அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அயில் ஒத்து எழும்
(திருமயிலை)
முருகா!
பெண் ஆசையால் அழியாமல்,
உன் ஆசையால் அழியாத
பதத்தைப் பெற அருள்.
தனனத் தனதன
...... தனதான
அயிலொத் தெழுமிரு
...... விழியாலே
அமுதொத் திடுமரு
...... மொழியாலே
சயிலத் தெழுதுணை
...... முலையாலே
தடையுற் றடியனு
...... மடிவேனோ
கயிலைப் பதியரன்
...... முருகோனே
கடலக் கரைதிரை
...... யருகேசூழ்
மயிலைப் பதிதனி
...... லுறைவோனே
மகிமைக் கடியவர்
...... பெருமாளே.
பதம்
பிரித்தல்
அயில் ஒத்து எழும்
இரு ...... விழியாலே,
அமுது ஒத்திடும்
அரு ...... மொழியாலே,
சயிலத்து எழு துணை
...... முலையாலே,
தடை உற்று அடியனும்
...... மடிவேனோ?
கயிலைப் பதி அரன்
...... முருகோனே!
கடல் அக் கரை திரை
...... அருகே சூழ்
மயிலைப் பதிதனில்
...... உறைவோனே!
மகிமைக்கு அடியவர்
...... பெருமாளே.
பதவுரை
அயில் ஒத்து எழும் இரு விழியாலே --- வேலை
நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும்,
அமுது ஒத்திடும் அரு மொழியாலே ---
அமுதத்துக்கு ஒப்பான அருமையான சொல்லினாலும்,
சயிலத்து எழு துணை முலையாலே ---
மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு
முலைகளாலும்,
தடை உற்று அடியனும் மடிவேனோ ---
வாழ்க்கை தடைப்பட்டு அடியேனும் இறந்து படுவேனோ?
கயிலைப் பதி அரன் முருகோனே --- திருக்கயிலாயம்
என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபரம்பொருளுடைய குழந்தையே!
கடல் அக் கரை திரை அருகே சூழ் --- அலைகள்
வீசும் கடலின் கரையிலே விளங்கும்,
மயிலைப் பதிதனில் உறைவோனே ---
திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!
மகிமைக்கு அடியவர் பெருமாளே --- மகிமை
பொருந்திய அடியவர்களின் போற்றுதலுக்கு
உரிய பெருமையில் மிக்கவரே!
பதவுரை
திருக்கயிலாயம் என்னும் பதியில் வீற்றிருக்கும் சிவபரம்பொருளுடைய குழந்தையே!
அலைகள் வீசும் கடலின் கரையிலே விளங்கும், திருமயிலாப்பூர்
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!
மகிமை பொருந்திய அடியவர்களின் போற்றுதலுக்கு
உரிய பெருமையில் மிக்கவரே!
வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும், அமுதத்துக்கு
ஒப்பான அருமையான சொல்லினாலும், மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு
முலைகளாலும்,
வாழ்க்கை
தடைப்பட்டு அடியேனும் இறந்து படுவேனோ?
விரிவுரை
அயில் ஒத்து எழும்
இரு விழியாலே ---
அயில் - வேல், கூர்மை, அழகு, உண்ணுதல்.
கூர்மை பொருந்திய
வேலைப் போன்று பெண்களின் கண்கள் அமைந்து இருக்கும்.
வேல் என்னும்
ஞானசத்தி, அஞ்ஞானம் ஆகிய இருளை ஒழித்து, அருள் ஒளியை ஆன்மாவில் பரப்பியது.
அது போல ஆடவரின் உள்ளத்தில் மிக்குள்ள அறியாமையைப் போக்கி, அறிவை நிறையச் செய்வது பெண்களின் கண்கள். பார்வையலேயே ஆடவரை
நெறிப்படுத்துவதற்கு உரியவை பெண்களின் கண்கள். இது இறைவன் படைப்பில் உள்ள அதிசயம்.
இருநோக்கு இவள்
உண்கண் உள்ளது, ஒரு நோக்கு
நோய் நோக்கு, வன்று அந்நோய்க்கு மருந்து.
என்று அருளினார்
திருவள்ளுவ நாயனார்.
பெண்களின் கண்
பார்வையால் இன்பமும் துன்பமும் விளையும். துன்பமாகிய நோயை உண்டாக்குவதும், அந்த நோய்க்கு மருந்தாக அமைவதும் கண்களே என்றால் இறைவன்
படைப்பில் உள்ள அதிசயம் தானே!
பொதுவாகப்
பெண்களின் பார்வையானது ஆடவருக்குக் காம மயக்கத்தை உண்டாக்கி, பின்னர் அந்தக் காம மயக்கத்தைத் தீர்ப்பதாக அமையும்.
"தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர்" என்று "திங்கள்
சடையோன் திருவருள் இல்லார்" கருதுவர் என்கின்றார் பட்டினத்து அடிகள்.
ஆனால், அருளாளர்களுக்கு, அந்தக் கண்கள் தெய்வத் தன்மையோடு
தோன்றும். திருமயிலையில், திருஞானசம்பந்தப்
பெருமான், இறையருளால் எலும்பைப் பெண்ணாக்கினார். அப்படி உருவாகி வந்த பூம்பாவையாரின்
கண்கள் எப்படி விளங்கின? தெய்வச்
சேக்கிழார் பெருமான் பாடுவதைப் பாருங்கள்...
மண்ணிய மணியின் செய்ய
வளர் ஒளி
மேனியாள் தன்
கண் இணை வனப்புக் காணில்,
காமரு வதனத்
திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில், தகைவின் நீள
ஒள் நிறக் கரிய செய்ய
கயல் இரண்டு
ஒத்து உலாவ.
கடைந்தெடுத்த மாணிக்கத்தினை விடவும் செம்மையான ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட
பூம்பாவையாரின் இரண்டு கண்களின் அழகானது, அழகு மிக்க
முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில்
தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல்
மீன்களைப் போன்று உலாவின என்கின்றார்.
மணிவாசகப் பெருமான் தான் கண்ட சிவமாகிய தலைவியின் கண்களைக் குறித்துத்
திருக்கோவையாரில் பாடி இருப்பதைக் காண்போம்..
ஈசற்கு யான் வைத்த அன்பின்
அகன்று, அவன் வாங்கிய
என்
பாசத்தில் கார் என்று, அவன் தில்லை-
யின் ஒளி போன்று, அவன் தோள்
பூசு அத் திருநீறு என வெளுத்து,
ஆங்கு அவன் பூங்கழல் யாம்
பேசு அத் திருவார்த்தையில் பெரு-
நீளம் பெருங்கண்களே.
இதன் பொருள் ---
தலைவியின் கண்களானவை, ஈசனிடத்தில்
தான் வைத்த அன்பினைப் போல அகன்று இருந்தது. இறைவனால் என்னிடத்தில் இருந்து வாங்கப்
பெற்ற ஆணவமலம் போல் கருமை நிறம் கொண்டு இருந்தது. அவனுடைய தில்லையைப் போல ஒளி
பொருந்தி இருந்தது. அவனுடைய திருத்தோள்களில் பூசப்பெற்றுள்ள திருநீறு போல வெளுத்து
இருந்தது. அவனுடைய திருவடித் தாமரைகளைப் பற்றி நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப்
போல நீண்டு இருந்தது.
அமுது ஒத்திடும்
அரு மொழியாலே ---
பெண்களின்
சொல்லானது அமுதம் போல இனிமை தருவது. அமுது தன்னை உண்டாருக்கு நன்மையைச் செய்யும்.
அதுபோல, அருளையே
கருதி இருக்கும் பெண்களின் சொல்லானது அதைக் கேட்டவருக்கு நன்மையையே செய்யத்
தக்கது.
ஆனால், பொருளையே கருதி இருக்கும் பெண்களின் சொல்லானது, இன்பம் தருவது போலத் தோன்றி, பின்னர் துன்பத்தையே தரும். அவரது சொற்களால் ஆன்மாவின் வாழ்க்கைப் பயணமானது
தடைப்படும்.
சயிலத்து எழு
துணை முலையாலே ---
சயிலம் - மலை.
மலைப்பைத் தருவதால் மலை எனப்பட்டது.
பெண்களின்
முலைகள் மலை போலப் பருத்து, கண்டாரை மலைய வைப்பது.
சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மி, சீ பாய்ந்து ஏறி,
உகிரால் கீற உலர்ந்து, உள் உருகி,
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும் காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்.
கொப்புளம் போல இரண்டாகி, முன் பக்கத்தில் தோன்றி, திரட்சி
பெற்று, பூரித்து, சீப்பெருகி ஏறி, நகத்தால் கிழிக்க உலர்ந்து போய் மனம் உருகி, சில காலத்திற்குப் பின் தாங்கி வற்றிப் போய்விடுகின்ற தனங்களைப் பார்த்து
தாமரை மொட்டு என்று குழறுகின்ற காமாந்தகாரத்தில் முழுகிக் கிடக்கும் குருடருக்குச்
சொல்லுவேன் என்கின்றார் பட்டினத்து அடிகள்.
சீறும் வினை அது பெண் உரு ஆகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்
பீறும் மலமும் உதிரமும் சாயும் பெரும் குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன் இறைவா, கச்சி ஏகம்பனே
என்றார் பட்டினத்து அடிகள்.
இருவினையின் சம்பந்தத்தால் தேகமும், தேக சம்பந்தத்தால் ஊழ்வினையும், ஊழ்வினையால்
பலவகைத் துன்பங்களும் தோன்றுவது போல, பெண்களைக் காண்டல், சிந்தித்தல், அவர் சொல் கேட்டல் முதலியன பலவகைத் துன்பத்திற்கும் ஆதாரமாக
இருப்பதால், "சீறும் வினை அது பெண் உரு
ஆகி" என்றும், மானுட
உறுப்புக்கள் முப்பத்திரண்டுள், நீண்டும், பரந்தும், தடித்தும், மாமிசம் பெற்றும், திரண்டும் உருண்டும் இருக்க வேண்டிய அந்த அந்த அவயவங்களுக்கு உரிய அழகு
நிரம்பப் பெற்று இருத்தலினால், திரண்டு, உருண்டு கூறும் முலையும் இறைச்சியும் ஆகி என்றார்
பட்டினத்து அடிகள்.
காமவேட்கையானது அரும் தவராலும் அகற்றுதற்கு முடியாத வேகம் உடையது. ஆகையால், மாயைக்குச் சூழ ஒண்ணா வடிவேற்
கடவுளது திருவருளை நாடுகிறார். முருகவேளது திருவருள் துணைகொண்டே விலக்கற்கரிய
அவ்வாசையை நீக்க வேண்டும். அவனது அருளாலேயே ஆசையாகிய கட்டு தூள்படும். “நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின” என்ற அருள் மொழியைக் காண்க.
இதனைச் சிதம்பர சுவாமிகள் திருவாக்காலும் உணர்க.
மாதர் யமனாம், அவர்தம்
மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், --- ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.
விழியாலும், மொழியாலும், முலையாலும் ஆடவருக்குக் காம
மயக்கத்தை உண்டு பண்ணுபவர் பெண்கள் என்பதால்,
"கருங்குழல், செவ்வாய்
வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து
எய்த்து இடை வருந்த எழுந்து, புடைபரந்து,
ஈர்க்ககு இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்"
என்று அருளினார் மணிவாசகப் பெருமான்.
தடை உற்று அடியனும்
மடிவேனோ ---
பெறுதற்கு அரிய
இந்த உடம்பைப் பெற்றது, பெறுதற்கு
அரிய பிரானாகிய இறைவன் திருவடியை வழிபட்டு, பெறுதற்கு அரிய பேறு ஆகிய வீடுபேற்றினை அடைவதற்கே. அதைப் பெறாதவர்கள் எல்லாம்
பெறுதற்கு அரிய உடம்பினைப் பெற்றிருந்தும் பெறுதற்கு அரிய பேற்றினை இழந்தவர்கள் ஆவார். "அரிது அரிது
மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றார் ஔவைப் பிராட்டியார்.
பெறுதற்கு அரிய
பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய
பிரானடி பேணார்;
பெறுதற்கு அரிய
பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது
ஓர் பேறு இழந்தாரே.
பெறுதற்கு அரிய
மானுடப் பிறவியினைப் பெற்றும் பெறுதற்கு அரிய சிவபெருமான் திருவடி இணையைப் பேணுதற்கு
அறிகிலர். இவர்கள் பெறுதற்கரிய பிராணிகளாவர். இவர்கள் ஆறறிவு உயிரோடு பிறந்தும்
ஐயறிவு விளங்கும் விலங்கு முதலியவற்றோடும் ஒப்பாகார மாட்டார் என்னும் கருத்தால் 'பிராணிகள்' என்று அருளினர்.
இத்தகையோர் பெறுதற்கு அரிய சிவபெருமான் திருவடிப்பேற்றின் நற்பேறு இழந்தோராவர்.
காம மயக்கத்தால் பெறுதற்கு
அரிய பேற்றினை இழந்து, வாழ்க்கை வெறுமையாகி, பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி
இறக்க நேரும் என்பதால், "தடை உற்று அடியனும் மடிவேனோ" என்று அருளினார் அடிகளார்.
கலகவிழி மாமகளிர் கைக்குளே ஆய், பொய்
களவுமதன் நூல்பல படித்து, அவா வேட்கை
கனதனமும் மார்பும் உறல் இச்சையால்
ஆர்த்து ..... கழுநீர்ஆர்
கமழ்நறை சவாது புழுகைத் துழாய் வார்த்து
நிலவரசு நாடு அறிய கட்டில்
போட்டார்ச் செய்
கருமம் அறியாது, சிறு புத்தியால்
வாழ்க்கை ......
கருதாதே,
தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து,
நிறைபவுசு வாழ்வு அரசு சத்யமே
வாய்த்தது
என உருகி ஓடி, ஒரு சற்றுளே
வார்த்தை .....
.தடுமாறித்
தழுவி, அநுராகமும் விளைத்து, மா யாக்கை
தனையும் அரு நாளையும் அவத்திலே
போக்கு
தலைஅறிவு இலேனை நெறி நிற்க நீ
தீட்சை......
தரவேணும்.
என்கின்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.
அடியவர்கள்
எப்போதும் இறைவன் திருவடியை மறவாதிருக்கும் தன்மை உடையவர்கள். இந்த நிலையை அவர்கள்
ஆண்டவனிடம் வேண்டிப் பெறுவார்கள். “மீண்டும் பிறப்பு
உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்” என்று
வேண்டுகின்றார் காரைக்காலம்மையார். “புழுவாய்ப்
பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்”
என்கிறார் அப்பர்.
படையால்
உயிர்கொன்று தின்று,
பசுக்களைப் போலச் செல்லும்
நடையால் அறிவு
இன்றி, நாண் சிறிது
இன்றி, நகும் குலத்தில்
கடையாய்ப்
பிறக்கினும், கச்சியுள்
ஏகம்பத்து எங்களை ஆள்
உடையான் கழற்கு
அன்பரேல், அவர்
யாவர்க்கும் உத்தமரே. --- பதினோராம் திருமுறை.
எழுவகைப்
பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
எய்துக, பிறப்பில் இனி
நான்
எய்தாமை
எய்துகினும் எய்திடுக, இருமையினும்
இன்பம் எய்தினும் எய்துக,
வழுவகைத்
துன்பமே வந்திடினும் வருக,
மிகுவாழ்வு வந்திடினும் வருக,
வறுமை வருகினும்
வருக, மதிவரினும் வருக, அவ
மதிவரினும் வருக, உயர்வோடு
இழிவகைத்து
உலகின் மற்று எதுவரினும் வருக, அலது
எது போகினும் போக, நின்
இணைஅடிகள் மறவாத
மனம் ஒன்று மாத்திரம்
எனக்கு அடைதல் வேண்டும் அரசே,
கழிவகைப்
பவரோகம் நீக்கும் நல்அருள் என்னும்
கதிமருந்து உதவு நிதியே
கனகஅம் பலநாத
கருணைஅம் கணபோத
கமலகுஞ் சிதபாதனே. --- திருவருட்பா.
பெருமானே! தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற இந்த ஏழுவகைப் பிறவிகளில் எந்தப் பிறவியிலேனும் அடியேன் பிறக்கத்
தயார். அது பற்றிச் சிறியேனுக்குக் கவலையில்லை.
ஒருவேளை பிறவாமை
வந்தாலும் வரட்டும். இம்மையிலும் மறுமையில் இன்பமே வருவதேனும் வரட்டும். அல்லது
துன்பமே வருவதாயினும் சரி. அது பற்றியும்
அடியேனுக்குக் கவலையில்லை.
சிறந்த வாழ்வு
வந்தாலும் வரட்டும்; பொல்லாத வறுமை வருவதாயினும் நன்றே.
எல்லோரும் என்னை
நன்கு மதிப்பதாயினும் மதிக்கட்டும்; அல்லது சென்ற
சென்ற இடமெல்லாம் கல்லை விட்டு எறிந்து கருப்புக்கொடி காட்டி `வராதே! திரும்பிப்போ’ என்று அவமதி புரிந்தாலும் புரியட்டும்.
உயர்வும்
தாழ்வும் கலந்துள்ள இந்த உலகிலே மற்று எது வந்தாலும் வரட்டும். எது போனாலும் போகட்டும்.
இறைவனே! எனக்கு
இவைகளால் யாதும் கவலையில்லை.
ஒரே ஒரு வரத்தனை
உன் பால் யாசிக்கின்றேன்.
உனது இரண்டு
சரணாரவிந்தங்களையும் சிறியேன் மறவாமல் இருக்கின்ற மனம் ஒன்றுமட்டும் வேண்டும்.
அந்த வரத்தை வழங்கி அருளும்” என்று வடலூர் வள்ளல் வேண்டுகின்றார்.
என்ன அழகிய வரம்?
நாரதர் ஒரு
சமயம் முருகப் பெருமானை வேண்டித் தவம் புரிந்தார். முருகவேள் அவர் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்?” என்று
கேட்டருளினார். நாரதர், “ஐயனே! உன்
திருவடியை மறவாத மனம் வேண்டும்” என்றார். முருகன் அந்த வரத்தை நல்கி
விட்டு, “இன்னும் ஏதாவது வரம் கேள், தருகிறேன்” என்றார். நாரதர் “பெருமானே! உமது திருவடியை மறவாத
மனத்தை உமது திருவருளால் பெற்ற நான், அந்த மனத்தால் இன்னொரு
வரத்தைக் கேட்கின்ற கெட்ட புத்தி வராமல் இருக்க வேண்டும்” என்று
கேட்டார்.
கருத்துரை
முருகா! பெண் ஆசையால்
அழியாமல், உன் ஆசையால் அழியாத பதத்தைப் பெற அருள்.
No comments:
Post a Comment