முருகன் திருவடி பட்ட இடம்

 


முருகன் திருவடி பட்ட இடம்

-----

 

     அருணகிரிநாதப் பெருமான் முருகன் என்னும் குழந்தையை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டிக் கொண்டு வருகிறார். குறிஞ்சிக் கிழவன் என்று பெயர்சொன்னாலும்குருத்தைப் போலப் பச்சிளம் குழந்தையாகத் தொட்டிலில் படுத்து விளையாடிப் பாலுக்காக அழுவதைச் சொன்னார். பின்பு அவனது இடையில் கட்டிய  கிண்கிணியில் ஒலி எப்படி எதிரொலியை எழுப்பியது என்று சொன்னார். அதற்குப் பிறகு முருகன் தவழ்ந்து உட்கார்ந்து சப்பாணி கொட்டிய பன்னிரண்டு கைகளை உடையவன் என்று கூறினார். முருகக் குழந்தை இப்போது நடக்கத் தொடங்கி இருக்கிறான். அக்குழந்தை அடி எடுத்து வைக்கும்போது நடந்தவை பற்றிக் கூறுகிறார்.

 

     அருணகிரிநாதர்ஒரு கருத்தைச் சொல்ல வரும்போது அதை மாத்திரம்  நேர்முகமாகச் சொல்லாமல்சுற்றிச் சூழ இருக்கிற விடயங்களையும் சொல்லி அழகுபட விளக்குவார். ஒன்றைச் சொல்லுகையில் அதற்குத் தொடர்பு உடைய வேறு பலவற்றைச் சொன்னால் அழகாக இருக்கும். தங்கத்தால் செய்த மாலையில் வைரத்தை வைத்துக் கட்டினால் அழகு கூடும். அந்த வகையில் முருகப் பெருமான் அடிஎடுத்து வைத்தான் என்று சொல்ல வரும்போது அவனுக்கு முன்னாலே அடி எடுத்து  வைத்தவர் என்னும் பெருமையை உடைய முருகனுடைய மாமனாகிய திருமாலை நினைக்கிறார். திருமால் தமது  பெரிய திருவடியால் மண்ணையும் விண்ணையும் அளந்தவர்.

 

     அவருடைய திருமருகராகிய முருகப் பெருமானும் தன்னுடைய சிறிய அடிகளால் மூன்றடி வைத்தான். அருணகிரிநாதர் இந்த இரண்டையும்சேர்த்துச் சொல்லுகிறார். "படி மாவலிபால் மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும்பெருமான்" என்று திருமாலைக் குறித்துப் பாடுகிறார். வாமனாவதாரத்து நிகழ்ச்சி இது. 'மூன்று அடி மண் தந்தேன்என்று மகாபலி சொன்னவுடனே பெருவடிவை எடுத்துக்கொண்டுபூவுலகத்தைத் தம்முடைய பேரடியினால் ஓர் அடியாகவும்வானுலகத்தை ஓர் அடியாகவும் அளந்துவிட்டுமூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார் திரிவிக்கிரமர். மாபலிச் சக்ரவர்த்தியிடம் அவர் வரும் போது வாமனராககுறிய வடிவினராக வந்தார். தம்முடைய உடம்பை மிகவும் குறுக்கிக் கொண்டுபார்ப்போர் அருவருத்து வெறுத்து ஒதுக்கும்படியாகக் கூனிக் குறுகி வந்தார். 

 

     பல் எல்லாம் தெரியக் காட்டிப்  பிறரிடத்தில் கையை நீட்டி இரத்தல் இழிவான செயல். அப்படி இரக்கிறவன் எத்தகைய தைரியமும்பராக்கிரமும் உடையவனாக இருந்தாலும் கேட்கும்போது கூனிக் குறுகிப் போவான். தானம் வாங்கப் போன  திருமால் தம்முடைய நெடிய உருவத்தோடு போகவில்லை. சாதாரண மனிதனது உருவத்திரும் போகவில்லை. மிகக் குட்டையானபெற்றவரும் வெருக் கொள்ளுகின்ற வாமன உருவத்தோடு சென்றார். கடவுள் எந்த விளையாட்டைச் செய்தாலும் அதில் ஒரு நீதி இருக்கும். 

 

     வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது எதுஎன்று கேட்டால்அந்த வறுமையைப் போல்வறுமை என்பதே துன்பத்தினைத் தருவது ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பதைப் போல இழிவு தருவது வேறு ஒன்றும் இல்லை. எனவேயாசகத்திற்கு என்று போகும்போது திருமாலின் நெடிய உருவமே குறுகிப் போனது. பிறரிடம் கையை நீட்டி யாசகம் பண்ணுகிறவர்கள் கூனிக்  குறுகிப் பல்லை இளிக்கும் அவலநிலையை அடைவார்கள் என்ற தத்துவத்தை இது உணர்த்தும். உலகத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த துன்பத்தை அளித்து வந்த மகாபலியை அடக்கவே அவர் போனார். அவனிடத்தில்,  'மூன்றடி மண்ணைத் தாஎன்று கேட்டார். உலகத்தோருக்கு எல்லாப் பொருளையும்கொடுக்கும் வள்ளலாகிய திருமால்எல்லாப் பொருள்களையும் தம்மிடத்திலேயே  வைத்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும்மாபலியிடம் அவர் கேட்டது யாசகம்தான்.  இல்லாதவன் கேட்பது  இயற்கை. அவன்கூட இல்லை என்று சொல்லிப் பிறரிடம் சென்று கேட்கக் கூடாது என்று திருவள்ளுவர் கூறுவார். இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது வழங்குதலே மாண்பு. அப்படிக் கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுத்தலே மிக உயர்ந்தது. 

 

"'என இரத்தல் இழிந்தன்றுஅதன் எதிர்,

'ஈயேன்என்றல் அதனினும் இழிந்தன்று;

'கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்றுஅதன் எதிர்,

'கொள்ளேன்என்றல் அதனினும் உயர்ந்தன்று.."

 

என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று. 

 

     "ஈ என இரத்தல் இழிந்தோன் கூற்று" எனச் சொல்லப்பட்டு உள்ளதால்ஒருவனிடம் சென்று எனக்குத் தருவாயாக என்று இரப்பது இனிவானது.அப்படி ஒருவன் தனிடம் வந்து கேட்டபோதுஇல்லை என்று சொல்லுதல் அதனினும் இழிவானது. தம்மிடத்து வந்தவர் இல்லை என்ற சொல்லைச் சொல்லும் முன்பாகவே அவருடைய முகக் குறிப்பை உணர்ந்துஇதனைக் கொள்வாயாக என்று கொடுப்பது உயர்ந்தது. தம்மிடத்து  ஒன்று இல்லாத நிலையிலும்தமக்கு ஒருவர் ஒன்றைக் கொடுத்தாலும்,கொள்ளேன் என்று சொல்லி மறுத்தல்அந்தக் கொடையினும் உயர்வானது.

 

     பொல்லாதவர்களிடத்தும் சில நல்ல குணங்கள் இருக்கும். ஒருவன் ஒழுக்கம் தவறியவனாக இருப்பான். ஆனால் யார் கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பு  அவனிடம் இருக்கும். இந்த வகையைச் சேர்ந்தவன்தான் மாபலி. வாமன உருவத்தில்  திருமால்  வந்திருக்கிறார் என்பதை அவன் அறியவில்லை. அவர் கேட்ட  'மூன்றடி மண் தருகிறேன்என்று சொன்னான். ஆனால்,அவனுடைய குரு சுக்கிராசாரியாருக்கு வாமனராக வந்தவர் யார் என்று தெரியும். அவர் ஞானம் உடையவர். "மாபலியேவாமனராக வந்திருப்பவர் யார்  என்று தெரியாமல்கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாயே. முடியாது என்றுசொல்லி விடுஎன அவனைத் தடுத்தார். "நான் சொன்ன வாக்கை மீறமாட்டேன்என்று சொல்லி விட்டான் மகாபலி. அப்பொழுதும் சுக்கிராசாரியாருக்கு மனம் வரவில்லை. அவன் தண்ணிர்  வார்க்க எடுத்த கிண்டியின் வாயில் ஒரு சிறு வண்டைப் போல நுழைந்து கொண்டுதண்ணீர் கீழே விழாமல் தடுத்தார். வாமனர் தம் கையில் வைத்திருந்த தர்ப்பையை எடுத்து அதன் துவாரத்தின் வழியே குத்தினார். அதனால் சுக்கிராசாரியார் ஒருகண்ணை இழந்தார். நல்ல ஞானம் படைத்த சுக்கிராசாரியாருக்கு அசுரனாகிய மாபலியைத் திருத்துகிற ஆற்றல் இல்லை. மாபலியின் அசுரத் தன்மை அவருக்கு வந்துவிட்டது. நல்லவர்களிலும் சிலர்,சேர்க்கையினால் இப்படித் தான் கெட்டுப்போவார்கள் என்பதை இது காட்டும்.சில நல்லவர்கள் எங்கே இருந்தாலும்அந்த இடத்தில் தாம் கெட்டுப் போகாமல் இருப்பார்கள். இது அவர்களின் மனத் தின்மையைப் பொறுத்தது. ஒருவன் மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுக்கும்போது அதைக் கொடுக்காதே என்று  தடுக்கக் கூடாது என்பது சுக்கிராசாரியாருக்குத் தெரியவில்லை. 

 

        கொடுப்பதைத் தடுப்பவன் என்ன கதியை அடைவான் என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார்."கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும்.” என்பது திருக்குறள். கம்பரும் இராமாயணத்தில் இந்த்த் திருக்குறள் வலியுறுத்திப் பாடுகிறார்.

 

"எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோதகைவுஇல் வெள்ளி!

கொடுப்பது விலக்கு கொடியோய்உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்"

 

என்பது கம்பராமாயணம்.

 

     சுக்கிராசாரியார்மாபலி கொடுப்பதைத் தடுக்கின்ற பெரியபாவத்தைச் செய்தார். இரண்டு கண்ணும் இருக்கும் மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவுஅந்த அசுரகுருவுக்கு இல்லை.ஆகையால்வாமனர்ஒரு கண்ணைக் குத்தி விட்டார்.

 

     மாபலி நீர் வார்த்துமூன்றடி மண் தந்தேன்என்று சொன்னான். உடனே வாமனருடைய திருவுருவம் பெரிதாகி விட்டது. பெருவடிவத்தை ஏற்றுக் கொண்டவுடன்  தம்முடைய ஒர் அடியாலே பூவுலகத்தை அளந்தார். மற்றோர் அடியாலே வானுலகத்தைஅளந்தார். மூன்றாவது அடியால் அளக்க ஒன்றும் இல்லை. 'நீ வாக்களித்தபடி மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?' என்று கேட்டார். அப்போது மாபலி தன்தலையைக் காட்டினான். திருமால் அவன் தலையின் மேலே தம்முடைய திருவடியை எடுத்து வைத்தார். இறைவனது திருவடி சம்பந்தம் கிடைத்த மாத்திரத்திலே அவனுக்குப் புகழ்உண்டாகி விட்டது. 'எம்பெருமானே!  இன்றைக்குத்தான் என் அகத்தில் நீங்கள் விளக்கு ஏற்றி வைத்தீர்கள். இன்றைத் தினத்தில் உலகிலுள்ள மக்கள் என் நினைவாக தங்கள் அகங்களில் விளக்கு ஏற்றி வைத்துக் கும்பிடட்டும்என்று வேண்டிக் கொண்டான். மாபலியின் அகத்தில் விளக்கு ஏற்றப்பட்ட நாள் எல்லா மக்களின் அகத்திலும் விளக்கு ஏற்றி வைக்கப்படும் கார்த்திகை நாளாக விளங்குகிறது.  முருகன் பெருமையைக் கூற வந்த அருணகிரிநாதர்பாடலின் இடையே இந்த அற்புதமான நிகழ்வைக் காட்டி நம்மை நல்வழிப்படுத்துகிறார். 

 

     "படி மாவலிபால் மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான்". படி என்பது நிலம்.  அப்படிச் சேவடியை நீட்டிய பெருமானுக்கு மருமகன்தங்கை பிள்ளைஆகிய முருகன். மாமாவின் பேரடிபூவுலகம்வானுலகம்மாவலியின் தலை ஆகிய மூன்றையும் அளந்தது. மருகன் ஆகிய முருகனின் சிற்றடியும் மூன்று பொருளை அளந்தது."தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்,என் பாஅடி ஏட்டிலும் பட்டதன்றோ?என்கிறார் அருணகிரிநாதர்.

 

     முருகனுடைய சிற்றடி மயில் மேலே பட்டது.  மயில் வாகனம் வைத்துக் கொண்டிருக்கிற பெருமான் அதைப் பெருமைக்காக  வைத்துக் கொள்ளவில்லை. தன்னை வழிபடும் அடியார்கள் அழைப்பதற்கு முன்னே ஒடிச் சென்று அருள் செய்வதற்காக வைத்திருக்கிறான். 'நீலம்கொள் மேகத்தின் மயில் மீதே,நீ வந்த வாழ்வைக் கண்டு அதனாலே மால்கொண்ட பேதை'  என்று ஒரு திருப்புகழ் கூறும்.  'இறைவனேநான் எவ்வாறு உனது அருள்பெறப் போகிறேன்என ஏங்கினாள் ஒரு பெண். முருகன் மயில் வாகனத்தில் வந்து அன்பர்களின் வீட்டு வாசலில் இறங்கினான். தேவலோகத்தில் இருப்பவன்  பூலோகத்திலுள்ள சிற்றுயிர்களுக்கு அருள் செய்வதற்காகவே மிக வேகமாக ஓடிவரும் மயிலை வாகனமாக வைத்திருக்கிறான். ஆகவேஅவன் மேல் காதல் கொண்டால் அது நிறைவேறும் என்று அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை வந்தது. இங்கே பெண் என்று குறிப்பிட்டது பக்குவம் அடைந்த ஆன்மாவை. பக்குவப்பட்ட ஆன்மா ஆகிய அருணகிரிநாதர் இவ்வாறு பாடினார்.

 

      தன்னை நினைந்து உருகுகின்ற பக்குவத்தை அடைந்து இருக்கும் அடியார்களை அந்தக் கணமே ஆட்கொள்வதற்காகப் பாய்ந்து ஒடும்போது மயிலை அணைத்துக் கொண்டு ஏறுவான். அவனதுகால் மயிலின்மீது படுவதே அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத்தான். அதன் மீது அவன் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மற்றொரு காலைத் தூக்குகிறான். அவன் அமர்ந்த மாத்திரத்திலே குதிரை செல்வது போல அந்த மயில் தாவி ஓடுகிறது. அவன் விரைவாகவே ஏறுகிறான் தாவடி ஒட்டும் மயிலில். தாவுகின்ற அடியை உடையது மயில். தாவித் தாவி ஒடுகின்ற அந்த மயிலின் மேல்முருகன் தன் சிற்றடியை வைத்தான்எதற்காகஅடியார்களுக்கு அருள் செய்வதற்காக. 

 

     எம்பெருமான் திருவடி சிற்றடியானாலும் அதன் பெருமை சொல்லி முடியாது. சூரபதுமன் தன்னுடைய அசுரத் தன்மையைக்  காட்டித் தேவர்களை அல்லல் பட வைத்தான். இந்திரனது வீரமும் அவனது வச்சிராயுதமும் சூரபதுமனை அடக்கப் பயன்படவில்லை. அவன் தேவலோகத்தையே இழந்தான். இந்திரன் முதலிய தேவர்களுக்கு இறைவன் நினைவு வந்தது. சிவபெருமானிடத்தில் ஒடிப் போய் முறையிட்டார்கள். தேவர்களின் முறையீட்டிற்குத் திருவுளம் இரங்கி,  தம் ஐந்து திருமுகங்களுடன் கீழ் நோக்கிய திருமுகம் ஒன்றினையும் கொண்டுஆறு திருமுகங்களை உடையவராய்செந்தழல் வடிவாகிய ஆறுநெற்றிக் கண்களின் நின்றும்ஒரே சமயத்தில் வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார். திருமுருகன் அவதாரம் நிகழ்ந்தது. தேவர்கள் தலையைக் தாழ்த்தி முருகன் திருவடியை வணங்கினார்கள். தேவர்களின் தலை மீது முருகன் திருவடி பட்டது.

 

     இதைத்தான் அருணகிரிநாதப் பெருமான்மாபலியிடத்தில் மூன்றடி நிலம் கேட்டுபிரபஞ்சமாகிய அண்டத்தின் முகடு முட்டும்படியாகப் பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு  தம்முடைய பெரிய அடி ஒன்றினாலே பூமியையும்மற்றோர் அடியாலே வானத்தையும்மூன்றாவது அடியாலே மாபலியின் தலையையும் அளந்த திருமாலின் திருமருகனாகிய முருகன்மயிலின் மேலே ஏறும் போது தன்னுடைய சிற்றடி அதன் மேல் படும்படி செய்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுடைய தலைமீது தன் சிற்றடிபடும்படியாகச் செய்தான். முருகன் திருவடி தேவர்களுடைய சிரத்தில் பட்டது என்கிறார்.

 

     அடுத்து தனது அனுபவம் ஆக"என் பா அடி ஏட்டிலும் பட்டது" என்று சொல்கிறார். முருகன் திருவடி சம்பந்தம் உண்டானதால் ஆயிரக் கணக்கான சந்தப் பாடல்களை அழகிய தமிழில் பாடினார்அருணகிரிநாதர். தமிழின் சிறப்பு அப்படி. முத்தமிழால் தன்னை வைதாரையும் கூட வாழவைக்கின்ற வள்ளல் முருகப் பெருமான்."என் பா அடி ஏட்டிலே முருகப் பெருமானுடைய சிறிய திருவடிகள் பட்டிருக்கின்றன.  அந்த அருட்பாடல்களை எல்லாம் நான் எழுதவில்லை" என்றும், "முருகன் திருவடிதான் அந்தப் பாடல்களை உருவாக்கின. அதனால் இந்தப் பாடல்கள் உயர்வு பெற்றன" என்கிறார் அருணகிரிநாதர்.

 

     அருளாளர்கள் சந்தம்எதுகை மோனை முதலியவை பார்த்துவார்த்தைகளைக் கோர்த்துப் பாடல் புனைபவர்கள் அல்ல. ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து வைத்துக்கொண்டு பாடல்கள் எழுதுபவர்கள் அல்ல. அவர்களுக்கு நாக்குதான் ஏடுஎழுத்தாணி எல்லாம். நாவிலிருந்து அருட்பாடல்கள் வெள்ளமாகப் பெருகும். உள்ளத்திலே ஊறிய திருவருள் அனுபவம் வாக்கிலே வருகிறது. உள்ளத்தில் இறைவன் குடிகொண்டு உள்ளதால்அவர்கள் சொல்லும் வார்த்தை எல்லாம் இறைவன் சொலும் வார்த்தைகள் ஆகின்றன. "எனது உரைதனது உரை" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான் ."உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்கருகாவூர் எந்தை தானே" என்பது அப்பர் அருள் வாக்கு. "நான் சொல்லும் வார்த்தை எல்லாம் நாயகன்தன் வார்த்தை" என்பார் வள்ளல்பெருமான்.

 

     நாக்குப் பேசுகிறது. இந்த நாக்குப் பேசுவதற்கு முன்னாலே உள்ளே இருக்கிற நாக்கு ஒன்று பேசுகிறது. வெளியே இருக்கிற நாக்காகிய ஏட்டுக்கு அடிஏட்டுக்குஉள்ளே உள்ள நாக்கு. புறத்தில் இருக்கிற கண்ணைப் புறக்கண் என்கிறோம். அதே போல அகத்தில் கண் இருக்கிறது. அது அகக்கண். கண் மாத்திரம் அல்ல. காதும் இருக்கிறது. உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதைத்தான் நினைப்பு என்று சொல்கிறோம். உள்ளே இருக்கிற நாக்குப் பேசுவதை வெளியே இருக்கிற நாக்கானது ஒலியை அதிகப்படுத்திக் கூட்டியும்குறைத்தும் வெளியிடுகிறது. ஊமைக்கும் நாக்கு இருக்கிறது.அவனால் பேச முடியவில்லை. உள்ளே உள்ள நாக்குப் பேசவில்லை என்றால் வெளியே உள்ளம் ஆகிய நாக்கும்பேசுவது இல்லை.உள்ளே இருக்கிற நாக்கும் தானாகப் பேசாது. அதற்கு உரை சொல்லிக் கொடுக்கிறவன்  ஒருவன் இருக்கிறான். அவன்தான் இறைவன். முதலிலே பேசுகிறவன் இறைவன்.அதற்கு அப்புறம் உள்ளேயுள்ள மனமாகிய நாக்குபேசுகிறது.அதற்கு அப்புறந்தான் வெளி நாக்குப் பேசுகிறது. இறைவனே ஒவ்வொருவருடைய நாக்கும் இயங்க மூலமாக இருக்கிறான். இதையே அப்பர் பெருமான், "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்று பாடினார்."உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்"எனப் பாரதியார் பாடுகின்றார். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாவதற்குக் காரணம் இறைவன் அங்கே வீற்றிருப்பதுதான். இறைவனது திருவடியானது,அந்த அடி ஏட்டில்பட்டால்தான் ஒளி உண்டாகும். 

 

     பாரதப் போர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்தது என்பது புராணகதை. ஒவ்வொரு நாளும் நம் உள்ளங்களில் நடந்து கொண்டிருக்கிறது அந்தப் போர். ஆறு கோடி மாயா சக்திகள் வேறுவேறு தம் மாயைகள் தொடங்குகின்றன. நமது உள்ளம் போர்க்களம் ஆகின்றது.  போர்க்களத்திலே அருச்சுனனுக்கு உபதேசம் செய்த கண்ணபிரான்,நித்தம் நமது உள்ளங்களிலேயும் உபதேசம் புரிகிறான். நம் உள்ளங்களிலேயே இருக்கிறான். ஓர்ந்து பார்ப்பவர்க்கு உண்மை விளங்கும். ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியாக இறைவன் இருக்கின்றான். 

 

     நமது உள்ளமானது  அன்பு என்னும் நீர் ஊறிய நிலமாக இருந்தால் இறைவன் திருவடிச் சுவடு தெரியும். கட்டாந் தரையாக இருந்தால் தெரியாது. இரும்பாக இருந்தாலும் உருகினால்தான் பயன் உண்டு. பொன்னாக இருந்தாலும் உருகினால்தான் அணிகலன் ஆகும். அன்பே வடிவான முருகப் பெருமான் நடமாடுகிற உள்ளம் உடையவர் அருணகிரிநாதர். அங்கே  முருகப் பெருமானின் சிற்றடி பதிந்திருக்கிறது. காமம்,  குரோதம்உலோபம்மோகம்மதம்மாச்சரியம் முதலிய அழுக்குகளை வேரோடு களைந்து எடுத்தவர் ஆதலால் எம்பெருமான் அவரது உள்ளத்திலே எப்போதும் ஒடி ஆடிக் கொண்டிருக்கிறான். நமது உள்ளங்களிலே கோபத்தின் அடி படுகிறது. அதன்  பயனாக நமது நாவில் கடுஞ்சொல் கொப்புளிக்கிறது. காமத்தின் அடி பதிகிறது. அதனால் பொருளற்ற சொற்கள் வருகின்றன. தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். அரசியல் மேடைகளில்  நடக்கும் சொற்பொழிவுகளை எல்லாம் கேட்டு,  'நாம் முன்னோர்கள் இயல் தமிழ்இசைத் தமிழ்நாடகத் தமிழ் என்று மூன்று வகைத் தமிழ் இருப்பதாக வரையறை செய்தார்கள். அந்த மூன்றுக்கும் மேல் நான்காவதாக "வசைத்தமிழ்என்ற ஒன்று இப்பொழுது வளர்ந்து வருகிறதே'  என்று சொல்வார்கள். இனிமையான தூய சொற்கள் நம் வாக்கிலிருந்து வர வேண்டுமானால் நம் உள்ளங்கள் தூயனவாக இருக்க வேண்டும். 

 

     "ஈர நெஞ்சினர் யாதும் குறைவு இலர்" அடியார்களைப் பற்றி தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுவார். அன்பு நீரினால் நனைந்து ஈரமாகிய உள்ளங்களில் இறைவனது சிற்றடிகள் பதிகின்றன. "என்னுடைய உள்ளத்தில் இறைவனுடைய சிற்றடிகள் பதிந்தன" என்கிறார் அருணகிரிநாதர். மயில்மேல் பட்ட திருவடிதேவர்தலையில் பட்ட மலரடி இந்த ஏழையின் ஏட்டிலும் பட்டது என்று  சொல்கிறார். அந்த அனுபவத்தில் மலர்ந்த பாடல் கந்தர் அலங்காரத்தில் வருகிறது.

 

"தாவடி ஒட்டும் மயிலிலும்தேவர் தலையிலும்என் 

பாஅடி ஏட்டிலும் பட்டது அன்றோபடி மாவலிபால் 

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்

சேவடிநீட்டும் பெருமான்மருகன்தன் சிற்றடியே!" 

 

இதன் பொருள் ---

 

            அந்நாளில்மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண்ணை யாசித்துபெரிய அண்ட கூடத்தின் உச்சியில் முட்டும்படியாகத் தனது சேவடியை நீட்டி அளந்த பெருமையை உடைய திருமாலின் திருமருகர் ஆன முருகப் பெருமானுடைய சிறிய திருவடியானதுஅவர் செலுத்துகின்ற மயிலை வாகனத்தின் மீதும்,தேவர்களுடைய தலையின் மீதும்அடியேன் திருவருள் துணைக் கொண்டு பாடிய பாடல்களின் அடிகளை உடைய ஏட்டின் மீதும் பட்டது அல்லவா? (இது என்ன ஆச்சரியம்!)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விருந்து ஓம்பல்

 


விருந்து ஒம்பல்

----

 

     இல்லறத்தின் பயனாகத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது அன்புடைமையும்அதன் பயனாக விருந்தினரைப் போற்றி உபசரித்தலுமே ஆகும். விருந்தோம்பல் என்னும் அதிகாரத்துள்முதல் திருக்குறளில், "வீட்டில் தங்கிபொருள்களைக் காத்து,வாழ்க்கை நடத்துவது எல்லாமும் விருந்தினரைப் போற்றிஉதவி செய்வதற்கே ஆம்" என்று நாயனார் அருளிச் செய்தார்.

 

"இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம்,விருந்து ஓம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு."    --- திருக்குறள்.

 

    புறநானூற்றுப் பாடல் ஒன்று. பாண்டியன் கீரஞ்சாத்தன் என்பவன் ஒரு குறுநிலத் தலைவன்.  ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் அவனைக் காணச் சென்றிருந்தபோது அவரிடத்து அவன் காட்டிய அன்பு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. அவன் செய்த சிறப்பினைப் பெற்று மகிழ்ந்த ஆவூர் மூலங்கிழார் அவனது இயல்பு குறித்துப் பாடிய பாடலில் பசியின்மை காரணமாகத் தன்னிடத்து வந்தவர் உண்ண மறுத்தார் என்றாலும்அவர்களை உண்ணவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வான் என்கிறார்.

 

"கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து

கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்

மணன்மலி முற்றம் புக்க சான்றோர்

உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று

உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்"   ---  புறநானூறு. 

 

இதன் பொருள் ---

    

    தன்னைக் கட்டி உள்ள கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு போக முயற்சித்துப் பெருமூச்சு விடும் யானைலாயத்தில் இருந்து வெளியேறத் துடித்துக் கனைக்கும்காற்றைப் போல விரைந்து செல்லும் குதிரை நிறைந்தமணல் இட்டு நிரப்பிய முற்றத்தில்விட்டுக்குள் வந்து இருக்கும் கற்றறிந்த பெருமக்கள்அப்போது உண்ணவில்லை என்றாலும்தான் உண்ணும்போது தன்னோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்றுஅவர்களைக் கெஞ்சிக் கேட்கும் கீரன் சாத்தன்கற்றவர்களிடம் அன்பு காட்டும் இனிய பண்புகளை உடையவன். 

 

    தனது வீட்டிற்கு வந்த சான்றோர்வந்தவுடன் உண்ணாராயினும்தான் உண்ணும்போது தன்னுடன் சேர்ந்து உண்ணவேண்டும் என்று நினைப்பது பண்பு.

 

     இல்லறத்தின் சிறந்த கூறுகளில் முதன்மையானது "விருந்தோம்பல்" என்பது. இல்லற வாழ்க்கையில் துன்பம் மிகுதி. நாளைக்கு எனப் பல பொருளும் தேடி வருந்தி அவற்றைக் காத்துக் கவலைப்படுகின்ற இல்வாழ்க்கையில் இன்பத்தைத் தருவது விருந்தினரை உபசரித்தலே ஆகும். திருவள்ளுவர் கூறிய விருந்தோம்பல்,இக்காலத்தில் நாம் விருந்து என்று கருதுவதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இக்காலத்தில் பல்காலும் பழகி அறிந்தவர்க்கும்உறவினர்க்கும்சிறந்த உணவு அளிக்கின்றனர். தம்மை விடச் சிறந்த செல்வம் உடையவர்களாக் இருந்தால் ஆடம்பரமாகச் சிறப்புச் செய்கின்றனர். ஏதேனும் நன்மையை எதிர்பார்த்து அதற்காக ஒருவர்க்குச் சிறந்த உணவு அளிக்கின்றனர். இதனை இக்கால மக்கள் விருந்து எனக் கருதுகின்றனர். துணிமணிகள் வாங்கப் பெரிய கடைக்குச் செல்லும்பொழுதுஅங்கு வழங்கப்படும் தேநீர்சுவைநீர் வழங்கப்படுவது போன்ற வாணிக விருந்து இது ஆகும்.

 

     விருந்தோம்பல் அதிகாரத்தின் இறுதித் திருக்குறளில்,  "மெல்லிய அனிச்ச மலரானதுமோந்து பார்த்த அளவில் வாடும்விருந்தினர்முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடி விடுவர்" என்பதை அறிவுறுத்த,

 

"மோப்பக் குழையும் அனிச்சம்முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து."

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     விருந்தினராக வருபவர்களை தூரத்தில் கண்டபோதே முகம் மலர வேண்டும். அண்மையில் காணும்போது இனிய சொற்களைக் கூறி மகிழவேண்டும். பின்பு விருந்தினரை அவரது பசி தீருமாறு உபசரிக்க வேண்டும். விருந்தோம்பலுக்கு இந்த மூன்றும் இன்றியமையாதன. விருந்தினரை தூரத்தில் கண்டதுமே இன்முகம் காட்டவில்லையானால்விருந்தினரின் முகம் வாட்டம் அடையும். தீண்டியதும் வாடுகின்ற அனிச்சம் மலரிலும் மென்மையானவர் விருந்தினர் என்கின்றார். எனவேவிருந்தோம்புதலுக்கு இன்றியமையாத பண்பு முகமலர்ச்சியும்அக மலர்ச்சியும் ஆகும்.

 

     பெரியபராணத்தில் வரும் சிறப்புலி நாயனாரின் சிறப்பினைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.

 

"ஆளும் அங்கணருக்கு அன்பர் 

     அணைந்த போதுடியில் தாழ்ந்து

மூளும் ஆதரவு பொங்க 

     முன்புநின்று இனிய கூறி

நாளும்நல் அமுதம் ஊட்டி 

     நயந்தன எல்லாம் நல்கி

நீளும்இன் பத்துள் தங்கி 

     நிதிமழை மாரி போன்றார்."

 

இதன் பொருள்---

 

     அவர் (சிறப்புலி நாயனார்)  உலகங்கள் எல்லாவற்றையும் ஆளுகின்ற சிவபெருமானின் அன்பர்கள் தம்பால் வந்து அணையின்அவர்கள் அடியில் தாழ்ந்து வணங்கிஉள்ளத்தில் மூண்டு எழும் அன்பு மேன்மேல் பொங்கஅவர்களுக்கு இனிய சொற்களைக் கூறிநாள்தோறும் நல்ல உணவுகளை அளித்துஉண்பித்துஅவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அளித்துஅதனால் மேன்மேலும் பெருகி வளர்கின்ற இன்பத்துள் வாழ்ந்துசெல்வத்தை மழைபோல் சொரிகின்ற மேகம் என விளங்கி வந்தார்.

 

     இன்முகம் காட்டி உபசரிக்காத போது இனிய உணவும் கூட வெறுத்து ஒதுக்கத் தக்கதாகும் என்கிறது "விவே சிந்தாமணி" என்னும் நூல்..

 

"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து,உண்மை பேசி,

உப்பு இ(ல்)லாக் கூழ் இட்டாலும்,உண்பதே அமிர்தம் ஆகும்.

முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின்

கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.

 

     மனம் ஒத்த அன்புடன்முகம் மலர்ந்துஉபசாரங்கள் செய்துஉண்மையான சொற்களைப் பேசி,உப்பு இல்லாத கூழை வார்த்தாலும்அதனை உட்கொள்வது அமுதம் போல இனிமையைத் தரும். உடலுக்கும் நலத்தைச் செய்யும். முப்பழம் என்று சொல்லக் கூடிய மாபலாவாழை என்னும் பழ வகைகளோடுபால் சோற்றையும்உள்ளத்தில் அன்பு இல்லாமல்,முகம் சுளித்து விருந்தாக இடுவார்கள் ஆயின் அன்போடு இடப்படாத அந்த பகட்டான உணவை உண்டால்முன்னே வயிற்றை முட்டிக் கொண்டு இருந்த பசியோடுமுன்பு இருந்ததை விடக் கொடிய பசியானது உண்டாகும்.

 

     அன்போடு முகம் களித்து இடுவதே விருந்து ஆகும். "முகம் குழைந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருவள்ளுவர் வாய்மொழி இங்கு வைத்து எண்ணத்தகும். முகம் சுளித்து இடுவது விருந்து ஆகாது. "அதிதி தேவோ பவ". விருந்தினர்களை இறைவனாகவே எண்ணிஅருச்சனை செய்து உபசரித்து விருந்து படைக்க வேண்டும். உபசாரங்கள் என்பது பதினாறு வகைப்படும். அவைதவிசு அளித்தல்கை கழுவ நீர் அளித்தல்,கால் கழுவ நீர் தரல்,முக்குடி நீர் தரல்,நீராட்டல்ஆடை சாத்தல்முப்புரி நூல் தரல்சந்தனக் குழம்பு தருதல்மலர் சாத்தல்மஞ்சளரிசி தூவல்நறும்புகை காட்டல்விளக்கு இடல்கருப்பூரம் ஏற்றல்அமுதம் ஏந்தல்அடைக்காய் தருதல்மந்திர மலரால் அருச்சித்தல். இது மகேசுர பூசை எனப்படும்.

 

     பசித்தீ மிகவும் கொடியது. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பார் ஓவைப் பிராட்டியார். தனது பசியைத் தணித்துக் கொள்ள ஒருவனுடைய வீட்டிற்குச் சென்றார் ஔவையார்.அந்த வீட்டுக்காரனுக்கு ஒரே மகிழ்ச்சி இந்த அன்னையை உபசரிக்கும் பேறு கிடைத்ததே என்று அவன் பெருமகிழ்வு கொண்டான். அகங்காரியாகிய அவன் மனைவி உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும்நடந்து கொண்ட தன்மையும்வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது.

ஒளவையார் அன்புக்கு எளியவர்.. ஆனால் அகம்பாவத்திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் கொதித்தது. சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் ஒரு முறை நோக்கினார். அப்படியே எழுந்து வெளியே போய்விட்டார். அந்த அப்பாவிக் கணவன் அவரின் பின்னாகத் தொடர்ந்து ஓடினான். அம்மையே! நாங்கள் உணவு கொள்ளாமல் போவது கூடாது" என்று மிகவும் வேண்டினான்.

 

     ஐயா! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே என் உள்ளம் நாணுகிறது. தமிழ் பாடிப் பெருமை பெற்ற எனது வாய்அந்த உணவை ஏற்றுக் கொள்ளத் திறக்க மறுக்கிறது.என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது” என்றும் கூறினார். மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்ட அவன் பிராட்டியிடம்  மீண்டும் மன்றாடினான். அப்போதுஅவர் வாயினின்றும் எழுந்த பாடல் இது.

 

"காணக்கண் கூசுதே,கையெடுக்க நாணுதே,

மாண் ஒக்க வாய்திறக்க மாட்டாதே,- வீணுக்கு என்

என்பு எல்லாம் பற்றி எரிகின்றதுயோ!

அன்பு இல்லாள் இட்ட அமுது"

 

     "ஐயையோ! அன்பில்லாத உனது மனையாள் இட்ட உணவு அது. அதனைக் காணவும் எனது கண்கள் கூசுகின்றன. எடுத்து உண்பதற்கு எனது கை வெட்கப்படுகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் கொதிக்கின்றன” என்பது மேற்குறித்த பாடலின் பொருள்.

 

     உண்ணுங்கள்உண்ணுங்கள் என்று அன்போடு உபசரிக்காதவருடைய வீட்டில் உண்ணாமல் இருப்பது கோட்ப் பொன் பெற்றதற்கு இணையானது என்கிறார் ஔவையார்.

 

"உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்."

 

     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் இதனையே வலியுறுத்துகிறது. தனது உடம்பு பசியால் குட்டுப் போகும் என்றாலும்உண்ணத் தகதாவர் கையால் உண்ணக் கூடாது.

 

"தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்

ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த

வையக மெல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோ டிடைமிடைந்த சொல்."         --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஒருவன் தான் கெடுவதாய் இருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் கெடுதலை எண்ணாது இருக்க வேண்டும். தனது உடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் உண்ணத் தகாதவரது பொருளை உண்ணாமல் இருக்க வேண்டும்.வானத்தால் கவியப் பெற்றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாமல் இருக்கவேண்டும்.

 

     காலையிலே படைத்தாலும்வேண்டாதவர்கள் வீட்டு விருந்தில் வைத்த பொரியலும்கூட்டும்வேப்பங்காயைப் போலக் கசக்கவே செய்யும். ஆனால்நேரம் கெட்ட நேரத்தில்பிற்பகலில் படைத்தது வெறும் கீரையுடன் கூடிய உணவு என்றாலும்அதை வேண்டியவர்கள் வீட்டில் இருந்து உண்டால் சுவை உடையதாக இருக்கும் என்கிறது "நாலடியார்"

 

"நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து

வேளாண்மை வெங்கருனை வேம்பு ஆகும் -- கேளாய்,

அபராணப் போழ்தின்கண் அடகு இடுவரேனும்

தாமர் ஆயர் மாட்டே இனிது"         --- நாலடியார்.

 

     விருந்து மகிழ்வு குறித்துஇரட்டுற மொழிதலில் வல்லவர் ஆகிய காளமேகப் புலவர் பாடிய பாடல்களைக் காண்போம்...

 

     அமராவதி என்னும் ஊரிலே உள்ள குருக்கள் அளித்த விருந்தினை உண்டு அவனைப் புகழ்ந்து காளமேகப் புலவர் பாடிய பாடல்...

 

"ஆனைகுதிரை,தரும் அன்னைதனைக் கொன்றகறி,

சேனை,மன் னரைக்காய்துன்னீ அவரை --- பூநெய்யுடன்

கூட்டி அமுது இட்டான் குருக்கள் அமராபதியான்

வீட்டில் உண்டு வந்தேன் விருந்து."

 

இதன் பொருள் ---

 

     அமராவதிக் குருக்கள் என்பவன் அத்திக்காய்மாங்காய்வாழைக்காய்சேனைக்கிழங்குநெல்லிக்காய்அவரைக்காய் ஆகியவற்றைக் கொண்டுபொலிவு தரும் நெய்யைக் கலந்துதின்னும் கறிகள் சமைத்து அமுது படைத்தான். அவன் வீட்டில் விருந்து உண்டு வந்தேன் (விருந்து உண்டு உவந்தேன்)

 

     ஆனை - யானை. யானைக்கு அத்தி என்று பெயர் உண்டு. ஆனை என்னும் சொல் இங்கே அத்திக்காயைக் குறிக்கும். குதிரைக்கு'மாஎன்றும் பெயர் உண்டு. 'மாஎன்பது இங்கே மாங்காயைக் குறிக்கும். அன்னை தனைக் கொன்ற கறி - வாழைக்காயைக் குறிக்கும். குலை சாய்ந்த உடனே தன்னை ஈன்ற தாயாய் இருந்து மரத்தை அழித்த வாழைக்காய் கறி என்பதை அன்னைதனைக் கொன்ற கறி என்றார். சேனை என்பது சேனைக் கிழங்கைக் குறிக்கும். மன்னரைக் காய் - மன்+நரைக் காய். மன் = நெருக்கம். நரை - வெண்மை நிறம். நெருக்கமாகவும்வெண்மை நிறத்துடனும் காய்க்கின்ற நெல்லிக்காய்.  பூ நெய் - பொலிவு தருகின்ற நெய். பூவில் இருந்து கிடைக்கின்ற நெய்யாகிய தேன் என்றும் கொள்ளலாம். உண்டு வந்தேன் - சாப்பிட்டு வந்தேன். உண்டு உவந்தேன் - உண்டு மகிழ்ந்தேன்.

 

"விண்நீரும் வற்றிபுரவிநீரும் வற்றிவிரும்புமழைத்

தண்ணீரும் வற்றி,புலவோர் தவிக்கின்ற காலத்திலே

உண்ணீர் உண்ணீர் என்று உபசாரம் சொல்லி உபசரித்துத்

தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாள் பட்டனே."

 

இதன் பொருள் ---   

     

     விண்ணுலகத்திலே உள்ள ஆகாயகங்கை நீரும் வற்றிப் போய்மண்ணுலகத்தில் உள்ள ஊற்று நீரும் வற்றிப் போய்எல்லோரும் விரும்புகின்ற மேகம் தருகின்ற மழை நீர் இல்லாது ஆறுகுளம் முதலியனவும் வற்றிப் போய்புலவர்கள் நீர்வேட்கை கொண்டு தவிக்கின்ற காலத்திலேதிருப்பனந்தாள் என்னும் ஊரிலே குடி இருக்கின்ற பட்டன் என்பவன், 'உண்ணுங்கள்உண்ணுங்கள்என்று அன்போடு சொல்லிஉபசாரம் செய்து நீரும் சோறும் தருவான்.

 

     அடுத்துவிருந்தினர் என்பவர் யார் என்ற பார்ப்போம். "விருந்தே புதுமை" என்பது தொல்காப்பியம். புதுமை என்ற பொருளுடைய விருந்துபுதிதாக வந்தவரையே உணர்த்தி நிற்கும். அவர்கள்முன்னே அறிந்து வந்தவர்களும்அறியாது வந்தவர்களும் என இரு பிரிவினர் ஆகும். "இருவகை விருந்தினர்" என்றார் பரிமேலழகர். முன் அறிந்து இருக்கின்றமை பற்றி வந்த அதிதிகளும்,புதிதாக வந்த அதிதிகளும் விருந்தினர் ஆவர்.

 

     விதுரரின் வீட்டிற்குக் கண்ணனும்அப்பூதி அடிகள் வீட்டிற்கு,அப்பர் சுவாமிகளும் விருந்தினராகச் சென்றது காண்க. விதுரருக்குக் கண்ணனை முன்பே தெரியும். அப்பூதி அடிகளுக்கு அப்பர் சுவாமிகளை முன்பே தெரியாது. அறிந்தும் அறியாதும் வந்த இரு பிரிவினரையும் உபசரிப்பதே "விருந்து ஓம்பல்" ஆகும்.

 

     விருந்தினர் என்பவர் குறித்து "அறநெறிச்சாரம்" என்னும் நூல் விளக்குவது காண்போம்...

 

"அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்

அட்டு உண்ணா மாட்சி உடையவர்--அட்டு உண்டு

வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்

வீழ்வார்க்கு வீழ்வார் துணை."

 

இதன் பொருள் ---

 

     சமைத்து உண்டு வாழுகின்றவர்களுக்கு விருந்தினர் என்பவர்எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார். சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்குஅவ்வாறு சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல்மலையின் உச்சியில் இருந்து விழுபவர்க்குஅவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று சொல்லுதல் போல் ஆகும்.

 

     (அடுதல் - சமைத்தல். மாட்சி - பெருமைஅதிதிகள் - விருந்தினர்)

 

     இன்றைய காலத்தில்விருந்து என்பது நமக்கு உள்ள சுற்றத்தாரையும்நண்பர்களையும் குறிப்பதாக அமைந்து விட்டது. அதையாவது செம்மையாகச் செய்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு அமைந்துள்ளதையும் நாம் அறிவோம். இது காலத்தின் கோலம் ஆகும். 

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...