தலைமுடி நரைக்கவில்லையே





தலைமுடி நரைக்கவில்லையே.

மருத்துவம் இல்லாமலே, பூச்சுக்கள் இல்லாமலே, தலைமுடி நலைரை இல்லாமல் விளங்க வேண்டுமா?

பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் தமது ஊராகிய பிசிரில் வாழ்ந்து வரும் காலத்தில், உறையூரிலிருந்து அரசு புரிந்த கோப்பெருஞ் சோழனுடைய குணநலங்களைக் கேள்வியுற்று அவனைக் காண வேட்கை கொண்டு இருந்தார். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையார் நலங்களைக் கேள்வி உற்று, அவரிடத்தே பெரும் நட்பினைத் தன் உள்ளத்தே வளர்க்கல் உற்றான். இருவருடைய நட்பு உணர்ச்சிகள் தாமே மிக்கு, ஒருவரை ஒரருவர் தம் பெயரைக் கூறுமிடத்து, தத்தம் நண்பர் பெயரை இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றன. "நான் கோப்பெருஞ்சோழனின் நண்பன் ஆகிய பிசிராந்தையார்" என்பார் புலவர். "நான் பிசிராந்தையாரின் நண்பன் கோப்பெருஞ்சோழன்" என்பான் அரசன்.

    பிசிர் என்னும் ஊர் பாண்டிய நாட்டின் ஒரு மூலையில் உள்ளது. உறையூர் சோழ நாட்டில் உள்ளது. இடையிலே வெகு தொலைவு உள்ளது. ஒருவரை ஒருவர் காணாத நிலையிலும், குண நலன்களைக் கேள்வி உற்ற நிலையிலேயே நட்பு உணர்வு பூண்டு இருந்தனர் இருவரும்.

புணர்ச்சி, பழகுதல் வேண்டா, உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும்.

என்றார் திருவள்ளுவ நாயனார்.

நட்புக் கொள்ளுவதற்கு ஒருவரை ஒருவர் புறத்திலே தொடர்பு பூண்டும், பலகாலம் பழகியும் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஒத்த உணர்வு உடையவராக இருந்தாலே நட்பு என்னும் உரிமை உண்டாகும்.

    கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். சான்றோர் பலர் அவனுடன் வடக்கிருந்தனர். அந்த நேரத்தில், அவன், பிசிராந்தையாரைக் காண விழைந்தான். ஒத்த உணர்ச்சியினர் ஆதலால் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பதை அறியாமல், அனைக் காண வேண்டிப் பாண்டிய நாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர் வந்து சேர்வதற்குள் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டான்.  அவனுக்கு நடுகல்லும் நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனம் சோர்ந்து வருந்தினார். சிறிது தெளிந்ததும் அருகில் இருந்த சான்றோருடன் கோப்பெருஞ்சோழன் குணநலங்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது சிலர், “சான்றோரே! நாங்கள் உங்களை நெடுங்காலமாகக் கேள்விப் படுகின்றோம்.  உங்கள் வயதும் அதிகமாக உள்ளது. உங்கள் வயதைப் பார்க்க, உங்கள் தலைமுடி நரைத்து இருக்க வேண்டும். ஆனால், நரை சிறிதும்  காணப்படவில்லையே! காரணம் என்னவோ?” என்று வினவினார்கள்.  தலைமுடி நரைப்பதற்குக் காரணம் முதுமை அல்ல. மனக் கவலையே.  எனக்கு மனக் கவலை கிடையாது. அதற்குக் காரணம் என்னுடைய குடியிலோ,  ஊரிலோ,  நாட்டிலோ கவலை உண்டாவதற்குரிய நிலைகள் இல்லை.  எவ்வாறு என்றால், என் குடியில் என் மனைவி மக்கள் அறிவு நிரம்பியவர்கள். என் ஏவலர்கள் என் குறிப்புப் பிழையாது ஒழுகுபவர்கள். எங்கள் ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையை உடைய சான்றோர் பலர் உள்ளனர். என் நாட்டு வேந்தனும் அன்பு உடையவன், அறம் அல்லாதவற்றைச்  செய்ய மாட்டான். அதனாலேயே எனது அறிவும் சிறந்து விளங்குகின்றது என்று பின் வரும் பாடலால் காட்டினார். புறநானூற்றில் வரும் பாடல் இது.

 யாண்டுபல ஆக, நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்,
யாண்கண்ட அனையர் என் இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும், தன தலை
 ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.

இதன் பதவுரை ---

யாண்டு பல ஆக --- வாழ்ந்து பல ஆண்டுகள் ஆகி வயது முதிர்ந்த நிலையிலும்,

நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர் என --- உமக்குத் தலை நரை இல்லாமல் இருக்கின்றதே, இதற்குக் காரணம் என்ன என்று,

வினவுதிர் ஆயின் --- கேட்பீர்கள் ஆனால், சொல்லுகின்றேன்,

என் மாண்ட மனைவியொடு மக்களும் நிரம்பினர் --- என்னுடைய மனைவி மாட்சிமைப்பட்ட குணங்களை உடையவள்,  எனது புதல்வரும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள்;

யான் கண்டனையர் என் இளையரும் --- நான் நினைப்பது போலவே, என்னுடைய குறிப்பை அறிந்து வேலை செய்பவர்கள் எனது பணியாளர்கள்.

வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் --- என் நாட்டு  அரசனும் முறை அல்லாதனவற்றைச் செய்மாட்டான்.  குடிமக்களைக் காக்கும் தொழிலையே அன்போடு செய்வான்;

அதன் தலை --- அதற்கு மேலாக,

யான் வாழும் ஊர் --- நான் வாழுகின்ற ஊரில்

ஆன்று அடங்கி அவிந்த கொள்கை --- நற்குணங்களால் அமைந்து, பணிய வேண்டிய உயர்ந்தாரிடத்துப் பணிந்து, மனம் மொழி மெய்களால் அடங்கிய கோட்பாட்டினை
உடைய

சான்றோர் பலர் --- சான்றோர் பலர் உள்ளனர்.

இன்றைய விஞ்ஞானம் தலை நரைப்பதற்குக் காரணம் கவலை, மன அழுத்தம் என்கின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர், என் மனைவி நல்லவள். என் மக்கள் கற்றவர். பணியாளர்கள் என் கருத்தின் வழி நடப்பவர்கள். நாட்டினை ஆளுகின்ற அரசன் நல்லவன், அன்பு உடையவன். நான் வாழும் ஊரில் உள்ளவர்கள் சான்றோர்கள். எனவே, எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்குத் தலைமுடி நரைக்கவும் இல்லை என்கின்றார். எவ்வளவு பெரிய உண்மை.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...