திருப் பரிதிநியமம்





திருப் பரிதிநியமம்
(பருத்தியப்பர் கோயில், பரிதியப்பர் கோயில்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் பருத்தியப்பர் கோயில் என்றும் பரிதியப்பர் கோயில் என்றும் வழங்கப்படுகின்றது.

      தஞ்சாவூரில் இருந்து ஓரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மி. தொலைவில் உள்ள மேல உளூர் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மி. சென்றால் இத்திருத்தலம் இருக்கிறது.

      தஞ்சாவூரிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், மன்னார்குடிச் சாலை சடையார் கோயில், பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்து செல்கிறது. ஓரத்தநாடுக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.


இறைவர்              : பரிதியப்பர்.

இறைவியார்           : மங்களாம்பிகை, மங்களநாயகி.

தல மரம்                : அரசமரம்

தீர்த்தம்                 : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.  (சூரியதீர்த்தம் கோயிலின் முன்பும்,
சந்திரதீர்த்தம் கோயிலின் பின்பும்)

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - விண்கொண்ட தூமதி சூடி.


     சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல், அவரை நிந்தனை செய்து தட்சன் நடத்திய யாகத்தில் சூரியன் கலந்து கொண்டதால் அவனுக்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தைப் போக்கிக் கொள்ள சூரியன் 16 இடங்களில் சிவலிங்கம் தாபித்து வழிபட்டான். இத்தலத்தில் தான் சூரியனுக்கு ஏற்பட்ட குற்றம் விலகியது. மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம் சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என்று அழைக்கப்படுகிறார். பங்குனி மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படுகின்றன.

         கிழக்கு நோக்கியுள்ள இத்திருக்கோயில் இரண்டு கோபுரங்களுடன் விளங்குகிறது. இராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் நேரே கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வசந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உட் பிரகாரம் அடைந்தால், அங்கு விநாயகர், முருகன், கஜலட்சுமி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.

         வாயில் காவலர்களையும் விநாயகரையும் தொழுது உட்சென்றால் மூலவர் பரிதியப்பர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம், அதையடுத்து மூலவரை நோக்கியபடி சூரியன் இருப்பதைக் காணலாம். சண்டேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன.

         ஆலயத்திற்கு மூன்று தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும் சந்திரதீர்த்தம், வேத தீர்த்தம் கோவிலின் பின்புறமும் உள்ளன. தலமரம் அரசமரம்.

     மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள். எத்தகைய பிதுர் தோஷத்திற்கும் இத்தலம் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக எந்த கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும் இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்கண்டேயர் அருவ வடிவில் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கோது அகன்ற நீட்டும் சுருதி நியமத்தோர்க்கு இன்னருளை நீட்டும் பருதி நியமத்தோய்" என்று போற்றி உள்ளார்.

         காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 375
பழுதுஇல் சீர்த்திருப் பரிதிநன் னியமமும் பணிந்து,அங்கு
எழுது மாமறை ஆம்பதி கத்துஇசை போற்றி,
முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே, முறைமை
வழுஇல் சீர்திருப் பூவனூர் வணங்கிவந்து அணைந்து.

         பொழிப்புரை : அவளிவணல்லூரில் இருந்து, குற்றங்கள் இல்லையாகச் செய்யும் சிறப்புடைய `திருப்பரிதி நியமத்ததை' வழிபட்டு, அங்கே எழுதும் மறையாகும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, எல்லாமாய் இருக்கும் சிவபெருமானின் திருக்கோயிலை வணங்கி, முறைமையினின்றும் தவறாத சிறப்புடைய `திருப்பூவனூரை\' வந்து சேர்ந்து,

         குறிப்புரை : திருப்பரிதி நியமத்தில் அருளிய பதிகம் `விண் கொண்ட' (தி.3 ப.104) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும். வழுவில் சீர் - வழுவிலார் எனவும் பாடம்.


3. 104   திருப்பரிதிநியமம்            பண் - பழம்பஞ்சுரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் நீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொடு ஏர்கவர்ந்த கள்வர்க்குஇடம்போலும்
பண்கொண்ட வண்டுஇனம் பாடிஆடும் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : ஆகாயத்தை இடமாகக் கொண்ட வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சூடிய நீண்ட விரிந்த சிவந்த சடைதாழ , உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு தம் திருமார்பில் திருவெண்ணீற்றினைப் பூசி, பெருமைக்கு ஒவ்வாமல் பிச்சை ஏற்று, கண்ணைக் கவரும் தோற்றப்பொலிவொடு வந்து என் அழகைக் கவர்ந்த கள்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 2
அரஒலி வில்ஒலி அம்பின்ஒலி அடங்கார் புரம்மூன்றும்
நிரவவல்லார் நிமிர்புன் சடைமேல் நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்துஎன் எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : வாசுகி என்னும் பாம்பாகிய நாணின் ஓசையும் , மேருமலையாகிய வில்லின் ஓசையும் , காற்று , திருமால் , நெருப்பு ஆகிய அம்பின் ஓசையும் எழ , பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அழித்துத் தரையோடு தரையாக்கியவர் சிவபெருமான் . நிமிர்ந்த மெல்லிய சடைமேல் கலைநிரம்பாத சந்திரனைச் சூடி இரவில் வந்து என் எழிலைக் கவர்ந்த இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
வாள்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதுஅஞ்ச
நீள்முகம் ஆகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து,
நாள்முகங் காட்டி நலம்கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்
பாண்முக வண்டுஇனம் பாடிஆடும் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : ஒளிபொருந்திய திருமுகத்தையும் , நீண்ட கூந்தலையும் , வாள்போன்று ஒளியும் கூர்மையும் மிக்க நீண்ட கண்களையும் மூங்கில் போன்ற மென்மை வாய்ந்த தோள்களையும் உடைய உமாதேவி அஞ்சும்படி , நீண்ட துதிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவபெருமான் . அவர் நான் நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர் . என் பெண்மை நலத்தை இழந்து அவரையே பற்றுமாறு செய்தவர் . அத் தலைவர் வீற்றிருந்தருளும் இடம் வண்டுகள் முரன்று பாடியாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
வெஞ்சுரம் சேர்விளை யாடல்பேணி, விரிபுன் சடைதாழ,
துஞ்சுஇருள் மாலையும் நண்பகலும் துணைஆர் பலிதேர்ந்து,
அம்சுரும்பு ஆர்குழல் சோரஉள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும்,
பஞ்சுரம் பாடிவண்டு யாழ்முரலும் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : சிவபெருமான் கொடிய பாலைவனம் போன்ற சுடுகாட்டில் நடனம் செய்பவர் . விரிந்த சிவந்த சடை தொங்க அனைவரும் உறங்குகின்ற இரவிலும் , மாலையிலும் , நண்பகலிலும் , பூத கணங்கள் துணைவரப் பிச்சை ஏற்பவர் . அழகிய வண்டுகள் ஒலிக்கக் கூந்தல் சரிய என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டுகள் யாழொலி போன்று பஞ்சுரம் முதலிய பண்ணிசைத்துப் பாடும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
நீர்புல்கு புன்சடை நின்றுஇலங்க, நெடுவெண் மதிசூடி,
தார்புல்கு மார்பில்வெண் நீறுஅணிந்து, தலையார் பலிதேர்வார்,
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்,
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : சிவபெருமான் மென்மையான சடையில் கங்கை நதியைத் தாங்கியதோடு , இளம்பிறைச் சந்திரனையும் சூடியவர் . மலர்மாலை அணிந்த திருமார்பில் திருவெண்ணீறும் அணிந்தவர் . பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர் . என் தோற்றப் பொலிவையும் , அழகையும் கவர்ந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
வெங்கடுங் காட்டுஅகத்து ஆடல்பேணி, விரிபுன் சடைதாழ,
திங்கள் திருமுடிமேல் விளங்க, திசையார் பலிதேர்வார்,
சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க்கு இடம்போலும்,
பைங்கொடி முல்லை படர்புறவில் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : சிவபெருமான் மிகுந்த வெப்பமுடைய சுடுகாட்டில் திருநடனம் செய்பவர் . விரிந்த சிவந்த சடைதொங்கச் சந்திரனைத் திருமுடிமேல் சூடியவர் . எல்லாத் திசைகளிலும் சென்று பிச்சையேற்றுத் திரிபவர் . நான் அணிந்துள்ள சங்காலாகிய வளைகள் சோர , என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
பிறைவளர் செஞ்சடை பின்தயங்க, பெரிய மழுஏந்தி,
மறைஒலி பாடி,வெண் நீறுபூசி, மனைகள் பலிதேர்வார்,
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்,
பறைஒலி சங்குஒலி யால்விளங்கும் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : சிவபெருமான் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்தசடை பின்புறம் விளங்கித் தொங்க , பெரிய மழுப்படையைக் கையிலேந்தி , வேதங்களைப் பாடி , திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் பிச்சையேற்றுத் திரிவார் . அவர் , என் முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்றுவிழ , என் தோற்றப் பொலிவைக் கவர்ந்த இறைவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பறை யொலியும் , சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
ஆசுஅடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்துஏத்த,
மாசுஅடை யாதவெண் நீறுபூசி, மனைகள் பலிதேர்வார்,
காசுஅடை மேகலை சோரஉள்ளம் கவர்ந்தார்க்கு இடம்போலும்,
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாக விளங்கும் சிவபெருமான் தேவர்களும் , வித்தியாதரர்களும் உடன் திகழ , அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபடப்படுபவர் . அவர் , பாவத்தை அடைவியாது நீக்க வல்ல திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்றுத் திரிபவர் . அவர் மணிகள் பதிக்கப்பெற்ற மேகலை நழுவி விழுமாறு என்னை மெலியச்செய்து , என் உள்ளம் கவர்ந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால், நயந்துஏத்தக்
கூடலர், ஆடலர் ஆகிநாளும் குழகர், பலிதேர்வார்,
ஏடுஅலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்,
பாடலர் ஆடல ராய்வணங்கும் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : தேடிக் காணாதவர்களாகிய பிரமனும் , திருமாலும் பணிந்து ஏத்த அவர்களிடத்துக் காணக் கூடாதவராகி எம்மிடத்து விளையாடுதலை உடையவராய் நாடோறும் இளமையும் , அழகு முடையவராய்ப் பிச்சையேற்றுத் திரிபவர் , சிவபெருமான் . அவர் இதழ்களையுடைய தாமரை போன்ற என்முகம் சோர்வடைய என் அழகைக் கவர்ந்த கள்வர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடியவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி , ஆடி வணங்கும் திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
கல்வளர் ஆடையர், கையில்உண்ணும் கழுக்கள், இழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா, சுடுநீறு அதுஆடி,
நல்வளை சோர நலம்கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்,
பல்வளர் முல்லைஅம் கொல்லைவேலிப் பரிதிந் நியமமே.

         பொழிப்புரை : காவிக்கல்லால் துவர்நிறம் பெற்ற ஆடையணிந்த புத்தர்களும் , கையில் உணவு வாங்கி உண்ணும் கழுக்களான சமணர்களும் கூறும் , குற்றமுடைய சொற்களைப் பொருளென நினைக்க வேண்டா . சுட்ட திருவெண்ணீறு அணிந்து, என் நல் வளையல்கள் கழல , என் பெண்மை நலத்தைக் கவர்ந்த தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பெண்களின் பற்களைப் போல அரும்பு அடர்ந்த முல்லைவனமே வேலியாக உடைய திருப் பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும். அப்பெருமானை வழிபட்டு உய்வீர்களாக என்பது குறிப்பு .


பாடல் எண் : 11
பைஅர வம்விரி காந்தள்விம்மு பரிதிந் நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனை, தமிழ்ஞான சம்பந்தன்
பொய்இலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்துஏத்த,
ஐயுறவு இல்லை பிறப்புஅறுத்தல், அவலம் அடையாவே.

         பொழிப்புரை : படத்தையுடைய பாம்பு போல மலர் விரிந்த காந்தட்செடிகள் செழித்துள்ள திருப்பரிதிநியமம் என்னும் திருத் தலத்தில் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் பொய்யிலியாகிய சிவபெருமானைப் போற்றி , தமிழ்வல்ல ஞான சம்பந்தன் உண்மையன்போடு அருளிய இப்பத்துப் பாட்டுக்களாலாகிய பாமாலையால் புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை . அவர்கட்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை .
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...