வடதிருமுல்லைவாயில் - 0695. மின்இடை கலாப
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மின்இடை கலாப (வடதிருமுல்லைவாயில்)

முருகா!
விலைமாதர் வலையில் விழுந்து அழியாமல்,
தேவரீர் திருவடியில் விழுந்து அழியாத நிலை பெற அருள்வாய்.


தய்யதன தான தந்தன
     தய்யதன தான தந்தன
          தய்யதன தான தந்தன ...... தனதான

மின்னிடைக லாப தொங்கலொ
     டன்னமயில் நாண விஞ்சிய
          மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே

மெள்ளவுமு லாவி யிங்கித
     சொல்குயில்கு லாவி நண்பொடு
          வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக

கன்னியர்கள் போலி தம்பெறு
     மின்னணிக லார கொங்கையர்
          கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான

கண்ணியிலு ளாக சுந்தர
     பொன்னியல்ப தார முங்கொடு
          கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய்

சென்னியிலு டாடி ளம்பிறை
     வன்னியும ராவு கொன்றையர்
          செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா

செம்முகஇ ராவ ணன்தலை
     விண்ணுறவில் வாளி யுந்தொடு
          தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே

துன்னியெதிர் சூரர் மங்கிட
     சண்முகம தாகி வன்கிரி
          துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே

சொல்லுமுனி வோர்த வம்புரி
     முல்லைவட வாயில் வந்தருள்
          துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மின் இடை கலாப தொங்கலொடு,
     அன்ன மயில் நாண விஞ்சிய,
          மெல்லியர் குழாம் இசைந்து, ஒரு ...... தெருமீதே

மெள்ளவும் உலாவி, இங்கித
     சொல் குயில் குலாவி, நண்பொடு,
          வில் இயல் புரூர கண்கணை ...... தொடு, மோக

கன்னியர்கள் போல், இதம்பெறு
     மின் அணி கலார கொங்கையர்,
          கண்ணியில் விழாமல், ன்பொடு ...... பதஞான

கண்ணியில் உளாக, சுந்தர
     பொன் இயல்பு அதாரமும் கொடு
          கண்ணுறு வராமல் இன்பமொடு ......எனை ஆள்வாய்.

சென்னியில் ஊடாடு இளம்பிறை,
     வன்னியும், அராவு, கொன்றையர்,
          செம்மணி குலாவும் எந்தையர் ...... குருநாதா!

செம்முக இராவணன் தலை
     விண் உற, வில் வாளியும் தொடு
          தெய்விக பொன் ஆழி வண்கையன் ...... மருகோனே!

துன்னி எதிர் சூரர் மங்கிட
     சண்முகம் அதாகி, வன் கிரி
          துள்ளிட வெலாயுதம் தனை ...... விடுவோனே!

சொல்லு முனிவோர் தவம்புரி
     முல்லை வடவாயில் வந்து அருள்
          துல்ய பர ஞான உம்பர்கள் ...... பெருமாளே.


பதவுரை


      சென்னியில் உடாடு --- தலையில் பொருந்தி உள்ள

     இளம் பிறை --- இளம் பிறை,

     வன்னியும் --- வன்னி மலர்,,

     அராவு --- பாம்பு,

     கொன்றையர்  --- கொன்றை மலர் ஆகியவற்றோடு

     செம்மணி குலாவும் --- சிவந்த மாணிக்கம் போன்று ஒளி விளங்குகின்ற திருமேனியை உடைய

     எந்தையர் குருநாதா --- எமது தந்தையாகிய சிவபெருமானுடைய குருநாதரே!

      செம்முக இராவணன் --- போரில் மூண்டு எழுகின்ற சினத்தால் முகம் சிவந்து இருந்த இராவணனுடைய

     தலை விண் ஊற --- தலைகள் விண்ணில் தெறித்து விழுமாறு,

     வில் வாளியும் தொடு --- வில்லைத் தொடுத்துக் கணைகளை எய்தவரும்,

     தெய்விக பொன் ஆழி வண்கையன் மருகோனே --- தெய்வத் தன்மை பொருந்திய அழகான சுதரிசனம் என்னும் சக்கரத்தைத் திருக்கையில் ஏந்தியவரும் ஆன திருமாலின் திருமருகரே!

       துன்னி எதிர் சூரர் மங்கிட --- நெருங்கிப் போர் புரிய வந்த சூராதி அவுணர்கள் அழிந்து போகுமாறு,

     சண்முகம் அதாகி --- ஆறு திருமுகங்களுடன் அவதரித்து,

     வன்கிரி துள்ளிட --- வலிய கிரவுஞ்ச மலையானது அழிந்து ஒழியும்படி,

     வெலாயுதம் தனை விடுவோனே --- வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

      சொல்லு முனிவோர் தவம்புரி --- புகழ்ந்து போற்றப்படும் முனிவர்கள் தவம் புரிகின்,

     முல்லை வடவாயில் வந்து அருள் --- வட திருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும்,

     துல்ய பரஞான உம்பர்கள் பெருமாளே --- தூயதானதும், மேலானதும் ஆகிய ஞானத்தைப் பொருந்தி உள்ள தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      மின் இடை கலாப தொங்கல் ஒடு --- மின்னல் போன்ற இடையில் கலாபம் என்னும் இடை அணியும், ஆடையின் முந்தானையும் விளங்க,

       அன்ன மயில் நாண --- அன்னமும், மயிலும் நாணும்படியாக

     விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து --- மேம்பட்ட நடையையும், சாயலையும் உடைய விலைமாதர்கள் ஒருமித்து வந்து,

     ஒரு தெரு மீதே மெள்ளவும் உலாவி --- ஒரு தெருவிலே மெதுவாக உலாவி,

      இங்கித சொல் --- இங்கிதமான சொற்களை,

     குயில் குலாவி --- குயில் போலக் கொஞ்சிப் பேசி,

     நண்பொடு --- நட்புப் பாராட்டி,

     வில் இயல் புரூர கண் கணை தொடு --- வில்லைப் போன்ற வளைந்த புருவமும், அம்பைப் போன்ற கூர்மையான கண்களும் கொண்டு,  

     மோக கன்னியர்கள் போல் --- காம இச்சை மிகுந்தவர்கள் போல், 

      இதம் பெறு --- இதம் உள்ள,

     மின்அணி --- ஒளி வீசும் அணிகலன்களையும்,

     கலார --- செங்கழுநீர் மாலையைத் தரித்துள்ள

     கொங்கையர் கண்ணியில் விழாமல் --- கொங்கைகளை உடைய அவர்கள் விரித்த வலையில் சிக்காமல்,

         அன்பொடு --- அன்போடு,

     பதஞான கண்ணியில் உளாக --- தேவரீரது திருவடி ஞானம் என்னும் வலையின் உட்பட,

     சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு --- அழகும் பொலிவும் நிறைந்த திருவடிகளை அடியேனுக்கு அருளி,

     கண்ணுறு வராமல் --- கண் ஊறு வராமல்படிக்கு,

     இன்பமொடு எனை ஆள்வாய் --- பேரின்பத்தை அடியேனுக்கு அருளி ஆட்கொண்டு அருள் புரிவாயாக.


பொழிப்புரை

     தலையில் பொருந்தி உள்ள இளம் பிறை, வன்னி மலர், பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றோடு சிவந்த மாணிக்கம் போன்று ஒளி விளங்குகின்ற திருமேனியை உடைய எமது தந்தையாகிய சிவபெருமானுடைய குருநாதரே!

         போரில் மூண்டு எழுகின்ற சினத்தால் முகம் சிவந்து இருந்த இராவணனுடைய தலைகள் விண்ணில் தெறித்து விழுமாறு, வில்லைத் தொடுத்துக் கணைகளை எய்தவரும்,
தெய்வத் தன்மை பொருந்திய அழகான சுதரிசனம் என்னும் சக்கரத்தைத் திருக்கையில் ஏந்தியவரும் ஆன திருமாலின் திருமருகரே!

         நெருங்கிப் போர் புரிய வந்த சூராதி அவுணர்கள் அழிந்து போகுமாறு, ஆறு திருமுகங்களுடன் அவதரித்து, வலிய கிரவுஞ்ச மலையானது அழிந்து ஒழியும்படி, வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

         புகழ்ந்து போற்றப்படும் முனிவர்கள் தவம் புரிகின், வட திருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும், தூயதானதும், மேலானதும் ஆகிய ஞானத்தைப் பொருந்தி உள்ள தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         மின்னல் போன்ற இடையில் கலாபம் என்னும் இடை அணியும், ஆடையின் முந்தானையும் விளங்க, அன்னமும், மயிலும் நாணும்படியாக மேம்பட்ட நடையையும், சாயலையும் உடைய விலைமாதர்கள் ஒருமித்து வந்து, ஒரு தெருவிலே மெதுவாக உலாவி, இங்கிதமான சொற்களை, குயில் போலக் கொஞ்சிப் பேசி, நட்புப் பாராட்டி, வில்லைப் போன்ற வளைந்த புருவமும், அம்பைப் போன்ற கூர்மையான கண்களும் கொண்டு, காம இச்சை மிகுந்தவர்கள் போல், இதம் உள்ள, ஒளி வீசும் அணிகலன்களையும், செங்கழுநீர் மாலையைத் தரித்துள்ள கொங்கைகளை உடைய அவர்கள் விரித்த வலையில் சிக்காமல், அன்போடு, தேவரீரது திருவடி ஞானம் என்னும் வலையின் உட்பட, அழகும் பொலிவும் நிறைந்த திருவடிகளை அடியேனுக்கு அருளி, கண் ஊறு வராமல்படிக்கு, பேரின்பத்தை அடியேனுக்கு அருளி ஆட்கொண்டு அருள் புரிவாயாக.


விரிவுரை

சென்னியில் உடாடு இளம் பிறை, வன்னியும், அராவு, கொன்றையர், செம்மணி குலாவும் எந்தையர் குருநாதா ---

"ஊடாடு" என்னும் சொல் பாடல் சந்தத்தை நோக்கி, "உடாடு" என வந்தது.

முருகப் பெருமான் சிவபெருமானுக்குக் குருவாக இருந்து உபதேசம் புரிந்ததை, மகன் தந்தைக்கு உபதேசம் புரிந்து அருளியதாகக் கொள்ளக் கூடாது.

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் வாயிலாக அறிந்து தெளியலாம்.

திருக்கயிலை மலையின்கண் முருகப் பெருமான் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயன் என்னும் பிரமனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த குமரக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் புதல்வ! இங்கு வருகஎன்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமை காரணமாகவோ, உரிமைக் குறித்தோ நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து அதனைப் பொறுது அருள்வர். அறிவில் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமலும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால், பிரமனும் அறிவின்மையால் உன்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் உனக்கே உரியது. அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் சொல்லவல்லேன்என்றனர்.

கேட்டு செல்வக் குமர! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது. நீ எப்போதும் நீங்காது விருப்பமுடன் அமரும் திருத்தணிகை மலையை அடைகின்றோம்என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறு ஊர்ந்து, திருத்தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கக் கூடியவை என்று உலகம் கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.    --- தணிகைப் புராணம்.

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,
முருகவேள் முகத்தை நோக்கி, முறுவல் செய்து, அருளை நல்கி,
"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து அவனைப் பற்றித்
திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்
தாமரை புரையும் கையால் தழுவியே, "அயனும் தேற்றா
ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?
போமெனில், அதனை இன்னே புகல்"என இறைவன் சொற்றான்.

"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள், உலகமெல்லாம்
பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்
சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப
இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பது அல்லால்".

என்றலும் நகைத்து, "மைந்த எமக்குஅருள் மறையின்" என்னா,
தன்திருச் செவியை நல்க, சண்முகன் குடிலை என்னும்
ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன், உரைத்தல் கேளா
நன்றருள் புரிந்தான் என்ப ஞான நாயகனாம் அண்ணல்.  --- கந்த புராணம்.

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே
                                                                   --- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் ஆகிய சிவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பொருட்டு, தனக்குத் தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.  ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவ தத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தில் இருந்து சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தில் இருந்து சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.   --- அபிராமி அந்தாதி.
 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை, மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
                                                                        --- அபிராமி அந்தாதி.
  
சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.                                                                                                   --- சிவஞான சித்தியார்.


துன்னி எதிர் சூரர் மங்கிட, சண்முகம் அதாகி, வன்கிரி துள்ளிட,  வெலாயுதம் தனை விடுவோனே ---

வேலாயுதம் என்னும் சொல் முதல் குறைந்து, வெலாயுதம் என வந்தது.

ஆறுமுகப் பரம்பொருளின் அவதாரத்தை, குமரகுருபர அடிகள் பாடுமாறு காண்க..

                                                                                 -  தேசுதிகழ்
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப் பூங்கோதைஇடப்
பாங்கு உறையும் முக்கண் பரஞ்சோதி, – ஆங்குஒருநாள்

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கு இரங்கி,
ஐந்து முகத்தோடு அதோமுகமும் -  தந்து,

திருமுகங்கள் ஆறுஆகி, செந்தழல்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப,  -  விரிபுவனம்

எங்கும் பரக்க, இமையோர் கண்டு அஞ்சுதலும்,
பொங்கு தழல்பிழம்பை பொன்கரத்தால்  - அங்கண்

எடுத்து அமைத்து, வாயுவைக் "கொண்டு ஏகுதி"என்று, எம்மான்
கொடுத்து அளிப்ப, மெல்லக் கொடுபோய், - அடுத்தது ஒரு

பூதத் தலைவ! "கொடுபோதி”, எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்று உய்ப்ப, - போதுஒருசற்று

அன்னவளும் கொண்டு அமைதற்கு ஆற்றாள், சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்ப,  திருவுருவாய் - முன்னர்

அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி,
நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்

 கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,
அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு

கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து,
மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய

முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே! - கிள்ளைமொழி

மங்கை சிலம்பின் மணி ஒன்பதில் தோன்றும்
துங்க மடவார் துயர் தீர்ந்து, - தங்கள்

விருப்பால் அளித்த நவவீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார் வீரவாகு, - நெருப்பில் உதித்து,

அங்கண் புவனம் அனைத்தும் அழித்து உலவும்
செங்கண் கிடாய் அதனைச் சென்று, கொணர்ந்து, -  "எம்கோன்

விடுக்குதி" என்று உய்ப்ப, அதன்மீது இவர்ந்து, எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா! - படைப்போன்

அகந்தை உரைப்ப,” மறை ஆதி எழுத்து ஒன்று
உகந்த பிரணவத்தின் உண்மை -  புகன்றிலையால்,

சிட்டித் தொழில் அதனைச் செய்வது எங்ஙன்" என்று, முன்னம்
குட்டிச் சிறை இருத்தும் கோமானே! - மட்டுஅவிழும்

பொன்அம் கடுக்கைப் புரிசடையோன் போற்றி இசைப்ப,
முன்னம் பிரமம் மொழிந்தோனே! -  கொன்நெடுவேல்
        
தாரகனும் மாய, தடம்கிரியும் தூளாக,
வீரவடிவேல் விடுத்தோனே! -  சீரலைவாய்த்

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய், கருணை
வெள்ளம் எனத் தவிசின் வீற்று இருந்து, - வெள்ளைக்

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்து, கடல்சூழ்
மயேந்திரத்துள் புக்கு, இமையோர் வாழ,-சயேந்திரனாம்

சூரனைச் சோதித்து வருக, என்று தடம்தோள் விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே! - கார்அவுணன்

வானவரை விட்டு வணங்காமையால், கொடிய
தானவர்கள் நால்படையும் சங்கரித்து, - பானுப்

பகைவன் முதலாய பாலருடன், சிங்க
முகனை வென்று வாகை முடித்தோய்! - சகம்உடுத்த

வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே!
  
சொல்லு முனிவோர் தவம்புரி முல்லை வடவாயில் வந்து அருள் ---

புரணங்களில் புகழ்ந்து போற்றப்படும் முனிவர்கள் ஆகிய பிருகு, வசிட்டர், துருவாசர் வழிபட்ட திருத்தலம் என்றும், வசிட்டர் வழிபட்டு காமதேனுவைப் பெற்றார் என்றும் திருமுல்லைவாயில் புராணம் கூறும்.

துல்ய பரஞான உம்பர்கள் பெருமாளே ---

துல்யம், துல்லியம் - ஒப்பு, உவமை, தூய்மை.

நான் எனது என்னும் அகப்புறப் பற்றுக்கள் அகன்றி நிலைநில் ஆன்மா தூய்மை அடைந்து, தூயவனான இறைவனது திருவடியைச் சாரும்.

பரஞானம் - மேலான ஞானம். அருளியல் அறிவு.
அபர ஞானம் - உலகியல் அறிவு.

இறைவனை வழிபட்டு, மேம்பட்ட ஞானத்தை அடைந்த தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவர் முருகப் பெருமான்.
  
மின் இடை கலாப தொங்கல் ஒடு ---

பெண்களின் இடையானது மின்னலைப் போல் மெலிந்து இருக்கும். எனவே, மின் இடை என்றார்.

மாதர் இடையணியின் பெயர் ---  காஞ்சி மேகலை கலாபம் பருமம், விரிசிகை என்பன. காஞ்சி எண்கோவை, மேகலை எழுகோவை, கலாபம் நானான்கு, பருமம் பதினெட்டு, விரிசிகை எண்ணான்கு கோவை.

கலாபம் - பதினாறு கோவை உள்ள மாதர் இடை அணி.

தொங்கல் என்பது கழுத்தில் அணிந்துள்ள மாலையையும் குறிக்கும். தொங்குகின்ற முன் தானையையும் குறிக்கும்.

அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து, ஒரு தெரு மீதே மெள்ளவும் உலாவி ---

மெல்லியர் - இழிகுணம் உடையவர். இழிந்த குணம் உடையவர்களை மெல்லியர் என்பர். இங்கே இழிந்த குணம் உடைய விலைமாதரைக் குறித்து நின்றது.

அன்னம் போன்ற மெல் நடையையும், மயில் போன்ற சாயலையும் உடையவர்கள் பெண்கள்.

அட்டத்தின் நடையையும், மயிலின் சாயலையும் விஞ்சும்படியான புற அழகையும், உள்ளத்தில் இழிந்த குணமும் கொண்ட விலைமாதர்கள் பொன்னை விரும்பி, அதனை உடையாரைத் தேடி வீதிகளில் வந்து நிற்பர்.

இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு ---

இங்கிதமான சொற்களைக் குயில் போலக் கொஞ்சிப் பேசி,
தம்மை எதிர்ப்படும் பொன் படைத்தோரிடம் நட்பு பூண்டு பழகுவார்கள்.

உடுக்கை இழந்தவன் கைபோல, இடுக்கண் களைவது நட்பு என்பதால், தம்மை எதிர்ப்பட்டோரின் நலத்தைப் பெரிதும் விரும்புபவர் போலப் பேசி, தமது கையறு நிலையை இங்கிதமாகச் சொல்லி நட்பு கொள்ளுமாறு செய்யும் வஞ்சகம் மிக்கவர்கள் விலைமாதர்கள்.

வில் இயல் புரூர கண் கணை தொடு...... கொங்கையர் கண்ணியில் விழாமல் ---

விலைதாமர்கள் பொன்னைக் கருதி, தாம் விரித்த காம வலையில் ஆடவர் சிக்குமாறு சாகசம் செய்வர்.

கண்வலையும் சொல்வலையும் வீசி ஆடவரை மயக்குவர்; அவ்வலையில் அகப்பட்டார் உய்வது அரிது.

விழிவலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை   ---(தரையினில்) திருப்புகழ்.
  
திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழல் காட்டில் 
கண்ணி வைப்பர் மாயம் கடக்குநாள் எந்நாளோ.         ---தாயுமானவர்.

வங்கார மார்பில் அணி தாரொடு, உயர் கோடு அசைய,
     கொந்து ஆர மாலை குழல் ஆரமொடு தோள்புரள,
     வண் காதில் ஓலைகதிர் போல ஒளி வீச, இதழ் ...... மலர்போல,
மஞ்சுஆடு சாபநுதல் வாள்அனைய வேல்விழிகள்,
     கொஞ்சார மோக கிளியாக நகை பேசி, உற,
     வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் ...... இடுமாதர்,

சங்காளர், சூதுகொலை காரர், குடி கேடர், சுழல்
     சிங்கார தோளர்,பண ஆசையுளர், சாதியிலர்,
     சண்டாளர், சீசி, வர் மாய வலையோடு அடியேன்...... உழலாமல்,
சங்கு ஓதை நாதமொடு கூடி, வெகு மாயைஇருள்
     வெந்து ஓட, மூலஅழல் வீச, உபதேசம் அது
     தண்காதில் ஓதிஇரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே.      --- திருப்புகழ்.

ஆரமுலை காட்டி, மாரநிலை காட்டி,
     ஆடை அணி காட்டி, ...... அநுராக
ஆலவிழி காட்டி, ஓசைமொழி காட்டி,
     ஆதரவு காட்டி, ...... எவரோடும்

ஈரநகை காட்டி, நேரமிகை காட்டி,
     ஏவினைகள் காட்டி, ...... உறவாடி,
ஏதமயல் காட்டு, மாதர்வலை காட்டி,
     ஈடு அழிதல் காட்டல் ...... அமையாதோ? --- திருப்புகழ்.


அன்பொடு, பதஞான கண்ணியில் உளாக ---

உள்ளத்தில் அன்போடு இறைவன் திருவடி என்னும் வலையில் விழவேண்டும்.

சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு, கண்ணுறு வராமல், இன்பமொடு எனை ஆள்வாய் ---

கண் ஊறு, கண்ணூறு என்பது கண்ணுறு என வந்தது. கண் பார்வையால் வரும் தீங்கு, கண்ணேறு என்றும் கண்ணூறு என்றும் சொல்லப்படும்.

இதை, கண் எச்சில் என்றும் சொல்லுவர்.

கற்பூரம் கொணர்ந்துவம்மின், என்கணவர் வந்தால்
     கண்ணெச்சில் கழிக்கஎன்றேன், அதனாலோ, அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித் தாமரைக் கீழ்
    என்றுசொன்னேன், இதனாலோ எதனாலோ அறியேன்,
வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள், தனைமுன்
    மகிழ்ந்துபெற்று இங்கு எனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்,
விற்பூஒள் நுதல்மடவார் சொல் போர் செய்கின்றார்,
    விண்ணிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே.

கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன், பலகால்
கணவர் திரு வடிவழகைக் கண்டு கண்டு களிக்கில்,
எண்ணா என் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளாது,
எனை ஈர்த்துக் கொண்டு சபைக்கு ஏகுகின்றது, அந்தோ!
பெண் ஆசை பெரிது என்பர், விண் ஆளும் அவர்க்கும்
பெண்ணாசை பெரிது அலகாண், ஆணாசை பெரிதே.
உள் நாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
உறுகின்றேன், தோழி, நின்னால் பெறுகின்ற படியே.

கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி, எனது
கணவர்வரு தருணம்இது, கண்ணாறு கழிப்பாம்,
எற்பூத நிலைஅவர்தம் திருவடித் தாமரைக்கீழ்
இருப்பது அடிக்கீழ் இருப்பது என்று நினையேல் காண்;
பற்பூத நிலைகடந்து நாத நிலைக்கு அப்பால்
பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்றது அறி நீ;
இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே.      --- திருவருட்பா.

கருத்துரை

முருகா! விலைமாதர் வலையில் விழுந்து அழியாமல், தேவரீர் திருவடியில் விழுந்து அழியாத நிலை பெற அருள்வாய்.No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...