதவுரை ---

 

     நடம் பயில் கூத்தரின் --- நாடகம் ஆடுகின்ற கூத்தர்களைப் போல, நடிக்கும் ஐவர் வாழ் --- நடிக்கின்ற ஐம்பொறிகள் வாழுகின்ற; உடம்பையும் --- இந்த உடலையும், யான் என உரைக்கற் பாலதோ --- நான் என்று சொல்லத் தகுமோ? (தகாது, உடம்பு வேறு உயிர் வேறு). (அங்ஙனம் அல்லாது, உடம்பே உயிர் என்று கொண்டால், அது), விடம் பயில் எயிற்று அரவு உரியும் --- நஞ்சு தங்கிய பற்களையுடைய பாம்பு, தனது தோலையும், வீ நுழை குடம்பையும் --- பறவையானது தான் நுழைகின்ற கூட்டையும், தான் எனும் கொள்கைத்து --- தான் என்று கொள்ளும் கொள்கையை உடையதாம்.

 

கேளாதே வந்து, கிளைகளாய் இல்தோன்றி,

வாளாதே போவரால் மாந்தர்கள்; - வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல,

யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.      ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வாளாது சேக்கை மரன் ஒழிய --- சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல --- அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல, மாந்தர்கள் --- மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல் தோன்றி --- ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து --- பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் --- பேசாமலே இறந்து போய் விடுவார்கள்.

 

         சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரம் என்பது தெரியாமையின், உடனே அறஞ்செய்து கொள்க.

 

         "சேண் நீங்கு" என்னும் குறிப்பால், திரும்பாமை புலப்பட்டது. பறவைகளில் அங்ஙனம் சேண் நீங்கிவிடும் பறவைகளே இங்கு உவமை காட்டப்பட்டன. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தற்காகக் கூடுகட்டியிருந்து, வினை முடிந்தபின் அக்கூட்டை விட்டு, வெகு தூரத்தே நீங்கிவிடும் பறவைகள் இந்த உவமத்துக்குப் பொருந்தும்; உயிரும், தன் வினைக்கு ஏற்ப, பிறர்க்குப் பயன்படும் பொருட்டே இவ்வுடம்பு எடுத்து வந்து தங்குகின்றது. யாரும் கேட்டு அது வருவதில்லை. அதனால், கேளாதே வந்து வாளாதே போவர். சுற்றத்தார் பொருட்டு எடுத்த உடல். ஆதலின் சுற்றத்தார்க்கே அது கிடக்கும்படி நீத்து என்றார்.

 

உடம்பொடு உயிர் இடை என்ன,  மற்று அன்ன

மடந்தையொடு எம்இடை நட்பு.     

 

     உடம்பொடு உயிருக்குள்ள தொடர்பை ஒத்தது,  இவளோடு நான் கொண்டுள்ள உறவு என்று தலைவன் கூறுவதாக, இன்பத்துப்பாலில், "காதல் சிறப்பு உரைத்தல்" என்னும் அதிகாரத்திலும் கூறினார் நாயனார்.

 

     தலைவனும் காதலியும் பிரிக்கமுடியாத நெருக்கத்தை அடைந்துவிட்டனர் என அவர்களது காதலின் சிறப்பை, தலைவன் கூற்றாக வைத்து நாயனார் பாடி அருளிய திருக்குறள்பா இது.

 

     தனக்கும் காதலிக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பின் நெருக்கம் போன்றது ஆகும் என்கிறான் தலைவன். அவனுக்கும் அவளுக்கும் இடையேயான உறவின் நெருக்கம் பிரித்தறிய முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டதாக உணர்கிறான்.  உயிர் ஒன்று, உடல் இரண்டு என்பது போல அவர்களது தொடர்பு வளர்ந்து விட்டது.  அவன் உடம்பு என்றால், அவள் உயிர். அவள் உடம்பு என்றால் அவன் உயிர். ஒருவர் இறந்தால் மற்றவரும் உயிர் விடுவர். உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நெருக்கம் போன்றது அவர்களது காதல். ஒருவர் பிரிவை மற்றொருவர் பொறுக்கமாட்டார்.

 

     தலைவன் இறந்தாலும், பின்னர் வந்து முன்னர் இருந்தபடி அவளுக்குத் தலைவன் ஆக முடியாது. தலைவி இறந்தாலும் அப்படியே. உடம்பு உள்ளவரை தான் தொடர்பு. உடம்பு அற்றது என்றால், தொடர்பும் அற்றது. எனவே, "உடம்பொடு உயிரிடை நட்பு" என்று இங்கும் காட்டினார் நாயனார்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...