037. அவா அறுத்தல் - 09. இன்பம் இடையறாது





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 37 -- அவா அறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது திருக்குறளில், "துன்பங்களுள்ளே மிகுந்த துன்பத்தைத் தரும் ஆசையானது ஒருவனுக்குக் கெடுமாயின், அவன் உடம்பை விட்டுச் சென்ற காலத்தில் மட்டும் அல்லாமல், சீவன் முத்தனாய், உடம்போடு வாழும் காலத்திலும், பேரின்பமானது இடையறாது வந்து அவனை அடையும்" என்கின்றார் நாயனார்.

     ஆசை என்று சொல்லப்படும் பெரியதோர் துன்பமானது ஒருவனிடத்து இல்லாது அறவே ஒழிந்துவிடுமாயின், அவன் வீடுபேற்றினை அடைந்த காலத்து மட்டுமல்லாமல், உடம்போடு இந்த உலகத்தில் வாழும் காலத்தும் இன்பமானது இடையறாமல் வந்து சேரும் என்றது, துன்பத்திற்குக் காரணமாகவும், வீடுபேற்றிற்குத் தடையாகவும் உள்ளது ஆசையே ஆதலால், இது ஒழிந்துவிட்டால், மற்ற துன்பங்கள் எல்லாம் இன்பமாகவே காணப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

இன்பம் இடைஅறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.                         

இதற்குப் பரிமேலழகர் உரை ---
    
     அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் --- அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்;
    
     ஈண்டும் இன்பம் இடையறாது --- அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது.

         (துன்பத்துள் துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும் துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின் கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள் துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாது நிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது' என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்' என்று உரைப்பாரும் உளர்.  இதனால் அவா அறுத்தார் வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பது கூறப்பட்டது.)


     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தென்னம் புவியகத்து "இன்பம் இடையறாது ஈண்டும், அவா
என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்" என்ன இசைத்தும்,முன்னோர்
பொன்னின் பெண் மண்முதல் ஆசையுள் சிக்கிப் புலம்பி நொந்தேன்
பின்நின்று எனைப் புரப்பார் இல்லை புல்லைப் பெருந்தகையே.

இதன் பொருள் ---

     ஒருவனுக்கு மிகுந்த துன்பத்தைத் தருவதான ஆசையானது அறக் கெடுமானால், அழகிய இந்த நிலவுகத்திலே வாழும் காலத்திலும் இன்பமானது இடையீடு இல்லாமல் வந்து சேரும் என்று அறிவுறுத்தப்பட்டும், எனது முன்னோர்கள் வைத்துச் சென்ற பொன்னின் மீது பற்று வைத்தல், பெண் இன்பத்தில் அழுந்தி இருத்தல், மண்ணாசை கொண்டு அலைதல் ஆகிய ஆசைகளால் அலைப்புண்டு, மனம் வாடி நொந்து போனேன். திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாளே, (நீ என்னைக் காக்கா விட்டால்) என்னைக் காப்பவர் இல்லை.

     தென்னம் புவியகத்து - அழகிய நிலவுலகத்திலே. புலம்பி நொந்தேன் --- அரற்றி வருந்தினேன். எனைப் புரப்பார் --- என்னைக் காப்பாற்றுவார்.


     பின்வரும் பாடல்கள் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

நீக்கஅரும் நோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு,
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்கப் ---  போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர், துறந்து எய்தும்
இன்பத்து இயல்பு அறியாதார்.      ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

     துறந்து எய்தும் இன்பத்து இயல்பு அறியாதார் --- பற்றுக்களை விடுவதனால் அடையும் இன்பத்தின் தன்மையை அறியாதவர்கள், நீக்க அருநோய் --- தீர்த்தற்கரிய நோயும், மூப்பு ---கிழத்தன்மையும், தலைப்பிரிவு --- மனைவி மக்களைப் பிரிதலும், நல்குரவு --- வறுமையும், சாக்கடு --- மரணமும், என்ற ஐந்து களிறு உழக்க --- ஆகிய ஐந்து யானைகளும் வருத்த, போக்க அரிய துன்பத்துள் துன்பம் உழப்பர் --- நீக்குதற்கு அரிய மிகப்பெருந் துன்பத்தினை அனுபவிப்பார்கள்.


என்பொருள் என் பொருள் என்று சீவன்விடு
    மனமே! ஒன்று இயம்பக் கேளாய்,
உன்பொருளானால் அதன்மேல் உன் நாமம்
    வரைந்து உளதோ? உன்தனோடு
முன்பிறந்து வளர்ந்ததுகொல்? இனி உனை விட்டு
    அகலாதோ? முதிர்ந்து நீ தான்
பின்பிறக்கும் போது அதுவும் கூட இறந்-
    திடும் கொல்லோ பேசுவாயே.        ---  நீதிநூல்.

 இதன் பொருள் ---

     நெஞ்சே! என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிர்விடுகின்றனை. உனக்கு ஒன்று சொல்லுகின்றேன் கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உன் பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடன் பிறந்து வளர்ந்ததா? இனிமேலும் அது உன்னைவிட்டு நீங்காதா? நீ மூப்படைந்து சாவும்பொழுது உன்னோடு அதுவுங் கூடச் செத்திடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.


ஒப்பரும் நற்குணத்தவர்க்கும் கொலை காமம்
    கள் களவை உபதேசிக்கும்
அப்பனாய், நட்பினர்க்குள் பகைவிளைக்கும்
    சத்துருவாய், கிலத்து உற்ற
செப்பரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய்,
    தீவினைக்கு ஓர் செவிலியாய,
இப்பொருளை நற்பொருள் என்று எப்படி நீ
    ஒப்புகின்றாய் ஏழை நெஞ்சே.        ---  நீதிநூல்

 இதன் பொருள் ---

     அறிவில்லாத நெஞ்சே! ஒப்புச்சொல்ல முடியாத சிறந்த நல்ல பண்புகளை உடையவர்க்கும் கொலை காமம் கள் களவு (பொய்) முதலிய பெருந் தீமைகளை மனத்தழுந்தப் போதிக்கும் தந்தையாகவும், நண்பர்களுக்குள் பகையை விளைவிக்கும் மாற்றானாகவும், சொல்லமுடியாத உலகியல் துன்பங்கட்கு எல்லாம் தாயாகவும், கொடுஞ் செயலுக்கெல்லாம் வளர்ப்புத் தாயாகவும் இருக்கும் இப்பொருளை, இன்பமும் துணையும் இசைவிக்கும் நல்ல பொருள் என்று நீ எந்த முறையாகக் கூறுகின்றாய்.


நோக்கு இருந்தும் அந்தகராய், காது இருந்தும்
    செவிடராய், நோய் இல்லாத
வாக்கு இருந்தும் மூகையராய், மதிஇருந்தும்
    இல்லாராய், வளருங் கைகால்
போக்கு இருந்தும் முடவராய், யிர் இருந்தும்
    இல்லாத பூட்சியாராய்
ஆக்கும் இந்தத் தனம் அதனை, ஆக்கம் என
    நினைத்தனை நீ அகக் குரங்கே.      ---  நீதிநூல்.

 இதன் பொருளை ---

     நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க், குற்றமற்ற வாயிருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்களிருந்தும் முடவராய், உயிரிருந்தும் அஃதில்லாத வெற்றுடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீப்பொருளை வளரும் செல்வமாம் வாழ்வென நினைத்தனை.


நிறைசெல்வம் உடையாரை நோய்துன்பம்
    அணுகாவோ? நினைத்தது எல்லாம்
குறை இன்றிப் பெறுவரோ? புவிக்கரசு
    செலுத்துவரோ? குறித்த ஆயுள்
பிறை என்ன வளருமோ? இயமன்வர
    அஞ்சுவனோ? பேரின்பத்துக்கு
உறையுளோ அவர்கிரகம்? இவைஎலாம்
    மனமே! நீ உன்னுவாயே.         ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

     நெஞ்சே! நிறைந்த செல்வமுடையாரைப் பசிநோய் உடல்நோய் துன்பம் முதலியன அணுகாவோ? நினைத்ததெல்லாம் குறைவில்லாமல் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வரோ? வரையறுக்கப்பட்ட வாழ்நாள் பிறைபோன்று வளர்ச்சி உறுமோ? இவரிடம் கூற்றுவன் வர நடுங்குவனோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்துக்கு உறையுளோ? இவை அனைத்தையும் கருதிப் பார்ப்பாயாக.


பஞ்ச பூதங்களை, விண் தாரகையை,
    தண்மதியை, பானுத் தன்னை,
கொஞ்சமும்நம் பொருள் என உன்னாமல்,வெள்ளி
    பொன் எனும் மண் குப்பை தன்னைத்
தஞ்சமாம் பொருள்கள் என நினைத்து, தன்மேல்
    ஆசையுற்றுத் தயங்குகின்றாய்,
நெஞ்சமே! உனைப்போலும் அறிவீனர்
    தேடினும் இந் நிலத்தில் உண்டோ.   --- நீதிநூல்.

 இதன் பொருள் ---

     மனமே! ஐம்பூதங்களை, விண்மீன்களை, திங்களை, ஞாயிற்றைச் சிறிதேனும் நம்முடைய பொருள்கள் எனக் கருதாமல், வெள்ளி, பொன் என வழங்குகின்ற மண் குவியலை நம்மைக் காக்கும் பொருள்கள் என எண்ணி அவற்றின்மேல் அவாக் கொண்டு வாடுகின்றாய். உன்னைப்போலும் அறிவில் குறைந்தார் இவ்வுலகெலாம் ஆராயினும் உண்டாகார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...