விருந்து ஓம்பல்

 


விருந்து ஒம்பல்

----

 

     இல்லறத்தின் பயனாகத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது அன்புடைமையும்அதன் பயனாக விருந்தினரைப் போற்றி உபசரித்தலுமே ஆகும். விருந்தோம்பல் என்னும் அதிகாரத்துள்முதல் திருக்குறளில், "வீட்டில் தங்கிபொருள்களைக் காத்து,வாழ்க்கை நடத்துவது எல்லாமும் விருந்தினரைப் போற்றிஉதவி செய்வதற்கே ஆம்" என்று நாயனார் அருளிச் செய்தார்.

 

"இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம்,விருந்து ஓம்பி

வேளாண்மை செய்தல் பொருட்டு."    --- திருக்குறள்.

 

    புறநானூற்றுப் பாடல் ஒன்று. பாண்டியன் கீரஞ்சாத்தன் என்பவன் ஒரு குறுநிலத் தலைவன்.  ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் அவனைக் காணச் சென்றிருந்தபோது அவரிடத்து அவன் காட்டிய அன்பு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. அவன் செய்த சிறப்பினைப் பெற்று மகிழ்ந்த ஆவூர் மூலங்கிழார் அவனது இயல்பு குறித்துப் பாடிய பாடலில் பசியின்மை காரணமாகத் தன்னிடத்து வந்தவர் உண்ண மறுத்தார் என்றாலும்அவர்களை உண்ணவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வான் என்கிறார்.

 

"கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து

கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்

மணன்மலி முற்றம் புக்க சான்றோர்

உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று

உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்"   ---  புறநானூறு. 

 

இதன் பொருள் ---

    

    தன்னைக் கட்டி உள்ள கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு போக முயற்சித்துப் பெருமூச்சு விடும் யானைலாயத்தில் இருந்து வெளியேறத் துடித்துக் கனைக்கும்காற்றைப் போல விரைந்து செல்லும் குதிரை நிறைந்தமணல் இட்டு நிரப்பிய முற்றத்தில்விட்டுக்குள் வந்து இருக்கும் கற்றறிந்த பெருமக்கள்அப்போது உண்ணவில்லை என்றாலும்தான் உண்ணும்போது தன்னோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்றுஅவர்களைக் கெஞ்சிக் கேட்கும் கீரன் சாத்தன்கற்றவர்களிடம் அன்பு காட்டும் இனிய பண்புகளை உடையவன். 

 

    தனது வீட்டிற்கு வந்த சான்றோர்வந்தவுடன் உண்ணாராயினும்தான் உண்ணும்போது தன்னுடன் சேர்ந்து உண்ணவேண்டும் என்று நினைப்பது பண்பு.

 

     இல்லறத்தின் சிறந்த கூறுகளில் முதன்மையானது "விருந்தோம்பல்" என்பது. இல்லற வாழ்க்கையில் துன்பம் மிகுதி. நாளைக்கு எனப் பல பொருளும் தேடி வருந்தி அவற்றைக் காத்துக் கவலைப்படுகின்ற இல்வாழ்க்கையில் இன்பத்தைத் தருவது விருந்தினரை உபசரித்தலே ஆகும். திருவள்ளுவர் கூறிய விருந்தோம்பல்,இக்காலத்தில் நாம் விருந்து என்று கருதுவதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இக்காலத்தில் பல்காலும் பழகி அறிந்தவர்க்கும்உறவினர்க்கும்சிறந்த உணவு அளிக்கின்றனர். தம்மை விடச் சிறந்த செல்வம் உடையவர்களாக் இருந்தால் ஆடம்பரமாகச் சிறப்புச் செய்கின்றனர். ஏதேனும் நன்மையை எதிர்பார்த்து அதற்காக ஒருவர்க்குச் சிறந்த உணவு அளிக்கின்றனர். இதனை இக்கால மக்கள் விருந்து எனக் கருதுகின்றனர். துணிமணிகள் வாங்கப் பெரிய கடைக்குச் செல்லும்பொழுதுஅங்கு வழங்கப்படும் தேநீர்சுவைநீர் வழங்கப்படுவது போன்ற வாணிக விருந்து இது ஆகும்.

 

     விருந்தோம்பல் அதிகாரத்தின் இறுதித் திருக்குறளில்,  "மெல்லிய அனிச்ச மலரானதுமோந்து பார்த்த அளவில் வாடும்விருந்தினர்முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடி விடுவர்" என்பதை அறிவுறுத்த,

 

"மோப்பக் குழையும் அனிச்சம்முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து."

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     விருந்தினராக வருபவர்களை தூரத்தில் கண்டபோதே முகம் மலர வேண்டும். அண்மையில் காணும்போது இனிய சொற்களைக் கூறி மகிழவேண்டும். பின்பு விருந்தினரை அவரது பசி தீருமாறு உபசரிக்க வேண்டும். விருந்தோம்பலுக்கு இந்த மூன்றும் இன்றியமையாதன. விருந்தினரை தூரத்தில் கண்டதுமே இன்முகம் காட்டவில்லையானால்விருந்தினரின் முகம் வாட்டம் அடையும். தீண்டியதும் வாடுகின்ற அனிச்சம் மலரிலும் மென்மையானவர் விருந்தினர் என்கின்றார். எனவேவிருந்தோம்புதலுக்கு இன்றியமையாத பண்பு முகமலர்ச்சியும்அக மலர்ச்சியும் ஆகும்.

 

     பெரியபராணத்தில் வரும் சிறப்புலி நாயனாரின் சிறப்பினைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.

 

"ஆளும் அங்கணருக்கு அன்பர் 

     அணைந்த போதுடியில் தாழ்ந்து

மூளும் ஆதரவு பொங்க 

     முன்புநின்று இனிய கூறி

நாளும்நல் அமுதம் ஊட்டி 

     நயந்தன எல்லாம் நல்கி

நீளும்இன் பத்துள் தங்கி 

     நிதிமழை மாரி போன்றார்."

 

இதன் பொருள்---

 

     அவர் (சிறப்புலி நாயனார்)  உலகங்கள் எல்லாவற்றையும் ஆளுகின்ற சிவபெருமானின் அன்பர்கள் தம்பால் வந்து அணையின்அவர்கள் அடியில் தாழ்ந்து வணங்கிஉள்ளத்தில் மூண்டு எழும் அன்பு மேன்மேல் பொங்கஅவர்களுக்கு இனிய சொற்களைக் கூறிநாள்தோறும் நல்ல உணவுகளை அளித்துஉண்பித்துஅவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் அளித்துஅதனால் மேன்மேலும் பெருகி வளர்கின்ற இன்பத்துள் வாழ்ந்துசெல்வத்தை மழைபோல் சொரிகின்ற மேகம் என விளங்கி வந்தார்.

 

     இன்முகம் காட்டி உபசரிக்காத போது இனிய உணவும் கூட வெறுத்து ஒதுக்கத் தக்கதாகும் என்கிறது "விவே சிந்தாமணி" என்னும் நூல்..

 

"ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து,உண்மை பேசி,

உப்பு இ(ல்)லாக் கூழ் இட்டாலும்,உண்பதே அமிர்தம் ஆகும்.

முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவராயின்

கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.

 

     மனம் ஒத்த அன்புடன்முகம் மலர்ந்துஉபசாரங்கள் செய்துஉண்மையான சொற்களைப் பேசி,உப்பு இல்லாத கூழை வார்த்தாலும்அதனை உட்கொள்வது அமுதம் போல இனிமையைத் தரும். உடலுக்கும் நலத்தைச் செய்யும். முப்பழம் என்று சொல்லக் கூடிய மாபலாவாழை என்னும் பழ வகைகளோடுபால் சோற்றையும்உள்ளத்தில் அன்பு இல்லாமல்,முகம் சுளித்து விருந்தாக இடுவார்கள் ஆயின் அன்போடு இடப்படாத அந்த பகட்டான உணவை உண்டால்முன்னே வயிற்றை முட்டிக் கொண்டு இருந்த பசியோடுமுன்பு இருந்ததை விடக் கொடிய பசியானது உண்டாகும்.

 

     அன்போடு முகம் களித்து இடுவதே விருந்து ஆகும். "முகம் குழைந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருவள்ளுவர் வாய்மொழி இங்கு வைத்து எண்ணத்தகும். முகம் சுளித்து இடுவது விருந்து ஆகாது. "அதிதி தேவோ பவ". விருந்தினர்களை இறைவனாகவே எண்ணிஅருச்சனை செய்து உபசரித்து விருந்து படைக்க வேண்டும். உபசாரங்கள் என்பது பதினாறு வகைப்படும். அவைதவிசு அளித்தல்கை கழுவ நீர் அளித்தல்,கால் கழுவ நீர் தரல்,முக்குடி நீர் தரல்,நீராட்டல்ஆடை சாத்தல்முப்புரி நூல் தரல்சந்தனக் குழம்பு தருதல்மலர் சாத்தல்மஞ்சளரிசி தூவல்நறும்புகை காட்டல்விளக்கு இடல்கருப்பூரம் ஏற்றல்அமுதம் ஏந்தல்அடைக்காய் தருதல்மந்திர மலரால் அருச்சித்தல். இது மகேசுர பூசை எனப்படும்.

 

     பசித்தீ மிகவும் கொடியது. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்பார் ஓவைப் பிராட்டியார். தனது பசியைத் தணித்துக் கொள்ள ஒருவனுடைய வீட்டிற்குச் சென்றார் ஔவையார்.அந்த வீட்டுக்காரனுக்கு ஒரே மகிழ்ச்சி இந்த அன்னையை உபசரிக்கும் பேறு கிடைத்ததே என்று அவன் பெருமகிழ்வு கொண்டான். அகங்காரியாகிய அவன் மனைவி உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும்நடந்து கொண்ட தன்மையும்வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது.

ஒளவையார் அன்புக்கு எளியவர்.. ஆனால் அகம்பாவத்திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் கொதித்தது. சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் ஒரு முறை நோக்கினார். அப்படியே எழுந்து வெளியே போய்விட்டார். அந்த அப்பாவிக் கணவன் அவரின் பின்னாகத் தொடர்ந்து ஓடினான். அம்மையே! நாங்கள் உணவு கொள்ளாமல் போவது கூடாது" என்று மிகவும் வேண்டினான்.

 

     ஐயா! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே என் உள்ளம் நாணுகிறது. தமிழ் பாடிப் பெருமை பெற்ற எனது வாய்அந்த உணவை ஏற்றுக் கொள்ளத் திறக்க மறுக்கிறது.என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது” என்றும் கூறினார். மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்ட அவன் பிராட்டியிடம்  மீண்டும் மன்றாடினான். அப்போதுஅவர் வாயினின்றும் எழுந்த பாடல் இது.

 

"காணக்கண் கூசுதே,கையெடுக்க நாணுதே,

மாண் ஒக்க வாய்திறக்க மாட்டாதே,- வீணுக்கு என்

என்பு எல்லாம் பற்றி எரிகின்றதுயோ!

அன்பு இல்லாள் இட்ட அமுது"

 

     "ஐயையோ! அன்பில்லாத உனது மனையாள் இட்ட உணவு அது. அதனைக் காணவும் எனது கண்கள் கூசுகின்றன. எடுத்து உண்பதற்கு எனது கை வெட்கப்படுகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் கொதிக்கின்றன” என்பது மேற்குறித்த பாடலின் பொருள்.

 

     உண்ணுங்கள்உண்ணுங்கள் என்று அன்போடு உபசரிக்காதவருடைய வீட்டில் உண்ணாமல் இருப்பது கோட்ப் பொன் பெற்றதற்கு இணையானது என்கிறார் ஔவையார்.

 

"உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்."

 

     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் இதனையே வலியுறுத்துகிறது. தனது உடம்பு பசியால் குட்டுப் போகும் என்றாலும்உண்ணத் தகதாவர் கையால் உண்ணக் கூடாது.

 

"தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்

ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த

வையக மெல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோ டிடைமிடைந்த சொல்."         --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஒருவன் தான் கெடுவதாய் இருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் கெடுதலை எண்ணாது இருக்க வேண்டும். தனது உடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் உண்ணத் தகாதவரது பொருளை உண்ணாமல் இருக்க வேண்டும்.வானத்தால் கவியப் பெற்றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாமல் இருக்கவேண்டும்.

 

     காலையிலே படைத்தாலும்வேண்டாதவர்கள் வீட்டு விருந்தில் வைத்த பொரியலும்கூட்டும்வேப்பங்காயைப் போலக் கசக்கவே செய்யும். ஆனால்நேரம் கெட்ட நேரத்தில்பிற்பகலில் படைத்தது வெறும் கீரையுடன் கூடிய உணவு என்றாலும்அதை வேண்டியவர்கள் வீட்டில் இருந்து உண்டால் சுவை உடையதாக இருக்கும் என்கிறது "நாலடியார்"

 

"நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து

வேளாண்மை வெங்கருனை வேம்பு ஆகும் -- கேளாய்,

அபராணப் போழ்தின்கண் அடகு இடுவரேனும்

தாமர் ஆயர் மாட்டே இனிது"         --- நாலடியார்.

 

     விருந்து மகிழ்வு குறித்துஇரட்டுற மொழிதலில் வல்லவர் ஆகிய காளமேகப் புலவர் பாடிய பாடல்களைக் காண்போம்...

 

     அமராவதி என்னும் ஊரிலே உள்ள குருக்கள் அளித்த விருந்தினை உண்டு அவனைப் புகழ்ந்து காளமேகப் புலவர் பாடிய பாடல்...

 

"ஆனைகுதிரை,தரும் அன்னைதனைக் கொன்றகறி,

சேனை,மன் னரைக்காய்துன்னீ அவரை --- பூநெய்யுடன்

கூட்டி அமுது இட்டான் குருக்கள் அமராபதியான்

வீட்டில் உண்டு வந்தேன் விருந்து."

 

இதன் பொருள் ---

 

     அமராவதிக் குருக்கள் என்பவன் அத்திக்காய்மாங்காய்வாழைக்காய்சேனைக்கிழங்குநெல்லிக்காய்அவரைக்காய் ஆகியவற்றைக் கொண்டுபொலிவு தரும் நெய்யைக் கலந்துதின்னும் கறிகள் சமைத்து அமுது படைத்தான். அவன் வீட்டில் விருந்து உண்டு வந்தேன் (விருந்து உண்டு உவந்தேன்)

 

     ஆனை - யானை. யானைக்கு அத்தி என்று பெயர் உண்டு. ஆனை என்னும் சொல் இங்கே அத்திக்காயைக் குறிக்கும். குதிரைக்கு'மாஎன்றும் பெயர் உண்டு. 'மாஎன்பது இங்கே மாங்காயைக் குறிக்கும். அன்னை தனைக் கொன்ற கறி - வாழைக்காயைக் குறிக்கும். குலை சாய்ந்த உடனே தன்னை ஈன்ற தாயாய் இருந்து மரத்தை அழித்த வாழைக்காய் கறி என்பதை அன்னைதனைக் கொன்ற கறி என்றார். சேனை என்பது சேனைக் கிழங்கைக் குறிக்கும். மன்னரைக் காய் - மன்+நரைக் காய். மன் = நெருக்கம். நரை - வெண்மை நிறம். நெருக்கமாகவும்வெண்மை நிறத்துடனும் காய்க்கின்ற நெல்லிக்காய்.  பூ நெய் - பொலிவு தருகின்ற நெய். பூவில் இருந்து கிடைக்கின்ற நெய்யாகிய தேன் என்றும் கொள்ளலாம். உண்டு வந்தேன் - சாப்பிட்டு வந்தேன். உண்டு உவந்தேன் - உண்டு மகிழ்ந்தேன்.

 

"விண்நீரும் வற்றிபுரவிநீரும் வற்றிவிரும்புமழைத்

தண்ணீரும் வற்றி,புலவோர் தவிக்கின்ற காலத்திலே

உண்ணீர் உண்ணீர் என்று உபசாரம் சொல்லி உபசரித்துத்

தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாள் பட்டனே."

 

இதன் பொருள் ---   

     

     விண்ணுலகத்திலே உள்ள ஆகாயகங்கை நீரும் வற்றிப் போய்மண்ணுலகத்தில் உள்ள ஊற்று நீரும் வற்றிப் போய்எல்லோரும் விரும்புகின்ற மேகம் தருகின்ற மழை நீர் இல்லாது ஆறுகுளம் முதலியனவும் வற்றிப் போய்புலவர்கள் நீர்வேட்கை கொண்டு தவிக்கின்ற காலத்திலேதிருப்பனந்தாள் என்னும் ஊரிலே குடி இருக்கின்ற பட்டன் என்பவன், 'உண்ணுங்கள்உண்ணுங்கள்என்று அன்போடு சொல்லிஉபசாரம் செய்து நீரும் சோறும் தருவான்.

 

     அடுத்துவிருந்தினர் என்பவர் யார் என்ற பார்ப்போம். "விருந்தே புதுமை" என்பது தொல்காப்பியம். புதுமை என்ற பொருளுடைய விருந்துபுதிதாக வந்தவரையே உணர்த்தி நிற்கும். அவர்கள்முன்னே அறிந்து வந்தவர்களும்அறியாது வந்தவர்களும் என இரு பிரிவினர் ஆகும். "இருவகை விருந்தினர்" என்றார் பரிமேலழகர். முன் அறிந்து இருக்கின்றமை பற்றி வந்த அதிதிகளும்,புதிதாக வந்த அதிதிகளும் விருந்தினர் ஆவர்.

 

     விதுரரின் வீட்டிற்குக் கண்ணனும்அப்பூதி அடிகள் வீட்டிற்கு,அப்பர் சுவாமிகளும் விருந்தினராகச் சென்றது காண்க. விதுரருக்குக் கண்ணனை முன்பே தெரியும். அப்பூதி அடிகளுக்கு அப்பர் சுவாமிகளை முன்பே தெரியாது. அறிந்தும் அறியாதும் வந்த இரு பிரிவினரையும் உபசரிப்பதே "விருந்து ஓம்பல்" ஆகும்.

 

     விருந்தினர் என்பவர் குறித்து "அறநெறிச்சாரம்" என்னும் நூல் விளக்குவது காண்போம்...

 

"அட்டு உண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்

அட்டு உண்ணா மாட்சி உடையவர்--அட்டு உண்டு

வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்

வீழ்வார்க்கு வீழ்வார் துணை."

 

இதன் பொருள் ---

 

     சமைத்து உண்டு வாழுகின்றவர்களுக்கு விருந்தினர் என்பவர்எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார். சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்குஅவ்வாறு சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல்மலையின் உச்சியில் இருந்து விழுபவர்க்குஅவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று சொல்லுதல் போல் ஆகும்.

 

     (அடுதல் - சமைத்தல். மாட்சி - பெருமைஅதிதிகள் - விருந்தினர்)

 

     இன்றைய காலத்தில்விருந்து என்பது நமக்கு உள்ள சுற்றத்தாரையும்நண்பர்களையும் குறிப்பதாக அமைந்து விட்டது. அதையாவது செம்மையாகச் செய்கின்றோமா என்றால் அதுவும் இல்லை. ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு அமைந்துள்ளதையும் நாம் அறிவோம். இது காலத்தின் கோலம் ஆகும். 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...