அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
திரைவார் கடல்
(திருமயிலை)
முருகா!
அடியார் திருக்கூட்டத்துள்
இருந்து
அருள்பெற்று உய்யவேண்டும்.
தனனா
தனனாதன தனனா தனனாதன
தனனா தனனாதன ...... தனதான
திரைவார்
கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல் ...... திகழாமே
தினநா
ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால்
வரைமா
துமையாள் தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு ...... னடியாராய்
வழிபா
டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல ...... அருள்வாயே
இறைவா
ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய ...... லிலராகி
இருளா
மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ ...... ரிடர்தீர
மறமா
வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுசூரனை ...... மடிவாக
வதையே
செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
திரைவார்
கடல்சூழ், புவி தனிலே, உலகோரொடு
திரிவேன், உனை ஓதுதல் ...... திகழாமே,
தின
நாளும் உனே துதி மனது ஆர பினே சிவ
சுதனே! திரி தேவர்கள் ...... தலைவா! மால்
வரை
மாது உமையாள் தரு மணியே! குகனே! என
அறையா, அடியேனும் ...... உன் அடியாராய்
வழிபாடு
உறுவாரொடு, அருள் ஆதரம் ஆயிடும்
மக நாள் உளதோ? சொல ...... அருள்வாயே.
இறை
வாரண தேவனும் இமையோர் அவர் ஏவரும்
இழிவாகி முனே இயல் ...... இலராகி,
இருளா
மனதே உற, அசுர ஈசர்களே மிக
இடரே செயவே, அவர் ...... இடர்தீர,
மறமா
அயிலே கொடு, உடலே இருகூறு எழ,
மதமா மிகு சூரனை ...... மடிவாக,
வதையே
செயும் மாவலி உடையாய், அழகாகிய
மயிலாபுரி மேவிய ...... பெருமாளே.
பதவுரை
இறை வாரண தேவனும் --- அயிராவதம்
என்னும் வெள்ளை யானைக்குத் தலைவனாகிய இந்திரனும்,
இமையோர் அவர் ஏவரும் --- ஏனைய
தேவர்கள் அனைவரும்,
இழிவாகி --- இழிந்த நிலையை அடைந்து,
முனே இயல் இலராகி --- முன்னர் இருந்த
தமது தகுதியை இழந்தவர்கள் ஆகி,
இருளா மனதே உற --- இருளான
துன்பத்தினை மனதில் கொண்டு,
அசுர ஈசர்களே மிக இடரே செயவே --- அசுரர்
தலைவர்கள் மிக்க இடர்களைச் செய்யவும்,
அவர் இடர் தீர --- அவர்களது
இடரானது தீருமாறு,
மற மா அயிலே கொடு --- வீரம் மிக்க
சிறந்த வேலாயுதத்தினைக் கொண்டு
உடலே இரு கூறு எழ --- உடல் இரண்டு கூறுகளாகும்படி,
மத மா மிகுசூரனை
மடிவாக
--- ஆணவம் மிக்க சூரபதுமனை அழித்து
வதையே செயு மாவலி உடையாய் --- வதை செய்த
பெருவலி உடையவரே!
அழகு ஆகிய மயிலாபுரி மேவிய
பெருமாளே
--- அழகு விளங்கும் திருமயிலாப்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில்
மிக்கவரே!
உனை ஓதுதல் திகழாமே --- உம்மை ஓதித்
துதித்தல் இல்லாமல்,
திரைவார் கடல் சூழ் புவி
தனிலே உலகோரொடு திரிவேன் --- அலைகள் நிறைந்த நீண்ட கடலால்
சூழப்பட்ட இந்தப் பூமியிலே உலக மக்களோடு திரிகின்றேன்.
தின நாளும் --- நாள்தோறும்,
முனே துதி மனதார பினே --- எழுந்தவுடன்
மனதார உம்மைத் துதித்து, அதன் பின்னரும் (எத் தொழிலைச்
செய்தாலும்)
சிவசுதனே --- சிவ குமாரரே!
திரி தேவர்கள் தலைவா --- மும்மூர்த்திகளின்
தலைவரே!
மால் வரைமாது உமையாள்
தரு மணியே ---
பெரிய மலைமாது ஆகிய உமாதேவியார் பெற்றருளிய மணியே!
குகனே --- அடியார்களின்
இதயமாகிய குகையில் விளங்குபவரே!
என அறையா அடியேனும் --- என்று வாயாரப்
போற்றாத அடியவனாகிய நானும்,
உன் அடியாராய் வழிபாடு
உறுவாரொடு ---
உமக்கு அடியவர்கள் ஆகி, உம்மை வழிபடும் அடியவவர்களோடு
கூடி,
அருள் ஆதரம் ஆயிடும் மகநாள்
உளதோ
--- அருள் பெறுகின்ற சிறப்புப் பொருந்திய நாள் ஒன்றும் உண்டாகுமோ?
சொல அருள்வாயே --- அடியேனுக்குச் சொல்லி அருள் புரிவீராக.
பொழிப்புரை
அயிராவதம் என்னும் வெள்ளை யானைக்குத்
தலைவனாகிய இந்திரனும், ஏனைய தேவர்கள்
அனைவரும், அசுரர் தலைவர்கள் மிக்க
இடர்களைச் செய்யவும், முன்னர் இருந்த தமது
தகுதியை இழந்தவர்கள் ஆகி, இழிந்த நிலையை அடந்து, இருளான துன்பத்தினை மனதில் கொண்ட, அவர்களது
இடரானது தீருமாறு, வீரம் மிக்க சிறந்த
வேலாயுதத்தினைக் கொண்டு, உடல் இரண்டு கூறுகளாகும்படி, ஆணவம்
மிக்க சூரபதுமனை அழித்து வதை செய்த பெருவலி உடையவரே!
அழகு விளங்கும் திருமயிலாப்பூர் என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
உம்மை ஓதித் துதித்தல் இல்லாமல், அலைகள் நிறைந்த நீண்ட கடலால் சூழப்பட்ட இந்தப்
பூமியிலே உலக மக்களோடு திரிகின்றேன்.
நாள்தோறும், எழுந்தவடன் மனதார உம்மைத் துதித்து, அதன் பின்னரும் (எத் தொழிலைச்
செய்தாலும்) சிவ
குமாரரே! மும்மூர்த்திகளின் தலைவரே!
பெரியமலையின்
மகளாகிய உமாதேவியார் பெற்றருளிய மணியே! அடியார்களின்
இதயமாகிய குகையில் விளங்குபவரே! என்று வாயாரப்
போற்றாத அடியவனாகிய நானும், உமக்கு அடியவர்கள்
ஆகி, உம்மை வழிபடும் அடியவர்களோடு
கூடி, அருள் பெறுகின்ற
சிறப்புப் பொருந்திய நாள் ஒன்றும் உண்டாகுமோ? அடியேனுக்குச் சொல்லி அருள் புரிவீராக.
விரிவுரை
உனை
ஓதுதல் திகழாமே, திரைவார் கடல் சூழ் புவி
தனிலே உலகோரொடு திரிவேன் ---
இறைவனுடைய
திருப்புகழைக் கூறும் அருள் நூல்களை ஓதித் தெளிந்து, மனதாரத் துதித்து வழிபாடு புரிதல் வேண்டும்.
அதுவே பிறப்பு எடுத்ததன் பயன்.
"அரிது
அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுதற்கு
அரிய பிறவி இந்த மானிடப் பிறவி. இந்தப் பிறவி வாய்த்ததன் பயனாக இறைவனை மனதார எண்ணி
நாளும் வழிபட வேண்டும். இறைவன் திருப்புகழைப் பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள்களே
ஆகும். இறைவன் திருப்புகழைப் பேசாத நாக்கு, நாக்கு அல்ல. நாக்குப் போலவே பிற
உறுப்புக்களும் இறைவன் திருவடியில் பொருந்த வேண்டும்.
இதனைச்
சுருக்கமாக, திருவள்ளுவ
நாயனார் பின்வரும் திருக்குறளில் காட்டினார்.
கோள்இல்
பொறியில் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை
வணங்காத் தலை.
எண்ணத்தக்க
குணநலங்கள் உடையவனாகிய இறைவனின் திருவடிகளைத் தொழாத தலைகள் தமக்கு உரிய புலன்களைக்
கொள்ளுதல் இல்லாத ஐம்பொறிகளைப் போலப் பயன் அற்றவை என்பது இத் திருக்குறளின்
பொருள்.
"காணாத
கண் முதலியன போல, வணங்காத தலைகள்
பயன் இல எனத் தலைமேல் வைத்துக் கூறினார்.
இனம் பற்றி, வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதும் கொள்க"
என்றார் பரிமேலழகர்.
அறநூல்களைக்
கேட்பதே அழகிய காது ஆகும் என்கின்றது அறநெறிச்சாரம்...
கண்டவர்
காமுறூஉம் காமரு சீர்க் காதில்
குண்டலம்
பெய்வ செவி அல்ல, --கொண்டு உலகில்
மூன்றும்
உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றிச்
சூன்று
சுவைப்ப செவி.
கண்டவர்
விரும்பும் சிறந்த அழகனை உடைய காதில் குண்டலங்கள் அணியப்படுவன அழகான செவி அல்ல. உலகில்
அறம், பொருள், இன்பம் என்னும்
மூன்றினை உணர்த்தும் நூல்களைக் கேட்டு அறிந்து, அவற்றுள் முதன்மையான
அறநூலைத் தவறுதல் இல்லாமல், இடைவிடாது கேட்டு, ஆராய்ந்து இன்பம்
அடைவதற்கு அமைந்தவையே காதுகள் ஆகும்.
நல்ல
கடவுள் காட்சியைக் காண்பதே கண்கள் என்கின்றது அறநெறிச்சாரம்..
பொருள்எனப்
போழ்ந்து அகன்று பொன்மணிபோன்று எங்கும்
இருள்
அறக் காண்பன கண் அல்ல, --மருள் அறப்
பொய்க்காட்சி
நீக்கி, பொருவறு
முக்குடையான்
நற்காட்சி
காண்பன கண்.
பொருள்
என்று சொன்ன உடனே, மிகுதியாக
விழித்து,
அழகிய
நீலமணி போல எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்கள் ஆகமாட்டா. காமம், வெகுளி, மயக்கங்கள்
நீங்கும்படி,
பொய்யான
காட்சிகளை முழுமையாக ஒழித்து, இறைவனது திருவுருவைக் காண்பனவே கண்கள் ஆகும்.
இறைவன் திருவடி
மலர்களை முகர்வதே மூக்கு ஆகும் என்கிறது அறநெறிச்சாரம்...
சாந்தும்
புகையும் துருக்கமும் குங்குமமும்
மோந்து
இன்புறுவன மூக்கு அல்ல, --வேந்தின்
அலங்கு
சிங்காதனத்து அண்ணல் அடிக்கீழ்
இலங்கு
இதழ் மோப்பதாம் மூக்கு.
சந்தனம், அகில் புகை, கஸ்தூரி, குங்கும்பபூ
முதலிய மணப் பொருள்களை மோந்து மகிழ்ச்சி அடைவது மூக்கு அல்ல. உழர்ந்து இனிது
விளங்குகின்ற அரியணையில் எழுந்தருளி இருக்கும் கடவுளின் திருவடியில் இட்டு
விளங்குகின்ற பூக்களை முகர்ந்து இன்பம் அடைவதே மூக்கு ஆகும்.
இறைவனைத்
துதித்துப் பேசுவதே நாக்கு என்கிறது அறநெறிச்சாரம் என்னும் நூல்...
கைப்பன, கார்ப்பு, துவர்ப்பு, புளி, மதுரம்,
உப்பு
இரதம் கொள்வன நாவல்ல, - தப்பாமல்
வென்றவன்
சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும்
நின்று
துதிப்பதாம் நா.
கசப்பு, உறைப்பு, முவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு
என்னும் ஆறு சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவது நாக்கு அல்ல. தப்பாமல் புலனைந்தும்
வென்றவனாகிய இறைவனது திருவடிகளை எப்போதும் விரும்பித் துதிப்பதே நாக்கு ஆகும்.
நல்ல
ஞான முயற்சியில் நடப்பனவே கால்கள் என்கின்றது அபநெறிச்சாரம்....
கொல்வதூஉம், கள்வதூஉம் அன்றி, பிறர்மனையில்
செல்வதூஉம்
செய்வன கால் அல்ல, - தொல்லைப்
பிறவி
தணிக்கும் பெருந்தவர் பால் சென்று
அறவுரை
கேட்பிப்ப கால்.
பிற
உயிரைக் கொல்லவும், பிறர் உடைமையைத்
திருடவும்,
பிறன்
மனைவியிடத்தே விரும்பிக் கூடவும் செல்வதற்கு உதவுவன கால்கள் அல்ல. துன்பத்தை
உண்டாக்கும் பிறவிப் பிணியைப் போக்கி அருளும் தவத்தினை உடைய அருளாளர் பால் சென்று, அவர் கூறும்
அறிவுரையைக் கேட்க நடப்பவையே கால்கள் ஆகும்.
இறைவன்
திருவடிகளை வணங்கும் தலையே சிறப்புடைய தலை ஆகும் என்கின்றது அறநெறிச்சாரம்...
குற்றம்
குறைத்து, குறைவு இன்றி, மூவுலகின்
அற்றம்
மறைத்து, ஆங்கு அருள் பரப்பி - முற்ற
உணர்ந்தானைப்
பாடாத நாஅல்ல, அல்ல
சிறந்தான்
தாள் சேராத் தலை.
மனத்தில்
உண்டாகும் குற்றங்களைக் கெடுத்து,
மூவுலகில்
உள்ளவர்களின் அச்சம் எல்லாவற்றையும் துடைத்து, அவர்களுக்கு அருள்
புரிந்து,
இயல்பாகவே
எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனைப் பாடாத நாக்கு நாக்கு அல்ல. அவன் திருவடிகளை
வணங்காதவை தலை அல்ல.
திருஞானசம்பந்தப்
பெருமான் பாடியுள்ள பாடல்களில் பின்வருவனவற்றைச் சிந்திப்போகமாக...
கோள்
நாகப் பேர்அல்குல் கோல்வளைக்கை மாதராள்
பூண்ஆகம்
பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண்ஆகம்
காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத
கண் எல்லாம் காணாத கண்களே.
வலிய
நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும், திரண்ட
வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதிதேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத்
தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து
மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.
பாடல்
நெறி நின்றான், பைங்கொன்றைத்
தண்தாரே
சூடல்
நெறி நின்றான், சூலம்சேர் கையினான்,
ஆடல்
நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான் தன்
வேட
நெறி நில்லா வேடமும் வேடமே.
பாடும்
நெறி நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை
மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய
கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய
மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.
மாறாத
வெம்கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக
நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத
தீயாடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத
நா எல்லாம் கூறாத நாக்களே.
யாவராலும்
ஒழிக்கப்படாத கூற்றுவனை ஒழித்து,
மலைமகளைத்
தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொருபாகன் என்ற
வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று
ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாக்கு இருந்தும்
ஊமையர் எனக் கருதப்படுவர்.
தாளால்
அரக்கன் தோள் சாய்த்த தலைமகன் தன்
நாள்
ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்
ஆள்
ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச்
செவி எல்லாம் கேளாச் செவிகளே.
தோல்வி
உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நாள்
திருவாதிரை ஆகும் எனக் கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர்
அம்மான் புகழைக் கேளாச் செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.
புள்ளும்
கமலமும் கைக்கொண்டார் தாம்இருவர்
உள்ளும்
அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே,
அள்ளல்
விளை கழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல்
கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.
கருடப்
பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால்
தியானிக்கப்படும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும்
கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை வணங்காத
வாழ்க்கையும் வாழ்க்கையாகுமோ?
பிச்சை
பிறர் பெய்ய, பின்சார, கோசாரக்
கொச்சை
புலால் நாற ஈர் உரிவை போர்த்துஉகந்தான்,
அச்சம்
தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சல்
நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
மகளிர்
பிச்சையிட்டுப் பின்னே வர, தன் தலைமைத் தன்மை
கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான
புலால் மணம் வீசும் யானைத்தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது
ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.
உடம்பைப்
படைத்து இறைவனை உடம்பால் வணங்கி,
அவன்
திருவடி இன்பத்தைப் பெறவேண்டும் என்ற கருத்தில் திரு அங்கமாலை என்னும் அற்புதமான
திருப்பதிகத்தை அப்பர் பெருமான் காடி அருளினார்.
திருச்சிற்றம்பலம்
தலையே!
நீவணங்காய் - தலை
மாலை தலைக்கு அணிந்து
தலையாலே
பலி தேரும் தலைவனைத்
தலையே! நீவணங்காய்.
தலைகளால்
ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும்
தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.
கண்காள்!
காண்மின்களோ - கடல்
நஞ்சுஉண்ட கண்டன் தன்னை
எண்தோள்
வீசிநின்று ஆடும் பிரான் தன்னைக்
கண்காள்!
காண்மின்களோ.
கண்களே!
கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில்
ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.
செவிகாள்!
கேள்மின்களோ - சிவன்
எம் இறை செம்பவள
எரிபோல்
மேனிப் பிரான் திறம் எப்போதும்
செவிகாள்!
கேள்மின்களோ.
செவிகளே!
சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய்,
செம்பவளமும்
தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும்
கேளுங்கள்.
மூக்கே!
நீ முரலாய் - முது
காடு உறை முக்கணனை
வாக்கே
நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே! நீ முரலாய்.
மூக்கே!
சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை
நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.
வாயே!
வாழ்த்துகண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ்
காட்டகத்து ஆடும் பிரான் தன்னை
வாயே! வாழ்த்து கண்டாய்.
வாயே!
மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும்
பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக.
நெஞ்சே!
நீ நினையாய், - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சு
ஆடும் மலை மங்கை மணாளனை
நெஞ்சே! நீநினையாய்.
நெஞ்சே!
மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள்
அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக.
கைகாள்!
கூப்பித் தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப்
பாம்பு அரை ஆர்த்த பரமனைக்
கைகாள்! கூப்பித் தொழீர்.
கைகளே!
மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை
இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.
ஆக்கையால்
பயன் என்? - அரன்
கோயில் வலம் வந்து,
பூக்கையால்
அட்டிப் போற்றி என்னாத, இவ்
ஆக்கையால் பயன்என்?
எம்
பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு
வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்?
கால்களால்
பயன் என்? - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக்
கோபுரக்
கோகரணம் சூழாக்
கால்களால் பயன் என்?
நீலகண்டனான
எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான
கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்?
உற்றார்
ஆர் உளரோ? - உயிர்
கொண்டு போம் பொழுது,
குற்றாலத்து
உறை கூத்தன் அல்லால், நமக்கு
உற்றார் ஆர் உளரோ?
கூற்றுவன்
நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித்
தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?
இறுமாந்து
இருப்பன் கொலோ? - ஈசன்
பல் கணத்து
எண்ணப்பட்டு,
சிறுமான்
ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ?
எல்லோரையும்
அடக்கி ஆளும் எம்பெருமானுடைய பலவாகிய சிவகணத்தவருள் ஒருவனாகிச் சிறிய மானை ஏந்திய
அப்பெருமானுடைய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று அங்கு இன்பச் செருக்கோடு
இருப்பேனோ?
தேடிக்
கண்டு கொண்டேன், - திரு
மாலொடு நான்முகனும்
தேடி, தேடஒணாத் தேவனை, என் உளே
தேடிக் கண்டு கொண்டேன்.
திருமாலும்
நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி அவன் என் நெஞ்சத்துள்ளேயே
இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
வாழ்த்த
வாயும், நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்த
சென்னியும் தந்த தலைவனை,
சூழ்த்த
மாமலர் தூவித் துதியாதே,
வீழ்த்தவா!
வினையேன் நெடும் காலமே. --- அப்பர்.
வணங்கத்
தலை வைத்து, வார்கழல் வாய் வாழ்த்த
வைத்து,
இணங்கத்
தன் சீரடியார் கூட்டமும் வைத்து,
எம்பெருமான்
அணங்கொடு
அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம்
கூரப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ.
--- மணிவாசகம்.
தின
நாளும் முனே துதி மனதார ---
இறைவனை
நாள்தோறும் மனதாரத் துதித்து வழிபடவேண்டும். எவ்வளவு நாள் நாம் வாழ்வோம் என்பதோ, எப்போது சாவோம் என்பதோ நமக்குத் தெரியாது.
இந்த நாள் நம்முடைய நாள். எனவே, விடிந்தவுடன் இறைவனைத் துதித்து வழிபடவேண்டும்.
காலையில்
எழுந்து, உன் நாமமெ மொழிந்து,
காதல் உமை மைந்த ...... என ஓதிக்
காலமும்
உணர்ந்து ஞானவெளி கண்கள்
காண அருள் என்று ...... பெறுவேனோ?
என்று, "மாலைதனில் வந்து"
எனத் தொடங்கும் திருப்புகழில் அடிகளார் முருகப் பெருமானை வேண்டுகின்றார்.
மனக்
கவலையை மாற்ற வேண்டுமானால், தனக்கு உவமை
இல்லாத இறைவனின் திருவடியை வணங்கவேண்டும்.
தனக்கு
உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக்
கவலை மாற்றல் அரிது.
"காலை
எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா" என்று பாடினார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
நீ
நாளும், நன்னெஞ்சே! நினை கண்டாய், ஆர் அறிவார்
சாநாளும்
வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூநாளும்
தலை சுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,
நா
நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே.
என்று
பாடி அருளினார் திருஞானசம்பந்தப் பெருமான்.
நல்ல
நெஞ்சமே! நாள்தோறும் நினைந்து எம்பெருமான் ஈசனை வணங்குவாயாக. இறக்கின்ற நாளும், உலகினிலே வாழ்கின்ற நாளையும் யாராரும் கணக்கிட்டுக்
கூற முடியாது. திருச் சாய்க்காட்டில் அமர்ந்திருக்கும் எம்பெருமானுக்கு நாள்தோறும்
பூக்களைச் சுமந்து சென்றும், அப்பெருமானது திரு நாமங்களைக்
காதுகள் நன்கு கேட்குமாறும் செய்வாயாக. நாவானது நாள்தோறும் அச்சிவனது திருநாமங்களை
சொல்லி ஏத்தி வழிபட்டால், நல் வினையைப் பெறலாம்.
பினே, சிவசுதனே, திரி தேவர்கள் தலைவா, மால் வரைமாது உமையாள்
தரு மணியே, குகனே ---
இப்படி
நாள்தோறும் இறைவனை மனதாரத் துதித்து
வழிபட்டு
வந்தால்,
வாயானது
அவன் திருநாமத்தையே எப்போதும் மறவாது உச்சரிக்கும்.
முருகப்
பெருமானை எப்போதும், சிவகுமரா, மும்மூர்த்திகள் தலைவா, உமை மைந்தனே, குகனே என்று
வாயார எப்போதும் கூறிக் கொண்டே இருக்கும் பக்குவம் வாய்க்கும்.
என
அறையா
அடியேனும், உன் அடியாராய் வழிபாடு உறுவாரொடு அருள்
ஆதரம் ஆயிடும் மகநாள் உளதோ ---
அப்படி
அன்பு வழிபாடு புரியாத அடியேன் என்றார் சுவாமிகள். இது வெற்று அடியரைக்
குறிக்கும். வேடத்தால் மட்டுமே அடியராக இருக்கும் நிலையைக் காட்டினார்.
"பெற்றது கொண்டு பிழையே பெருக்கி, சுருக்கும்
அன்பின் வெற்று அடியேன்" என்றார் மணிவாசகப் பெருமான். இறை அடியார்கள்
வேற்றுமை பாராட்டாதவர்கள். விருப்பு வெறுப்பு என்னும் இருமையும் கடந்தவர்கள்.
வேடத்தால் அடியவனாக ஒருவன் அவர்களிடத்தில் சென்றாலுமே, அந்த வேடத்தைக் கண்ட
உடனே மெய்யுருகி நிற்பார்கள்.
மெய்ப்பொருள்
நாயனார் வரலாற்றைச் சிந்திக்க வேண்டும்...
மெய்பொருள்
நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநில மன்னர் குலத்தில்
அவதரித்தார். அக் குறுநில மன்னர் குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து
வந்த மலைமான் குலமாகும். நாயனார் அறநெறி தவறாது அரசு புரிந்து வந்தார்.
பகையரசர்களால் கேடு விளையாதபடி குடிகளைக் காத்து வந்தார். ஆலயங்களிலே பூசை
விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள் எனச்
சிந்தையில் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுவனற்றைக் குறைவறக் கொடுத்து, நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.
அரசியல்
நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந்
தோளால் வென்று மாற்றலர் முனைகள்
மாற்றி
உரைதிறம்
பாத நீதி ஓங்குநீர் மையினின்
மிக்கார்
திரைசெய்நீர்ச்
சடையான் அன்பர் வேடமே சிந்தை
செய்வார்.
இவ்வாறு
ஒழுகி வந்த மெய்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர்
முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்
போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாது எனக் கருதிய அவன் வஞ்சனையால்
வெல்லத் துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும்
புத்தகமுடிப்பு ஒன்றைக் கையில் ஏந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான்.
மெய்எலாம்
நீறு பூசி வேணிகள் முடித்துக்
கட்டிக்
கையினில்
படைக ரந்த புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி
விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு
வைத்துப்
பொய்தவ
வேடங் கொண்டு புகுந்தனன் முத்த
நாதன்.
வாயிற்காவலர்
சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன்
பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணம் அறிந்து செல்லல்
வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்ச மனத்தவனான அவன்
அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி
உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி
அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர்
எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கல வரவு கூறி மகிழ்ந்தார். அடியவர்
வேடத்திருந்தவர் எங்கும் இலாததோர் சிவாகமம் கொண்டு வந்திருப்பதாகப் புத்தகப்பையைப்
காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்ச நெஞ்சினான அவ்வேடத்தான்
தனியிடத்திலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.
மங்கலம்
பெருக மற்று என்
வாழ்வு வந்து
அணைந்தது என்ன,
இங்கு
எழுந்தருளப் பெற்றது
என்கொலோ என்று கூற,
உங்கள்நா
யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல்
மண்மேல்
எங்கும்
இல்லாதது ஒன்று
கொடுவந்தேன் இயம்ப
என்றான்.
மெய்பொருளார்
துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவி விட்டு, அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச்
செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப் பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத் தீயவன்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த
அத் தீச் செயலை செய்துவிட்டான்.
கைத்தலத்து
இருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல்
வைத்துப்
புத்தகம்
அவிழ்ப்பான் போன்று
புரிந்துஅவர்
வணங்கும் போதில்
பத்திரம்
வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே
செய்ய
மெய்த்தவ
வேட மேமெய்ப்
பொருள் எனத் தொழுது
வென்றார்.
வாளால்
குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுது வென்றார்.
முத்தநாதன் நுழைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும்
கணத்தில் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச்
சோர்ந்து விழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா, நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார்.
விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்ய வேண்டியது
யாது?’ என இரந்தான். “இச் சிவனடியாருக்கு
ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார்
பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன்.
செய்தி அறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றொழிக்கத் திரண்டனர்.
அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித் தடுத்து, நகரைக் கடந்து சென்று, நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந்
தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு
வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள்
நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார்” எனக் கூறி அன்பொழுக
நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக்
காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தை செய்தார்.
அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருள் நாயனாருக்குக் காட்சி அளித்தனர்.
மெய்பொருளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
“வெல்லுமா மிகவல்ல
மெய்ப்பொருளுக்கு அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
அடியவர்
பெருமை இதனால் விளங்கும்.
அடியவர்
கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் தானாகவே மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர்
திருக்கூட்டத்தில் இருத்தல் என்ன பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர
மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க.
"செய்தவ
வேடம் மெய்யில் தாங்கி,
கைதவ
ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,
வடதிசைக்
குன்றம் வாய்பிளந் தன்ன
கடவுள்
மன்றில் திருநடம் கும்பிட்டு
உய்வது
கிடைத்தனன் யானே. உய்தற்கு
ஒருபெருந்
தவமும் உஞற்றிலன், உஞற்றாது
எளிதினில்
பெற்றது என் எனக் கிளப்பில்,
கூடா
ஒழுக்கம் பூண்டும், வேடம்
கொண்டதற்கு
ஏற்ப,
நின்
தொண்டரொடு பயிறலில்
பூண்ட
அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்
நின்
நிலை என் இடத்து உன்னி உன்னி,
பல்நாள்
நோக்கினர்,
ஆகலின், அன்னவர்
பாவனை
முற்றி,
அப்
பாவகப் பயனின் யான்
மேவரப்
பெற்றனன் போலும், ஆகலின்
எவ்விடத்து
அவர் உனை எண்ணினர், நீயும் மற்று
அவ்விடத்து
உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்
இருபெரும்
சுடரும் ஒருபெரும் புருடனும்
ஐவகைப்
பூதமோடு எண்வகை உறுப்பின்
மாபெரும்
காயம் தாங்கி,
ஓய்வு
இன்று
அருள்
முந்து உறுத்த,
ஐந்தொழில்
நடிக்கும்
பரமானந்தக்
கூத்த! கருணையொடு
நிலைஇல்
பொருளும்,
நிலைஇயல்
பொருளும்
உலையா
மரபின் உளம் கொளப் படுத்தி,
புல்லறிவு
அகற்றி,
நல்லறிவு
கொணீஇ,
எம்மனோரையும்
இடித்து வரை நிறுத்திச்
செம்மை
செய்து அருளத் திருவுருக் கொண்ட
நல்
தவத் தொண்டர் கூட்டம்
பெற்றவர்க்கு
உண்டோ பெறத் தகாதனவே".
அடியேன்
புறத்தே தொண்டர் வேடம் தாங்கி, அகத்தே தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தும், நின் தொண்டர்களோடு
பழகி வந்த்தால்,
அவர்கள்
என் புற வேடத்தை மெய் என நம்பி, என்னைத் தக்கவனாகப் பாவித்தனர். என்பால் தேவரீர் எழுந்தருளி
இருப்பதாக அவர் பாவித்த பாவனை உண்மையிலேயே நான் உய்யும் நெறியைப் பெறச் செய்தது
என்கின்றார் இந்த அகவல் பாடலில்.
“வெள்ள வேணிப் பெருந்தகைக்கு
யாம் செய் அடிமை மெய்யாகக், கள்ள வேடம் புனைந்து இருந்த கள்வர் எல்லாம் களங்கம்
அறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்து உள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தள்
தலையால் வணங்குவாம்”என்று
பிரபுலிங்கலீலை என்னும் நூலில் வரும் அருமைச் செய்யுள் இதனையே வலியுறுத்தியது.
இதன்
உண்மையாவது,
சிவபெருமானை
மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன்
வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம்
பெற்றால்,
பெற
முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.
குருட்டு
மாட்டை, மந்தையாகப் போகும்
மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால்,
அக்
குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.
முத்தி
வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத்
தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய
எளியவழி. திருவாசகத்தில்
மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று
வியந்து பாடுகின்றார்.
வைப்பு
மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும்
மனத்திடை உருகாதே
செப்பு
நேர்முலை மடவரலியர் தங்கள்
திறத்து இடை நைவேனை
ஒப்பு
இலாதன உவமனில் இறந்தன
ஒண் மலர்த் திருப்பாதத்து
அப்பன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
நீதியாவன
யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடும் கூடேன்
ஏதமே
பிறந்து இறந்து உழல்வேன் தனை
என் அடியான் என்று
பாதி
மாதொடும் கூடிய பரம்பரன்
நிரந்தரம் ஆய் நின்ற
ஆதி
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
முன்னை
என்னுடை வல்வினை போயிட
முக்கண் அது உடை எந்தை
தன்னை
யாவரும் அறிவதற்கு அரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை
வென்றது ஓர் புரிசடை முடிதனில்
இளமதி அது வைத்த
அன்னை
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
பித்தன்
என்று எனை உலகவர் பகர்வதோர்
காரணம் இது கேளீர்
ஒத்துச்
சென்று தன் திருவருள் கூடிடும்
உபாயம்
அது அறியாமே
செத்துப்
போய் அரு நரகிடை வீழ்வதற்கு
ஒருப்படு கின்றேனை
அத்தன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
பரவுவார்
அவர் பாடு சென்று அணைகிலேன்
பன்மலர் பறித்து ஏத்தேன்
குரவு
வார் குழலார் திறத்தே நின்று
குடி கெடுகின்றேனை
இரவு
நின்று எர் ஆடிய எம் இறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
எண்ணிலேன்
திருநாம அஞ்செழுத்தும் என்
ஏழைமை அதனாலே,
நண்ணிலேன்
கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே,
மண்ணிலே
பிறந்து இறந்து மண் ஆவதற்கு
ஒருப்படு கின்றேனை
அண்ணல்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
பொத்தை
ஊன்சுவர் புழுப் பொதிந்து உளுத்துஅசும்பு
ஒழுகிய பொய்க்கூரை
இத்தை
மெய் எனக் கருதி நின்று இடர்க் கடல்
சுழித்தலைப் படுவேனை
முத்து
மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
நீக்கி
முன் எனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையில் புகப்பெய்து
நோக்கி
நுண்ணிய நொடியன சொற்செய்து,
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி
முன்செய்த பொய் அறத் துகள்அறுத்து
எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
உற்ற
ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம் போல்
பற்றல்
ஆவது ஓர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே,
பெற்றவா
பெற்ற பயன்அது நுகர்த்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அந்தன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
இருள்
திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச்
சிறுகுடில் இது, இத்தைப்
பொருள்
எனக் களித்து அருநரகத்து இடை
விழப் புகுகின்றேனை,
தெருளும்
மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப் பதத்தொடு செந் தீ
அருளும்
மெய்ந்நெறி, பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே.
“துரும்பனேன்
என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு
கூட்டு கண்டாய்” ---
தாயுமானார்.
தரையின்
ஆழ்த் திரை ஏழே போல்,எழு
பிறவி மாக்கடல் ஊடே நான்உறு
சவலை தீர்த்து, உன தாளே சூடி,உன் ...... அடியார்வாழ்
சபையின்
ஏற்றி, இன் ஞானா போதமும்
அருளி, ஆட்கொளுமாறே தான், அது
தமியனேற்கு முனே நீ மேவுவது ...... ஒருநாளே?
--- (நிருதரார்க்கொரு) திருப்புகழ்
சூரில்
கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்
சாரில், கதி அன்றி வேறு இலைகாண், தண்டு தாவடி போய்த்
தேரில்
கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில்
பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.
என்று
கந்தரலங்காரப் பாட்டில் நெஞ்சுக்கு மிக உருக்கமாக உபதேசிக்கின்றார்.
மிக
உயர்ந்த பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல்.
இப்படி
அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் “ஆண்டவனே! அடியேனை அடியாருடன் கூட்டிவைக்க
வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
வேண்டுவார்
வேண்டியதை வெறாது உதவும் வேற்பரமன் அந்த விண்ணப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.
அங்ஙனம் நிறைவேற்றி விட்டார் என்பதை நாம் எப்படி அறிய முடியும்? நிறைவேறப் பெற்ற அருணகிரிநாதரே
கந்தரலங்காரத்தில் விளக்கமாக நன்றி பாராட்டும் முறையில் கூறுகின்றார்.
"இடுதலைச்
சற்றும் கருதேனை, போதம் இலேனை, அன்பால் கெடுதல் இலாத்
தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச்
சாத்தித்த வேலோன். பிறவி அற, இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே".
இறைவனுடைய
திருத்தொண்டர்கட்கு மிகுந்த நேசத்துடன் தொண்டு புரிவதே முத்தி பெறுவதற்கு எளிய
வழியாகும். தொண்டர்க்குத் தொண்டு புரிவோர் எல்லா நலன்களையும் எளிதிற் பெறுவர்.
இறைவனுக்குத்
தொண்டு புரிவது ஒரு மடங்கு பயனும் தொண்டர்க்குத் தொண்டு செய்வது இருமடங்கு பயனும்
விளைவிக்கும். ஏனெனில், தொண்டர் உள்ளத்தில்
இறைவன் உறைகின்றான். ஆதலின் இருமடங்காகின்றது. மானக்கஞ்சாற நாயனாரைப் பற்றிக்
கூறவந்த சேக்கிழார் பெருமான், அவருடைய அடியாரின்
அடித்தொண்டினைக் கூறும் திறம் காண்க.
பணிவுடைய
வடிவு உடையார் பணியினொடும் பனிமதியின்
அணிவு
உடைய சடைமுடியார்க்க் ஆளாகும் பதம்பெற்ற
தணிவுஇல்
பெரும் பேறு உடையார் தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவு
உடைய தொண்டர்க்கே ஏவல்செயும் தொழில் பூண்டார். --- பெரியபுராணம்.
கண்டுமொழி, கொம்பு கொங்கை, வஞ்சிஇடை, அம்பு நஞ்சு
கண்கள், குழல் கொண்டல், என்று, ...... பலகாலும்
கண்டு
உளம் வருந்தி நொந்து, மங்கையர் வசம் புரிந்து,
கங்குல்பகல் என்று நின்று, ...... விதியாலே
பண்டைவினை கொண்டு உழன்று, வெந்து விழுகின்றல்
கண்டு,
பங்கய பதங்கள் தந்து, ...... புகழ் ஓதும்
பண்பு உடைய
சிந்தை அன்பர் தங்களின் உடன் கலந்து
பண்புபெற, அஞ்சல் அஞ்சல் ...... என வாராய். ---
திருப்புகழ்.
கரைஅற
உருகுதல் தருகயல் விழியினர்,
கண்டுஆன செஞ்சொல் ...... மடமாதர்,
கலவியில்
முழுகிய நெறியினில் அறிவு
கலங்கா மயங்கும் ...... வினையேனும்,
உரையையும்
அறிவையும் உயிரையும் அணர்வையும்
உன்பாத கஞ்ச ...... மலர்மீதே,
உரவவொடு
புனைதர நினைதரும் அடியரொடு
ஒன்றாக என்று ...... பெறுவேனோ? --- திருப்புகழ்.
சீறல்
அசடன், வினை காரன், முறைமை இலி,
தீமை புரி கபடி, ...... பவநோயே
தேடு
பரிசி, கன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதும் இலி, ...... எவரோடும்
கூறு மோழி அது பொய் ஆன கொடுமை உள
கோளன், அறிவிலி, ...... உன்அடிபேணாக்
கூளன், எனினும் எனை நீ உன் அடியரொடு
கூடும் வகைமை அருள் ...... புரிவாயே. ---
திருப்புகழ்.
வாதம்,
பித்தம், மிடாவயிறு, ஈளைகள்,
சீதம், பற்சனி, சூலை, மகோதரம்,
மாசு அம் கண், பெரு மூல வியாதிகள், .....குளிர்காசம்,
மாறும்
கக்கலொடே, சில நோய், பிணி-
யோடும், தத்துவ காரர் தொணூறு அறு-
வாரும் சுற்றினில் வாழ் சதிகாரர்கள், ......வெகுமோகர்,
சூழ்
துன் சித்ர கபாயை, மு ஆசைகொடு
ஏதும் சற்று உணராமலெ மாயைசெய்,
சோரம் பொய்க் குடிலே சுகமாம் என, ......இதின்மேவித்
தூசின் பொன் சரமோடு குலாய், உலகு
ஏழும் பிற்பட ஓடிடு மூடனை,
தூ அம் சுத்த அடியார் அடி சேர,நின் ......அருள்தாராய். ---
திருப்புகழ்.
கறுத்த
தலை வெளிறு மிகுந்து,
மதர்த்த இணை விழிகள் குழிந்து,
கதுப்பில் உறு தசைகள் வறண்டு, ......செவி தோலாய்,
கழுத்து
அடியும் அடைய வளைந்து,
கனத்த நெடு முதுகு குனிந்து,
கதுப்பு உறு பல் அடைய விழுந்து, ...... உதடுநீர் சோர்,
உறக்கம்
வரும் அளவில், எலும்பு
குலுக்கி விடும் இருமல் தொடங்கி,
உரத்த கன குரலும் நெரிந்து, ...... தடி கால் ஆய்,
உரத்த
நடை தளரும் உடம்பு
பழுத்திடும் முன், மிகவும் விரும்பி
உனக்கு அடிமை படும்அவர் தொண்டு ......
புரிவேனோ? ---
திருப்புகழ்.
கருத்துரை
முருகா!
அடியார் திருக்கூட்டத்துள் இருந்து அருள்பெற்று உய்யவேண்டும்.
No comments:
Post a Comment