027. தவம் - 06. தவம் செய்வார்







திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "தமது கருமத்தைச் செய்பவர் என்போரே, துறந்து தவத்தைச் செய்பவர் ஆவார். அல்லாது பொருள் இன்பங்களைச் செய்வார், அவைகளிடத்து ஆசையை வைத்து தமக்குக் கேடு செய்பவர் ஆவார்" என்கின்றார் நாயனார்.

     அநித்தியாமாய், வருகின்ற அத்தியாத்மிக துக்கம், அதிபூத துக்கம், அதிதைவ துக்கம் என்னும் மூவகைத் துன்பத்தை உடையதாய், உயிரின் வேறாக உள்ள உடம்பிற்கு வருத்தம் வரும் என்று விடாமல், தவத்தைச் செய்ய, பிறப்பு, பிணி, மூப்பு, இறப்புக்களால் அநாதியாகத் துன்பத்தை அடைந்து வருகின்ற உயிரானது, ஞானம் உண்டாகப் பெற்று, வீடுபேற்றை அடையும். எனவே, "தவம் செய்வார் தம் கருமம் செய்வார்" என்றார் நாயனார். கணப் பொழுதில் அழிவாதகிய சிற்றின்பத்தை விரும்பி, பல பிறவிகளிலும் துன்பத்தை அடையத்தக்க பாவத்தைச் செய்து கொள்ளுவதால், அல்லாதாரை, "ஆசையுள் பட்டு அவம் செய்வார்" என்றார்.

ஆதி ஆன்மிக துக்கம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.

     அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா விலங்குஅலகை தேள்எறும்புசெல்முதல்நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.

ஆதிபௌதிக துக்கம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.

     அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

பனியால் இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில் பவுதிகம் ஆகும்.

ஆதி தைவிக துக்கம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள்.

     அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்.

     தன்னை அடைந்தாரைத் தனது வல்லமைக்கு ஏற், வேறு செயலில் ஈடுபடாதவாறு பிணிப்பதால், பிணி எனப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்...

தவம் செய்வார் தம்கருமம் செய்வார், மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு.

இதற்குப் பரிமேழகர் உரை ---

     தம் கருமம் செய்வார் தவம் செய்வார் --- தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார்,

     மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் --- ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்.

         (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரிய புராணத்துள் வரும் அடியார்களில் ஒருவராய, கோச்செங்கண் சோழ நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியருளிய ஒரு பாடல்...

சிலந்தியாய் நூல்கோயில் செய்த செங்கணான், பின்
தலங்கள்தொறும் கோயில் சமைத்தார் - நலம்கூர்
தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

         சோழ நாட்டிலே, காவிரிக் கரையிலே ஒரு தீர்த்தம் உண்டு. அதன் பெயர் சந்திர தீர்த்தம். அதன் அருகே ஒர் அழகிய வனம் இருந்தது. அவ் வனத்தில் ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அது, ஒரு வெள்ளானைக்குப் புலப்பட்டது.

         அந்த யானை துதிக்கையால் நீரை முகக்கும்.  சிவலிங்கத்தை அபிடேகம் செய்யும். மலரைச் சாத்தும்.  இவ்வாறு நாள்தோறும் அந்த யானை சிவபெருமானை வழிபட்டு வந்தது. அதனால், அத் திருப்பதிக்குத் "திரு ஆனைக்கா" என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.

         அங்கே ஞான உணர்வு உடைய ஒரு சிலந்தியும் இருந்தது.  சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை அச் சிலந்தி கண்டது.  அதைத் தடுக்கும் பொருட்டு, அச் சிலந்து, தனது வாய் நூலால் மேல்கட்டி அமைத்தது. பூசைக்கு வரும் வெள்ளானை, அம் மேற்கட்டியைக் கண்டது. அநுசிதம் என்று அதனை அழித்தது.  சிலந்தி அதைப் பார்த்து, துதிக்கை சுழன்றமையால் விதானம் அழிந்தது போலும் என்று கருதி, மீண்டு விதானம் அமைத்தது.  அடுத்த நாளும் யானை விதானத்தை அழித்தது. சிலந்திக்குச் சினம் மூண்டது. யானையின் துதிக்கயுள் புகுந்து கடித்தது.  யானை விழுந்தது. தும்பிக்கையை நிலத்தில் மோதி மோதி இறந்தது. சிலந்தியும் மாண்டது. சிலந்தியின் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் யானைக்குச் சிவகதி வழங்கினார். சோழர் குலத்தில் பிறக்குமாறு சிலந்திக்கு அருள் செய்தார்.

         சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர் இருந்தார். அவர் தம் மனைவியார் கமலவதியார். இருவரும் தில்லை சேர்ந்து, ஆண்டவனை வழிபட்டுக் கொண்டு இருந்தனர்.  கமலவதியார்க்குப் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது. அப் பேறு குறித்து அம்மையார் தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம். தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார் கருவுற்றார். அக் கருவில் திருவானைக்காச் சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.

         கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம் வந்தது. "பிள்ளை இப்பொழுது பிறத்தல் கூடாது. இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின், அது மூன்று லோகத்தையும் ஆள்வதாகும்" என்று காலக் கணக்கர்கள் சொன்னார்கள். அவ் உரை கேட்ட கமலவதியார், "அப்படியானால், என்னைத் தலை கீழாகக் கட்டுங்கள்" என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது. ஒரு நாழிகை கழிந்தது. பிள்ளை பிறந்தது. காலம் தாழ்த்துப் பிறந்தமையால், குழந்தை சிவந்த கண்ணை உடையதாயிருந்தது.  அதைக் கண்ட அன்னையார், "என்னே, கோச்செங்கண்ணானோ?" என்று சொல்லிக் கொண்டே இறந்தார்.

         சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். தக்க வயதில் பிள்ளைக்கு முடி சூட்டினார். பின்னே, அவர் தவநெறி நின்று சிவனடி சேர்ந்தார்.

         கோச்செங்கண் சோழருக்கு முன்னைத் தவ உணர்வு முகிழ்த்து இருந்தது. அவர், யானை புகாதபடி மாடம் அமைந்த திருக்கோயில்கள் கட்டுவதில் கண்ணும் கருத்தும் உடையவராய் இருந்தார். தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்று, அங்கே திருக்கோயில் அமைத்தார். அமைச்சர்களைக் கொண்டு சோழநாட்டிலேயே பல திருக்கோயில்களைக் கட்டுவித்தார். எழுபது மாடக் கோயில்களை அவர் சமைத்தார். இவற்றில் திருமால் கோயில்களும் அடங்கும். இதனை ஆழ்வாரும் சிறப்பித்து உள்ளார். அவைகளுக்குக் கட்டளைகளும் முறைப்படி அமைக்கப்பட்டன.

         கோச்செங்கண் சோழ நாயனார் தில்லை சேர்ந்தார்.  தில்லைக் கூத்தனை வழிபட்டார். தில்லைவாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். இவ் வழியில் திருத்தொண்டுகள் பல செய்து நாயனார், சிவபெருமான் திருவடி சேர்ந்தார்.

         தம் கருமம் செய்வாராவார் துறந்து தவம் செய்வார்.  அவரை ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார் அவற்றின்கண் ஆசையாகிய வலையுள் பட்டுத் தமக்குக் கேடு செய்வார் என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

     அடுத்து, அதே "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், பெரியபுராணத்துள் வரும் உருத்திர பசுபதி நாயனார் வரலாற்றை வைத்துப் பாடப்பட்டுள்ள ஒரு பாடல்...

உருத்திரமே சொல்லி, உதகத்து உள்ளே நின்று,
உருத்திர பசுபதியார் உற்றார் - திருத்தாள்,
தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றுஅல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

         சிவபெருமானிடத்து இடையறாத மெய்யன்போடு உருத்திரமந்திரத்தைத் தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய நீரிலே நின்றுகொண்டு ஐம்புலன்களை அடக்கி, தியானம் செய்து ஓதினமையால் முத்தி பெற்றவர் உருத்திர பசுபதி நாயனார். உருத்திர மந்திரத்துக்கு உரியவர் தமது வாணாளை வீணாளாகக் கழியாமல் சிவனை மறவாத சிந்தையோடும் நியமமாக அதனை ஓதக்கடவர். வேதம் 4, வேதாங்கம் 6, நியாயம் மீமாஞ்சை, மிருதி, புராணம் முதலிய உபாங்கம் ஆகிய பதினான்கு வித்தைகளினுல்ளும் வேதமே மேலானது. வேதத்தினுள்ளும் உருத்திரைகாதசினி மிக மேலானது. அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது. அதினுள்ளும் சிவ என்னும் இரண்டு எழுத்தே மேலானது. இவ்வாறு சிவதத்துவ விவேக விருத்தியில் கூறப்பட்டது. வேத புருஷனுக்கு உருத்திரம் கண்ணும். இதனுள் இருக்கின்ற பஞ்சாக்கரம் கண்மணியுமாம். இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்தில் காண்க. 

         தங்கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார்.  அவரை ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார் அவற்றின்கண் ஆசையாகிய வலையுள் பட்டுத் தமக்குக் கேடு செய்வார் என்றார் திருவள்ளுவ நாயனார்.

         அநித்தமாய், மூவகைத் துன்பத்ததாய், உயிரின் வேறாய  உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்யப் பிறப்பு, பிணி, மூப்பு, இறப்புக்களால் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானத்தால் வீடுபேற்றை அடையும்.  ஆதலால், சவம் செய்வார் தங்கருமம் செய்வாராயினார்.

         உதகம் --- நீர். திருத்தாள் --- திருவடி. மற்று என்றது பொருள் இன்பங்களை. அவம் --- கேடு.


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடு என்று எண்ணித்
தலையாயார் தம் கருமம் செய்வார் --- தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.               --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி --- நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து, தலையாயார் --- சிறந்தவர்கள், தம் கருமம் செய்வார் --- தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள், தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் --- கற்று முடிதலில்லாத இலக்கண நூலும் கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரை விட, பேதையார் இல் --- அறிவிலாதவர் பிறர் இல்லை.

         இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றுங் கற்றுக் கொண்டிராமல், நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும்.

     முதலில் நிலையாமை கூறினமையின், நோய் மூப்புச் சாக்காடு என்பன அவற்றால் வருந் துன்பங்களை உணர்த்தி நின்றன. தவம் உயிர்க்குரிய முயற்சியாதலின், தம் கருமம் எனப்பட்டது. "தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்" என்னும் பெருநாவலர் திருமொழியும் இங்கு நினைவு கூரற்குரியது.

     நல்வினை செய்யாமல் தீவினை செய்வார் கடையானவரும், மறுபிறவியின் நற்பயன் கருதி நல்வினை செய்வார் இடையானவரும் ஆகலின், பிறவியையே அஞ்சிப் பயன் கருதாது, தம் கடமையென்று கடைப்பிடித்துத் தவஞ்செய்வார் தலையானவரானார்.

     கற்கக் கற்கத் துணிவு பெறாமல் பல்வேறு ஐயங்களுடன் முடிவின்றிச் செல்லுதலின், ‘தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும்' என்றார். ‘கலகல கூஉந் துணைல்லால்'  என்றலின், இலக்கணம் இங்கே ‘சத்தம்' என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது;

     இலக்கண நூல் உணர்ச்சியே நல்ல கல்வித் திறமாதலாலும் அக்கருவிக் கல்வியைத் தக்கவாறு கற்றுக் கொண்டு உடனே மெய்யுணர்விற் செல்லுதல் வேண்டுமாதலானும் ‘சத்தம்' என்பதையும், நடப்பன நடக்குமென்று துணிந்து தவமுயலாமல் வாழ்நாள் நலங்களையே மேலும் மேலும் விரும்பிக் கோள் நூலையே அலசிக் கொண்டிருத்தல் நன்றாகாதாதலால் ‘சோதிடம்' என்பதையுங் குறித்தார்.

இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்,
தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல்,
குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ? ---  கம்பராமாயணம், மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

     இழைத்த தொல் வினையையும் --- ஒருவன் செய்த பழமையான வினைகளின் பயன்களையும் ;  கடக்க எண்ணுதல் --- தாண்டிச் செல்லக் கருதுவது ;  தழைத்த பேர் அருள் உடைத் தவத்தின் ஆகுமேல் --- மிகுந்த பெரிய அருளையுடைய தவத்தினால் உண்டாகுமானால், (அத்தவத்தினைச் செய்யாது) ;  குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி --- இனியவற்றைக் கூட்டிச் சேர்த்த அமுதத்தைக் கொண்ட வட்டிலை ஒதுக்கி ;
வேறுஅழைத்த தீ விடத்தினை --- அதற்கு மாறாகச் சொல்லப் பட்ட கொடிய நஞ்சினை ;  அருந்தல் ஆகுமோ --- நுகர்தல் தகுமோ? (தகாது)

     அமுத வட்டிலை ஒதுக்கிவிட்டுத் தீவிடத்தினை நுகர்தல் தகாதது போலத் தவத்தினை விடுத்து அரச வாழ்வில் மூழ்கியிருத்தல் தகாது என்பது கருத்து. தவத்தினைச் செய்யாமல் அரச வாழ்வை மேற்கொண்டிருத்தல் என்னும் பொருளினைச் சொல்லாமல் உவமையை மட்டும் கூறியதனால் இது ஒட்டணி ஆகும். கோரம் - வட்டில். 


உடம்பும் கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்துபின் செல்லாமை கண்டும்,--அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள்.       ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     உடம்பும் --- உடலும், கிளையும் --- சுற்றமும், பொருளும் --- செல்வமும், பிறவும் --- மனை முதலியனவும், பின்தொடர்ந்து செல்லாமை கண்டும் --- தம்மை உடையவன் இறந்தவிடத்து அவனைப் பின்பற்றிச் செல்லாதிருத்தலைப் பார்த்தும், அடங்கி ---மனமொழி மெய்களால் அடங்கி, தவத்தோடு தானம் புரியாது ---தவத்தினையும், தானத்தினையுஞ் செய்யாமல், வாழ்வார் ---வாழ்கின்றவர்களுக்கு, கழிகின்ற நாள் --- கழிகின்ற நாட்கள், அவத்தம் --- வீணேயாகும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...