034. நிலையாமை - 10. புக்கில் அமைந்தின்று





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 34 -- நிலையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில், "வாதம் முதலாகிய நோய்களின் இருப்பிடமாகிய உடம்புகளுள் ஒதுக்குக் குடி இருந்தே வந்த உயிருக்கு, எப்போதும் இருப்பதாகிய ஒரு நிலையான வீடு இதுவரையில் அமைந்தது இல்லை போலும்" என்கின்றார் நாயனார்.

     உயிரானது வாதம் முதலான நோய்கள் அடங்கி இருக்க அமைந்த காலத்தில் உடம்பில் இருந்தும், அவை முற்றிய காலத்தில் உடம்பை விட்டுப் போயும், ஓர் உடம்பிலும் நிலைபெறாமல் வருவதும் போவதும் ஆக இருப்பதால், ஒதுக்குக் குடி என்றார். தனக்கென ஒரு வீடு இருந்தால், ஒதுக்குக் குடி இராது. எனவே, உயிரோடு கூடி நிலைத்து நிற்பது ஆகிய ஓர் உடம்பும் இல்லை என்பது பெறப்படும்.

     "நாள் என ஒன்று போல் காட்டி" என்னும் திருக்குறளால், உடல்களுக்கு உண்டான நாள்கள் கழிகின்ற வகையும், "நாச்செற்று விக்குள் மேல்" என்னும் திருக்குறளால், வாழ்நாள் கழிந்தால் உண்டாகும் நிலைமையும், "நெருநல் உளன் ஒருவன்" என்னும் திருக்குறளால், அந்த உடல்கள் ஒவ்வோரிடத்தில் உண்டாகி, பிறந்த போதே சாதலும், "ஒரு பொழுதும்" என்னும் திருக்குறளால், எடுத்து வந்த எந்த உடலும் ஒரு கணப் பொழுதாவது நிலைத்து இருக்கும் என்று தெளிந்து அறிய முடியாமையும், "குடம்பை தனித்து ஒழிய" என்னும் திருக்குறளால், உடம்பை விட்டு உயிர் நீங்கிய பிறகு வேறு ஓர் உடல் கிடைக்கும் வகையும், "உறங்குவது போலும்" என்னும் திருக்குறளால், உடல்களுக்கு இறப்பும் பிறப்பும் மாறிமாறி வரும் என்பதும், "புக்கில் அமைந்தின்று" என்னும் இத் திருக்குறளால், மாறி மாறி வந்த உடல் எதுவும் உயிருக்கு உரியன அல்ல என்பதும் அறியப்படும்.


திருக்குறளைக் காண்போம்...

புக்கில் அமைந்தின்று கொல்லோ, உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு,

     புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!

         (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,  பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடு கூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது.

         (இவை ஏழு பாட்டானும்,  முறையே யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவை ஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று, இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.)


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

சொல்லிடில் எல்லை இல்லை,
     சுவையிலாப் பேதை வாழ்வு,
நல்லதோர் கூரை புக்கு
     நலமிக அறிந்தேன் அல்லேன்,
மல்லிகை மாட நீடு
     மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண்டு இயங்கும் ஆரூர்
     அப்பனே அஞ்சி னேனே.         ---  சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

     மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம் , வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , யான் , ஓட்டைக்குடில்களுள் துச்சி லிருந்துவாழ்ந்த , பேதைக்குரித்தாய , துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின் , அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை . அங்ஙனமாகவும் , நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .


பிச்சைபுக்கு உண்பான் பிளிறாமை முன்இனிதே;
துச்சில் இருந்து துயர்கூரா மாண்பு இனிதே;
உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.       ---  இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     பிச்சை புக்கு --- பிச்சைக்குச் சென்ற, உண்பான் --- (இரந்து) உண்பவன், பிளிறாமை --- கோபியாமை, முன் இனிது --- மிக வினிது; துச்சில் இருந்து --- ஒதுக்குக் குடியிருந்து, துயர் கூரா --- துன்ப மிக்கடையாத, மாண்பு --- மாட்சிமை, இனிது-; உற்றபேர் ஆசை கருதி --- மிக்க பேராசையைக் கருத்துட்கொண்டு , அறன் ஒரூஉம் --- அற வழியினின்று நீங்குதற்கேதுவாகிய, ஒற்கம் --- மனத்தளர்ச்சி, இலாமை --- இல்லாதிருத்தல், இனிது.

"இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி"                   (குறள் - 1060)

என்றபடி ஈவானுக்கு வேண்டிய பொழுது பொருளுதவா தொழிதலும்உண்டென்பதற்குத் தன் வறுமையே சான்றாத லறிந்து இரப்பவன் வெகுளாமை வேண்டுமென்பார் ‘பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே' என்றார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவாதலை

"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த வுயிர்க்கு "                 (குறள் - 340)

என்பதனாலும்,

"நீங்க அருந் துயர்செய் வளிமுதல் மூன்றன்
நிலை உளேன், வை துரந்திடு முன்
வாங்கி, நின் தனிவீட்டு உறைகுவான் விரும்பி
வந்தனன், நின்குறிப்பு அறியேன்"

என்னும் சோணசைலமாலைப் பாடலாலும் கண்டு கொள்க.

மிக்க பேராசை நிரம்பும் வரையில் பேரிடரும், நிரம்பாதாயின் பேரிடரும் நிரம்பினும் முடிவிற் பேரிடரும் விளைத்தலின் அதனைக் கருத்துள்கொண்டு.

"சிறப்பு ஈனுஞ் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு "         (குறள் - 31)

என்றபடி இம்மையினும் மறுமையினும் இன்பம் பெரிதும் தந்து அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீட்டையும் தரும் அறத்தைக் கைவிடுதல் அடாது என்பார், ‘உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது என்றார்.


எக்காலும் சாதல் ஒருதலையே, யான் உனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன்,--மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தல் மேல் சார்தல் தலை.   --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     (நெஞ்சே) எக்காலும் சாதல் ஒருதலையே --- எப்பொழுதாவது இறப்பது உறுதி, யான் உனக்கு புக்கில் நிறைய தருகிலேன் --- நான் உனக்கு அழியும் தன்மைத்தாகிய உடலை மேலும் மேலும் கொடுத்துக் கொண்டிரேன், மிக்க அறிவினை வாழ்த்தி --- உயர்ந்தோனாகிய அருகக்கடவுளைத் துதித்து, அடவி துணையா --- வனத்தைத் துணையாகக் கருதியடைந்து, துறத்தல்மேற் சார்தல் தலை --- துறவறத்தினை யடைந்து வாழ்தல் சிறந்ததாகும்.


வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது,
புனைவன நீங்கிறல் புலால்புறத்து இடுவது,
மூத்துவிளிவு உடையது, தீப்பிணி இருக்கை,
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,
புற்று அடங்கு அரவில் செற்றச் சேக்கை,
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது,
மக்கள் யாக்கை இது என உணர்ந்து,
மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்.   ---  மணிமேகலை, பளிக்கறை புக்க காதை.

இதன் பதவுரை ---

     வினையின் வந்தது வினைக்கு விளைவாயது --- கன்மத்தால் உண்டானது கன்மத்திற்கு விளைநிலமாக உள்ளது. புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது --- புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள் நீங்கப் படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது, மூத்து விளிவுடையது --- முதுமையடைந்து சாதலையுடையது, தீப் பிணி இருக்கை ---கொடிய நோய்கட்கு இருப்பிடமாகவுள்ளது, பற்றின் பற்றிடம் --- பற்றுக்களுக்குப் பற்றும் இடமாயது, குற்றக் கொள்கலம் --- குற்றங்கட்குக் கொள்கலமாய் உள்ளது, புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை --- பாம்பு அடங்கியுள்ள புற்றைப்போலச் செற்றத்திற்குத் தங்குமிடம் ஆனது, அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது --- அவலம் முதலிய நான்கும் நீங்காததாகிய உள்ளத்தைத் தன்னிடத்துடையது, மக்கள் யாக்கை இது என உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் --- மேலோனே மக்கள் உடம்பு இத்தகையது என்பதனை அறிந்து இதனைப் புறமறியாகப் பார்ப்பாயாக.




No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...