032. இன்னா செய்யாமை - 10. நோயெல்லாம்




திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 32 -- இன்னா செய்யாமை

     இந்த அதிகாரத்தில் வரும பத்தாம் திருக்குறளில், "வருகின்ற துன்பங்கள் எல்லாம், முன்பு பிறர்க்குத் துன்பம் செய்தார்க்கு வந்து சேர்வன. துன்பம் இல்லைமையை விரும்புபவர், பிறர்க்குத் துன்பம் செய்யமாட்டார்" என்கின்றார் நாயனார்.

     "தினை விதைத்தவன், தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்" என்னும் பழமொழி இங்குக் கருதத் தக்கது.

திருக்குறளைக் காண்போம்...
                          
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலஆம், நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் --- இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்தார் மேல் ஆம்,

     நோய் இன்மை வேண்டுபவர் நோய் செய்யார் --- அதனால் தம் உயிர்க்கு இன்னாதன வேண்டாதார், பிறிதோர் உயிர்க்கு இன்னாதன செய்யார்.

         ('உயிர்நிலத்து வினைவித்து இட்டார்க்கு விளைவும் 'அதுவே', (சீவக. முத்தி 164) ஆகலின், நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்' என்றார். இது சொற்பொருள் பின்வருநிலை. இவை இரண்டு பாட்டானும் அது செய்தார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், பெரியபுராணத்துள் வரும் திருநாவுக்கரசு நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய பாடல் ஒன்று...

நீற்றுஅறை,நஞ்சு, ஆனை,கடல் நேர்உற்றார் அப்பர்க்கு,
மாற்றுஅமணர் பின்இருந்து வாழ்ந்தாரோ? - ஆற்றரிய
நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம், நோய்செய்யார்
நோய் இன்மை வேண்டு பவர்.

         தங்களது அருக சமயகுரவராகிய தருமசேனர் சைவ சமயத்தைச் சார்ந்து வீற்றிருக்கின்றார் என்றதைக் கேட்ட சமணர்கள் மனம் பொறாராயினர். அரசனைக் கொண்டு அவருக்கு எல்லை இல்லாத துன்பங்களைச் செய்ய முற்பட்டனர்.  நீற்றறையிலே வைத்துப் பூட்டியது, விடத்தை ஊட்டியது, மதயானையில் காலில் இடறச் செய்தது, கருங்கல்லிலே கட்டிக் கடலில் வீழ்த்தியது ஆகிய பற்பல கொடுஞ்செயல்களைச் செய்வித்தும் யாதொரு தீங்கும் நேரிடாமல் சிவபெருமான் அருளால் நீண்டகாலம் வாழ்ந்து சிவாநுபூதிச் செல்வராயினார்.

     திருநாவுக்கரசருக்குச் சமணர்கள் செய்த தீங்குகள் அத்தனையும் சமணர்களின் சுகவாழ்விற்கு ஒருங்கே கேடாய் முடிந்தன. 

         இன்னாதன எல்லாம் பிறிதோர் உயிருக்கு இன்னாதன செய்தார் மேலவாம். அதனால் தம் உயிருக்கு இன்னாதன வேண்டாதார் பிறிதோர் உயிருக்கு இன்னாதன செய்யார் என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

     பின்வரும் சிவஞான சித்தியார் பாடல்களின் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணுக...


இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்
         இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்
அவன் இவனாய் நின்றமுறை ஏகனாகி
         அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும் இவன் செய்தி எல்லாம் என்செய்தி என்றும்
         செய்ததுஎனக்கு இவனுக்குச் செய்தது என்றும்
பவம்அகல உடனாகி நின்று கொள்வன் பரிவால்
         பாதகத்தைச் செய்திடினும் பணி ஆக்கி விடுமே.

         சிவபெருமான் தன்னை வழிபடும் அடியார்களுடன் பிரிப்பின்றி உடன் நிற்பான் என்றது முந்திய பாடலில் கூறப்பட்டது. அத்தகைய அடியார்கட்கு உலகில் நலம் தீங்குகள் செய்தவர்கே அச்செயல்களின் பயன் சென்று இசையும். அல்லாமல், அடியார்களுக்கு வினைப்பயன் எய்தாது. தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கித் தலைவன் செயலே தம் செயலாக அரன் பணியில் நிற்கும் இவ்வடியார்களுக்கு உயிரின் குற்றமாகிய மலமும் நீங்கும். சிவபெருமானும் அடியார்களின் செயல்கள் எல்லாம் தன் செயலாகவும், அடியார்களுக்குச் செய்த எல்லாம் தனக்குச் செய்தன எனவும் உடனாக நின்று ஏற்றுக் கொள்வான். அவ்வாறு கொள்ளவே அடியார்களின் பிறப்பு அகலும். அத்தகைய அடியவர்கள் சிவபிரான் மீது கொண்ட அன்பின் மிகுதியால் எப்போதேனும் தீங்கு செய்திடினும் இறைவன் அதனையும் தனது பணியாக ஏற்று அருளுவான்.

         இப்பாடலில் இவன் என்ற சொல் அடியார்களைக் குறித்தது. அவன் என்ற சொல் சிவபெருமானைக் குறித்தது.


யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும்
         இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்து
தான்செவ்வே நின்றிட அத் தத்துவன் தான் நேர
         தனை அளித்து முன்நிற்கும் வினை ஒளித்திட்டு ஓடும்
நான் செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கு இன்றி
         நண்ணுவிக்கும் போகத்தை பண்ணுவிக்கும் கன்மம்
ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால்
         ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழியாது அன்றே.

         நான் பிறர்க்கு இன்ன நன்மை, தீமை செய்தேன், பிறர் எனக்கு இன்ன நன்மை, தீமை செய்தார் என்று கருதுவது யான் எனது என்னும் செருக்கினால் விளையும் மனக்கோட்டம் ஆகும். இத்தகைய மனக்கோட்டத்தை ஞானம் என்னும் நெருப்பால் காய்ச்சி அதனை நிமிர்த்துதல் வேண்டும்.... அவ்வாறு நிமிர்த்தி இறைவனின் திருவருள் வழியிலே தன்முனைப்பு இன்றி நிற்கவே இறைவன் நேராக வெளிப்பட்டுத் தோன்றி அருள்பாலிப்பான். அவனுடைய முன்னிலையில் நில்லாது ஞானமுடையாரின் வினைகள் ஒளித்துவிடும். இவ்வாறன்றி இதனை நான் செய்தேன் என்று தன் முனைப்போடு செயல்படுவோர்க்கு இறைவன் விளங்கித் தோன்றுதல் இலன். மேலும் அவர்கள் செய்யும் வினைக்கு ஏற்ற பயனையும் இறைவன் ஊட்டுவான். எனவே அவர்களுக்கு வேறு வினையும் தோன்றும். மாயையினால் ஆகிய கருவிகளைப் பொருந்தி அறியும் சிற்றறிவினின்றும் வழிபட்டு ஏகனாகி இறைபணி நிற்கும் ஞானம் உதித்தால் அன்றி, ஒருவருக்கும் யான் எனது என்னும் செருக்கு ஒழிவதில்லை.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...