031. வெகுளாமை - 07. சினத்தைப் பொருள்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 31 --- வெகுளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "கோபத்தைத் தனது வல்லமையைத் தெரிவிப்பதான ஒரு குணம் என்று கொண்டவன், அவ் வல்லமையை இழந்து கெடுதல், பூமியில் அறைந்தவனுடைய கையானது, கேட்டில் இருந்து தப்பாததைப் போன்றது" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...


சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு, நிலத்து
அறைந்தான் கை பிழையாது அற்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு --- சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்;

     நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று --- நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தை உறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.

         (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

பெற்றம் உவந்தார் பெருமை மதியாது, தக்கன்
செற்றம் மேல்கொண்டு சிரம் இழந்தான், --- முற்றும்
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்து
அறைந்தான் கை பிழையாது அற்று.

     சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். சிவபெருமான் மீது அவன் கொண்ட சினமே காரணம். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார்; அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்; அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள் எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார். பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்; அக்கினியின் கையை வெட்டினார்; நாமகளின் மூக்கை அரிந்தார்; பிரமன் விழுந்தான்; தக்கன், எச்சன், முதலியவர்கள் தலையை வெட்டினார்; இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான்; மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர், தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத் தலையை வைத்து அவனை உயிர்ப்பித்து அருளினார்.

     தக்கன் சிவபெருமான் மதியாது சினம் கொண்ட காரணத்தால், அவன் கேடு அடைவது தப்பாதாயிற்று.

சந்திரனைத் தேய்த்து அருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட்டு, ச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த,
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற.
உருத்திர நாதனுக்கு உந்தீபற.

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே, ஏடி உந்தீபற
பணைமுலை பாகனுக்கு உந்தீபற.

புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர் கோன்என்றே உந்தீபற.

வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்புஅற உந்தீபற.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்க நின்று உந்தீபற.

என வரும் திருவாசகப் பாடல்களைக் காண்க.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
        

கோபமும், மறனும், மானக் கொதிப்பும்,
     என்று இனைய எல்லாம்,
பாபம் நின்ற இடத்து நில்லாப்
     பெற்றிபோல், பற்று விட்ட;
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல்
     ஆம் செயலின், புக்க
தாபமும் காமநோயும் ஆர் உயிர்
     கலந்த அன்றே.               --- கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.

இதன் பதவுரை ---

     பாபம் நின்ற இடத்து --- பாவம் நிலைபெற்ற இடத்தில்; நில்லாப் பெற்றி போல் --- நிற்கமாட்டாத பெருமைகளைப் போல; கோபமும் மறனும் மானக் கொதிப்பும் --- சினமும், வீரமும், மானத்தால் விளையும் மனக் கொதிப்பும்; என்று இனைய எல்லாம் --- என்னும் இப் பண்புகள் எல்லாம்; பற்று விட்ட - (இராவணனின் காமம் காரணமாக) தொடர்பு விட்டு நீங்கின; தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் --- ஒரு விளக்கு மற்றொரு விளக்கை அடைந்ததென்று சொல்லத்தக்க வண்ணம்; புக்க உள்ளத்தில் நுழைந்த; காம நோயும் தாபமும் --- காம நோயும் அதனால் விளைந்த தவிப்பும்; ஆர் உயிர் கலந்த அன்றே --- (இராவணனின்) அரிய உயிரில் அப்போதே கலக்கலாயின.

     தங்கைக்கு விளைவிக்கப்பட்ட துன்பம் கருதி எழுந்த சினம், வீரம், கொதிப்பு என்பனவெல்லாம் காமத்தால் வெற்றி கொள்ளப்பட்டன.

தன்னை முனிவுற்ற
     தறுகண் தகவிலோனை,
பின்னை முனிவுற்றிடும் எனத்
     தவிர்தல் பேணான்
'உன்னை முனிவுற்று உன்
     குலத்தை முனிவுற்றாய்;
என்னை முனிவுற்றிலை; இது
     என்?' என இசைத்தான். ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.

இதன் பதவுரை ---

     தன்னை முனிவுற்ற --- தன் மீது சினம் கொண்ட; தறுகண் --- வீரம் உடையவனும்; தகவு இலோனை --- பெருமை இல்லாதவனுமான இராவணனை; பின்னை முனிவுற்றிடும் எனத் --- மேலும் தன் மீது கோபம் கொள்ளுவான் என்பதனால்; தவிர்தல் பேணான் --- அறிவுரை கூறாது விலக விரும்பாதவனாய்; 'உன்னை முனிவுற்று --- உன்னோடு நீயே சினம் கொண்டு; உன் குலத்தை முனிவுற்றாய் --- உன் குலத்தோடும் சினம் கொண்டாய்; (உண்மையில்); என்னை முனிவுற்றிலை --- என்னோடு சினமுற்றாய் இல்லை; இது என் ---  ஏன் இவ்வாறு செய்கிறாய்'; என இசைத்தான் --- என்று கேட்டான்.

     உன் சினம் எனக்குச் செய்யும் அழிவினும் உனக்கும் குலத்துக்கும் அழிவு தருவதாகும் என மாரீசன் சுட்டிக் காட்டுகிறான்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...