032. இன்னா செய்யாமை - 04. இன்னா செய்தாரை





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 32 -- இன்னா செய்யாமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "தமக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்தாரைத் தண்டித்தலாவது, அவர் தாமே நாணம் அடையும்படி சிறந்த மகிழ்வுகளைச் செய்து, அவ்வாறு தான் செய்த நன்மைகளையும், அவர் செய்த தீமைகளையும் மறந்து விடுதல் ஆகும்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...


இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண
நல்நயம் செய்து விடல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இன்னா செய்தாரை ஒறுத்தல் --- தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது:

     அவர் நாண நல் நயம் செய்துவிடல் --- அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல்.

         மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின், மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு.

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

கண்ணுதலார் தம்மைக் கடைகாக்க வைத்தானை
விண்ணவரும் தாழ்ந்து இறைஞ்ச மேல் வைத்தார் ---                                                    எண்ணி
இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண
நல்நயம் செய்து விடல்.                       

         கடை --- கடைவாயில். காக்க வைத்தான் --- வாணாசுரன்.  வைத்தார் --- திருக் கயிலாயத்தில் தம் சந்நிதியில் மத்தளம் கொட்டுபவனாக வைத்தார். மகாபலி சக்கரவர்த்தியின் புதல்வனாகிய வாணாசுரன் சிவபெருமானைப் பூசித்து மிகுந்த வலிமை பெற்று, அவரைத் தன் கோட்டைக்குக் காவலாக வைத்து, வலிமையில் தனக்கு ஒப்பார் எவருமில்லை என்று செருக்குற்று இருந்தான். ஒருசமயம் தன் மகள் உஷையின் காரணமாகக் கண்ணபிரானுடைய பேரன் அநிருத்தன் வாணாசுரன் ஊர்க்குக் கொண்டு வரப்பெற, அவன் வாணனால் சிறை வைக்கப்பட்டான். இதனை அறிந்த கண்ணபிரான், வாணன் ஊர் வந்து, சிவபிரானை வழிபட்டு உள்ளே நுழைந்து வாணனுடைய ஆயிரம் கைகளுள், சிவனைப் பூசித்துவரும் இரண்டினை வைத்து, எஞ்சியவற்றைக் களைந்து மீண்டார்.  பிறகு வாணன், கயிலையில் சிவபிரானுக்கு மத்தளம் கொட்டும் பணியைப் பூண்டான் என்பது வரலாறு.
                                                     
     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தன்னைவதை முத்திநாதன் தனையும் மெய்ப்பொருளார்
முன்னை நனி காத்தார், முருகேசா! - மன்உலகில்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

இதன் பொருள் ---

     முருகேசா --- முருகப் பெருமானே, மெய்ப்பொருளார் --- மெய்ப்பொருள் நாயனார், தன்னை வதை முத்திநாதன் தனையும் --- தன்னைக் கொலை புரியுமாறு வெட்டிய முத்திநாதன் என்பவனையும், முன்னை --- முன்னாளிலே, நனி காத்தார் --- நன்கு பாதுகாத்தார். மன்னுலகில் --- நிலைபெற்ற உலகத்தில், இன்னா செய்தாரை ஒறுத்தல் --- தனக்குத் துன்பம் செய்தவர்களை வருத்துதல், அவர் நாண --- அவர்கள் நாணத்தை அடையுமாறு, நன்னயம் செய்து விடல் --- அவர்கட்கு நன்மை செய்தலே ஆம்.

         மெய்ப்பொருள் நாயனார் தம்மைக் கொலை செய்த முத்திநாதன் என்பவனை ஏவலர்கள் கொன்று விடாமல் பாதுகாத்தார். தனக்குத் துன்பம் செய்தவர்களைத் தான் ஒறுத்தல் எவ்வாறெனின் அவர்கட்கு நன்மை செய்து அவர்கள் நாணுமாறு செய்தலே என்பதாம்.

                           மெய்ப்பொருள் நாயனார் வரலாறு

         மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான் குலமாகும். நாயனார் அறநெறி தவறாது அரசு புரிந்து வந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்து வந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையில் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுவனற்றைக் குறைவறக் கொடுத்து, நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

         இவ்வாறு ஒழுகி வந்த மெய்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப் போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாது எனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத் துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணம் அறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்ச மனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கே இருந்த அரசியார், அடியாரின் வரவு கண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்கும் இலாததோர் சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப் பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடத்திலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது வென்றார். முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா! நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டு வா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தி அறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றொழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித் தடுத்து, நகரைக் கடந்து சென்று, நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தை செய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருள் நாயனாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளமை காணலாம்...

மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவு உடையார், --- ஆற்றாமை
நேர்த்து இன்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்து இன்னா செய்யாமை நன்று. --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு --- தமக்குப் பகைவராய் இருந்து அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையோர் --- தாமும் அப்பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை அறிவுடையோர் மாட்டாத தன்மை என்று சொல்லி இகழமாட்டார்கள்; ஆற்றாமை நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் --- தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல் எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று --- தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது.

         தமக்குத் துன்பஞ் செய்தவர்களுக்குத் தாமுந் துன்பஞ் செய்வது ஆற்றலன்று ; துன்பஞ் செய்யாமையே ஆற்றலாவது.


உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், --- உபகாரம்
தாம் செய்வது அல்லால், தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு இல்.      --- நாலடியார்

இதன் பதவுரை ---

     உபகாரம் செய்ததனை ஓராது --- தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல், தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் --- பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும், உபகாரம் தாம் செய்வதல்லால் --- அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், தவற்றினால் தீங்கு ஊக்கல் --- அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல், வான் தோய் குடிப்பிறந்தார்க்கு இல் --- உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

     தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.

         பிறர்பால் உண்டாகும் தீய நினைவை, அவருக்கு நன்மை செய்து செய்தே மாற்றுதல் இயலும் என்பதனாலும், தமக்கும் அம் மனப்பான்மை மேன்மேலும் ஞான விளக்கத்துக்கு இடஞ் செய்யும் என்பதனாலும் இங்ஙனங் கூறப்பட்டது.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...