030. வாய்மை - 05. மனத்தொடு வாய்மை





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 30 -- வாய்மை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஒருவன் தனது மனத்தோடு பொருந்த உண்மையைப் பேசுவானாயின், அவன் தவத்தோடு தானத்தையும் செய்பவரினும் மேலானவன்" என்கின்றார் நாயனார்.

     மனத்தோடு பொருந்துதல் என்பது, புறத்தே வேடம் கொண்டு செய்யும் தவத்தினும், அகத்தே மனம் வாக்குத் தூய்மைகளால் செய்யும் தவம் ஆகும்.

     அகத் தவமே மேலானது என்றார்.

     தவமாவது, மனம் பொறிகளின் வழிப் போகாது நிற்கும் பொருட்டு, விரதங்களால் உணவைச் சுருக்குதல் முதலானதைக் குறிக்கும். இது துறவறத்தார்க்கு உரியது.

     தானம் என்பது, அறவழியில் வந்த பொருளைத் தக்கவர்களுக்கு மனம் மகிழ்ந்து கொடுத்தல். இது இல்லறத்தார்க்கு உரியது.

திருக்குறளைக் காண்போம்...


மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     மனத்தொடு வாய்மை மொழியின் --- ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின்,

     தவத்தொடு தானம் செய்வாரின் தலை --- அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன்.

         (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மூவர்அரிச் சந்திரற்கு முன்னின்ற காட்சிபோல்
ஏவர் பெற்றார் மேனாள், இரங்கேசா! - பூவில்
மனத்தொடு வாய்மை மொழியில் தவத்தொடு
தானஞ் செய்வாரில் தலை.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! மேனாள் --- முற்காலத்தில், மூவர் --- மும்மூர்த்திகளும், அரிச்சந்திரற்கு முன் --- அரிச்சந்திர மகாராஜனுக்கு எதிரில், நின்ற காட்சிபோல் --- காட்சி கொடுத்தது போல, ஏவர் பெற்றார் --- யார் அடைந்தார்கள்? (ஆகையால், இது) பூவில் --- இந்தப் பூலோகத்தில், மனத்தொடு --- ஒருவன் தன் மனத்தோடு வாக்கும் பொருந்த, வாய்மை மொழியின் --- உண்மை பேசுவான் ஆனால், (அவன்) தவத்தொடு --- தவத்துடனே, தானம் செய்வாரின் தலை --- தானம் செய்பவரைக் காட்டிலும் சிறந்தவனாவான் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- பொய்யா விரதமே மேலான விரதம்.

         விளக்கவுரை --- விசுவாமித்திரர் மாயத்தால், அரிச்சந்திரன் நாடு நகரங்களை இழந்து, மனைவி மக்களை விற்று, தானும் புலையற்கு அடிமையாய் அல்லல் பட்டும், சத்தியம் தவறாமையால், தவத்தொடு தானம் செய்வாரின் தலைவனானான். ஆகையால், கிடத்தற்கரிய காட்சியாகிய திரிமூர்த்தி தரசனம் கிடைக்கப்பெற்றுக் கடைசியாய்த் தன் நாடு நகரங்களை அடைந்து சுகமாய்ப் புகழோடு அரசாண்டான்.

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

பொங்குபுகழ் வாய்மைப் புனிதவதியார்க்கு அரனார்
செங்கனியை ஈந்தார், சிவசிவா! --- அங்கம்
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரில் தலை.

     காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர். திருக்கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப் பெறுகிறார்.

     முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் பிறந்தார்.[3] சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.

     பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள், பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது ஒரு வணிகர் இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து அனுப்பினார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த சோறு படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

     மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படிக் கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார்.

மனைவியார் தாம்படைத்த
     மதுரம் மிக வாய்ந்தகனி
தனைநுகர்ந்த இனியசுவை
     ஆராமைத் தார்வணிகன்
இனையதுஒரு பழம்இன்னும்
     உளதுஅதனை இடுகஎன
அனையதுதாம் கொண்டுவர
     அணைவார்போல் அங்கு அகன்றார்.


அம்மருங்கு நின்றுஅயர்வார்
         அருங்கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம்மறந்து நினைந்து உற்ற
         இடத்து உதவும் விடையவர்தாள்
தம்மனம் கொண்டு உணர்தலுமே
         அவர் உருளால் தாழ்குழலார்
கைம்மருங்கு வந்து இருந்தது
         அதிமதுரக் கனி ஒன்று.


மற்றுஅதனைக் கொடுவந்து
         மகிழ்ந்து இடலும் அயின்ற அதனில்
உற்றசுவை அமுதினும் மேல்
         பட உளதுஆயிட இதுதான்
முன்தரும் மாங்கனி அன்று
         மூவுலகில் பெறற்கு அரிதால்
பெற்றது வேறு எங்குஎன்று
         பெய்வளையார் தமைக்கேட்டான்.


அவ்வுரைகேட் டலும்மடவார்
         அருள்உடையார் அளித்தி அருளும்
செவ்வியபேர் அருள்விளம்பும
         திறம் அன்று என்று உரைசெய்யார்
கைவரு கற்பு உடைநெறியால்
         கணவன்உரை காவாமை
மெய்வழி அன்று எனவிளம்பல்
         விடமாட்டார் விதிர்ப்பு உறுவார்.


செய்தபடி சொல்லுவதே
     கடன் என்னும் சீலத்தால்
மைதழையும் கண்டர்
     சேவடிகள் மனத்து உறவணங்கி
எய்தவரும் கனிஅளித்தார்
     யார்என்னும் கணவனுக்கு
மொய்தருபூங் குழல்மடவார்
     புகுந்தபடி தனைமொழிந்தார்.


ஈசன்அருள் எனக்கேட்ட
     இல்இறைவன் அதுதெளியான்
வாசமலர்த் திருஅனையார்
     தமைநோக்கி மற்றுஇதுதான்
தேசுஉடைய சடைப்பெருமான்
     திருவருளேல் இன்னமும்ஓர்
ஆசுஇல்கனி அவன் அருளால்
     அழைத்து அளிப்பாய் எனமொழிந்தான்.


பாங்கு அகன்று மனைவியார்
     பணிஅணிவார் தமைப்பரவி
ஈங்குஇது அளித்து அருளீரேல்
     என்உரைபொய் ஆம்என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து
     எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன்கைக் கொடுத்தலுமே
     அதிசயித்து வாங்கினான்.

வணிகனும் தன்கைப் புக்க
         மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயமேல் கொள்ள
         உள்ளமும் தடுமாறு எய்தி
அணிகுழல் அவரை வேறுஓர்
         அணங்குஎனக் கருதி நீங்கும்
துணிவுகொண்டு எவர்க்குஞ் சொல்லான்
         தொடர்வுஇன்றி ஒழுகும் நாளில்.

     முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.

     பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார். சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடி வந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு "கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.

     அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு "இவர் யார்" எனக் கேட்க "வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண், அம்மையே" எனக் கூறி "அம்மையே வருக" என்றழைத்து "வேண்டுவன கேள்" என விளித்தார், அதற்கு அம்மையார்,


இறவாத இன்ப அன்பு
         வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
         பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
         வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போது உன்
         அடியின்கீழ் இருக்க என்றார்.

     சிவபெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து, அவர் வேண்டும் வரம் கொடுத்து, "திருவாலங்காடு என்னும் திருத்தலத்தில் நாம் புரியும் திருநடனத்தைக் கண்டு மகிழ்ந்து. எப்போதும் நம்மைப் பாடுவாய்" என்று அருள் புரிந்தார்.

கூடுமாறு அருள்கொ டுத்துக்
         குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர்
         நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண்டு
         ஆனந்தம் சேர்ந்துஎப் போதும்
பாடுவாய் நம்மை என்றான்
         பரவுவார் பற்றாய் நின்றான்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தல் மாணலாம்...

கைசொல்லும் பனைகாட்டுங் களிற்றுரியார்
         தண்டலையார் காணா போலப்
பொய்சொல்லும் வாய்க்குப் போசனமும்
         கிடையாது, பொருள் நில்லாது,
மைசொல்லும் காரளிசூழ் தாழைமலர்
         பொய்சொல்லி வாழ்வ துண்டோ,
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
         வாழ்வதில்லை மெய்மை தானே.                ---  தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

     சொல்லும் பனைகாட்டும் கை களிற்று  உரியார் தண்டலையைக் காணார் போல --- கூறப்படும் பனையைப் போலும் துதிக்கையினை உடைய யானையின் தோலைப் போர்த்தவரான சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைக் கண்டு வழிபடாதவருக்கு, உணவு கிடைக்காததைப் போல,  பொய் சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது--- பொய் கூறும் வாயார்க்கு உணவும் கிடைக்காது,  பொருள்  நில்லாது --- அவரிடத்திலே உள்ள பொருளும் அழியும், பொருள் அவரிடத்தில் வந்து சேராது, மை சொல்லும் கார் அளி சூழ் தாழை மலர் பொய் சொல்லி வாழ்ந்தது உண்டோ --- மேகம் சூழ்ந்ததைப் போலக் கரிய வண்டினத்தால் சூழுப்பட்ட தாழை மலர் பொய் சொல்லி வாழ்வு  பெற்றதா?  (இல்லை. ஆகையால்) மெய் சொல்லி வாழாதான் பொய் சொல்லி வாழ்வது  இல்லை --- உண்மையைப் பேசி வாழாதவன் பொய் சொல்லி வாழப் போவது இல்லை,  மெய்ம்மை தான் --- இது உண்மையே ஆகும்.

     திருமாலும் பிரமனும் தம்முள் பிணங்கித் தாமை பரம்பொருள் என்று செருக்குக் கொண்ட போது, சிவபெருமான் கொண்டருளிய ஒளிமலை வடிவத்தின் அடியைத் திருமாலும் முடியை  நான்முகனும் காணச் சென்றனர்.  தான் கொண்ட அன்னப் பறவை வடிவத்தைக் கொண்டு மேலும் பறந்து செல்ல முடியாமல் சோர்வுற்று நின்ற பிரமன், சிவபிரான் முடியினின்றும் விழுகின்ற தாழை மலரைக் கண்டான். அது  சிவபிரான் முடியைப் பிரமன் கண்டதாக அவன் வேண்டுகோளின்படி சிவபிரானிடம் பொய்ச் சான்று கூறியது.
பொய் சென்னதால், மணம் நிறைந்த தாழம்பூவானது சிவபெருமானுக்கு ஏற்புடையதாகக் கொள்ளப்படவில்லை. தாழம் பூவானது பொய் சொல்லி, வாழ்வு இழந்தது.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.  --- திருமந்திரம்.

     மனிதனுக்கு வாய் வாய்த்தது இறைவனை வாழ்த்தவும், உண்மையே பேசவுமே. "வாயே வாழ்த்து கண்டாய், மதயானை உரி போர்த்துப் பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். "எந்தை நினை வாழ்த்தத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்" என்றார் வள்ளல் பெருமான்.

மெய்அதைச் சொல்வார் ஆகில்
     விளங்கிடும் மேலாம் நன்மை,
வையகம் அதனைக் கொள்ளும்,
     மனிதரில் தேவர் ஆவார்,
பொய்அதைச் சொல்வார் ஆகில்,
     போசனம் அற்பம் ஆகும்,
நொய்யர் இவர்கள் என்று
     நோக்கிடார் அறிவு உள்ளோரே.

என வரும் விவேக சிந்தாமணிப் பாடல் கருத்தையும் நோக்குக. 

மையல் துறைஏறி மகிழ்ந்து அலர்சீர்
         வாகீசர் "மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்"
         விரவும் சிவசின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
         ஈறுஇன்றி எழும் திருவாசகமும்
கையில்திகழும் உழவாரமுடன்
         கைக்கொண்டு கலந்து கசிந்தனரே. --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     மயக்கத்தைத் தரும் சமண் சமயத் துறையினின்றும் மேல் ஏறி மகிழும் சிறப்புடைய திருநாவுக்கரசர், உள்ளத்தாலும் சொல்லாலும் உடலாலும் பொருந்திய சிவப்பணியைச் செய்பவராய், அதற்கு ஏற்றவாறு பொருந்தும் சிவச் சின்னங்களான திருநீற்றையும் கண்டிகையையும் விளங்கப் பூண்டு, இடையீடில்லாது உள்ளத்தில் தோய்ந்து நிற்கும் திருவருள் உணர்வையும், தடைப்படாது மேன் மேலும் எழும் திருப்பதிகங்கள் பொருந்திய திருவாக்கையும், கையில் விளங்கும் உழவாரப் படையினையும் கொண்டவராய்த் தம் கைத்தொண்டை மனம்கலந்து கசிந்து செய்து வந்தார்.

         குறிப்புரை : மனத்தொடு வாய்மையுடன் மெய்யுற்ற திருப்பணி - மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளாலும் செயத்தக்க திருப் பணி. மனத்தொடு பொருந்திய பணி - தியானம் அறாத உணர்வு. மொழியொடு பொருந்திய திருப்பணி - ஈறின்றி எழும் திருவாசகம். மெய்யொடுபட்ட திருப்பணி - சிவச் சின்னம் விளங்கிட உழவாரப் பணி செய்தமை. `மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை` (குறள்,295) எனும் குறளையும் நினைவு கூர்க.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...