அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆதவித பாரமுலை
(கோசைநகர்-கோயம்பேடு)
முருகா!
விலைமாதர் வசமாகி அழியாமல்,
தேவரீர் திருவடிகளைத் துதித்துத்
திருவருள் பெற்று உய்ய அருள்
புரிவீர்.
தானதன
தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
ஆதவித
பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன ...... கலைலீலை
யாவும்விளை
வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய ...... னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை ...... நலமாக
நானநுதி
னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள ...... வருவாயே
சீதமதி
யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில ...... பரமேசர்
சீர்மைபெற
வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர் ...... குலகாலா
கோதைகுற
மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற வீறிவரு ...... குமரேசா
கோசைநகர்
வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆத
இத பாரமுலை, மாதர் இடை நூல், வயிறு அது
ஆல் இலை எனா, மதன ...... கலைலீலை
யாவும்
விளைவான குழியான திரிகோணம் அதில்
ஆசை மிகவாய் அடியன் ...... அலையாமல்,
நாத
சத கோடிமறை ஓலம் இடு நூபுரம் முன்
ஆன பத மாமலரை, ...... நலமாக
நான்
அநுதினா தினமுமே நினையவே, கிருபை
நாடி அருளே அருள ...... வருவாயே.
சீதமதி, ஆடு அரவு, வேர் அறுகு, மாஇறகு,
சீதசலம் மா சடில ...... பரமேசர்,
சீர்மை
பெறவே உதவு கூர்மைதரு வேல! சிவ!
சீறி வரும் மா அசுரர் ...... குலகாலா!
கோதை
குறமாது குண தேவ மடமாதும் இரு
பாலும் உற வீறி வரு ...... குமரஈசா!
கோசைநகர்
வாழவரும் ஈச! அடியர் நேச! சரு-
வேச! முருகா! அமரர் ...... பெருமாளே.
பதவுரை
சீத மதி --- குளிர்ந்த
பிறைச்சந்திரன்,
ஆடு அரவு --- படமெடுத்து ஆடுகின்ற
பாம்பு,
ஏர் அறுகு --- நன்மை தரும் அறுகம்புல்,
மா இறகு --- கொக்கின் இறகு,
சீத சலம் --- குளிர்ந்த கங்கை நதி,
மா சடில பரம ஈசர் --- ஆகியவை பொருந்தி
உள்ள துருச்சடையை உடையவர் ஆகிய சிவபெருமான்,
சீர்மை பெறவே உதவு --- உலக உயிர்கள்
செம்மை பெற்று உய்யத் தந்து அருளிய
கூர்மை தரு வேல --- கூர்மை பொருந்திய
வேலாயுதத்தை உடையவரே!
சிவ --- மங்கலப் பொருள் ஆனவரே!
சீறி வரு மா அசுரர் குல காலா --- கோபத்தோடு
எதிர்த்து வந்த பெரும் அசுரர் கூட்டத்துக்கு காலனாக வந்தவரே!
கோதை குறமாது --- குறமகளாகிய
வள்ளிநாயகியார்,
குண தேவ மடமாதும் ---நற்குணம் அமைந்த
தேவலோகத்துப் பெண்ணாகிய தெய்வயானை அம்மையாரும்,
இரு பாலும் உற வீறி வரு குமர ஈசா ---
இரு பக்கங்களிலும் பொலிவோடு பொருந்தி இருக்கும் குமாரக் கடவுளே!
கோசை நகர் வாழ வரும்
ஈச
--- கோயம்பேடு என்னும் கோசை நகர் விளங்க வந்த ஈசனே!
அடியர் நேச --- அடியார்களின் நேயரே!
சருவ ஈச --- எல்லா உயிர்க்கும்
தலைவரே!
முருகா --- முருகப் பெருமானே!
அமரர் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையில் மிக்கவரே!
ஆத இத பார முலை மாதர் --- இன்பத்தை நாடி
விரும்பும் பருத்த முலைகளை உடைய விலைமாதர்களின்
இடை நூல் --- இடுப்பு நூல் போல
நுண்ணியது,
வயிறு அது ஆல் இலை --- வயிறு ஆலின்
இலையைப் போன்றது,
எனா --- என்று மனத்துள் கொண்டு,
மதன கலை லீலை யாவும்
விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் --- மன்மதனின் காமசாத்திரத்தில்
சொல்லப்பட்டுள்ள விளையாடல்கள் எல்லாம் உண்டாகும், முக்கோணமான வடிவுள்ள பெண்குறி என்னும்
குழியில் ஆசை மிக்கவனாய்,
அடியன் அலையாமல் --- அடியவன் ஆகிய
நான் அலையாமல்,
நாத --- தலைவரே!
சதகோடி மறை ஓலம் இடு நூபுரம் முன் ஆன
--- எண்ணில்லாத வேதங்களும் ஒலமிடுவது போல் ஒலிக்கின்ற சிலம்புகளை அணிந்துள்ள
பத மா மலரை --- திருவடி மலரை,
நலமாக --- நலம் பெறும் பொருட்டு,
நான் அநுதினா தினமுமே நினையவே ---
அடியேன் நாள்தோறும் நினைந்து வழிபடுமாறு,
கிருபை நாடி --- உமது கருணையை நாடி
இருக்க,
அருளே அருள வருவாயே --- திருவருளைத்
தந்து அருள வந்து அருள்வீராக.
பொழிப்புரை
குளிர்ந்த பிறைச்சந்திரன், படமெடுத்து ஆடும் பாம்பு, நன்மை தரும் அறுகம்புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நதி ஆகியவை பொருந்தி
உள்ள துருச்சடையை உடையவர் ஆகிய சிவபெருமான், உலக உயிர்கள் செம்மை பெற்று உய்யத் தந்து அருளிய கூர்மை பொருந்திய
வேலாயுதத்தை உடையவரே!
மங்கலப் பொருள் ஆனவரே!
கோபத்தோடு எதிர்த்து வந்த பெரும் அசுரர்
கூட்டத்துக்கு காலனாக வந்தவரே!
குறமகளாகிய வள்ளிநாயகியார் உடன் நற்குணம்
அமைந்த தேவலோகத்துப் பெண்ணாகிய தெய்வயானை அம்மையாரும்,
இரு
பக்கங்களிலும் பொலிவோடு பொருந்தி இருக்கும் குமாரக் கடவுளே!
கோயம்பேடு என்னும் கோசை நகர் விளங்க
வந்த ஈசரே!
அடியார்களின் நேயரே!
எல்லா உயிர்க்கும் தலைவரே!
முருகப் பெருமானே!
தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!
இன்பத்தை நாடி விரும்பும் பருத்த
முலைகளை உடைய விலைமாதர்களின் இடுப்பு நூல் போல நுண்ணியது, வயிறு ஆலின் இலையைப் போன்றது என்று மனத்துள் கொண்டு, மன்மதனின்
காமசாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விளையாடல்கள் எல்லாம் உண்டாகும், முக்கோணமான வடிவுள்ள பெண்குறி என்னும்
குழியில் ஆசை மிக்கவனாய்,
அடியவன்
ஆகிய நான் அலையாமல், தலைவரே! எண்ணில்லாத
வேதங்களும் ஒலமிடுவது போல் ஒலிக்கின்ற சிலம்புகளை அணிந்துள்ள திருவடி மலரை, நலம்
பெறும் பொருட்டு,
அடியேன்
நாள்தோறும் நினைந்து வழிபடுமாறு, உமது கருணையை நாடி
இருக்க, திருவருளைத் தந்து
அருள வந்து அருள்வீராக.
விரிவுரை
ஆத
இத பார முலை மாதர் இடை நூல், வயிறு அது ஆல் இலை எனா ---
இதமான
இன்பத்தைத் தருகின்ற பருத்த முலைகளை உடைய விலைமாதர்களின், இடையானது சிறுத்து
இருப்பதால், அது நூல் போன்று உள்ளது என்றும், வயிறு குழிந்து இருப்பதால், அது ஆல
மரத்தின் இலையைப் போன்று எள்ளது என்றும் காமுகர்கள் நினைந்து மயங்குவர்.
ஆனால்
அருளாளர்கள் அவற்றை வேறு விதமாகப் பார்த்தார்கள்.
சிலந்தி
போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு
விம்மிச் சீ பாய்ந்து ஏறி,
உகிரால்
கீற உலர்ந்து உள் உருகி,
நகுவார்க்கு
இடமாய் நான்று வற்றும்
முலையைப்
பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும், காமக்
குருடர்க்கு ஒன்று உரைப்பேன். --- பட்டினத்தார்.
செப்பு
என்றனை முலையை, சீசீ சிலந்தி அது
துப்பு
என்றவர்க்கு யாது சொல்லுதியே? - வப்பு இறுகச்
சூழ்ந்த
முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய், கீழ்த்துவண்டு
வீழ்ந்த
முலைக்கு என்ன விளம்புதியே, - தாழ்ந்த அவை
மண்கட்டும்
பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப்
புண்கட்டி
என்பவர் வாய்ப் பொத்துவையே? - திண்கட்டும்
அந்
நீர்க் குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும்
செந்நீர்ப்
புடைப்பு என்பார் தேர்ந்திலையே, - அந்நீரார்
கண்ணீர்
தரும் பருவாய்க் கட்டு உரைப்பார், சான்றாக
வெண்ணீர்
வரல்கண்டும் வெட்கிலையே? - தண்ணீர்மைச்
சாடி
என்பாய் நீ, அயலோர் தாதுக் கடத்துஇடும்
மேல்
மூடி
என்பார் மற்று அவர்வாய் மூடுதியோ? --- வள்ளல்பெருமான்.
தாமரைத்
தண்டின் நூல், உடுக்கை, துடி என்று புகழ்ந்து கூறப்படும் பெண்களின் இடையானது,
நெடும்
உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி
என்று சொல்லித் துதித்தும், --- பட்டினத்தார்.
..... ..... ..... ....நூல் இடைதான்
உண்டோ
இலையோ என்று உள் புகழ்வாய், கைதொட்டுக்
கண்டோர்
பூட்டு உண்டு என்பார் கண்டிலையே, --- வள்ளல்பெருமான்.
ஆலம்
இலையைப் போன்று உள்ளதாகக் கூறப்படும் வயிறு...
மலமும், சலமும், வழும்பும், திரையும்
அலையும்
வயிற்றை ஆல் இலை என்றும், ---
பட்டினத்தார்.
..... ..... ..... மேடு அதனை
ஆல்
இலையே என்பாய், அடர் குடரோடு ஈருளொடும்
தோல்
இலையே ஆல் இலைக்கு, என் சொல்லுதியே. --- வள்ளல்பெருமான்.
மதன
கலை லீலை யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல் ---
மன்மதனின்
காமசாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விளையாடல்கள் எல்லாம் உண்டாகும், முக்கோணமான வடிவுள்ள பெண்குறி என்னும்
குழியில் ஆசை மிகும். ஆனால் அந்தக் குழியானது பெருந்துன்பத்திற்கு இடமாகும்
என்கின்றார் பட்டினத்து அடிகள்..
நச்சிச்
செல்லும் நரக வாயில்,
தோலும்
இறைச்சியும் துதைந்து சீப்பாயும்
காமப்
பாழி; கருவிளை கழனி;
தூமைக்
கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண்
உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால்
காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக்
காமுக நாய்தான் என்றும்
இச்சித்து
இருக்கும் இடைகழி வாயில்;
திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்
தங்கித்
திரியும் சவலைப் பெருவழி;
புண்
இது என்று புடவையை மூடி
உள்
நீர் பாயும் ஓசைச் செழும்புண்;
மால்கொண்டு
அறியா மாந்தர் புகும்வழி;
நோய்
கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய
காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய
காமுகர் சேரும் சிறுகுழி;
பெண்ணும்
ஆணும் பிறக்கும் பெருவழி;
மலம்
சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து
இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை
நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை
இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச்
சிவபத வீடு அருள்பவனை,
முத்தி
நாதனை, மூவா முதல்வனை,
அண்டர்
அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட
அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக
நாதனை இணையடி இறைஞ்சுமின்!
போக
மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!
சதகோடி
மறை ஓலம் இடு நூபுரம் முன் ஆன பத மா மலரை ---
எண்ணில்லாத
வேதங்களும் ஒலமிடுவது போல் இறைவன் திருவடி மலரில் அணிந்துள்ள சிலம்புகள்
ஒலிக்கின்றன.
முருகப்
பெருமான் திருவடியில் அணிந்துள்ள தண்டை சதங்கை முதலிய அணிகலன்கள் வேத மந்திரங்களை
உச்சரித்து ஒலிக்கின்றன என்பதை, "மறைசதுர்விதந் தெரிந்து வகைசிறு சதங்கை
கொஞ்ச மலரடி” என, அனைவரும் மருண்டு
அருண்டு எனத் தொடங்கும் திருப்புகழிலும், "செழுமறை அஞ்சொலு பரிபுர"
என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் பாடி உள்ளார்.
மா
இறகு
---
மா
- பறவை வகையில் ஆண். இங்கு கொக்கைக் குறித்து வந்தது.
கொக்கின்
இறகு சிவபெருமான் திருமுடியில்
விளங்குவது.
கொக்கு
வடிவோடு இருந்த அசுரனை வதைத்து, அதன் இறகைத் தனது திருமுடியில் தரித்தவர் சிவபெருமான்.
ஏங்கி
அமரர் இரிந்து ஓடவே துரந்த
ஓங்கு
குரண்டத்து உருக் கொண்ட தானவனைத்
தீங்கு
பெறத் தடிந்து சின்னமா ஓர் சிறையை
வாங்கி
அணிந்த அருள் இங்கு என்பால் வைத்திலையே. --- கந்தபுராணம்.
குரண்டம்
- கொக்கின் ஒருவகை.
கொக்குஉடை
இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்குஉடை
வடமும் ஓர்அரவமும் மலர்அரை மிசையினில்
திக்குஉடை
மருவிய உருவினர் திகழ்மலை மகளொடும்
புக்குஉடன்
உறைவது புதுமலர் விரைகமழ் புறவமே. --- திருஞானசம்பந்தர்.
கொக்குஇறகு
சென்னி உடையான் கண்டாய்
கொல்லை விடைஏறும் கூத்தன் கண்டாய்
அக்குஅரைமேல்
ஆடல் உடையான் கண்டாய்
அனல்அங்கை ஏந்திய ஆதி கண்டாய்
அக்கோடு
அரவம் அணிந்தான் கண்டாய்
அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மற்று
இருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே. ---
அப்பர்.
நக்கன்
காண், நக்கஅரவம் அரையில்
ஆர்த்த
நாதன் காண் ,பூதகணம் ஆட ஆடும்
சொக்கன்
காண், கொக்குஇறகு சூடினான்காண்,
துடியிடையாள் துணைமுலைக்குச்
சேர்வதாகும்
பொக்கன்
காண், பொக்கணத்த
வெண்ணீற்றான் காண்,
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய்
நின்ற
திக்கன்
காண், செக்கர் அது திகழு
மேனிச்
சிவன் அவன் காண், சிவபுரத்து எம்செல்வன் தானே. ---
அப்பர்.
குலம்பாடிக்
கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி
நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
அலம்பார்
புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல்
பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. --- திருவாசகம்.
திக்கின்
இலங்கு திண்தோள் இறை,
தில்லைச் சிற்றம்பலத்து
கொக்கின்
இறகு அது அணிந்து நின்று
ஆடி, தென் கூடல் அன்ன,
அக்கு
இன் நகை இவள் நைய,
அயல் வயின் நல்குதலால்,
தக்கு
இன்று இருந்திலன், நின்ற செவ்
வேல் எம் தனிவள்ளலே. --- திருக்கோவையார்.
கோதை
குறமாது, குண தேவ மடமாதும் இரு பாலும் உற வீறி வரு குமர ஈசா ---
குறமகளாகிய
வள்ளிநாயகியார் உடன் நற்குணம் அமைந்த தேவலோகத்துப் பெண்ணாகிய தெய்வயானை
அம்மையாரும், இரு
பக்கங்களிலும் பொலிவோடு பொருந்தி இருக்க குமாரக் கடவுள் வீற்றிருக்கின்றார்.
"குண
தேவ மடமாது என்று அடிகாளர் போற்றி உள்ளதையும், முருகப் பெருமான் தேவியர்
இருவரோடும் வீற்றிருந்து அருள்வதையும், கந்த புராணத்தில் வள்ளியம்மை மணம் செய்
படலத்தில் பின்வரும் பாடல்களால் தெளியலாம்...
கந்த
வெற்பு அதனில் சென்று
கடி கெழு மானம் நீங்கி
அந்தம்
இல் பூதர் போற்றும்
அம் பொன் ஆலயத்தின் ஏகி
இந்திரன்
மகடூஉ ஆகும்
ஏந்திழை இனிது வாழும்
மந்திரம்
அதனில் புக்கான்
வள்ளியும் தானும் வள்ளல்.
முருகப்
பெருமான் வள்ளி நாயகியைத் திருமணம் புணர்ந்த பின்னர், அவளோடு, கந்தமாதன மலையில் இந்திரன் மகளாகிய தெய்வயானை அம்மையார் இனிது
வாழுகின்ற மாளிகையில் சென்று புகுந்தனர்.
ஆரணம்
தெரிதல் தேற்றா
அறுமுகன் வரவு நோக்கி
வாரண
மடந்தை வந்து
வந்தனை புரிய அன்னாள்
பூரண
முலையும் மார்பும்
பொருந்து மாறு எடுத்துப் புல்லித்
தாரணி
தன்னில் தீர்ந்த
தனிமையின் துயரம் தீர்த்தான்.
வேதங்களாலும்
தெளிய முடியாத பரம்பொருளான முருகப் பெருமான் வரவு கண்டு, தேவயானை அம்மையார் வந்து
திருவடிகளை வணங்கினார். அவரை மார்போடு மார்பு பொருந்த அணைத்து, இத்தனை காலமும்
அம்மையார் தனிமையில் வாடிய துன்பத்தைப் போக்கினார்.
ஆங்கு
அது காலை வள்ளி
அமரர் கோன் அளித்த பாவை
பூங்
கழல் வணக்கம் செய்யப்
பொருக் கென எடுத்துப் புல்லி
ஈங்கு
ஒரு தமியள் ஆகி
இருந்திடுவேனுக்கு இன்று ஓர்
பாங்கி
வந்து உற்றவாறு
நன்று எனப் பரிவு கூர்ந்தாள்.
அப்போது,
வள்ளி நாயகியார் தேவயானை அம்மையாரின் திருவடிகளை வணங்க, திடுக்கிட்டு கோபமுடன், "இங்கே
இதுவரையில் நான் ஒருத்தி தான் இருந்தேன். இப்போது என்னோடு இவளும் வந்து சேர்ந்தது
நன்றாய் உள்ளது, சுவாமீ" என்று வருத்தமுடன் கூறினாள்.
சூர்க்
கடல் பருகும் வேலோன்
துணைவியர் இருவரோடும்
போர்க்கு
அடல் கொண்ட சீயப்
பொலன் மணி அணைமேல் சேர்ந்தான்
பால்கடல்
அமளி தன்னில்
பாவையர் புறத்து வைகக்
கார்க்கடல்
பவளவண்ணன்
கருணையோடு அமருமா போல்.
திருப்பாற்கடலில்
சீதேவி பூதேவி இருபுறத்தும் விளங்க, திருமால் அருளோடு அமர்ந்து இருத்தல் போன்று,
தேவிமார் இருவரோடும், முருகப் பெருமான் பொன்னால் ஆன சிங்கானத்தில் வீற்றிருந்தார்.
செம்கனல்
வடவை போலத்
திரைக்கடல் பருகும் வேலோன்
மங்கையர்
இருவரோடு
மடங்கலம் பீடம் மீதில்
அங்கு
இனிது இருந்த காலை,
அரமகள் அவனை நோக்கி
இங்கு
இவள் வரவு தன்னை
இயம்புதி எந்தை என்றாள்.
வடவாமுக
அக்கினி போலக் கடலைக் குடித்த வேலாயுதத்தை உடைய முருகப் பெருமான் தேவியர்
இருவரோடும் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, தேவயானை அம்மையார் பெருமானை நோக்கி,
"இவள் இங்கு வந்தது குறித்து இயம்பி அருளவேண்டும், தந்தையே" என்று
முருகப் பெருமானே வேண்டினார்.
கிள்ளை
அன்ன சொல் கிஞ்சுகச் செய்ய வாய்
வள்ளி
தன்மையை வாரணத்தின் பிணாப்
பிள்ளை
கேட்ப, பெரும்தகை மேலையோன்
உள்ளம்
மா மகிழ்வால் இவை ஓதுவான்.
கிளியைப்
போல இனிய சொற்களைப் பேசுகின்ற வள்ளி நாயகியாரின் வரலாற்றை, தேவயானை அம்மையார்
கேட்கவும், மேலாகிய பரம்பொருளான முருகப் பெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து இவ்வாறு
சொன்னார்.
நீண்ட
கோலத்து நேமி அம் செல்வர் பால்
ஈண்டை
நீவிர் இருவரும் தோன்றினீர்,
ஆண்டு
பன்னிரண்டாம் அளவு வெம் புயம்
வேண்டி
நின்று விழுத்தவம் ஆற்றினீர்.
வாமன
அவதாரத்திலே நீண்ட நெடிய கோலத்தைக்
காட்டினவரும், சுதரிசனம் என்னும் சக்கர ஆயுதத்தைத் திருக்கையில் தாங்கினவரும் ஆன
திருமாலிடத்து நீங்கள் இருவரும் தோன்றி, அமுதவல்லி, குமுதவல்லி என்னும் திருப்பேர்
கொண்டு பன்னிரண்டு வயது ஆகும் ஆளவும் என்னை வேண்டி மேன்மையான தவத்தைச் செய்து
வந்தீர்கள்.
நோற்று
நின்றிடு நுங்களை எய்தி யாம்
ஆற்றவும்
மகிழ்ந்து அன்பொடு சேருதும்
வீற்று
வீற்று விசும்பினும் பாரினும்
தோற்றுவீர்
என்று சொற்றனம் தொல்லையில்.
அவ்வாறு
தவம் புரிந்து கொண்டிருந்த உங்கள் முன் நான் காட்சி அளித்து, நீங்கள் இருவரும் வானுலகிலும், மண்ணிலகிலும் ஆகத்
தோன்றி இருப்பீர். நான் உங்களை அன்போடு சேர்வேன் என்று சொன்னேன்.
சொன்னது
ஓர் முறை தூக்கி இருவருள்
முன்னம்
மேவிய நீ முகில் ஊர் தரு
மன்னன்
மா மகள் ஆகி வளர்ந்தனை,
அன்ன
போது உனை அன்பொடு வேட்டனம்.
அப்படிச்
சொன்ன வண்ணமே, திருமாலின் மூத்த புதல்வியான அமுதவல்லி ஆகிய நீ, என்னைத் திருமணம்
செய்து கொள்ளும் பொருட்டு, இந்திரன் எதிரில்
குழந்தையாகச் சென்று, "சொர்க்காதிபதியே!
நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுக்குப் புதல்வி. ஆதலால் தந்தையே! நீ என்னைப் பாதுகாக்கக் கடவை"
என்று கூற, இந்திரன் ஐராவதம்
என்ற வெள்ளையானையை அழைத்து, நமது புதல்வியாகிய
இக்குழந்தையை அன்புடன் வளர்த்து வரக் கடவாய் என்று சொல்ல, ஐராவதம் அக்குழந்தையை மனோவதி
நகரத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வந்தது. அது முதல் அப்பெண் தெய்வயானை
என்னும் பெயரைப் பெற்றாள். சூரபதுமனைச் சங்கரித்த பின்னர் நான் உன்னைத் திருமணம்
புணர்ந்தேன்.
பிளவு
கொண்ட பிறை நுதல் பேதை! நின்
இளையளாய்
வரும் இங்கு இவள், யாம் பகர்
விளைவு
நாடி வியன் தழல் மூழ்கியே
வளவிதாம்
தொல் வடிவினை நீக்கினாள்.
சந்திரனைப்
பிளந்தது போன்ற நெற்றியைக் கொண்ட பெண்ணே! உனக்கு இறையவளாக இப்போது இங்கு வந்துள்ள
இவள், நான் சொன்னபடி, மண்ணுலகில்
பிறப்பதற்கு வேண்டி, நெருப்பில் மூழ்கி, தனது பழைய வடிவம் நீங்கப் பெற்றாள்.
பொள்
எனத் தன் புறவுடல் பொன்றலும்,
உள்ளின்
உற்ற உருவத்துடன் எழீஇ
வள்ளி
வெற்பின் மரம் பயில் சூழல் போய்த்
தெள்ளிதில்
தவம் செய்து இருந்தாள் அரோ.
நெருப்பில்
பொசுக்கு என, தனது தூல உடம்பு
நீங்கியதும்,
சூக்கும
உடம்புடன்,
மரங்கள்
நிறைந்துள்ள வள்ளிமலையில் சென்று தவத்தைப் புரிந்து கொண்டு இருந்தாள்.
அன்ன
சாரல் அதனில், சிவமுனி
என்னும்
மாதவன் எல்லை இல் காலமாய்
மன்னி
நோற்புழி, மாயத்தின் நீரதாய்ப்
பொன்னின்
மான் ஒன்று போந்து உலவு உற்றதே.
அந்த
வள்ளிமலையின் சாரலில், சிவமுனிவர்
என்னும் தவசி,
பலகாலமாய்த்
தவம் புரிந்துகொண்டு இருந்தபோது, மாயை வடிவு கொண்டது போல் பொன்மான் ஒன்று வந்து
அங்கு ஒலவிக் கொண்டு இருந்தது.
வந்து
உலாவும் மறிதனை மாதவன்
புந்தி
மாலொடு பொள் என நோக்கலும்,
அந்த
வேலை அது கருப்பம் கொள,
இந்த
மாது அக் கருவினுள் எய்தினாள்.
அப்படி
வந்து உலாவிய அந்த மானை சிவமுனிவர்,
அறிவு
மயங்கிப் பார்க்கையில், அந்த மானானது கருக் கொண்டது. அந்தக் கருவினுள் இவள் சென்று சேர்ந்தாள்.
மான்
இவள் தன்னை வயிற்றிடை தாங்கி,
ஆனதொர்
வள்ளி அகழ்ந்த பயம்பில்
தான்
அருள் செய்து தணந்திட, அங்கண்
கானவன்
மாதொடு கண்டனன் அன்றே.
மான்
இவளைத் தனது வயிற்றினில் தாங்கி இருந்து, தக்க
காலம் வந்துற்ற போது, வள்ளிக் கிழங்கை அகழ்ந்த குழியில் இவளை ஈன்றிட, அங்கு தனது
மனைவியோடு வந்த வேடன் இவளைக் குழந்தையாகக் கண்டான்.
அவ்
இருவோர்களும் ஆங்கு இவள் தன்னைக்
கை
வகையில் கொடு, காதலொடு ஏகி,
எவ்வம்
இல் வள்ளி எனப் பெயர் நல்கி,
செவ்விது
போற்றினர் சீர் மகளாக.
இருவரும்
இவளை அன்போடு கொண்டு சென்று, குற்றம் இல்லாத "வள்ளி"
என்னும் திருப்பெயர் இட்டு, சீரோடு செம்மையாக வளர்த்து வந்தனர்.
திருந்திய
கானவர் சீர் மகளாகி
இருந்திடும்
எல்லையில், யாம் இவள்பால் போய்ப்
பொருந்தியும்,
வேட்கை புகன்றும், அகன்றும்,
வருந்தியும்,
வாழ்த்தியும் மாயைகள் செய்தேம்.
வேடரின்
அன்பு மகளாக இவள் இருந்த காலத்தில்,
நான்
இவளிடத்தில் சென்று சேர்ந்து, எனது வேட்கையை அறிவித்து, அவளைப் பலவாறு
போற்றியும்,
அவளை
விட்டு நீங்கி வருந்தியும் பலவாறு மாயைகளைப் புரிந்தேன்.
அந்தம்
இல் மாயைகள் ஆற்றியதன் பின்,
முந்தை
உணர்ச்சியை முற்று உற நல்கி,
தந்தையுடன்
தமர் தந்திட நென்னல்
இந்த
மடந்தையை யாம் மணம் செய்தேம்.
அளவில்லாத
மாயைகளைச் செய்த பின்னர், முற்பிறவியின்
உணர்ச்சி உண்டாகச் செய்து, தந்தையும் உறவினர்களும் முறையாகத் தர, நேற்று இந்தப்
பெண்ணை நான் மணம் புரிந்துகொண்டேன்.
அவ்விடை
மாமணம் ஆற்றி அகன்றே,
இவ்
இவள் தன்னுடன் இம் என ஏகி,
தெய்வ
வரைக்கண் ஒர் சில் பகல் வைகி,
மை
விழியாய் இவண் வந்தனம் என்றான்.
மை
தீட்டிய கண்களை உடையவளே! வள்ளிமலையில் இவளை மணம் புரிந்த பின்னர், தெய்வத் திருமலையாகிய திருத்தணிகையில் சில
நாள் இருந்து,
இங்கு
வந்தேன் என்றார் முருகப் பெருமான்.
என்று
இவை வள்ளி இயற்கை அனைத்தும்
வென்றிடு
வேல் படை வீரன் இயம்ப,
வன்
திறல் வாரண மங்கை வினாவி,
நன்று
என ஒன்று நவின்றிடு கின்றாள்.
இவ்வாறு
வள்ளியின் திறத்தை முருகப் பெருமான் சொல்ல, தெய்வயானை அம்மையார்
அதனைக் கேட்டு,
ஒன்றைச்
சொல்லுகின்றாள்.
தொல்லையின்
முராரி தன்பால்
தோன்றிய இவளும் யானும்
எல்லை
இல் காலம் நீங்கி
இருந்தனம், இருந்திட்டேமை
ஒல்லையில்
இங்ஙன் கூட்டி,
உடன் உறுவித்த உன் தன்
வல்லபம்
தனக்கு யாம் செய்
மாறு மற்று இல்லை என்றாள்.
முற்காலத்தில், முரன் என்னும் அசுரனை வதம் செய்த
திருமாலுக்கு மக்களாகத் தோன்றிய இவளும் நானும் நெடுங்காலம் பிரிந்து இருந்தோம்.
அவ்வாறு இருந்த எங்களைக் கூட்டி ஒன்று சேர்வித்த தங்களின் அருள் விளையாடலுக்கு, மறு உபகாரமாக நாங்கள்
செய்யக்கூடியது வேறு இல்லை.
மேதகும்
எயினர் பாவை,
விண் உலகு உடைய நங்கை
ஓது
சொல் வினவி, மேல் நாள்
உனக்கு யான் தங்கை ஆகும்,
ஈது
ஒரு தன்மை அன்றி
இம்மையும் இளையள் ஆனேன்,
ஆதலின்
உய்ந்தேன், நின்னை
அடைந்தனன், அளித்தி என்றாள்.
வேடர்
குலமகளாகிய வள்ளிநாயகியார், தேவலோக மங்கையாகிய
தெய்வயானை அம்மையார் கூறியதைக் கேட்டு, முன் நாளில் நான் உனது தங்கை என்பதும் அல்லாமல், இப்போதும் உனக்கு
தங்கை ஆனேன். எனவே, என்னை அன்போடு காப்பாயாக" என்றாள்.
வன்
திறல் குறவர் பாவை
மற்று இது புகன்று, தௌவை
தன்
திருப்பதங்கள் தம்மைத்
தாழ்தலும், எடுத்துப் புல்லி
இன்று
உனைத் துணையாப் பெற்றேன்,
எம்பிரான் அருளும் பெற்றேன்,
ஒன்று
எனக்கு அரியது உண்டோ
உளம் தனில் சிறந்தது என்றாள்.
வள்ளிநாயகியார்
இவ்வாறு கூறி, தனது தமக்கையின்
திருவடிகளைப் பணிய, தெய்வயானை அம்மையார் அவரை எடுத்து அணைத்து, "இன்று உன்னை நான்
எனது துணையாகப் பெற்றேன். எம்பிரான் செவ்வேளின் அருளையும் பெற்றேன். இதை விட, நான் பெறுவதற்குச்
சிறந்த பேறு உண்டோ?" என்றாள்.
இந்திரன்
அருளும் மாதும்
எயினர் தம் மாதும் இவ்வாறு
அந்தரம்
சிறிதும் இன்றி
அன்புடன் அள வளாவிச்
சிந்தையும்
உயிரும் செய்யும்
செயற்கையும் சிறப்பும் ஒன்றாக்
கந்தமும் மலரும்
போலக்
கலந்து வேறு இன்றி உற்றார்.
இந்திரன்
மகளும், வேடர் மகளும் இவ்வாறு தமக்குள்
சிறிதும் வேறுபாடு இன்றி, அன்புடன் அளவளாவி, சிந்தையும் உயிரும் போல, மலரும் மணமும் போலக்
கலந்து வேறுபாடு இல்லாமல் இருந்தனர்.
கோசை
நகர் வாழ வரும் ஈச ---
கோசை
நகர் என்னும் திருத்தலம், இந்நாளில் கோயம்பேடு என்று வழங்கப் பெறுகின்றது. சென்னை
மாநகரில்,
வடபழநி
என்னும் திருத்தலத்துக்கு அருகில் உள்ள திருத்தலம்.
கருத்துரை
முருகா!
விலைமாதர் வசமாகி அழியாமல், தேவரீர் திருவடிகளைத்
துதித்துத் திருவருள் பெற்று உய்ய அருள் புரிவீர்.