027. தவம் - 07. சுடச்சுடரும் பொன்போல்






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "தீயானது சுடச்சு, அதில் உருகி ஓடும் பொன்னுக்குத் தன்னோடு கலந்த மாசு நீங்கி ஒளி மிகுவது போல, தவத்தைச் செய்பவர்க்கு, அத் தவத்தால் வரும் துன்பம் வருத்த வருத்த, தம்மோடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்" என்கின்றார் நாயனார்.

     மனுதரும சாத்திரத்தில், "எப்படி சுவர்ணம் முதலியவற்றி்ன் அழுக்கு, நெருப்பில் காய்ச்சினால் போய்விடுமோ, அப்படியே தேகத்தைச் சார்ந்த இந்திரிய தோஷங்கள் எல்லாம் பிராணாயாமத்தால் போய் விடுகின்றன" என்று சொல்லப்பட்டு இருப்பதற்கு, இத் திருக்குறள் ஒத்துப் போவது காண்க.

     ஒளி என்பது, பொன்னுக்குக் காந்தியும், தவத்தோர்க்கு ஞானமும் ஆகும். காந்தி மிகுந்தோறும் பொன்னுக்கு மாசு நீங்குதல் போல, தவத்தைப் புரிவோர்க்கு ஞானம் மிகுந்தோறும், பாவம் நீங்கும்.

திருக்குறளைக் காண்போம்...

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும், துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல,

     நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும் --- தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.

         ( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தளிவிடுமோ, அன்றிப் புல்லைக் காசு தயை வெள்ளத்து ஓர்
துளிவிடுமோ அறியேன், வன்னி சுடச் சுடரும்பொன்போல்
ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு ஒப்பதாய்
வெளிவிடு மாதவஞ் செய்யேற்கு ஐயோ புகல்வேறில்லையே.

     தீயானது சுடச்சு, அதில் உருகி ஓடும் பொன்னுக்குத் தன்னோடு கலந்த மாசு நீங்கி ஒளி மிகுவது போல, தவத்தைச் செய்பவர்க்கு, அத் தவத்தால் ஒரும் துன்பம் வருத்த வருத்த, தம்மோடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும் என்னும் அருள் வாக்கிற்கு ஒப்ப, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பொன்னைப் போன்ற பெருமானின் அருள் வெள்ளத்தில் ஒரு துளியாவது கிட்டுமோ, அல்லது என்னைத் தள்ளிவிடுமோ என்பதை நான் அறியேன். தவம் புரியாத எனக்கு, அப் பெருமானுடைய திருவடியை அன்றி வேறு புகலிடம் இல்லை.

     தளிவிடுமோ --- தள்ளி விடுமோ (இடைக்குறை) தயை வெள்ளம் --- அருட்பெருக்கு. துளி --- ஒரு சொட்டு. வன்னி --- தீ. மாதவம் செய்யேற்கு --- சிறந்த தவத்தைச் செய்யாத எனக்கு.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம், - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றுஇருள் பாய்ந்தாங்கு, நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.           --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு --- ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவன் தவத்தின் முன் நில்லாது பாவம் --- ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்த தீவினை நில்லாது, விளக்கு நெய் தேய்விடத்து --- விளக்கின் நெய் குறையுமிடத்தில், சென்று இருள் பாய்ந்தாங்கு --- இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை தீர்விடத்து நிற்கும் தீது --- நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.

         இடைவிடாமல் தவத்தைப் புரியவேண்டும் என்றது. விளக்கு என்பது தவம. விளக்கு எரிவதற்குக் காரணமான நெய் என்பது, தவம் நிகழ்தற்குக் காரணமான நல்வினை.

'வெங் கனல் முழுகியும், புலன்கள் வீக்கியும்,
நுங்குவ, அருந்துவ, நீக்கி, நோற்பவர்
எங்கு உளர்?-குலத்தில் வந்து, இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற்பாலதோ ?   ---  கம்பராமாயணம், காட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     குலத்தின் வந்து --- நல்ல குலத்திலே பிறந்து; இல்லின் மாண்புடை --- இல்லறச் சிறப்பைப் பெற்ற; நங்கையர் மனத் தவம் --- பெண்கள் மனத்தால் செய்யும் தவமானது; நவிலற் பாலதோ --- நம்மால் கூறத்தக்க எளிமையானதா. (இம் மங்கையர்களுக்கு முன்); வெங்கனல் முழுகியும் --- கொடிய (ஐந்துவித) நெருப்பில் குளித்தும்; புலன்கள் வீக்கியும் --- (ஓடும்) ஐந்து புலன்களைக் கட்டியும்; நுங்குவ அருந்துவ --- உண்ணும் உணவையும் பருகும் புனலையும்; நீக்கி --- ஒதுக்கிவிட்டு; நோற்பவர் - தவம் செய்பவர்கள்; எங்குளர் --- எங்கே இருக்கிறார்கள்.

    கற்பு மகளிர்க்கு முனிவர்கள் ஒப்பாகார் என்க. 

'பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மைபோல்
நாணம் நோற்றுஉயர்ந்தது, நங்கை தோன்றலால்;
மாண நோற்று,ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காணநோற்றிலன், அவன் கமலக் கண்களால். ---  கம்பராமாயணம், காட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     நங்கை தோன்றலால் --- பிராட்டி உலகில் அவதரித்ததால்; மனைப் பிறவி --- உயர்ந்த குலப்பிறப்பானது; பேண --- மற்றவர்கள் மதிக்கும் படி; நோற்றது --- தவம் செய்தது; பெண்மை போல் --- பெண் தன்மையைப் போல; நாணம் --- (மகளிரின்) நாணமானது; நோற்று உயர்ந்தது --- தவஞ்செய்து சிறப்பைப் பெற்றது (ஆனால்); ஈண்டு --- இந்த இலங்கையில்; இவள் --- இந்தப் பிராட்டி; மாண நோற்று --- மாண்படையத் தவம் செய்து (கற்பைக் காத்து); இருந்த ஆறு எலாம் --- இருந்த பண்பின் முழுமையையும்; அவன் --- அந்த இராமபிரான்;  கமலக் கண்களால் --- தாமரைபோன்ற கண்களினாலே; காண நோற்றிலன் --- காண்பதற்குத் தவம் செய்தானில்லையே.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...